Followers

Tuesday, July 31, 2012

மானுட நட்பை சிதைப்பது தேசிய அரசியலே!

முன்பெல்லாம் அறிமுகம் இல்லாத இந்தியனைக் கண்டால் பாகிஸ்தானிக்கு ஆகாது.அதே போல் இந்தியனுக்கும் பாகிஸ்தானி என்றால் பச்சை என்ற அடைமொழியோடு துவேசம் காட்டுவது வழக்கம்.கார்கில் போரின் கால கட்டத்தில் முஷ்ரஃபின் கூ வரையிலான சித்து விளையாடல்கள் பிரபலம்.

ஆடு மேய்க்கிற பையன் சொல்லித்தான் பாகிஸ்தான்காரன் கார்கில் முற்றுகையே இந்திய ராணுவத்திற்கு தெரிந்ததும்,ஊழல் போபர்ஸ் பீரங்கியே போரின் துணைக்கு வந்ததும்,மேஜர் சரவணன் போன்ற இன்னும் பல இந்திய வீரர்கள் போர் மரணமடைந்ததும்,பாகிஸ்தானிய ராணுவ வீரர்களின் மரணத்தை பாகிஸ்தான் அரசே இவர்கள் எமது ராணுவத்தை சார்ந்தவர்கள் அல்ல என்று மறுத்து இந்திய ராணுவத்தாலேயே பாகிஸ்தான் கொடி மரியாதையோடு  அடக்கம் செய்யப்பட்டதும் இன்று மறந்து போன விசயங்கள். பால் தாக்கரேக்கு நிகராக கிரிக்கெட்டும் இந்தியர்களை உசுப்பி விடும் தேசிய உபகரணம்.பாகிஸ்தானுக்கும் கிரிக்கெட்டோடு காஷ்மீர் தூண்டல்கள் பலத்த ஆயுதங்கள்.

இதற்கு மத்தியிலும் வளைகுடா போன்ற நாடுகளில் ஒரு நிறுவனத்தில் இந்தியனோ அல்லது பாகிஸ்தானியோ சேர்ந்து பணிபுரியும் போது இரட்டைகளான இந்தி,உருதுவின் காரணத்தால் நட்பும்,கிரிக்கெட்டைப் பொருத்த வரை சாலா! தும்லகோ அர்கியானா (மச்சி!தோத்திட்டியாங்கிற மாதிரி) கிண்டல் செய்யும் காலமாக இருந்தது.இந்தி சினிமாவும்,மாதுரி தீட்சித் மோகமும் பாகிஸ்தானியர்களுக்கும்,பாகிஸ்தானிய தித்திப்பு மாம்பழமும் உறவுக்கான பாலமாகவே இருந்தது.இருந்தும் உள்ளுக்குள் இந்திய, பாகிஸ்தானிய வெறுப்புக்கும் குறையே இல்லாத படிக்கு இரு நாடுகள் சார்ந்த அரசியல் நிலைப்பாடுகளுடன் கூட ஊடக செய்திகளும் தீனி போட்டுக் கொண்டே இருந்தன.பம்பாய் குண்டு வெடிப்புக்களும்,தாஜ்மகால் ஹோட்டல் முற்றுகையும்,மனித இழப்புக்களையெல்லாம் தாங்கிக்கொள்ளும் மனப் பக்குவமோ அல்லது பாகிஸ்தான் சார்ந்த அரசியல் பேடித்தனமோ இப்போது பழகி விட்டது.

பனிப்போரின் மனநிலையை மாற்றிப்போட்டதாக இரு நாடுகளின் அரசியல் தளத்தில் பேச்சு வார்த்தையுடன் 9/11க்குப் பின்பான உலக அரசியல் நிலையும்,பாகிஸ்தானின் ராணுவ அதிகாரத்திலிருந்து ஜனநாயக தேர்வு முறையிலான ஆட்சியும் இரு தேசத்து மக்கள் மனதை மெல்ல மாற்றியிருக்கிறது.அப்போதைக்கான் மனநிலைகள் இப்போது இந்திய பாகிஸ்தானியர்களிடம் மாறியிருப்பதை உணர முடிகிறது.ஆனாலும் அரசியல் சார்ந்த ஐ.எஸ்.ஐ, ரா போன்ற தகுடுதத்தம் இன்னும் தொடர்கிறது என்பதாலும் அரசியல் சார்ந்த மனநிலைகள் இன்னும் முற்றிலுமாக மாறிவிடவில்லை என்பதும் உண்மை.

ராமன் கதையும்,அனுமான் வாலில் தீ பத்த வைத்த கதை தவிர சிங்களவன் என்ற ஜந்துக்கள் இருப்பதை அறியாத கிணற்றுத் தவளை வாழ்க்கையே இளம் வயது அனுபவமாக பிரபாகரன் கால கட்டம் வரை பலருக்கும் இருந்திருக்க கூடும்.சிலோன் தேயிலைக் காடுகளில் வசிக்கும் தமிழர்களின் தமிழக வருகையும் கூட சராசரி தமிழர்களின் வாழ்வில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்க முடியாது.இந்திய ராணுவம் இலங்கை சென்றதும், அப்போதைய முதல்வரான கருணாநிதி இந்திய ராணுவ தளபதியை வரவேற்க செல்லாததும்,மெட்ராஸ் த்ப்பாக்கி சூடும் மெல்ல இலங்கை நோக்கிய பார்வையை அரசியல் சார்ந்த செய்தி வாசிப்பவர்களுக்கு பிரச்சினைகளின் பின்புலத்தை புரிய வைத்திருக்கும்.எம்.ஜி.ஆர் விடுதலைப்புலிகளுக்கு பெரும் பண உதவி செய்தார் என்ற இப்போதைய பொதுவான செய்தி அப்போது தேச ரகசியம்.கச்சத்தீவு? அது ஏதோ பாராளுமன்றத்தில் விவாத நேரத்தோடு முடிந்து போன விசயம். இவற்றையெல்லாம் திசை திருப்பிய தருணம் ராஜிவ் காந்தியை சார்ந்த குண்டு வெடிப்பு.

காலம் பல நிகழ்வுகளோடு நடந்து வந்திருக்கிறது என்பதை இப்போது உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.இப்போதைய நடப்பில் தமிழகத்தில் பல தரப்பிலிருந்தும் எழும் எதிர்ப்புக்குரலையும் தாண்டி வன்மம் சார்ந்த  இந்திய அரசின் செயல்பாடுகளும்,இலங்கை அரசின் அரசியல் நகர்வுகளும் முந்தைய இந்திய பாகிஸ்தானிய மனநிலையை தமிழகத்தைப் பொறுத்த வரை உருவாக்கியிருக்கிறது.அதே போல் தமிழகம் சார்ந்தும் இந்திய அரசியல் நிலைப்பாட்டை சார்ந்த வெறுப்பை சிங்களவர்கள்,வட கிழக்கு பகுதி தமிழர்கள் மத்தியிலும் உருவாக்கியிருக்கிறது.


5 comments:

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
நல்ல பதிவு, தேசியம்,பல்வேறு தேசியங்களுக்கு இடையில் இருக்க வேண்டிய உறவுஎன‌ பல பரிமானங்களைக் கொண்ட மிக சரியாக தீர்க்க வேண்டிய விடயம்.இந்தியர்_ அண்டை நாடுகள் அரசுகளின் வெளி உறவு கொள்கைகள் தனி மனித நட்பை எப்படி பாதிக்கிறது என்ற கண்னோட்டத்தில் எழுதுகிறீர்கள்.

தேசியம் என்ப்து எபடி வரையறுக்கலாம்?

நாடு,மதம்,இனம்,வர்க்கம் என பல வகைகள் பிரிந்தாலும் இது வளங்களின் பங்கீட்டுக்கு போராடுவதற்கு குழுக்களை உருவாக்குகிறது.

பாகிஸ்தானி,சிங்க‌ள‌வன்,யூதன்,.... என்னும் பிம்ப‌ம் அர‌சு சார் ஊட‌க‌ங்க‌ளால் க‌ட்ட‌மைக்க‌ப் ப‌டுகிற‌து. எப்ப‌டி இந்திய‌ ஆளும் அர‌சின் செய‌ல்க‌ளுக்கு ஒரு ச‌ராச‌ரி இந்திய‌ன் கார‌ண‌மில்லையோ அது போல் பிற‌ நாடுக‌ளிலும் சூழ‌ல் இருக்கும் என்ப‌தை ம‌ற‌ந்து விடுகிறோம்.

தேவைக‌ள் அதிக‌ரிப்பு,வ‌ளங்களின் குறுக்க‌ம் பொருளாதார நலன் சார் முரண்களை தோற்றுவிக்கிறது. இதனை தீர்க்க‌ இய‌லா அர‌சிய‌ல் த‌லைக‌ள் தேசிய‌ம் என்னும் பெய‌ரில் நாடு,ம‌த‌ம்,இன‌ம் இடையே மோத‌ல் போக்கை ஏற்ப‌டுத்துகின்ற‌ன.

அப்ப‌டியெனில் வ‌ளங்க‌ள் நிறைந்த‌ நாடுக‌ள் கொள்கை சார் முர‌ண்க‌ள் கொள்வ‌து இல்லையா என்றால் என்னைப் பொறுத்த‌ வ‌ரை தேசியங்களின் இடையே கொள்கை சார் முர‌ண்க‌ள் என்ப‌து கிடையாது!!!!!!!!!!!!!!!!.

அனைத்தும் சாமான்யர்களை வழி கெடுக்கும் அர‌சிய‌ல்,பொருளாதார‌ இராஜ‌த‌ந்திர‌( ஹி ஹி ஏமாற்று) ந‌ட‌வ‌டிக்கைக‌ளே.

"தேவைகளுக்கு ஏற்ப வளங்களை எப்படி திறமையாக கையாளுவது என்பதே சிக்கல்"

இன்னும் தொட‌ர்வீர்க‌ள் என எண்னுகிறேன்.

ந‌ன்றி

சுவனப் பிரியன் said...

சகோ ராஜநடராஜன்!

சிறந்த பகிர்வு! இரு நாட்டு அரசியல்வாதிகளும் பொது மக்களை பகடைக் காய்களாக பயன் படுத்துகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

இந்த நிலை மாறினால் இரு நாடுகளுக்குமே நல்லது.

ராஜ நடராஜன் said...

சகோ.சார்வாகன்!தனிமனிதர்களைப் பொறுத்த வரையில் அண்டை நாடுகள் பற்றிய வெறுப்புணர்வு தேவையில்லாத ஒன்றே.ஆனால் இதனை அரசு இயந்திரங்கள் மக்கள் கருத்துக்கு மாற்றாக நன்றாகவே தூபம் போட்டு வளர்க்கிறார்கள் என்பது பாகிஸ்தானுடனான உறவு மூலம் வெளிப்பட்டது.இப்பொழுது இலங்கை.

//நாடு,மதம்,இனம்,வர்க்கம் என பல வகைகள் பிரிந்தாலும் இது வளங்களின் பங்கீட்டுக்கு போராடுவதற்கு குழுக்களை உருவாக்குகிறது.// என்ற தங்களின் கூற்று மிகவும் சிந்தனைக்குரியது.பெரும்பாலான நாடுகள் சார்ந்த போராட்டங்களின் கூறுகள் இவையெனலாம்.

தேசியங்களின் இடையே கொள்கை சார் முர‌ண்க‌ள் என்ப‌து கிடையாது என்பதாலேயே இந்திய,இலங்கை,அமெரிக்க கூட்டுக்களவானித்தனமோ:)

தேவைக்கு குறைவான வளங்கள் என்பதே ஒரு பெரும் பிரச்சினை.இதில் தீர்வுக்கு எங்கே வழி?முந்தைய தின உதாரணமாக இந்திய மாநிலங்களின் மின் தடை.

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!ரம்ஜான் வாழ்த்துக்கள்.

இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சினையென்று இல்லாமல் அமெரிக்கா,ரஷ்யா,சீனா என தூண்டுதல் சக்திகள் பின்புலத்திலிருந்து இயங்குவதே சிக்கல்களுக்கான பிரச்சினையென கருதுகிறேன்.

naren said...

சார், இதுதான் உங்க தளமா. ப்ரோபைல் பப்ளிக்காக இல்லாததால், தளத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழ்மணத்தை தற்செயலாக பார்த்த போது தெரிந்த பெயராக இருக்கிறதே என்று வந்தால் உங்கள் தளமாக உள்ளது.

பதிவுகளை படித்து விட்டு பிறகு வருகிறேன்.

நன்றி