
நிர்வாகம் கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடம் பம்பாய் தாஜ்மகால்.கூடவே கொஞ்சம் இறுக்க முகம் கொண்ட சிறந்த நிர்வாகத்துடன் செயல்படுவதற்குரிய இடம் ஓபராய் என்றே இன்றும் அழைக்கப்படும் டிரைடண்ட்.இரண்டுமே உழைப்பு,உயர்வுக்கான அடையாளச் சின்னங்கள்.பல பிரபலங்களும்,திறமைகளும் கால்பதிந்த இடத்தில் தீவிரவாதம் என்ற ஓநாய்கள் புகுந்துவிட்டது வருத்தமும் கண்டனத்துக்குரிய விசயங்கள்.
கூடவே யூதர்களின் கூட்டு வாழ்க்கை கட்டிடம்,காலனி எச்சத்தில் மிஞ்சிப்போன ரயில் நிலையம் என மனித,இந்திய அடையாளங்களின் மீது தீவிரவாதத் தாக்குதல் மீண்டும் ஒரு முறை திட்டமிட்டு செயல்படுத்தப் பட்டுவிட்டது.எப்பவோ விதைத்த விதைகள் இப்பொழுது அறுவடைக்கு வந்துள்ளன.நேற்றும்,இன்றும் இனி நாளையும் தீவிரவாதக் காட்டில் முப்போகம்தான்.இவற்றிற்கான பணம்,பொருள்,இயக்கம் அனைத்தும் மதம் என்ற போதையில் பரவலாகப் பல திசைகளிலிருந்தும் வீசப் படுகின்றது.கூடவே இந்தியாவின் வளர்ச்சிப் பக்கத்து வீட்டுப் பாகிஸ்தானின் ஒரு பிரிவுக்கு கோபத்தை உண்டாக்கவே செய்கிறது.நண்டுக்கதை தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமல்ல!அதில் இந்திய பாகிஸ்தானும் பங்குதாரர்கள்.
தீவிர வாதத்திற்கெதிரான யுத்தம் என்பது அமெரிக்காவின் சில குறுகிய நலன்களைச் சார்ந்தும்,பாகிஸ்தானை நட்பு படுத்தும் நோக்கிலும் ஆப்கானிஸ்தான் மீது தொடுக்கப்பட்டது.ஆப்கானிஸ்தான் யுத்தத்தின் விதைகள் பாகிஸ்தானில் தீவிரவாத இயக்கங்களிடம் விதைக்கப்பட்டிருக்கிறதென்று தெரிந்தும் அந்நாட்டுடன் ந்ட்புக் கரம் நீட்டி துவக்கிய வெளிநாட்டுக் கொள்கை சறுக்கல் எனவே சொல்லலாம்.கூடவே ஈராக் யுத்தமும்.ஈராக் யுத்தத்தின் பலனாக பாதுகாப்பு உடன்படிக்கையை அமெரிக்காவும்,ஈராக்கும் கைச் சாத்திட்டதும்,சதாமை அப்புறப்படுத்தியதும் மட்டுமே அமெரிக்காவின் சாதனையெனக் கொள்ளலாம்.
மனித உரிமைகள் மறுக்கப்பட்டும்,மதவாதங்கள் தலையெடுப்பதும்,ஈரானை ஓரங்கட்டி பகைமை கொள்வதும் மத்திய கிழக்கு நாடுகளை எதிர்காலத்தில் மீண்டும் ஒரு யுத்தக் களத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் கொண்டதாகவே உள்ளது.ஒன்றுக்கொன்று தொடர்புகள் கொண்ட வறுமை,மனித முன்னேற்றம்,மதவாதம்,மனித உரிமை மறுப்புக்கள் முட்டி மோதிக் கொள்ளும் நேரத்தில் பிறப்பது தீவிரவாதம்.இதில் மனித நேயங்களை மறக்கச் செய்வதில் முக்கிய பங்கு மதவாதம்.டேராப் போட்டு நடத்திய மத வருட ஆண்டு விழாக்களில் ஊறித்திளைத்தவர்களையும்,உலகம் நோக்கும் பார்வைகளில் ஆர்வமற்று மதம் மட்டுமே என்ற முக்காடு போட்டுக் கொள்ளும் கல்வியிலும் ஊன்றி வளர்ந்தவை தீவிரவாதம்.
கூடப் பணி புரியும் பம்பாய் கிராமப் புறச் சூழலுடன் வாழ்ந்த இந்திய நண்பன் கூட காகிதங்கள்,கணினி,தொழுகையென்ற எல்லைகளைத் தாண்டி செல்வதில்லை.இந்த மாதிரி அப்பாவித்தனங்களும் அறியாமையும் எந்த தொந்தரவு எல்லையையும் தாண்டுவதில்லை.ஆனாலும் நகைச்சுவைக்காக அந்த நல்ல மனிதனுக்கு குத்தப் பட்ட முத்திரை டெரரிஸ்ட்.ஆனால் சூழ்நிலைகளும்,மனமாற்றம் செய்வதற்கான தகுதிகளும் கிடைத்த இளைஞனை நினைத்துப் பாருங்கள்.அப்படியான மனித நேயமிழந்த மனிதர்களின் முகங்களே தொலைகாட்சிகளில் பம்பாய் நிகழ்வில் துப்பாக்கியுடன் பொதுமனிதர்களை தாக்கிய சம்பவங்கள்.
தலிபான்கள் உச்சக் கட்ட தர்பார் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் நமது இண்டியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு கடத்திய கால கட்டங்களில், நடந்துகொண்டிருந்த என்னை இந்தியர் ஒருவர் வழிமறித்து இந்தியில் அளவளாவ ஆரம்பித்தார்.பொதுவான தேச நலன்கள் விசாரித்து விட்டு நேரடியாக விசயம் மதம் பற்றி திரும்பியது.பேச்சின் இடையில் நான் தமிழகத்தைச் சேர்ந்தவன் என்பது அறிந்ததும் உரையாடல் தானும் தமிழ்நாடு என்ற மீள் அறிமுகத்துடன் தமிழுக்கு தாவியது.இந்த உரையாடலில் குறிப்பிடப்பட வேண்டிய “என்ன கொடுமை சரவணா” விற்கான வசனம் என்னவென்றால் இந்த நவீன யுக மனித முன்னேற்றங்கள் எதற்கு?தொலைப் பேசி எதற்கு,விமானங்கள் எதற்கு என்று இந்தியாவிலிருந்து விமானம் ஏறிவந்த நண்பர் கூறவும் பிய்த்துக் கொண்டு வந்த எரிச்சலில் “நீங்கள் இன்னொரு உலகத்தில் வாழுகிறீர்கள்” என்று சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்தேன்.
இந்த நிகழ்வுக்குப் பின் வந்த காலத்தில் இரட்டைக் கோபுர விமானத் தாக்குதல்.இதற்குப் பின் தீவிரவாதம் லண்டன் பயணம் செய்து மீண்டும் ஆப்கானிஸ்தானத்திற்குள்ளும்,பாகிஸ்தானுக்குள்ளும் போய் அடைக்கலம் புகுந்து விட்டது.
போர்முனைக் கருவிகள் பொருளாதார ரீதியான வியாபாரமாகிப் போய் விட்ட நிலையிலும்,இந்த வியாபாரம் கணக்கில் வராதப் பணமாக ஹவாலா என்ற கறுப்புப் பணம் புதிய முகத்துடன் சில வங்கி அதிகாரப் பெயரில் சுற்றுக்கு விடப் படுகிறது.இன்று ஒரு பதிவில் சுற்றுக்கு விடப்பட்ட எஸ்.பி.ஐ ,வி.ஐ.பி ஒலிப்பதிவின் நகைச்சுவையளவுக்கு நமது வங்கிக் கணக்குகள் முன்னேறும் போதும்,வெளிநாட்டு வாழ் இந்தியப் பணம் சரியான சேனல்களாக வங்கிப் பதிவு பெற்று இந்தியா அடைந்தாலும் பக்கத்து வீட்டு பாகிஸ்தான் கொடுக்கல் வாங்கல்கள் அரசு கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு கைமாற்றம் செய்யப்படுகிறது. எந்த மிதவாதமான பாகிஸ்தான் அரசும் தலைதூக்கும் தீவிரவாத அமைப்புக்களை ஓரளவுக்கு அனுசரித்துப் போகும்படியான சூழலில்தான் இயங்க முடியும் எனும்படியான மதம் என்ற உணர்வுபூர்வமான விசயம் அரசியலில் களம் காண்கிறது.
இனி நம்மூர் அரசியலுக்கு வந்தோமென்றால் என்று ரதயாத்திரை,மசூதி இடிப்பு என்ற மதம் தலைக்குள் பூந்து கொண்டதோ அன்றே சோம்பேறி கழுதைக்கு சறுக்கினதே சாக்கு எனும்படி ஊற்றி வளர்த்த தீவிரவாதத்தை இந்தியாவுக்குள் நுழைப்பதற்கு ஏதுவாகிப் போனது.மதங்கள் செத்துப் போய்விட்டன.உண்மையான ஈகையும்,தொழுகையும் இஸ்லாத்தின் மூலக்கூறு என்ற அழகை புறம் தள்ளிவிட்டு ஜிஹாத்,ஜிஹாதி,ஜமாத் என்ற வார்த்தைகள் வேரூன்றி விட்டன.இன்றும் கோயில்களில் அழகும்,கலையுணர்வும் வேரூன்றி இருந்தாலும் அதனையும் தாண்டி காவித்துணிகளும்,துறவித்தனமும் இழந்து இந்து தீவிரவாதம் தலைதூக்குகிறது.அனைத்தையும் துற என்ற புத்தனின் கோட்பாடுகள் மறந்து புத்தபிட்சுகளும்,கூடவே இலங்கை அரசும் ஒரு இனத்தை அழிக்கும் அநியாயத்தைச் செய்கிறது.இரண்டாம் தரக் குடிமகனாக வாழ்வதற்கு தயாரென்றால் உனக்கு கிழக்கு திசையை தாரை வார்க்கிறேன் என்ற பேரத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி நல்லபடியாகவே செயல்படுகிறது.இனி புத்தம் சரணம் கட்சாமியல்ல....யுத்தம் சரணம் பிட்சுக்களே! இந்த எல்லைகளைக் கடந்து மனித நேயம் ஓங்கட்டும் என நினைத்து பகுத்தறிவு தளைக்கட்டுமென்று பார்த்தால் நாத்திகமும் பார்ப்பனன் என்ற மனித துவேசத்தில் மூழ்கி விடுகிறது.
பி.ஜே.பி காலத்து பாராளுமன்ற முற்றுகை,தற்போதைய காங்கிரசின் பம்பாய் தீவிரவாதம் இரண்டுமே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தீவிரவாதிகளின் கை ஓங்கியிருப்பதையும் நினைத்த நேரத்தில் தங்கள் பலத்தைக் காட்ட இயலும் என்பதனை நிருபித்துள்ளார்கள்.
இந்த நேரத்தில் ஹேமந்த் கர்காரே, விஜய் சலாஸ்கர் , அஷோக் காம்தே என்ற உண்மைக் கதாநாயகர்களுக்கும் ஏனைய காவல்துறையிலும், மற்ற இறந்த பொதுமனிதர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.
ஐயா!ஊடகத்துறை சேர்ந்த மற்றும் சினிமாத்துறை சார்ந்த பொதுநலன் துறை சார்ந்தவர்களே தயவு செய்து எதிர்க் கதாநாயகர்களை ஊக்கப்படுத்தாதீர்கள்.நம்மிடையே அன்றாட வாழ்வில் ஏகப்பட்ட கதாநாயகர்கள் உலாவருகிறார்கள்.அவர்களை கவுரப் படுத்துங்கள்.யாரும் ரத்தமும்,தீவிரவாதங்களை மிகைப் படுத்திச் சொல்லி படம் எடுக்கச் சொல்வதில்லை.நீங்கள் எதனைப் பரிமாறுகிறீர்களோ அதனையே சம்தாயம் உள்வாங்கிக் கொள்கிறது.நாளை பம்பாய் நிகழ்வினைப் படம் எடுக்க விரும்பினால் கூட ஹேமந்த் கர்காரே, விஜய் சலாஸ்கர் , அஷோக் காம்தே என்ற கதாநாயகர்களை முன்னிலைப் படுத்துங்கள்.முகங்களிலேயே தீவிரவாதம் காட்டும் பொறுக்கிகளை கண்ணாடியின் மூலையில் நிறுத்துங்கள்.
அரசாங்கத்துக்கும் அப்பாற்ப்பட்ட விழிப்புணர்வும்,தேசம்,மனிதம் நேசிக்காத மனிதர்கள் உங்கள் பக்கத்து வீட்டிலேயே சிரித்துக் கொண்டு நம்மிடையே உலா வரலாம்.இதெல்லாம் அடையாளம் காண நமக்கு ஏகப்பட்ட சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.நமக்கேன் வம்பென்ற மனோபாவம் போகட்டும்.உதவிக்கு வரும் குடிமகனை மரியாதை செலுத்த போலிஸ் துறையும் கற்றுக் கொள்ளுங்கள்.உங்களின் சேவை மகத்தான பாராட்டுக்குரியதாக இருந்தாலும்,கையூட்டு,தேச நலனுக்கு பணம் என்ற ஒரே காரணத்துக்காக சோரம் போவதை நிறுத்துங்கள்.போலிஸ்துறை மேம்படுத்தப் பட்டும்,தனது அளவிற்கதிகமான அதிகாரத்தை கவுரவப் படுத்தினாலே பிரச்சினைகளின் தீவிரவாதத்தின் ஒரு கோடியைப் பிடித்து விடலாம்.அதனையும் அடுத்து அரசாங்கப் பொதுத்துறை.அரசாங்க ஊழியம் என்பது எவ்வளவு கவுரமானது?கையூட்டும்,குறுகிய கால அரசியல்வாதிக்கு தவறான வழியில் துணை போவதை தடுத்தாலே அரசியல்வாதிகள் நேர்வழிக்கு வந்து விடுவார்கள்.பீரோகிராட்டிக்குகள் மட்டுமே தேச நலனுக்குப் பொறுப்பானவர்கள்.ஆழத்தோண்டினால் அவர்களின் சாணக்கியத்தனமே அரசியல்வாதிக்கு தவறான வழிகளுக்குத் துணை புரிகிறது.அரசியல்வாதிகள் வெறும் ஆட்டுவிப்பவர்களே.
இவற்றையெல்லாம் கடந்து புதிய உலகம் ஒருநாள் தோன்றட்டும் என நானும் கனவு காண்கிறேன்..அப்பொழுது மனித இனத்தின் அவலங்களை,அசிங்கங்களைப் புறம் தள்ளி விட்டு மனித நேயம் மட்டுமே ஆளுமை செய்யும் காலம் வரட்டும்.வரும் காலத்தின் மாறுதல்களில் புதிய மனித சிந்தனைகள் பிறக்கட்டும்.