Followers

Sunday, September 18, 2011

செப்புப்பட்டயம்: வலைத்தளத்தில் எழுதி பணம் சம்பாதிப்பது எப்படி?

 அது என்னமோ தெரியலை!நிறைய பேர் பதிவுலகத்துக்கு வாராங்க.நல்லா அடிச்சு ஆடுறாங்களேன்னு நினைச்சுகிட்டிருக்கும் போதே காணாமல் போயிடறாங்க.பழையன கழிதலும் புதியன புகுதலும் கோட்பாடு பதிவுலகத்துக்கும் பொருந்தும்.(அப்ப அட்டை மாதிரி ஒட்டிகிட்டிருக்கிற நாங்க...ன்னு யாரோ முணுமுணுக்கிற மாதிரி தெரியுதே:))

சரி விசயத்துக்கு வருவோம்.மாங்கு மாங்குன்னு பதிவுகள் போடறது அங்கீகாரத்துக்குன்னு சிலர் சொல்றாங்க,இன்னும் சிலர் அலெக்ஸா ரேட்டை ஏத்துறதுக்குன்னே பதிவு போடுறேன்ங்கிறாங்க!வேறு சிலர் சும்மா ரிலாக்ஸ் செய்து கொள்ள என்கிறார்கள்.மற்றும் சிலர் நினைவுகளை பதிவு செய்து வைக்கிறேன் என்கிறார்கள்.இன்னும் சிலர் கூகிளண்ணன் காசு கொடுப்பார்ன்னு நினைச்சு வந்தேன் என்கிறார்கள்.அப்படி சிலர் சம்பாதிப்பதாகவும் வதந்தி:) உண்மையா என்று பரிசோதிக்க நினைச்சா பழைய பதிவர் மோகன் தாஸ் பணம் சம்பாதிப்பது எப்படி என்று முன்பு பதிவர்களுக்கு கற்றுக் கொடுத்தது இணைய தேடலில் கிடைத்தது.இப்போது கூகிள் புதிய சட்டங்களும்,திட்டங்களும் கொண்டு வந்துள்ளதா என்று தெரியவில்லை.தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும்.

அவரோட பதிவு லிங்கோடு அவர் சொல்வதை முயற்சித்துப் பாருங்கள்.கூகிளண்ணன் மூலமா ஏதாவது தேறுச்சுன்னா பதிவர் மோகன்தாஸ் அவர்களுக்கு வெறும் நன்றி சொன்னாலே போதும்.
 
செப்புப்பட்டயம்: வலைத்தளத்தில் எழுதி பணம் சம்பாதிப்பது எப்படி?

Saturday, September 17, 2011

பதிவுலகிலும் பல்லைக் காட்டும் சா தீ!

கடந்த பதிவிலிருந்து பதிவுலகை விட்டுப் போய் விடவுமில்லை.அதே நேரத்தில் பதிவுக்கும் அப்பால் பதிவர் சார்வாகன் சமரசம் உலாவும் இடமே தளத்தில் பதிவின் நீண்ட வாசிப்பில் மாட்டிக்கொண்டு எது உண்மையாக இருக்கும் என்ற நீண்ட ஆய்வுக்கான எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிய பாதி பயணத்தின் போது பின்னாலிருந்து காலை இழுத்து சென்னை கூவம் சாக்கடையில் தள்ளி விட்ட மாதிரியான உணர்வு இப்பொழுது.

இந்திய வரலாற்றில் சுதந்திர காலப் போராட்ட காலம் தொட்டு ஆங்கிலேயர்களாலும் ராஜா ராம் மோகன்ராயின் முயற்சியால் உடன்கட்டை போன்ற அவலங்கள் சட்டரீதியாக நீக்கப்பட்டும்,தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியார் ராமசாமி காலத்தில் சாதீக்கு எதிரான புரட்சி ஒரு முக்கிய காலகட்டம் என்ற போதிலும்,அரசு நிர்வாகத்துக்கு வந்து இதுவரை ஆட்சி செய்து கொண்டிருக்கும் இரு திராவிட கட்சிகளின் காலம் வரை சட்டங்கள் செய்தும் சாதி மிக தூரம் பயணம் செய்து அவ்வப்போது நீண்ட தூக்கம் போட்டு விட்டு தன் கோர முகத்தை முகமூடி போட்டுக்கொண்டு தன்னை வெளிப்படுத்தி திரும்பவும் மக்களோடு மக்களாகப் பயணம் செய்து கொண்டே வந்திருக்கிறது என்பதை தி.மு.க ஆட்சியின் சட்டக்கல்லூரி மாணவர்கள் சண்டை,இப்பொழுது அ.தி.மு.க பரமக்குடி வன்முறை சம்பவம் என்று தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

காவல்துறையின் துப்பாக்கி சூடு காரணமாக அனைவரையும் பாதிக்கும் விசயமாகவும்,இப்போதைக்கு நாமும் கவலைப்பட்டு விட்டு அடுத்து இனியும் வரும் புதிய பிரச்சினைகளைப் பதிவு செய்பவர்களாகவே பயணிப்போம். சாதீயும் இன்னொரு எதிர்கால சம்பவத்தில் நம்மைப் பார்த்து கொக்கரித்து சிரிக்கும் என்று நம்புவோமாக! 

காரணம், தமிழ் திரைப்படங்கள் வியாபார நோக்காக தயாரிக்கப்பட்ட போதும் சமூகம் சார்ந்த,சாதிக்கு எதிரான ஏதாவது ஒரு முக்கிய கருத்தை பாமரனுக்கும் போய்ச் சேரும் விதத்திலும் நானெல்லாம் யோசிக்கிற வகுப்பாக்கும் என்பவர்களுக்கு கமலஹாசன் படங்கள் சொல்லியவற்றை விட பதிவுகள் ஒன்றும் புது விழிப்புணர்வைக் கொண்டு வந்து விடப்போவதில்லை.கூடவே ஒரு திரைப்படத்தை எப்படி காண்பது எப்படி என்பதை பதிவர் மதுரை சரவணன் பதிவின் சாரமான good touch and bad touchல்  பார்வையிடும் போது புதிதான படிப்பினை தோன்றியது. .

பதிவர் நிரூபன் தளத்தில் ஈழத்தில் வட,கிழக்கு பகுதிகளில் சாதியம் வெளிப்படுவது பற்றிச் சொல்லும் போது தீவுக்கே உரித்தான பின் தங்கிய நிலையென்றே நினைத்தேன்.புலம்பெயர் தமிழர்கள் எவ்வளவு மேற்கத்திய கலாச்சார வாழ்க்கைக்குப் பழக்கமாகியிருப்பார்கள்.ஆனால் அவர்களுக் குள்ளும் சாதிய வேறுபாடுகள் இருப்பதாகவும் அவை திருமணம் போன்ற சூழல்களில் வெளிப்படுகிறதென்றும் கலந்துரையாடலில் காண நேர்ந்தது.

இவற்றையெல்லாம் கட்டுடைத்து வர்ணாசிரம கட்டமைப்பை குழிதோண்டி புதைக்கும் காதல் திருமணங்களையும் தமிழ் சமூகம் அங்கீகரிக்காமல் பின் தள்ளி விடுகிறோம்.காதல் திருமணம் செய்தவர்களும் அவர்களது சொந்த விருப்பத்தால் தமது வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்வதால் பொதுவாக உறவினர்கள் ஆதரவும் கிடைப்பதில்லை.தனி மனித வாழ்க்கை இப்படியிருக்க அரசியல்,சமூகம் சார்ந்த மொத்த கோட்பாடுகளையும் தாண்டி சுயநலமாகவோ,அல்லது சாதி உள் கட்டமைப்பின் விசுவரூபம் எந்த விதத்தில் வெடிக்கும் என்று அறியாமலோ தமக்கு தாமே சூனியம் வைத்துக்கொள்ளும் சூத்திரத்தை நாம் கற்று வைத்திருக்கிறோம்.

வர்ணாசிரமத்தின் சூத்திரனை விட இன்னொரு சூத்திரன் தான் உயர்ந்தவன் என்று கற்பனை செய்து கொள்கிறான்.இது கற்பனையல்ல நிஜமே என்பதை இணையத்தில் தட்டச்சு செய்யும் புத்திசாலியே உறுதி செய்கிறான்.இதுல கொடுமை என்னவென்றால் வால்பையன் சாதி குறித்த பதிவின்  பின்னூட்டத்தில் பல பதிவர்கள் சொல்லியும் புரியாமலும் ராஜன்,வருண் போன்றவர்கள் நச்சென்று நடுமண்டையில் கொட்டினாலும் அவர்களின் தடாலடிப் பின்னூட்டங்களுக்கும் சளைக்காமல் மூன்று கால் முயலாய் பதில் சொல்லும் சகோதரர்களின் சாதீய உணர்வும்,சவுக்கு தளத்தில் தனது கருத்துக்களை துணிந்து சொல்லும் சங்கருக்கும் கூட சாதிய சாயம் பூசும் சாதீ வெறித்தனம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

மனிதன் நேருக்கு நேர் சண்டையிட்டுக்கொள்வதிலோ,திட்டிக்கொள்வதிலோ மூளை கட்டளையிட்ட அடுத்த கணத்தில் கரங்களோ,உதட்டோடு நாக்கும் உடனே செயல்பட வைக்கின்றது.ஆனால் பதிவு செய்பவர்களுக்கும், பின்னூட்டமிடுபவர்களுக்கும் மூளை கட்டளையிட கைகள் தட்டச்சு செய்து வார்த்தைகள் வடிப்பதற்கும்,தான் சொல்வது சரிதானா என்று சரிபார்க்கும் கால அவகாசம் இருக்கிறது.இதனையும் தாண்டி வார்த்தைகளின் பொருளில் வந்து விழும் வன்மமே இப்படியிருந்தால் கூட்டமாய் சேரும் போது எழும் தைரியம் எவ்வளவு சாதீ வன்மத்தை உருவாக்கும்? இதன் விதைகள் எங்கே தூவப்பட்டிருக்கின்றன என்று பார்த்தால் வரண்ட பூமியில் வேலையின்மை,வறுமை என்பவற்றை விட தமிழக எல்லை தாண்டாத தவளை மனப்பான்மையா அல்லது விமானத்துக்குள்ளும் சீட்டுக்கு மேலே சூட்கேஸ் பெட்டிக்குள் சாதீ ஜீன்கள் உட்கார்ந்தே பயணம் செய்கிறதா?

முன்பு ஒரு பதிவு படித்ததன் விளைவாய் இரட்டைக்குவளை பற்றி தியரி மட்டுமே சொல்ல முடிந்தது.ஆனால்.கடந்த டிசம்பரில் இந்திய பயணத்தின் போது பொள்ளாச்சிக்கு அருகில் ஆழியார் அணைக்கு நேர் எதிரில் வாகன சாலையிலேயே ஒரு டீக்கடையில் ஒரு காட்சியைக் காண நேர்ந்தது.
 
படத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் பெரியவருக்கும்,கால் மேல் கால் போட்டு டீ குடிப்பவரும் சில்வர் கிளாஸ் பெருமைக்காரர்கள்.யாரோ ஒரு சகோதரனுக்கோ,சகோதரிக்கோ தாயாகி,நரை முடித்துப்போன அம்மா கண்ணாடி கிளாஸிருந்து இன்னும் பாவமன்னிப்பு அடையாதவர்.
 
இரண்டாம் படத்தில் பழுத்த ஐயப்ப பக்தராக இருப்பவர் டீ போடும் எந்த கிளாஸ் என்று தீர்ப்பளிக்கும் நீதிபதி.எனவே அரசியல் மட்டுமல்ல, அன்றாட சமூக வாழ்க்கையும் சாதீயை வளர்க்கின்றன.
தமிழகத்துக்கு சீனாக்காரனின் உதவியோடு இலங்கைக்காரன் சண்டை கொண்டு வந்தால் ஒழிய ஜனத்தொகை குறையாதுன்னு இயற்கையே பதிவர் தெகா சொல்வது போல் சமூக கட்டமைப்பின் வடிவில் சா தீ எனும் பெயரில் மரணத்தைக் கொண்டு வருகிறதா?
காரணம் சிலர் வளைகுடா வடிவேல்களாகவும் ட்விட்டுவதாக பதிவுகளின் பின்னூட்டங்களில் காண முடிகிறது.

மதங்களுக்கும் அப்பால் மனிதன் சிந்திக்க வேண்டுமென்ற பெரியாரின் சிந்தனைகளைத் தாண்டியும் கடவுள் பக்தர்களும், கூடவே மூட நம்பிக்கைகளும் வளரும் போது இவற்றோடுப் பின்னிப் பிணைந்த வர்ணாசிரமும் கூடவே வளர்கிறது.இதில் எப்படி அறுவடை செய்வது என்பதை யோசித்துக்கொண்டும் சிலர் உலா வருவார்கள்.ஈழம் குறித்த ஒருமித்த கருத்து திரண்டு வரும் இந்நேரத்தில் வன்முறை திசை திருப்பல்களுக்கு அரசியல் காரணங்களும் உள்ளதா என்ற சந்தேகங்களையும் தாண்டி சாதி நம்மைப் பார்த்து கைதட்டி சிரித்துக்கொண்டிருக்கிறது.எது குறைய வேண்டும்,மறைய வேண்டுமென்று நினைக்கிறோமோ அவை இன்னும் வேர் பிடித்து வளர்கின்றன.முன்பை விட சாதீயும் என்பதை பதிவுலகம் வரை வந்து நிற்கின்றது.சாதீயின் அடுத்த வருகைக்காக காத்திருப்போம்.

Monday, September 5, 2011

சுப்ரமணியன் சுவாமியின் இலங்கை தீர்வு

 சுப்ரமணியன் சுவாமியின்  படிப்பு பொருளாதாரத்தில் டாக்டரேட்,சைமன் குஸ்நெட்ஸ்,பால் சாமுவேல்சன் என்ற இரு நோபல் பரிசுக்காரர்களுடன் இணைந்து பணியாற்றியது ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் டெல்லி ஐ.ஐ.டியின் பேராசிரியர்,ஜனதா கட்சி அரசின் போது  சட்டம்,நீதி மற்றும் வர்த்தக அமைச்சர் என்ற அவரது புரபைல் இன்னும் ஆச்சரியம் ஏற்படுத்தும் விசயம.

 படிப்பாளியான புரபைல்க்கு மாறான குணமாக,அதற்கு நிகராக சண்டிக்குதிரை மாதிரியாக யாரிடமும் நட்பும் இல்லாமல்,பாசமும் இல்லாமல் ஒரு மனிதன் எப்படியிருக்க முடியும் என்ற கேள்விகள் கூட இவர் மீது எழுகின்றன.அவரோட வாக்குப்படி ராஜிவ் காந்தியை நண்பன் என்கிறார்.அதே சமயத்தில் சோனியா காந்தி உயர்நிலைப்பள்ளியைக் கூட முடிக்கவில்லையென்றும்,லண்டனில் கல்லூரியில் படித்ததாக சொல்வதெல்லாம் பொய் என்றும் தூண்டி துருவி ஆதாரங்களையெல்லாம் கொண்டு வருகிறார்.

 இது மட்டுமா பிரியங்கா,ராகுல் என இத்தாலிய வம்சம்,ராகுல் எப்படி பிரதமர் ஆவார் என்று பார்த்து விடுகிறேன் என்ற சூளுரை வேறு.ஒரு வேளை பி.ஜே.பி சார்பாளனோ என்று சந்தேகித்தால் வாஜ்பாய் இவரை மந்திரிசபையிலேயே சேரவிடாமல் ஒதுக்கி விட்டார்.எனது அரசியல் எதிரிகள் என ஒரு நீண்ட பட்டியலே வைத்திருக்கிறார்.அப்படியிருந்தும் ஜெகஜீவன்ராம்க்கு பாஸ் மார்க் வழங்குகிறார்.இப்பொழுது மீராகுமார் கூட இவரைக் கண்டு கொள்வதில்லை.
மத்தியில்தான் இப்படியென்றால் தமிழ்நாட்டில் மதுரையின் சோழவந்தான் மண்வாசனையுடைய மனிதனாச்சே என்று கணிக்க நினைத்தால் தமிழர்களே பிடிக்காத குணம்.இது தவிர கருணாநிதி எட்டிக்காய்.ஜெயலலிதாவோ சொல்லவே வேண்டியதில்லை.நான் சண்டைபோட்ட மனிதர்களில் ஜெயலலிதாவை மட்டுமே அடக்க சிரமப்பட்டதாக தோல்வியை ஒப்புக்கொள்கிறார்.அடுத்தவர்கள் மீது கேஸ் போடுவது லட்டு சாப்பிடற மாதிரி.அதே சமயம் வாய்ச்சவடால் செய்து விட்டு காம்ப்ரமைஸ் செய்யும் சுபாவமும் கூட.

காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் ராசாவை களி திங்க வைத்தது மாத்திரமே அரசியல் பதவிகள் இல்லாமல் கூட செய்த சாதனைகளில் உச்சம் எனலாம்.இதுமட்டுமா சாதனை செய்தேன்!இந்தியா அந்நியச்செலவாணி நெருக்கடியில் இருக்கும் போது எந்த கடன்பத்திரத்திலும் கையெழுத்துப் போடாது நிபந்தனையில்லாமல் அமெரிக்காவிடமிருந்து 2 பில்லியன் டாலர் வாங்கித் தந்தேன் என்கிறார்.உலகிலேயே முதல் நல்ல,கெட்ட வியாபாரி அமெரிக்கா நிபந்தனையில்லாமல் கடன் தந்திருந்தால் சுப்ரமணியன் சுவாமியின் சாதனையே எனலாம்.
பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வரும் போர் விமானங்கள் இந்தியாவில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு பின் குவைத்,ஈராக் நோக்கி செல்லலாம் என்ற நிர்பந்தத்தில் பெரிய மீனாக வளைகுடாப் பெட்ரோலைக் கட்டுப்படுத்தும் சக்தியை உணர்ந்தே அமெரிக்கா 2 பில்லியன் டாலர் சின்ன மீன் தூண்டிலை  கடன் பத்திரமில்லாமல் வீசியிருக்கும்.அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, சீனாவுக்கும் சுப்ரமணியன் சுவாமி நண்பன்.எனவே அமெரிக்க உளவாளி, சீனாவின் கைப்புள்ள என்ற பட்டப்பெயர்கள் இயல்பாய் இவருக்கு வந்து ஒட்டிக்கொள்கின்றன.
டெல்லிக்கும்,மெட்ராஸ்க்குமான அடிக்கடி பயணத்தில் இந்தியும்,தமிழும் கற்றுக்கொள்ளும்படி ஆங்கிலத்திலிருந்து நாக்கு திருந்தி விட்டாலும் ஐயாவுக்கு தமிழ்ன்னா எட்டிக்கசப்பு.திராவிட கொள்கையாளர்களுக்கு தமிழும்,பெரியாரையும் பிடிப்பது போலவே சுப்ரமணியன் சுவாமிக்கும் சமஸ்கிருதமும்,காஞ்சி பெரியவாள் மாத்திரமே பிடித்தவைகள்.

அவரவர் சுயவிருப்பங்கள் இருப்பதில் தவறில்லை.ஆனால் அடுத்தவர்களின் வாழ்வின் விளையாட்டில் இந்துத்வா நிலைப்பாட்டில் இஸ்லாமியர்களை வெறுப்பதும்,தமிழர் எதிர்ப்பு உணர்வு  மாத்திரமல்லாமல் சுப்ரமணியன் சுவாமியின் ஆத்மா எங்கே மரித்துப்போகிறதென்றால் எந்த மனிதர்களை யும் நேசிக்காத மனபாவம்.இந்த குணம் எங்கே வெளிப்படுகிறதென்பதை சமீபத்தில் சுப.வீரபாண்டியனுடன் கலந்துரையாடல்(?) செய்த புதியதலைமுறை தொலைக்காட்சி மட்டுமில்லை, விடுதலைப்புலிகள் மீதான அவர் கொண்டிருக்கும் நிலைப்பாட்டிலும் புரியும். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சில தவறுகள் விமர்சனத்துக்குரியதென்ற நிலையில் அவர் தனது நிலைப்பாட்டை வகுத்துக்கொண்டால் கூட தவறில்லை.மொத்த தமிழர்களுக்கும் எதிரான நிலைப்பாடு வரலாற்றில் மட்டுமல்ல, அனைவரிடமும் இவரை அந்நியப்படுத்தியே வைக்கும்.
விடுதலைப்புலிகளின் வலுவான இயக்கம் இல்லாமல் மறைந்து போனதன் பின்பான நிலையில், இனப்படுகொலை செய்த இலங்கை அரசு பற்றி சின்ன விமர்சன துரும்பைக்கூட கிள்ளி போடாத நிலையில் தமிழரை நேசிக்காத அப்பட்டமான முகம் இவரிடம் தெரிகிறது.விடுதலைப்புலிகள் மீதான இவரது கோபத்துக்கு என்ன காரணம் என்று இவரிடம் கேட்டால் விடுதலைப்புலிகள் மார்க்சீய சிந்தனைவாதிகள் என்கிறார்.அதனால்தான் ரஷ்யாவும்,சீனாவும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை செய்கிறதோ?இந்துத்வா என்ற மொத்த சிந்தனையில் பார்த்தாலும் கூட தமிழக தமிழர்களை விட வலுவாகவே வட கிழக்கு மற்றும் புலம் பெயர் தமிழர்களும் கோயில் தேர் இழுக்கும் வலிமைக்காரர்களாயிற்றே!சுப்ரமணியன் சுவாமி என்ற களிமண்ணில் எந்த உருவத்தைக் கொண்டு வருவது?

இத்தனை விமர்சனங்களை முன்வைத்தும் கூட சுப்ரமணியன் சுவாமியை இங்கே விவாதிக்க வேண்டிய அவசியமென்ன? தமிழீழம் குறித்து தொடர்ந்து அவ்வப்போது பலரும் கருத்து பகிர்வுகளை முன்வைத்தாலும் இலங்கையின் வடகிழக்கு தமிழர்களுக்கான உறுதியான  தீர்வாக எதுவுமே இல்லை . ராஜபக்சேவை போர்க்குற்றவாளியென குரல் கொடுத்து விடுவதில் மட்டுமே தீர்வுக்கான முடிவுகள் வந்து விடுமா?என்றாவது ஒரு நாள் ராஜபக்சே குழுக்களின் ஆட்சி மறையும் என்ற போதிலும் தமிழர்களுக்கான தீர்வு என்ன?தீர்வுக்கான சாத்தியங்கள்  என்ன எனபதை தமிழ் உணர்வாளர்கள் ஒரு புறம் குரல் கொடுத்துக்கொண்டிருக்க இலங்கைப் பிரச்சினையை தன்னால் மட்டுமே தீர்க்க முடியுமென்று சுப்ரமணியன் சுவாமி  மூன்று வழிகளை முன் வைக்கிறார்.

ஒரு பக்கம் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பதோடு சட்டசபை தீர்மானம் போடவும்,புலம் பெயர் தமிழர்களில் பலர் உணர்வோடு தமிழீழத்துக்கு குரல் கொடுக்க   ஏதாவது வழியில் 30 வருட போர்களில் அவதியுற்ற மக்களுக்கு விடியல் வந்து விடாதா என்ற நம்பிக்கையில்  முடிந்த வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்க அவரோ ஈழப்பிரச்சினையை தன்னால் மட்டுமே தீர்க்க முடியும் என்கிறார்.

அதற்கு வை.கோ வும்,பழ.நெடுமாறனும் தங்கள் தோல்வியை ஒத்துக் கொள்ளவேண்டுமென்ற முன் நிபந்தனையை விதிக்கிறார்.மண் குதிரையை நம்பி இந்து மகாசமுத்திரத்தில் இறங்குவதா என்று   அவர்களும் கண்டு கொள்ளவில்லை என்பதோடு மொத்த தமிழர்களுமே இதனை கண்டு கொள்ளவில்லை.சுப்ரமணியன் சுவாமி கிட்ட தூது விடுவதை விட கருணாநிதி,ஜெயலலிதா இருவரின் தாவு தீரும் சண்டையை தமிழர்களால் நிறுத்த முடிந்தாலே பாதிக்கிணறு தாண்டின மாதிரிதான் என்பது தமிழர்களுக்கு தெரியாதாக்கும்! 

சுப்ரமணியன் சுவாமி விடுதலைப்புலிகள் மீதான தனது நிலைப்பாடு வேறு,தமிழ் மக்கள் மீதான நிலைப்பாடு வேறு என்று ஜெயலலிதா மாதிரியாவது  நினைத்தால் அதனை அறிக்கைகள் மூலமாகவும்,பேட்டிகள் மூலமாகவும் வெளிப்படுத்தலாமே!ஆனால் அதனையும் செய்வதில்லை. குட்டையையும் குழப்புவேன்,மீனும் பிடிப்பேனாக்கும் என்று இலங்கையின் தீர்வுக்காக மூன்று வழிகளை சொல்கிறார்.சுப்ரமணியன் சுவாமி  சொல்லும்  மூன்று தீர்வுகள் என்ன?

1. இந்தியா மாதிரியான பெடரல் அமைப்பு (Federal Government)


2. தனி நாடுகளாக பிரித்து விடுவது (Sovereign Two States)


3. இலங்கையை இந்தியாவுடன் இணைத்து விடுவது (United Srilanka India)


இந்த மூன்றில் ஏதாவது நிகழுமா என்றால்  முதலாவதான பெடரல் அமைப்புக்கு தன்னைப் போர்க்குற்றங்களிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவும், உலக நாடுகளின் அழுத்தங்களால் ஏதாவது ஒரு தீர்வை முன்வைத்தாக வேண்டுமென்ற நிலையில் ராஜபக்சே பாராளுமன்ற ஆதரவுடன் தேர்ந்தெடுக்கும் முதல் ஆயுதம் பெடரல் அமைப்பாகவே இருக்கும்.இதற்கு சுப்ரமணியன் சுவாமியின் உதவியெல்லாம் ஒன்றும் தேவையில்லை.
இலங்கையை இரண்டாக தனி நாடுகளாகப் பிரித்து விடுவதற்கான வலுவான காரணங்கள் உள்ளன.இதனை தமிழர்கள் குரல் எழுப்புவதோடு  சிங்களவர்களும் குரல் எழுப்பும் சந்தர்ப்பங்கள் உருவாகுவது சிறப்பாக இருக்கும்.ஒற்றை ஆட்சியே ஆனால் சம உரிமை கிடையாது என்பது இப்போதைய கால கட்டத்துக்கு வேண்டுமானால் இலங்கை அரசுக்கு சாதித்து விட்டோம் என்ற சின்ன மகிழ்ச்சியை தரலாம்.ஆனால் தொலைநோக்கில் நீரு பூத்த நெருப்பாகவே இருப்பதற்கே வழிவகுக்கும்.இல்லையென்றால் தமிழர்கள் தங்களை இரண்டாம் தர குடிமக்களாக வாழும் சூழல்களுக்குப் பழகிப் போனவர்களாக சில அரசு சலுகைகள் உதவக்கூடும்.

இரு நாட்டுக் கொள்கைக்கு தமிழர்களின் ஒற்றுமை ஒரு பக்கமிருக்க அனைத்து உலக நாடுகளில் பெரும்பான்மையானவைகளின் தமிழர் சார்பு நிலை உருவாக வேண்டும்.இந்தியா உள்பட கடல்வழி பொருளாதாரத்தில் தங்களின் நலன்கள் எப்படி பாதுகாக்கப்படும் என சீனா,இந்தியா போன்ற நாடுகளை முன்வைத்தே அமெரிக்காவும்,ஐரோப்பிய நாடுகளும் தலையிடும். மிக முக்கியமாக வளைகுடா,லிபியா,சிரியா,இஸ்ரேல், பாலஸ்தீனிய நாடுகளிலிருந்து தனது கவனத்தை வேறுபக்கம் திருப்புவதற்கான கால சூழல்களில் மாத்திரமே இலங்கையில் மூக்கை நுழைக்கலாமா?வேண்டாமா என்பதை மேற்கத்திய நாடுகள் தீர்மானம் செய்யும்.நவம்பர் மாதம் இலங்கை அரசு வெளியிடும் தனக்கு தானே குற்றமும்,தீர்ப்பின் முடிவுக்காக ஐ.நாவும்,மனித உரிமை அமைப்புக்களும் காத்துள்ளன.எனவே இன்னும் சில மாதங்கள் எந்த சலசலப்பு ம் இல்லாமலே  2011 கூட  நகரும்.

மூன்றாவதாக இந்தியாவும்,இலங்கையும் புத்திசாலி நாடுகளாக இருந்தால் செய்ய வேண்டியது இலங்கையை மொழி வாரி இரு மாநிலங்களாக இந்தியாவுடன் இணைத்து விடுவது.தற்கான ஸ்டேட்ஸ்மென்ஷிப் மன்மோகனுக்கோ,ராஜபக்சேவுக்கோ இப்போதைக்கு இல்லையெனலாம்.

ஒருவேளை சீனாவை நோண்டி விடும் திட்டம் ஏதாவது சுப்ரமணியன் சுவாமியிடம் இருக்கிறதோ என்னவோ:)ஒரு வேளை பி.ஜே.பி வலுவாக வருங்காலத்தில் ஆட்சி புரிந்தால் அகண்ட பாரதம் என்ற கொள்கையின் ஒரு பகுதியாக சீனாவின் கடல் பொருளாதார ஆதிக்க கிரியா ஊக்கி காரணமாக மூன்றாம் நிலைக்கு மாறும் வாய்ப்புக்கள் உள்ளது.   இலங்கை ஐ.நாவின் அங்கீகரிக்கப்பட்ட இறையாண்மை நாடாகி விட்டதால் இந்திய சாத்தியம் தற்போதைக்கு இல்லையென்றே கூறலாம்.ஆனாலும் இந்தியாவை நம்பிய   நிலையில் இலங்கை இன்னும் தொடரவே செய்யும்.

த்மிழர்களின் தாகம் தமிழீழமா அல்லது சேர்ந்தே வாழ்வோம் என்ற பெடரல் அமைப்பா அல்லது இப்போது தொடரும் சம உரிமைகளற்ற வாழ்க்கைப் போராட்டமா என்பதே இப்போதைக்கான கேள்வி.சுப்ரமணியன் சுவாமியை துணைக்கு அழைக்கலாமா?