நண்பரே!ஓடிக்கொண்டிருப்பதாலும்,இணைய தடங்களாலும் உடனடியாக மல்லுக்கு நிற்க முடியாததற்கு முதலில் உங்களுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.இலவச விளம்பரத்துக்கு நன்றி என்று பின்னூட்டம் போட்டால் கூட வெளியிட மறுக்கும் நண்பரே உங்கள் பதிவு பாணியிலேயே பதில் சொல்ல வேண்டி காலம் கடந்து தட்டச்சுகிறேன்.
தமிழ்மணம் இப்பொழுதெல்லாம் சண்டை களமில்லாமல் அழகாய் நகர்கிறது.அதற்கான காரணங்களில் விவாதப் பொருள் உரைப்போரும், முக்கியமாக கருத்தாளர்கள்,சண்டைக்கோழிகள் பெரும்பாலும் ட்விட்ரேன், முகத்தை பார்க்கிறேன்,பஸ் விடறேனாக்கும்,பதிவே போட மாட்டேன்... ஆனால் பின்னூட்டத்தில் கவனிச்சுக்கிறேன் என்று பலர் பிரிந்து போனதாக இருக்கலாம்.
பதிவுகள் எழுதுவதை விட மற்றவர்களின் பார்வைகள் எப்படி என்று கவனிக்கும் எனக்கு முன்பு மாதிரி பதிவுலகமே கிடையா இருக்க முடியவில்லை. இதோ போன வார கோழிச்சண்டைக்கே இப்பத்தான் பதில் சொல்ல முடிகிறது.
திரைப்படங்களை நியூஸ் ரீலில் துவங்கி,டைட்டில் கார்டில் பெயர்கள் பார்த்த படங்கள் முதல்,கதாநாயக,நாயகிகளை பின் தள்ளி இளையராஜாவின் இசை,ஒளிப்பதிவாளர்கள் அசோக் குமார்,ஸ்ரீராம்,எடிட்டிங் லெனின்,விஜயன் இன்னும் பல தொழில் நுட்ப கலைஞர்கள்,கவுண்டமணி,செந்தில்,வடிவேல் காலம் என மாறிய போதும் கூட திரைப்படங்கள் அனைத்தும் பார்க்கும் ஞான பண்டிதம் என்னிடம் இல்லை.நடிகர்,நடிகைகள்,இசை,ஒளிப்பதிவு.கதை நல்லாயிருக்கு என விமர்சனம் படித்தோ,இப்பொழுது பதிவர்கள் பலர் ஆஹா,ஓஹோ என்றால் மட்டுமே சில படங்களை இப்பொழுது இணையத்தில் பார்க்கிறேன்.
முக்கியமாக உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, மேதாவித்தனம் என்ற அகம்பாவம் என்னிடம் இல்லை.அப்படி புரிந்து கொண்டால் அது உங்கள் பார்வை. இணைய தளமும்,கைபேசியும் வராத கால கட்டத்தில் என் குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் கூட இதே பாணியில் தான் நான் கடித பரிபாஷை செய்துள்ளேன். இவன் கடிதம் எழுதுகிறானா இல்ல கதை வசனம் எழுதுகிறானா என்ற கிண்டலை என் அண்ணனிடம் வாங்கி கட்டியுள்ளேன்.
பூச்சி முருகனை நினைத்துத்தான் கருத்து சொன்னேன். ஆனால் சங்கிலி முருகன் பெயரை கை தட்டி விட்டது. பின்னூட்டத்தில் பெயர் குழப்பத்தை லூஸ்ல விட்டுட்டேன்.ஆனாலும் நம்ம நக்கீரன் பொருள் குற்றம் கண்டு இலவச விளம்பரம் தந்து விட்டார்.பதிவின் கருத்துக்கள் எதையும் அடைகாத்து சொல்வதில்லை. அந்த அந்த நேரத்து மன நிலை,நிகழ்வுகளை ஒட்டியே கருத்து சொல்லியிருக்கிறேன்.
கலைஞர கருணாநிதி தமிழகத்துக்கு நிறைய செய்திருக்கிறார்.நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். ஆனால் 2ஜி கால கட்டத்தில் குடும்ப நலனை முன் வைத்து ஈழ பிரச்சினையை திசை திருப்பியதை ஆதங்கத்தோடு சொன்னால் அப்ப நீ அ.தி.மு.கவுக்கு வால் பிடிக்கிறவன் தானே என்று நண்பர் பிராண்டுவார். எந்த கட்சிக்கும் வாக்க படாததால் நேர்,எதிர் கருத்துக்களை மட்டுமே முன் வைக்கிறேன். எங்கோ யோகா பற்றி சொல்லியிருக்க கூடும்.அல்லது இஸ்லாமிய சகோதரர்கள் பிரச்சாரம் பண்ணுறேன் பேர்வழிகள் என பதிவுகள் இட்ட கால கட்டத்தில் அரசல் புரசலாக பின்னூட்டங்களும்,பதிவும் வந்திருக்கலாம். உடனே நீ இந்துத்வா என்று இவர் பல்லிளிக்க நான் பல்லை எனக்குள்ளே நற நறக்க... இதோ இப்பொழுது மோடியின் தேனிலவு முடிந்து விட்டது.மாட்டுக்கறி,அப்பாவி இஸலாமியரை கொலை செய்த பஜ்ரங்க பலிகள் பற்றி சொன்னால் எனக்கு பச்சை வர்ணம் பூசுவீரோ?
எங்கடா சந்து கிடைக்கும்,பேந்தா ஆடலாம்ன்னு பின்னூட்ட நாயகன் வவ்வால் ஏதாவது சொன்னால் நம்ம நண்பர் மாற்று கருத்தை முன் வைப்பார். அவர் ஒன்றை சொல்ல,இவர் ஒன்றை சொல்ல நான் பேன்னு பேய் முழி முழிப்பேன். ஒரு கட்டத்தில் வரம்புகள் மீறி அண்ணன் ராதாரவியின் அங்குசத்தை வீசுவார் நண்பர். நீங்க பதிவுலகில் சொன்னதை விட,சண்டை தவிர... வவ்வால் நிறையவே சொல்லியிருக்கிறார் என நான் பிராண்ட இவருக்கு அமெரிக்காவில் எகிறுவதை எழுத்திலேயே உணர முடியும்.ஏற்கனவே வவ்வால்,ஜெயதேவ் போன்றவர்கள் உங்களை துவைத்து காயப்போட்டு விட்டார்கள். இனி புதிதாக நான் என்ன சொல்ல! உங்கள் பதிவுலக உறவுகள் முறிந்து போனாலும் கூட நான் நட்போடுதானே உங்களை கிண்டல் செய்திருக்கிறேன். உங்கள் தமிழ்,ஆங்கில மொழி நடைக்கு இதை விட இலக்கண,இலக்கிய லட்சணமாய் யாரும் சண்டை போட முடியாது.
பதிவுலகம் நல்ல பாடங்களைத்தான் நிறைய கற்றுத்தந்திருக்கிறது. ஒரு கருத்துக்கு பல பரிமாணங்கள் இருக்கிறது என்பதை நண்பர் மற்றும் வவ்வால் போன்றவர்களின் கருத்து மோதல்களில் கற்றுக்கொண்டிருக்கிறேன்.. எனக்கு பிடிக்கும் கருத்துக்கள் இன்னொருவருக்கு பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை புரிந்து கொண்டுள்ளேன். எதற்காக பதிவிடுகிறேன்? எனக்காகவா!பிறரின் கவனம் ஈர்க்கவா என்ற புரிதல் கூட இன்று வரை என்னிடமில்லை.
எத்தனை பேர் பொது வெளியில் இருக்கிறார்கள் என்று கருத்துரிமை காரணம் காட்டி விமர்சனம் செய்திருப்பேன். அதே போல் நானும் விமர்சனத்துக்கு உட்பட்டவனே. ஆனாலும் இன்னும் என்னை மற்றவர்கள் விமர்சிக்கும் தகுதி நிலைக்கு வளரவில்லையென்பதையும் அறிவேன். ஏதோ உங்களைப் போன்றவர்கள் அருள் பார்வை கிடைக்கிறது.
பதிவுகளில் கருத்து சொல்வதற்கும் தமிழக அரசு இயந்திரங்களும்,மனிதர்கள் இயங்குவதற்கும் நிறைய வித்தியாசங்களை சமீபத்தில் அனுபவ பூர்வமாக கண்டேன்.பதிவுலகம் தீவு மாதிரி.வழி தவறி வந்து விட்டவர்கள் எப்படியோ வழி தேடி ஓடி விட்டார்கள். ஏதோ சிலர் இன்னும் ஓடிக்கொண்டும் தேடிக்கொண்டுமிருக்கிறோம்.
பூச்சி முருகனும் சங்கிலி முருகனும் பெயர் குழப்பத்திற்கு என்னை மன்னிப்பார்களாக!மூளை பதிவு செய்ததை கணினி சரியாக கொண்டு வரவில்லை.மீள் பார்வை பார்க்காத குற்றத்தால் தவறு தவறாகவே போய் விட்டது.
அய்யே! இந்த பதிவை பதிவேற்றும் முன் நண்பர் நம்ம பின்னூட்ட கருத்து வெளியிட்டிருக்கிறாரா என்று பார்த்தேன்.ம்ஹும்! பதிலா பதிவுலகம் போரடிக்கிற மாதிரியிருக்குதே தோரணையில் ஏதோ புலம்பிகிட்டிருக்கார். இதோ! ஏதோ என்னால் ஆன உதவி:)