Followers

Tuesday, July 31, 2012

மானுட நட்பை சிதைப்பது தேசிய அரசியலே!

முன்பெல்லாம் அறிமுகம் இல்லாத இந்தியனைக் கண்டால் பாகிஸ்தானிக்கு ஆகாது.அதே போல் இந்தியனுக்கும் பாகிஸ்தானி என்றால் பச்சை என்ற அடைமொழியோடு துவேசம் காட்டுவது வழக்கம்.கார்கில் போரின் கால கட்டத்தில் முஷ்ரஃபின் கூ வரையிலான சித்து விளையாடல்கள் பிரபலம்.

ஆடு மேய்க்கிற பையன் சொல்லித்தான் பாகிஸ்தான்காரன் கார்கில் முற்றுகையே இந்திய ராணுவத்திற்கு தெரிந்ததும்,ஊழல் போபர்ஸ் பீரங்கியே போரின் துணைக்கு வந்ததும்,மேஜர் சரவணன் போன்ற இன்னும் பல இந்திய வீரர்கள் போர் மரணமடைந்ததும்,பாகிஸ்தானிய ராணுவ வீரர்களின் மரணத்தை பாகிஸ்தான் அரசே இவர்கள் எமது ராணுவத்தை சார்ந்தவர்கள் அல்ல என்று மறுத்து இந்திய ராணுவத்தாலேயே பாகிஸ்தான் கொடி மரியாதையோடு  அடக்கம் செய்யப்பட்டதும் இன்று மறந்து போன விசயங்கள். பால் தாக்கரேக்கு நிகராக கிரிக்கெட்டும் இந்தியர்களை உசுப்பி விடும் தேசிய உபகரணம்.பாகிஸ்தானுக்கும் கிரிக்கெட்டோடு காஷ்மீர் தூண்டல்கள் பலத்த ஆயுதங்கள்.

இதற்கு மத்தியிலும் வளைகுடா போன்ற நாடுகளில் ஒரு நிறுவனத்தில் இந்தியனோ அல்லது பாகிஸ்தானியோ சேர்ந்து பணிபுரியும் போது இரட்டைகளான இந்தி,உருதுவின் காரணத்தால் நட்பும்,கிரிக்கெட்டைப் பொருத்த வரை சாலா! தும்லகோ அர்கியானா (மச்சி!தோத்திட்டியாங்கிற மாதிரி) கிண்டல் செய்யும் காலமாக இருந்தது.இந்தி சினிமாவும்,மாதுரி தீட்சித் மோகமும் பாகிஸ்தானியர்களுக்கும்,பாகிஸ்தானிய தித்திப்பு மாம்பழமும் உறவுக்கான பாலமாகவே இருந்தது.இருந்தும் உள்ளுக்குள் இந்திய, பாகிஸ்தானிய வெறுப்புக்கும் குறையே இல்லாத படிக்கு இரு நாடுகள் சார்ந்த அரசியல் நிலைப்பாடுகளுடன் கூட ஊடக செய்திகளும் தீனி போட்டுக் கொண்டே இருந்தன.பம்பாய் குண்டு வெடிப்புக்களும்,தாஜ்மகால் ஹோட்டல் முற்றுகையும்,மனித இழப்புக்களையெல்லாம் தாங்கிக்கொள்ளும் மனப் பக்குவமோ அல்லது பாகிஸ்தான் சார்ந்த அரசியல் பேடித்தனமோ இப்போது பழகி விட்டது.

பனிப்போரின் மனநிலையை மாற்றிப்போட்டதாக இரு நாடுகளின் அரசியல் தளத்தில் பேச்சு வார்த்தையுடன் 9/11க்குப் பின்பான உலக அரசியல் நிலையும்,பாகிஸ்தானின் ராணுவ அதிகாரத்திலிருந்து ஜனநாயக தேர்வு முறையிலான ஆட்சியும் இரு தேசத்து மக்கள் மனதை மெல்ல மாற்றியிருக்கிறது.அப்போதைக்கான் மனநிலைகள் இப்போது இந்திய பாகிஸ்தானியர்களிடம் மாறியிருப்பதை உணர முடிகிறது.ஆனாலும் அரசியல் சார்ந்த ஐ.எஸ்.ஐ, ரா போன்ற தகுடுதத்தம் இன்னும் தொடர்கிறது என்பதாலும் அரசியல் சார்ந்த மனநிலைகள் இன்னும் முற்றிலுமாக மாறிவிடவில்லை என்பதும் உண்மை.

ராமன் கதையும்,அனுமான் வாலில் தீ பத்த வைத்த கதை தவிர சிங்களவன் என்ற ஜந்துக்கள் இருப்பதை அறியாத கிணற்றுத் தவளை வாழ்க்கையே இளம் வயது அனுபவமாக பிரபாகரன் கால கட்டம் வரை பலருக்கும் இருந்திருக்க கூடும்.சிலோன் தேயிலைக் காடுகளில் வசிக்கும் தமிழர்களின் தமிழக வருகையும் கூட சராசரி தமிழர்களின் வாழ்வில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்க முடியாது.இந்திய ராணுவம் இலங்கை சென்றதும், அப்போதைய முதல்வரான கருணாநிதி இந்திய ராணுவ தளபதியை வரவேற்க செல்லாததும்,மெட்ராஸ் த்ப்பாக்கி சூடும் மெல்ல இலங்கை நோக்கிய பார்வையை அரசியல் சார்ந்த செய்தி வாசிப்பவர்களுக்கு பிரச்சினைகளின் பின்புலத்தை புரிய வைத்திருக்கும்.எம்.ஜி.ஆர் விடுதலைப்புலிகளுக்கு பெரும் பண உதவி செய்தார் என்ற இப்போதைய பொதுவான செய்தி அப்போது தேச ரகசியம்.கச்சத்தீவு? அது ஏதோ பாராளுமன்றத்தில் விவாத நேரத்தோடு முடிந்து போன விசயம். இவற்றையெல்லாம் திசை திருப்பிய தருணம் ராஜிவ் காந்தியை சார்ந்த குண்டு வெடிப்பு.

காலம் பல நிகழ்வுகளோடு நடந்து வந்திருக்கிறது என்பதை இப்போது உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.இப்போதைய நடப்பில் தமிழகத்தில் பல தரப்பிலிருந்தும் எழும் எதிர்ப்புக்குரலையும் தாண்டி வன்மம் சார்ந்த  இந்திய அரசின் செயல்பாடுகளும்,இலங்கை அரசின் அரசியல் நகர்வுகளும் முந்தைய இந்திய பாகிஸ்தானிய மனநிலையை தமிழகத்தைப் பொறுத்த வரை உருவாக்கியிருக்கிறது.அதே போல் தமிழகம் சார்ந்தும் இந்திய அரசியல் நிலைப்பாட்டை சார்ந்த வெறுப்பை சிங்களவர்கள்,வட கிழக்கு பகுதி தமிழர்கள் மத்தியிலும் உருவாக்கியிருக்கிறது.


Monday, July 30, 2012

தமிழ் மரபு அறக்கட்டளை

பேசாப் பொருள் எனும் ஜிடிவி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சுபா என்பவரின் நேர்காணல் காண நேரிட்டது.அம்மாவின் இலக்கியம் பிள்ளைக்கும் பற்றிக்கொண்டதென்பதே இவரைப்பற்றிய முகவுரைக்கு சரியாக இருக்கும்.தமிழ் கலாச்சாரத்தின் ஆதி தமிழகமாக இருந்தாலும் இன்று தமிழின  அவலத்தையும் பறைசாற்றிக்கொண்டிருப்பதை  இங்கே பேசாப் பொருளாக்கி தமிழின் சிறப்புக்கு பெரும் பங்கு வகிப்பவர்கள் மலேசியா மற்றும் மேற்கத்திய புலம்பெயர் தமிழர்களும் எனலாம்.தோண்ட தோண்ட இன்னும் தேடும் புதையல்கள் என்பதையே இங்கே பேசும் தமிழ் மரபுகள் உரக்க சொல்கின்றன.

உ.வே.சாமிநாதய்யர் முதற் கொண்டு தமிழ் சுவடிகளை ஓரளவுக்கு ஆவணப்படுத்தியுள்ளோம் என்ற போதிலும் கூட மேற்கத்திய நாடுகள் தங்கள் கலாச்சார விழுதுகளை ஆவணப்படுத்துவது போல் நாம் செய்யவில்லை யென்ற போதிலும் அதற்கான ஆர்வங்களும்,தனி மனித சுய முயற்சிகளும் குறையவில்லை என்பதை தமிழ் மரபு அறக்கட்டளை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.கணையாழி பத்திரிகை தமிழ் இலக்கிய வட்டத்துக்கு மிகவும்  பரிச்சயமான ஒன்று. 

சுபா இவற்றோடு இணைந்து கொள்வது மட்டுமல்லாமல் அவரின் தேடலின் ஆர்வம் கூகிள் குழுமம் முதல் தமிழ் மரபு பதிவுகளாக துவங்கி பதிவுகளிலிருந்து டாட் காமர்களாக மாறுவதில் வேறுபட்டு அறக்கட்டளையாக பரிணாம வளர்ச்சி பெற்றிருப்பது சிறப்பு.இவர் சார்ந்த குழுமத்தில் பலரின் பங்களிப்பு இருக்கின்ற போதிலும் என் ரசனையை ஈர்த்தவை ஓலைச்சுவடிகளும்,தேடலுக்கான பயணங்களுமே..இவற்றோடு குரல்களையும் பதிவு செய்வோம் என்ற புதிய பார்வை. 

தரிசு நிலத்தை பட்டா போட்டுக்கொள்ளுங்கள் என்று கூகிள் சொன்னதை தொடர்ந்து கருத்துக்கள்,படங்கள்,காணொளி என்று நிறைய பகிர்வுகள் செய்கிறோம்.ஒலி என்றதும் கானா பிரபுவும்,காணொளி என்றதும் சின்னக்குட்டியும் கூடவே பெரும் காணொளிக்கு சார்வாகன் மட்டுமே பதிவுலகில் நினைவுக்கு வருகிறார்கள்.இதனை இன்னும் வளமை படுத்தலாம். அன்றாட வாழ்வின் சப்தங்களை இசை மயமாக்கியதில் இளையராஜாவுக்கு பெரும் பங்குண்டு.பிடோவன் (பீத்தோவன் என நாம் எழுதுவதின் சரியான உச்சரிப்பாம்) சொந்த சோகக் கதை தேடப்போய் இளையராஜாவின் சிம்பொனி பிரபலமாகாமல் போனதே என்ற சோகம் வந்து அப்பிக்கொண்டது.

இன்றைய காலகட்டத்தில் குறைந்த பட்சம் மூன்று நான்கு தலைமுறைகளின் குரல்களையும்,உருவங்களையும் பதிவு செய்து கொள்ளும் வாய்ப்புக்கள் நமக்கு இருக்கின்றன.பிரிட்டிஷ் காலத்து புகைப்படங்கள் இன்று அரிய பொக்கிசமாக தோன்றுவது போல் இன்றைய குரல்கள்,காணொளிகள் பிற்காலத்தில் வரலாற்று ஆவணமாகக் கூடும் சாத்தியங்களுண்டு.எனவே சுய சேமிப்பு என்ற அளவிலாவது காணொளிகள்,குரல்களை பதிவு செய்வோம் என்கின்ற புதிய பரிமாணத்தை தமிழ் மரபு அறக்கட்டளை உருவாக்கியது.

சொல்வதை விட சொல்லாமல் சுட்டிகளை விட்டுச் செல்வதே சுபாவுக்கும்,தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் கௌரவப்படுத்துவதாக அமையும். சுபாவை அறிமுகப்படுத்தியதில் ஜிடிவிக்கு நன்றி உரித்தாகுக. இலக்கிய ஆர்வலர்கள் தமிழ் மரபோடு இணை ஆசிரியர்களாக இணைந்து கொள்ளலாம்.

தமிழ் வளர்ப்போம்.தமிழ் மரபு வளர்ப்போம். 

தேடலில் காணக்கிடைத்தவைகள் சில:

ஓலைச்சுவடிகள்

பத்மா சுப்ரமணியம் பரதம்

முதல் இஸ்லாமிய பெண் எழுத்தாளர் சித்தி ஜுனைதா பேகம்

சின்ன மருது பெரிய மருது சிலைகள்

பனங்கிழங்கை படத்திலாவது பார்க்க முடிகிறதே!


தமிழ் மரபு பதிவுகள்

http://tamilheritagefoundation.blogspot.com/

தமிழ் மரபு அறக்கட்டளை

http://www.tamilheritage.org/

Thursday, July 26, 2012

அணு ஆயுதம் - கென்னடி முதல் மெகமுத் அகமத்நிஜாத் வரை

நேற்று அணு ஆயுத பரவலை தடுக்கவும் பூஜ்யம் அளவில் எந்த நாடுமே அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது சாத்தியமா என்ற ஆவணப்படம் ஒன்று காண நேரிட்டது.

அமெரிக்க ஜனாதிபதி J.F கென்னடி 1961ம் வருடம் ஐ.நா சபையில் ஆற்றிய உரையின் முக்கியத்துவமாக விபத்து,தவறான கணிப்பீடு,கிறுக்குத்தனம் என்ற மூன்று காரணங்களால் அணு ஆயுத ஆபத்துக்கள் ஏற்படலாம்.எனவே அணு ஆயுதங்கள் நம்மை அழிப்பதற்கு முன் நாம் அவற்றை அழிக்க வேண்டும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

Today, every inhabitant of this planet must contemplate the day when this planet may no longer be habitable. Every man, woman and child lives under a nuclear sword of Damocles, hanging by the slenderest of threads, capable of being cut at any moment by accident, or miscalculation, or by madness. The weapons of war must be abolished before they abolish us. 

(In an address before the General Assembly of the United Nations on September 25,1961.Courtesy-Wikipeadia)

கென்னடி சொன்னதில் விபத்தாக ரஷ்யாவின் செர்னபில்,சுனாமியால் ஜப்பான் விபத்துக்கள் சாட்சியாக திகழ்கின்றன.தவறான கணிப்பீடாக அமெரிக்கா தான் நான்கு அணு பரிசோதனைகள் செய்யப்போவதாக ரஷ்யாவுக்கு அறிவிக்க அமெரிக்க நான்கு அணு ஆயுதங்களை ரஷ்யாவுக்கு அனுப்புகிறது என்று மொழிப்பிரச்சினையால் ரஷ்ய விஞ்ஞானிகள் யெல்சினுக்கு சொல்ல விஞ்ஞானிகள் கூற்றில் சந்தேகம் கொண்ட யெல்சின் அடுத்த சில நிமிடங்களில் தடுப்பு நடவடிக்கைக்கு அனுமதி தராமல் இருந்ததால் ஒரு தவறான கணிப்பீடு மூலமாக ஒரு போர் உருவாவது தடுக்கப்பட்டது. கிறுக்குத்தனத்திற்கு ஒசாமா பின் லேடனும் 9/11ம் போதும். பின்லேடன் ஆப்கானிஸ்தானில் கொடிகட்டிப் பறந்த கால கட்டத்தில் பாகிஸ்தானின் அணுகுண்டும் பின்லேடனின் கையில் கிடைத்து 9/11 நிகழ்ந்திருந்தால்?

அமெரிக்க,ரஷ்ய பனிப்போர் காலத்தில் இவை இரண்டையும் சார்ந்த நாடுகள் என்ற நிலை மாறி பிரிட்டன்,பிரான்ஸ்,சீனா போன்ற நாடுகளும் அணு ஆயுதப் பரிசோதனை செய்து தம்மை அணு ஆயூத தாதாக்களாக மாறி விட உலக மக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்தி பெற்றவர்களாக ஐ.நா அமைப்பிலும் அங்கம் வகிப்பவர்களாகி விட்டார்கள்.இருக்குது ஆனால் இல்லை என்ற நிலையில் இஸ்ரேலும்,இந்திய சீனப்போரின் காரணமாக இந்தியா 1974ல்  சிரிக்கும் புத்தனாக தனது முதல் அணு ஆயுதப்பரிசோதனை செய்து வெற்றி பெற்று விட அதனைத் தொடர்ந்து மக்கள் புல்லை உண்ணும் நிலை ஏற்பட்டாலும் கூட இந்தியாவுக்கு எதிரான அணு ஆயுதப் பரிசோதனையை கை விட மாட்டோம் என்று பாகிஸ்தான் சொன்னது. சொன்னதோடு இஸ்லாமிக் பாம்ப் என்று இன்று போஸ்டரும் ஒட்டிக்கொண்டது.

ஒரு பக்கம் சீனாவின் ஆதரவும் இன்னொரு புறம் அமெரிக்க கரிசனையும் சேர்ந்து பாகிஸ்தான் 1980ல் அணு ஆயுத நாடாக உருவாகி விட்டாலும் கூட  அப்துல் கலாம் என்ற பெயர் பிரபலமான May 11 1998ம் வருடம் இந்தியா பொக்ரான் 5 அணு ஆயுத பரிசோதனையை செய்த அடுத்த சில தினங்களில் பாகிஸ்தானின் 6 பரிசோதனைகள் செய்து விஞ்ஞானி அப்துல் காதிர் கான் என்ற பெயரும் பிரபலமாகி விட்டது.அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதியாகி விட அப்துல் காதிர் கான் முஷ்ரஃபின் ஆட்சிக்காலத்தில் வீட்டு சிறைக்கு தள்ளப்பட்டதிலிருந்து இரண்டு நாடுகளுக்குமான அணு ஆயுதப் போட்டியின் பாதையை புரிந்து கொள்ளலாம்.

வட கொரியா கம்யூனிஸத்தாலும்,அமெரிக்காவுக்கு எதிரான நிலையாலும் தனிமைப்படுத்தப்பட்ட்டாலும் கூட தனது அணு ஆயுத வலிமையால் பொருளாதார செலவுகளை சமன்படுத்த அணு ஆயுத பரவலை ஊக்குவித்தது. இதே பொருளாதார செலவுகளை சமாளிக்கவே பாகிஸ்தானும் அணு ஆயுத பரவல் செய்தது.

இதில் பிறந்த அணு ஆயுதக் குழந்தைதான் ஈரானின் அணு ஆயுதக்கொள்கை. தனது பொருளாதாரக் கொள்கையாக நாளை பெட்ரோல் தீர்ந்து விட்டால் மாற்று எரிபொருள் தேவையென்றே அணு மின் நிலையங்கள் அமைப்பதாக கூறிக்கொண்டாலும் கூட உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற நாடே இருக்காது என்று பிரகடனப்படுத்திய ஈரானின் இஸ்ரேல் சார்ந்த வெளியுறவுக்கொள்கையே அமெரிக்காவும்,இஸ்ரேலும் ஈரானின் அணு எரிபொருள் பரிசோதனைக்கு தடை விதிக்கின்றன.

பனிப்போர் காலம் தொட்டு அமெரிக்கா கிட்டத்தட்ட 65000 அணு ஆயுதங்கள் வைத்திருந்தது.அதே அளவில் ரஷ்யாவும் வைத்திருக்க அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கைகள் மூலமாக இவை சுமார் 6500 அளவில் குறைந்து விட்டாலும் கூட யாரிடம் எவ்வளவு ஆயுதங்கள் உள்ளதோ அவற்றை வைத்துக்கொள்ளலாம் ஆனால் யாரும் புதிதாக அணு ஆயுதங்கள் தயாரிக்க கூடாது என்கிறது ஐ.நா ஐவர்  வீடோ குழு.இந்தியா,பாகிஸ்தான்,இஸ்ரேல் அவரவர் நலன் கருதி அணு ஆயுத பரவல் உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை.இந்தியா முழு அணு ஆயுத தடைக் கொள்கையை வற்புறுத்துகிறது.பாகிஸ்தானோ நாயகன் பட வசனமாக அவனை நிறுத்தச் சொல் பின் நான் கையெழுத்திடுகிறேன் என்கிறது.இஸ்ரேலோ சுற்றியும் பகை நாடுகளை வைத்துக்கொண்டு என்னால் கையெழுத்திட முடியாது என்கிறது.

இந்த நிலையில் அணு ஆயுத குழுவில் நுழைய முயற்சிக்கும் ஈரானின் ஜனாதிபதி மெகமுத் அகமத்நிஜாத் கேட்கும் கேள்வி...

அணு ஆயுதங்கள் வைத்திருப்பது நன்மையென்றால் அதனை ஈரான் அனுபவிக்க அமெரிக்கா தடை செய்ய என்ன உரிமை உள்ளது?

அணு ஆயுதங்கள் வைத்திருப்பது ஆபத்து என்றால் அதனை அமெரிக்கா வைத்திருப்பதற்கு என்ன உரிமை உள்ளது?

புல்லைத் தின்றாலும் பரவாயில்லை என பாகிஸ்தான் பயணிக்கிறது. இந்தியாவும் சுகாதார கழிவிடங்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை நாட்டின் தற்காப்பு முக்கியம் என பயணிக்கிறது.இப்பொழுது இலங்கையும் அணுக்குழுவில் நுழைய ஆவல் கொண்டு பாகிஸ்தான் உதவியை நாடுவதாக இந்தியா டுடே நேற்று செய்தி வெளியிட்டிருப்பது அணு ஆயுதப் போட்டியையும்,இலங்கை சார்ந்த இந்திய வெளியுறவு கொள்கையிலும் புதிய பரிணாமத்தை தோற்றுவித்துள்ளது. இதோடு ஈரானின் முயற்சிகளைப் பொறுத்து வளைகுடா நாடுகளின் கள நிலைமைகள் மாறுவதற்கான சாத்தியங்களும் உள்ளன.

இந்தியா,பாகிஸ்தானிடம் நூற்று சொச்சத்துக்குள் அணு ஆயுதங்கள் இருந்தாலும் கூட இரு நாடுகளின் போட்டி மனப்பான்மை ஆபத்தானது. வடகொரியா,பாகிஸ்தானின் பொருளாதார வியாபாரத்தால் ஈராக்,லிபியா போன்ற நாடுகளின் முயற்சி தோல்வியடைந்த போதிலும் ஈரான் அணு ஆயுத நாடுகள் குழுவுக்குள் புகுந்து விடும் சாத்தியமிருக்கிறது.

இவையெல்லாவற்றையும் விட அமெரிக்காவும்,ரஷ்யாவும் நிரந்தர பூஜ்ய அளவிலான அணு ஆயுத அழிப்பு செய்யும் வரை உலகம் தலைக்கு மேல் கத்தியை சுழல விட்டே பயணிக்கும்.









Tuesday, July 17, 2012

Black Friday - திரைப்பட விமர்சனம்

வேலைப்பளு ஒரு புறம்,எதை சொல்வது என்ற உந்துதல் இல்லாத மறுபுறம் என்பதற்கிடையில் தற்போது  கொஞ்சம் மனதை இலகுவாக்குவது ஏனைய கருத்துரையாடல்களே..யாருடனாவது சண்டை போடலாமே என்று தேடினாலும் எல்லோருமே நல்லபிள்ளையாகி விட்டார்கள் போல் தெரிகிறது.பதிவுலகம் அமைதியான கடலில் சாமரம் வீசிக்கொண்டு செல்கிறது.இப்படியே பயணம் செய்யட்டும். பதிவுலக தேடல்களுக்கு மாற்றாக இப்போது ஆங்கில திரைப்படங்களுடன் இந்தி திரைப்படங்களும் விட்டும் தொட்டும் என்னுள் முடிவடைகிறது.


முன்பு ஒரே கதைக்கருவை வைத்தே சென்று கொண்டிருந்த இந்தி திரை உலகம் கறுப்பு பணம்,பாதாள உலகம் என்ற சூழலிலும் இந்தி திரைப்படங்களே இந்திய சினிமாவை தீர்மானிக்கும் நிலையில் இப்போது பன்னாட்டு மூலதனங்களும் புரள்வதோடு இந்தி திரைப்படங்கள் பல கதைக்களங்களையும் தொடுவது வரவேற்க தக்க மாற்றம்..பல இயக்கங்கள் யார் இயக்குநர் என்று மீண்டும் பெயர் தேட வைக்கிறது.அந்த வரிசையில் மிகவும் தாமதமாக ஆக்கிரமித்துக்கொண்ட பெயர் அனுராக் கெஷ்யப்.திரைப்படம் கறுப்பு வெள்ளிக்கிழமை எனும் Block Friday.

இதே பெயரில் ஹுசேன் ஜெய்தி என்பவர் எழுதிய புத்தகமே திரைப்பட வடிவமாக.திரைப்படம் முடிந்து எழுத்து வரிசைகள் ஓடிக்கொண்டிக்க கண்கள் நிலைகுத்திய நிலை.எந்த பக்க சார்புமில்லாமல் ஒரு திரை ஊடகம் எப்படி பம்பாய் குண்டு வெடிப்பு சம்பவத்தையும்,அதன் பின்புல மனிதர்களையும், மதம்,அரசியல்,காவல்துறை செயல்படும் முறை என பட்டவர்த்தனமாக திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வில்லாமல் கொண்டு செல்கிறது.

ஒரு புறம் இந்திய காவல்துறை செயல்படும் விதம் குறித்த மனித உரிமை பார்வையும, அதற்கு எதிராக காவல்துறை  தனது பக்க நியாயத்தை சொல்லும் போது எந்த தவறுகளும் செய்யாத பம்பாயின் அன்றாட வாழ்வை தேடும் மக்கள் மரணித்துப் போவதும்,பலத்த காயங்களுடன் ஏனைய வாழ்நாளை கழிப்பவர்களுக்கு மனித உரிமை இல்லையா என்ற கேள்வி மனித உரிமை,காவல்துறை செயல்படும் விதம் குறித்த இருவித மன அதிர்வை உருவாக்குகிறது.

சாதாரண இளைஞர்கள் மதம் என்ற பெயரில் எப்படி மூளை சலவை செய்யப்படுகிறார்கள் என்பதையும் பம்பாய் குண்டு வெடிப்பு நிகழ்ந்த 1993ம் வருடத்திற்கு பின் சுமார் 122 பேர் மீதான குற்றப்பத்திரிகை மீது 100 பேர்கள் குற்றவாளிகள் என 13 வருட ஆண்டுகளுக்குப் பின்பான நீதிமன்ற தீர்ப்பில் குற்றவாளிகள் தண்டனை அடைந்தாலும் முதல் குற்றவாளிகளான தாவுத் இப்ராஹிம்,டைகர் மேமன் போன்றவர்கள் இன்று வரை தப்பித்து வருவதும்,இந்திய அரசியல்,சட்ட வலிமைகளையும் கேள்விக்குறியாக்குகிறது.

குண்டு வெடிப்புக்கு முன்பே டைகர் மேமனின் மொத்த குடும்பமும் துபாய் சென்று விடுவதும்,தாவுத் இப்ராஹிம் இன்று வரை பாகிஸ்தானில் ஒளிந்து கொண்டிருப்பதும் இவர்களின் சுயநலங்களை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.மத வாதத்தை பஜ்ரங்க் தள்,ஆர்.எஸ்.எஸ் என்ற இந்து தீவிரவாத இயங்கங்கள் பி.ஜே.பி என்ற அரசியல் முகமூடி போட்டுக்கொண்டு பாபர் மசூதியை இடித்ததன் மூலம் மதவெறியை இந்திய,,பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ தமது அரசியல் சுயநலன்களுக்கு எப்படி பயன்படுத்திக்கொள்கின்றன என்பதையும் தொட்டு தாவுத் இப்ராஹிம்,டைகர் மேமன் என்ற தனி மனிதர்களிடமிருந்து பிரச்சினை விலகி எப்படி இந்திய,பாகிஸ்தானிய அரசியலை தீர்மானிக்கிறது என்பதையும் மெலிதாக தொட்டு செல்கிறது.

நீதி மன்ற தடைகளையும் மீறி படம் வெளி வந்தும் கூட இயக்குநர் மணிரத்னத்தின் பாம்பே,நசுருதீன் ஷாவின் நடிப்புக்கான தி வென்ஸ்டே படங்களுக்கான விளம்பரம் அனுராக் கெஷ்யாப்க்கு குறிப்பிட்ட ரசனையாளர்களின் மத்தியில் மட்டுமே கிடைத்துள்ளது எனலாம். பாம்பே,வென்ஸ்டே போன்ற படங்கள் தனிமனிதர்களின் கதைக்களத்தினூடே  ஒரு நிகழ்வைப் பற்றி சொல்லி நிகழ்வுகளோடு சமரசப்பட்டவை.

ஆனால் கறுப்பு வெள்ளிக்கிழமை ஒரு நிகழ்வின் காரணகர்த்தாக்களையும்,அவர்களை சார்ந்த சாதாரண மனிதர்களையும் தொட்டு மதம் எப்படி மனிதர்களை விலக்கி வழிநடத்திச்செல்கிறது என்பதையும்,தாவுத் இப்ராஹிம்,டைகர் மேமன்,பால் தாக்கரே, அத்வானி, ஆர்.எஸ்.எஸ்,பஜ்ரங்தள்,ஐ.எஸ்.ஐ என்ற பெயர்களை எந்த சமரசமுமின்றி நிகழ்வுகளுனூடே சொல்லி செல்கிறது.

கதைக்களம்,ஒளிப்பதிவு,இசை இவற்றிற்கும் மேலாக பாலிவுட் நடிகர் என்ற  தனி மனித பிம்பங்களற்ற நடிக்கிறோம் என்ற உணர்வுகளற்ற கதையின் பாத்திரத்தோடு ஒன்றிப் போனவர்களை இயக்கியிருப்பது நடிகர்களுக்கும், இயக்குநருக்கும் வெற்றியே.அனுராக் கெஷ்யப் இந்திய திரைப்படத்தின் தவிர்க்க முடியாத பெயர் பட்டியலுக்குள்.இந்திய திரைப்படங்கள் கறுப்பு வெள்ளிக்கிழமை போன்ற பட வரிசையில் பயணிப்பதே இந்திய சினிமாவை உலக திரைப்படங்களின் வரிசையில் நிற்க வைக்கும்.