Followers

Tuesday, November 4, 2008

அமெரிக்கா தேர்தல் 2008

மக்களின் தீர்ப்புக்கள் எழுதப்படும் இந்த நேரத்தில் மீண்டும் ஒரு பதிவு.முதலாவதாக மெக்கெய்ன் V ஒபாமாவின் தேர்தல் களத்தில் - அமெரிக்கப் பொருளாதாரம் ,வெளி நாட்டு உறவுக் கொள்கையில் பரிணமித்த போர்கள் எல்லாம் சேர்ந்து கிட்டத்தட்ட ஒபாமாவை வெள்ளை மாளிகையின் கதவுப் பக்கம் நகர்த்தியிருக்கிறது.அடுத்த நான்கு ஆண்டுகளுக்கும் நாற்காலியில் தனியாக உட்கார்ந்து பாட்டுக்கேட்டுக் கொண்டு நேரம் போக்குவதற்கு நேரமில்லாதபடி வேலைப் பளுக்கள் நிறைந்த நாட்கள் புதிய ஜனாதிபதிக்கு காத்திருக்கிறது.

முதலாவதாக பொருளாதாரக் கொள்கைகளை சீர்படுத்துவதும் யூனிப்போலார் எனும் தனி ஆதிக்கத்திலிருந்து மல்டிபோலார் (பிரிட்டிஷ் பிரதான மந்திரி கோர்டன் பிரவுன் இப்பவே கடன் கேட்டு மத்தியக் கிழக்கு நாடுகளில் வலம் வருகிறார்)எனும் பல் ஆதிக்க நிலையினை நேர்கொள்வதும் அவசியமாகிறது.இந்த நிலையில் புதிய பார்வைகளுடனும் நமக்கு மாற்றங்கள் தேவை என்ற கோசங்களுடனும் வரும் பராக் ஒபாமாவை அமெரிக்க அரியணைக்கு வரவேற்க தயாராக இருப்போம்.


பி.பி.சி யில் டிம் செபாஸ்டியன் என்பவர் தனது Hard Talk நிகழ்ச்சியின் மூலம் ரொம்ப பிரபலம்.மனுசன் உடும்புப் பிடி போட்டுக் கேட்கிற கேள்விகளுக்கு நிகழ்ச்சியில் பங்கு பெறும் நபர் அப்பப்ப தண்ணீர் குடிக்க வேண்டி வரும்.இப்ப எல்லாருக்கும் தண்ணீர் காண்பித்து விட்டு Doha Talk ன்னு புதிய நிகழ்ச்சி ஒன்றை எழுத்தாளர்கள்,அரசியல் விமர்சகர்கள்,தொலைகாட்சி நிகழ்வாளர்கள்,பத்திரிகை ஆசிரியர்கள்,பழைய ராணுவ அனுபவிகள்,அரசாங்க நாற்காலி அமர்வாளிகள் என பலதரப்பட்டவர்களை முக்கிய விருந்தாளிகளாக அழைத்து அவர்களது கருத்துக்களையும், நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாகவும் நிகழ்ச்சிகளை அமைக்கிறார்.இதில் பேசப் படும் பொருள் பாலஸ்தீனம்,ஈராக்,ஈரான்,லெபனான் போன்ற நாடுகளின் அரசியல் சூழல்கள் அதனைச் சார்ந்த பங்கு பெறுவோரின் கருத்துக் கணிப்பின் வாக்கெடுப்பு.நேற்றைய இரவு நிகழ்ச்சியில் தற்போதைய 2008 அமெரிக்க தேர்தலில் யார் சிறந்த ஜனாதிபதியாக இருக்க முடியும் என்ற வாக்கெடுப்பில்
மெக்கெய்ன் தரப்புக்கு 13% ம் ஒபாமாவிற்கு 87% சதமும் வாக்களிக்கப்பட்டது.

டிம் செபாஸ்டியனை நம்மூர்ப் பக்கம் அழைத்து சில நேரடி நிகழ்ச்சிகளையும் இந்தியா சார்ந்த பிரச்சினைகளையும் அலசச் சொல்லலாம்.முன்பு பிரணாப் ராய் கொஞ்சம் இந்த ஸ்டைலில் அசத்திக் கொண்டிருந்தார்.இப்ப என்ன செய்கிறார் என்று தெரியவில்லை.

(இங்கே யாரும் காபி குடிப்பதில்லை:). பேசி முடித்துவிட்டு ஒரு மொடக்கு தண்ணீர் மட்டும் குடிக்கிறார்கள்.)

2 comments:

குடுகுடுப்பை said...

ஒபாமா என்ன செய்ய முடியும், தெரியவில்லை.

ராஜ நடராஜன் said...

//ஒபாமா என்ன செய்ய முடியும், தெரியவில்லை.//

முதலாவதாக தற்போதைய ஈராக் நிலைகொள்ளலில் வரவு செலவு கணக்குப் பார்க்கலாம்.வரவுதான் என்கிற பட்சத்தில் ஜார்ஜ் புஷ்சின் கொள்கைகளை மேலும் சில ஆண்டுகள் நீட்டிக்கலாம்.இல்லை செலவுதான் அதிகம் எனும்பட்சத்தில் எவ்வளவு சீக்கிரம் மூட்டையைக் கட்ட இயலுமோ அவ்வளவு சீக்கிரம் இன்னொரு இடத்துக்கு ராணுவ வீரர்களை இடம் பெயர்க்கலாம்.(அமெரிக்காவிற்கு திரும்பக் கூப்பிட்டால் உட்கார வச்சு சோறு போடணுமே:))

இரண்டாவதாக பொருளாதாரம் பக்கம் திரும்பினால் புதிய பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கலாம்.நல்லதரமான கார்கள் விற்பனை குறைந்து போய்விட்டது.GMC,Ford போன்ற வாகன நிறுவனங்களின் உற்பத்தியைப் பெறுக்கலாம்.வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கலாம்.அவுட்சோர்ஸிங்கிற்கு ஆப்பு வைக்கும் எண்ணமிருந்தால் அமெரிக்கர்களையே அதே சம்பளத்துக்கு வேலை செய்யச் சொல்லலாம்:)

வெளியுறவுக் கொள்கையாக நான்கு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு போர் என்ற பக்கமே தலை வைத்துப் படுக்க வேண்டாம்.காஷ்மீரில் மீண்டும் மூக்கை நுழைக்க முயலாமல் இலங்கை,காங்கோ போன்ற பிரச்சினைகளை அலச முயலலாம்.இலங்கையில் மூக்கு நுழைக்க முயன்றாலே இந்தியா சுதாரித்துக் கொள்ளும் வாய்ப்பும் இலங்கைப் பிரச்சினை முடிவதற்கான தருணமும் ஏற்படும்.ஆப்பிரிக்க இனவாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முயற்சிக்கலாம்.பாகிஸ்தானும்,இந்தியாவும் நேரடியாகவேப் பேசித் தீர்த்துக் கொள்ளட்டுமென்ற புஷ்சின் கொள்கையைக் கடைப் பிடிக்கலாம்.

முக்கியமாக காசு எப்படி மிச்சப்படுத்துவது,வரவு அதிகப்படுத்துவது (போர் வழியாக அல்ல) என்பதில் கவனம் அதிகம் தேவை.