Followers

Tuesday, November 24, 2015

பரவாயில்லையே இளங்கோவன்!

நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கூறிய கருத்துக்களின் அடிப்படையில் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச். ராஜா வாரஇதழ் ஒன்றில் கடிதம் எழுதுவதாகக் கூறி அவர்மீது சேற்றை வாறி இறைத்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவர்மீது இவருக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியை கொட்டித் தீர்த்திருக்கிறார். சமீபகாலமாக பா.ஜ.க.வினருக்கு சகிப்புத்தன்மை இல்லாமல் செயல்பட்டு வருவதால் நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் கடுமையாக எழுந்து வருகின்றன. மாற்றுக் கருத்து கொண்டவர்கள் கொல்லப்படுவது, அச்சுறுத்தப்படுவது, மிரட்டப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

எச். ராஜா எழுதிய கடிதத்தில் 'கமல்ஹாசன் என்ற சொல், தமிழ்ச் சொல்லா ? சுத்த சமஸ்கிருத சொல் தானே ? நல்ல தமிழ்ப் பெயரை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்" என்று அறிவுரை கூறுவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது ? நாட்டு மக்கள் மீது சமஸ்கிருதத்தை திணிப்பதற்கு பல வகைகளில் பகீரத முயற்சிகளை எடுத்து வருகிற சங்பரிவாரங்கள் இதுகுறித்து பேசலாமா ? மேலும் 'என் தட்டில் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று கமல்ஹாசன் கூறியதிலே என்ன தவறு ? பசுவதை தடைச் சட்டம் பல மாநிலங்களில் இருப்பதாகக் கூறுகிற எச். ராஜா, மேலும் இது அரசமைப்பு விதி 48 இல் இருப்பதாக கூறி தமது வாதத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். பசுவை புனிதமாகக் கருதுகிற வகையில் அப்பிரிவு இல்லை என்பதை ஒருமுறைக்கு பலமுறை அதை படித்து தெளிவு பெறுவது நல்லது. பசுவை 10 அல்லது 15 ஆண்டுகள் கழித்து எதற்கும் பயன்படாத நிலையில் அதை கொல்வதற்கு அரசு அனுமதிப்பதையும் அச்சட்டத்தில் கூறப்பட்டிருப்பதை ராஜாவால் மறுக்க முடியுமா ? 

2014 இல் இருந்த இறைச்சி ஏற்றுமதியைவிட 2015 இல் 14 சதவீதம் அதிகமாக ரூ.29,000 கோடி ஏற்றுமதி செய்வது குறித்து ராஜா அறிவாரா ? இந்த இறைச்சி ஏற்றுமதியை அதிகமாக செய்வதே பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் என்பது ராஜாவுக்கு தெரியுமா ? மாட்டிறைச்சி ஏற்றுமதியை அனுமதிக்கிற பா.ஜ.க., இதைத்தான் உண்ண வேண்டும், இதை உண்ணக் கூடாது என்று சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது ? 

விடுதலைப் போராட்ட தியாகி பரமக்குடி சீனிவாசனின் மகனாக பிறந்து, 6 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 200 படங்களுக்கு மேல் நடித்து, உலக சாதனை படைத்து தமிழர்களுக்கெல்லாம் தமிழராக வாழ்ந்து கொண்டிருக்கிற கமல்ஹாசன் அவர்களை பாராட்டுவதற்கு மனமில்லாவிட்டாலும் குறைந்தபட்சம் கொச்சைப்படுத்தாமல் இருக்கலாமே ? 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என மொழி எல்லைகளைக் கடந்து திரைப்படங்களில் நடித்து தமிழர்களின் பாராட்டை மட்டுமல்ல, உலக மக்களின் பாராட்டையும் பெற்றவர் கமல்ஹாசன். 4 முறை தேசிய விருதும், 19 முறை பிலிம்பேர் விருதும், பத்மஸ்ரீ, பத்மபூஷன் என பல பட்டங்களை, பரிசுகளை குவித்த தமிழ்த்தாயின் மூத்த கலைமகன் கமல்ஹாசன் மீது குறிவைத்து தாக்குகிற பா.ஜ.க.வினரின் உள்நோக்கத்தை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். கமல்ஹாசன் தமிழ் மண்ணில் பிறந்தது தமிழருக்கு பெருமை! இந்தியருக்கு பெருமை !
கடந்த ஓரிரு ஆண்டுகளாக பா.ஜ.க.வினர் வாய்த்துடிப்போடு பேசி வருவதை நாடு முழுவதும் கண்டு வருகிறோம். அந்த வகையில் தந்தை பெரியாரை மிகமிக கேவலமாக இழிவுபடுத்தி பேசிவிட்டு, 'வைகோ வீடு போய்ச் சேர மாட்டார்" என்று மிரட்டல் விடுத்த எச். ராஜாவுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறோம். ஆதிக்க சக்திகளால் புறக்கணிக்கப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தினருக்கு சமநிலையும், சமவாய்ப்பும் தமது வாழ்க்கையை அர்பணித்து பெற்றுத்தந்தை பெரியாரை இழிவுபடுத்தி விட்டு தமிழ் மண்ணில் உங்களை நடமாட அனுமதித்தற்காக தமிழ்ச் சமுதாயத்தின் சகிப்புத்தன்மைக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். 

எச். ராஜா எழுதிய கடிதத்தின் இறுதியில் 'எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்" என்று முடித்திருக்கிறார். எளியாராகவோ, வலியாராகவோ இல்லாமல் விபத்தின் காரணமாக அரசியலில் வலம் வந்து கொண்டிருக்கிற எச். ராஜா போன்ற அராஜகவாதிகளை காலம் வரும்போது தமிழ் மக்கள் குப்பைக் கூடையில் தூக்கி எறிவார்கள் என்பது உறுதி.

தந்தை பெரியாரில் தொடங்கி,  கமல்ஹாசன் வரை நீண்டிருக்கிற உங்களது வாய்த்துடுக்கான, தரம் தாழ்ந்த, இழிவான பேச்சுக்களை இனியாவது நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி நிறுத்தவில்லையென்றால் அதனுடைய விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி வரும்.’’

17 comments:

ராஜ நடராஜன் said...

பதிவின் நகல் நக்கீரன் பத்திரிகை என்பதை குறிப்பிட மறந்து விட்டேன். நக்கீரன் குழு மன்னிப்பார்களாக.

? said...

//பதிவின் நகல் நக்கீரன் பத்திரிகை//

"உங்க படம் ஹாலிவுட் படத்தின் காப்பியா?" என்ற கேள்விக்கு லோகநாயகர் பதிலென்ற பெயரில் குழப்புறது போல இருக்குது இந்த வரி. ஒருவேளை நக்கீரன் கட்டுரையின் நகலா இந்த பதிவு? அப்படியெனில் நக்கீரனை காப்பியடிக்கற அளவுக்கா துபாயில் வறட்சி?

ராஜ நடராஜன் said...

நந்து! நலமா? வண்டி எண்ணை வாங்கலையோ எண்ணைன்னு கூவித் திர்வதால முந்தையை காலம் மாதிரி பதிவுக்கான நேரம் குறைவு.அமெரிக்காவில்தான் பெட்ரோல் எண்ணை வறட்சியாமே!ஆள் புடிச்சீங்கன்னா வேணுமின்னா ஒரு டப்பா அனுப்பி விடலாம்.ஆனால் உங்க ஆட்கள்தான் துருக்கிகாரனுக்கு மட்டும் சல்லிசா கிடைக்குதேன்னு பொறாமையில் ரஷ்யாவையும் நண்பேண்டான்னு கூட்டு சதியில் சிக்க வைத்து விமானத்திலிருந்து எண்ணை அனுப்புற லாரி அனைத்தையும் குண்டு போட்ட கோபத்தில் நேற்று துருக்கி ரஷ்யாவின் ஒரு ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதை தொலைக்காட்சியில் பார்த்தேன்.

நான் சொல்ல வேண்டிய அனைத்து அம்சங்களையும் காங்கிரஸ் என்ற எதிர் தரப்பில் இருந்தாலும் இளங்கோவன் சொல்வது சொல்லுக்கு சொல் எனது குரலாகவே பிரதிபலிப்பதால் நக்கீரன் நகலை ஒட்ட வைத்து விட்டேன்.

நான் தூங்குற நேரத்தில் நீங்க பின்னூட்டமிட நீங்க தூங்கிற நேரத்தில் நான் பதில் சொல்ல நேரம்தான் சல்லிசா இல்லை.

ஜோதிஜி said...

இருப்பிடம் அல்லது நான் இங்கே இருக்கின்றேன் அல்லது யாராவது என்னை கவனியுங்கள் என்பது மற்ற துறைகளை விட அரசியலில் ரொம்பவே முக்கியம். அதனால் பலரும் பலசமயங்களில் முக்கிக் கொண்டே இருக்கின்றார்கள் என்பதை நாம் உணர்ந்து கொண்டாலே போதுமானது. பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

வேகநரி said...

உலக சாதனை படைத்து தமிழர்களுக்கெல்லாம் தமிழராக வாழ்ந்து கொண்டிருக்கிற கமல்ஹாசன்...

அந்த கமலஹாசன் எடுத்த விஸ்வரூபம் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோமென்று 23 இஸ்லாமிய மதவாத அமைப்புகள் செயல்பட்டு, அவரை துன்புறுத்தி,இந்திய ஜனநாயகம் கருத்து சுதந்திரத்தை புண்படுத்திய போது, நீங்க அதை கண்டித்து ஏதாவது பதிவு எழுதினீர்களா?

? said...

ராஜநட, இப்பதான் பெட்ரோல் சலீசா கிடைக்குது - லிட்டர் 31 ரூபாய்தான் (சுமாராக $2/ஒரு கேலன்). சென்ற வருடங்களில் ஹைபிரட் அல்லது சிறிய வகை கார்களை வாங்கிய அமெரிக்க சனம் இப்போது மறுபடியும் இந்த பெட்ரோல் விலை குறைவால் மினிபஸ் சைசு கார்களில் இப்போது உலாவருகிறது.. நீர் வறட்சி என்கிறீர்!

சலீசாக பெட்ரோல் வாங்குவதால் துருக்கி மீது அமெரிக்கர்களுக்கு கோபமெல்லாம் இல்லை, இருவரும் கூட்டுக் களவாணிகள் தானே. ரஷ்யா எனும் வேலியில் போகிற ஓணானை எதுக்கு அமெரிக்கனுக இழுத்து வேட்டியில் (ஜீன்சில்) விட்டுக்கணும். நீர் கதைவே மாத்தி சொல்லுகிறீர். அமெரிக்காவும் பெட்ரோல் லாரிமேல் குண்டு போடுகிறது, ஆனால் அதுக்கு முன்னாடியே நோட்டீஸ் போடுவார்களாம் - "ஐயா தீவிரவாதி சார், புட்டின் குரூப் உங்க மேல் குண்டு போட்டு நல்லபேர் எடுப்பதால்,நாங்களும் குண்டு போட்டு தொலைக்க வேண்டியிருக்குது. கோபிச்சுக்காதீங்க, சும்மா லூல்லாய்தான். ஆகவே உங்களுக்கு வசதிபட்ட இடத்தில் லாரிகளை பார்க் பண்ணிவிட்டு ஊட்டுக்கு போங்க. மறக்காம உங்க சொந்த பொருளை எடுத்துட்டு போய்கங்க. நாங்க ஆளில்லாத லாரிமேல குண்டு போட்டு வீடியோ எடுத்துக்குவோம். நீங்க பத்திரமா இருங்க - இப்படிக்கு அன்பு முத்தங்களுடன் ஓபாமா" எப்படி ஒரு மனித நேயம் பாருங்க!
அப்புறம் நான் இன்னமும் இந்தியன்தான் சாமி!

வேகநரி said...

//இருவரும் கூட்டுக் களவாணிகள் தானே.//
துருக்கி,அமெரிக்கா கூட்டுக் களவாணிகள் என்பது முற்றிலும் உண்மை. அமெரிக்காவில் இருந்தாலும் துணிந்து உண்மையை சொன்ன பச்சை திராவிடன் சகோ நந்தவனத்தானுக்கு பாராட்டுக்கள்.

? said...

@சகோ வேகநரி நன்றி, நான் தமிழ்ல எழுதுவதை CIA, NSA ஆளுக படிக்க மாட்டானுங்க என்ற துணிச்சல்தான் (நம்ம திராவிட வீரமெல்லாம் இந்த ரேஞ்சுக்குதான் பார்த்துகிடுங்க!:)

ஜசிஸ் மீது ரஷ்யா குண்டு போடுவதால் அமெரிக்காவில் முதன்முறையாக புட்டின் மீது மக்களுக்கு மரியாதை வந்திருக்கிறது. வளர்த்த கடாவை ஒன்றும் செய்யமலிருக்கும் ஒபாமா மீதும் மக்களுக்கு கொஞ்சம் கடுப்பு வந்திருக்கிறது. வெளிநாட்டினர் சிலர் இணையத்தில், அமெரிக்கா ஐசிஸ் ஆட்களை ஓழித்துக்கட்டாமல் வளர்த்து விடுவதாக அமெரிக்காவை குற்றம் சாட்டிய போது, அமெரிக்க நாடு என்று எங்கள் எல்லோரையும் குறை சொல்லவேண்டாம், அமெரிக்க அரசினை மட்டும் குறை சொல்லவும் என சில அமெரிக்கர்கள் குரல் கொடுத்தனர். ஆனா நம்மை மாதிரி குடியுரிமை வாங்காத ஆளுக இப்படி சவுண்டு கொடுத்தால் ஊரைப் பார்க்க அனுப்பி விடுவார்கள் என்பதும் உண்மைதான்!

வேகநரி said...

தற்போதைய செய்திகளின்படி,அமெரிக்க கூட்டு களவாணியும்,துருக்கிய இஸ்லாமிய மதவாதமாகியுமான துருக்கிய அதிபர்
ரஷ்யாவின் விமானத்தை சுட்டு வீழ்த்தியதிற்க்கு வருத்தம் தெரிவித்து இனிமேல் இப்படி நடைபெறது என்றும் தெரிவித்துள்ளார்.

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி! வியாபார கண்ணோட்டத்தில் வழக்கமான புலம்பல்தான் நேரம் குறைவு. தமிழ் மணம் எப்படியாவது ஒரு நோட்டம் விட முடிகிறது. ஆனால் பதிவும் பின்னூட்ட நேரமும் தொலைந்து போய் விட்டது.

நீங்க சொன்னது உண்மைதான். அரசியலில் காலை ஆட்டிக்கொண்டே தூங்க வேண்டிய கட்டாயம் பலருக்கும் இருக்கிறது. யார் இந்த எச்.ராஜா!பி.ஜே.பி களத்தில் குதிக்காத வரைக்கும் ஆர்.எஸ்.எஸ் என்ற குதிருக்குள் அடக்கமாய் ரொம்ப வருசமாக அமுத்திகிட்டு உட்கார்ந்துகிட்டிருந்தவர் எனபதை இப்பொழுது அறிய முடிகிறது. நல்லக்கண்ணு போன்ற கம்யூனிசவாதிகளுக்கு கிட்டாத விளம்பரம் எச்.ராஜா மாதிரி காமெடியன்களுக்கு கிடைத்து விடுவது ரொம்ப வருத்தப்பட வேண்டிய விசயம்.அந்த விளம்பரத்தை நானும் சேர்ந்து செய்யுமளவுக்கு கோப விமர்சனங்கள் இவரைப் போன்றவர்களுக்கு பூமாலை மாதிரி தெரிவது இன்னும் வருத்தப் பட வேண்டிய விசயம்.

ராஜ நடராஜன் said...

வேகநரி!நலமா? ஜோதிஜியின் பின்னூட்டத்துக்கு அடுத்து நீங்க உட்கார்ந்து கொண்டிருப்பதால் கேள்வி ஜோதிஜிக்கா அல்லது எனக்கா என்று தெரியவில்லை. எனக்கு என்றால் விஸ்வரூபம் காலத்தில் எனக்கு வவ்வாலுடன் மல்லுக்கட்டவே நேரம் போதவில்லை. ஆனாலும் பதிவின் சுட்டி

http://parvaiyil.blogspot.com/2013/01/blog-post_27.html

பதிவின் முதல் போணியே நீங்கள்தான்:)

ராஜ நடராஜன் said...

நந்தவனத்தான்! உங்களைப் போன்றவர்கள் பின்னூட்டத்தில் இன்னும் அடிச்சு ஆட ஆட்கள் இருக்கிறார்கள் என்கிறதை பார்க்கிற போது மகிழ்ச்சியாக இருக்கிறது.ஆனால் ஆட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல். எண்ணை விலை இன்னும் கீழே 29 டாலருக்கு வந்து உட்கார்ந்து விட்டது. இது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என தெரியவில்லை.

அமெரிக்க SUV ராட்சத வண்டிகள்தான் இங்கே சாலையில் தென்படுகின்றன. நான் முன்பு Grand சிறுக்கியை ஓட்டிக்கொண்டு விட்டு இப்பொழ்து கம்பெனியின் அரத பழசான நிசான் ஜப்பான் வண்டியை ஓட்டிக்கொண்டுள்ளேன். இங்கே கவலைப்படாத ஒரே விசயம் பெட்ரோல் விலைதான்.சுத்துற வண்டியில் பெரும்பாலும் அமெரிக்க தயாரிப்பும்,டயோட்டா நல்ல தரமும் நம்பிக்கையான வாகனம் என்பதால் பல தரப்பட்ட விலைகளிலும்,மிட்சுபிசி,நிசான் போன்றவைகள் இரண்டாம் இடத்திலும் கொரியன் கியா மூன்றாம் நிலையிலும் உள்ளன.

நீங்க ரோட்டுல ஓடுற வண்டிகளை மட்டும் கணக்கெடுத்துகிட்டு நாப்தா எனும் விமான எரிபொருள்,விமானத்துக்கு விமானம் வானத்தில் ஊத்தும் பெட்ரோல்,ராக்கெட் பியூல் போன்றவைகளையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. முன்பு OPEC எனும் அமைப்பு வைத்த,நிர்ணயித்த விலைதான் செல்லும். சதாம் டாலரில் விறக மாட்டேன்,யூரோவில்தான் விற்பேன் என அடம்பிடித்த காலம் தொட்டு விலை நிரணயம் ஷேக்குகள் கையில் இல்லை. ஐ.எஸ் கள்ள வியாபாரம்,ஈரானின் பொருளாதர தடை நீக்கம் அமெரிக்காவால் அங்கீகரிக்கப் பட்டது,ரஷ்யாவுக்கும்,உக்ரைனுக்குமான சண்டை போன்ற புற காரணிகளால் எண்ணை விலை அதள பாதாளத்துக்கு போய் விட்டது. கச்சா எண்ணைக்கு மட்டும்தான் இந்த கதி.ஆனால் வாகன லூப்ரிகெண்ட்,உங்க ஊர்ல கோட்,சூட்களை கழுவும் வொய்ட் ஸ்பிரிட் போன்ற உப தயாரிப்புகளின் விலை எப்பொழுதும் போலவே உள்ளது. என்னால் கூவி விற்றாலும் வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. Base Oil போன்றவற்றை ஈரான் இன்னும் சல்லிசாகவே விற்பனை செய்கிறது.இஸ்ரேலுக்கு ஈரான்,மத்திய கிழக்கு நாடுகள் பொருளாதார தடை விதித்தாலும் இள்ரேலுக்கு விற்றது போகவே மற்றவர்களுக்கு என்று எழுதப்படாத சட்டம்:)

ராஜ நடராஜன் said...

நந்தவனத்தான்!முக்கியமான ஒன்றை குறிப்பிட்டுள்ளீர்கள். அதாவது அமெரிக்க அரசாங்கம் செயல்படுவதற்கும்,அமெரிக்க மக்களின் மன நிலைகளுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத மாதிரி இருப்பதால் அமெரிக்க மக்களை எந்த காரணம் கொண்டும் குறை சொல்லவே கூடாது. முஸ்ரஷ் காலத்திற்கு முன்பு இந்திய,பாகிஸ்தான் அரசாங்க அறிக்கை,இறுக்கம் இந்தியர்களையும்,பாகிஸ்தானியர்களையும் பற்றிக்கொள்ளூம் வேகம் குறைந்து விட்டது என்பதை கிரிக்கெட் பார்த்தால் கூட தெரிகிறது.எனவே அரசாங்க செயல்பாடுகளே மக்கள் மீதும் திணிக்கப்படுகிறது.

ஐ.எஸ் அக்கிரமங்களை சி.என்.என் போன்ற பொது ஊடகங்கள் கூட பரவலாக கொண்டு வரவில்லை.ஒரு நிமிடத்துக்கும் குறைவான அமெச்சூர்தனமான காணொளியானாலும் லைவ்லீக் போன்ற சுதந்திர தளங்கள் வரலாற்றை பதிப்பிக்க வேண்டும் என்ற ஆவலோடு பெரும்பாலும் மட்டுறுத்தல் இல்லாமல் ஆயிரங்களை எட்டும் பின்னூட்டங்களோடு ஐ.எஸ் அனுதாபிகளின் கருத்தையும் சேர்த்தே கொண்டு வந்தது.இப்ப பெரும்பாலும் உங்க ஊரு திருட்டு,வாகன ரேஸிங் என போகிறது.சிரியாவுக்கான பக்கத்தை பார்ப்பவனுக்கு ஐ.எஸ் அனுதாபம் கொஞ்சம் கூட வராது.அப்படியும் சில அனுதாபிகள் இருந்தால் மனித நேயமற்ற மறை கழண்ட கேசுகளாகவே இருக்கும்.கலிபா அரசு உருவாக்க பயன் பட்ட மொத்த ராணுவ வாகனங்களும் அமெரிக்காவின் தயாரிப்பு.பிரான்ஸ் வரை ஊடுருவும் வலுவுள்ள ஐ.எஸ் சிரியாவின் அடுத்த எல்லையான இஸ்ரேலில் ஒரு கல்லைத் தூக்கி கூட போடாததில் இருக்கிறது அமெரிக்க இஸ்ரேலின் கூட்டுச் சூழ்ச்சி.

ஐ.எஸ் அமெரிக்க இஸ்ரேல் அஜெண்டாவை நிறைவேற்றும் செம்மறி ஆடுகள்.

ராஜ நடராஜன் said...

வேகநரி உங்க கடைசி பின்னூட்டத்தோட முடிச்சிக்கிறேன்.

தமிழ்நாட்டில் வரும் தேர்தலுக்கான கூட்டணி குழப்பம் மாதிரிதான் அமெரிக்க,ரஷ்யா,பிரான்ஸ்,துருக்கி கூட்டணி. அமெரிக்காவின் அஜெண்டா அசாதை வெளியேற்றி அமெரிக்க பேச்சைக் கேட்கும் ஒரு டம்மியான ஆளை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.ஆனால் ரஷ்யாவுக்கு அசாத் ஆட்சியில் இருக்க வேண்டும்.ஐ.எஸ் இருக்க கூடாது. ஆனால் அமெரிக்கா ஐ.எஸ் மறைமுக ஆதரவு வளர்த்த கடா மார்பில் பாயாத வரை.பிரான்ஸ் பாவம் சகோதரத்துவம் போதித்து வீணாக வம்பில் மாட்டிக்கொண்டு விட்டது. துருக்கி ஐ.எஸ் ஆதரவு.காரணம் தனி நாடு கோரும் ஈராக்,துருக்கி எல்லை குர்திஸ்தானியர்களை துருக்கி ஒடுக்க வேண்டும்.என்வே அனைத்து லாஜிஸ்டிக்ஸ் ஆதரவும் ஐ.எஸ்க்கு தருகிறது. ஐ.எஸ் துருக்கிக்கு பொருளாதர நலனை தருகிறது எண்ணை விற்பனை உட்பட.சதாமுக்கு எதிராக கொம்பு சீவிய ஈரான் இப்பொழுது ஈராக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதற்கிடையில் ரஷ்யா ஒரு விமானமும் ஒரு பைலட்டும்தானே என துருக்கியோடு சமாதானம் செய்து கொள்ளலாம். இல்லாவிட்டால் இன்னும் ஆயுதங்களை குவித்துக்கொண்டு சிரியாவின் சண்டைக்குள் புகுந்து கொண்டு பின்னால் துருக்கிக்கு ஆப்பு வைக்கலாம். எப்படியானாலும் போர்களத்தை தீர்மானிப்பது F16 அமெரிக்க விமானங்கள் அல்ல!ரஷ்யாவின் AK47 துப்பாக்கிகள்தான்.

வேகநரி said...

//ராஜ நடராஜன் அவர்கள் சொல்கிறார்
வேகநரி உங்க கடைசி பின்னூட்டத்தோட முடிச்சிக்கிறேன்.//
நாங்க உங்க தளத்தில் போட்ட பின்னோட்டங்வங்களை எல்லாம் கவனித்தில் எடுத்து எங்களுக்கெல்லாம் பதில் தந்ததிற்க்கு நன்றிங்க அண்ணா.
(மறுபடியும் வருவேன்)

? said...

@ராசநட, ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா-அமெரிக்க-ரஷ்யா குஸ்தி பற்றி பேசிய சிஐஏ அதிகாரி "நீங்கள் படிப்பதெல்லாம் நாங்கள் விரும்பும் எண்ணத்தை உருவாக்கும் தகவல்கள் மட்டுமே, உண்மையில் நடப்பதை நாங்கள் மட்டுமே அறிவோம்" என்றார். இது இலங்கை விவகாரம் உட்பட எல்லாவற்றிற்கும் பொருந்தும். சொந்த பிரச்சனைகள் போக உள்ள மீதி நேரத்தில் இந்த பத்திரிக்கை செய்திகளையும் மிடிகிளாஸ் மனோநிலையை வைத்துக்கொண்டு எல்லா முடிவுகளுக்கும் வந்து விடுகிறோம்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு ரஷ்யாவை எதிர்த்து போரிட ரஷ்யா ஆயுதங்களையே அமெரிக்காவும் பாகிஸ்தானும் கொடுத்தன. ஆயுத சப்ளை இந்தியா! ரஷ்யாவிலிருந்து வாங்கிய ஆயுதத்தை அங்கு துட்டுக்கு அனுப்பினார்களாம். அதே மாதிரி ராசபட்சே ஜெயிக்க ஜனாதிபதி தேர்தலில் விடுதலைபுலிகள்தான் நிதியுதவி செய்தார்கள். முன்பு பிரமதாசவிடம் ஆயுதம் வாங்கி இந்திய அமைதிப்படையுடன் சண்டை போட்டுவிட்டு பின்பு அவரையும் போட்டார்கள் விபுகள். இப்போது ஐசிஸ் அமைப்பிடமிருந்து ஆசாத் அரசு எண்ணையும் மின்சாரமும் வாங்கி தனக்கு ஆப்பு வைக்கநினைக்கும் ஐசிஸிற்கு நிதியுதவி செய்கிறது...ரொம்பக் குழப்புறானுக!

@சகோவேகநரி துருக்கி மன்னிபெல்லாம் கோரவில்லை. வருத்தம் பட்டுகிச்சாம் அவ்வளவுதானாம். குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது... ரஷ்யாவின் மலிவுவிலை கேஸ் துருக்கிக்கு தேவை என்பதால் இப்படி பம்புவது போல நடிக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் கவனித்துக்கொள்வதாக பெரியண்ணன் வாக்களித்திருப்பார்,இல்லாவிடின் ரஷ்யக் கரடியை எதிர்க்கும் துணிச்சல் ஐரோப்பாவின் நோயாளிக்கு ஏது?

ராஜ நடராஜன் said...

நந்தவனம்! நீங்க என்ன சிஐஏ ஏஜன்டா? புதுசு புதுசா தகவல் சொல்றீங்களே! வவ்வால் இல்லாத குறைக்கு தலைகீழ் பார்வை மாதிரி தெரியுதே!

செய்வதும் நானே! சொல்வதும் நானேங்கிறதால் சி.ஐ.ஏ தகவல்கூட கசிந்து விடுமென்பதால் ஆயுத சப்ளை இந்தியா! ரஷ்யாவிலிருந்து வாங்கிய ஆயுதத்தை அங்கு துட்டுக்கு அனுப்பினார்களாம். அதே மாதிரி ராசபட்சே ஜெயிக்க ஜனாதிபதி தேர்தலில் விடுதலைபுலிகள்தான் நிதியுதவி செய்தார்கள் என்பதெல்லாம் எவ்வளவுக்கு உண்மையென்று தெரியவில்லை. இந்த மாதிரி தகவல்கள் முந்தைய பனிப்போரின் காலத்துக்கு சாத்தியமாகலாம். கணினி யுகத்தில் இது சாத்தியமா என்ற கேள்வியே எழுகிறது.