Followers

Sunday, March 15, 2009

பதிவனுக்கு தன் சமையல் பொன் சமையல்.

இந்த வார இறுதியில் தங்ஸுக்கு போட்டியா சமையல் கட்டுக்குள்ள பூந்து விட்டேன்.அதென்ன லாவகமோ பெண்களுக்கு! ஒரு பக்கம் சட்டில கொதிக்குது.இன்னொரு பக்கம் அம்மி கடமுடன்னு சத்தம் போடுது. வெங்காயம் பலகைக்கும் கத்திக்கும் இடையில் மாட்டிகிட்டு குத்துப்பட்டும் பல்லைக் காட்டுது.எல்லாம் சரியா வருது நேரத்துக்கு துன்னுறதுக்கு.அப்படியிருந்தும் நொள்ளை சொல்லலீன்னா சாப்பிட்ட மாதிரியே இருப்பதில்லை:) சரி சரி அது சரி!(அண்ணா என்ன வெச்சு காமெடி கீமடின்னு கேட்டு வைக்காதீங்க இஃகி!இஃகி!)இப்ப வெஜிடபிள் குருமா சமையலைக் கவனிப்போமா?

முதலில் காலிபிளவரை ஒரு சுடுதண்ணில உப்பு போட்டு முங்க வச்சாச்சு.பின் பூ பூவாய் பிரித்தெடுத்து குளிர்நீருல தூங்க வச்சாச்சு.அப்புறம் பீன்ஸ்,கேரட்,உருளைக்கிழங்கு நறுக்கியாச்சு.ரெடிமேடு பட்டாணி டப்பாவுல கொஞ்சம் கொட்டியாச்சு. இப்ப பெரிசா எனக்குன்னே தயாரிச்ச எவர்சில்வர் பிளேட் ஒன்று எடுத்து ஒரு முழு வெங்காயம் சிறுசா நறுக்கிக் கொண்டேன்.

அப்புறம் ரெண்டு பச்சை மிளகாய் கையிலே பிடித்து முறுக்கி துண்டு பண்ணிகிட்டேன்.அப்புறம் இஞ்சியோட முதுகு தோல உரிச்சி அதையும் வெட்டிகிட்டேன்.ஆ!பூண்டு ரெண்டு மூணும் இஞ்சிக்கு பக்கத்துல உட்கார வைச்சாச்சு.அப்புறம் ஒரு தக்காளிய குறுக்கும் நெடுக்குமா வெட்டி வச்சிகிட்டேன்.அலமாரியத் தேடி கொஞ்சம் குருமிளகு,சோம்பு,சீரகம் சேர்த்தாச்சு.முதல் கட்டமா சில்வர் தட்டுல வெட்டுன பொருட்களும் மிளகு,சோம்பு,சீரகம் வகையறாக்கள் தயார்.

இப்ப அடுப்பு பத்த வச்சாச்சு.கொலாஸ்ட்ரல் கம்மின்னு பேர் போட்ட எண்ணெய் ஊத்தியாச்சி.முதல்ல இஞ்சிய சொய்.அப்புறம் பூண்டு சொய்ங்.அப்படியே பச்சை மிளகாய் வதக்கியாச்சு.வெங்காயம் முன்னுக்கு வருகிறார்.தக்காளி இப்ப.கண்ணு மசாலா டப்பாக்களை தேடுது.கொஞ்சம் மஞ்சள் பொடி,மிளகாய் பொடி மற்றும் மல்லிப் பொடிய தூவியாச்சு.எல்லாத்தையும் கரண்டில துளாவி விட்டு இறக்கி வச்சு கொத்திமல்லிய கழுத்தை திருகி போட்டு உட்கார வச்சாச்சு.

இப்ப கால்பிளவர் வெள்ளை,உருளைக்கிழங்கு தளிர் மஞ்சள்,கேரட் ஆரஞ்சு,பட்டாணி,பீன்ஸ் பச்சை வண்ணம் ஒரு தட்டில்.இன்னொரு தட்டில் வதக்குன பல்பொருட்கள் சூடு தணிஞ்சிருச்சு.சூடு தணிஞ்ச கலவையை அப்படியே மிக்சியில போட்டு ஒரு சுத்து விட்டு இட்லி மாவு பதத்துல எடுத்தாச்சு.

இப்ப மறுபடியும் அடுப்பு பத்த வச்சாச்சு.தட்டுல இருந்த காய்கறிகளில் முதலில் கேரட் சட்டில போட்டாச்சு.( கவனிக்க எண்ணெய் மீண்டும் இல்லை.)அப்புறம் பீன்ஸ்,காலிபிளவர்,பட்டாணி வரிசையாக.காய்கறி உடம்புல இருந்த ஈரப்பதம் சுண்டுனவுடன் அரைச்சு வச்ச மசாலாவக் கொட்டி ஒரு கலக்கு.அப்புறம் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விட்டு ஒரு பட்டை ஒரு லவங்கம் சேர்த்து ரெண்டு நிமிச மெல்லிய கொதி.

இப்ப கொஞ்சம் தேங்காய்ப் பால் பவுடரை சுடுதண்ணியில் கலக்கி பில்டருல வடித்து குருமாக்குள்ள கொட்டி கருவேப்பிலை கொஞ்சம் போட்டு மூடி வச்சாச்சு.மறுபடியும் ரெண்டு நிமிசம் மெல்லிய கொதி விட்டு அடுப்புல இருந்து இறக்கியாச்சு.வெஜிடபிள் குருமா சப்பாத்தியோட கம கம.சாயந்திரம் பார்த்தால் சொந்தக்காரங்க படையெடுப்பில் குருமாவைக் காணோம்.

10 comments:

ச்சின்னப் பையன் said...

ஆஹா.... நாந்தான் மிஸ் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்...

சரி சரி இன்னொரு விருந்துக்கு தயார் பண்ணுங்க. நாங்க வர்றோம்...

ராஜ நடராஜன் said...

//ஆஹா.... நாந்தான் மிஸ் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்...

சரி சரி இன்னொரு விருந்துக்கு தயார் பண்ணுங்க. நாங்க வர்றோம்...//

ச்சின்னப்பையன்!விருந்துன்னா மெல்லிய இசைய முடுக்கி விட்டு,நாப்கின்,கரண்டி,முள் துவங்கி பிளேட்டு அழகா அடுக்கி வச்சி பழக்கூடை,டெசர்ட்,இனிப்புன்னு பரப்பி வச்சி,சாலடு,அபிடைசர்ன்னு ரவுண்டு கட்டி ஹாட்டா கோல்டான்னு கேட்டு வச்சு நொறுக்குத் தீனி தட்டை அடிக்கடி காட்டி அப்பப்ப சமையல் கட்டுல முக்கிய உணவுகளை பதம் பார்த்துட்டு குழந்தைகள் ஒரு பக்கம் விளையாட,தங்கமணிகள்,அரட்டைப் பிரியர்களை கவனித்து இருக்குற முறுகலை தவிர்க்க எல்லோரையும் கொஞ்சம் குத்தாட்டம் போட வச்சி,சாப்பாடு போட்டு பொட்டலம் கட்டிக்கொடுத்து ஆட்டம் போடுற ஆட்கள் ஒழுங்கா வண்டி ஓட்டிகிட்டு வீடு போய் சேர்ந்தாங்களான்னு எத்தனை பொறுப்பு தெரியுமா?எதுக்கு இதெல்லாம்?அடுத்த நாள் போன்ல Had a wonderful time man நட்பு பரிசு வாங்கறதுக்கு.இதெல்லாம் எனது நண்பனுக்கும் எனக்கும் கைவந்த கலை.அதனால் எப்பன்னாலும் போன் போட்டுட்டு வாங்க!

குடுகுடுப்பை said...

இப்ப வெஜிடபிள் குருமா சமையலைக் கவனிப்போமா?
//

மட்டனா மாத்துனா நல்லா இருக்கும்.

ராஜ நடராஜன் said...

//இப்ப வெஜிடபிள் குருமா சமையலைக் கவனிப்போமா?
//

மட்டனா மாத்துனா நல்லா இருக்கும்.//

வாங்கக குடுகுடுப்பையாரே!காய்கறிகளுக்குப் பதிலா மட்டன் என்ன,கோழி வெட்டுனாலும் ருசியாத்தான் இருக்கும்.

நசரேயன் said...

அடுத்த முறை சமையல் கட்டுக்கு போகும் போது சொல்லி அனுப்புங்க, நானும் "படை" எடுத்து வாரேன்

முரளிகண்ணன் said...

சரி சரி இன்னொரு விருந்துக்கு தயார் பண்ணுங்க. நாங்க வர்றோம்

ராஜ நடராஜன் said...

//அடுத்த முறை சமையல் கட்டுக்கு போகும் போது சொல்லி அனுப்புங்க, நானும் "படை" எடுத்து வாரேன்//

சாப்பாட்டுப் படையா?வாங்க!வாங்க!குவைத்துல திங்கறது ஒண்ணுதாங்க உருப்படியா செய்யற காரியம்.

ராஜ நடராஜன் said...

//சரி சரி இன்னொரு விருந்துக்கு தயார் பண்ணுங்க. நாங்க வர்றோம்//

முதல்ல நீங்க ரெண்டு மூணு நல்ல படம் பேர் சொல்லுவீங்களாம்.அப்பத்தான் கண்ணுக்கு விருந்தோட வயிற்றுக்கும் ஈயப்படும்.

பழமைபேசி said...

கடல் தாண்டி இருக்கீங்களே...அடச் சே?

ராஜ நடராஜன் said...

//கடல் தாண்டி இருக்கீங்களே...அடச் சே?//

அதுக்கென்ன?கடலைத் தாண்டும்போது இந்தப் பக்கம் விமானிய வண்டியத் திருப்பச் சொல்லுங்க.(இஃகி கி போடல இதுக்கு பதிலா ஒரு புன்முறுவல்)