Followers

Thursday, September 30, 2010

உண்ணாவிரதம் ஒரு சுயபரிசோதனை

வந்துவிட்டேன் ஆட்டத்துக்கு:) என்னமோ தெரியலை பகிர்தலுக்கான மனநிலை இல்லையென்றாலும்,பதிவுகள் எழுதாவிட்டாலும் அன்றாடம் தமிழ்மணம் அவ்வப்போது எட்டிப்பார்க்கிற பழக்கம் மட்டும் போகவில்லை.இன்றைக்கு இதை சொல்லி வைப்போமே என்ற எண்ணத்தில் மீண்டும் பதிகிறேன்.

பெண்கள் வெள்ளிக்கிழமை விரதம் ,செவ்வாய் என்று ஏதாவது ஒரு காரணம் காட்டி விரதம் இருக்கிறார்கள். ரம்ஜான் காலத்தில் காலை முதல் மாலை வரை நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. 40 நாள் விரதமென வெஜிடேரியன் மட்டுமெனவும் கூட கடவுள் சிந்தனைகளோடு உணவை கலக்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக 3 மணி நேரம்,2 நாட்கள் என சீன் காட்டுவதும் உண்டு.காந்தி மூன்றுமுறை தனது கோரிக்கைகளுக்காக நீராகாரம் மட்டும் அருந்தி சாகும்வரை உண்ணாவிரதமிருந்தார்.பின்னர் முடித்துக்கொண்டார்.ஆனால் கொண்ட கொள்கைக்காக திலீபன் நீர் கூட அருந்தாமல் இறந்துபோனதும் சுயமாக மனிதனால் இயலாத ஒன்றும் முக்கியமாக என்னைப்பொறுத்தவரையில் இது ஒரு மகத்தான விசயம்.

வாழ்க்கையின் போக்கில் நடந்துகொண்டிருந்த நான் முதல் முறையாக உண்ணாவிரதத்தின் தாக்கம் எப்படி இருக்குமென்று உணர்வதற்காக உணவு உண்ணாமல் சுயபரிசோதனை செய்து பார்த்தேன்.இதில் முக்கியமாக நான் அறிந்து கொள்ள விரும்பியது உண்ணாமை இயலுமா என்பதும்,உடலின் வலுவில்,அன்றாட அலுவல்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துமென்று அறிவதும்,முக்கியமாக எத்தனை நாட்கள் உணவு இல்லாமல் இருக்கமுடியுமென்பதும்.

திங்கட்கிழமை இரவு பால்,பழம்,நீர் என்று ஆரம்பித்து

செவ்வாய் கிழமை காலை வழக்கம் போல் எழுந்து குளித்துவிட்டு அலுவலக வேலை.முந்தைய நாளின் உடல் கழிவுகள் அகற்ற வேண்டி காலை ஒரு முறை நீரும், மாலை ஒரு முறை ஆரஞ்சு ரசமும் அருந்தினேன்.உடலில் தங்கியிருக்கும் உணவு,கொழுப்பு சக்திகள் காரணமாகவோ என்னவோ எந்த விதமான மாற்றங்களும் இல்லை.

புதன் கிழமை காலை எழுந்து காலை மறுபடியும் ஒரு முறை நீர் அருந்தி விட்டு அன்றாட வேலைகளை கவனித்தேன். காலையிலிருந்து மாலை வரை எப்போதும் போல உடல் மாற்றமில்லை.இரவு வயிறு கடிக்க ஆரம்பித்த மாதிரி இருந்தது.ஆலோசனையில்லாத பரிட்சை என்பதால் இரவு ஒரு வாழைப்பழமும் சிறிது நீரும் அருந்தினேன்.

வியாழக்கிழமை வந்து விட்டது.இன்று களைப்பின் அறிகுறி மெல்ல மெல்ல.உண்ணாவிரதத்திற்கான காரண காரியங்கள் இருந்தால் நீராகரம்,பழரசங்களுடன் இன்னும் ஓரிரு நாட்கள் வயிற்றுக்கு ஈயாமல் இருக்கலாம்.இருந்தாலும் முதல் முறையாக இப்போதைக்கு இந்த பரிட்சை போதுமென்று கொஞ்சம் மோர் அருந்திவிட்டு ரசம் சாதம் சாப்பிடலாமென்றிருக்கிறேன்.

இந்த சுயபரிசோதனையில் எனக்கு புரிந்த விசயங்கள்

1. முதல் நாள் உடல்நிலை கெடாமல் நீர் அருந்தியோ அல்லது அருந்தாமலோ ஒரு நாள் உண்ணாமல் இருப்பது சாத்தியமானது
2. இரண்டாம் நாளும் அன்றாட அலுவல்களை சோர்வின்றி நீர் மட்டும் அருந்தி இருக்க இயலும்
3. மூன்றாம் நாள் உடல் சோர்வு ஆரம்பமாகிறது.ஆனாலும் ஆபத்தில்லை
4. உணவுக்கு மனம் யோசிக்கும் ருசி உணர்வும் ஒரு காரணம்.எதை யோசிக்காமல் இருக்கணுமின்னு நினைக்கிறோமோ அதுவே இந்த வார நட்சத்திரம் ஜோதிஜின்னு பேர் சொல்லி உண்டு உறங்கி விடு செரித்து விடும் ன்னு கண் முன்னால் படம் காட்டுது:)
4. நான்காம் நாளே உண்ணாவிரதத்தின் உடல் மாற்றங்கள்.
5. மூன்று நாட்கள் வயிற்றைக் காலியாக வைப்பதால் உடல் மிதப்பது மாதிரி கனமில்லாமல் இருக்கிறது.
6. வயிற்றில் வாய்வு சேர்ந்து கொள்ளாமல் இருக்க சிறிய உடற்பயிற்சி அவசியம்.
6. உணவு பழக்கங்களை மாற்றிக்கொள்ள இயலுமானால் பால்,காய்கறி,பழவகைகளை வாரத்தில் ஓரிருநாள் சேர்த்துக் கொள்ள இயலும்.

இருந்தாலும் மெதுவா எந்திரன் படம் பார்த்து விட்டு அடுத்த வாரம் காய்கறி,பழவகை சோதனை செய்து பார்க்க வேண்டும்!இப்ப எந்திரன் படம் பார்த்துட்டு யார் முதலில் கதை சொல்றாங்கன்னு பார்க்கலாம்:)