Followers

Wednesday, May 11, 2011

சிறந்த ஜனநாயகத்தின் 10 அடிப்படைகள்

தேர்தல் குருவி ஜோசியம் சொல்வதற்கு ஆளுக்கு தகுந்தாற்போல் ஒவ்வொரு ஊடகங்களும் ஒவ்வொரு கணிப்பை சொல்வதாலும் தமிழக நுண்ணரசியலான தங்கபாலுவின் தேர்தல் சாணக்கியத்தனத்தால் காங்கிரஸ் தமிழகத்தில் ஊத்திக்குமா,சீமான் பிரச்சாரம் எடுபடுமா,வை.கோ வின் ஓட்டு வங்கி என்ன ஆனது,வடிவேல் தி.மு.க  கொள்கைப் பரப்பு செயலாளரானது,விஜயகாந்த் ஊத்திகிட்டே ஒரு ரவுண்ட் வந்தது,ஈழ உணர்வாளர்களும் தமிழகத்தில் வசிக்கிறார்கள்,காசுக்கு ஓட்டு,என்னதான் சொன்னாலும் நாங்கள் கலைஞரின் அடிமைகள் என்பது பற்றியோ நெடுஞ்சாண் கிடையாய் காலில் விழுவதே எங்கள் பிறவி பயன் எனும் ரத்தத்தின் ரத்தங்களின் மூக்கு நிலத்தில் படுவது பற்றியெல்லாம் யாரும் தமது கருத்துக்கணிப்பில் சொல்லாத காரணத்தால் தி.மு.க கூட்டணி இல்லைன்னா அ.தி.மு.க கூட்டணி மே 13ம் தேதி பிறக்குமென்பதால் அதுபற்றி அலட்டிகொள்ளாமல் நெடிய ஜனநாயக தேவைகள் பற்றி மட்டும் இங்கே ஒரு பார்வை.
 
தலைப்பு மொத்த இந்தியாவுக்கும் பொருந்துமென்றாலும் பெடரல் அமைப்பில் மாநிலங்களாய் பிரித்து ஆட்சி செய்வதால் அனைத்து மாநிலங்களுக்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் பொருந்தும்.

சுதந்திர இந்தியாவில் உலக நடைமுறைக்கேற்ப நாமும் நடந்து வந்துள்ளோம்.புதிய பொருளாதாரத்தில் சீனாவும்,இந்தியாவும் ஒருமித்து போட்டி போடும் நிலை காணப்பட்டாலும் நாம் கடக்க வேண்டிய தூரத்தை கடந்து வந்துள்ளோமா என்றால் இல்லையென்றே சொல்லலாம்.
 
5 ஆண்டுகளின் ஆட்சி நடைமுறையில் நாட்டின் வளர்ச்சியில் தேர்தல் காலங்களில் கூட நம்மை ஆள்பவர்களும் கூட  நாம் நம்மை ஒரு முறை மறுபார்வை செய்து கொள்வதில்லை.இதோ அடுத்த 5 வருடங்களுக்கான ஆட்சியின் துவக்கம்  துவங்குகிறது.ஆட்சிக் கவிழ்ப்பு,மறுதேர்தல் போன்ற அபாயங்கள் இல்லாமல் இப்போதைய தி.மு.க ஆட்சி போல் நிலையாக அடுத்து 5 ஆண்டுகள் ஆள்பவர்களும் மக்களாகிய நாமும் நமது வளர்ச்சியைப் பற்றி எடை போட்டுக் கொள்ள கீழ்கண்ட 10 அம்ச திட்டம் உதவும்.

1. மண்ணின் கலாச்சாரத்தையும்,பண்பாடுகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

ஒரு புறம் மேற்கத்திய கலாச்சாரத்தின் சாயல்கள் நம் மீது விழுந்தாலும் ஓரளவுக்கு நாம் நமது கலாச்சாரத்தையும்,பண்பாடுகளையும் தக்க வைத்துக்கொண்டுள்ளோம் என்று சொல்லலாம்.பெருமைப் பட்டுக்கொள்ள மொழி,எழுத்து,பேச்சு என்பதெல்லாம் மனதிற்குள்ளே அடைகாப்பது தவிர நடைமுறை வாழ்க்கை டீ ஸ்டால் என்றும்,ஜூவல்லரி என்றும் ரெட் ஜெயண்ட் என கிராண்ட் சன் வரைக்கும்  கடந்து வந்து விட்டோம்;(

2.தேவையான உணவு,உடை,வீடு என்ற அடிப்படைத் தேவைகள் அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டதாக இருக்கும்.

இங்கே நாம் கொஞ்சம் நொண்டுகிற மாதிரி தெரிகிறதே!உணவு உற்பத்தி,உடைகளில் சுயதேவைப்பூர்த்தியடைந்து விட்டாலும் தனக்கென்று ஒரு கூடு என்பதில் இன்னும் நாம் நிறைவு பெறவில்லை.

3.மக்கள் பாதுகாப்பாகவும்,எந்த இழிவு நிலைக்கும் உள்ளானவர்களாக இல்லாமல் இருப்பார்கள்.

ஓரளவுக்கு பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம்.ஆனால் வடக்கில் பாகிஸ்தான்,சீனாவோடு தெற்கில் இப்போது இலங்கையென்ற ஒரு தலைவலியும் இருப்பதால் முழு பாதுகாப்பு என்று சொல்லி விடமுடியாது.பாகிஸ்தான்காரன் உள்ளே பூந்து அடிச்சாலும் வாங்கிகிட்டு பேச்சு வார்த்தைக்குப் போகுமளவுக்கு பாதுகாப்பும்,உள்துறையும் சிறப்பாகவே இருக்கிறது.

4.     மக்கள் படித்தவர்களாகவும், அறிவுபூர்வமானவர்களாகவும், திறமை வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.

படிப்பில் இன்னும் முழுமையடையா விட்டாலும் ஓரளவுக்கு முன்னேற்றப் பாதையை நோக்கி செல்கிறோம்.அறிவு பூர்வமானவர்கள் என்றால் இலவசம் போன்ற கூத்துக்கள் எல்லாம் இந்தியாவில் நிகழ வாய்பே இல்லை எனலாம்.திறமை என்று சொல்லும் போது அமெரிக்காவின் நாசா அளவுக்கு பெரும் முதலீடும்,முயற்சிகளும் இல்லையென்றாலும் விரலுக்கேத்த வீக்கம்ங்கிற மாதிரி நமது சுய முயற்சியில் விண்ணை நோக்கிய விஞ்ஞான பயணம் பாராட்டுதலுக்குரியது.மொத்த வளர்ச்சியில் நமது திறமைகளை பெருமைப்பட்டுக் கொள்ளலாம்,ஆனால் சமூக,அரசியல், பொருளாதார கட்டமைப்பில்  டமாலென்று சறுக்கி விழுந்து விடுகிறோம்.

5.எந்த மக்களும் தனிமைப்படாமல் சிறந்த ரோடு, வாகனங்கள், மின்சாரம், தொலைத்தொடர்புடன் நகரங்களும், கிராமங்களும் ஒன்றிணைக்கப் பட்டிருக்கும்.
 
மொத்த இந்தியாவின் பெரும்பகுதியில் இரண்டு வாகனப் பாதையிலே திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகவும் தடை கிராமங்களும், நகரங்களும் ஒன்றிணைக்கப்படாமையே.

6.உற்பத்தியும்,வேலை வாய்ப்பும் அனைத்து துறைகளிலும் பெருகியிருக்கும்.

சில வருடங்களுக்கு முன் நெல் உற்பத்தியில் மட்டும் தன்னிறைவு கொண்டிருந்தோம்..விவசாயத்தின் கடின நிலைகள் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.நிறைய ஆளுக இந்தியாவை விட்டு ஓடிவிட்டதால் வேலை வாய்ப்புக்கள் இருக்கிற மாதிரி தோணுது.எதனையும் இந்தியா தாங்கிக்கொள்ளும் வல்லமை இருப்பதை 64 வருட ஜனநாயகம் உரக்கச் சொல்கிறது.

7.மக்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருப்பதோடு வருமானம் அனைவருக்கும் நியாயமான முறையில் பங்களிக்கப்படும்

முந்தைய ரஷ்ய அமெரிக்க பனிப்போர் காலத்துக்கும் உலகமயமாக்கல் நிலைக்கும் நிறையவே வித்தியாசங்கள் இருப்பதோடு வாழ்க்கைத்தரம் ஓரளவுக்கு பரவாயில்லை எனலாம்.

8.இயற்கை வளங்களை சீராக பங்கீடு செய்வதால் விலைவாசி உயராமல் நிரந்தரமாக இருக்கும்.உணவு உற்பத்தி தேவையான அளவு இருக்கும்.

விலைவாசிகள் உயராமல் இல்லை,ஆனால் அமெரிக்க டாலரின் மதிப்போடு ஒப்பிடும்போது பணவீக்கம் அதிகமாகி விட்டதென்று கூற இயலாது.உணவு உற்பத்தி சுயதேவைப் பூர்த்தியளவுக்கு இருக்கிறதென்றே கூறலாம்.இல்லையென்றால் அதிகமா சாப்பிடுவது இந்தியாக்காரன் என முந்தைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் கரிச்சுக் கொட்ட வேண்டிய அவசியமே இருந்திருக்காது:)

9.மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு சீராக இருக்கும்.அரசுத் துறை, தனியார் துறை, பொது நலக் குழுக்கள், கட்சியின் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை கண்காணிக்கவும், வழி நடத்தவும் கடமைப்பட்டவர்கள்.

ஜனநாயக தூண்களான காவல்துறையும், நீதி துறையுமே மோதிக்கொள்ளுமளவுக்கு சட்டம், ஒழுங்கு காப்பாற்றப் பட்டாலும் அப்பாவி மக்களைப் பொறுத்த வரை சட்டம்,ஒழுங்கில் குறையில்லை.அரசு, தனியார், பொதுநல கட்டமைப்பில் வழிநடத்தும் தகுதியில்லாமல் போனாலும்  மொத்த இந்தியாவாக அன்னா ஹசாரே போன்ற குரல்களும் கூடவே மத்தளமாக இளைய தலைமுறையும் சேர்ந்து ஒலிப்பதால் கொஞ்சம் நம்பிக்கையும் தோன்றுகிறது.

10.அடிப்படை பொருளாதாரம்,நாட்டின் வருமானம் போன்றவை ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையானதாக ஊழல்,லஞ்சமற்று சுதந்திரமாக இருக்கும்.
 
எவரெஸ்ட்டின் உச்சியிலிருந்து விழுந்து  மூக்குல ஒரே ரத்தம்ன்னாக் கூட பெருமைப்பட்டுக்கலாம்.நாமோ கூவத்தில் மூழ்கி மூச்சுத் திணறுகிறோம்.

5 comments:

MANO நாஞ்சில் மனோ said...

நடக்குற காரியத்தை சொல்லுங்க நடராஜன்....

ராஜ நடராஜன் said...

//நடக்குற காரியத்தை சொல்லுங்க நடராஜன்....//

மனோ!இந்தப் பசங்க செய்ற அலும்புல மனசு விட்டுப் போகுதுன்னாலும் அந்தப்பக்கமா நின்னுகிட்டு அப்துல்கலாம் கனவு காண வேற சொல்றாரே!அப்ப என்ன செய்யலாம்?

நடக்குற காரியம்ன்னா மே 13ம் தேதிலேயிருந்து யாருமே திருட விடாம கண்கொத்திப் பாம்பா உட்கார்ந்துகிட்டு பதிவு போடறது மட்டும்தான்!

என்னது அதுவும் நட்க்காதா:)

ஓலை said...

இருக்கிற சூழ்நிலையிலும் நேர்மையான வாழ்வு வாழணும்னு நினைச்சு வாழ்வது சிலர். நேர்மையா வாழ்ந்தா நாம் நினைக்கிற இலக்கை அடைய முடியாதுன்னு, அந்த முடிவில்லாத் தொடரை நினைச்சு ஓடறது பலர்.

இருபாலரும் இந்த உலகத்தில் வாழத்தான் செய்யணும்.

அனைவருக்கும் ஒரு நேர்மையான் வாழ்வு அமைத்துக் கொடுக்கிற சமூகம் ஏற்படும் வரைக்கும் ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு சமுதாய அமைப்பின் பேரைச் சொல்லி தேடி ஓடிக்கிட்டே இருக்க வேண்டியது தான்.

ராஜ நடராஜன் said...

//இருக்கிற சூழ்நிலையிலும் நேர்மையான வாழ்வு வாழணும்னு நினைச்சு வாழ்வது சிலர். நேர்மையா வாழ்ந்தா நாம் நினைக்கிற இலக்கை அடைய முடியாதுன்னு, அந்த முடிவில்லாத் தொடரை நினைச்சு ஓடறது பலர்.

இருபாலரும் இந்த உலகத்தில் வாழத்தான் செய்யணும்.

அனைவருக்கும் ஒரு நேர்மையான் வாழ்வு அமைத்துக் கொடுக்கிற சமூகம் ஏற்படும் வரைக்கும் ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு சமுதாய அமைப்பின் பேரைச் சொல்லி தேடி ஓடிக்கிட்டே இருக்க வேண்டியது தான்.//

ஓலை!சுவடியில் எழுதி வைக்கவேண்டிய அருமையான தத்துவம்.பின்னீட்டீங்க போங்க.உங்க கடைல எங்கேயாவது நிரந்தரமா ஒட்ட வைச்சுக்கலாம்:)

Chitra said...

சைனீஸ்ல ஏதோ பத்து பாயிண்ட்ஸ் கொடுத்து இருக்கீங்க.... ஒண்ணும் புரியல.... :-))))))))))