Followers

Saturday, September 17, 2011

பதிவுலகிலும் பல்லைக் காட்டும் சா தீ!

கடந்த பதிவிலிருந்து பதிவுலகை விட்டுப் போய் விடவுமில்லை.அதே நேரத்தில் பதிவுக்கும் அப்பால் பதிவர் சார்வாகன் சமரசம் உலாவும் இடமே தளத்தில் பதிவின் நீண்ட வாசிப்பில் மாட்டிக்கொண்டு எது உண்மையாக இருக்கும் என்ற நீண்ட ஆய்வுக்கான எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிய பாதி பயணத்தின் போது பின்னாலிருந்து காலை இழுத்து சென்னை கூவம் சாக்கடையில் தள்ளி விட்ட மாதிரியான உணர்வு இப்பொழுது.

இந்திய வரலாற்றில் சுதந்திர காலப் போராட்ட காலம் தொட்டு ஆங்கிலேயர்களாலும் ராஜா ராம் மோகன்ராயின் முயற்சியால் உடன்கட்டை போன்ற அவலங்கள் சட்டரீதியாக நீக்கப்பட்டும்,தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியார் ராமசாமி காலத்தில் சாதீக்கு எதிரான புரட்சி ஒரு முக்கிய காலகட்டம் என்ற போதிலும்,அரசு நிர்வாகத்துக்கு வந்து இதுவரை ஆட்சி செய்து கொண்டிருக்கும் இரு திராவிட கட்சிகளின் காலம் வரை சட்டங்கள் செய்தும் சாதி மிக தூரம் பயணம் செய்து அவ்வப்போது நீண்ட தூக்கம் போட்டு விட்டு தன் கோர முகத்தை முகமூடி போட்டுக்கொண்டு தன்னை வெளிப்படுத்தி திரும்பவும் மக்களோடு மக்களாகப் பயணம் செய்து கொண்டே வந்திருக்கிறது என்பதை தி.மு.க ஆட்சியின் சட்டக்கல்லூரி மாணவர்கள் சண்டை,இப்பொழுது அ.தி.மு.க பரமக்குடி வன்முறை சம்பவம் என்று தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

காவல்துறையின் துப்பாக்கி சூடு காரணமாக அனைவரையும் பாதிக்கும் விசயமாகவும்,இப்போதைக்கு நாமும் கவலைப்பட்டு விட்டு அடுத்து இனியும் வரும் புதிய பிரச்சினைகளைப் பதிவு செய்பவர்களாகவே பயணிப்போம். சாதீயும் இன்னொரு எதிர்கால சம்பவத்தில் நம்மைப் பார்த்து கொக்கரித்து சிரிக்கும் என்று நம்புவோமாக! 

காரணம், தமிழ் திரைப்படங்கள் வியாபார நோக்காக தயாரிக்கப்பட்ட போதும் சமூகம் சார்ந்த,சாதிக்கு எதிரான ஏதாவது ஒரு முக்கிய கருத்தை பாமரனுக்கும் போய்ச் சேரும் விதத்திலும் நானெல்லாம் யோசிக்கிற வகுப்பாக்கும் என்பவர்களுக்கு கமலஹாசன் படங்கள் சொல்லியவற்றை விட பதிவுகள் ஒன்றும் புது விழிப்புணர்வைக் கொண்டு வந்து விடப்போவதில்லை.கூடவே ஒரு திரைப்படத்தை எப்படி காண்பது எப்படி என்பதை பதிவர் மதுரை சரவணன் பதிவின் சாரமான good touch and bad touchல்  பார்வையிடும் போது புதிதான படிப்பினை தோன்றியது. .

பதிவர் நிரூபன் தளத்தில் ஈழத்தில் வட,கிழக்கு பகுதிகளில் சாதியம் வெளிப்படுவது பற்றிச் சொல்லும் போது தீவுக்கே உரித்தான பின் தங்கிய நிலையென்றே நினைத்தேன்.புலம்பெயர் தமிழர்கள் எவ்வளவு மேற்கத்திய கலாச்சார வாழ்க்கைக்குப் பழக்கமாகியிருப்பார்கள்.ஆனால் அவர்களுக் குள்ளும் சாதிய வேறுபாடுகள் இருப்பதாகவும் அவை திருமணம் போன்ற சூழல்களில் வெளிப்படுகிறதென்றும் கலந்துரையாடலில் காண நேர்ந்தது.

இவற்றையெல்லாம் கட்டுடைத்து வர்ணாசிரம கட்டமைப்பை குழிதோண்டி புதைக்கும் காதல் திருமணங்களையும் தமிழ் சமூகம் அங்கீகரிக்காமல் பின் தள்ளி விடுகிறோம்.காதல் திருமணம் செய்தவர்களும் அவர்களது சொந்த விருப்பத்தால் தமது வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்வதால் பொதுவாக உறவினர்கள் ஆதரவும் கிடைப்பதில்லை.தனி மனித வாழ்க்கை இப்படியிருக்க அரசியல்,சமூகம் சார்ந்த மொத்த கோட்பாடுகளையும் தாண்டி சுயநலமாகவோ,அல்லது சாதி உள் கட்டமைப்பின் விசுவரூபம் எந்த விதத்தில் வெடிக்கும் என்று அறியாமலோ தமக்கு தாமே சூனியம் வைத்துக்கொள்ளும் சூத்திரத்தை நாம் கற்று வைத்திருக்கிறோம்.

வர்ணாசிரமத்தின் சூத்திரனை விட இன்னொரு சூத்திரன் தான் உயர்ந்தவன் என்று கற்பனை செய்து கொள்கிறான்.இது கற்பனையல்ல நிஜமே என்பதை இணையத்தில் தட்டச்சு செய்யும் புத்திசாலியே உறுதி செய்கிறான்.இதுல கொடுமை என்னவென்றால் வால்பையன் சாதி குறித்த பதிவின்  பின்னூட்டத்தில் பல பதிவர்கள் சொல்லியும் புரியாமலும் ராஜன்,வருண் போன்றவர்கள் நச்சென்று நடுமண்டையில் கொட்டினாலும் அவர்களின் தடாலடிப் பின்னூட்டங்களுக்கும் சளைக்காமல் மூன்று கால் முயலாய் பதில் சொல்லும் சகோதரர்களின் சாதீய உணர்வும்,சவுக்கு தளத்தில் தனது கருத்துக்களை துணிந்து சொல்லும் சங்கருக்கும் கூட சாதிய சாயம் பூசும் சாதீ வெறித்தனம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

மனிதன் நேருக்கு நேர் சண்டையிட்டுக்கொள்வதிலோ,திட்டிக்கொள்வதிலோ மூளை கட்டளையிட்ட அடுத்த கணத்தில் கரங்களோ,உதட்டோடு நாக்கும் உடனே செயல்பட வைக்கின்றது.ஆனால் பதிவு செய்பவர்களுக்கும், பின்னூட்டமிடுபவர்களுக்கும் மூளை கட்டளையிட கைகள் தட்டச்சு செய்து வார்த்தைகள் வடிப்பதற்கும்,தான் சொல்வது சரிதானா என்று சரிபார்க்கும் கால அவகாசம் இருக்கிறது.இதனையும் தாண்டி வார்த்தைகளின் பொருளில் வந்து விழும் வன்மமே இப்படியிருந்தால் கூட்டமாய் சேரும் போது எழும் தைரியம் எவ்வளவு சாதீ வன்மத்தை உருவாக்கும்? இதன் விதைகள் எங்கே தூவப்பட்டிருக்கின்றன என்று பார்த்தால் வரண்ட பூமியில் வேலையின்மை,வறுமை என்பவற்றை விட தமிழக எல்லை தாண்டாத தவளை மனப்பான்மையா அல்லது விமானத்துக்குள்ளும் சீட்டுக்கு மேலே சூட்கேஸ் பெட்டிக்குள் சாதீ ஜீன்கள் உட்கார்ந்தே பயணம் செய்கிறதா?

முன்பு ஒரு பதிவு படித்ததன் விளைவாய் இரட்டைக்குவளை பற்றி தியரி மட்டுமே சொல்ல முடிந்தது.ஆனால்.கடந்த டிசம்பரில் இந்திய பயணத்தின் போது பொள்ளாச்சிக்கு அருகில் ஆழியார் அணைக்கு நேர் எதிரில் வாகன சாலையிலேயே ஒரு டீக்கடையில் ஒரு காட்சியைக் காண நேர்ந்தது.
 
படத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் பெரியவருக்கும்,கால் மேல் கால் போட்டு டீ குடிப்பவரும் சில்வர் கிளாஸ் பெருமைக்காரர்கள்.யாரோ ஒரு சகோதரனுக்கோ,சகோதரிக்கோ தாயாகி,நரை முடித்துப்போன அம்மா கண்ணாடி கிளாஸிருந்து இன்னும் பாவமன்னிப்பு அடையாதவர்.
 
இரண்டாம் படத்தில் பழுத்த ஐயப்ப பக்தராக இருப்பவர் டீ போடும் எந்த கிளாஸ் என்று தீர்ப்பளிக்கும் நீதிபதி.எனவே அரசியல் மட்டுமல்ல, அன்றாட சமூக வாழ்க்கையும் சாதீயை வளர்க்கின்றன.
தமிழகத்துக்கு சீனாக்காரனின் உதவியோடு இலங்கைக்காரன் சண்டை கொண்டு வந்தால் ஒழிய ஜனத்தொகை குறையாதுன்னு இயற்கையே பதிவர் தெகா சொல்வது போல் சமூக கட்டமைப்பின் வடிவில் சா தீ எனும் பெயரில் மரணத்தைக் கொண்டு வருகிறதா?
காரணம் சிலர் வளைகுடா வடிவேல்களாகவும் ட்விட்டுவதாக பதிவுகளின் பின்னூட்டங்களில் காண முடிகிறது.

மதங்களுக்கும் அப்பால் மனிதன் சிந்திக்க வேண்டுமென்ற பெரியாரின் சிந்தனைகளைத் தாண்டியும் கடவுள் பக்தர்களும், கூடவே மூட நம்பிக்கைகளும் வளரும் போது இவற்றோடுப் பின்னிப் பிணைந்த வர்ணாசிரமும் கூடவே வளர்கிறது.இதில் எப்படி அறுவடை செய்வது என்பதை யோசித்துக்கொண்டும் சிலர் உலா வருவார்கள்.ஈழம் குறித்த ஒருமித்த கருத்து திரண்டு வரும் இந்நேரத்தில் வன்முறை திசை திருப்பல்களுக்கு அரசியல் காரணங்களும் உள்ளதா என்ற சந்தேகங்களையும் தாண்டி சாதி நம்மைப் பார்த்து கைதட்டி சிரித்துக்கொண்டிருக்கிறது.எது குறைய வேண்டும்,மறைய வேண்டுமென்று நினைக்கிறோமோ அவை இன்னும் வேர் பிடித்து வளர்கின்றன.முன்பை விட சாதீயும் என்பதை பதிவுலகம் வரை வந்து நிற்கின்றது.சாதீயின் அடுத்த வருகைக்காக காத்திருப்போம்.

47 comments:

ஜோதிஜி said...

வலைதள வாசிப்பு யாருக்கு பயன்தரும்? என்பது போன்ற கேள்விக்கு இன்று உங்கள் வாசிப்பின் கோர்வையை பார்த்த போது நான் பலவற்றையும் புரிந்து கொண்டேன்.

சாதீ நிச்சயம் அழிந்து விடும்.

எப்போது?

எப்படி?

இன்று பொதுவான பொருளாதாரம் என்று உலக நாடுகள் அத்தனையும் ஒரே கூரையின் கீழ் படிப்படியாக வந்து கொண்டே இருக்கிறது. இதனால் ஒரு குறிப்பிட்ட மக்களிடம் பணம் அதிகமாக சேர்ந்து கொண்டே இருக்கிறது. ஏழைக்ளின் எண்ணிக்கையும் மிக அதிக அளவில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் பம்மாத்து காட்டும் நடுத்தர வர்க்கத்தின் ஆசைகளும் உயர்ந்து கொண்டே அவர்களின் வாழ்க்கையும் அல்லாடிக்கொண்டே இருக்கிறது.

இத்தனை கொடுமையிலும் ஒரு நல்லது உண்டு.

பலரும் இன்று பிழைப்பு தேடி தான் வாழ்ந்த இடங்களை விட்டு வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். தான் வாழ்ந்த இடங்களில் அவர்களுக்கென்று பல அடையாளங்கள் உண்டு. எத்தனை தான் முயற்சித்தாலும் அதை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் மாற்ற முடியாது.

சமூக கட்டமைப்பு ஒரு விலங்கு போலவே அவர்களை அப்படியான ஒரு சூழ்நிலையில் அவர்களை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது.

ஆனால் இன்று ஒரு தனி மனிதன் அல்லது அவர் குடும்பம் சென்னை கோவை திருப்பூர் போன்ற இடங்களுக்குள் வந்து தன்னை நிலைபடுத்திக் கொண்ட பிறகு அவன் அடையாளங்களும் மாறி பணம் வைத்தே அவனை மதிப்பீடு தொடங்குகின்றது. இவர்களின் சாதி குறித்த சிந்தனைகளும் முழுமையாக மாறாவிட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை வைத்து தன் வாரிசுகளை சரியான முறையில் வளர்த்து முறையான கல்வியறிவு, தெளிவான எதிர்காலத்தை அமைத்து கொடுக்கும் பட்சத்தில் இன்னும் 50 ஆண்டுகளில் சாதீய உணர்வு மாறிவிடும் அல்லது மட்டுப்பட்டு விடும். அடுத்த தலைமுறை இந்த சாதீ உணர்வை கண்டு கொள்ளாது.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

rajamelaiyur said...

நல்ல பதிவு ஐயா

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

உண்மை தான் .

தமிழ்வாசி பிரகாஷ் said...

அருமையான பகிர்வு...

என் வலையில்:

சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்? ஜே அறிக்கை: ஒரு பார்வை

பனித்துளி சங்கர் said...

உண்மையான வாசிப்பின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்

Anonymous said...

////புலம்பெயர் தமிழர்கள் எவ்வளவு மேற்கத்திய கலாச்சார வாழ்க்கைக்குப் பழக்கமாகியிருப்பார்கள்.ஆனால் அவர்களுக் குள்ளும் சாதிய வேறுபாடுகள் இருப்பதாகவும் அவை திருமணம் போன்ற சூழல்களில் வெளிப்படுகிறதென்றும் கலந்துரையாடலில் காண நேர்ந்தது./// உண்மை தான் பாஸ் ஆனால் இது தலைமுறைகள் கடக்கும் போது அழிந்துவிடும் என்பது மட்டும் நிச்சயம்...

ராஜ நடராஜன் said...

//JOTHIG ஜோதிஜி said...
சமூக கட்டமைப்பு ஒரு விலங்கு போலவே அவர்களை அப்படியான ஒரு சூழ்நிலையில் அவர்களை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது.//

ஜோதிஜி!சாதியும்,தீண்டாமையும் தவறு என்றே பலரும் பொதுவாக நினைப்பார்கள்.ஆனால் இதற்கு விதிவிலக்குகள் உண்டு என்பதை பதிவுலகில் கூட காட்டும் வெறித்தனம் மொத்த மனிதர்கள் சார்ந்த கூட்டத்திற்கு முத்திரையாக விழுந்து விடுகிறது.ஒரு பக்கம் கருத்து சுதந்திரம்,வாசிப்பு என்ற வசதிகள் இருந்தும் கூட தான் சொல்வது என்னவென்றே அறியாமல் சிலர் இருக்கிறார்கள்.உணவு,உடையென்று மாற்றங்களை விரும்பும் நாம் சமூக கட்டமைப்புக்குள் விலங்குகளாய் வாழ்கிறோம் என்பதும் 65 வருட சுதந்திர இந்தியாவை திரும்பி பார்க்கும் போது ஒரளவுக்கு தீண்டாமைகளை தள்ளி விட்டே வந்து இருக்கிறோம் என்ற போதிலும் சாதிய அடையாளங்களை துறக்காமலே இன்னும் பயணம் செய்வது வருத்தமளிக்கிறது.

இன்னும் 50 வருடங்களா!சமூக மாற்றங்கள் என்பது 10 வ்ருட காலங்களுக்குள் வரக்கூடியது.அதிகபட்சம் 25 வருட கால வரையறை மட்டுமே.

ராஜ நடராஜன் said...

//Rathnavel said...

நல்ல பதிவு.//

உங்கள் தொடர் பின்னூட்டத்துக்கு நன்றி ஐயா!

ராஜ நடராஜன் said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில் ...


“நான் ரொம்ப ஏழைங்க. பக்கத்து ஆளுகிட்ட பைசா கேளுங்க” - கருணாநிதி துயரம்//

வந்துட்டா போவுது!லட்டு திங்க கசக்கவா செய்யும்:)

ராஜ நடராஜன் said...

//! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

உண்மையான வாசிப்பின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்//

கைப்பிடிக்குள் உலகம் என்று மனோ யாருக்கோ பின்னூட்டம் போட்டிருந்தார்.இணைய வாசிப்பு கட்டுடைப்புக்கள் செய்வதோடு வாசிப்பின் உச்சத்துக்கு எங்கெல்லாம் கொண்டு செல்கிறது.இவற்றுக்குள் சுழலும் மனிதர்களும் பழமை எண்ணங்களிலிருந்து மாறாமல் இருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.மவுஸ் கிளிக்கும் சாதீ சட்டைக்காரர்களை அடையாளம் காண வேண்டிய நேரமிது.

உங்கள் கருத்துக்கு நன்றி பனித்துளி சங்கர்!

ராஜ நடராஜன் said...

//நண்டு @நொரண்டு -ஈரோடு said...

உண்மை தான் .//

வாங்க தமிழ்மணம் நட்சத்திரமே!

ராஜ நடராஜன் said...

//தமிழ்வாசி - Prakash said...

அருமையான பகிர்வு...

என் வலையில்:

சென்னைக்கு இளப்பமா கூடங்குளம்? ஜே அறிக்கை: ஒரு பார்வை//

வாங்க!உங்களைத்தான் தேடிகிட்டிருந்தேன்.கூடங்குளம் குறித்து இதுவரைக்கும் யாருக்கும் ஒரு பின்னூட்டம் கூட இடவில்லை.காரணம்,கூடங்குளம் பற்றிய முழு விபரங்கள் அணு விஞ்ஞானிகளின் கருத்தாக,விமர்சனமாகவோ இதுவரை காணக்கிடைக்கவில்லை.

நமது மின்சார தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதால் ஜார்ஜ் புஷ் காலத்து அமெரிக்காவுடனான அணு ஆயுத உடன்படிக்கைக்கு ஆதரவான நிலையானவன் நான்.ஜப்பானின் சுனாமி போன்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டாலும் கூட அதனை ஜப்பான் போல் சமாளிக்கும் திறமை நம்மிடம் இல்லை என்பது உண்மையே.அதே நேரத்தில் பொருளாதார திட்டங்கள் போராட்டங்களினாலோ,உண்ணாவிரதங்களினாலோ முடங்கிப்போய் விடவும் கூடாது.பெட்ரோலிய மின்சாரத்துக்கு மாற்று அணு உலை மின்சாரமாகவே இருக்க முடியும்.போராட்டங்களும்,உண்னாவிரதங்களும் நமது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையா அல்லது இருப்பதை வைத்தே வாழலாம் என்ற சமரசமா என்பது விவாதத்திற்குரியது.இன்னும் சரியாகப் புரியாத கர்ரணத்தால் உண்ணாவிரதத்தை நான் ஆதரிக்கவுமில்லை.எதிர்க்கவுமில்லை.

ராஜ நடராஜன் said...

//கந்தசாமி. said...

////புலம்பெயர் தமிழர்கள் எவ்வளவு மேற்கத்திய கலாச்சார வாழ்க்கைக்குப் பழக்கமாகியிருப்பார்கள்.ஆனால் அவர்களுக் குள்ளும் சாதிய வேறுபாடுகள் இருப்பதாகவும் அவை திருமணம் போன்ற சூழல்களில் வெளிப்படுகிறதென்றும் கலந்துரையாடலில் காண நேர்ந்தது./// உண்மை தான் பாஸ் ஆனால் இது தலைமுறைகள் கடக்கும் போது அழிந்துவிடும் என்பது மட்டும் நிச்சயம்...//

வாங்க கந்தசாமி!தமிழ்க் க்லாச்சாரம் என்ற பெயரில் சைவ பழக்க வழக்கங்களை லண்டன் போன்ற நாடுகளில் கொண்டு சேர்த்ததில் புலம் பெயர் தமிழர்களுக்குப் பங்குண்டு.ஒரு புறம் சாதி,சம்பிராதயங்கள் பார்ப்பதும்,இன்னொரு பக்கம் தமிழ்க் கலாச்சாரங்களை விட்டு தமிழ்ப் பெண்கள் விலகி நடக்கிறார்கள் என்ற விமர்சனக் குரல்களும் கூட கேட்கின்றன.கலாச்சாரக் கட்டுப்பாட்டுக்குள் வரும் போது சாதியம் நுழைவதும்,கட்டுடைப்புக்கள் செய்து வாழும் சூழலுக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் போது திசை தவறிப் போனவர்கள் என்ற விமர்சனமும் உருவாகிறது.அடுத்தவன் வாழ்வில் த்லையிடாத மேற்கத்திய வாழ்க்கை இங்கேயிருந்து பார்க்கும் போது சரியெனவே தோன்றுகிறது.

Unknown said...

நல்ல கருத்தோடு பல வற்றையும்
பல கூறுகளில் ஆய்வு செய்து
எழுதியுள்ளீர்
பாராட்டுக்கள்! நன்றி!

புலவர் சா இராமாநுசம்














புலவர் சா இராமாநுசம்

ஊரான் said...

சாதியின் இருப்பு குறித்து சிந்திக்கத் தூண்டுகிற முயற்சி.

ராஜ நடராஜன் said...

//புலவர் சா இராமாநுசம் said...

நல்ல கருத்தோடு பல வற்றையும்
பல கூறுகளில் ஆய்வு செய்து
எழுதியுள்ளீர்
பாராட்டுக்கள்! நன்றி!

புலவர் சா இராமாநுசம்//

புலவர் ஐயா!உங்களைப் போலவே பாரதியும் கவிதைகள் பாடி விட்டார்.கேட்டும் கேட்காத செவிடர்களை என்ன செய்வது?

உங்கள் கருத்துக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//ஊரான் said...

சாதியின் இருப்பு குறித்து சிந்திக்கத் தூண்டுகிற முயற்சி.//

உங்கள் தள ”விருப்பம்” இந்த பதிவின் கருவாகட்டும்.நன்றி.

Unknown said...

அற்புதமான பதிவு.இந்த ”இணைய, உலகிலும்” இப்படியான நிலைமை இருப்பது வெட்ககேடுதான்.

Unknown said...

Nalla pathivu

ராஜ நடராஜன் said...

//R.Elan. said...

அற்புதமான பதிவு.இந்த ”இணைய, உலகிலும்” இப்படியான நிலைமை இருப்பது வெட்ககேடுதான்.
//

வாங்க ஈழன்!மாற்று ஊடகமாய் இருக்க வேண்டிய வலைப்பதிவிலும் கூட பதிவர்கள் சொல்லும் நியாயங்களை எதிர்த்து சாதியம் காட்டுவது வெட்ககேடுதான்.

ராஜ நடராஜன் said...

//vijay said...

Nalla pathivu//

விஜய்!உங்கள் தளம் ரசனையான தகவல்களைத் த்ரும் போல் இருக்கிறதே!வருகிறேன்.நன்றி.

தனிமரம் said...

காத்திரமான ஆய்வுப்பதிவு காலம் தான் தீர்மானிக்கனும்!

Thekkikattan|தெகா said...

என்று பார்த்தால் வரண்ட பூமியில் வேலையின்மை,வறுமை என்பவற்றை விட தமிழக எல்லை தாண்டாத தவளை மனப்பான்மையா அல்லது விமானத்துக்குள்ளும் சீட்டுக்கு மேலே சூட்கேஸ் பெட்டிக்குள் சாதீ ஜீன்கள் உட்கார்ந்தே பயணம் செய்கிறதா?//

செறிவான, நேர்த்தியான சிந்தனை. ஆனா, எழுதி வைச்சு நாமே படிச்சிருக்கோமோன்னு ஒரு சின்ன வருத்தம்.

பெரிய ஊடகங்கள் பரவலாக சென்றடையும் வார, தினசரிகளோ அல்லது தொலைக்காட்சிகளோ இதனை அடியோடு வேரறுப்பதின் அவசியத்தை எப்பொழுது நேரடியாக பேசப்போவது இல்லை, ராஜநட.

நாம் தெரிந்தே 65 வருடங்கள் அல்ல 2000 வருடங்களாக இந்த அரசியலை செய்து வருகிறோம். பேச வேண்டியவர்கள் தனக்கு தெரியாதது மாதிரியே வாழ்ந்து முடித்து விடுகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கும் அடிப்படையில் இது இனக்கமாக இருக்கிறது. அதுதான் உண்மை!

முண்டாசு, இன்னும் 50 வருடத்திலா :))... 500 வருடங்கள் தருகிறேன்...

காவ்யா said...

நான் ஏற்கனவே இது பற்றி வால்பையன், ராஜன் பதிவுகளில் எழுதியிருக்கிறேன்.

பதிவர்கள் சமூகத்தில் உள்ளேதான் வாழ்கிறார்கள். எனவே அச்சமூகத்தின் ஆசா பாசங்களை, உணர்ச்சிகளைத்தான் கொண்டிருப்பார்கள். வெளிநாடுகளுக்குச் சென்றவர்களானாலும் பிறப்பிலிருந்து கல்லூரிப்பருவம் வரை இங்குதான் கழிகிறது. அவர்கள் என்னவெல்லாம் சமூகத்திலிருந்து எடுத்தார்களோ விரும்பியோ விரும்பாமலோ, அல்லது திணிக்கப்பட்டதோ அவைஅவர்களோடு சாகும்வரை ஒட்டிக்கொண்டுதான் இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு மறவர் பையன் முதுகுளத்தூரில் பிறந்து வளர்ந்து பின்னர் கல்லூரியில் கணனி படித்துவிட்டு அமெரிக்காவுக்குச்சென்றாலும் அவன் என்றுமே பள்ளர்களை சகோதர்களாக ஏற்றுக்கொள்ளமாட்டான். அதே போல பள்ளர் பையனும் அப்படித்தான். மறவர்களை விரும்பமாட்டான். ஆனால் படித்தவர்களிடையே தன் உணர்வைக்காட்ட மாட்டான். பதிவில் முகமூடியணிந்து வெளிக்காட்டுவான். இதனாலேயே முகநூலில் முதுகுலத்து புலிகள் என்ற பெயரில் அப்படிப்பட்ட வார்தையாடலகளைப் புனைப்பெயர்களில் மறவர் பையன்கள் செய்தார்கள்.

இந்த உண்மையை நீங்கள் ஒத்துக்கொண்டால் மட்டுமே அடுத்து இதை நீக்க என்ன செய்யலாம் என விவாதிக்க தகுதியடையவர்களாவீர்கள்.

First accept that there is a disease. Only then, u will go and seek a doctor. wont u?

Why to believe in an ideal world of casteless bloggers. It s false. There r exceptions; but exceptions dont make rules.

ராஜ நடராஜன் said...

//Nesan said...

காத்திரமான ஆய்வுப்பதிவு காலம் தான் தீர்மானிக்கனும்!//

வாங்க நேசன்!காலம் தீர்மானிப்பது நமது சிந்தனைகளைப் பொறுத்து அல்லவா?வால் பையன்,ராஜன் போன்றவர்கள் இந்தப் பிரச்சினையை முன்னிறுத்தாமல் இருந்திருந்தால் எதிர்ப்பு இல்லாத நிலையில் தாம் முக புத்தகத்தில் சொல்வதே சரியென்ற எண்ணத்திலே நீக்காமல் வைத்திருப்பார்கள்.வாழ்க்கையின் ஆழ்ந்த புரிதலும்,வலிகளும் உணராமல் மேலோட்டமாக வாழ்வை நகர்த்துபவர்களின் எண்ண ஓட்டமே முக புத்தகத்தின் எண்ண வெளிப்பாடுகள்.

ராஜ நடராஜன் said...

தெகா!வாங்க!

தற்போதைய சூழலில் பதிவர்களே எழுதி பதிவர்களே மட்டுமே பகிர்ந்து கொள்கிறோம்.சார்வாக்ன் தளத்தை வாசித்தீர்களா?தேடல்களின் உழைப்போடு கூடிய பதிவுகளைக் கொண்டு வருகிறார்.ஆழ்ந்த கருத்துக்களும்,பதிவுகளின் தரம் உயரும் போது சுதந்திர கருத்துக்களின் தொட்டிலாக பதிவுகளே இருக்க முடியும்.

தெகா!முந்தைய சுதந்திர வருடங்களாக 65 வருடங்களுக்குக்கும்,அதற்கு முந்தைய 2000 ஆண்டுகளுக்கும் வித்தியாசமும் வரலாற்றுப் பின்ணனி மாற்றங்களும் உள்ளன.முந்தைய காலகட்டங்கள் படையெடுப்பு,போர் என்றும்,அரச புகழ் பாடும் காலங்களும்,கருத்து பரிமாற்றங்கள் குறைவான கால சூழல்கள்.மெரினாவில் தலைவர் சோடா குடித்து தொண்டர்கள் கைதட்டும் நிலைகளையெல்லாம் கடந்து எதையும் கேள்விக்குள்ளாகவும்,இணைய தேடல் பகிர்வாய் இணைய காலத்தில் இருக்கிறோம்.பல வித கருத்து வெளிப்பாடுகள் எது சரி எது தவறு என்று தீர்மானிக்கும் வலுவையும்,உண்மைகளையும் கொண்டு வருகிறது.

முண்டாசு நேர்முகமாக சிந்திப்பதை ஏன் குறை சொல்கிறீர்கள்.50 வருடம் என்பதே அதிகம்:)

ராஜ நடராஜன் said...

காவ்யா!உங்கள் பின்னூட்டங்களை வால் பையன் தளத்திலும் ஏனைய விவாத பின்னூட்டங்களிலும் கண்டேன்.

உங்கள் கூற்றுப்படி பதிவர்களும் சமூகத்தில் வாழ்ந்தாலும் சராசரி ஊடகங்கள் ஒற்றை கருத்தை திணிப்பதை பார்ப்பவனாகவும் மற்றவர்களுக்கு இல்லாத மாற்றுக்கருத்துக்களின் பரிமாணங்களை பதிவுகளில் எடை போடும் தகுதியுடையவனாய் இருக்கிறான்.எந்த மனிதனாக இருந்தாலும் இன்னொரு சக மனிதனை நேசிக்க முடியாதவன் மனத்தளவில் மனநோயாளியே என்பேன்.அது எந்த வர்க்க நிலை சார்ந்த மனிதராக இருந்தாலும்.இதுதான் நகரம் சார்ந்து நான் வளர்ந்த முறையும் சமூகம் குறித்த எனது நிலைப்பாடும்.

கல்லூரியில் படிப்பதும்,கணினி தொடுவதும்,அமெரிக்கா செல்வதும் வாழ்க்கையின் ஏறுமுகங்கள் என்ற புரிதல் இருக்க வேண்டும்.தனது சாதி விழுதுகளையும் சுமந்து கொண்டே அமெரிக்காவிலிருந்தும் சக மனிதன் மேல் வெறுப்பைக் காட்டுபவன் அமிஞ்சிக்கரையில் இருப்பதும் ஒன்றுதான்.

உங்கள் கூற்றுப்படி இதனை பதிவில் கொண்டு வரவோ பின்னூட்டங்களில் கருத்தை தெரிவிக்காமல் இருந்திருந்தால் முகநூல் மறையாமல் தமது தவறுகளுக்கான பயம் இல்லாமல் போய் இருக்கும்.

There is a disease,that's why the blog doctors doing a bio dissection:)

Reason me,why don't you believe in a casteless blogger society?How many of the bloggers do you know by face value apart from their thought process?

Read just any title of the entire Tamilmanam,Indli,facebook and twits.How many of them bring a bad taste to your mind?Now I will leave it your opinion who is exception.Thanks.

செங்கோவி said...

அந்த துப்பாக்கிச்சூடு, கலவரத்தை விடவும் அதிக வருத்தத்தை உண்டாக்கியது, படித்த நம் மக்களின் இணைய விவாதங்கள்(?) தான்..!

நன்றி.

ராஜ நடராஜன் said...

//செங்கோவி said...

அந்த துப்பாக்கிச்சூடு, கலவரத்தை விடவும் அதிக வருத்தத்தை உண்டாக்கியது, படித்த நம் மக்களின் இணைய விவாதங்கள்(?) தான்..!

நன்றி.//

வாங்க பாஸ்!சட்டக்கல்லூரி மாணவர்கள் சம்பவத்தின் போது கூட வெறுமனே பார்த்துக்கொண்டிருந்த காவல்துறையையும்,மாணவர்களையும் பற்றியே பதிவுகள் வந்தன.ஆனால் யாரும் குத்தியவனையோ,குத்து வாங்கியவனின் துயரத்தில் மகிழ்ச்சியடையவில்லை.முகநூல் உரையாடல்கள் மன குரூரத்தின் உச்சம்:(

காவ்யா said...

//இன்னொரு சக மனிதனை நேசிக்க முடியாதவன் மனத்தளவில் மனநோயாளியே என்பேன்.அது எந்த வர்க்க நிலை சார்ந்த மனிதராக இருந்தாலும்.இதுதான் நகரம் சார்ந்து நான் வளர்ந்த முறையும் சமூகம் குறித்த எனது நிலைப்பாடும்.//

நடராஜன்

இது உங்கள் நிலைபாடு மட்டுமல்ல. எல்லாரின் அதே. ஆனல் நம் நிலைபாடு இங்கு எதற்கு ? சமூகத்தில் என்ன நடக்கிறது? ஏன், எதற்கு? என்றிலிருந்து? இதைத்தான் நோக்க வேண்டும். உங்கள் பதிவு ‘நடக்கிறது. நடக்கக்கூடாது’ என்று மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்கிறது.
சிலருக்கு மனநோய் எப்படி குணப்படுத்துவது ? ஏன் வந்தது முதலில்? நோய் நாடினால் மட்டும் போதுமா ? நோய் முதல் நாட வேண்டாவா? அது தணிக்கும் வாய் நாடுவதுதானே வாய்ப்பச் செயல்? அதை உங்கள் பதிவு செய்கிறதா ? வெறும் உணர்ச்சிகளைத்தானே தட்டி எழுப்புகிறது ?
//கல்லூரியில் படிப்பதும்,கணினி தொடுவதும்,அமெரிக்கா செல்வதும் வாழ்க்கையின் ஏறுமுகங்கள் என்ற புரிதல் இருக்க வேண்டும்.தனது சாதி விழுதுகளையும் சுமந்து கொண்டே அமெரிக்காவிலிருந்தும் சக மனிதன் மேல் வெறுப்பைக் காட்டுபவன் அமிஞ்சிக்கரையில் இருப்பதும் ஒன்றுதான்.//

நடராஜன்

அமெரிக்காவுக்குப் போனவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜாதிப்பால் ஊட்டி வளர்க்கப்பட்டவர்கள். பிற ஜாதியை வெறுக்கப் பால பாடம் கற்றோர். அமெரிக்காவுக்குப் போனவுடன் ‘சூ மந்திரக்காளி’ என்று சொல்லி மாயமாக மறைந்தோடச் செய்ய முடியுமா ?

//உங்கள் கூற்றுப்படி இதனை பதிவில் கொண்டு வரவோ பின்னூட்டங்களில் கருத்தை தெரிவிக்காமல் இருந்திருந்தால் முகநூல் மறையாமல் தமது தவறுகளுக்கான பயம் இல்லாமல் போய் இருக்கும்.//

முகநூலில் எழுதியவர்கள் அதை ஒழித்துவிட்டார்கள். அஃது உங்களுக்கு வெற்றியென்கிறீர்கள். என்ன மதிமயக்கமிது நடராஜன். முக நூல் மட்டுமே மனவழுக்கைக் காட்டும் கருவியா ? அதை ஒழித்து விட்டால், அவர்கள் மனங்கள் புனித ஊற்றுக்களாக மாறிவிட்ட்தென்று பொருளா ? அவைகள் அப்படியேதான் இருக்கும். அவர்கள் இங்கு இல்லாவிட்டால் வேறெதிலாவது காட்டுவார்கள்.

ஈகோ உங்களிடமும் இருக்கிறது. அது மாற்றுக்கருத்துச் சொன்னவர் ஜாதியை ஆதரிக்கிறார் என்று போய் முடிகிறது. அவர்களுக்கும் இருக்கிறது. அது ஜாதிவெறியாக மாறி, அமெரிக்காவுக்குப் போனாலும் ஒழியமாட்டேன் என்கிறது.
ஈகோதான் எல்லாவற்றுக்கும் காரணம். ஜாதிவெறிக்கும் கண்டிப்பாக!

It s not enough to paste some photos showing discrimination. It is necessary to examine:

Why such discrimiantion only in and around Madurai districts?

Why caste clashes only between 2 castes? That too, why in Ramnad and Madurai districts?

Who s right and who s wrong ?

R both wrong?

What can v do to stop them? Put everything on the head of Govt and politicians?

Why modern education s unable to change the minds of young ppl from those communities?

There r many more similar qns. Alas, u dont want to enter and examine them.

Unknown said...

சா தீ நன்று நன்றி

ஜோதிஜி said...

முண்டாசு, இன்னும் 50 வருடத்திலா :))... 500 வருடங்கள் தருகிறேன்...


தெகா, நடா பதிவுலகில் காவ்யா என்றொரு மற்றொரு கல்வெட்டு கிடைத்து உள்ளார்.

ராஜ நடராஜன் said...

@காவ்யா! உங்கள் மறு பின்னூட்டத்திற்கும்,ஆரோக்கியமான விவாதங்களை தூண்டுவதற்கும் நன்றி.

எனது நிலைப்பாடு என்ன என்று விபரிக்கும் போது எல்லோருடைய நிலைப்பாடும் அபபடித்தான் என்கிறீர்கள்.அப்படி இருப்பதுதான் சமூக வளர்ச்சிக்கு நல்லது.அப்புறம் நம் நிலைப்பாடு இங்கு எதற்கு என்று ஒரு எதிர்கேள்வியும் போட்டு வைக்கிறீர்கள்:)நீங்கள்,நான் எப்படி உணர்கிறோம் என்பதால்தானே நாம் பின்னூட்டங்கள் இட்டுக்கொண்டிருக்கிறோம்?

பெரும்பான்மையானவர்களுக்கு எதிரான நிலையாக ஒரு சிலர் மனித வெறுப்பை பொது வெளியில் உருவாக்குகிறார்களே என்பதுதான் இங்கே ஏனைய பதிவர்களின் கோபத்துக்கும் காரணம்.

சிலருக்கு சாதி மனநோய் வளர்வதற்கு வளர்ப்பு,வாழ்ந்த,வாழும் முறைகளே காரணம் என்பேன்.இங்கே விவாதத்திற்கு எடுத்துக்கொண்டது முகநூல் குரூரத்தையும் அதனை பதிவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்ற தொகுப்பு மட்டுமே.

சாதிகள் குறித்து தீவிர யோசனைகள் செய்வதற்கான சூழலில் நான் இல்லை. தீர்வுகள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை பதிவிலிருந்து இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்து வரும் நாட்களில் சந்தர்ப்ப்ம் கிடைத்தால் இன்னுமொரு பதிவு உங்கள் சார்பாக போட்டுட்டா போச்சு:)பெரியாரை விடவா தமிழகத்துக்கு இன்னொரு மனிதன் புதிதாக தீர்வுகளை சொல்லி விட முடியும்?

வெறுமனே பின்னூட்டங்கள் போடுவதை விட நாகரீகமாக விவாதங்களை உருவாக்குதை ஊக்குவிக்கிறேன்.இணைய தேடலில் யாருக்காவது எப்பொழுதாவது பயன்படும் என்பதால் கூகிளண்ணன் கோவிச்சுக்குவார் என்பதால் அடுத்து மறு மொழி தொடர்கிறேன்.

ராஜ நடராஜன் said...

அமெரிக்கா போகிறவர்கள் தங்கள் கலாச்சாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கும் ஜாதிப்பால் குடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.அமெரிக்கா போகின்றவர்கள் திரும்ப இந்தியா வர விரும்புவதில்லையென்று வேண்டுமானால் சொல்லுங்கள்.நம்பும்படியாக இருக்கும்:) நீங்க நம்பவில்லைன்னா...எனது நண்பனின் அண்ணன் சென்னை ஐ.ஐ.டிலிருந்து அமெரிக்கா போய் பின் நாசாவில் சேர்ந்து பின் அங்கிருந்தும் கழன்று கொண்டு அமெரிக்கன் மனைவியோடு செட்டிலாகி விட்டார்.நீங்க சொல்லும் சூ மந்திரக்காளியை பார்த்தால் damn என்று சொல்லி சிரிப்பார்:)

முகநூலில் தங்கள் கருத்தை எடுத்து விட்டது அவர்கள் தங்கள் தவறை உணர்ந்தோ அல்லது சட்ட வில்லங்கங்களில் சிக்கிக்கொள்ளக்கூடாதென்ற பயமாகவோ இருக்கலாம்.இதில் வெற்றியென்பதும்,மதிமயக்கம் என்பதும் நீங்கள் சொல்லும் இட்டுக்கட்டு:)வார்த்தை பதங்கள் உபயோகிப்பதில் நான் கவனமாகவே இருக்கிறேன்.

என்னது!இதே தவறுகளை வேறு எங்காவது காட்டுவார்களா?மாட்டிக்கொண்டு அனுபவிக்க வழிகாட்டுவீங்க போல இருக்குதே!

நீங்க ஈகாவை ஈகோன்னு தட்டச்சு செய்திட்டீங்க போல இருக்குது:)
உங்கள் பின்னூட்டத்திலேயே சிறந்தது மதுரை,ராமநாதபுரம் மாவட்டங்கள் ஏன் சாதி சண்டைக்கு காரணங்கள் என்பதையும்,இது குறித்த தொடர் விவாதங்கள் ஏனைய பதிவர்கள் யாராவது முன் வைப்பது புரிதலுக்கும் மனமாற்றத்துக்கும் வழிவகுக்கும்.

//What can v do to stop them? Put everything on the head of Govt and politicians?//

One more nice question you have raised here.Definitely Govt and politician plus vote politics have a great dimension and an impact on society.

//There r many more similar qns. Alas, u dont want to enter and examine them.//

Again,did I say this:)

ராஜ நடராஜன் said...

//மழை said...

சா தீ நன்று நன்றி//

உங்கள் தளம் மழை மாதிரியே குளிர்விக்கிறது.புதுசு புதுசா பிரச்சினைகள் சார்ந்தே பதிவுகள் போடுவதை விட இதுவரை இணைந்து கொண்டவர்களின் பதிவுகள் குறித்து பார்வை செலுத்த நினைக்கிறேன்.பார்க்கலாம்!நன்றி.

ராஜ நடராஜன் said...

//JOTHIG ஜோதிஜி said...

முண்டாசு, இன்னும் 50 வருடத்திலா :))... 500 வருடங்கள் தருகிறேன்...


தெகா, நடா பதிவுலகில் காவ்யா என்றொரு மற்றொரு கல்வெட்டு கிடைத்து உள்ளார்.//

ஜோதிஜி!தெகாவோட நம்பிக்கையைப் பாருங்களேன்!அவருக்கு நீங்களே பரவாயில்லை:)

தேர்தல் நேரத்துல அழகிரியைப்பற்றிச் சொல்லப் போய மதுரையைப் பற்றி எப்படி சொல்லலாம்ன்னு நம்ம மங்கம்மா ஆனந்தி விவாதத்துக்கு வந்துட்ட்டாங்க.இந்த தடவை சாதி சண்டைக்கும் மதுரக்காரங்கதானா கிடைச்சாய்ங்களான்னு யாராவது சண்டைக்கு வந்தாங்கன்னா காவ்யாவை கை காட்டி விடுவேன்:)

ஜோசப் இஸ்ரேல் said...

நானும் சாதியை பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளேன் . பாருங்களேன்

http://koodalnanban.blogspot.com/2011/09/blog-post_03.html

Thekkikattan|தெகா said...

முண்டாசு, நீங்க காவ்யாவைப் பற்றி கூறியது உண்மைதான்... வித்தியாசமாக அடிச்சு விளாசுகிறார்.

//அமெரிக்காவுக்குப் போனவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜாதிப்பால் ஊட்டி வளர்க்கப்பட்டவர்கள். பிற ஜாதியை வெறுக்கப் பால பாடம் கற்றோர். அமெரிக்காவுக்குப் போனவுடன் ‘சூ மந்திரக்காளி’ என்று சொல்லி மாயமாக மறைந்தோடச் செய்ய முடியுமா ?//

அமெரிக்காவிற்கு போனாலும் சரி, அண்டார்டிக்கா போனாலும் சரி தனியொருவன் தன்னையே உள்முகமாக வளர்த்தெடுக்க எத்தனிக்காமல், மேலோட்டமான ஓட்டத்தில் இருந்தால் 20 வருடங்கள் என்ன, அதற்கு மேலேயும் எதுவுமே மாறுவது கிடையாது. ஆயிரம் வருடங்களாக அப்படியே வைத்து வாழ பழகிக் கொள்ளவில்லையா?

பாம்பு மீண்டும் தலையெடுக்கும் அதற்கான சூழலில் கொண்டு வந்து திரும்பவும் அவர்களை புழங்க விடும் பொழுது. Whatelse one can expect if the life is lived effortlessly, Raja Nata. Don't get disappointed our people who just happened to live in the west, will radically shifted their perception about certain areana of life. It is not so...

Thekkikattan|தெகா said...

//சாதிகள் குறித்து தீவிர யோசனைகள் செய்வதற்கான சூழலில் நான் இல்லை. தீர்வுகள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை பதிவிலிருந்து இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்து வரும் நாட்களில் சந்தர்ப்ப்ம் கிடைத்தால் இன்னுமொரு பதிவு உங்கள் சார்பாக போட்டுட்டா போச்சு:)//

அவசியம் போடுங்க. இதெல்லாம் நம்மால் முடியாமல் மிகப் பெரிய சவலாக இருந்த போதிலும், குறைந்த பட்சம் நம்மை நாமே கேள்வி நிலைக்கு உயர்த்திக் கொள்ளவாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்...

ராஜ நடராஜன் said...

//உங்கள் நண்பன் said...

நானும் சாதியை பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளேன் . பாருங்களேன்

http://koodalnanban.blogspot.com/2011/09/blog-post_03.html//

உங்கள் கவிதையைப் படித்தேன்.
கவிதைக்குப் பொய் மட்டுமல்ல உண்மையும் அழகே.அழகான கவிதை.

ராஜ நடராஜன் said...

// Blogger Thekkikattan|தெகா said...

முண்டாசு, நீங்க காவ்யாவைப் பற்றி கூறியது உண்மைதான்... வித்தியாசமாக அடிச்சு விளாசுகிறார்.

//அமெரிக்காவுக்குப் போனவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜாதிப்பால் ஊட்டி வளர்க்கப்பட்டவர்கள். பிற ஜாதியை வெறுக்கப் பால பாடம் கற்றோர். அமெரிக்காவுக்குப் போனவுடன் ‘சூ மந்திரக்காளி’ என்று சொல்லி மாயமாக மறைந்தோடச் செய்ய முடியுமா ?//

அமெரிக்காவிற்கு போனாலும் சரி, அண்டார்டிக்கா போனாலும் சரி தனியொருவன் தன்னையே உள்முகமாக வளர்த்தெடுக்க எத்தனிக்காமல், மேலோட்டமான ஓட்டத்தில் இருந்தால் 20 வருடங்கள் என்ன, அதற்கு மேலேயும் எதுவுமே மாறுவது கிடையாது. ஆயிரம் வருடங்களாக அப்படியே வைத்து வாழ பழகிக் கொள்ளவில்லையா?

பாம்பு மீண்டும் தலையெடுக்கும் அதற்கான சூழலில் கொண்டு வந்து திரும்பவும் அவர்களை புழங்க விடும் பொழுது. Whatelse one can expect if the life is lived effortlessly, Raja Nata. Don't get disappointed our people who just happened to live in the west, will radically shifted their perception about certain areana of life. It is not so...//

காவ்யாவுக்கு இரண்டு ஆதரவு ஓட்டுக்களா:)

உள்முகமாக தன்னை வளர்த்தெடுக்காமல்....அழகாய் வார்த்தைகள் வந்து விழுகின்றன தெகா!கால,சீதோஷ்ண சூழல்கள் அமெரிக்காவுக்கும்,அண்டார்டிக்காவுக்கும் வித்தியாசம்.அதைத்தான் நான் அமிஞ்சிக்கரைன்னு மாத்திகிட்டேன்.மனித சிந்தனையில் வாழும் இடங்களுக்கும் பங்குண்டு என நினைக்கிறேன்.அதனால்தான் நாடு விட்டு நாடும்,இடம் விட்டு இடமும் கலாச்சார பழக்க வழக்கங்கள் மாறுகின்றன.கல்வியறிவும் கூட சிந்தனைகளை மாற்றுபவை.சில தொடர்கதையாக தலைமுறை தலைமுறையாக 1000 வருடங்களாக வருபவை.இவற்றுள் சாதியும் அடக்கமா?சாதிக்கான மாற்றுப்பார்வைகளும்,மனித குணங்களும் மாறியே இருக்கின்றன.ஒரு சிலர் உடும்புத்தனமாக இருப்பதால் மொத்த சமூகமும் 100,50 வருட நிலையிலேயே இப்பொழுதும் இருக்கிறதா?இன்னும் 50 வருடங்கள் போனால் இன்னும் மாற்றங்கள் வரும்.ஜோதிஜியின் இந்த நம்பிக்கையில்தான் நானும்.

You might be having a better perception of west...but it is shocking to hear from you that people have not changed.

எனக்கு சேருகிற சோக்காளிகள்தான் வீட்ல சுத்த சைவமாக்கும்ன்னு சொல்லிகிட்டு எறக்கி வச்சிருக்கேன்,வறுத்து வச்சிருக்கேன்னு பாடிட்டு திரியறாங்களோ:)

ராஜ நடராஜன் said...

//Thekkikattan|தெகா said...

//சாதிகள் குறித்து தீவிர யோசனைகள் செய்வதற்கான சூழலில் நான் இல்லை. தீர்வுகள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை பதிவிலிருந்து இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்து வரும் நாட்களில் சந்தர்ப்ப்ம் கிடைத்தால் இன்னுமொரு பதிவு உங்கள் சார்பாக போட்டுட்டா போச்சு:)//

அவசியம் போடுங்க. இதெல்லாம் நம்மால் முடியாமல் மிகப் பெரிய சவலாக இருந்த போதிலும், குறைந்த பட்சம் நம்மை நாமே கேள்வி நிலைக்கு உயர்த்திக் கொள்ளவாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்...//

இது வேறயா:)பழகிய நட்பு வட்டங்களையெல்லாம் நினைச்சா சாதிகள் குறித்த சிந்தனைகள் இல்லாமலே வளர்ந்து நிற்பதற்கு மகிழ்ச்சியாகவே உணர்கிறேன்.குவைத்திலும் அதுபற்றிய சிந்தனைகளுக்கு இடமில்லாமலே வாழ்வது இன்னும் கொஞ்சம் சிலாகித்துக்கொள்ளவே தோன்றுகிறது.

நீங்க பதிவர் சார்வகன் தளம் போகீறீங்களா?சிந்தனைகளுக்கான தகவல் களஞ்சியம்.மனித பரிணாமம் பற்றிய இடுகையெல்லாம் படிச்சா இடுகையிடுவதற்கெல்லாம் நேரமே இல்லாத படி நம்மை நாமே சிந்தனைகளை எப்படி உயர்த்திக்கொள்வது என்பதற்கான தளம்.அவரிடமிருந்து நேற்று தரவிறக்கி பார்த்த படம் ஹிட்லரின் எழுச்சியும்,வீழ்ச்சியும்.போர்,சாதி மாதிரி இனவெறி(ஜெர்மானியனை விட யூதன் தாழ்ந்தவன்)ஹொலாகாஸ்ட் படிப்பினைகள்,இலங்கை ஒப்பீடு என நிறைய விசயங்களை படம் பார்த்து முடிந்தும் ஆவண படம் பற்றிய சிந்தனைகளை கொண்டு வந்தது.

உணர்பவர்களுக்கு வாழ்க்கை முழுவதுமே பாடங்கள் நிறைந்து கிடக்கிறது.உணராமல் போவோர்க்கு?

Thekkikattan|தெகா said...

ராஜ நட,

உங்க பதில் பின்னூட்டம் மிக்க சிரிப்பை வரவழைத்தது. சொல்கிறேன் ஏன் என்று.

//.but it is shocking to hear from you that people have not changed.//

அதிர்ச்சியடைந்தீங்களா? அதான் நிதர்சனம். இனங்களுக்கிடையே பெரிய படத்தில் எப்படி மனம், குணம் வித்தியாசப்படுகிறது என்று நாம் ஒத்துக் கொள்கிறோமோ அதே ரீதியில்தான் ஒரு குழுவிற்கும் மற்றுமொரு குழுவிற்குமிடையிலான வித்தியாசங்களும் கையிறக்கம் பெறப்பட்டு தாழ்ந்தவன்/உயர்ந்தவன் என்ற கட்டமைப்பு மனத்தினுள் ஆழ புதைக்கப்படுகிறது.

நீங்க வெளிநாட்டில்தானே இருக்கிறீர்கள்? லோகல் கோவில்களுக்கு போவதில்லையா? அங்கே தீவு தீவாக அரசியல் நடப்பதனை கண்ணுற்றதில்லையா? என்னை அந்த மன்பான்மையே ரொம்ப தூரம் விலக்கி வைத்திருக்கிறது... அது போன்ற புனிதத் தளங்களிலிருந்தும் பெயரை வைத்தே பார்வை வித்தியாசபடுத்தல்களிலிருந்து விலகி நிற்க.

//எனக்கு சேருகிற சோக்காளிகள்தான் வீட்ல சுத்த சைவமாக்கும்ன்னு சொல்லிகிட்டு எறக்கி வச்சிருக்கேன்,வறுத்து வச்சிருக்கேன்னு பாடிட்டு திரியறாங்களோ:)//

இங்கேதான் சிரிப்பு அள்ளிக் கிட்டு போனீச்சு. அதேதான்... இன்றைய ஃபேஷன் இப்பெல்லாம் யாரு ஜாதீ பார்க்கிறா :) ...ஆனா, மறைமுகா நீங்க என்னாளுங்க என்பதனை அறிந்து கொள்வதில் உலை கொதித்துக் கொண்டிருக்கும் :)). அதான் நாம...

//இன்னும் 50 வருடங்கள் போனால் இன்னும் மாற்றங்கள் வரும்.ஜோதிஜியின் இந்த நம்பிக்கையில்தான் நானும்.//

நாமும் அந்த நம்பிக்கையிலேயே 50 வருடங்களாக தமிழ் சினிமாக்களை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நாதா, நாதீ என்று ... ஒவ்வொரு அணுக்களிலும் ஒளிந்திருக்கிறது, ராஜநட. sorry being negative and disappointing...

ராஜ நடராஜன் said...

தெகா!உங்கள் பின்னூட்டம் படித்தும் மறுமொழி தாமதமாக சொல்வதற்கு மன்னிக்கவும்.புதிய மடிக்கணினியை வாங்கி விஸ்டா அல்டிமா,ஆடியோ,வீடியோ அது இதுன்னு தலையை விட்டு ஒரு வழியா செட்டிலாகியாச்சு:)

//நீங்க வெளிநாட்டில்தானே இருக்கிறீர்கள்? லோகல் கோவில்களுக்கு போவதில்லையா?//

கோயிலா!அப்படின்னா:)இங்கே அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.வேண்டுதலையெல்லாம் மொத்தமா சேர்த்து வச்சு மதுரை,சீரங்கம்ன்னு சுத்திட்டு வந்து விட வேண்டியதுதான்.அதுவும் நான் கோயில் போனா கடவுளுக்கும் அப்பால் தேடலுடன் கட்டிட அழகை பிரமிச்சுட்டு மட்டுமே வந்து விடுவேன்.காணிக்கை,திருநீர் நம்ம டிப்பார்ட்மெண்ட் இல்லை:)

//இன்றைய ஃபேஷன் இப்பெல்லாம் யாரு ஜாதீ பார்க்கிறா :) //

ஃபேஷன் அளவுக்காவது பேஷா வந்துட்டுமேன்னு சந்தோசப்பட்டுக்கலாம்.வளைகுடா வாழ்க்கையோட நன்மைகளில் ஒன்று சாதியென்ற ஒன்று இல்லாமல் தேசம் என்ற பெரும் வட்டத்துக்குள் வாழ்வதும் நீங்க சொல்கிற மாதிரி என்ன ஆளுங்கன்னு உற்று நோக்காததுமே!

இந்தியா,அமெரிக்கா இன்னும் வளரனும்ன்னு நினைக்கிறேன்:)

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

GOOD POST