சென்ற பதிவின் சாரத்துக்கு பல கோணங்களில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தின அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.பதிவிலேயே எனது பதிலை தெரியப்படுத்தினால் நான் தாளிக்கிற வேகத்துக்கு ஒரு வேளை பின்னூட்ட பகுதி இன்னும் நீளமாக போய் விடுமோ என்ற கருதி பின்னூட்டமிட்டவர்களின் வரிசைப்படி ஒவ்வொரு கருத்துக்கும் எனது கருத்தை இங்கே பதிவு செய்து விடுகிறேன்.
இப்படித்தான் முகவுரை போட்டு முடிந்த வரை அனைவருக்கும் பதில் சொல்லி விடலாமென்று நினைத்து துவங்கினேன்.பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டே வந்து மீண்டும் ஒரு முறை மீள் பார்வை செய்து இணைத்து விடலாமேயென்று பார்த்தால் 42லிருந்து 47 ஆகி மறுபடியும் இன்று பின்னூட்டப் பகுதியை நோக்கினால் 47லிருந்து 84க்கு தாண்டி விட்டது. பின்னூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அடிப்படையில் நட்பின் காரணமாகவும் அதை விட சமூக அக்கறையின் காரணமாக பின்னூட்டக் கருத்தை தங்கள் கால நேரத்தை செலவழித்து வெளிப்படுத்துகிறார்கள் என்று உணர முடிகிறது.அதே சமயத்தில் தனி மனித தாக்குதல்களோடு எகிறுவதன் காரணமாக பின்னூட்ட விவாதத்தின் அழகியல் குறைந்து விடுகிறது. இருந்தாலும் கட்டற்ற மனக்கோபங்களின் வெளிப்பாடு என்ற அடிப்படையில் அவற்றை அங்கீகரிக்க விட்டாலும் கோபங்களுக்கூடேயான கருத்துக்களின் வெளிப்பாடுகள் கருதி அவற்றையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டிய கட்டாயமிருக்கிறது.
ஒவ்வொருவர் வெளியிட்ட பின்னூட்ட வரிசையில் பின்னூட்டக்காரர்களின் பெயர்களுடன் எனது மறு கருத்துக்கள் இங்கே ஆரம்பம்.
உண்மைகள்: தொடுப்பை பதிவில் இணைக்க இயலாமல் போய் விட்டதை பூர்த்தி செய்ததற்கு நன்றி.முன்பு தவ்ஹித் ஜமாத்காரர்கள் மதப்பிரச்சாரங்களின் மூலமாக மனிதர்களை மதமாற்ற மூளை சலவை செய்கிறார்கள் என்ற விமர்சனம் இருந்தது.இன்னும் இருக்கிறது.மதம் வேறு, ஆனால் ஒரு தனிப்பட்ட மனிதரின் மரணத்திற்கு செய்யும் உதவி மகத்தானது என்பதை உணர்வு பூர்வமாக உணர்கிறேன்.சம்பந்தமில்லாத ஒருவராக உதவி செய்யும் மனப்பான்மை இருந்தாலோ அல்லது ஒருவரின் நண்பராக இருந்தாலும் கூட தூதரக சட்ட முறைகளுக்கு சமூக அமைப்பு சார்ந்த குழுக்களின் மூலமாக அணுகுவது எளிதாக இருக்கும்.அந்த விதத்தில் தவ்ஹித் ஜமாத்தின் சமூக அக்கறைப் பணியைப் பாராட்டுவது தகும்.மதம் வேறு மனிதாபிமானம் வேறு என்ற இரு நிலைகளில் எனது பின்னூட்டத்தை காண வேண்டுகிறேன்.நன்றி
ரியாஸ்: வேகநரி எங்கேயிருந்து,எந்த காலசூழல்களின் பாதிப்பால் தமது கருத்தை வெளிப்படுத்துகிறார் என்று தெரியவில்லை.சிலருக்கு தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள இயலாத சூழல்கள் இருக்கலாம்.கூடவே இஸ்லாத்துக்கு எதிரான வாந்தியெடுக்கும் அடிப்படைக்காரணங்களும் இல்லாமல் இல்லையென்ற போதிலும் கோபங்களின் மீதான விமர்சனங்கள் எந்த நல்விளைவுகளையும் ஏற்படுத்தி விடமுடியாது என நினைக்கிறேன்.
சுவனப்பிரியன்: சகோ.நீங்கள் குறிப்பிட்ட மயான அமைதிகளில் வாழ்க்கையின் முரண்களை தாண்டி மனிதாபிமானமே வெல்கிறது.
வவ்வால்: சிங்கப்பூருக்கு மாறாக அரபு தேசங்கள் ஆபத்தான வேலை துவக்கம் அதிகாரத்தின் உச்சம் வரை வெளிநாட்டவர்களை நம்பியே இருக்கிறார்கள்.
சார்வாகன்: 1. என்ற போதிலும் சுய அனுபவங்களை பொதுப்படுத்துவது சரியாக இருக்காது என்ற போதிலும் பதிவில் சொல்லியவைகளில் பிரச்சினையின் மையப்புள்ளி இந்திய தூதரகங்ளின் செயல்பாடுகள் குறித்து என்பது அனைவருக்குமான நிகழ்வாக பொதுப்படுத்துவது சரியாக இருக்குமென்றே கருதுகிறேன்.
2.வளைகுடா நாடுகளின் பிரச்சினையே மொத்த அரேபிய நாடுகளின் சுய அனுபவங்கள் வெளிப்படாத சூழல்கள் நிலவுகின்றன என்பதே.பெரும்பாலான விமர்சனங்கள் உங்களைப் போன்ற சமூக அக்கறையாளர்களின் வெளியிலிருந்து வரும் வெளிப்படுத்தலே.
3.இங்கே பெரும்பாலோரின் சாட்சிகளே இல்லை.அப்புறம் சான்றுகளின் மீதான முடிவுகளை எப்படி தீர்மானிப்பது.கைரலி,ஆசியா நெட் போன்ற ஊடகங்கள் வளைகுடா செய்திகளையும்,பிரச்சினைகளையும் வெளிப்படுத்துகின்றன. ஒருவர் கேரளாக்காரராகவும்,வயலார் ரவியை அணுகும் தூரத்தைப் பொறுத்து பிரச்சினைகள் கேரள எல்லையோடு முடிந்து விடுகின்றன.தமிழகம் சார்ந்தும் இன்னும் அகன்ற பார்வையில் மொத்த இந்தியாவாக வெளிநாட்டில் பணிபுரிவோர் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை.
நீங்கள் சொல்லியபடி பெரும்பான்மை மக்களின் குணமே அக்குழுவின் குணமாக எடுக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதற்கு காரணமாக அரேபிய நாடுகளின் மீதான எதிர் விமர்சனங்களுக்கு காரணம் மதம் சார்ந்த சட்ட வரைமுறைகளும்,மனித உரிமைகள் குறித்த விமர்சனங்களுமே.
1.ஜனநாயகம்: இருக்கும் அனைத்து ஆட்சி முறைகளிலும் சிறந்தது ஜனநாயகமே என்றபோதிலும் ஜனநாயகம் படும்பாடு சொல்லி தீராது.அரேபிய நாடுகளில் அவரவர் குடியுரிமையுடையவர்கள் சார்ந்து மதம் சார்ந்த ஜனநாயகமும் அதனை அமெரிக்கா,மேற்கத்திய நாடுகள் உட்பட அங்கீகரித்தே பெட்ரோலிய பொருளாதாரம் உலகளாவிய அளவில் இயங்குகிறது.
2. பிறநாட்டவர் பிரச்சினையை 3ல் காணலாம்.
3.நெடுங்காலம் அகதிகளாக வாழும் தமிழ் மொழி பேசும் தமிழர்களுக்கே தமிழ்நாட்டில் குடியுரிமை வழங்கும் சிக்கல்கள் இருக்கும் போது பன்மொழி பேசும் பல நாட்டு மக்களை குடியுரியுமையுள்ளவர்களாக்குவது அரபு என்ற ஒருமுகத்தன்மையிலிருந்து பன்முகத்தன்மைக்கு தள்ளப்படும் ஆபத்துக்கள் இருக்கின்றன என அரேபியர்கள் யோசிக்க கூடும்.குவைத் போன்ற சிறிய நாட்டில் மண்ணில் பிறந்தவர்களை விட வெளிநாட்டினவர்களின் மக்கள் தொகை அதிகம்.ஆறரை லட்சம் இந்தியர்களில் நாலரை லட்சம் கேரளவாசிகளுக்கே குவைத்திகள் நாட்டை எழுதி வைத்துவிடும் சூழல் தற்போதே இருக்கின்றன.இதற்காக அரேபியர்களின் மொத்த செயல்பாடுகளும் சரியில்லையென்ற போதிலும் குறைந்தபட்சம் இந்த மண்ணிலேயே பிறக்கும் குழந்தைகளைக் கூட தங்கள் குடியுரிமையாளர்களாக்கலாம்.ஆனால் அங்கேயும் தமது இனம்,மொழி சார்ந்த ஒருமுகத் தன்மை மாறிப்போகுமே என்ற கவலைகள் அரபிகளுக்கு இருக்க கூடும்.இரண்டு வருடம் பணி புரியும் அடிப்படையிலேயே பணி ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றன.அதற்கும் மீறிய காரணம் இந்த வாழ்க்கை சரிப்பட்டுப் போவதோ அல்லது தமது சொந்த நாட்டுக்கு திரும்பி போக இயலாத சொந்த நாடுகளின் பொருளாதார இன்னபிற காரணிகளே.
பிறநாடுகள் அரபுகளுக்கும் குடியுரிமை வழங்கும் சம உரிமையின் காரணத்தாலும்,மனித உரிமைகளை மதிப்பதன் காரணத்தாலேயே அந்த நாடுகள் வளைகுடா நாடுகளை விட உயர்ந்தவையாக கருதப்படுகின்றன.
4.பணியாற்ற செல்லும் பலர் ஏமாற்றப்படுவதின் துவக்கம் நம்மூரில் ஏஜண்டுகள் துவங்கி இங்கே மொழிப்பிரச்சினை காரணமாக இயங்கும் நம்மூர் இடைத்தரகர்களே என்ற உண்மைகள் வெளியில் அதிகம் தெரிவதில்லை என்பதோடு தமது தில்லுமுல்லுகளை அரேபிகளுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களையும் கெடுத்து விட்டார்கள் என்பதே உண்மை.
5. விசா இல்லாவிட்டாலும் இருப்போம் என்ற மனநிலைக்கு பலரும் வந்து விடுகிறார்கள்.எனவே போலிசில் அகப்பட்டு சிறைவாசம் அனுபவித்து அவர்களே வெளியேற்றும் சூழல் உருவாகி விடுகிறது.உழைப்பு திருட்டு என்பதை மண்ணாரம் போன்ற கம்பெனிகள் என்று குறிப்பிட்டிருக்கிறேன். நிறுவனங்கள் விசா,வீட்டு விசா என்ற இருநிலைகளில் பிரச்சினைகளை அணுக வேண்டுகிறேன்.
6,யாரு?அரபிகள் கண்மூடித்தனமான அமெரிக்க ஆதரவு? அமெரிக்காகாரன் பெட்ரோலுக்காக அரேபியர்களுக்கு கண்மூடித்தனமான ஆதரவுன்னு மாற்றி சொல்லுங்க சகோ.
நான் சிந்திப்பதால்தான் மதவாதங்களின் அதே போல் கோவி.கண்ணனின் வாதங்களின் நிறை,குறைகளையும் முக்கியமாக நீங்கள் சார்ந்த கருத்து ஆதரவாளனாகவும்,ஆதரிக்கவும்,விமர்சனமும் செய்கிறேன்:) இங்கே ஒன்றை சார்ந்து மட்டும் நிற்க இயலாமல் கருத்துக்களின் அடிப்படையிலேயே கருத்துக்களை முன்வைக்க வேண்டியதாகிறது.
நன்றி.
வடுவூர் குமார்: உடல் உழைப்பும்,தொழிலாள தோழர்களும் பல ஆபத்துக்களை சந்திக்கிறார்கள்.இதனை அமெரிக்காவின் உயர்ந்த கட்டிடத்தில் பணிபுரியும் தொழிலாளி எப்படி இயங்குகிறார் என்பதிலும், இந்திய தொழிலாளி எப்படி தனது பணியை முடிக்க திணிக்கப்படுகிறார் என்பதிலும் வித்தியாசமிருக்கிறது. உலகம் முழுதும் கழிவுகள் செயல்பட்டாலும் இந்தியனுக்கு மட்டும் சாக்கடை அள்ளுவதற்கு நீச்சல் முறை தேவைப்படுகிறது என்பதே நமது சமூக அவலத்தை அம்பலப்படுத்துகிறது.
ரியாஸ்: சகோ.சார்வாகன் ஆரம்பித்து வைத்தாலும் வவ்வால்,நீங்க வந்த பின்பு வண்டி இன்னும் கொஞ்சம் பெட்ரோல் போட்டுகிட்டு வேகமாக பயணிக்கிறதை மொத்த பின்னூட்டங்களை வாசித்து முடிக்கும் போது உணர முடிந்தது.
மன்னராட்சியா அல்லது ஜனநாயகமா என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் அரேபிய நாடுகளின் மக்கள் என்ற போதிலும் மன்னராட்சியே நல்லது என உலக அரசியலை தீர்மானிக்கும் மேற்கத்திய நாடுகள் தீர்மானித்துள்ளன.அடிப்படை வசதிகளுக்கும் கூட போராடியே தீரவேண்டிய நிர்வாக கட்டமைப்பை ஏனைய ஆசிய நாடுகள் கொண்டுள்ளதால் இரண்டாம் தர குடிமகனாக இருந்தாலும் சுகமே என்ற மனநிலையிலேயே பலரும் இருக்கிறார்கள் என்பதை பெரும்பாலோரின் தொடர் வாழ்க்கை உறுதிப்படுத்துகிறது.
அமெரிக்காவை ஆதரிப்பதும் விமர்சனம் செய்வதும் அமெரிக்கா சார்ந்த அறிவியல் முன்னேற்றங்கள், கருத்துரிமை,சுதந்திரம் சார்ந்தும், அமெரிக்காவின் அரசியல் சார்ந்த இரட்டை நிலைப்பாட்டாலும் என்பதால் there is nothing funny:)
சார்வாகன்: மரணம் போன்ற சூழல்களில் அரபியர்களும் மனிதாபிமானத்தோடுதான் நடந்து கொள்கிறார்கள் என்பதை ரியாஸும் ஆமோதிப்பதன் காரணம் கொண்டே அரபு ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதி என்ற முத்திரை குத்திவிட முடியாது.ஆளும் வர்க்கத்திற்கும்,அப்படியே அவர்களை சார்ந்தே ஆதரவு குரல் கொடுத்தாலும் கூட இருவருக்குமுள்ள இடைவெளி மிக மிக தூரம்.ஆடோமன் துருக்கிய பேரரசை தோற்கடிக்கவும் அரபுலகை கையாள்வது எளிது என்பதுவுமே இப்போதைய உலக அரசியல் நடைமுறையாக இருக்கிறதல்லவா?
ஒருவேளை இந்த நடைமுறை சரியில்லையென்று ஈரான் சார்ந்த பெட்ரோலிய பொருளாதாரம் எப்படியிருக்கும் என்பதையும் உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.
நில பரப்பளவிலும் பொருளாதார வலிமையிலும் ஷியாக்களை விட சுன்னி இஸ்லாமியர்களே அதிகாரம் படைத்தவர்களாக இருப்பதால் நடைமுறை மாற்றங்களுக்கு தற்போது சாத்தியமேயில்லை.மத சட்டங்கள் என எதனை அடையாளப்படுத்துகிறீர்கள்?சவுதியின் ஷரியத் என்றால் நீங்கள் அணுக வேண்டிய முகவரி சகோ.சுவனப்பிரியன்:)
மற்றபடி ரம்ஜான் மாத உபவாசம் உள்பட நீங்கள் கூறும் எதுவும் இங்கே எந்த வெளிநாட்டவரையும் பாதிக்கிற மாதிரி தெரியவில்லை.கட்டாய உபவாசம் என்பது ஒருவேளை சிறைக்குள் இருப்பவர்கள் மீது திணிக்கப்பட்டாலும் கூட உபவாச காலம் முடிந்து சிறந்த உணவை தருகிறார்கள்.
இந்திய பொது சிவில் சட்டம் தேவையென்பதின் அவசியத்தை வேறு ஒரு பதிவில் அலசவேண்டியது அவசியம்.அரேபிய நாடு சார்ந்து என்பதால் மரணதண்டனை குறித்து பேசுவோம்.தண்டனைகள் அதிக பயத்தை கொடுத்தாலும் கூட உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கொலைக் குற்றங்களோ,அல்லது சீக்கிரம் பணம் பார்த்துவிடுவோம் என்ற ஆசையில் போதைப்பொருட்கள் கடத்துவதோ அதிகம் வெளிநாட்டவரே.அரேபியர்கள் குற்றம் செய்தாலும் தப்பித்து விடுவதற்கான சாத்தியங்களும்,அழுத்தங்களும் இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
பார்த்தீர்களா!இது போன்ற மரணதண்டனைக்கு எதிரான செய்திக்கும் கூட கார்டியன் போன்ற செய்திகளே துணைக்கு வருகின்றன.ஆசிய நாடுகளின் ஏடுகளும்,தூதரங்களும் வாய்மூடிகள் என்பதே பிரச்சினை.மாற்றங்களுக்கும் கூட அம்னெஸ்டி போன்ற அமைப்புக்களே குரல் கொடுக்க வேண்டியுள்ளது.ஆனால் மனித உரிமை அமைப்புக்களுக்கும் வரைமுறைகள் உள்ளன.
தொடர்ந்து நீங்களே பின்னூட்டம் போட்டதால் உங்களை மீண்டும் தொடர்கிறேன்.
சூனியம் வைக்க முடியும் என்பதை நிருபிக்க முடியுமா என்று தெரியவில்லை.ஆனால் பில்லி சூனியங்களில் நம்பிக்கையுடையவர்களாக இலங்கையர்கள் இருக்கிறார்கள.சூன்யம் வைப்பதுதான் முழு நேரத் தொழிலாக கொண்ட ஒரு சிங்களப்பெண்ணை சில வருடங்களுக்கு முன்பு நான் அறிவேன்.
வவ்வால்:வழில பார்க்கும் போதுதானே வணக்கம் சொல்ல முடியும்.இங்கே வந்து புடிக்கிறீங்களேன்னு வடுவூராரை பிடிக்கிறீங்களே பாஸ்;) சென்னையில் பீகாரி அடிபட்டுவிட்டால் 108க்கு போன் செய்வதோடு கடமை முடிந்து விட்டது மாதிரி இங்கேயும் போலிசுக்கும்,ஆம்புலன்ஸ்க்கும் போன் போடுவதோடு போலிஸ்,வேன் வரும்வரை நிற்பவர்களும்,வண்டியை ஓரங்கட்டி என்னாச்சுன்னு வந்து விசாரிப்பவர்களும் அரபிகளே!நம்மாளுக ட்ராபிக் வேக குறைவில் மெல்ல பக்கப்பார்வை பார்த்து விட்டு நகர்ந்து விடுவகிறார்கள்.நல்ல சம்பளம்,வேலையென நம்மூர் ஏஜண்டுகள்தானே செய்கிறார்கள்?இவர்களைக் கட்டுப்படுத்தும் சட்ட முறைகள் இதுவரை இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ளதா?விசா இல்லாமல் ஒருவரை வேலைக்கு வைத்துக்கொள்வது சட்டச் சிக்கல்கள் இருந்தாலும் மனிதாபிமானத்தோடு வேலை தருகி|றார்கள் என்பதை விட உள்ளூர்க்குள்ளேயே எந்த சிரமமும் இல்லாமல் வேலைக்கு ஆள் கிடைக்கிறதே என்ற முதலாளியின் சுயநலமும்,பிழைக்க வேண்டிய கட்டாயத்தில் கிடைத்ததை செய்யும் நிர்பந்த சூழலும்தான்.
வெளிநாட்டுப் பிரச்சினையின் குரல்வளையை பிடித்த ஒரே ஆள் நீங்கதான்.வெளிநாட்டு வேலைக்கு என ஆள் பிடித்துப் போகும் ஏஜண்டுகளை புடிச்சு உள்ளே போடனும்.ஆனால் இதிலும் ஒரு பிரச்சினையிருக்கிறது.மனித வள சுரண்டலை ஆசிய நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு செய்கின்றன. இந்தியாவிலிருந்து ஆட்கள் அனுப்புவது தடைசெய்யப்பட்டால் இலங்கை, நேபாளம்,பிலிப்பைன்ஸ்,இந்தோனேசியா,பங்களாதேஷ் என மாற்று வழிகள் உள்ளன என்பது அரேபிய நாடுகளுக்கான சாதக நிலை.
வவ்வால் உங்கள் பின்னூட்டத்தை தொடர்கிறேன்.
நீங்கள் எதனை அரபுக்காரனுக்கு அடிமையென சொல்கிறீர்கள்?:அரபிகள் ஒருவிதமான சுகவாசிகள்.அன்றாட நிர்வாகத்தில் யாரும் தலையிடுவதில்லை.அரசாங்க துறைகள் தவிர்த்து தனியார் துறைகளில் லாப பங்குதாரர்,லைசென்ஸ்காரர்,தூங்கும் பார்ட்னர் போன்ற நிலையிலேயே பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள்.மனித சுரண்டல்கள் செய்வது ரியாஸ் சொல்வது போல் ஆசியர்களில் குறிப்பாக இந்தியர்களே.ஒரு அரசு ஒப்பந்தத்திற்கு 400 பேர் தேவைப்பட்டால் 400 பேருக்கான தொகையை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்டு 300 பேரை வைத்துக்கொண்டு ஓவர்டைம் அடிப்படையில் நிர்வாகத்தை நடத்துவது இங்கே மட்டுமில்லை இந்தியாவில் குறிப்பாக திருப்பூர் போன்ற ஆடைத்துறைகளிலும் நிகழும் ஒன்றே.
நோன்பு பற்றி மேலே சொல்லியாகிவிட்டது.நோன்பு பற்றிய தவறான கருத்துக்கள் நிறைய இருக்கின்றன.நோன்பை நோன்பாக பின்பற்றுபவர்களாகவும்,அன்றாட உணவு நேரப்பழக்கங்களில் மாற்றங்கள் வருகின்றன என்பதோடு சிலருக்கு சின்ன சின்ன பிரச்சினைகள் ஏற்படலாம் என்பது தவிர நோன்பு கட்டாயமில்லையென்பதால் பெரும்பான்மையோருக்கு நோன்பால் பிரச்சினையில்லை என்பதே உண்மை.
பெரியார் நம்மை காட்டுமிராண்டிகள் என்று சொன்னதால் நமது சட்டமும் அதனை பின்பற்றும் முறையும் கூட நீங்கள் சொல்லும் வரைமுறைக்குள் வருகிறதோ இல்லையோ இப்போதைய பெட்ரோலிய வளங்களை அனுபவிக்கும் இன்றைய அரேபிய தலைமுறைகள் தவிர்த்து அரேபிய முந்தைய சந்ததிகள் பண்டமாற்று முறையில் இந்தியாவிலிருந்து உணவுப்பொருட்கள்,தண்ணீர்,இந்திய கரன்ஸி உட்பட உபயோகித்த காலத்துக்கும் முந்தைய காலத்துக்குப் பயணம் செய்தால் பாலவனம்,கடல் உணவு,கூடாரம் சார்ந்த படிப்பறிவுக்கும் சந்தர்ப்பமில்லாத நாடோடிக்கூட்டம் என்று சொல்லலாமே தவிர காடுகளும்,பிராண்டுவதற்கு சந்தர்ப்பமில்லாத காட்டுமிராண்டிக்கூட்டமில்லை:) நம்மூர் ஜாதி பிரிவுகள் மாதிரி பலதரப்பட்ட பழங்குடி மக்களின் குழுக்களே அரேபியர்கள்.மதம் என்ற ஒன்று மட்டுமே இவர்களை ஒன்றாக இணைக்கிறது.
ரியாஸ்: ஒரு கருத்துக்கு மாற்று கருத்து தெரிவித்தால் உடனே அந்த வர்க்கத்தின் பிரதிநிதி என முத்திரை குத்தி விடுவீர்கள் போலிருக்குது. என்பதற்கு ஏற்கனவே சகோ.சார்வாகனுக்கு கேள்வியெழுப்பியிருக்கிறேன் என்பதோடு நாம் அனைவருக்கும் கருத்துக்கள் குறித்தான சரி,தவறுகள் தெரிந்தே இருக்கின்றன.ஆனால் மதம் சார்ந்த விமர்சனங்களாலும்,அரேபிய நாடுகளின் சில குறைகளின் காரணமாக அனைத்தும் அதே வட்டத்துக்குள் வைத்தே பார்க்கப்படுகிறது.சகோ.சார்வாகன்,வவ்வாலையெல்லாம் கொஞ்ச காலம் துபாய்க்கு அனுப்பி ஒட்டகம் எப்படியிருக்குமென காட்டி விட்டால் வழிக்கு வந்து விடுவார்கள் என நினைக்கின்றேன்:)
மரணதண்டனைக்கு கையா?கழுத்தா என்ற தண்டனையே இன்னும் விவாதத்திற்குரியது.இலக்கணப் பிழையை சுட்டியமைக்கு நன்றி.
ரியாஸ்: மீண்டும் உங்கள் பின்னூட்ட தொடர்ச்சி...
எனக்கு மட்டுமல்ல பெரும்பான்மையான வளைகுடா வாசிகளுக்கு அரேபிய வாழ்க்கை தாமரை இலைத் தண்ணீர் மாதிரிதான்.கார் லைசென்ஸ் புதுப்பிக்கவும்,டெலிபோன்,மின்சார கட்டணம் நிரப்புவது தவிரவும்,சாலை விதிமுறை மீறல்களுக்கு போலிசை சந்திப்பது தவிர அவர்கள் வாழ்க்கை அவர்களுக்கு.நம்ம வாழ்க்கை முறை நமக்கு என்பதால் பிரச்சினைகள் இல்லை.பிரச்சினைக்குரியர்வர்களான குறைந்த சம்பளத்தில் இருக்கும் கடின உழைப்பாளிகளும்,வீட்டில் பணிபுரியும் வாகன ஓட்டுனர்கள்,பணிப்பெண்கள் மீதான கரிசனைத்தைக் காட்டுவதும்,இதற்காக அனைத்து தூதரகங்களும் இணைந்து செயல்படுவது மட்டுமே முக்கியம்.
நானும் சொந்த நாட்டுக்குப் போய் விடவேண்டுமென்று ஒவ்வொரு முறை லீவிலும் வெள்ளோட்டம் விடுவேன்.முடியாமல் போய் திரும்பி வந்து விடுவேன்.எனவே சகோ. இதில் மன்னிப்பு என்ன வேண்டிக்கிடக்கு:)
வவ்வால்:அரபிக்காரனை விட சகோ.ரியாஸே பொங்குகிறாரே என்று சந்தோசப்படுங்கள்.இது போன்ற திறந்த விவாதங்களையெல்லாம் அரேபியர்களிடம் செய்து விட முடியுமா என்ன?
அரபிக்கு கொடி பிடித்ததே நாந்தான்.சகோ.ரியாஸ் என்னோடு ஒத்துக்கு மத்தளம் போடுகிறார்.குடியுரிமையும்,ஓட்டு போடும் சந்தர்ப்பத்தை அரேபிய நாடுகள் தந்தால் மகிழ்ச்சிதான்.ஆனால் அரபி நம்மை கட்டிப்போட்டு வைத்துள்ளான் என்பதை விட சம உரிமைகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லைன்னுதானே வாழ்க்கையை பெரும்பாலோர் நடத்துகிறார்கள்.
இந்த வரிகளை வவ்வாலுக்கும்,ரியாஸ்க்குமான கேள்வியாக முன் வைக்கிறேன்.முள்ளிவாய்க்காலுக்குப் பின்பான விடுதலைப்புலிகள் பிரச்சினைகள் முடிந்து இலங்கையில் சமாதானமும், வேலை,நிலம்,தொழில், வியாபாரம் போன்றவற்றிற்கான சந்தர்ப்பங்கள் இலங்கையில் யாருக்கு மறுக்கப்படுகிறதோ இல்லையோ ஆனால் சிங்களவர்களுக்கு மறுக்கப்படுவதற்கான சூழல்கள் இல்லையென்றே நினைக்கின்றேன்.மூன்று மாத லீவில் போய் விட்டு ஒரு சிங்களவர் மீண்டும் இங்கேயே திரும்பி வந்து விட்டார்.இன்னுமொருவர் லீவில் போய்விட்டு UPS கூரியர் சர்விஸில் வெயிலில் அலுவலகம் அலுவலகமாக அலைகிறார்.இவர்கள் திரும்பி வருவதன் காரணம் என்ன?
சுவனப்பிரியன்:சகோ.நீங்க பின்னாடி வேதங்கள் பற்றியெல்லாம் நீண்ட பின்னூட்டங்கள் போட்டுள்ளதால் அதற்கும் சேர்த்தே இங்கே பதில் சொல்லி விடுகிறேன்.கூடவே வவ்வால் வனவாசம் செய்து ஒன்றே குலம்!ஒருவனே தேவன் என்று வள்ளலாரை தேடுவோம் என்கிறார்.இந்தியாவிடம் பல குறைகள் இருந்தாலும் கூட அனைத்து கருத்துக்களையும் உள் வாங்கிக்கொள்ளும் பன்முகத்தன்மை கொண்டது என்பதாலேயே பல இன,மொழி, கலாச்சாரங்களை உள்வாங்கிக்கொண்டு நகர்கின்றன.அது ஆத்திகமாக இருந்தாலும் சரி,நாத்திகம் சார்ந்த சிந்தனைகளாக இருந்தாலும் சரி.ஆனால் இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக இந்திய பாரம்பரியமாக இருப்பது பஞ்ச பூதங்களாக இருப்பது நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் என ஐந்து இயற்கை சக்திகளையும் வணங்குவது.இதன் அடிப்படையில் அவரவர் கற்பனைக்கேற்ப சாமிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டன.இதில் வர்ணாஸ்ரமும் வந்து குட்டையை குழப்பி விட்டது இந்து மதத்தின் சோகம்.
இஸ்லாத்தை அரேபியர்கள் வலுக்கட்டாயமாக இங்கே திணிக்காமல் இருப்பது போல் மதம் சார்ந்த கருத்து திணிப்புக்களை பொதுவில் பதிவுலகில் வைக்காமலிருந்தாலே இஸ்லாமியம் மீதான எதிர் விமர்சனங்கள் பாதி குறைந்து விடும் என்பது என் கணிப்பு.சரியானவற்றை அவரவர் சுயவிருப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் இணக்கம் மட்டுமே ஒன்றிணைந்த வாழ்வுக்கு பயன்படுமென்று நினைக்கின்றேன்.
வவ்வால்:பாஸ்!சகோ.ரியாஸ் உங்களிடமும் சகோ.சார்வகனிடமும் விவாதம் செய்து கொண்டுதானே வருகிறார்.அப்புறம் ஏன் எகிறுறீங்க:) பொது விவாதத்தில் யாரும் யாருக்கும் பதிலோ,கேள்வியோ எழுப்பலாம்தானே?நான் இப்ப கவிச்சையெல்லாம் விட்டுட்டு சாம்பாரும், தயிரும் மட்டுமே சாப்பிடுகிறேன்.இப்ப நான் சாம்பாரா?பழைய கவிச்சி இன்னும் என்னிடம் வீசுமா?முதலில் அதை சொல்லுங்கோ:)
மனித வள சுரண்டல்களை ஊக்குவிப்பது இந்தியர்கள் முக்கியமாக சேட்டன்கள் என்று ரியாஸ் சொல்ல வந்ததை நீங்கள் தவறாக அடையாளப்படுத்திக்கொண்டீர்கள் என நினைக்கின்றேன்.
ரியாஸ்:வரலாறுகளை சரியாகத் தெரிந்து கொண்டிருந்தால் ஏன் குளறுபடிகள் இந்தியா,இலங்கை உடபட.
வவ்வால் & ரியாஸ்: எனது மன அலைகள் நண்பர் வவ்வாலுடன் இணைந்து செல்வதாலும் அவரது பதிவுகள், பின்னூட்டங்களின் பன்முகத் தன்மையால் எப்பொழுதுமே எனது கருத்துக்கள் நண்பர் வவ்வாலை சார்ந்தே இருக்கும்.சகோ.ரியாஸ்! இங்கே நீங்க சரியாக விவாதிப்பதால் நான் உங்கள் பக்கம்.
சார்வாகன்:சகோ.உங்கள் சமூக அக்கறை நான் உணர்ந்த ஒன்றே.குற்றம் செய்யலாம்.ஆனால் குற்றத்திற்கு குறைவான தண்டனை தரலாமே என்று மனிதாபிமானத்தாலும் இந்திய மனப்பான்மையிலும் கருத்து சொல்கிறீர்கள். குற்றங்களுக்கு கடின தண்டனை,கடின வாழ்க்கையென்று தெரிந்தும் அரேபிய நாடுகளுக்கு செல்வது நமது நாட்டின் பொருளாதார நிலையாலும் ,ஏஜண்ட்களின் பொய்யான வாக்குறுதி நம்பிக்கைகளாலும்,கடல் கடந்தும் திரவியம் தேடும் பழமொழியின் சொந்தக்காரர்களாய் இருப்பதால் மட்டுமல்லாமல் இன்று மனித நகர்வுகள் கிராமப்புறத்திலிருந்து நகரத்துக்கும், நகரத்திலிருந்து பன்னாட்டுக்கும் என்பதோடு,போர்,மனித அடக்குமுறை என்றும் நீண்ட வரிசைப்படுகிறது.பிரச்சினைகள் பல இருந்தாலும் அரேபிய நாடுகள் ஆசிய நாடுகளின் அன்னிய செலவாணியை ஓரளவுக்கு தாங்கிப்பிடிக்கிறது என்பதும் உண்மை.இந்திய கடனைக் கட்டுவதில் வளைகுடாப் பணங்களும்,இன்று ராஜபக்சே உல்லாசமாகவோ,நாட்டின் நலன் கருதியோ செல்லும் பயணங்களில் வளைகுடாக்களில் வீட்டில் பணிபுரியும் பெண்களின் சல்லிக்காசுகளும் ஒட்டியுள்ளன என்பது கசப்பான உண்மை.
நான் யார் என்ற கேள்வியை நோக்கிப் போகிறீர்களா? பார்த்து!ஆத்திகம் வந்து அமுக்கி விடப் போகிறது:)
தனிமரம்:ஒற்றை வரியில் முடித்து விட்டீர்களே! வவ்வால்,சார்வாகன்,ரியாஸ்,சுவனப்பிரியனைப் பாருங்க !பின்னாடி வேகநரி, வருணெல்லாம் வருகிறார்கள்!எப்படி விவாத குஸ்தி போடுறாங்கன்னு வேடிக்கையாவது பாருங்கள்.வருகைக்கு நன்றி.
சலாலுதீன்:ஆந்திர சகோதரருக்கு எனது அனுதாபங்கள்.அரேபிய நாடுகளில் பெரும்பாலும் லஞ்சம் இல்லையென்ற போதிலும் நீங்கள் குறிப்பிடும் லஞ்சம் சுத்தமாக மருத்துவமனைகளில் இல்லையென்பது இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.மேலும் நர்ஸுகளாக பணிபுரியும் இந்திய சகோதரிகளின் உழைப்பும்,திறமையும்,நோயாளிகளை கவனிக்கும் முறையும் இந்தியர்கள் பெருமைபட வேண்டிய விசயம்.இதனை உங்கள் மூலமாக பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் சகோ.
ஹேமா: இழுபறி கருத்துக்கள் விவாதங்களை ஊக்குவித்து மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ள உதவுகின்ற போதும் இணக்கமான உறவுக்கு அவை துணை செய்வதில்லை என்பது எனது இதுவரையிலான பதிவுலக அனுபவம்.உங்களை நினைக்கும் போது தாயக சமரசங்கள் நோக்கிய நினைப்பு வருவதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
சுவனப்பிரியன்: சகோ.சார்வாகன் நான் யார் என்ற கேள்வியில் இரண்டு பொருள் ஒழிந்து கொண்டிருக்கிற போதும் நீங்க ரிக் வேதம்,யஜூர் வேதமெல்லாம் ஓதி அவரை திசை திருப்பி விடுவீர்கள் போல இருக்குதே!போட்டிக்குன்னு இருக்கும் ஒரே ஆளையும் ஜெயிச்சிட்டா நிரந்தரமாக வென்று விடலாமென்று நினைக்கிறீங்களா சகோ! கண்ணுக்குத் தெரியாமல் நிறைய பேர் சுத்திகிட்டிருக்காங்களாக்கும்:)
வேகநரி:நீங்கள் இந்த பதிவை பார்வையிட்டதுக்கு நன்றி. அரேபியர்களுக்கும்,இஸ்லாமியத்திற்கு எதிராகவே குரல் கொடுப்பது ஒரு வித பாஸிச தன்மையே என்பேன்.அரேபிய மனித உரிமை மீறல்கள் பற்றிய எதிர்ப்பு சிந்தனையும்,அரேபிய நாடுகள் நிர்வாகத்தில் எப்படி சிறந்து விளங்குகிறார்கள் என்ற மாற்றுப்பார்வை கொள்வதன் மூலமே பிரச்சினைகளை சரியாக அலசமுடியும்.அரேபியர்களா வா!வா என்று அழைக்கிறார்கள்?விட்டில் பூச்சிகளாய் போய் ஒட்டிக்கொள்வதே ஆசிய நாடுகளின் நிர்வாக கோளாறுகளால் ஏற்படும் அவலங்களால்தானே!
மொத்த ஆசிய நாட்டுக்காரர்களுக்கும் குடியுரிமை கொடுத்து விடுவது எவ்வளவு சாத்தியமான விசயமென்று தெரியவில்லை.இதற்கு மாற்று வழிகள் இருக்கிறது.போ உன் நாட்டுக்குப் போ!எங்கள் நாட்டுப் பணிகளை நாங்களே செய்து கொள்கிறோம் என்று அனைவரையும் துரத்தி விடுவது.அந்தளவுக்கு அரேபியர்கள் சொந்த வேலைகள் செய்வதற்கு பொருளாதார உலக மாற்றங்கள் வந்தால் நிகழக்கூடும்.தற்போதைய சூழலில் காபிர்களுக்கு எதற்கு குடியுரிமை தரவேண்டுமென அரபி மொழி பேசும் ஏனைய அரேபிய வசந்தக்காரர்களைக் கொண்டு வந்தால் உட்பூசல்களை வளர்த்து வளைகுடா நாடுகளை ஒரு வழியாக்கி விடுவார்கள்.இதனையெல்லாம் அமெரிக்காகாரன் யோசிக்காமலா இருப்பான்?பிரச்சினைகளின் மையப்புள்ளியான வலிமை யில்லாத ஆசிய நாடுகளின் தூதரகங்களையெல்லாம் அம்போன்னு விட்டு விட்டு அரபியர்களை குறை கூறுவதில் ஒரு பயனுமில்லை.
வவ்வால்:ஒருவரை புண்படுத்த வேண்டாமே என்று மன்னித்துக் கொள்ளுங்கள் என்பது பெரிய மனுசத்தனம்.உடனே தெளிவா பேசுவோம்ங்கிறீங்க:)
சுவனப்பிரியன் தமது மார்க்கம் சார்ந்து சிந்திப்பதால் ஏனைய மதங்களையும் ஒப்பிடும் தன்மைக்கான தேடல் இயற்கையாக வந்து விடும்.முன்பு பைபிளின் பழைய ஏற்பாட்டையும்,இந்து மத சடங்கு முறைகளையும் ஒப்பிட்டு ஒருவர் கருத்து டேப் ரெகார்டர் வெளியிட்டிருந்தார்.எனவே தேடலில் இவை இயல்பான ஒன்றே.
மோடி எப்ப பிளாக்கர் ஆனார்:)
துளசி டீச்சர்:பல நாடுகளையும் சுற்றுவதால் உங்களின் சிந்தனை எவரெஸ்ட் மாதிரி உயரத்தில் போய் உட்கார்ந்து கொள்கிறது டீச்சர்.
மரணம் தேச எல்லைகள் கடந்து மரியாதையோடு பார்க்கப்பட வேண்டிய விசயம்.அதிக மனித வள வரத்தால் இந்தியாவுக்கு இது புரிவதில்லை. முக்கியமாக சென்னை போன்ற நகர்ப்புறங்களுக்கு.
உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி டீச்சர்.
மாயாவி: இந்தியப் பிரச்சினைகளின் மொத்தக் கலவையும் கூட அரேபிய நாட்டுப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் சுகமான வாழ்க்கை என்று பலரையும் தோன்ற வைக்கிறது.
//பாம்பே சொந்த நாட்டில்.பீகார்காரன் வேலை செய்ய முடியல... அது கேக்க துப்பு இல்லாதவங்க... அடுத்த நாட்டு சட்ட திட்டத்தை பத்தி பேச என்ன யோக்கியதை இருக்கு.//
பதில் சொல்ல இயலா கேள்வி!
வருண்:தூரத்துல உட்கார்ந்து கொண்டிருந்தாலும் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு கருத்து சொல்வதற்கு நன்றி.கூடவே மொத்த பின்னூட்ட வாசிப்பில் வேகநரிதான் உங்களை மெண்டலென்று வம்பிழுக்கிறாரென்று பின்பு அவரை ஒரு புடி புடிக்கலாமென்றிருந்தேன்.மறுவாசிப்பில் மல்லுக்கட்டுக்கே பிள்ளையார் சுழி போட்டதே நீங்கதானா!அவ்வ்வ்வ்:(
இருந்தாலும் வேகநரிக்கு உங்களுக்கான பதிலை பின்பு சொல்லிக்கிறேன்.
நீங்க சொல்வது போல் நாமே விரும்பியோ அல்லது போன பின் விரும்பாமலோ அங்கேயே லட்சக்கணக்கிலிருந்து கொண்டு அரேபியர்களை திட்டுவது உகந்ததல்ல.பிரச்சினைகளை நாட்டு வெளியுறவுத்துறைகள், தூதரகங்கள் சார்ந்து தீர்க்க வேண்டிய பிரச்சினை.அதற்கான முன்னெடுப்புக்கள் இல்லையென்பதுவே பிரச்சினைகளுக்கெல்லாம் அடிப்படை.
கோவி.கண்ணன்: சுவனப்பிரியனின் பின்னூட்டத்திற்கான இணைப்பை நான் க்ளிக்கவில்லை.ஒருவேளை வழக்கமான உங்களுக்கான ஜல்லிக்கட்டாக இருக்குமேயென்று விட்டு விட்டேன் போலிருக்குது:) விட மாட்டேனே!மறுபடியும் உங்கள் தளம் வந்து வாசித்து விடுகிறேன்.போதுமா?
சிங்கப்பூர்,மலேசியா பற்றி நீங்கள்தான் சொல்ல வேண்டும். அரபுநாடுகளிலிருந்து இறந்த உடலை பெற கண்ணீர் விடும் பெற்றோர்கள், உறவினர்கள் யாரை அணுக சொல்கிறீர்கள்?காசு வாங்கிக்கொண்டு விற்று விட்ட ஏஜண்டிடாமா?அல்லது நேரடியாக இந்திய வெளியுறவுத்துறையிடமா? வெளியுறவுத்துறையை அணுக வேண்டிய சிரமங்களை நான் இன்னும் விளக்க வேண்டுமா உங்களுக்கு?குற்றவியல் மரணமோ, சாதாரண மரணமோ இரண்டு நாட்களில் எப்படி இயல்கிறது என்பதை தனிப்பதிவாக சொல்லவும்.சிலருக்கு பயன்படவும் பொது விழிப்புணர்வுக்கும் பயன்படும். இறந்தவரின் உடலை பார்க்கவும்,அவரவர் மதம் சார்ந்த சடங்குகளை செய்ய இங்கேயும் ஒரு தடையும் இல்லையே.
அப்புறம் கழிவறை குறித்த உங்கள் மீதான விமர்சனங்களை இங்கே குறிப்பிடலாமா என்று நினைக்கின்றேன்.நான் என்னமோ கடவுள் பாதி மிருகம் பாதி பாடலின் கண்டுபிடிப்பே வைரமுத்துன்னு நினைச்சிட்டிருந்தேன்.பழைய பாடல்களை ரசித்துக்கொண்டிருக்கும் போது இதன் கருவே கண்ணதாசனிடமிருந்து வைரமுத்து இரவல் வாங்கியதென்று அப்புறம்தான் தெரிந்தது.அதே மாதிரி கழிவறை கருத்துக்கே சொந்தக்காரர் நீங்கள் அல்ல.தசாவதாரத்தில் கமல் அசினோடு ரயிலில் பேசும் போதான வசனத்தின் கரு அது.மணிரத்னத்துக்கு பாம்பே படத்துக்கு எதிர்ப்புக் கொடி காட்டியது மாதிரி இஸ்லாமிய பதிவுலக நண்பர்கள் நியாயமா பார்த்தா கமலுக்குத்தான் கண்டனம் தெரிவிச்சுருக்கனும்.அசின் கையில கண்ணன் சிலை இருந்ததால பாவம் கோவி.கண்ணனை பதிவுலக நண்பர்கள் பிலு பிலுன்னு பிடித்துக்கொண்டார்கள்:)
எல்லா நாட்டிலும் தனிமனித வக்ரம் தான் குற்றம் செய்ய தூண்டுகிறது என்பதோடு சொந்த நாட்டுக்காரனை பாதுகாத்து பாதிக்கப்பட்டவர்களை கைவிடுகிறார்கள் என்பதோடும் உடன்படுகிறேன்.சிங்கப்பூரில் பணிப் பெண்னை துன்புறுத்தினால் 7 ஆண்டு வரை சிறை தண்டனையென்றால் இங்கே தவறு செய்தவன் தப்பித்து விடுவதன் காரணம் பணிப்பெண்களுக்கு உடன் உதவிக்கரம் நீட்டும் சந்தர்ப்பங்களோ, அமைப்புக்களோ இல்லாதது மட்டுமல்ல சிங்கப்பூரில் பணி செய்து விட்டு அரேபிய நாட்டுக்கு வரும் ஆசிய தூதர்களால் கூட இதுமாதிரியான தவறுகள் நிகழாவண்ணம் தடுக்க முடிவதில்லை என்பதே.
சிங்கப்பூர் சார்ந்த பிரச்சினையிலும் கூட அரேபிய ஒப்பீடு உங்களை அறியாமலே வருவதற்கு நான் என்ன செய்ய இயலும்?நான் முடிந்த வரை பக்க சார்புகள் இல்லாமல் பிரச்சினைகளின் மையப்புள்ளிகளை நோக்கியே செல்ல விரும்புவது வழக்கம்.இந்த முறை அரேபிய சார்பு நிலை மாதிரி தெரிந்தால் அதுவும் எனது பிழையல்லவே:)
ஈஸி காலண்டர்:சீரியஸா பேசிகிட்டிருக்கும் போது காலண்டர் விற்கிறீங்களே!அப்புறமா வாங்கிக்கிறேன்.நன்றி.
சார்வாகன்: பதிவு போட்டுவிட்டு பின்னூட்டப்பகுதியை திறக்கவே எனக்கு பயம்.இன்றைக்கு திறந்தால் நீங்க சொல்வது போல் அனல் பறப்பது போல் 42லேருந்து 47 வரைக்கும் தர்க்க சாஸ்திரிகள் வவ்வாலும்,வருணும் என்னமோ பேசிகிட்டிருக்காங்க.வரிசைப்படியா ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் பதில் சொல்லிகிட்டு வாரேன்.பின்னூட்டத்துல இணைப்பதற்கு பதிலா இன்னுமொரு பதிவாக இணைத்து விடுகிறேன்.
வேகநரி: உங்களைத்தான் ஒரு பிடி பிடிக்கலாமென்றிருந்தேன்.ஆனால் வருண் தான் உங்களை வம்புக்கிழுக்கிறார் என்பதை பின்புதான் உணர முடிந்தது.நண்பர் வருணிடம் இதுவரை நான் உணர்ந்ததில் துவக்கம் முதலே தமிழும் ஆங்கிலம் கலந்தே தனது பதிவுகளையும், பின்னூட்ட, மறுமொழிகளையும் வெளிப்படுத்தி வருகிறார்.இது அவரது பாணியென்று விட்டு விடலாமே!அமெரிக்காவிலிருந்து கொண்டு என்ன ஆங்கில மேதாவித்தனத்தை நம்மிடம் காட்டி விடப்போகிறார்!அவர் செய்யும் அதே தவறை நீங்களும் திரும்ப செய்வதற்கு இருவருக்குமே எனது கண்டனங்கள்.விவாதங்களின் அடிப்படையில் மோதுவதற்கு நிறைய வார்த்தைகள் இருக்கின்றன.தனிமனித தாக்குதல்கள் வேண்டாமே!எத்தனை தாக்குதல் ஏவுகணைகளை கண்டது வருண் நரி:) உங்க சிலுசிலுப்பையெல்லாம் அவர் ஊதி தள்ளி விடுவார்.அப்படித்தான் வருண் தொடர்ந்து பதிவுலகில் பயணிக்கிறார்.
வவ்வால்:இப்பத்தான் வேகநரிக்கு பதில் சொல்லிகிட்டிருந்தேன்.இப்ப நீங்க எடுத்துக்கொடுக்கிறீங்களாக்கும்.சுதி வாசிக்க இந்தக்கடைதான் உங்களுக்கு வசதியா இருக்கும் போல இருக்குது இல்ல:) உங்களுக்கும் வருணுக்கும் ஏழாம் பொருத்தம்தான் போங்க:)
வாஞ்சூர்!நான் உட்கார்ந்து மாங்கு மாங்குன்னு பதில் சொல்லிகிட்டிருக்கேன் .நீள நீளமா நீங்க கதை சொன்னா நான் எப்ப பதில் சொல்லி முடிப்பது:)பதிவு சார்ந்து பேசலாமே!இல்லாட்டி ஓய்வாக இருக்கும் போது உங்களோடு கச்சேரி வைச்சுக்கலாம்.எப்படி வசதி?பின்பு மீண்டுமொரு முறை உங்கள் பின்னூட்டங்களை ஆழ்ந்து வாசிக்கிறேன்.நன்றி.
இக்பால் செல்வன்:அரேபிய நீதிமன்றங்கள் ஒழுங்காகவே செயல்படுகின்றன.நம்மூர் மாதிரி காவல்துறையில் கூட பிரச்சினைகளை அரேபியர்கள் சார்ந்து திசை திருப்பி விடலாம்.ஆனால் நீதிமன்றங்களில் முடியாது.குற்றங்களின் அடிப்படையில் தண்டனை அனைவருக்குமே சமமே.ஆனால் பணிப்பெண்கள் சார்ந்து நீதிமன்றம் வரை எடுத்து செல்லும் சூழல்களும்,அந்தப் பணிப்பெண்ணுக்கான பாதுகாப்புக்கான சூழல்களும் இல்லாத காரணத்தால் நீதிமன்ற படிக்கட்டுக்களை பெரும்பாலான பிரச்சினைகள் எட்டுவதில்லை.பணிப்பெண்களின் புகலிடம் ஒன்று தெரிந்தவர்கள் மூலமாக வெளியே ஓடிவிடுவது அல்லது தூதரகங்களை அணுகி அங்கேயும் சிரமத்தை அனுபவித்தோ அல்லது சிறைத்தண்டனை அனுபவித்தோ சொந்த நாட்டுக்கு சென்று விடுவது.இலங்கையில் குற்றம் செய்தவர்கள் பட்டியலில் அங்கேயும் குற்றவாளிகள்.இது நல்லாயிருக்குதுல்ல!
நல்லவைகளை பாராட்டும் போது மகிழும் மனநிலை தவறுகளை சுட்டிக்காட்டும் போது இல்லையென்பதும் மாற்றிக்கொள்ளக்கூடிய மனோபாவம் இல்லையென்பது உண்மையே.
இஸ்லாமியர்கள் யாரும் மார்பிள் கல்லறை கட்டுவதில்லை.நான் சொன்னது மத அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்ட வெளிநாட்டுவாசிகளுக்கான கல்லறை.இங்கே மெழுகுவர்த்தி உட்பட வைத்துக்கொள்ளலாம்.எந்த குறுக்கீடுகளும் கிடையாது.சவுதி நிலவரத்தை சகோ.சுவனப்பிரியனிடம்தான் கேட்க வேண்டும்.
ஹெவி வெயிட் சாம்பியன்கள் இனி மோத வருவதால் பின்னூட்ட பதில் பகுதி இனியும் தொடரும்.