Followers

Sunday, March 24, 2013

மாணவ சகோதர சகோதரிகளே!உங்கள் நண்பர்கள் யார்?

தமிழகத்தின் மீண்டும் ஒரு முறை புரட்சி மாற்றத்துக்கு வித்திட்ட மாணவ தோழமைகளுக்கு நன்றியோடு மீண்டும் கல்வியில் கவனம் செலுத்தும் கால அறிக்கை வந்துள்ளது. மாணவர்கள் போராட்டத்தில் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்ட மனிதாபிமான உணர்வுகளும்,பன்னாட்டு அரசியல் பற்றிய தெளிவும் இருப்பதை ஊடக நேரலைகளின் மூலம் உணர முடிகிறது.அதே நேரத்தில் உண்ணாவிரத போராட்ட மாணவர்களின் தனிக்கருத்துகளில் பல மாற்றுக்கருத்துக்களும் எதிரும் புதிருமாகவும்,இடது வலதுசாரி சித்தாந்த வாசங்கள் காணப்பட்டதன் விளைவாக இந்தக் கருத்துக்கள் சில மாணவர்களுக்குப் போய்ச் சேரவேண்டுமென்ற நோக்கில் பதிவு செய்யப்படுகிறது.

.ஈழப்பிரச்சினையைப் பொறுத்த வரையில் இந்திய மத்திய அரசின் ஏமாற்று வித்தைகளை போராட்டக் கோரிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஐ.நா.மனித உரிமைக்குழுவில் தனது ஆதரவாளர்கள் யார்,ஆதரவின்மையாளர்கள் யார் என்று தெரிந்து கொள்வதற்காகவே இலங்கை வாக்கெடுப்பை இந்தியாவின் ஆலோசனையையும் மீறி வற்புறுத்தியது.இந்தியா இலங்கை ஆதரவு, ஆதரவின்மையிலிருது தப்பிப்பதற்காகவே மொத்தமாக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு விரும்பியது.இலங்கை அரசு தான் தோல்வியடைவோம் என அறிந்தும் தீர்மான ஆதரவு நாடுகள்,தமது ஆதரவு நாடுகளை அறிந்து கொள்ள விரும்பியது.இலங்கை அரசுக்கு மட்டுமல்ல ஈழத்தமிழர்களுக்காக போராடும் ஒவ்வொருவரும் தமிழர்களின் ஆதரவாளர்கள் யார், ஆதரவின்மையாளர்கள் யார் என்று அறிந்து கொள்வது முக்கியம்.

அமெரிக்க தீர்மான ஆதரவு நாடுகள்
 
 இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்த நாடுகள்

நடுநிலை நாடுகள்
 பட உதவி யின் இணைய தேடல்: rste.org

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை காலம் தொட்டு இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பல ஊடகங்களும்,தமிழ் உணர்வாளர்களும்,இணைய கருத்துப் பரிமாறல்களும் செய்து வந்தன.என்ற போதிலும் மொத்த தமிழர்களையும் உலகையும் உலுக்கவில்லை.

போருக்குப் பின் ஒப்புக்கு சப்பாணியாக பான் கி மூன் இலங்கை பயணம் செய்தார். 2009ல் ஐ.நா மனித உரிமைக்குழு தீர்மானத்தை அனைத்து நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன.இதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது.இதில் திருப்தியடையாத மனித உரிமைக்குழுக்களின் அழுத்தங்களின் காரணமாக 2011ல் Report of the Secretary-General's Panel of Experts on Accountability in Sri Lanka என முவர் குழுவை அமைத்தார்.



மூவர் குழுவின் உறுப்பினர்கள்

1. இந்தோனேசியாவின் முன்னாள் அட்டார்னி ஜெனரலும்,மனித உரிமைக்குழு தேசிய ஆணையத்தின் உறுப்பினர மர்சூகி தருஸ்மன்- Marzuki Darusman,

2. தென் ஆப்பிரிக்காவின் நீதிபதியும் டெஸ்மன்ட் டூடுவின் சமாதான நிறுவனத்தின் நிர்வாக தலைவர் யாஸ்மின் சூகா - Yasmin Sooka

3/ அமெரிக்காவின் மிக்ஸிகன் சட்டப் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீவன் ஆர். ராட்னர் - Steven R. Ratner

இம் மூவரின் இலங்கை போர்க்குற்ற அறிக்கை பக்க சார்பில்லாமல் இலங்கை அரசு செய்த போர்க்குற்றங்களையும்,விடுதலைப்புலிகளின் தவறுகளையும், பொது மக்களை பாதுகாப்பு கேடயங்களாக பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்தது.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகளையும்,விடுதலைப்புலிகள் மீதான சிறுவர்களையும் போரில் பயன்படுத்தியது போன்ற குற்றங்களையும் இதன் அடிப்படையில்தான் துவங்கியிருக்க வேண்டும்.மாறாக இலங்கை அரசு இம்மூவர் குழு ஐ.நா அறிக்கையை தருஸ்மன் அறிக்கையென்றும் தனது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் நிராகரித்தது.இதனிடையே தமிழகத்தில் கட்சிகளின் நலன் சார்ந்த ஆனால் தமிழ் உணர்வோடு ஈழமக்களுக்கான குரல்கள் ஒலித்தன.

தி.மு.க அ.தி.மு.க பங்காளிச் சண்டைகளுக்கும் அப்பாலும்,திருமாவளவன் தி.மு.க சார்பு குரலுக்கு அப்பாலும் ஈழப்பிரச்சினை பற்றிய கவலைகள் இருக்கவே செய்தன.பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத் தாயகம் என்ற பெயரில் ஐ.நா.மனித உரிமைக் குழுவுக்குள் சென்றதைப் பாராட்ட வேண்டும்.ராமதாஸ் குழுவினரின் சாதி பிற்போக்குத்தனம்,ஈழ ஆதரவு இரண்டையும் வெவ்வேறு தராசுகளில் எடை போடுவது நல்லது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

நிரந்தர ஈழத்தமிழர்களின் குரலாக வை.கோ,நெடுமாறன் போன்றவர்களின் குரல் ஒலித்தாலும் அதற்கான வலுவான மக்கள் பலமில்லாமல் இருந்தது.
புதிய குரலாக சீமான் உருவாகினாலும் கூட அவரது உணர்ச்சி வசப்படல்,தெளிவான சிந்தனையற்ற தன்மை அல்ட்ரா போராளியாக மட்டுமே பிரதிபலித்தது.மே 17 இயக்க இளைய தோழர்கள் திருமுருகன்,உமர் போன்றவர்களின் உலக அரசியல் தெளிவு நம்பிக்கை அளித்தாலும் கூட மெரினா மெழுகுவர்த்தி போராட்டங்கள் வரவேற்பை பெற்றாலும் கூட மக்களிடையே பரவலாக போய்ச் சேரவில்லை.பத்திரிகையாசிரியர் அய்யநாதன் போன்றவர்கள் ஈழத்தமிழர்களின் பிரச்சினையை ஊடகங்கள் மூலமாக பேசி வந்தனர்.சென்ற பாராளுமன்ற தேர்தலின் காலத்தில் கவிஞர் தாமரை இந்தியா மீது அறம் பாடினார்.புலம் பெயர் தமிழர்கள் அமைப்பு ரீதியாகவும்,மனித உரிமைக்குழுக்களின் துணையோடும், உண்ணாவிரதம், ராஜபக்சே லண்டன் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் என பல வகையிலும் போராடியும் கூடஇலங்கை அரசு இந்தியா,சீனா,ரஷ்யா கவசங்களோடு அனைத்து அழுத்தங்களையும் உலக அரங்கில் உதாசீனப்படுத்தி வந்தது.ஒருங்கிணைந்த தன்மையற்ற நிலையில் தமிழர்களிடம் ஓரளவுக்கு சோர்வும் கூட காணப்பட்டது

இலங்கைப் பிரச்சினையை உலகம் திரும்ப பார்க்க வைத்ததின் பின்புலமாக புலம் பெயர்கள் தமிழர்கள் இருந்திருக்க கூடுமென்றாலும் கூட இலங்கையின் போர்க்குற்ற மனித உரிமை மீறல்களை.உலக அரங்கில் கொண்டு வந்ததின் முக்கிய பங்கு சேனல் 4 தொலைக்காட்சிக்கும்,அமெரிக்கா ஐ.நா மனித உரிமைக்குழுவில் இலங்கை மீதான தீர்மானம் கொண்டு வந்ததுமே.

இதனைத் தொடர்ந்து திருடனையே நீதிபதியாக நியமித்த கதையாக கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும்- LLRC என்ற பெயரில் இலங்கையே தன்னைத் தானே பரிசோதித்துக்கொள்வதாக அறிவித்ததன் அடிப்படையிலேயே இப்பொழுது இரண்டாம் முறையாக அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேறியுள்ளது. அமெரிக்காவின் தீர்மானம் நான்கு வரைவு மாற்றங்கள் செய்யப்பட்டு நீர்த்துப் போய் இருந்தாலும் கூட அமெரிக்க தீர்மானத்தை ஒட்டியே மேலும் தமிழர்கள் நகரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.சீனா,ரஷ்யா போன்ற நாடுகள் ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்து உதவப் போவதில்லை.

இப்பொழுது இந்திய பாராளுமன்றத்தில் தி.மு.க,அ,தி.மு.க போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தங்கள் போன்றும்,கலைஞர் கருணாநிதி கூட்டணியிலிருந்து தி.மு.க விலகிக்கொள்கிறது என்று காங்கிரஸை கழட்டி விட்டது போன்ற சூழலுக்கு ஏற்ப இந்தியா செயல்படும்.எனவே ஓரளவுக்கு மனித உரிமைகளை மதிக்கும் ஐரோப்பிய நாடுகள்,அமெரிக்காவின் ஆதரவோடு மட்டுமே ஈழத்தமிழர்களின் நல்வாழ்வுக்கான வழிகளை தேட முடியும்.

மாணவர்கள் போராட்டங்கள் அவசியமான ஒன்று என்பது நிரூபணமாகி விட்ட ஒன்று என்ற போதிலும் அமெரிக்காவிற்கு எதிராகவும் பெப்சி,கோகா கோலாவை புறக்கணிப்போம் போன்ற போராட்ட அணுகுமுறைகள் போராட்டத்துக்கு உதவாது.பெப்சி,கோகா கோலா புறக்கணிப்பு போராட்டம் ஏற்கனவே அமெரிக்கா ஈராக்கின் ஆக்கிரமிப்பில் பரிசோதனை செய்து பார்த்து தோல்வியடைந்த ஒன்று.அமெரிக்கா ஒரு புறம் மனித உரிமைகளை வலுப்படுத்தவும் இன்னொரு புறம் இலங்கைக்கு பொருளாதார ரீதியாக உதவுவது போன்ற இரட்டை கொள்கையாக போராட்ட களம் அமைய வேண்டும்.அமெரிக்கா மீதான எதிர்ப்பு சீனா,ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் முக்கியமாக இலங்கைக்கு உதவுவது மாதிரியாக அமைந்து விடும்.

ஒவ்வொரு இடத்தின் தூதரகங்கள் சார்ந்து மக்கள் போராட்டங்கள்,ஒரு நாட்டின் பிரச்சினைகள்,அரசியல் நகர்வுகள் என அத்தனையும் அரசு கொள்கைகள் அமைவதற்கு ஆவணப் பத்திரங்களாகின்றன என்பதை பத்திரிகை செய்திகளுக்கும் அப்பால் என்ன நிகழ்கின்றன என்பதை விக்கிலீக்ஸ் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது.எனவே போராட்டக்கள சாதுர்யம்,ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்த அல்லது மனித உரிமைகளைக்கு ஓரளவுக்கு முக்கியத்துவம் தரும் நாடுகளீன் நட்போடு இன்னும் மேல் நோக்கி நகர்வதே ஈழத்தமிழர்களுக்கு விடியலைப் பெற்றுத் தரும்.

வரும் நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தின் குரலையும்,ஈழத்தமிழர்களின் பிரச்சினையை ஜனநாயக ரீதியாக முன்கொண்டு செல்ல வேண்டிய ஒரு முக்கியமான காலகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.அரசியல் சுயநலங்கள்,ஓட்டுக்கு பணம் போன்றவைகளை புறம் தள்ளி யார் தமிழகத்தின் பிரச்சினைகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் குரல் கொடுப்பார்கள் என்றுணர்ந்து  செயல்பட வேண்டிய தருணமிது.மொத்தமாக ஒரே கட்சிக்கு வாக்களிப்பது கட்சி சார்ந்து நாடாளுமன்றத்தில் வலுவான நிலையை கொண்டு வருமென்றாலும் கூட ஜனநாயக ரீதியாக ஆரோக்கியமான ஒன்றல்ல.தமிழர்களின் மனநிலை என்னவென்பதை தேர்தல் முடிவுக்கு பின் அலசுவோம்.



Thursday, March 21, 2013

ஹம்மர் ரெய்டும் ஜனநாயக அநீதிகளும்

காட்பாதர் படத்தின் இத்தாலிய மாபியா கும்பல்களை நேரடியாக காண வேண்டுமென்றால் இந்திய அரசியல்வாதிகளின் குடும்ப கும்பல்களை ஒப்பிட்டால் போதும்.இருக்கும் ஆட்சி அமைப்புகளில் ஜனநாயகம் ஒன்றுதான் சிறந்தது.ஆனால் அதனை இந்திய மாபியா கும்பல்கள் பயன்படுத்தும் விதம் இப்பொழுது சமூக அக்கறையோடு போராடும் மாணவர்களுக்கே இவர்களிடம் நம்பிக்கையில்லாமல் போய் விட்டது.இளம் வயதினர் உணர்ச்சி வசப்பட்டு செயல்படுகிறார்கள் என சில மாங்காய்கள் சொன்னால் பெருசு அன்னா ஹ்சாரேயும்தானே போராட்டக்களத்தில் குதித்தாரே?

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் சம பொருளாதார போட்டி காலமிது.ஆனாலும் இந்தியா சீனாவுடன் போட்டி போட முடியாமல் போவதற்கு முக்கிய காரணங்களே இந்த இந்திய மாபியா கும்பல்களும் இவர்களுக்கு வாலாட்டும் பீரோகிரட்டிக்குகளும்தான்..இந்த பெரும் கூட்டத்துக்கு மத்தியில் நாட்டுப் பற்றோடும்,சமூக அக்கறையோடும் செயல்படும் ஒன்றிரண்டு நல்ல மனிதர்களும் காணாமல் போய் விடுகிறார்கள்.

ஆட்சிக்கு முட்டுக்கொடுத்தால் எவ்வளவு வேண்டுமென்றாலும் திருடிக்கொள்ளலாம். கூட்டணியிலிருந்து விலகிக்கொண்டால் சி.பி.ஐ ரெய்டா?அப்படியே ரெய்டுன்னாலும் கூட ஒரு பிஸ்கோத்து வண்டி ஹம்மருக்கா ரெய்டு?ஒரு உழைப்பு திறனுமில்லாத ஸ்டாலின் பையனால் எப்படி கோடிக்கணக்கில் முதலீடு செய்து படம் தயாரிக்க முடிகிறதென்றல்லவா 2G காலகட்டத்தில் ரெய்டு நடந்திருக்க வேண்டும்? இது வரை தி.மு.க எத்தனை அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடித்த காங்கிரஸின் காரணம் ரெய்டு பிளாக்மெயில்தான் காரணமா?

தமிழகத்தில் அம்போன்னு போக இருக்கும் காங்கிரஸ் தனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை,தி.மு.கவுக்கு ஒரு கண்ணாவது போக வேன்டுமென்று துணைக்கு தி.மு.கவையும் இழுக்கும் முயற்சியா ரெய்டு?

சிபிஐ மேல் இருந்த மொத்த நம்பிக்கையும் போய் விட்டது.ஆளும் கட்சியின் அடியாட்கள் இவர்கள்.

எதிர்பார்க்காமலே விழுந்த ஒரு விக்கெட்டால் வாய்தா ராணிக்கு ஒரே குஷியாக இருக்குமே!

Wednesday, March 20, 2013

வை.கோ vs மாணிக் சந்த் -2009 பாராளுமன்ற தேர்தல்

விருதுநகர் தொகுதியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் இடையே நேரடிப் போட்டி நிலவியது.

கடும் இழுபறியாக இருந்து வந்த நிலையில் இறுதியில், 15,764 வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக் தாகூர் வென்றதாக அறிவி்க்கப்பட்டது.

விருதுநகர் தொகுதியென்றவுடன் காமராஜரின் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் நம்பிக்கையான காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மாவட்டம் என்பதால்தான் பெயர்,முகம் அறிமுகமில்லாத மாணிக் சந்த் என்பவர் வை.கோ என்ற தமிழகம் அறிந்த கட்சித்தலைவரை தோற்கடிக்க முடிந்தது என்று நினைத்திருந்தேன்..மேலும் விருதுநகர் மாவட்டம் அண்ணாச்சிகளின் வியாபார முன்னேற்றங்களோடு கல்வி வளர்ச்சியிலும் முன்னேறிய மாவட்டம் என்ற கணிப்போடு வெளிநாடுகளில் படிக்கும் குழந்தைகளோடு ஒப்பிடும் போது தமிழக குழந்தைகளுக்கு வாய்ப்புக்கள் குறைவாக இருந்தாலும் கூட ஐ.க்யூ இயல்பாகவே அதிகமென விருதுநகர் நண்பர் ஒருவர் பெருமைப்பட்டுக்கொள்வார்.

நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்பட பேசு நிகழ்ச்சியில் மாணிக் சந்த் என்ற இளைஞரைக் காண நேரிட்டது. கிட்டத்தட்ட நீயா நானா தொகுப்பாளர் கோபிநாத ஸ்டண்ட் காட்சியில் நடித்தால் டூப்ளிகேட் போடுவதற்கு வசதியான முக அமைப்பு.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மகேந்திரனோடு மாணிக் சந்த் விவாதிக்கும் போது இருவருக்கும் இலங்கை பிரச்சினையில் தங்கள் நிலைப்பாடுகளில் உணர்ச்சி வசப்பட ஒருமைத் தன்மையில் மாணிக்சந்த் ஒண்டிக்கு ஒண்டி எங்கே வரட்டும் என கோதாவில் இறங்கினார்.

விவாதத்தில் கோபம் பொங்குவது அதுவும் இலங்கைப் பிரச்சினை,அமெரிக்க தீர்மானம் நீர்ந்துப் போன நிலை,காங்கிரஸின் மத்திய ஆட்சி நிலைப்பாட்டில் தயக்கம் போன்ற சூழலில் உணர்ச்சி வசப்படுவதும் கூட தவறில்லை.பதவிகள்,பொறுப்பு இரண்டாம் பட்சம்தான்.அடிப்படையில் உணர்வுகளே முதன்மை வகிக்கின்றன என்பதால் காரசார விவாதங்களை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் விருதுநகரில் செயல்படாத ஒரு ரோபோவை உருவாக்கி அதன் கையில் காங்கிரஸ் கொடியைக் கொடுத்து கழக கூட்டணிகளில் ஏதாவது ஒன்றின் துணையோடு நிற்க வைத்தாலும் கூட ரோபோ ஜெயித்து விடும் போல் தெரிகிறது.

நேர்பட பேசு விவாதத்தின் போது மகேந்திரன் அமெரிக்க வரைவு தீர்மானம் குறித்தும் ஐ.நா மனித உரிமைக்குழுவின் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்களின் மனித உரிமைக்குழு அறிக்கை பற்றியும் குறிப்பிட்டார்.மாணிக் சந்த் எம்.பி யின் வரிசை வரும்போது மகேந்திரனை திருத்தும் விதமாக நவநீதம் பிள்ளையின் பெயர் நவீன் பிள்ளையென்றும் அவர் ஒரு ஆண் என்றும் விளக்கெண்ணை விளக்கம் கொடுத்தாரே பார்க்கலாம்! இந்த மாதிரி களிமண்ணுகளா பாராளுமன்ற உறுப்பினர்?

இந்த மாதிரி இன்னும் எத்தனை புத்திசாலிகள் பாராளுமன்றத்தில்,வெளியுறவுக் கொள்கையில்,பீரோகிரட்டிக் வரிசையில் நிற்கிறார்களோ!

விருதுநகர் மாவட்டம் செய்த இரண்டு வரலாற்றுத் தவறுகள்

1967ல் படுத்துகிட்டே ஜெயிப்பேன் என்ற நம்பிக்கையில் மண்ணை வாரிப் போட்டு காமராஜரை தோற்கடித்தது.

2009ல் வை.கோவை பாராளுமன்றம் அனுப்பாமல் மாணிக்சந்த் என்ற மகாபுத்திசாலியை எம்.பி பட்டம் சுமக்க வைத்தது.

விருதுநகரே! இனியாவது விழித்துக்கொள்!



Tuesday, March 19, 2013

முள்ளிவாய்க்காலுக்கும் அப்பாலான நிதர்சனங்கள்.

போர்க்கால நினைவுகளை மீள் நினைவுபடுத்தினால் ஏழுத்தை மீறிய சிந்தனைகள் சிதறுகின்றன.போர் காலத்தின் இணையக்குரல்கள் செவிடன் காது சங்கு போல் ஆகிவிட்டன.இலங்கை ராணுவம் நந்திக்கடலின் இரு திசைகளிலும் வந்து இணைந்து தமது வெற்றியைப் பிரகடனப்படுத்திக் கொண்டன.பிரபாகரனின் மரணம் குறித்த குழப்பங்கள் பலவிதமான ஊகங்களை கொண்டுவந்தன.நக்கீரன் பத்திரிகை பிரபாகரன் பத்திரிகை படித்துக்கொண்டிருப்பது மாதிரியான வெட்டு ஒட்டுதல்களை செய்து குழப்பியது.இறந்த முகத்தில் முடி முளைக்குமா என்ற விஞ்ஞான ஆராய்ச்சிகள் முன்வைக்கப்பட்டன.நிறைய பதிவர்கள் பல விதமான விவாதங்களை வெளிக்கொண்டு வந்தனர்.தமிழ் மணத்தின் ஈழம் பகுதி பதிவுகளோடு காணொளிகள் பலவற்றையும் கொண்டு வந்தது. காணொளிகளின் தாக்கம் துவக்கத்தில் அதிர்ச்சிகளை உருவாக்கி விட்டு தொடரும் பதிவுகள் மரத்துப்போன நிலைக்கு கொண்டு வந்து யார் சொல்வது உண்மை எது பொய் என்ற குழப்பங்களை உருவாக்கியது.விடுதலைப்புலிகள் மீதான விமர்சனங்கள் காரணமாகவும் நிகழ்ந்தவை என்ன என்பதை வெளியே கொண்டு வராதபடி பன்னாட்டு பத்திரிகையாளர்கள் யாரும் இலங்கைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

ராஜபக்சே சகோதரர்கள் நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு தொலைக்காட்சிகளில் தோன்றிக்கொண்டிருந்தார்கள்.2009ம் ஆண்டின் மே மாத காலத்திற்கும் முன்பே 2008ம் வருடம் நவம்பர் துவக்கம் முதல் போர் குறித்த கவலைகள் வெளிப்பட்டாலும் கூட மத்திய அரசு,தமிழக மாநில அரசுகளின் சித்து விளையாட்டுக்களில் திசை திருப்பப்பட்டு கோவை இராணுவ வாகன் தாக்குதல்,கோபம்,மாணவர்களின் போராட்டம்,வழக்கறிஞர்கள் போராட்டம், முத்துக்குமாரின் மரண சாசனம் என பலவும் ஆளும் தி.மு.கவால் திசை திருப்பப்பட்டு விட்டன.ராஜபக்சேவை கோபப்படுத்தக்கூடாது போன்ற அறிக்கைகளும்,சமாதான முயற்சி என்ற பெயரில் ராஜபக்சேவை சந்தித்து விட்டு வந்த தமிழக எம்.பிகள் என்பவற்றோடு முக்கியமாக 2009ம் ஆண்டில் கூடிய மனித உரிமைக்குழுவில் ராஜபக்சே அரசுக்கு சாதகமாக தீர்மானம் நிறைவேறியதும் கூட பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. இந்து ராம், சுப்ரமணியசுவாமி போன்றோரின் இலங்கை சார்பு எரிச்சலையும், கவலையையும் கொடுத்தது.இலங்கை அஜெண்டாவை ராஜபக்சே,ஜி.எல் பெரிஸ் போன்றவர்களிடம் கேட்பதை விட இவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

பின்பு 2G வந்து ஆக்கிரமித்துக் கொண்டது.இங்கும் அங்குமாக இணையத்தில் சோக ராகம் பாடினாலும் கூட அமிதாப்பச்சன் தலைமையில் இலங்கையில் நிகழவிருந்த IIFA (International Indian Film Academy) நிகழ்ச்சியை நிகழவிடாமல் செய்தது,லண்டனுக்குப் போன ராஜபக்சே சிவப்பு துண்டைக் காணோம்,கட்டிய வேட்டியைக் காணோம் என இலங்கை தூதரகத்தில் புகுந்து கொண்டு இலங்கை திரும்பியது,டைம்ஸ் பத்திரிகையின் சிறந்த மனிதர்களில் ராஜபக்சேவின் பெயர் முன்னிலையில் இருந்த ஓட்டுப்போடும் தில்லுமுல்லுகளை டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவிக்கப்பட்டு ராஜபக்சே ஓட்டை செல்லாக்காசு ஆக்கியது,புலம் பெயர்ந்த தமிழர்கள் உண்ணாவிரதம் போன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் கிடைக்காத திசைமாற்றம் சேனல் 4ன் கெலம் மெக்ராவின் போர்க்குற்ற காணொளிகளின் ஒருங்கிணைப்பிலும் அமெரிக்காவின் மனித உரிமைக்குழுவில் 2012ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திலும் இலங்கை அரசின் கோர முகம் உலகிற்கு மெல்ல தெரிய ஆரம்பிக்கின்றது.

2013ம் ஆண்டின் பிப்ரவரி,மார்ச் மாதங்களையும் இந்திய,தமிழக சூழல்களை லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் திசை மாற்றிய வரலாற்றை பதிவு செய்திருக்கிறது.அதனைத் தொடர்ந்த மற்ற கல்லூரிகளின் மாணவ,மாணவி சகோதர,சகோதரிகளின் உணர்வும்,போராட்ட எழுச்சியும் கருணாநிதி vs ஜெயலலிதா செயல்படும் முறைகளை ஒப்பிட வைக்கிறது. இருவரின் ஆட்சிகளின் சூழல் முறைகள்,அரசியல் லாபங்கள் வேறுபட்டாலும் கூட மொத்தப் போராட்ட கையாளும் முறைகளில் ஜெயலலிதா ஸ்கோர் செய்கிறார்.அதற்கு தி.மு.க செயல்பட்ட விதம் கூட ஜெயலலிதாவுக்கு துணை செய்கிறது எனலாம்.

கலைஞர் கருணாநிதி எவ்வளவு அடிச்சாலும் தாங்குவதோடு தன்னையும்,கட்சியையும் தக்கவைத்துக்கொள்ள நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிக்கை மேல் அறிக்கை விட்டுக்கொண்டிருப்பதும்,கலைஞரின் நிலைப்பாட்டுக்கு எதிராக அறிக்கை விடுவதென்றால் ராஜபக்சே தொழுத திருப்பதியின் லட்டு மாதிரி என்ற மகிழ்ச்சியில் ஜெயலலிதாவின் அறிக்கைகள் வெளிப்பட்டாலும் காலம் கடந்து இருவரும் ஈழப்போரின் பரிணாமங்களை மாற்று திசைகளிலிருந்து புரிந்து கொண்டிருக்கிறார்கள்.கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று ஒன்றாக குரல் கொடுத்தால் இன்னும் வலுப்படும் தமிழர்களின் உணர்வுகள் இருவரின் ஈகோ,தமிழக அரசியல் கலாச்சார சூழல்களால் தனித்தனியாகவேனும் சேர்ந்து ஒலிப்பதை பாராளுமன்ற விவாதங்கள் இப்பொழுது ஆவணப்படுத்தியுள்ளன.இந்தியாவின் இலங்கை வெளியுறவுக்கொள்கை கலைஞர் கட்டுமரமாக தத்தளித்துக்கொண்டிருப்பதை 2013ம் ஆண்டின் ஐ.நா மனித உரிமைக்குழுவின் அமெரிக்க வரைவு தீர்மானத்தில் மோடிமஸ்தான் மாதிரி இந்தியா இந்த கணம் வரை மௌனம் காக்கிறது.

மேடைகள்,இந்தி எதிர்ப்பு போராட்டம்,ஆட்சி அனுபவம்,எதிர்க்கட்சி, எதிர்க்கட்சியுமில்லாத சென்ற தமிழக தேர்தலின் தோல்வி,தோல்வி தந்த ஆற அமர உட்கார்ந்து யோசிக்கும் நிலை,டெசோவை தூசி தட்டி டெல்லி வரை கொண்டு சென்ற சாதுர்யம்,ராஜபக்சே,மத்திய அரசு சொன்னதை நம்பி ஏமாந்து விட்டேன் என்ற வெளிப்படைத்தன்மை இவற்றையெல்லாம் மாணவர் போராட்டம் காங்கிரஸ் என்ற நொண்டி வாத்தை விட்டு விடும் பயத்தை விட்டுக் கொடுத்திருக்கிறது கலைஞருக்கு.இந்திய அரசியல் மாற்றங்களை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.முலாயம் சிங்,மாயாவதிகளின் நம்பகத்தன்மை சந்தேகத்துக்குரியது என்பதால் முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.மன்மோகன் சிங் ஆளை விட்டால் போதும் என இன்னும் மௌன விரதத்தை தொடர்கிறார்.பி.ஜே.பி வந்தாலும் இலங்கை விசயத்தில் பெரும் மாற்றஙகளைக் கொண்டு வந்து விடாது என்பதை சுஷ்மா ஸ்வராஜின் இலங்கைப் பயணமும் அதனைத் தொடர்ந்த ராஜபக்சே இந்திய வருகையும் உறுதிப்படுத்துகின்றன.

சகோ.சார்வாகன் அமெரிக்க தீர்மான வரைவு குறித்து பதிவு போட சொன்னார்.முதல் வரைவின் சொற்பதங்கள் பரவாயில்லை என்கிற நம்பிக்கையிலிருந்து 2,3,4ம் வரைவு மாற்றங்கள்அமெரிக்க தீர்மானம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு மாதிரியாக நீர்த்துப் போய் விட்டாலும் கூட அடுத்த குறுகிய கால கூட்ட அறிக்கை, வருட அறிக்கை எப்படி நகரும் என்பதை எடை போட உதவும்.இன்னும் இந்திய மௌனம் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பது நாளை அல்லது மறுநாள் தெரிய வரும்.தற்போதைய நிலையில் இந்தியா இல்லாமல் கிட்டத்தட்ட 30 நாடுகள் அமெரிக்க தீர்மான ஆதரவு தரப்புக்களாய் இருக்கின்றன என்பதால் இந்திய ஆதரவு இல்லாமலும் தீர்மானம் வெற்றி பெறும் வாய்ப்புக்கள் இருக்கின்றன என்ற போதிலும் இந்தியாவின் நிலைப்பாட்டை அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

கலைஞரின் கூட்டணி விலகல் தி.மு.கவிற்கு புதிய வெளிச்சத்தைக் காட்டும்.காலம் கடந்தாவது தனது அரசியல் முத்திரையை பதித்த  கலைஞருக்கு வாழ்த்துக்கள்.2009ல் செய்ய தவறிய தவற்றை இனிப் பேசி பயனில்லை.அது கோப வெளிப்பாடுகளுக்கும்,விவாதத்திற்கு மட்டுமே பயன்படும்.இன்னும் ஈழ நகர்வை முன் கொண்டு செல்ல உதவாது.

தலைப்பில் நிதர்சனங்கள் என குறிப்பிட்டதற்கு காரணம் நிகழ்வுகளை ஒட்டியே நாம் இன்னும் வரலாற்றை முன்கொண்டு செல்ல வேண்டிய சூழலில் இருக்கிறோம்.இப்படி நடந்தால்,அப்படி நடந்தால் அல்லது அப்படியான பின் எப்படி என்ற ஹைபோதிசிஸ் கருத்துக்கள் உதவாது.மனித உயிர்களின் இழப்புக்கள்,தி.மு.க ஆட்சியின் தவறுகள் தமிழர்களின் கறுப்புப் பக்கங்கள் எனபது நாம் விரும்பாமலே நிகழ்ந்து விட்டன.துயரங்களைக் கடந்து ஈழ மக்களுக்கு ஏதாவது வழிகாட்டுவது மட்டுமே இனி யதார்த்தமாக இருக்க முடியும்.

தமிழக தொலைக்காட்சிகளில் பக்க சார்பில்லாமல் நிகழ்வுகளையும், விவாதங்களையும் புதிய தலைமுறை தொலைக்காட்சி பலருக்கும் கொண்டு சேர்த்திருக்கிறது.வட மாநில ஆங்கில ஊடகங்கள்தான் கருத்து கந்தசாமிகளாய் இருந்த நிலையை புதிய தலைமுறை மாற்றியிருக்கிறது.பல விவாத முகங்களை தமிழில் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

தமிழக மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் தமிழகம் குறித்த எதிர்கால நம்பிக்கையை தருகிறது..