Followers

Wednesday, March 11, 2009

மை டியர் நாய்க்குட்டிகள்

அம்மா ஆடு வளர்க்கல,மாடு வளர்த்தாங்க,கோழி வளர்த்தாங்க கூடவே சித்தப்பா பையன் தங்கராஜ் எங்கிருந்தோ பிடிச்சிகிட்டு வந்த ஒரு நாய்க்குட்டியும் வளர்த்தாங்க.சோறு போடுவதில் அம்மாவுக்கு வாலாட்டினால் எப்பவாவது தண்ணிக்குள்ள முக்கி விளையாட்டு காட்டுவதால எனக்கும் கொஞ்சம் வாலாட்டும்.

வாயில எளிதா நுழைந்த வார்த்தை ஜிம்மின்னு பெயராச்சு.தங்கராஜ் அமெரிக்க மாடு மேய்ப்பவன் ஸ்டைலில் அவன்,மாடு,ஜிம்மி என ஒரு நாள் மேய்ச்சல் நிலத்துக்குப் போய்விட்டான்.மாடு மேய்ந்து கொண்டிருந்தது.ஜிம்மி நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தது.மேய்ந்து கொண்டிருந்த மாடு திடிரென புஸ்,புஸ் என மூச்சு விட்டது.படுத்துக்கொண்டிருந்த ஜிம்மி நால் கால் பாய்ச்சலில் மாட்டின் பக்கம் திடீரென ஓடியது.தம்பி ஜிம்மி ஓடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.மாட்டின் அருகில் ஓடின ஜிம்மி ஒரு பாம்பை வாயால் இடதும் வலதுமாக கடித்து துப்பிவிட்டு இறந்து விட்டது.தம்பி அலறி அடித்துக் கொண்டு ஜிம்மி பக்கம் போய் பார்த்தான்.ஜிம்மியும் பாம்பும் இறந்து கிடந்தன.பின் வீட்டிற்கு வந்து அம்மா,அப்பாவிடம் சொல்லி நாயை,பாம்பை தனித் தனியாக அங்கேயே புதைத்தார்கள்.நேரடியாகப் பார்க்காததால் தம்பி சொன்ன ஜிம்மியின் வீரக்கதை சோகத்தை ஏற்படுத்தினாலும் அதி மன அதிர்வுகளை எனக்கு ஏற்படுத்தவில்லை.

குவைத்தில் முந்தைய பிரதமரும்,இளவரசுருமான ஷேக் அப்துல்லா அல் சபாவின் மகளின் வாகன ஓட்டுனராக ஜேம்ஸ் என்ற நண்பன் பணியாற்றிக் கொண்டிருந்தார்.அந்தம்மா இந்திய மதிப்பில் அப்போதைக்கு 1 1/2 இலட்சம் விலையுள்ள ஒரு நாயை லண்டனிலிருந்து கொண்டி வந்தார்.அது breed செய்த நாலைந்து குட்டிகளில் முடி புசு புசுவென்று இருந்த அழகான நாய்க்குட்டியை ஜேம்ஸ் வீட்டிற்கு கொண்டு வந்து தந்தார்.அல்சேசன் உடல்வாகு,பொமரேனியன் முடி ஸ்டைல் என ஒரு புதிய தோற்றம் அது.பழக்கதோசத்தில் அதுவும் ஜிம்மியாயிற்று.

துவக்கத்தில் பால் பின் நாங்கள் சாப்பிடும் உணவே அதன் உணவுமானது.மாமியார் வீட்டில் இருந்ததால் வேளை வேளைக்கு உணவளித்துக் கொண்டிருந்தாங்க.துவக்கத்தில் குளியல் அறையில் ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் பழக்கப் படுத்தினோம்.குளியல் கதவு திறந்திருந்தால் அதுவாகவே போய் விடும்.தினமும் குளியல்,சாப்பாடு என நாட்கள் நகர்ந்தன.மூன்று மாத வளர்ச்சிக்குப் பிறகு ஒண்ணுக்கு ரெண்டுக்கு போவதென்றால் அதுவாகவே வாசல் கதவை பிராண்ட ஆரம்பித்தது. கதவை திறந்தால் வீட்டின் இரண்டாம் மாடியிலிருந்து கிழே ஓடி குப்பைத் தொட்டி அருகில் போய் உட்கார்ந்து திரும்ப தானாகவே வீட்டுக்கு வர ஆரம்பித்தது.யாரும் பழக்காமல் தன்னியல்பான அதன் செய்கைகள் எங்களை ஆச்சரியப் பட வைத்தது.நாளுக்கு நாள் கூடிய நட்பில் அய்யா படுக்கையிலும் வந்து அமைதியாக உட்கார ஆரம்பித்து விட்டார்.லொள்,லொள் என எப்பொழுதும் சப்தமிட்டதில்லை.குழந்தைகளோடு குழந்தையாக மாறிவிட்டது.இப்படி இனிமையாக போய்க் கொண்டிருந்த நட்பு பக்கத்து வீட்டு வர்கீஸ் சேட்டன் மூலம் இறுதிக்கு வந்தது.

புதியதாக வாங்கிய கணினியை பக்கத்து வீட்டு வர்கீஸ் சேட்டன் வேண்டுமென்று கேட்டதற்கு வச்சுக்கோ காசு எப்ப தரமுடியுமோ அப்ப தந்தால் போதுமென்று சொல்லி கொடுத்து விட்டேன்.ஒரு வருட காலமாகியும் காசு தேறுவதாகக் காணோம்.சரி காசு கேட்டுப் பார்க்கலாம் என காசு கொடேன் என்று கேட்டதற்கு இன்னும் மூன்று நாட்களில் தந்து விடுகிறேன் என்றான் சேட்டன்.மூன்று நாட்கள் பின் ஒரு வாரமாகியது.பின் பத்து நாட்கள் ஆகியது.இதற்கிடையில் மாமியார் சேட்டனின் மனைவியிடம் வாய் கொடுக்க சேட்டனின் மனைவி நாங்கள் ஒன்றும் உங்களிடம் கம்ப்யூட்டர் வாங்கவில்லை என்று வாதம் திரும்பி விட்டது.

ஒரு நாள் வார இறுதி வெள்ளிக்கிழமை ஹாயாக சோபாவில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன்.கதவு பெல் ரிங்.கதவைத் திறந்தால் போலிஸ்காரன் நின்று கொண்டிருக்கிறான்.ஜிம்மி தலையை எட்டி நோக்கி விட்டு சப்தமில்லாமல் தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்து விட்டது.டிராபிக்கில் போலிசைக் கண்டாலே எனக்கு அலர்ஜி.அதுவும் வீட்டில் வந்து போலிஸ் நின்றதும் மனசு திக்.பக்கத்தில் சேட்டன் இன்னொரு இந்தியனுடன் சிரிப்புடன் நின்று கொண்டிருக்கிறான்.போலிஸ் அரபியில் என்னமோ சொல்கிறான்.பக்கத்தில் நின்று கொண்டிருந்த இந்தியன் நீ ஏன் வீட்டில் நாய் வளர்க்கிறாய்.பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இடைஞ்சலாக உள்ளது என்றான்.அடப்பாவி!தொலைக்காட்சி சத்தமாவது தொந்தரவுன்னு சொல்லியிருந்தாலாவது பொருந்தும்.சத்தமிடாத தனக்குத் தானே ஒழுங்குகளைக் கற்றுக்கொண்ட ஜிம்மி தொந்தரவென்றால்?எனது பயந்த தோற்றத்திலும் அரபி தெரியாத முக லட்சணத்தையும் பார்த்து போலிஸ் என்னை ஸ்டேசனுக்கு கொண்டு போய் கம்பியில்லா ஒரு அறையில் நிறுத்தி வைத்து விட்டான்.அரைமணி நேரம் கழித்து போலிஸ்காரனுக்கு அதிகாரி வந்ததும் என்னிடம் ஆங்கிலத்தில் என்ன என்று கேட்டதும் வாய் படபடவென வார்த்தைகளை ஜிம்மியின் பூர்வீகம் பற்றி கொட்டியது.பிளாட்களில் நாய் வளர்ப்பது தவறு என்று சொல்லி எனது ஐ.டி கார்டை திரும்பத் தந்து கேஸ் பதிவு செய்யாமல் வீட்டிற்கு அனுப்பி விட்டார்.

சேட்டனின் தொல்லையால் யாருக்காவது கொடுத்து விடலாம் என்று ஜிம்மியை நன்றாகப் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லிய குவைத்தி டாக்டர் ஒருவர் வீட்டுக்கு தாரை வார்த்து விட்டோம்.ஜிம்மிக்காக நான்,மனைவி,குழந்தைகள்,மாமியார் என நாள் முழுவதும் அழுதோம்.

புத்திர சோகத்திலும்,போலிஸ் ஸ்டேசன் போன அவமானத்திலும் சேட்டன் மீது முறையாக நீதிமன்றத்தில் மனு பதிவு செய்து வாய்தா மேல் வாய்தாவாக சேட்டன் நீதிமன்றத்துக்கு டிமிக்கி கொடுத்து இறுதியில் பிடிவாரண்டில் போலிஸ் கைதியாக ஒரு வாரம் சிறைபட்டான்.சிறைவாசத்திற்கு பின் கோர்ட்டுக்கு ஒழுங்காக வந்து காசை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி தருவதாக உறுதியளித்தான்.கோர்ட்டிற்கு வெளியே ஏண்டா இப்படி செய்தாய் எனக் கேட்டேன்.என் மனைவியின் தூண்டுதலால் இப்படியாகி விட்டது மன்னித்துக் கொள் என்றான்.நான் முழுப்பணத்தையுமே மன்னித்து விட்டேன்.அவன் சல்மியாவிலிருந்து வீட்டைக் காலி செய்து விட்டு வேறு ஒரு பகுதிக்கு குடித்தனம் புகுந்து விட்டான்.

4 comments:

அது சரி said...

//
கோர்ட்டிற்கு வெளியே ஏண்டா இப்படி செய்தாய் எனக் கேட்டேன்.என் மனைவியின் தூண்டுதலால் இப்படியாகி விட்டது மன்னித்துக் கொள் என்றான்.
//

ஆஹா, என்னே ஒரு மனிதர்கள்....இந்த மாதிரி ஒரு அயோக்கியத்தனமான கலாச்சாரம் எங்கிருந்து வருகிறது??

ராஜ நடராஜன் said...

//ஆஹா, என்னே ஒரு மனிதர்கள்....இந்த மாதிரி ஒரு அயோக்கியத்தனமான கலாச்சாரம் எங்கிருந்து வருகிறது??//

நல்ல மனுசன் தானுங்க.தெரியல எப்படி புத்தி குளருபடியாச்சுன்னு.ஜிம்மியப் பத்தி சொல்ல வந்துட்டு வர்கீசுல முடிஞ்சு போச்சு.

கிரி said...

//ஜிம்மி தலையை எட்டி நோக்கி விட்டு சப்தமில்லாமல் தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்து விட்டது//

:-))

ராஜநடராஜன் மிக அருமையாக இருந்தது படிப்பதற்கு.. எனக்கு நாய்கள் என்றால் ரொம்ப ரொம்ப இஷ்டம். நீங்கள் எழுதியதை படித்த போது எனக்கே மிகவும் கஷ்டமாக இருந்தது, வளர்த்த உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்து இருக்கும் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை.


நீங்கள் கூறிய கதையை (உண்மையை) படித்த போது ஆங்கிலத்தில் "Red" என்ற படத்தின் கதை நினைவிற்கு வந்தது, அதுவும் இதை போல ஒரு கதை தான்..ஆனால் கொஞ்சம் மாறுதல்கள் அதிகமுடன். முடிந்தால் இந்த படத்தை பாருங்க.. உங்கள் ஜிம்மி மீது மட்டுமல்லாது அனைத்து நீங்கள் நாய்கள் மீதும் அதிக பாசம் கொண்டவராக இருந்தால்.....

சிறப்பான பதிவு ..டச் பண்ணிட்டீங்க ..நல்ல வேளை படிக்காம மிஸ் செய்து இருப்பேன்.

துளசி கோபால் said...

அடப்பாவி சேட்டா..... நீ நல்லா இருப்பியா?

பாவம்ங்க ஜிம்மி.


இப்போ நல்லபடியா இருக்குதானே?

மிருகமுன்னு சொல்றோமே.... அதுங்க அன்பைப் புரிஞ்சுக்க ஒரு தனி மனசு வேணுமுங்க.