தமிழில் மேடைப் பேச்சுகளில் மக்களை மனம் கவர்ந்து ஆட்சிக்கு வந்த திராவிட கழக இயக்கமான தி.மு.க தனிமனித ஈகோக்களால் பிரிந்து தி,மு.க எனவும்,அ.தி.மு.க எனவும் பிரிந்து போனது.எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தது எப்படி தமிழகத்தின் அரசியலை மாற்றி அமைத்ததோ அதே போல் கால சூழல்களால் அரசியலுக்கு வந்த ஜெயலலிதா தி.மு.கவின் அரசியலுக்கு வலுவான எதிர் சக்தியாக மாறினாலும் கூட இரு இயக்கங்களின் சில அரசியல் பார்வைகள் தமிழகத்திற்கு ஆக்க பூர்வமானதாக இல்லை.
ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நிர்வாகத் திறமையில் இரு இயக்கங்களும் தமிழகத்தை முன்னிலைக்கு கொண்டு சென்றாலும் மாநிலத்தின் நன்மைக்கும் அப்பால் தனி மனித காழ்ப்புணர்ச்சிகள் வந்து குறுக்கே நின்று விடுகிறது.
கலைஞர் தனது வாழ்வே அரசியலாக்கிக் கொண்டதால் அரசியல் பால பாடங்களை கற்றுத் தேறி சமயங்களில் சகுனியின் பாத்திரத்தையும் ஏந்தி மொத்த மதிப்பீட்டில் சாணக்கியனாய் வளர்ந்து நிற்கிறார்.ஜெயலலிதா அரசியலுக்கு வந்த விதம் அவருக்கே சில சமயங்களில் ஆச்சரியத்தை உண்டுபண்ணியிருக்கக் கூடும்.பெண்ணுக்கே இயல்பான உடை,நகை,சொத்து மோகங்களில் அடிபட்டு ஓரளவுக்கு அரசியலின் நுனியைப் பற்றி மேலே வந்து விட்டார் எனலாம்.
இந்த இரு இயக்கங்களின் தலைவர்களும் போன தலைமுறைக்கான அரசியல்வாதிகள் என்பது போக இந்த இயக்கங்கள் அரசியலை வளர்த்த விதம் தமிழகத்தைப் பொறுத்தவரை மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற திராவிட வாசகங்கள் நடைமுறையில் நல்லதான மாற்று சிந்தனைகளையும் வரவேற்கவேண்டும் என்ற நாகரீகங்களை வளர்க்கவில்லை.கலைஞரின் ஆட்சியில் நிகழும் நல்லவற்றிற்கு பாராட்டும் மனப் பக்குவம் ஜெயலலிதாவிற்கும் அவர் வழி நடத்தும் கட்சிகாரர்களுக்கும் இருக்க வேண்டும்.மாறாக செய் புகழ் தி.மு.க விற்கு போய் விடுமே என தேவையற்ற வெளிநடப்புகளும் தங்களது மந்திரமே மைனாரிட்டி கவர்ன்மெண்ட் வாசகமும் தமிழக அரசியல் நாகரீகத்தின் போங்கை காட்டுகிறது.தனிமனித கோபங்களாக இரு பக்க சிறையடைப்புக்களும் உதாரணங்களாய் கண்முன் வந்து போகின்றது.
இரு தலைவர்களும் ஒரு தலைமுறையின் இறுதி விளிம்பில் நின்று கொண்டிருப்பதால் விவேகமான,பிரச்சினைகளை அலசி ஆராயும்,தொலை நோக்குப் பார்வையுள்ள திட்டமிடுதல் கூடிய இளைய தலைமுறை அரசியல் களம் புகுதல் தமிழகத்திற்கு நலன் பயக்கும்.
தி,மு,க தரப்பில் கட்சியினை மேலும் உயரத்துக்கு கொண்டு செல்லும் இளைய தலைமுறையினர் லெனின் உட்பட நிறையவே தென்படுகிறார்கள்.ஆனால் சொந்தங்களின் விவகாரங்கள் பொதுவுக்கு வந்தபோது இருந்த நம்பிக்கையின் தன்மை குறைந்து போனது.அ.தி.மு.க பக்கம் ஜெயலலிதா தவிர்த்து மக்களை வசிகரிக்கும் யாரும் நினைவுக்கு வரவில்லை.ஜெயலலிதா சொல்லிக்கொடுப்பதை அப்படியே ஒப்பிவிக்கும் கிளிப்பிள்ளைகள்தான் தென்படுகிறார்கள்.எஸ்.வி.சேகர் தெரிந்தும் உள்ளே சிக்கி விட்டா போதும் என வெளியே ஓடி விட்டார்.அன்புமணி,மாறன் சகோதரர்கள் இன்னும் நம்பிக்கையூட்டச் செய்கிறார்கள்.
நாமும் எம்.ஜி.ஆர் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையில் அரசியல் புகுந்த நடிகர்களின் அரசியல் பார்வைகள் தீர்க்கமாயில்லை.சிரமப் பட்டு உழைத்து சினிமாவில் சம்பாதித்த பணத்தை மீண்டும் அரசியலுக்குள் செலவு செய்வதென்பதிலிருந்தே வியாபார நோக்கங்களுக்கான சிந்தாந்தங்கள் புரிகிறது.
வை.கோ கழகத்திலிருந்து பிரிந்து வந்த நாள்முதல் விடாமல் நிற்கும் ஒரே கொள்கை விடுதலைப் புலிகள் ஆதரவு.சிறை வாழ்க்கை உட்பட விடுதலை ஆதரவில் உறுதியாய் இருப்பது ஒன்றே அவரது கொள்கைக்கான பலம்.அதனையடுத்து அவரது பேச்சுத் திறன் மேடையின் கீழே நிற்பவனை வசீகரிக்க செய்யும்.இது தவிர்த்து நோக்கினால் அவரது அரசியல் சமரசங்கள்,பார்வைகள் அனைத்தும் கேலிக்கூத்து.இன்னும் காலம் தாழ்ந்து விடவில்லை வை.கோ விற்கு.வரும் காலம் திட்டமிடுதல்கள் சரியாக இருந்தால் சறுக்கல்களை நிவர்த்தி செய்ய இயலும்.பழ.நெடுமாறன் தமிழகத்தில் ஒரு சிறந்த அரசியல்வாதியாய் அனைவர் முன்னும் வலம் வந்திருக்க வேண்டியவர்.இரு கழக இயக்கங்களும் அவரை ஓரம் கட்டி விட்டார்கள்.
இதுவரை சொன்னவை சொல்லவா வேண்டாமா என கணினியில் தூக்கம் போட்ட எழுத்துக்கள்.ஆனால் இதனை பதிவேற்றி விடுவது என்ற தீர்மானத்திற்கு கொண்டு வந்தது நேற்றைய தொலைக்காட்சியில் கண்ட மு.க.அழகிரியின் பேச்சுக்கள்.மரம் வெட்டிய காலம் தொட்டே மருத்துவரின் அரசியல் பிடிக்காமல் போனது.ஆனால் தி.மு.க தனது தமிழ்ப் பாதையை விட்டுப் போன காலியிடத்தை நிரப்புகிறாரோ என்று மக்கள் தொலைக்காட்சியின் மேம்போக்கு தெரிந்தது.ஆனால் பதவியே பிரதானம் என்பதிலே கண் என்பது அவரது தாவல்கள் சொன்னது.தேர்தல் காலத்து கூட்டணித் தாவல் மருத்துவருக்கு மட்டுமே சொந்தமன்று.அதற்கு பட்டயம் போட கலைஞரும் முன்னோடிதான்.
இவர்களுக்குள் கொள்கை சண்டைகள் இருந்தாலும் எதிர் அறிக்கைகள் விட்டாலும் தரமிழந்து தாழ்ந்து விடவில்லையெனவே நினைக்கிறேன்.ஜெயலலிதா கூட உதிர்ந்த ரோமங்கள் என நெடுஞ்செழியனை வசைபாடியதை விட கீழே இறங்கி வந்து விடவில்லை.இரு கழகங்களும் எதிர்க்கட்சியை கொச்சையாகத் திட்டுவதற்கு தொண்டர்கள் என்ற பெயரில் காசுப்பேச்சாளிகள் வைத்திருக்கிறார்கள்.கலைஞர் மேல் இத்தனை கல்லடிகள் விழுந்தும் வாய் தரம் தாழ்ந்ததில்லை என நினைக்கிறேன்.ஸ்டாலின் கூட அரசியல் பக்குவம் பெற்று விட்டமாதிரியே தெரிகிறது.
ஆனால் இன்னொரு மகன் அழகிரிக்கு பேசத் தெரியவில்லையா அல்லது அவரது குணநலன்களைப் பிரதிபலிக்கிறதா எனத் தெரியவில்லை.நேற்று பின்புறத்து கதவு வழியாக அன்புமணி மத்தியபதவிக்குப் போனவர் என்றார்.அது அரசியல் விமர்சனம் சரி.ஆனால் அன்பு மணியை திட்டுவதாக நினைத்து "எல்லோரும் ராமதாஸை அரசியல் வியாபாரிங்கிறாங்க.ஆனா உங்கப்பன் அரசியல் விபச்சாரி" என்றாரே பார்க்கலாம்.மனம் பகீர் என்றது.மதுரையையும் வருங்கால தி.மு.க வையும் நினைத்தால் பயமாக இருக்கிறது.
பையன் தவறு செய்தால் அப்பனிடமே முறையிடுவது வழக்கம்.அப்பனாக மட்டும் இல்லாமல் தமிழகத்தின் முதல்வரின் மகன் என்ற காரணத்தாலும் கலைஞரே!அழகிரி என்று பெயர் கொண்டு இது அழகா?உங்கள் தலைமைக்கும் பெயர் காப்பாற்றவும் எவ்வளவு பொறுப்புக்கள் இருக்கிறது.உங்கள் வயதுக்கு உண்ணாவிரதம் இருப்பதே கவலைக்குரியது.ஆனால் அதையும் அரசியலுக்காக வேண்டி உண்ணாவிரதம் திருப்தி அளிக்கிறதென்றும் ஜெயலலிதாவின் தனி ஈழம் பெற்றுத் தருவேன் குரலுக்கு எதிர் கணையாக மாற்று அமைப்புகள் மூலமாவது ஈழம் அமைந்தே தீரும் என்கிறீர்கள்.இப்படித்தான் ஈழம் அமையவேண்டும் என்ற கனவு கண்டவன் கூட எப்படியாவது ஈழம் அமையவேண்டும் என்றுதான் நினைப்பான்.இப்போதைய மக்களின் அவலங்களை காண்பவர்களின் எண்ணம் கூட அதுவே.
ஈழ விடுதலை உணர்வுகளின் இந்தக் காலகட்டத்தில் ஒரு உரிமைப் போருக்கு குரல் கொடுப்பதோடு தமிழக அரசியலை மாற்றிப் போட இயல்பாகவே வந்த மக்கள் எழுச்சி தமிழக அரசியலையும் மாற்றி அமைப்பதற்கான அருமையான சந்தர்ப்பங்கள் அமைந்தது.ஆனால் திராவிட வேர்களின் நீளம் அதன் ஆழம் கண்டால் தமிழகமே!என் தமிழகமே!புதிய விழுதுகளை எப்பொழுது படைக்கப் போகிறாய்?
13 comments:
//என் தமிழகமே!புதிய விழுதுகளை எப்பொழுது படைக்கப் போகிறாய்? //
அறிவுவசப்படுவது ஓங்கும் நாளில், புது விழுதும் துளிர் விடும்...
////என் தமிழகமே!புதிய விழுதுகளை எப்பொழுது படைக்கப் போகிறாய்? //
அறிவுவசப்படுவது ஓங்கும் நாளில், புது விழுதும் துளிர் விடும்..//
ஆகா!வானம் வசப்படும்தான் இதுவரை கேட்டிருக்கிறேன்.
அறிவு வசப்படுவது ஓங்கும் நாளில் புது விழுதும் துளிர் விடும்.
வரிகள் யாருக்கும் புரியறமாதிரி இருக்குது.எளிய நடை மணியண்ணா.நன்றி.
//என் தமிழகமே!புதிய விழுதுகளை எப்பொழுது படைக்கப் போகிறாய்? //
மச்சான் சீக்கிரமா :-) படைப்போம்
//இரு இயக்கங்களின் சில அரசியல் பார்வைகள் தமிழகத்திற்கு ஆக்க பூர்வமானதாக இல்லை.//
போட்டுல அடிச்ச மாதிரி சும்மா நச்னு சொன்ன மச்சான்
முழுவது படித்தேன் எல்லா அரசியல் வாதிகளின் முகத்தையும் கிழித்துவிட்டாய் மச்சான்
.. தமிழ்கம் எப்போது திருந்தும் ..
//ஈழ விடுதலை உணர்வுகளின் இந்தக் காலகட்டத்தில் ஒரு உரிமைப் போருக்கு குரல் கொடுப்பதோடு தமிழக அரசியலை மாற்றிப் போட இயல்பாகவே வந்த மக்கள் எழுச்சி தமிழக அரசியலையும் மாற்றி அமைப்பதற்கான அருமையான சந்தர்ப்பங்கள் அமைந்தது.//
அப்படி வந்து விட்டால் என்று பயம் இளைய பிரபல பதிவர்களிடம் பார்க்க முடிந்தது :-( அது தான் வருத்தம்
//மச்சான் சீக்கிரமா :-) படைப்போம்//
உள்குத்து!நுண்ணரசியல் மாதிரி வார்த்தைகளை இங்கே வந்துதான் தெரிந்து கொண்டேன்.
அப்படி ஏதாவதும் இருந்தா நான் அம்பேல்.
//போட்டுல அடிச்ச மாதிரி சும்மா நச்னு சொன்ன மச்சான்//
இங்கே புரியுது மாமேய்:)
//முழுவது படித்தேன் எல்லா அரசியல் வாதிகளின் முகத்தையும் கிழித்துவிட்டாய் மச்சான்
.. தமிழ்கம் எப்போது திருந்தும் ..//
மச்சி!கட்சி என்ற கோட்டிலிருந்து தமிழ் என்ற அடுத்த படிக்கு வந்து விட்டோமுன்னா எல்லாமே சாத்தியமே.
//அப்படி வந்து விட்டால் என்று பயம் இளைய பிரபல பதிவர்களிடம் பார்க்க முடிந்தது :-( அது தான் வருத்தம்//
பதிவர்கள் வெறும் பிரதிபலிக்கும் கண்ணாடி மட்டுமே.அரசியல் நாடகங்கள் சில அரங்கேறாமல் இருந்திருக்கலாம்.
4 அடிச்சதுக்கு நன்றி சுரேஷ்.
பழமைபேசி said...//
அறிவு வசப்படுவது ஓங்கும் நாளில் புது விழுதும் துளிர் விடும்.//
இந்த வரிகளைப் படித்த பின்னர்தான் பழமைபேசியின் பதிவுக்கே போய் ஒரு சுற்று சுற்றி வந்தேன்.
அர்த்தமுள்ள பதிவு ராஜநடராஜன்.
//பழமைபேசி said...//
அறிவு வசப்படுவது ஓங்கும் நாளில் புது விழுதும் துளிர் விடும்.//
இந்த வரிகளைப் படித்த பின்னர்தான் பழமைபேசியின் பதிவுக்கே போய் ஒரு சுற்று சுற்றி வந்தேன்.//
வாங்க ஷண்முகப்ரியன் சார்!மணியண்ணன் தமிழ் நிறையவே சொல்கிறார்.
Post a Comment