Followers

Thursday, May 26, 2011

ஈழ மக்களுக்கும் மண்ணுக்கும் தமிழர்களின் பங்கு-பகுதி 1

பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமிருந்தாலும் பதிவுலகம் தேர்தலுக்கு அப்பாலான தமிழக அரசியல் களத்தையே இன்னும் முன்னிலைப்படுத்துகின்றன.உலகளாவிய செய்திகள்,நிகழ்வுகள் என்று எந்த விமர்சிப்பும் குறைவாகவே காணப்படுகின்றன.இதனை விடுத்து சென்ற பதிவின் தொடர்ச்சிக்கு முன் சில சம கால நிகழ்வுகளாக இஸ்ரேல்,பாலஸ்தீனிய தனி நாடுகள் உருவாகுவதற்கான மாற்றங்களை அமெரிக்காவின் ஒபாமாவும், இஸ்ரேலின் நெத்தன்யாகுவும் முன்வைத்துள்ளதை தொடர்ந்து விட்டு ஈழமும் தனி நாடாக உருவாகும் சாத்தியங்களை ஆராயலாம்.
 துவக்க கால இல்ங்கை அரசு, போராளிகள் என்ற இரட்டை நிலை சதுரங்கம்

சமீபத்தில் இஸ்ரேலிய,பாலஸ்தீனர்களுக்கு நிகழ்ந்த இன்னும் நிகழும் மாற்றங்களையெல்லாம் நாம் உன்னிப்பாக மட்டுமல்ல மேலோட்டமாகக் கூட கவனிக்கத் தவறி விடுகிறோம்.விலைவாசி உயர்வுகளுக்கான காரணங்களாக மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறோம்.இந்திய அரசு நேர்மையின்மை,ஊழல்கள் காரணம் என்ற போதிலும் இதன் துவக்கப்புள்ளி ஆட்சி முறைக்கும் அப்பாற் பட்டது.அதே போல் உலகரங்கு அரசியல் மாறுதல்களும் நம்மோடு ஒப்பீட்டு அளவிலோ,நேரடி,மறைமுகமாகவோ தொடர்புடையவை.உதாரணத்திற்கு சொல்லப்போனால் முன்பு ஜார்ஜ் புஷ்,இப்பொழுது ஒபாமா இடும் ஒரு கையெழுத்து தமிழகத்தில் வாழும் சராசரி மனிதனையும் தாக்கும் வலைப்பின்னல் கொண்டது.

இந்தியா மூக்கை நுழைத்த பின் உலகரங்காகிப் போன மூன்று கள நிலை ஈழப்போராட்டம்.
உலக அரசியல் மாற்றங்களும் கூட தமது சுய தேவைகள் கருதி அவ்வப்போது தன்னை புதுப்பித்துக் கொள்ளும் திசுக்களைக் கொண்டது.நீண்ட வரலாறு,இனம்,மொழி,சாத்வீக போராட்டம், ஆயுதப் போராட்டம்,தீவிரவாதம், மக்கள் வாழ்க்கை பின்னடைவு,கை ஓங்கிய நிலையில் இன்னொரு மொழி,இன மக்களை அடக்கும்,ஒடுக்கும் நிலையென இஸ்ரேலும்,பாலஸ்தீனியமும் ஈழப்போராட்டத்தோடு சில சமயம் இஸ்ரேலின் நிலைப்பாட்டிலும் சில சமயங்களில் பாலஸ்தீனிய நிலைப்பாட்டிலும் கலந்து பயணிக்கின்றது.தீரா சண்டைக்காரர்களாய் யுகங்களாய் இருந்தவர்கள் இருவரும்.இஸ்ரேலின் கரம் ஓங்கியிருந்தும் இஸ்ரேலை அங்கீகரிக்க மாட்டோம் என்றும் உலக வரைபடத்திலேயே இஸ்ரேலை இல்லாமல் செய்வோம் என்ற ஈரானின் பக்கவாத்திய துணையாலும் கூட பாலஸ்தீனியர்கள் கெஞ்சிய நிலை போய் இதோ வலிமை மிக்க இஸ்ரேல் ஒரே மண்ணில் இரண்டு நாடுகள் திட்டத்திற்கு எனது இஸ்ரேல் நாட்டை அங்கீகரி பின் இரு நாடு திட்டங்களை செயல்படுத்துவோம்  என சொல்லுமளவுக்கு இறங்கி வந்திருக்கிறது.
மஞ்சள் நிறத்தில் பாலஸ்தீனம் பிரிந்தும் நீல நிறத்தில் இஸ்ரேலின் நிலமும்

இலங்கையின் வட,கிழக்கு மக்களாய் உணர்வு பூர்வமாகவோ அல்லது மொழி சார்ந்த உணர்வு பூர்வமாகவோ அல்லது யதார்த்தமாகவாவது ஈழப்போராட்டத்தையும்,இலங்கை அரசின் செயல்கள்,நிலைப்பாட்டை கவனிக்கவும்,கருத்து சொல்லவும் கற்றுக்கொள்ள வேண்டும்.அது விடுத்து விடுதலைப்புலிகள் வஞ்சினமோ,இலங்கை குட்டி நாடு அதனை எப்படி பிரிக்க முடியுமென்ற வாதமோ அகன்ற உலக பார்வையில்லாத காரணம் கொண்டே எனலாம்.விடுதலைப்புலிகளுக்கு தீவிர வாத முத்திரை குத்தப்பட்டால் பாலஸ்தீனியர்களும் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டவர்களே.
 
இஸ்ரேலியர்களுக்கு பைபிள் காலம் தொட்ட நீண்ட வரலாறு மாதிரி தமிழனும் நீண்ட வரலாறு கொண்டவனே.தன் மண்,மொழி,இனம்,பண்பாடு,கலாச்சாரம் என்ற சுய கௌரவமும்,புரிதலும் தமிழர்களுக்கு வேண்டும்.பாலஸ்தீனியத்தை தாங்கிப் பிடிப்பது அரேபிய மொழி பேசுபவர்களின் பின்புலம் மற்றும் ஈரானின் இஸ்ரேலின் எதிர்ப்பு நிலை.இதே களநிலையை மொத்த உலக தமிழர்களும் கொண்டுள்ளோம்.அமெரிக்காவின் இஸ்ரேல் சார்பு நிலை மாதிரி இந்தியாவும் இலங்கை சார்பு நிலை கொண்டது.இதோ அமெரிக்கா ஜார்ஜ் புஷ் காலத்திலேயே ஒருங்கிணைந்த இரு நாடுகள் திட்டத்திற்கு தனது குரலை மெள்ள வெளிப்படுத்தியது.இன்று ஒபாமா அதனை உறுதிப்படுத்துகிறார்.அதே போல் இந்தியாவும் ஈழமக்களுக்கு சார்பாக குரல் கொடுக்கும் சூழலை தமிழர்கள் உருவாக்க வேண்டும்.இத்தனைக்கும் ஜெருசலம் தங்கள் தலைநகர் என்று இரு தரப்பும் சண்டை போட்டுக்கொண்டன.குரங்கு அப்பம் பிய்த்த கதையாய் பாலஸ்தீனம் துண்டு துண்டாய் நிலப்பகுதிகள் பிரிந்து நிற்கின்றன
 இலங்கையை இரண்டாகப் பிரிப்பதில் இப்படி எந்த விதச் சிக்கலுமில்லை.தெற்குப் பகுதி சிங்களவர்களுக்கும் வட,கிழக்கு பூர்வீகமாக தமிழர்களுக்குமென இருந்தே வந்திருக்கின்றது.பாலஸ்தீனியர்கள் ஹமாஸ் , ஃபத்தா என்று பிரிந்து கிடப்பது போலவே தமிழர்களின் நிலையும் கூட.ஹிட்லர் காலத்து யூதர்களின் அவல நிலை மாதிரியே ராஜபக்சே காலத்து இனப் படுகொலைகளும்,முள்வேலிக் கம்பி சிறை வாழ்க்கையும்.யூதர்களின் ஹோலகாஸ்ட்டிற்கும் அதிக ஒப்பீடாக ஈழப்படுகொலைகளும் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைகளும்.எனவே தனி ஈழம் அமைப்பதற்கான அத்தனை தேவைகளும் காரணங்களும் அப்படியே உறங்கி கிடக்கின்றன.போர்க்குற்ற அறிக்கைக்கு இன்னும் பதில் அளிக்காமல் ராஜபக்சே இன்னும் காலம் கடத்துவதால் இனிமேற் கொண்டு என்ன செய்வது என ஐ.நா தீர்மானிக்குமென பான் கி மூன் தெரிவித்துள்ளார்.இவற்றையெல்லாம் உற்றுக்கவனிப்பதும் ஈழ மக்களுக்கு  சாதகமான நிலைகள் தென்படுகிறதா என்பதை கவனிப்பதையும் இல்லாவிடில் போராட்ட முகமாக தமிழர்கள் குரல் கொடுப்பதும்,மனித உரிமை குழுக்களின் உதவிகள் போன்றவை இன்னும் அவசியம்.

இன்னும் தொடர்ந்து அடுத்த பகுதியில்.

Sunday, May 22, 2011

என்ன செய்யலாம் இதற்காக? ஆவண நூல் இலங்கை அரசால் பறிமுதல்

சென்ற பதிவின் தொடர்ச்சியாக மீண்டுமொரு பதிவை பொதுவில் வைக்கும் முன் பத்திரிகை செய்தி கருதி இந்த பதிவு வெளியிடப்படுகிறது.இதற்கு முன்  ஜாலியன்வாலாபாக்கா?முள்ளிவாய்க்காலா என்ற பதிவில் என்ன செய்யலாம் இதற்காக நூலாசிரியர் பிரபாகரன் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.அவரது புத்தகம் கனடாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு முன் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்தி.
  பத்திரிகை செய்தி.
 
                      கடந்த மே 9 ஆம் தேதி சென்னையில் இருந்து கப்பல் மூலம் கனடாவிருக்கு அனுப்பப் பட்ட என்னசெய்யலாம் இதற்காக? எனும் ஈழ இனப்படுகொலைப் புகைப்பட ஆவணத்தின் 1000 பிரதிகளை இலங்கை அரசு கொழும்பு துறைமுகத்தில் சட்ட விரோதமாக பறிமுதல் செய்துள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட இந்தியாவிலும் சரி, இறக்குமதியாகவிருந்த கனடாவிலும் சரி இந்த ஆவணம் தடை செய்யப்பட்ட ஆவணம் அல்ல.

                       மேலும் இவ்விரு நாடுகளிலும் இந்நூலுக்கான வெளியீட்டு நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. கடந்த சனவரி 9 அன்று இந்தியாவில் சென்னையிலும், கடந்த மார்ச் 13 அன்று கனடாவில் டொரோண்டோ நகரிலும், 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இந்நிகழ்வுகள் நடைபெற்றன.இவ்விரு நாடுகளில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இந்நூல் சென்றடைந்துள்ளது. பிரான்சு தலைநகர் பாரீசில் பெப்.4 ஆம் தேதியில் இந்நூல் ஆர்வலர்களால் நூல் அறிமுக நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஐ. நா. நிபுணர் குழு, டப்ளின் தீர்ப்பாயக்க்குழு உறுப்பினர்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள், பல நாடுகளின் நாடாளுமன்ற பிரதி நிதிகள் அனைவருக்கும் இந்நூல் உலகம் முழுவதும் உள்ள மனித நேய ஆர்வலர்களால்  கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.60 ஆண்டு கால ஈழ இனப்படுகொலைப் புகைப்படங்களை, 350 க்கும் மேல் உள்ளடக்கியுள்ள இந்த ஆவணம், பார்ப்பவர்களின் மனதில் மனித நேயத்தைதூண்டும் மனித நேய நூலாக இருப்பதால் உலகில் எந்த ஒரு நாட்டிலும் இந்நூல் தடுக்கப்படவில்லை.
 
                        இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இந்நூல் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தினமணி, ஜூனியர் விகடன், ஆனந்த விகடன், குமுதம், இந்தியா டுடே , சண்டே இந்தியன், உயிர்மை, புதிய பார்வை உள்ளிட்ட தமிழகத்தின் 30 க்கும் மேற்பட்ட இதழ்கள் நூலை வரவேற்று தமது கருத்தை பதிவு செய்துள்ளன.தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சியினர், தமிழ்த் திரைத் துறையினர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், காந்தியவாதிகள், அனைத்து மத குருமார்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்நூலை பெரிதும் வரவேற்றுள்ளனர்.

                        எனவே இந்தியாவிலும் கனடாவிலும் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் வரவேற்பு பெற்றுள்ள இந்நூலை இந்திய சுங்கத்துறை அனுமதியுடன் கனடாவிற்கு செல்லும் வழியில் பறிமுதல் செய்ய இலங்கை சுங்கத் துறையினருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. இது  இந்திய, கனடா மக்களின் கருத்து சுதந்திர உரிமையை இலங்கை அரசு பறிக்கும் செயலாகும் என தெரிவித்து இலங்கை மீது வழக்கு தொடர வேண்டும் என சட்ட நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, அனைத்து இந்திய ஊடகங்களும், தமிழகத்தின் அனைத்து அரசியல் அமைப்புகளும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இலங்கை அரசின் இச்செயலை கண்டிப்பதோடு, சட்ட விரோதமாக பறிமுதல் செய்த நூலை இலங்கை அரசு விடுவிக்க அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள முன்வர வேண்டும்.

ஜெ.பிரபாகரன்,
நூலாசிரியர்,
என்ன செய்யலாம் இதற்காக?

அ.சரவணகுமார்,
பென்னி குயிக் பதிப்பகம்.
மதுரை.

20 .05 .11
மதுரை.

Thursday, May 19, 2011

தமிழர்களின் சகோதர யுத்தமும் மத்திய அரசின் சுய முடிவுகளும்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று அன்று தொட்டு இன்று வரை தமிழனைப்போல் சகோதரத்துவம் பேணியவர்கள் எவருமில்லை.அதற்கு கணிகைப் பூங்குன்றனார் முதல் இன்றைய கோடம்பாக்க திரைப்படத்துறை, கேரளா,குஜராத்,பீகார்,உ.பி யிலிருந்து தமிழகம் வருபவர்களை வரவேற்பது வரையும் உலகமெல்லாம் தமிழன் பரவியிருப்பதே சாட்சி.அதே போல் சகோதர யுத்தம் என்ற சொல்லாடல் ஈழப் போராளிகளின் உட்சண்டைகளால் உருவாகியகோட்பாடுமல்ல.சேரன்,சோழன்,பாண்டியன்,பல்லவர்கள் இன்னும் பல முன ஆண்ட பாட்டன்,பாட்டிகள் முதல் தொடர்ந்து கொண்டே வரும் வரலாற்று சங்கிலி இது.

சுதந்திர இந்தியாவில் துவக்கத்தில் தமிழகத்தில் காங்கிரஸின் கை ஓங்கியிருந்திருந்தால் நிலப்பிரபுத்துவ ஆட்சி முறையே மேலோங்கி முந்தைய கேரளத்து நக்ஸலிசம் பின் கம்யூனிஸம் என தமிழகத்திலும் பரவியிருக்கும்.அதன் பாதையை கல்வியென்று மாற்றியதில் காமராஜ் காங்கிரஸ்க்கும் சமூகம்,மொழி உணர்வாக திசை மாற்றியதில் திராவிட கழகங்களுக்கும் பங்குண்டு என்று நாணயத்தின் மறுபக்கத்தையும் சொல்லி வைப்போம்.அதே நேரத்தில் திராவிட கழகங்களின் வரலாற்றை நோக்கினால் ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து குளோனிங் செய்யப்பட்ட சகோதர யுத்த கழகங்களாய்

திராவிட கழகம்
தி.மு.க
அ.தி.மு.க
ம.தி.மு.க
தே.மு.தி.க
இன்னும் பல ஜாதி கட்சிகள்

என்று கட்டெறும்புக் கதைகளையும் சகோதர யுத்தம் என்றே சொல்லலாம்.ஈழப் போராட்டம் ரத்த சிவப்பை தன் மீது தெளித்துக் கொண்டதால் சுதந்திர தாகத்துடன் ரத்த வாடையும் வீசுகிறது.ஆனால் சமூக கழகப் போராட்டங்கள் ஜனநாயக முகமூடி அணிந்து கொள்வதால் எழுகின்ற குரலோசையில் சகோதர யுத்த வாடை பெரிதுபடுத்தாமல் காணமல் போய் விடுகிறது.தமிழக கழகங்களின் அரசியலும் சகோதர யுத்தமே என்பதற்கு அரசியல் கொலைகள் இன்று வரை தொடர்வதே சாட்சி.

ஐ.நாவின் அறிக்கையின் சில விழுக்காடுகள் இருபக்கங்களின் பாதகங்களை விமர்சித்தாலும் பெரும் விழுக்காடுகள் ராஜபக்சேவின் இலங்கை அரசு போர்க்குற்றங்களை உலகரங்கில் முன் வைக்கின்றன. தமிழக சகோதர யுத்தம் காரணம் கொண்டே மூன்று காத தூரத்திலிருக்கும் சீனாக்காரனும், ரஷ்யாக்காரனும் குறுக்கே நின்று வழிமறிக்கிறானே என்று இக்கரையிலிருந்து அக்கரை(றை)க்கு கூக்குரலிட வைக்கிறது.இந்திப் போராட்டம் என்ற ஒன்று தமிழகத்தில் நிகழாமல் இருந்திருந்தால் மத்திய அரசை எதிர்த்து போராடுவதில் நியாயமேயில்லை என்று ஜார்ஜ் கோட்டை கூரையேறியோ, புதிய சட்டசபை வளாகத்தில் குரல் எதிரொலிக்கும் இடத்தில் நின்று கொண்டு சத்தமிடலாம்.

இனி காங்கிரஸ் என்ற பெயரால்

ஒரே தவறை மீண்டும் மீண்டும் காங்கிரஸ் மத்திய ஆட்சி திரும்ப திரும்ப ஏன் செய்கிறது என்று புரியவில்லை.இதோ ராஜபக்சே போர்க்குற்றங்களிலிருந்து தப்பிக்க வேண்டி ஜி.எல். பெருசை டெல்லி போய் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு வா என்கிறது.
புரோட்டகால் படி அப்படித்தான் பேச்சு வார்த்தை நிகழும் என்று யாராவது நினைத்தால் இலங்கை சார்பில் ராஜபக்சே காப்பற்றப்படுவதற்கு உத்தரவாதம் கேட்டு பெரிசும்,இந்திய நலன் சார்ந்த முடிவாய் இந்தியாவும் எடுக்கும் முடிவே இன்னுமொரு முறை அரங்கேறப் போகிறது.நாம் நினைப்பது தவறென்றால் மத்திய அரசும்,இலங்கை அரசும் தாம் செய்வது சரியென்று நிரூபணம் செய்யவேண்டும்.இவர்கள் நிருபணத்தின் லட்சணம் தமிழகத்தில் ஜனநாயக தேர்தல் வடிவிலும்,இலங்கையில் இனப்படுகொலை போர்க்குற்றவாளிகள் என்ற தண்டனைக் கைதிகளாய் தமிழகமும், உலகரங்கும் உரக்கச் சொல்கின்றன.

தீர்வுக்கான பேச்சு வார்த்தை என்றால் ஒன்று காணிக்காரர்களான மக்கள் பிரதிநிதிகளாய் ஈழத்தமிழர்களையும் கூட புலம் பெயர் தமிழர்களையோ அமர்த்தி பேச வைக்க வேண்டும்.இல்லாவிட்டால் தமிழக ஆட்சி பிரதிநிதிகளுடன் ஈழத்தமிழ் மக்கள் ஆதரவாளர்களையாவது இணைத்து அழைத்து பேச வேண்டும்.இரண்டுமற்ற தன்மையாய் மத்திய அரசும்,இலங்கை அரசுமே சேர்ந்து பேச்சுவார்த்தை நிகழ்த்தி விட்டு அதனை ஈழ மக்கள் மீது திணிப்பது நிரந்தர தீர்வை தருவதாக அமையாது.அரசு இய்ந்திரத்தின்  கைத்தடிகள் என்பதலாயே இரு பக்கங்களும் எடுக்கும் முடிவுகள் அதனையே பேச்சுவார்த்தை,உடன்படிக்கை என்ற பெயரில் மறைமுகமாக ஈழமக்கள் மீது சுமத்தும் சூழ்நிலைகளை உருவாக்குவது எதிர்காலத்தில் பயனை தராது.இவர்கள் தரப்பிலிருந்து எடுக்கப்படும் முடிவுகள் தமிழர் சார்புக்கும் சாதகமாக இருக்குமா என்பதும் கேள்விக்குறி என்பதோடு இனியும் பொறுத்திருந்து ஆராய வேண்டிய ஒன்று.

காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுடனும், காஷ்மீர் பிரதிநிதிகளுடனும் பேசும் இந்தியா இலங்கைப் பிரச்சினையில் ஏன் இலங்கையை மட்டும் முன்னிலைப்படுத்துகிறது. யாசகம் கேட்கும் நிலையில் ஈழத்தமிழன் என்பதால் இந்த முடிவா?இதே தவறைத்தானே ராஜிவ் காந்தியின் காலத்து அரசு இயந்திர அல்லக்கைகளாய்  தீட்சித் போன்றவர்கள் செய்தார்கள்.இவைகளை சொல்லி விட்டு ராஜிவ் காந்தியின் படுகொலையையும் தொடாமல் போனால் அது ஒரு பக்க பார்வையாய் போய் விடும்.ராஜிவ் காந்தியின் படுகொலை வரலாற்றுத் தவறே என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.90களின் தமிழக மக்கள் மனமும் அதனையே பிரதிபலித்தன.ராஜிவ் காந்தியின் படுகொலை எப்படி தவறோ அதே போல் முள்ளிவாய்க்காலில் மக்கள் கொல்லப்பட்டதும் வரலாற்றுத் தவறே.ஒரு தவறால் இன்னொரு தவறை நேர்மை படுத்தி விட முடியாது.ஒரு தேசத்தின் பிரதிநிதியின் உயிர் பெரிதா அல்லது ஒரு மில்லியன் மக்களின் துயரம் பெரிதா என்று மக்கள் மனம் ஊஞ்சலாடினால் மக்களின் துயரின் பக்கத்தில் நிற்பதே மனிதாபிமானம் மிக்கவர்கள் எடுக்கும் முடிவாக இருக்கும்.

பஞ்சாபின் களங்கமாய் இந்திராகாந்தி படுகொலையே மறக்கப்பட்டு மன்மோகன் சிங் பிரதமராகும் தேசம்தான் மனிதாபிமானம் இழந்து உலகரங்கில் ஏனைய மனித உரிமைகளை ஓரளவுக்காவது மதிக்கும் நாடுகள் ஐ.நாவின் இலஙகை போர் அறிக்கை பற்றிக் குரல் கொடுக்கும் போது  இந்தியா மௌனியாய் வாய் மூடி மௌனம் காக்கிறது.இதனை குற்ற உணர்வு என்று சொல்லவா அல்லது இருதலைக் கொள்ளி எறும்பு நிலையென்று பரிதாபப்படவா அல்லது தவறான வெளிநாட்டுக்கொள்கையில் மாட்டிக்கொண்டு  செய்வதறியாது அடுத்து வரும் ஆட்சிக்கு பிரச்சினையை தள்ளிவிட்டுத் தப்பித்துக் கொள்ளலாமென்ற காலம் தாமதித்தலா?இலங்கைப் பிரச்சினையை தீர்க்கும் தூரப்பார்வை கொண்ட பிரதமர் யாரென இனிமேல்தான் தேடவேண்டும்.அது நிச்சயமாய் மன்மோகன் சிங் அல்ல என்பது அவரது எனக்குத் தெரியாது நிலைப்பாட்டில் நன்றாகவே புரிகிறது.மாறும் இந்திய,தமிழக அரசியல் களங்களும்,உலக அரசியலும் எந்த தீர்வை முன் வைக்கிறதென பார்க்கலாம்.

இறுதியாக ஒன்று!மக்கள் உணர்வுகள் புரியாத அரசு இயந்திரமாய் தேசிய முகமூடி போட்டுக்கொண்டு கட்சி என்ற பெயரில் வலம் வரும்போது இனி வரும் கட்சிகளும் தமிழ் சந்ததிகளால் ஓட்டு என்ற ஆயுதத்தால் முறியடிக்கப்படட்டும். 

விமர்சனங்கள் தாண்டி ஆக்கபூர்வமாக செயல்படுவதற்கு சாத்தியங்கள் இருக்கிறதா என இனி அடுத்து...

Wednesday, May 18, 2011

ஜாலியன்வாலாபாக்கா!முள்ளிவாய்க்காலா!

தலை...ப்பு தேடியதில் பெரும் தடுமாற்றம்.இந்த பதிவை வெறுமனே எழுதாமல் மே மாத தமிழ் இனப்படுகொலையின் ஆற்றாமையை நினைவு படுத்த வேண்டியாவது எழுதும் தேவைப்படுகிறது.

வலிகள் சுமந்த கடந்த இரு வருடங்களாய் போராட்ட முகமாய் சில சமயம் ஒருங்கிணைந்தும் பல நேரங்களில் தோல்வியின் அயர்ச்சியில் துவண்டுமே போயிருந்தோம்.போரில் துன்புற்ற,முள்வேலிக்குள் அடைக்கப்பட்ட மக்களுக்கு எதுவும் செய்ய இயலாத படி இலங்கை அரசின் இரும்புக்கரம் இந்திய காங்கிரஸ் அரசுடன் வலுவாக இருந்தமையால் மக்கள் துயரங்களுக்கு நேரடியாக உதவ இயலவில்லை.இந்திய இறையாண்மையென்ற பெயரில் குஜராத் பூகம்பத்திற்கு   கொட்டிக்கொடுக்க முடிந்த நம்மால் இனம்,மொழி என்ற பந்தத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஒன்றுமே செய்ய இயலவில்லை.

உதவ முயன்ற புலம்பெயர் தமிழர்கள் அனுப்பிய கப்பல் பொருட்களும் கடலாடி கரைதேடி சோர்ந்து போனதே மிச்சம்.அங்கே துவங்குகிறது ராஜபக்சேவின் மனிதாபிமானத்தின் லட்சணம். ஐ.நா அறிக்கைக்கும்,தமிழக அரசியல் களநிலை மாற்றங்களுக்கும் முன்பு இலங்கை அரசு அபரீதமான தன்னம்பிக்கையிலும்,அதிகாரத்திலும்,சர்வாதிகாரத்திலும்,தமிழ்மொழி, பண்பாட்டு,கலாச்சார உணர்வை சிதைப்பதில் போரில் வென்றவர்கள் என்ற பெயரிலும்,அரசுமுறை ராஜதந்திர முன்னெடுப்புக்களே உலக அரங்கில் எடுபடுமென்பதாலும் அமெரிக்கா முதல் தமிழக சாட்சியாக தமிழக எம்.பிக்கள் பல்காட்டி பொன்னாடை வரை மிக சாதுர்யமாக தங்கள் காய் நகர்த்தலை நகர்த்திக்கொண்டிருந்தார்கள்.

அப்படியும் ராஜபக்சேவின் அரசு இயந்திரத்துக்கு எதிராக அமிதாப் பச்சன் IIFA திரைப்பட விழாவுக்கு போகாமல் செயததும், லண்டனிருந்து ராஜபகசேவை துரத்தியடித்ததிலும், டைம்ஸ் பத்திரிகையிலிருந்து ராஜபக்சே  பெயரை நீக்கியதும்,ஐ.நா போர்க்குற்ற அறிக்கையில்  ராஜபக்சே குழுவினர் சிக்கியிருப்பதும் ராஜபக்சே குழுவினருக்கெதிரான சதுரங்க விளையாட்டில் தமிழர்கள் காய் நகர்த்திய நிலையில் இருக்கிறோம்.இப்பொழுது போர்க்குற்றங்களிலிருந்து தப்பிக்க இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஷ் இந்தியாவின் துணை தேடி ஓடுவதும் ஜெயலலிதாவுடன் இணைந்து செயல்பட இலங்கை விருப்பம் தெரிவிப்பதுமென இலங்கையின் புது நகர்வுகள் நிகழ்கின்றன

கட்சி,ஜாதி,மதம்,அகம்,புலம் என்று பிரிந்து கிடக்கும் அவல நிலையால் மட்டுமே இப்போது ஏழெட்டு கோடிக்கும் மேலான தமிழர்களின் உணர்வை 2கோடி சொச்சம் சிங்களவர்கள் தின்று கொன்று வென்று விட்டதாய் அல்ஜசிரா முதல் அமெரிக்கா வரை சென்ற மாதம் வரை ராஜபக்சே கொலை சிரிப்பும் வீங்கிய கண் தர்க்கமும் செய்து கொண்டதை அடிவயிறு எரிய   நம்மால் பார்த்து சகித்துக்கொள்ள முடிந்தது.

போரின் துவக்க கால கட்டத்தில் முள்ளிவாய்க்காலின் முள்வேலிக் கம்பி மக்களை மட்டுமே காண முடிந்தது.ஆனால் போரின் அவலங்கள் அதனை விட உக்கிரமானதென அதன் பின் வந்த சாட்சி ஆவணங்கள் இன்று மனிதம்,இதயம்,இணையம் என அங்கங்கே ஒளிந்து கொண்டுள்ளது.

ஈழப்படுகொலையின் அச்சு ஆவணம்

இயக்குநர் ராம் காட்சி  தளத்தில் சக இலக்கியவாதிகளோடு எழுதுவதை பகிர்ந்து கொண்டதோடு முத்துக்குமார் தீக்குளிப்பிற்கு பின்பு நிகழ்ந்த கட்சி சார்ந்த அரசியலை சொல்லியிருந்தார்.அதற்கு பின் ஈழ மக்களுக்காக என்ன செய்யலாம் என்று பிரபா என்பவரை அறிமுகப்படுத்தி விட்டு பதிவுலகிலிருந்து காணாமல் போய்விட்டார்.

பிரபாவின் என்ன செய்யலாம் என்ற புத்தகம் ஈழ இனப்படுகொலைகளுக்கான ஒரு ஆவணப்புத்தகம் என்பதோடு ஐ.நா அறிக்கையின் சாட்சியாக மட்டுமல்லாமல் உலகின் மன சாட்சியாய் எப்பொழுதும் விளங்கும் என நம்புகிறேன்.
 பட உதவி: முள்ளிவாய்க்காலின் கோரங்கள்...பதிவர் கே.ஆர்.பி செந்திலிடம் கேட்காமலே நட்பாய் இணைத்தது.

நெஞ்சிலே கனல் பற்றுகிறது.ஆங்கிலேயர் ஆட்சியின் அதிகாரத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் நடந்தால் அது இந்தியாவின் தேச விடுதலையின் அடையாளமா?
 பட உதவி: ஜாலியன்வாலாபாக் படுகொலை...கூகிளும் நட்பே!

அதுவே மறு உருவில ஈழமண்ணில் அப்பாவி மக்களாய் பெண்கள்,குழந்தைகள்,முதியவர்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல் குண்டு வீச்சுக்களில் கொல்லப்பட்டால் தீவிரவாத முத்திரையோடு தண்டனையின் அடையாளமா? அடக்குமுறைக்கு எதிராகவும், அந்நியத்தனத்துக்கும் பகத்சிங்கும், சுபாஷ் சந்திர போஸும் போராடினால் விடுதலை வீரர்களா? பிரபாகரனும்,பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்லுக்கு வசியபபட்ட ஈழப்போராளிகள் தமது மண்ணின் சுதந்திரத்துக்காக போராடினால் தீவிரவாதமா? மனிதர்களல்ல...வரலாறு மட்டுமே மனிதர்களை சுதந்திர வீரர்களாக பதிவு செய்ய தகுதி பெற்றது.

 ஈழ மண்ணின் சரித்திரத்தின் சில வரிகள் மட்டுமே இங்கே பதிவு செய்யப்படுகிறது.இன்னும் பதிவு தொடரென வரும்...

Tuesday, May 17, 2011

Modern Holocaust - மே 2009ன் மீள் பதிவு

தெற்காசியாவின் மூலையில் மிதந்து கிடந்த இலங்கை தீவை பிரபாகரன் உலகின் வரைபடத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். போரின் இறுதி நாட்களின் அவலங்களையும்,மர்ம முடிச்சுகளின் உண்மைகளையும் தமது காரண காரியங்களுக்காக மறைத்தோ பொய்களினால் நிரப்பி விடும் அபாயம் தொடர்கிறது.இன்னும் உலக ஊடகங்கள் அனுமதிக்காத நிலையிலும் அங்கொன்றும் இங்கொன்றும் உண்மை தன்னை முகம் காட்டிக் கொண்டுள்ளது.இதில் சோகம் என்னவென்றால் சில மைல் தூரங்களில் நின்று கொண்டு தமிழகம் உதவ இயலாமல் மௌனம் காப்பது.

உலகப் போரின் ஹிட்லரின் கொடுமைக்கு சாட்சியாய்


இலங்கைப் போரின் ராஜபக்சேவின் கொடுமைக்கு சாட்சியாய்


எல்லாம் முடிந்து விட்டது என்று பறை சாற்றிக் கொள்ளும் இலங்கை அரசு புதிய அரசியல் தீர்வுகளுக்கான நம்பிக்கையைத் தராமல் மக்களை முட் வேலிகளுக்குள் அமர்த்தி மனித உரிமை ஓட்டெடுப்பிலும் வெற்றி முகம் காட்டுகிறது.இதுவரை காலனிக்காரனாய் இருந்தவர்கள் ஓரளவுக்காவது மனிதநேயம் பற்றிய அனுதாபம் காட்டுவது தெரிகிறது.சுதந்திரம் பேசிய மார்க்சீய நாடுகள் தங்கள் சுய முகங்களை காட்டியிருக்கின்றன.

மேற்கத்திய நாடுகளாய் ஐரோப்பா மற்றும் அமெரிக்க பத்திரிகைகள் மெல்ல உண்மைகளைப் பேச ஆரம்பித்திருக்கிறது.இவை இலங்கை அரசின் சுயமுகத்தை உரித்துக் காட்டும் என நம்புவோம்.இதிலும் Bruce Fein கொண்டு வரும் நீதிமன்ற வழக்கிலும் கூட இலங்கை அரசு ஜெயித்து விடும் சாத்தியம் இருக்கலாம்.ஆனால் பூகோளமாய் தனக்குத் தானே தனது இறையாண்மையை பாகிஸ்தான்,சீனா,இந்தியா என்ற மூன்று துருப்புச் சீட்டுகளிலும் போரில் அடகு வைத்து விட்டது.இதிலும் கூட மூன்று சீட்டுக்காரனாய் கால நிலைக்குத் தக்கபடி கண்ணாமூச்சி ஆடலாம்.ஆனால் பக்கத்து கரையாய் தமிழகம் காத்திருக்கிறது இன்று அரசியல் காரணங்களுக்காக தோல்விகளால் துவண்டு போன போதிலும்.இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விசயம் காங்கிரஸ் தவிர தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஈழம் குறித்த மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரியவில்லை தேர்தல் அரசியல் நிலைப்பாடுகளால் பிரிந்து நிற்கும் சோகம் நினைவுக்கு வருவதைத் தவிர. மாநிலப் பிரச்சினைகளில் கருத்து வேறுபாடும் வெளியுறவு கொள்கையில் ஒருமித்த கருத்தும் என இரு வேறு நிலைபாடுகள் நமக்கு அவசியம்.நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உலகச் சூழல்,தமிழக அரசியல் சூழல் மாறும் காலம் வந்து கொண்டிருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

உண்மையான தூரப்பார்வை அரசியல் இருக்குமானால் இலங்கை அரசு தனக்குத் தானே சூழல்களை பாதகமாக மாற்றிக் கொள்வதை விட மக்களை தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தட்டும்.நிலத்தில் உழைத்தும்,மீன் பிடித்தும் தனது வீட்டை இருக்கும் மரம்,பனைகளை வைத்து மீள் கட்டிக் கொள்வார்கள்.அதற்குப் பின் அவர்களை சக மனிதர்களாக நடத்துவதும் இரண்டாம் தரக் குடிமகனாய் மீண்டும் மாற்றுவதும் பற்றி யோசிக்கட்டும்.இவைகள் எல்லாம் நிகழாத பட்சத்தில் மக்களின் எதிர்காலம் குறித்த பார்வையில் ஒருமித்த கருத்துக் கொண்ட புதிய அரசியல் அமைப்பு தோன்றுவது அவசியமாகிறது.அது தாய் மண்ணுக்குள்ளா அல்லது புலம் பெயர்ந்தா என தீர்மானிக்க வேண்டியவர்கள் மண்ணின் மைந்தர்களே.

படங்கள் கொண்டு வந்த இடங்கள்

1)http://history1900s.about.com/library/holocaust/blpictures.htm

2) சயந்தனின் துயரப் பதிவு : http://sajeek.com/?p=263

Monday, May 16, 2011

நக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்

தேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப் பூட்டி சாவியை எடுத்துகிட்டுப் போயிட்டார்.நமக்கு மட்டுமே கூகிள் சூனியம் வெச்சுட்டாங்கன்னு பார்த்தா மொத்த பதிவு கடைகளையும் இழுத்துப் பூட்டிட்டாங்கன்னு தேர்தல் முடிவுகள் வந்தப்புறம் மெதுவா தெரிந்தது:).

வேற வழியில்லாமல் தொலைக்காட்சிதான் கதின்னு ரிமோட்டை திருப்புனா என்றைக்கும் இல்லாத மாமியாவா கலைஞர் அய்ங்கரனில் எப்படியும் ஜெயிச்சிடப் போகிறோம்ங்கிற நம்பிக்கையில தி.மு.க இருந்ததால் மீசை நக்கீரன் கோபாலையும்,ரமேஷ் பிரபாவையும் வரவழைச்சு பந்தி வச்சிட்டிருக்காங்க.நக்கீரன் கோபால் கொஞ்சம் கிராம வாடை தமிழோட தான் எடுத்த தேர்தல் கணிப்புக்கும் மற்ற ஊடகங்கள் எடுத்த கணிப்புக்குமுள்ள ஆறு வித்தியாசங்களை அளந்து விட்டுகிட்டிருக்கிறார்.ரிமோட் பட்டனை தட்டுனா அடுத்த சானலுக்கும் மக்கள் போவார்கள் என்ற நினைவு இல்லாத ஞானசூன்யம் மாதிரி கோபால் புளுகு மூட்டைகளை எடுத்து விட்டுக் கொண்டிருக்க NDTV க்கு தாவினால் பிரணாப் ராய், இந்தியன் எக்ஸ்பிரஸ் சேகர் குப்தா பெங்கால்,தமிழ்நாடு,கேரளா,அஸ்ஸாம்,புதுச்சேரின்னு ஒரே வரிசையில பூஜ்யத்திலிருந்து எண்ணிக்கைக்காக காத்துக்கொண்டிருந்தார்கள். ஒரே நேரத்தில் திறக்கப்படும் EVM கூட முந்திக்கொண்டது கேரளாவே.

தபால் ஓட்டுக்கள் முன்பு எண்ணப்படுவதால் தமிழகத்தில் தாமதம் என்று பிரணாப் ராய் சொல்லி சிறிது நேரத்துக்குப் பின் முதல் முதல் போணி தி.மு.க விற்கு விழுந்தது.மறுபடியும் கலைஞர் அய்ங்கரனுக்கு வந்தால் ஸ்டாலின் முன்ணணி,துரைமுருகன் முன்ணணி என்பதோடு வீணாப் போன அனைத்து அமைச்சர்களின் பெயர்களையும் ஊமக்குசும்பு சிரிப்போட தேர்தல் வர்ணனையாளர் சொல்லிகிட்டிருக்கிறார். தி.மு.க 29 இடங்களில் முன்ணணி,அ.தி.மு.க 21 இடங்களின் முன்ணணின்னு NDTVக்கு மாறாக ஒரு அழுகுணி ஆட்டம் வேற.சன்,கலைஞர்,ஜெயா தொலைக்காட்சிகள் எப்பொழுது இந்த மாதிரி அல்ப சந்தோசங்களை நிறுத்திக் கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை.

கிட்டத் தட்ட 100 இடங்கள் வரைக்குமான எண்ணிக்கை நேரத்தில் நக்கீரன் கோபாலைக் காண இயலவில்லை.அப்புறமென்ன இருக்கவே இருக்குது மானாட மயிலாட கைவசம் கலைஞர் தொலைக்காட்சிக்கு.கைபேசி, தொலைக்காட்சி நேரலை,இணைய தகவல் பரிமாற்றம் என்று இருக்கும் இந்த கால கட்டத்தில் கூட பூனைக் கண்னை மூடிக்கொண்டால் தமிழகம் இருண்டு விடுமென்ற மனோபாவம் ஏன் என்று புரியவில்லை.கெட்டிக்காரன் புளுகு ரெண்டே நாளில் தெரியும்ங்கிற மாதிரி இருக்கும் போது கருத்துக்கணிப்புக்கள் என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்களும் அதிலும் ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக்கணிப்புக்கு இனிமேல் கடவுள் இருக்கிறார் என்று நம்புவேன்ங்கிற மாதிரி  கருத்துக் கணிப்பு உண்மையானால் ஹெட்லைன்ஸ் டுடேயை இனிமேல் நம்புவேன்னு ஒரு பெண் பேட்டியாளரிடம் கலைஞர் சொல்லிக் கொண்டிருந்ததையெல்லாம் நினைக்க இப்ப சிரிப்பாய் வருது.

அமெரிக்கா முதற்கொண்டு தனக்கு சாதகமாக அரசியலில் doctoring செய்வது புதியதல்ல என்றாலும் தி.மு.க ஆட்சியிலும், இந்த தேர்தலிலும் ஒரேயடியாக முழுப்பூசணியை முழுசா மறைக்கும் குணநலன் கொண்ட ஊடகமென்றால் அது நக்கீரன் தான்.பத்திரிகைக்கென சில ஊடக தர்மம் என சொல்லப்படும் ethics of journalism கொஞ்சமுமில்லாமல் அம்மண மாய் திரிந்த பத்திரிகையென்றால் அது நக்கீரன் மாத்திரமே.பிரபாகரன் புகைப்படம் doctored,கஸ்பரை வைத்து புளுகு மூட்டை அவிழ்த்து விட்டது முதல் ஊடக நட்பு என்ற பெயரில் கருணாநிதிக்கு துரோகம் செய்தது வரை அடங்கும்.இந்த லட்சணத்தில் சிறந்த பத்திரிகையாசிரியர் என்ற தம்பட்டம் வேறு பீத்தல்.

நான் அ.தி.மு.க சார்பாளன் அல்ல என்று முன்பே எனது அரசியல் நிலைப்பாடு பதிவில் சொல்லியிருக்கிறேன் என்ற நினைவுபடுத்தலோடு தமிழகம் அரசியலில் பயணிக்க வேண்டிய தூரம் வெகு தொலைவாக இருந்தாலும் வாழ்க்கை நடைமுறைக்கேற்ப மக்கள் தங்கள் ஜனநாயக கடமைகளை செய்து வருவார்கள் என்ற நம்பிக்கை இப்பொழுது கொஞ்சம் துளிர் விட்டிருக்கிறது.இந்த தேர்தல் சிறு இளைப்பாறுதல் மட்டுமே.

ஜெயலலிதா பற்றி சிலாகிக்கவோ,விமர்சனம் செய்யவோ இது தகுந்த நேரமல்ல.நிறைய பதிவுகளில் அவரது பழைய ஆட்சி முறை அனுமானங்களின் பேராலேயே அவர் அப்படி செய்து விடுவார்,இப்படி நடந்து கொள்வார் என்று இந்த நேரத்தில் விமர்சிப்பது சரியான மதிப்பீடாக இருக்க முடியாது.அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்றாலே 100 நாட்களில் ஒருவரின் செயற்பாடுகள் என்ன என்பதை கவனிக்கிறார்கள்.ஜெயலலிதா ஒரு முறை நகை நட்டு போட்டுக்கொண்டார்,ஊழல்கள் செய்து விட்டார் என்ற அடிப்படையிலே வரும் காலத்திலும் அப்படியே இருப்பார் என்று கிளி ஜோசியம் பார்ப்பது நல்ல அணுகு முறையாக இருக்காது.நிகழ்வுகளின் அடிப்படையிலேயே விமர்சனங்கள் செய்வது நல்ல மதிப்பீடாகும்.



மக்கள் வரிப்பணத்தில் கட்டிய வசதி நிறைந்த புது சட்டசபையில் உட்கார மாட்டேன் என்ற பிடிவாதம்,ஆணவம் ஜெயலலிதாவுக்கு நல்லதல்ல என்றாலும் ஸ்டாலினை முன்னிலைப்படுத்த துணை முதல்வர் பதவியைக் கொண்டு வந்த போது இருந்த அதிர்ச்சி பின் பழக்கமாகிப் போனது போல் ஜார்ஜ் கோட்டையும் ஒருவேளை நமக்குப் பழகிப் போகலாம்.முந்தைய ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்திலேயே நக்கீரனின் ஜெயலலிதா நிலைப்பாடு எப்படி என்று நமக்குத் தெரியும்.தி.மு.க வின் முரசொலியாகி விட்ட இந்தக் கால கட்டத்தில் சொல்லவும் வேண்டுமா என்ன?ஆனால் நக்கீரன் சொல்வது உண்மையா அல்லது கோயபல்ஸ் திட்டமா என்பதை கணிக்கும் தகுதியில் பதிவுலகம் இருப்பதால் நக்கீரன் பருப்பு வெந்ததா இல்லையா என நம்மால் சொல்லி விட முடியும்.

இதோ முதல் கணையாக ஜார்ஜ் கோட்டையை புதுப்பிக்க 50 கோடி செலவாகுமென நக்கீரன் கோபால் படம் போட்டிருக்கிறார்.உண்மையா? பொய்யா என மெரினா ரோட்டில் பைக்,கார் ஓட்டுபவர்கள் ஒரு எட்டு உள்ளே போய் பார்த்து விட்டு வந்து சொல்லுங்கள்.காவல்துறை தண்ணீ(ர்) அடிப்பதைப் பார்த்தால் அவ்வளவு செலவு ஆகிற மாதிரி எனக்கு தோணல.ஒரு வேளை பராமரிப்பு செலவு 50 கோடியென்றாலும் நக்கீரன் பனைமரத்துலருந்து பால் குடிக்கிறாரா?கள் குடிக்குறாரா என்கிற சந்தேகத்துக்கு கோபாலின் ஊடக பக்க சார்பே காரணம்.  

Sunday, May 15, 2011

கலைஞரே!நாங்கள் அல்ல உங்கள் எதிரிகள்!

பதிவுலகில் வலம் வரும் எழுத்துக்கள் எல்லாம் தமிழகத்தின் நாடி பார்க்கும் இயந்திரமாக இல்லாவிட்டாலும் அப்பாவி மக்களுக்கும்,பொது ஊடகங்களுக்கும்,பிரபலமான அறிவு ஜீவிகளுக்கும் இடையிlலான நெல்லிக்காய் கூட்டம் இவர்கள்.புன்முறுவலையும், வாழ்வியலையும் உணர்வையும், தர்க்கத்தையும், கோபத்தையும்,  பார்வைக்கு முன்வைப்பது மட்டுமே இவர்களின் பொழுதுபோக்கான சமூக அக்கறை.சிலர் இளம் கன்று பயமறியாது என்பதாலும்,இன்னும் சிலர் என் முகம் யாருக்குத் தெரியப் போகிறதெனும் தெம்பிலும்,இன்னும் சிலர் ஈழப்போரின் உக்கிரமான கட்டமான 2008ம் ஆண்டு துவங்கி 2009 வரை செய்திகளையும்,உள்ளொன்றும் புறமொன்றும் வரும் அறிக்கைகளையும், செயல்களையும் கூர்ந்து கவனித்து விமர்சித்தவர்களும் எனவும் கூடவே உங்கள் தவறுகளையும் சரியென்ற கழக கண்மணிகள் என்ற உங்கள் ஜால்ராக்கள் என ஒரு கூட்டம்.அவரவர் கருத்துக்களை,புலம்பல்களை, வடிகாலாக இணையத்தில் கொட்டித்தீர்க்கிறது  என்பது மட்டுமே தற்போதைக்கு இவர்களின் நிலைப்பாடு.உங்கள் ஆட்சியில் பூங்கோதை அவர்கள் இந்த வாய்களுக்குப் பூட்டுப் போடவேண்டுமென்ற திட்டங்களுக்கெல்லாம் நேரமில்லாத படி நீங்கள் அனைவரும் உங்கள் பிரச்சினைகளில் மூழ்கி கிடந்தீர்கள்.

மேம்போக்காக நோக்கினால் தேள் கொட்டும் வார்த்தைகளில் இவர்களே உங்கள் கழகத்துக்கும்,உங்கள் ஆளுமைக்கும் எதிரானவர்கள் என நுனிப்புல் மேய்பவர்களுக்கும் ஒருவேளை இணையம் வலம் வரும் உங்களுக்கு ஜால்ரா செய்பவர்களுக்கும் தோன்றும்.உங்களின் மெய்யான எதிரிகளோ உங்கள் சுயநலங்களின் ரகசியங்கள் கண்டு சத்தமில்லாமல் வலை விரித்தவர்களாகவும்,கட்டி அணைத்துக்கொண்டவர்களாகவும்,பட்டு சால்வை போர்த்தியவர்களாகவும்,முகஸ்துதி பாடி வலம் வந்ததை நீங்கள் அறிந்தீர்களோ அல்லது அறிந்தும் விழா மயக்கத்தில் உச்சிகுளிர்ந்தீர்களோ  உங்கள் மனசாட்சிக்கே வெளிச்சம்.
 
நிர்வாகம் என்பதில் சிறந்தவரென்றும் ,மக்கள் நலன்களை ஓரளவுக்கு இலவசமென்ற பெயரால் செய்தும் உங்களால் இயலாத தூரத்துக்குப் பிரச்சினைகள் வேரூன்றிப் போய்விட்டது என்பதையே தேர்தல் முடிவுகளின் தோல்விகள் சுட்டிக்காட்டுகின்றன.

சூழலின் பின்னலில் வெகுதூரம் போய்விட்ட நீங்கள் ஒரு இனத்தின் வலிகளுக்கு மருத்துவம் பார்க்கும் தகுதியில்லாமல் உங்கள் மனம் மரத்துப் போனதையே கடந்த ஈராண்டு கால ஈழ வரலாறும்,அதற்கு குரல் கொடுத்தவர்களுக்கான அரசு அடக்குமுறையும் பேசுகிறது.

வாழ்வியலில் தவறுகளையும் சரியென்று நிரூபித்த வித்தைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.தகுதியும்,வலிமையும் இருந்த முதல்வர் பதவி காலத்திலேயே உங்களால் தவிர்க்க இயலாத ஒன்று ஈழப் படுகொலைகள்.தமிழீழம் என்ற சரியானதை தமிழகத்தைப் பொறுத்தவரையில் தவறாக மாற்றிய தவறுக்கு எங்கே எப்படி பிராயச்சித்தம் செய்யப்போகிறீர்கள்?


Thursday, May 12, 2011

ராகுல் காந்தி கைதாமே!செக்ரட்டரி கிட்ட கடல

நடராஜன்!என்னாச்சு ராகுல் காந்தி கைது செய்யப்பட்டாராமே என்று கூட பணிபுரியும் செக்ரட்டரி பெண் கேட்க,

ஆமாம்!ராகுல் காந்தி உ.பிரதேசத்தில நொய்டாங்கிற இடத்துல விவாசாயிகளும்,போலிசுகாரங்களும் சண்டை போட்டுகிட்டிருந்த இடத்துக்கு போனதால கைது பண்ணிட்டாங்க என்று நான் சொல்ல

செக்ரட்டரி பெண், சண்டை போடற இடத்துக்கெல்லாம் இவர் ஏன் போனார் என்று  திரும்ப கேட்க

சும்மா போனாலும் பரவாயில்லை ஷோலே படத்துல அமிதாப் பச்சனும்,தர்மேந்திராவும் போற மாதிரி மோட்டர் சைக்கிள்ல போனதால்தான் மாயாவதி கைதி பண்ணிடுச்சுன்னு நான் சொல்லி சிரிக்க அதற்கு அந்தப் பெண்ணும் சிரிக்க

அந்த நேரம் பார்த்து வந்த பாஸ் எப்ப பார்த்தாலும் உங்களுக்கு கடல போடுறதே வேலையா போச்சுன்னு முணு முணுக்க
 
 ராகுல்!நீங்க ரைடு போறதுக்கு நான் வாங்கி கட்டிக்கனுமா:)

Wednesday, May 11, 2011

சிறந்த ஜனநாயகத்தின் 10 அடிப்படைகள்

தேர்தல் குருவி ஜோசியம் சொல்வதற்கு ஆளுக்கு தகுந்தாற்போல் ஒவ்வொரு ஊடகங்களும் ஒவ்வொரு கணிப்பை சொல்வதாலும் தமிழக நுண்ணரசியலான தங்கபாலுவின் தேர்தல் சாணக்கியத்தனத்தால் காங்கிரஸ் தமிழகத்தில் ஊத்திக்குமா,சீமான் பிரச்சாரம் எடுபடுமா,வை.கோ வின் ஓட்டு வங்கி என்ன ஆனது,வடிவேல் தி.மு.க  கொள்கைப் பரப்பு செயலாளரானது,விஜயகாந்த் ஊத்திகிட்டே ஒரு ரவுண்ட் வந்தது,ஈழ உணர்வாளர்களும் தமிழகத்தில் வசிக்கிறார்கள்,காசுக்கு ஓட்டு,என்னதான் சொன்னாலும் நாங்கள் கலைஞரின் அடிமைகள் என்பது பற்றியோ நெடுஞ்சாண் கிடையாய் காலில் விழுவதே எங்கள் பிறவி பயன் எனும் ரத்தத்தின் ரத்தங்களின் மூக்கு நிலத்தில் படுவது பற்றியெல்லாம் யாரும் தமது கருத்துக்கணிப்பில் சொல்லாத காரணத்தால் தி.மு.க கூட்டணி இல்லைன்னா அ.தி.மு.க கூட்டணி மே 13ம் தேதி பிறக்குமென்பதால் அதுபற்றி அலட்டிகொள்ளாமல் நெடிய ஜனநாயக தேவைகள் பற்றி மட்டும் இங்கே ஒரு பார்வை.
 
தலைப்பு மொத்த இந்தியாவுக்கும் பொருந்துமென்றாலும் பெடரல் அமைப்பில் மாநிலங்களாய் பிரித்து ஆட்சி செய்வதால் அனைத்து மாநிலங்களுக்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் பொருந்தும்.

சுதந்திர இந்தியாவில் உலக நடைமுறைக்கேற்ப நாமும் நடந்து வந்துள்ளோம்.புதிய பொருளாதாரத்தில் சீனாவும்,இந்தியாவும் ஒருமித்து போட்டி போடும் நிலை காணப்பட்டாலும் நாம் கடக்க வேண்டிய தூரத்தை கடந்து வந்துள்ளோமா என்றால் இல்லையென்றே சொல்லலாம்.
 
5 ஆண்டுகளின் ஆட்சி நடைமுறையில் நாட்டின் வளர்ச்சியில் தேர்தல் காலங்களில் கூட நம்மை ஆள்பவர்களும் கூட  நாம் நம்மை ஒரு முறை மறுபார்வை செய்து கொள்வதில்லை.இதோ அடுத்த 5 வருடங்களுக்கான ஆட்சியின் துவக்கம்  துவங்குகிறது.ஆட்சிக் கவிழ்ப்பு,மறுதேர்தல் போன்ற அபாயங்கள் இல்லாமல் இப்போதைய தி.மு.க ஆட்சி போல் நிலையாக அடுத்து 5 ஆண்டுகள் ஆள்பவர்களும் மக்களாகிய நாமும் நமது வளர்ச்சியைப் பற்றி எடை போட்டுக் கொள்ள கீழ்கண்ட 10 அம்ச திட்டம் உதவும்.

1. மண்ணின் கலாச்சாரத்தையும்,பண்பாடுகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

ஒரு புறம் மேற்கத்திய கலாச்சாரத்தின் சாயல்கள் நம் மீது விழுந்தாலும் ஓரளவுக்கு நாம் நமது கலாச்சாரத்தையும்,பண்பாடுகளையும் தக்க வைத்துக்கொண்டுள்ளோம் என்று சொல்லலாம்.பெருமைப் பட்டுக்கொள்ள மொழி,எழுத்து,பேச்சு என்பதெல்லாம் மனதிற்குள்ளே அடைகாப்பது தவிர நடைமுறை வாழ்க்கை டீ ஸ்டால் என்றும்,ஜூவல்லரி என்றும் ரெட் ஜெயண்ட் என கிராண்ட் சன் வரைக்கும்  கடந்து வந்து விட்டோம்;(

2.தேவையான உணவு,உடை,வீடு என்ற அடிப்படைத் தேவைகள் அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டதாக இருக்கும்.

இங்கே நாம் கொஞ்சம் நொண்டுகிற மாதிரி தெரிகிறதே!உணவு உற்பத்தி,உடைகளில் சுயதேவைப்பூர்த்தியடைந்து விட்டாலும் தனக்கென்று ஒரு கூடு என்பதில் இன்னும் நாம் நிறைவு பெறவில்லை.

3.மக்கள் பாதுகாப்பாகவும்,எந்த இழிவு நிலைக்கும் உள்ளானவர்களாக இல்லாமல் இருப்பார்கள்.

ஓரளவுக்கு பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம்.ஆனால் வடக்கில் பாகிஸ்தான்,சீனாவோடு தெற்கில் இப்போது இலங்கையென்ற ஒரு தலைவலியும் இருப்பதால் முழு பாதுகாப்பு என்று சொல்லி விடமுடியாது.பாகிஸ்தான்காரன் உள்ளே பூந்து அடிச்சாலும் வாங்கிகிட்டு பேச்சு வார்த்தைக்குப் போகுமளவுக்கு பாதுகாப்பும்,உள்துறையும் சிறப்பாகவே இருக்கிறது.

4.     மக்கள் படித்தவர்களாகவும், அறிவுபூர்வமானவர்களாகவும், திறமை வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.

படிப்பில் இன்னும் முழுமையடையா விட்டாலும் ஓரளவுக்கு முன்னேற்றப் பாதையை நோக்கி செல்கிறோம்.அறிவு பூர்வமானவர்கள் என்றால் இலவசம் போன்ற கூத்துக்கள் எல்லாம் இந்தியாவில் நிகழ வாய்பே இல்லை எனலாம்.திறமை என்று சொல்லும் போது அமெரிக்காவின் நாசா அளவுக்கு பெரும் முதலீடும்,முயற்சிகளும் இல்லையென்றாலும் விரலுக்கேத்த வீக்கம்ங்கிற மாதிரி நமது சுய முயற்சியில் விண்ணை நோக்கிய விஞ்ஞான பயணம் பாராட்டுதலுக்குரியது.மொத்த வளர்ச்சியில் நமது திறமைகளை பெருமைப்பட்டுக் கொள்ளலாம்,ஆனால் சமூக,அரசியல், பொருளாதார கட்டமைப்பில்  டமாலென்று சறுக்கி விழுந்து விடுகிறோம்.

5.எந்த மக்களும் தனிமைப்படாமல் சிறந்த ரோடு, வாகனங்கள், மின்சாரம், தொலைத்தொடர்புடன் நகரங்களும், கிராமங்களும் ஒன்றிணைக்கப் பட்டிருக்கும்.
 
மொத்த இந்தியாவின் பெரும்பகுதியில் இரண்டு வாகனப் பாதையிலே திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகவும் தடை கிராமங்களும், நகரங்களும் ஒன்றிணைக்கப்படாமையே.

6.உற்பத்தியும்,வேலை வாய்ப்பும் அனைத்து துறைகளிலும் பெருகியிருக்கும்.

சில வருடங்களுக்கு முன் நெல் உற்பத்தியில் மட்டும் தன்னிறைவு கொண்டிருந்தோம்..விவசாயத்தின் கடின நிலைகள் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.நிறைய ஆளுக இந்தியாவை விட்டு ஓடிவிட்டதால் வேலை வாய்ப்புக்கள் இருக்கிற மாதிரி தோணுது.எதனையும் இந்தியா தாங்கிக்கொள்ளும் வல்லமை இருப்பதை 64 வருட ஜனநாயகம் உரக்கச் சொல்கிறது.

7.மக்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருப்பதோடு வருமானம் அனைவருக்கும் நியாயமான முறையில் பங்களிக்கப்படும்

முந்தைய ரஷ்ய அமெரிக்க பனிப்போர் காலத்துக்கும் உலகமயமாக்கல் நிலைக்கும் நிறையவே வித்தியாசங்கள் இருப்பதோடு வாழ்க்கைத்தரம் ஓரளவுக்கு பரவாயில்லை எனலாம்.

8.இயற்கை வளங்களை சீராக பங்கீடு செய்வதால் விலைவாசி உயராமல் நிரந்தரமாக இருக்கும்.உணவு உற்பத்தி தேவையான அளவு இருக்கும்.

விலைவாசிகள் உயராமல் இல்லை,ஆனால் அமெரிக்க டாலரின் மதிப்போடு ஒப்பிடும்போது பணவீக்கம் அதிகமாகி விட்டதென்று கூற இயலாது.உணவு உற்பத்தி சுயதேவைப் பூர்த்தியளவுக்கு இருக்கிறதென்றே கூறலாம்.இல்லையென்றால் அதிகமா சாப்பிடுவது இந்தியாக்காரன் என முந்தைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் கரிச்சுக் கொட்ட வேண்டிய அவசியமே இருந்திருக்காது:)

9.மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு சீராக இருக்கும்.அரசுத் துறை, தனியார் துறை, பொது நலக் குழுக்கள், கட்சியின் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை கண்காணிக்கவும், வழி நடத்தவும் கடமைப்பட்டவர்கள்.

ஜனநாயக தூண்களான காவல்துறையும், நீதி துறையுமே மோதிக்கொள்ளுமளவுக்கு சட்டம், ஒழுங்கு காப்பாற்றப் பட்டாலும் அப்பாவி மக்களைப் பொறுத்த வரை சட்டம்,ஒழுங்கில் குறையில்லை.அரசு, தனியார், பொதுநல கட்டமைப்பில் வழிநடத்தும் தகுதியில்லாமல் போனாலும்  மொத்த இந்தியாவாக அன்னா ஹசாரே போன்ற குரல்களும் கூடவே மத்தளமாக இளைய தலைமுறையும் சேர்ந்து ஒலிப்பதால் கொஞ்சம் நம்பிக்கையும் தோன்றுகிறது.

10.அடிப்படை பொருளாதாரம்,நாட்டின் வருமானம் போன்றவை ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையானதாக ஊழல்,லஞ்சமற்று சுதந்திரமாக இருக்கும்.
 
எவரெஸ்ட்டின் உச்சியிலிருந்து விழுந்து  மூக்குல ஒரே ரத்தம்ன்னாக் கூட பெருமைப்பட்டுக்கலாம்.நாமோ கூவத்தில் மூழ்கி மூச்சுத் திணறுகிறோம்.

Tuesday, May 10, 2011

பிளாக்குவதின் மகத்துவம்

நாம் ஒவ்வொருவரும் பலவேறு பட்ட காரணங்களுக்காக பதிவிடுகிறோம்.மூளை குறு குறுப்பதை பதிவு செய்வதை தவிர வேறு ஆதாயமில்லாமல் நான் கிறுக்குவதைப் போலவே பெரும்பாலும் சக பதிவர்களும் என்னோடு கூட சக பயணம் செய்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.

கனடாவில் கான்சரில் இறந்தவரின் இறுதி பதிவு என்ற தலைப்பை படித்து விட்டு உள்ளே சென்றால் டெரிக் மில்லர் என்பவரின் இறுதி பதிவு மில்லியன் கணக்கில் ஹிட் வாங்கியதென செய்தி.

41 வயதுடைய டெரிக் மில்லர் என்பவர் 16 வருடம் தன்னுடன் வாழ்ந்த மனைவிக்கு சொன்னது ”நாம் ஒருவருக்கொருவர் என்ற உறவு இல்லாமல் இருந்திருந்தால் இந்த உலகம் எப்படியிருந்திக்குமென தெரியவில்லை.ஆனால் அது மிக மோசமான ஒன்றாக இருந்திருக்கும்.உன்னை நான் ஆழமாக நேசித்தேன்...நேசித்தேன்...நேசித்தேன்.”

சென்ற புதன்கிழமை டெரிக் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இறப்பதற்கும் முந்தைய ஒரு தினத்தில்  www.penmachine.com என்ற அவரது தளத்தில் பதிவு செய்யப் பட்ட பதிவு.

நம்ம ஊர் பழபெரும் பதிவர்கள் மாதிரி பிரிட்டிஷ் கொலம்பியாவில் 10 வருடத்திற்கும் மேலாக புகழ் பெற்ற பதிவர். கான்சரில் நான்காம் நிலையெனப்படும் மெட்டாஸ்டேடிக் கலரெக்டல் கேன்சர் இருக்கும் அறிகுறிகள் 2007ல் தெரிந்தது.டெரிக் இறந்த பின் மே நான்காம் தேதி 143 பின்னூட்டங்கள் நண்பர்களும்,முகமறியாதவர்களும் போட்டதில் அதிக தள நெரிசலில் மூச்சுத் திணற நண்பர் ஒருவரின் உதவியால் வேறு ஒரு சர்வருக்கு டெரிக்கின் தளம் மாற்றப்பட்டது.

”இதோ இங்கே நான்!நான் இறக்கப் போகிறேன்.இதுவே எனது தளத்தின் கடைசி பதிவு.அதற்கு முன் எனது கான்சரின் தண்டனையால் எனது உடலவயங்கள் மூடிக்கொள்ளும் போது என் குடும்பத்தாலும்,நண்பர்களாலும் இதனை வெளியிட வேண்டுகிறேன்.இயங்கும் தளமாக இருந்த ஒன்று இனி வரலாறாகப் போகிறது.”

நமது வாழ்க்கையில் என்ன நிகழும் என்பதை யாரும் கற்பனை செய்து விடமுடியாது.நாம் என்ன செய்கிறோமோ அது பற்றி மகிழ்ச்சியடையலாம்.நாம் திட்டமிடலாம்,ஆனால் அது செயல்படுமா என்பதனை சொல்ல இயலாது.எனது நோயிலும்,இறப்பிலும் இதனையே எனது மகள்கள் கற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்...நம்புகிறேன்.எனது அன்பான வியப்புக்குரிய மனைவி ஆர்ட்ரியும் இதனையே காண இயலும்.இவர்களும் ஒரு நாள் இறப்பார்கள் என்றாலும்,தாம் செய்பவைகள் குறித்து மகிழ வேண்டும்.மூளையின் திசுக்களை உற்சாகப்படுத்த வேண்டும்.முடிந்த வரை சந்தர்ப்பங்களுக்கு காத்திருக்க வேண்டும்.அதே சமயத்தில் தாங்கள் நினைத்தபடி நிகழாமல் போவதால்,அப்படி நிகழும் பட்சத்தில் ஏமாற்றமடைந்து விடக் கூடாது.

டெரிக் மில்லரின் தளம் மூன்று மில்லியன் ஹிட்களுக்கும் மேல் சென்றதாக அவரது மனைவி ஆர்ட்ரிக் மில்லர் கூறுகிறார்.டெரிக் மில்லரின் நண்பர்,ஆலிஸ்டர் கால்டர் வேறு பெரும் இணையத்திற்கு மாற்றிய பின் சொன்னது”மில்லரின் தளம் கிட்டத்தட்ட எட்டு மில்லியன் ஹிட்களாவது அடைந்திருக்கும்.ஆனால் அவரது தளம் க்ராஷ் ஆனதால் கணக்கை கணிப்பது கடினமாகிவிட்டதென்கிறார்.

ஆர்ட்ரிமில்லரும் வலைப்பதிவரே.அவரது கணவரின் கேன்சர் அனுபவங்களை www.talkingtoair.com என்ற தளத்தில் குறிப்பிடும் போது அவரது கணவர் கடந்த இரு மாதங்களாக பேச இயலாமல் போன போது மில்லரின் வலைத்தளமே உதவியாக இருந்தது.மில்லரால் பேச இயலாவிட்டாலும் மூளை நன்றாகவே செயல்பட்டுக்கொண்டிருந்தது.

"மில்லர் பேச இயலாத போதே அவரது தளத்தை முழுவதுமாக படிக்க ஆரம்பித்தேன்...அப்பொழுதுதான் மில்லரின் மூளைக்குள் என்ன நிகழ்கிறது என்பதை என்னால் உணரமுடிந்தது.மில்லரின் பிளாக் எனக்கு நினைவுப் பரிசாக அமைந்தது” என்கிறார் ஆர்ட்ரிக் மில்லர்.

இன்னும் கொஞ்சம் ஆங்கில தகவல்களுக்கு NDTV யின் இந்த செய்திக்கும்  மற்றும் டெரிக்,ஆர்ட்ரி மில்லரின் தளங்களுக்கு செல்லுங்கள்.

Saturday, May 7, 2011

கனிமொழி,ஜெத்மலானி,நீதிமன்றம் ஓர் பார்வை.

இந்தியாவே எதிர்பார்க்கும் நீதிமன்றத் தீர்ப்பை பெரும்பாலும் அதன் சூட்டைத் தணிக்க வேண்டியும் வேறு பல காரணங்களுக்காக வேண்டியும் தீர்ப்பை மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தினத்திலிருந்து வேறு ஒரு தினத்திற்கு மாற்றி வைத்துள்ளது முன்பும் நிகழ்ந்த நிகழ்வுகள்தான்.உதாரணத்திற்கு ஒன்று சொல்ல வேண்டுமென்றால் அயோத்தியா ராமர்,பாபர் மசூதி தீர்ப்பு.நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் முடிவு பற்றிய சலசலப்புக்களும்,பொது விமர்சனங்களும்,பதிவுலக விவாதங்களும் கூட நிகழ்ந்தன.

அதே மாதிரியான ஒரு சூழலை கனிமொழி கைது ஆவாரா என்ற எதிர்பார்ப்பை இந்திய ஊடகத்துறை அனைத்தும் கேள்வியை எழுப்பி வந்தது.கலைஞர் டி.வியின் பண பரிமாற்றத்தில் ஆ.ராசா,தயாளு அம்மாள்,கனிமொழி,சரத்குமார்,சினியுக் படத் தயாரிப்பாளர் கரிம் முரானி என்ற பெயர்கள் ஊடகங்களில் பிரபலம் ஆனாலும் ராசா கைது வரை ராசாவை முன்னிலைப்படுத்திய ஊடகங்கள் அவர் சிறை சென்று மறுபடியும் கனிமொழியின் முன் ஜாமின் வழக்குக்காக வரவழைக்கப்பட்டு நீதி மன்றத்துக்கு வந்த பின்பும் யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.மாறாக மொத்த ஊடகங்களின் பார்வையும் கனிமொழி மீதே பாய்ந்திருக்கிறது.

இந்த வழக்கில் நீதிமன்றம் வராத கரிம் முரானி பற்றியோ கலைஞர் தொலைக்காட்சியின் அன்றாட அலுவலக முடிவுகளில் கையெழுத்துப் போடுபவராக இருக்கும் சரத்குமார் பற்றியோ யாரும் அலட்டிக் கொள்வதாக காணோம்.2Gயில் கனிமொழியின் பங்கு என்ற மொத்த பார்வையும் கனிமொழியின் மீது பாய்வதில் சட்டம் தனது கடமையை செய்ய வேண்டுமென்ற அக்கறை இருக்கிறதோ இல்லையோ கனிமொழி சிறைக்குள் போகவேண்டும் என்ற ஆர்வம் பெரும்பாலோருக்கு இருப்பதைக் கணிக்க இயலுகிறது.கூடவே இப்போதைய நீதிமன்ற நுழைவு கனிமொழிக்கு அரசியல் ரீதியான மறைமுக விளம்பரமாகக் கூட எதிர்காலத்தில் அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.காரணம் சும்மா கிடந்த ஜெயலலிதாவையும் இப்படித்தானே ஊதிப் பெருக்கி இப்பொழுது ஜெயலலிதா மூச்சு விட்ட அடுத்த கணமே கருணாநிதி மறு அறிக்கையும் தானே கேள்வி தானே பதில் சொல்லும் நிலைமை தமிழகத்துக்கு வந்துள்ளது.இந்தியாவிலே பைத்தியக்காரத்தனமான அரசியல் களங்கள் என்றால் ஒன்று தமிழகம்,மற்றொன்று ஆந்திரா எனலாம்.

2G ஊடகத்துறைக்கு தீனி போடும் நிலைக்கு வந்த பின் எதிர்க்கட்சியாக இருக்கும் பி.ஜே.பி பீத்திகிட்ட ஒன்று நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம் என்றது.மாட்டுனா மாப்ள நீயும் தாண்டின்னு காங்கிரஸ் உசார் படுத்திச்சோ இல்லை கொஞ்சம் அடக்கியே வாசிப்போம் என்ற அமுங்கியதோ JPC கோரிக்கை ஒன்றைத் தவிர உருப்படியாக எதனையும் செய்யவில்லை.தொழில் வேறு அரசியல் வேறு என்ற இரட்டை வேடத்துக்கு சிறந்த உதாரணமாக தற்போது பி.ஜி.பியின் நிலைப்பாடும், ஜெத்மலானியின் கனிமொழிக்காக காசுக்கு மாறடிக்கும் வாதாடும் திறமையும். சென்ற பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் அழகிரி அன்புமணியைப் பார்த்து உங்கப்பன் அரசியல் விபச்சாரின்னு சொன்னது மாதிரி காசு கொடுத்தா ஹவலாக்காரன், கொள்ளைக்காரன், கொலைகாரன், லஞ்சம், ஊழல்பேர்வழின்னு உன்னோட பெயர் பிரபலமானதா இருந்தா யாருக்கு வேண்டுமென்றாலும் வாதாடுவேன் எனும் ஜெத்மலானியின் நிலைப்பாட்டை கிரிமினல் விபச்சாரித்தனம் எனலாம்.நல்ல மூளையை தவறான வழிக்கு வழிகாட்டுதல் எனபது  எப்படியென்பதை ராம் ஜெத்மலானியிடம் கற்றுக்கொள்ளலாம்.

தமிழக முதல்வர் கருணாநிதி தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து பல கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன் வைத்தாலும் தமிழகத்தைப் பொறுத்த வரையில் சாதாரண குடிமகனுக்கு இந்த தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நல்லதாகவே இதுவரை நிகழ்ந்திருக்கிறது.அதே மாதிரி 2Gயை உச்சநீதிமன்றம் தனது நேரடிப்பார்வைக்கு எடுத்துக்கொண்ட பின் கனிமொழியின் பிணை வழக்கு நிகழும் நேற்றைய வரை நீதிமன்றத் தீர்ப்பின் மீதான நம்பிக்கையை பாதுகாத்தே வந்தது.நேற்றைய ஜெத்மலானியின் வாதமான முன்னாடியே திருடாமல் இருந்ததாலும், பெண் என்பதாலும், எங்கேயும் ஓடிப்போக மாட்டார் என்ற சப்பைக்கட்டு வாதம் வைக்கும் போதே இந்தாளு எப்படி கிரிமினல் மூளைக்காரன் என்ற முந்தைய சரித்திரித்தை கொஞ்சம் புரட்டிப்பார்க்கத் தோன்றியது.கூடவே கொடுத்த காசுக்கு சரியாவே கூவுறாரோ என்றும் நினைக்கத் தோன்றியது.ஆனானப் பட்ட  கொலைகாரன் கசாப்புக்கே வழக்கறிஞர் வைத்துக்கொள்ளலாம் என்ற இந்திய சட்டம் சொல்லும் போது தமிழகத்தின் சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தால் அன்றாடப் பிரச்சினைகளோடு போராடும் ஒரு பெண்ணாகவே கனிமொழியின் வாழ்க்கையும் இருந்திருக்கும் என்ற அவரது உடல்மொழி பேச்சுக்கள் சொல்லும்போது அப்பன் தவறுகளுக்கு மகள் பாரம் சுமக்கும் பாவத்திற்கு ராம் ஜெத்மலானி வாதிடுவதிலும் தவறில்லை.

ஆனால் நீதிமன்றம் நேற்றைய வழக்கின் முடிவை மீண்டும் ஒரு நாள் தள்ளி வைத்ததில் இது வரையில் நிகழ்ந்த 2G யின் நீதிமன்ற நடைமுறை சின்ன சறுக்கலை கொண்ட மாதிரி உணர்வை ஏற்படுத்தினாலும் இன்றைய தினத்துக்கு சி.பி.ஐ சார்பாக லலித் வாதாடும் கருத்தான Brain behind the decision making என்ற வாதத்தையும் கேட்க வேண்டிய சூழலில் தீர்ப்புக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொண்டாலும் கூட நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் 9ம் தேதி திங்கட் கிழமை துவங்கி 12ம் தேதி வியாழன் வரையிலுமான காலவரைக்குள் தீர்ப்பை சொல்வது மட்டுமே நீதிமன்றம் தனது பாதையில் பயணிக்கிறது என்பதற்கான நம்பகத்தன்மையை தீர்மானிக்கும்.இதனைக் கடந்து 13ம் தேதி வெள்ளி தேர்தல் முடிவுகள் வந்து 14ம் தேதி சனிக்கிழமை நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல வர்ணங்கள் பூசப்படும் என்பதோடு இப்போதைய காலகட்டத்திலே அரசியல் அழுத்தங்கள் போன்றவை 2Gயை நெருக்குகின்றன என்ற சந்தேகங்களையும் தோற்றுவிக்கிறது.

Not only the Indian political system but also the judiciary is a flexible one?