இலங்கையும்,விடுதலைப் போராட்டத்தையும், தமிழீழம் கனவையும் இலங்கையில் தமிழர்கள்,சிங்களவர்கள் மற்றும் தமிழகம்,இந்தியா,உலகம் சார்ந்த மொத்த பரிமாணத்தின் சில முக்கிய நிகழ்வுகளை இங்கே விமர்சனத்துக்குட்படுத்தியும்,புரிதலுக்கும்,நினைவுபடுத்தலுக்கும் மீண்டும் ஒரு முறை சொல்லி விட்டு உலக அரங்கிற்குள் நுழைந்து விட்ட தமிழர், சிங்களவர்களின் தேவையும்,இனி இலங்கை எப்படி முன் நகரலாம் என்பதை பார்க்கலாம்.
இலங்கைப் பிரச்சினையை தமிழர் சம உரிமை மறுப்பு என்ற சிங்கள் பேரினவாதம்,அஹிம்சை போராட்டம், தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனக்கட்டவிழ்ப்பு,ஆயுதப் போராட்டம்,தமிழீழம் என்ற நோக்கம், ஆயுதப்போராட்டத்தின் வன்முறைகள்,இந்தியாவின் இலங்கை தலையீடு தோல்வி,ராஜிவ் காந்தி சிங்கள ராணுவ வீரரின் துப்பாக்கி பின் புற தாக்குதல்இந்திய ராணுவத்தின் மீறல்கள்,கலைஞர் கருணாநிதியின் இந்திய ராணுவத்தை வரவேற்காமை,வை.கோ,நெடுமாறன்,எம்.ஜி.ஆரின் பிரபாகரன் குழுவின் ஆதரவு,விடுதலைப்புலிகளின் வளர்ச்சியும்,பிரபாகரனின் மொத்த ஆளுமையும்,புலம்பெயர் தமிழர்களின் பங்கீடும்,ஏனைய தமிழ் குழுக்களின் அழிப்பு,ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசு தரப்பு தலைவர்கள் படுகொலை,வட கிழக்குப் பகுதியிலிருந்து சிங்கள,முஸ்லீம் தமிழர்கள் விரட்டியடிப்பு,ராஜிவ் காந்தியின் கொலை, கிழக்கில் கருணா,பிள்ளையான் துரோகத்தால் விடுதலைப்புலிகள் இரண்டுபட்டதும், வடக்கு,கிழக்கு என்ற பிரிவினையும்,பல இன்னல்களுக்கும் இடையிலும் சோர்ந்து போகாத விடுதலைப்புலிகளின் தமிழீழ இலக்கை நோக்கிய மன உறுதியும்,நார்வேயின் பேச்சு வார்த்தை தோல்வியை அடைந்தது தமிழர்களுக்கும்,சிங்களவர்களுக்கும் பேரிழப்பு என்பதோடு இல்லாமல் மனித உரிமைகளில் முதன்மையில் இருக்கும் நார்வேக்கும் களங்கமான ஒன்றாகப் போனது.
ஈழப்போரில் கடல்,வான்,நிலம் என்ற கட்டமைப்போடு இலங்கை அரசின் கட்டமைப்புக்களை தகர்க்கும் நோக்கில் விடுதலைப்புலிகள் போராட,இலங்கை அரசு பல நாட்டு உதவியுடன் போரிட்டு விடுதலைப்புலிகளை அழிக்கும் நோக்கோடு மட்டுமல்லாமல் தமிழர்கள் என்ற நோக்கில் குழந்தைகள், பெண்கள்,முதியோர் என பாரபட்ச மற்ற ராணுவ படுகொலைகள்,இலங்கை அரசின் போர்க்குற்றங்கள்,ஆயுதப் போராட்டத்தின் மௌனம்,தமிழகத்தில் கருணாநிதியின் சுயநலம்,கட்சிகள் பிரிந்த ஆதரவு,உலக ஊடகவியளாளர்கள் அனுமதி மறுப்பு,இலங்கை ஊடகவியளாளர்கள் படுகொலை,சிஙளவர்களின் போர் வெற்றிக் களிப்பும் அதனைத் தொடர்ந்து பொன்சேகாவுக்கே சிறை தண்டனையும், ராஜபக்சேக்களின் தவறான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள், ஐ.நாவின் செயல்படா தன்மை,மனித உரிமை அமைப்புக்களின் அழுத்தங்களால் இலங்கை போர் குறித்த மூவர் குழு மற்றும் அறிக்கை,ஐ.நா அறிக்கைக்கு எதிரான இலங்கை அரசின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் புரிந்துணர்வு என்ற முகப்பூச்சு, 3 ஆண்டுகள் ஆகியும் தமிழர்களுக்கான தீர்வினை தராமை,புலம் பெயர் தமிழர்களின் எதிர்ப்பு,இந்தியா பூகோள மற்றும் ராஜிவ் காந்தி படுகொலை என்ற இரு நிலைகளில் இலங்கை அரசுக்கு உதவியும் இந்தியா சார்ந்தும் சாராத நிலையாக இந்திய நட்பும் கூடவே சீனா,ரஷ்யா,பாகிஸ்தான் என்ற கவசங்களை அணிந்து கொண்ட நிலை,போர்க்குற்றம் செய்த உயர் ராணுவ அதிகாரிகளை தப்பிக்க வைக்கும் சூழ்ச்சியில் தூதரக,ஐ.நா வரை பதவி அமர்த்தல்,நாடு கடந்த தமிழீழ அரசு,உட்பூசல்கள்,வலுவற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு,போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வு துயரங்கள்,சேனல் 4 ன் பங்கு,ஐ.நாஅமெரிக்காவின் தலையீடு என்ற இப்போதைய நிலை வரை இலங்கைப் பிரச்சினையைப் பார்த்தால் இலங்கையின் ஆட்சி பீடம் அனைத்தையும் புறம் தள்ளி விட்டு தனது தேவைக்கேற்ப உலக அரங்கில் வலம் வரலாம் என்பது தவறான ஒன்றாகவே இனியும் அமையும்.
இந்திரா காந்தியின் காலத்திலேயே திரிகோணமலை கனவு நிறைவேறாத அமெரிக்கா விடுதலைப்புலிகள் இல்லாத வெற்றிடத்தில் தென் ஆசிய பூகோள அரசியலில் பங்கு தேடவும்,கூடவே இலங்கை மனித உரிமை மீறலகளால் குரல் கொடுக்க, சோர்ந்து போயிருந்த தமிழர்கள் சிறு நம்பிக்கை வெளிச்சம் வீசுவதை உணரத்தொடங்கையிருக்கிறார்கள். அமெரிக்காவின் இலங்கை சார்ந்த தீர்மானம் என்று வைத்துக்கொண்டாலும் கூட அமெரிக்காவின் தலையீட்டுக்குப் பின்பே இலஙகைப் பிரச்சினை சூடு பிடித்திருக்கிறது.
தமிழர்களின் தேவை தமிழீழம் என்ற போதிலும் அந்தக் கோட்டை தொடுவதற்கான வலிமையாக பேச்சு வார்த்தை, ஆயுதப் போர் இருந்த போதும் அவை மரணித்து விட்ட தருணத்தில் அமெரிக்கா சார்ந்த தமிழர்களின் நிலையே தமிழர்களுக்கும்,அனைத்தையும் இழந்த அப்பாவி தமிழர்களுக்கு தற்போதைக்கான முதல் தேவையாக மறுவாழ்வுக்கான வழியை உருவாக்கும்.
இந்த கணத்தில் யாரும் தொடாத உலக அரசியல் நிகழ்வொன்றையும் குறிப்பிடுவது சரியாக இருக்கும். சதாம் ஹுசைன் குவைத் மீது தொடுத்த போர் குற்றத்திற்காக அமெரிக்கா கோபி அனான் காலத்து ஐ.நாவில் தீர்மானம் போட்டு ஈராக் விற்கும் பெட்ரோலின் ஒரு பகுதியை போரினால் பாதிக்கப்பட்ட குவைத் நாட்டு மக்கள், குவைத்தில் பணி புரிந்த அனைத்து வெளி நாட்டினருக்கும் அவரவர் நாட்டு தூதரகம் மூலமாக இழப்பீடை வாங்கி தந்தது.குவைத்தில் பணிபுரிந்த,தொழில் புரிந்த இந்தியர்கள் எவ்வளவு மில்லியன் ஈட்டுத்தொகை பெற்றார்கள் என்பதை ஐ.நா கணக்கும்,இந்திய வங்கிகளும் சொல்லக்கூடும்.ஈட்டுத்தொகையில் கோவாவில் ஐந்து நட்சத்திர ஓட்டலை கட்டிய ஈட்டுத்தொகை வரலாறுகள் கூட உண்டு.
.அதே போல் இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் அனைவருக்கும் வீடு,நிலம்,தொழில் உதவி என உலக வங்கிக் கடன் மூலமாகவோ,நட்பு நாடுகளின் உதவிகளோடு இலங்கை இழப்பீடு வழங்குவது அவசியம.இது போர்க்குற்றஙகளுக்கான நஷ்ட ஈட்டுத்தொகை மட்டுமே. இதனை அடுத்து வட கிழக்கு தமிழர்களுக்கான பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் தனி நாடோ அல்லது ஒன்று பட்ட இலங்கையென்ற நிலையில் அதிகாரப் பகிரவும்,சமநிலை அரசியல் சாசன மாற்றமும் தேவை. அகதிகள்,புலம் பெயர் தமிழர்களை உள் வாங்கிக்கொள்ளும் தன்மையும்,மக்களின் தேவைகளுக்கேற்ப பெடரல் அமைப்போ,கனடா போன்ற இரு ஆட்சிமுறை இலங்கையின் நீண்ட எதிர்கால நலனுக்கு உதவும். தமிழர்கள்,சிங்களவர்களின் புரிந்துணர்வில் இரு நாட்டுக்கொள்கை கூட அவசியமான ஒன்றே.இதுவே இலங்கையின் எதிர்காலத்துக்கு சரியான பாதையாக அமையும்.தமிழர்களின் போராட்டம்,சிங்கள அரசின் செயல்படும் திறன்,உலக நாடுகளின் சுயதேவைகள் என்ற மூன்று அடிப்படையில் மட்டுமே இனி நிகழ்வுகள் வலம் வரக்கூடும்.
மக்கள் வாழ்வுக்கு தீர்வுகள் காணும் பட்சத்தில் இலங்கைக்கு பூகோள ரீதியாக வெளி அச்சுறுத்தல்கள் எதுவுமில்லை.தேவைக்கான பாதுகாப்புக்கு பூகோள ரீதியாக இந்தியாவை சார்ந்து இருப்பது தேவையற்ற பாதுகாப்பு பட்ஜெட் செலவீனங்களை குறைக்க முடியும்.முக்கியமாக இலங்கை,தமிழகம் என்ற நட்பை கொண்டு வரும் ஸ்டேட்ஸ்மேன் அரசியல்வாதி இலங்கைக்கு தேவை.
உலக சந்தை என்ற ரீதியில் சீனாவுடன் பொருளாதார உறவுகள் கொள்வது இலங்கைக்கு தேவையான ஒன்றே.இதனையும் தாண்டி சீனாவுடன் ஆயுத வலுப்படுத்தல் என்ற கோட்பாடு இலங்கைக்கு எதிர்காலத்தில் அழிவையே கொண்டு வரும்.இலங்கையின் இரட்டை நிலையை நிலம்,கடல் கடந்து பாகிஸ்தானிடம் உறவு கொள்வதிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.ஒரு புறம் தமிழர்களின் நலன் நோக்காமலும் இன்னொரு புறம் அப்பாவி சிங்களப்பெண்களை வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி அவர்கள் அனுப்பும் சிறு தொகையின் மொத்த கூட்டின் ஒரு பகுதியை ஆயுதஙக்ள் வாங்கவும், லாபிகளுக்கு செலவிடுவதும் வளமான இலங்கையை உருவாக்காது.ஒரு புறம் சிங்கள இனவாதம் பேசுபவர்கள் இருந்தாலும்,கல்வியறிவும்,தொழில் சார்ந்த நிபுணர்களும்,இலங்கையின் சமத்துவ எதிர்காலம் குறித்த அக்கறை கொண்ட சிங்கள மக்களும் இருக்கவே செய்கிறார்கள்.இவர்களை அடையாளம் காண்பதும் முன்னிலைப்படுத்துவதும் இலங்கையின் எதிர்காலத்துக்கும் நல்வாழ்வுக்கும் உதவும்.
தற்போதைக்கான முக்கிய தேவையாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் போய் சேர்வதற்கு இலகுவான வழிகள் தேவை.எந்த உதவியும் இலங்கை அரசின் மூலமாக,ராணுவ துணை கொண்டு என்றில்லாமல் சுயாதீனமாக செயல்படும் அமைப்புக்கள்,தமிழகத்தின் உதவி போன்றவை இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
இலஙகை எந்த பாதையை தேர்ந்தெடுக்கிறதென்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அறிக்கையின் செயல்பாடுகள் பற்றிய திறனாய்வு ஐ.நாவில் மீண்டும் ஒரு முறை திறனாய்வு செய்யப்படும் வரையிலான கால கட்டத்தின் நிகழ்வுகளை கூர்ந்து கவனிப்போம்.