Followers

Sunday, January 29, 2012

தானியங்கிப் பின்னூட்டங்கள்.

சர்.ஐசக் நியூட்டன் இயக்கவியலில் புவியீர்ப்பு விசை போன்ற புதிய பரிமாணங்களைக் கொண்டு வந்தது போல் பதிவர் வவ்வால் அவரது பதிவிலும்,பின்னூட்டங்களிலும் புதிய பரிமாணங்களாக புதிய தமிழ் சொற்களைக் கொண்டு வருவதின் ஒரு சோற்றுப் பதமே தலைப்பு.

தலைப்பின் சாரம் என்னவென்று அறிய விரும்புவர்களும் கால நேரம் உள்ளவர்களும் சென்ற பதிவையும்,பின்னூட்டங்களையும் ஒரு பார்வையிடலாம். சென்ற வாரம் மிகவும் உக்கிரமாக சூரிய கதிர்கள் பூமிக்கு தெரிந்தது போல் முந்தைய பதிவான எம்.எஃப் ஹுசைனை அரவணைத்து சல்மான் ருஷ்டியைக் கைவிட்டு விடலாமா என்ற பதிவின் பின்னோட்டங்கள் கூட கொஞ்சம் வேகம் பிடித்து நண்பர் ராபின் மூட்டி விட்ட சிரிப்பில் திசை மாறிப் போய் பின்னூட்டங்கள் எங்கே போகிறதென்றே அறியாமல் ஒன்றைத் தொட்டு இன்னொன்றாக அதுவாக சுழன்று கொண்டிருந்தது.

இரட்டை வரிப் பின்னூட்டங்களே பதிவுலகில் பிரபலம் என்பதாலும் அனைவருக்கும் ஒரே இடத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொள்வது இயலாது என்ற போதிலும் நட்பு காரணமாக கூட பலர் ஹலோ!பதிவு நன்றாக இருக்கிறதென்றோ,பல்லை நற நறக்க நல்ல தருணமொன்றோ சில பின்னூட்ட வெளிப்பாடுகள் உருவாகின்றன.ஆனால் கடந்த சில பதிவுகளின் பின்னூட்டங்களில் முக்கியமாக பதிவர்கள் வவ்வால்,சிராஜ்,தருமி,ராபின் என தொடர் பின்னூட்டங்கள் ஒரு புதிய அனுபவமே.மாற்றுக் கருத்துக்களாக இருந்தாலும் பதிவர் சிராஜ் நட்புடன் அவரது கருத்துக்களை முன் வைத்ததற்கு நன்றி.

எந்த எல்லைக்குள்ளும் அடங்காத சிந்தனைகளை முன்வைப்பதால் மட்டுமே ஒரு வட்டத்துக்குள் மட்டும் நின்று கொண்டு விவாதம் செய்வதையும், சமனீடுகள் இல்லாத ஒற்றைப் பார்வையையும் விரும்புவதில்லை என்பதை முந்தைய பதிவும்,பின்னூட்டங்களும் உறுதிப்படுத்தும்..எழுத்தின் பேச்சுவாக்கில் குறைகளும் கூட இருக்கலாம்.இல்லையென்று சாதிப்பதற்கில்லை.இங்கொன்றும் அங்கொன்றுமாக காரண காரியங்கள் தவிர யார் மீதான கோபமோ,வன்மம் கொண்டோ பதிவுகளும் பின்னூட்டங்களும் இடுவ்தில்லை.அப்படியும் சுட்டிக்காட்டும் படி ஏதாவது தென்பட்டால் குற்றம் நிகழ்வுகள் மீது மட்டுமே ஒழிய பதிவு குறித்தோ பின்னூட்டங்களின் உரிமைகள் குறித்தோ விமர்சிப்பதற்கு ஒன்றுமில்லை.ஏனென்றால்   ஒன்றைத் தொட்டு இன்னொன்றாக தலைப்பில் குறிப்பிட்டவாறு தானியங்கியாய் முன் மூளைப்பதிவுகள் எதுவும் செய்யாத காட்டாற்று வெள்ளம் அவை.மொத்த வேகத்தில்  இருப்பதை அள்ளிக்கொண்டு வருவனவே.

வெறுமனே சண்டைகள்,சச்சரவுகள் என்பதை விட பதிவுகளை இன்னுமோர் அடுத்த தளத்திற்கு கொண்டு செல்வது மட்டுமே காலம் கடந்தும் பதிவின் பெயர்கள் நினைவில் நிற்கும்.குறைந்த பட்சம் விமர்சனங்களுக்குள் நுழையாத மன அழுத்தங்கள் இல்லாத எழுதும் தருணங்களே எழுதவும்,சொல்லவும்,வாசிப்பின் அடுத்த கட்டத்துக்கும் நம்மை கொண்டு செல்லும்.ஆனால் நடைமுறைகளோ விநோதமானவையே.இருந்தாலும் இதனை எதிர்த்த எதிர்நீச்சல் தேவையான ஒன்றே.

எனக்கோ,எனது அலைவரிசையில் எண்ணங்களை வெளிப்படுத்தும் நண்பர்களின் மன அதிர்வுகள் இன்னும் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்.அது போலவே சிலரது எதிர் வெளிப்பாடுகளும் என்பதால் அவரவர் நிலையில் அளாவளாவக் கற்றுக்கொள்வது நல்லதென நினைக்கிறேன்.அப்படியும் வரப்புக்கள் தாண்டி,வரம்புகள் தாண்டி அளாவளாவும் தருணங்களும் பொதுவெளியில் உருவாகவே செய்யும்.மொக்கைகள்,நகைச்சுவை சில சமயம் இது மாதிரி தருணங்களில் வென்று விடக்கூடும். இவற்றையும் தாண்டி மொத்த பரிமாறல்களுக்கான தருணங்கள் இருக்கவே செய்கின்றன.தேடலும் அகன்ற பார்வை மட்டுமே துணை.

சிலருக்கு  நாவல்,திரைப்படங்கள் பிடிக்காமல் போகலாம்.பித்தக்காய்ச்சல் கொண்டவர்கள் எல்லாம் இதில் சேர்த்தியே இல்லை என்பதால்  நாவல் புத்தக வாசிப்பும் திரைப்படங்களும்  ஜனநாயக வாழ்வின் மையத்தில் ஒரு அங்கமே என்பதாலும்,மனித யோசனைகளை அகலப்படுத்தும் வல்லமை கொன்டவை என்பதாலும் சில நாவல்,திரைப்படங்கள் நாம் சார்ந்த வாழ்க்கையை ஏதாவது ஒரு கோட்டில் பிரதிபலிப்பதன் காரணம் கொண்டு ஒரு நாவல்,திரைப்படம் குறித்தான பார்வையை பகிர்வது நல்லது.

அந்த விதத்தில் ஈழத்தமிழர்கள் பதிவுகள் போடுகிறேன் பேர்வழியென்று எதுவெல்லாமோ சொல்லி உங்களையும் மனசித்திரவதைக்குட்படுத்தி, பார்வையாளர்களையும் உஷ் கொட்ட வைக்காமல் நேரம் ஒதுக்கி Exodus என்ற நாவலைப் படிக்கலாம்.அதே போல் வெறுமனே மார்க்கமென்று அலைபவர்கள் தவிர்த்து பாலஸ்தீனிய விடுதலைக்கு ஆதரவு தருபவர்கள் நாவலையும்,கூடவே பாலஸ்தீனிய அரேபியர்கள் வரலாற்றில் எங்கே கோட்டை விட்டார்கள் என்ற தேடலில் சுய பரிசோதனை செய்யலாம்,இறுகிய விலங்குகளே உடைக்கப்படும் தருணங்கள் இவை.

வாசிப்புக்கான நேரங்களை தொலைத்து விட்டோம்.ஆனாலும் அறிவுக்கான தாகத்தை விஞ்ஞானத்தின் வளர்ச்சி ஏதோ ஒரு விதத்தில் பூர்த்தி செய்கிறது.சில இழப்புக்கள்.சில லாபங்கள்,மாற்றங்கள் என்ற வகையிலேயே நாம் வலம் வந்து கொண்டிருக்கிறோம்.வாசிப்புக்கான கால சூழல்கள் இல்லாத போதும் 600 பக்கங்களுக்கும் மேல் படிக்க வேண்டிய கதையை 3 மணி நேரத்துக்குள் ஒரு சிறந்த திரைப்படம் அதன் சாறெடுத்து கொண்டு வந்து விடுகிறது.அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்களுக்கு எக்ஸோடஸ் என்ற திரைப்படம் டி.வி.டி வட்டாக கிடைக்க கூடும்.கிடைக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு பிட்டு படம் பார்க்கிற தோசமாய் சுமார் 20 பிட்டுகளை யூடியூப் வழங்குகிறது. மாற்று வாய்ப்பு தகவல் ஏதாவது இருந்தால் பகிர்பவர்களுக்கு நன்றி சொல்வேன்.

பதிவுலகின் இந்தப் பட தயாரிப்பாளரையும், விநியோகஸ்தரையும், கதாநாயகனையும்,கதாபாத்திரங்களையும்,ஏனையோர்களையும் அடுத்த பதிவில் கௌரவித்து விடலாம்.நன்றி.





.

Wednesday, January 25, 2012

எம்.எஃப் ஹுசைனை அரவணைத்து சல்மான் ருஷ்டியை கைவிடலாமா?

 முந்தைய கலிலியோ பதிவில் நானும் பதிவர் வவ்வாலும் எம்.எஃப் ஹுசைனுக்கு குரல் கொடுத்து விட்டு சல்மான் ருஷ்டியை கை விட்டு விடலாமா என பின்னூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தோம்.சல்மான் ருஷ்டியின் ஜெய்ப்பூர் இலக்கிய விழா வருகைக்கு எதிர்ப்பு குறித்து ஹிந்து பத்திரிகையும், NDTV தொலைக்காட்சியும் பொது விவாத விழிப்புணர்வை உருவாக்கியுள்ளன.
நேர பகிர்வு தாமதத்தில் பதிவு போட இயலாத சூழலில் பதிவர் தருமி சல்மான் ருஷ்டி குறித்த முதல் கருத்து வெளியாடலை முன் வைத்துள்ளது மகிழ்ச்சிக்குரியது.(பதிவர் தருமி!இந்தப் பதிவை ஒருவேளை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!சல்மான் ருஷ்டியென முழுப்பெயரையும் உச்சரியுங்கள். இல்லையெனில் ருஷ்டியாவது போடுங்கள்.சல்மான் என்று விளித்ததும் ஒஸ்தி யோட ஒரிஜனல் இங்கே எங்கே வந்தார் என்ற குழப்பமே தோன்றியது:)..

இனி பதிவின் சாரத்துக்கு செல்லும் முன் எம்.எஃப்.ஹுசைன் தேச துறவறம் என்ற பதிவையும் உள்வாங்கிக் கொண்டு மேற்கொண்டு தொடர்ந்தால் சமனீடு குறித்த எனது பார்வையை புரிந்து கொள்ள வசதிப்படும்.

மதம் சார்ந்த,சாராத கருத்துக்கள் பதிவுலகில் வலம் வருவது ஒருபுறமிருக்க பெங்களா தேஷ் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின்,இந்தியாவின் சல்மான் ருஷ்டி போன்றவர்களின் இலக்கிய வெளிப்பாடுகளுக்கு வரும் உயிர் பயம் மிரட்டல்களிலிருந்து மத தீவிரவாதங்களின் அளவுகோலை கணிக்க இயலும். சும்மா கிடந்ததை ஊதிக்கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழிக்கு ஏற்பவே சல்மான் ருஷ்டிக்கு எதிரான ஈரானிய கோமினியின் செயலும் கூட.Satanic verses என்ற வார்த்தையின் சாத்தானின் வேதம் என்ற சொல்லாடலுக்கு கூட கோமினியே உரிமை கோரலாம்:)முன்னாடி நம்மூர்ல பாம்புக்கும் கீரிக்கும் சண்டைப் போட விடுகிறேன் எனும் மோடி மஸ்தான் வேலையே சாத்தானின் வேதம் பிரச்சினையும்.

இப்பொழுது நாவலின் பெயர்கள்,உட்பொருள் என பல வியாக்கியானங்கள் வெளிவரத்தொடங்கியிருந்தாலும் சல்மான் ருஷ்டி புத்தகத்தை வெளியிட்ட காலகட்டத்தில் புத்தகத்தின் உட்பொருள் அறிந்த ஒரே ஆள் சல்மான் ருஷ்டியாக மட்டுமே இருக்க முடியும்.பேனை பெருமாளாக்கின கதையாக பெயர்களின் உவமை காரணமாக மதம் சார்ந்த ஆய்வாளர்கள் கருத்து வெளியிட,சிறு நெருபபை ஜுவாலையாக்கிய பெருமை கோமினிக்கே. பத்வா,கொலை மிரட்டல்கள் வந்த காலகட்டத்திலும் கூட விமர்சனத்துக்குள்ளான வரிகள் எவை என்பது குறித்து யாருக்கும் தெரியாது.குறைந்த பட்சம் பத்வா கொடுத்த கையோடு கோமினியே விமர்சனத்துக்குரிய வரிகள் என்ன என்று விளக்கியிருக்கலாம். கோமினி பத்வா கொடுத்து விட்டாரா?அப்ப சல்மான் ருஷ்டிக்கு கொலை மிரட்டல் விடவேண்டியதுதான் என்ற ரீதியிலேயே சுமார் 8 ஆண்டுகள் சல்மான் ருஷ்டியின் குரல் எந்த எழுத்து அரங்க வட்டங்களிலோ ஒலிக்கப்படவில்லை.
பின்பு மிதவாதியான முகமது கட்டாமி(Mohammad Khatami))ஈரான் ஆட்சியின் தலைமைக்கு வந்தவுடன் சல்மான் ருஷ்டியையோ அவர் மீதான கொலை மிரட்டலையோ ஆதரிக்கப்போவதுமில்லை.என்ற தீர்மானத்திற்கு பின் சல்மான் ருஷ்டியின் குரல் பொதுவெளியில் ஒலிக்கத்துவங்கியது. 

ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் மத தீவிரவாதங்களுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவின் மத தீவிரவாதம் குண்டுவெடிப்புக்களாக வெளிப்பட்டாலும், குண்டுவெடிப்பின் பின்ணணியில் இந்துத்வா மத தீவிரவாதமும் ஒளிந்து கொண்டிருப்பதால்,பாகிஸ்தானிலிருந்து இந்தியாவை நோக்கிய மத தீவிரவாத நிகழ்ச்சிகள் தவிர்த்து ஒப்பிட்டால் இந்திய மத தீவிரவாதம் கட்டுக்குள் உள்ளதென்றே கொள்ளலாம்.மிரட்டல்கள்,உயிர் பயங்கள் உருவாக்குவதின் காரணமாக அமைதியை விரும்புவர்களின் குரல்கள் வெளிப்படாமல் இஸ்லாமியத் தீவிரவாதம் மட்டுமே தன் முகத்தைக் காட்டுவதால் இஸ்லாமியத்தின் இயல்பான பிம்பம் மென் மேலும் சரிந்து விடுவது என் போன்று வளைகுடா நாடுகளில் வாழும் மதசார்பற்றவர்களுக்கு வருத்தமே.

இவற்றோடு மதக் கோட்பாடு நூல்களும் தொடர்ந்து பயணிப்பதும் கூட மனிதர்களின் தொடர் உணர்வலைகளின் பொருட்டே என்பதும் ஆச்சரியமளிக்கும் ஒன்றும் கூட..நான் சிறுவயதில் கண்ட ஒற்றை ஆலமரம் யாரோ ஒருவர் பத்திக்குச்சி கொளுத்தி வைக்க காலப்போக்கில் ஆலமரக்கோயில் ஆகிப்போனதும், மழை காலத்து சறுக்கும் சாலையோ,சேரன் போக்குவரத்து வாகனக் கோளாறோ, வாகனம் ஓட்டியின் தவறான கணிப்போ ஒரு வாகனத்தின் மொத்த உயிர்களும் விபத்தால் இறக்க காலப்போக்கில் அந்த இடம் முனியாண்டி கோயிலாகிப்போனதை காண நேர்ந்தது. 

மனித பயங்களுக்கு அப்பாற்பட்டு,கேள்விகளுக்கான முழு பதிலாக பாமரனுக்கும் புரியும் சூழலில்,பரிணாமக் கோட்பாடுகளும் மனித சக்தியின் மொத்த உணர்வுகளை பிரதிபலிக்கும் காலகட்டத்தில் மத நம்பிக்கைகள் கடவுளிடமிருந்து விடுபட்டு ஈனஸ்வரமாக ஒலிக்கும் காலகட்டத்தில் மதவாதங்கள் அடிபட்டு முந்தைய சந்ததியின் கலாச்சார. கருவூலங்கள் என்ற நிலையில் மட்டுமே மதநூல்களும், மதம் சார்ந்த கோட்பாடுகளும் நிற்க கூடும்.இதற்கு உதாரணமாக எகிப்தில் உள்ள பிரமிடுகளைக் கூறலாம்.மேற்கத்திய நாட்டவர்களுக்கும்,மனித வரலாற்றில் ஆர்வம் செலுத்துபவர்களுக்கும், பைபிளின் பழைய அதிகாரங்களுடன் தொடர்பு படுத்துபவர்களுக்கும் முக்கியமாக  சுற்றுலா பொருளாதாரத்தை தருவதால் மட்டுமே எகிப்திய அரசுக்கும் பிரமிடு ஒரு பிரமிப்பான விசயம்.மேலும் நமது உள்ளூர்க்குள்ளே இருக்கும் கட்டிடங்களின் பாரம்பரியம் பற்றிக் கவலைப்படாத மனநிலையே சராசரி எகிப்தியர்களின் மனநிலையும்.

இந்துத்வா தீவிரவாதம் இந்தியா சார்ந்த ஒன்று மட்டுமே.அதன் எல்லைகள் இன்னும் நாடுகளீன் எல்லைகளைக் கடக்கவில்லை.ஆனால இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதத்தின் பிறப்பிடம் ஆழ்ந்த நிகழ்வுகளை சுமார் 60களின் இறுதி துவங்கி 9/11 வரை உற்று நோக்கினால் இதன் பூர்வீகம் பாகிஸ்தானில் முன்பு கூடி ஊக்குவிக்கப்பட்ட இஸ்லாமிய மதக்கூட்டங்களாக இருக்க கூடும்.இதன் தாக்கங்களாக பம்பாய்,,கோவை குண்டு வெடிப்பு போன்றவற்றை சொல்லலாம்.சுதந்திர இந்தியாவின் இந்து,இஸ்லாமிய வேறுபாட்டின் துவக்கமாக 1993ல் தாவுத் இப்ராஹிம் உதவியுடன் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ இந்தியாவுக்கு எதிராக கட்டவிழ்த்த பம்பாய் குண்டுவெடிப்பே பிரச்சினைகளின் துவக்கமாக கூறலாம்.இதனைத் தொடர்ந்த சிமி என்ற இஸ்லாமிய மாணவர் அமைப்பும், பி..ஜே.பியின் இந்துத்வா தீவிரவாதம்,பாபர் மசூதி இடிப்பு என்ற இந்து தலிபானிசம்,நரேந்திர மோடியின் அரசியல் சூதாட்டங்களாக குஜராத் கலவரங்கள் என நிகழ்வுகள் தொடர் கதையாகின்றன.

என் மாமாவின் நண்பர் ஒரு இஸ்லாமியர்.கோவை அலங்கார் ஓட்டலுக்கருகில் அவரது வீடு இருந்தது.மாமா நண்பரின் வீட்டில் உணவருந்தும் அன்னியோன்ய காலமெல்லாம் இருந்த கோவை இரவுக்காவல் போலிஸ்நிலையங்களாக பின்பு மாறிவிட்டது வருத்தத்திற்குரிய ஒன்று.

பாகிஸ்தானிய மத தீவிரவாதத்திற்கு காரணமென்ன என்று யோசித்தால் இந்திய,பாகிஸ்தான் பிரிவினை துவங்கி,அமெரிக்கா,ரஷ்யா பனிப்போர் காலத்தில் பூகோள நலன்கள் அடிப்படையில் ஜனநாயக இந்தியாவை விட்டு அமெரிக்கா பாகிஸ்தான் பக்கம் சாய அதே பூகோள நலன்கள் அடிப்படையில் இந்தியா ரஷ்யா பக்கம் சாய,அமெரிக்காவின் ஹென்றி கிஸ்ஸிங்கரால் காஷ்மீர் பிரச்சினைக்கு தூபமிட்டது,ரஷ்யாவின் ஆப்கானி|ஸ்தான் ஆக்கிரமிப்பு எதிராக மதத்தின் அடிப்படையில் போராட வந்தவர்களை ஒன்றி திரட்டியதில் ஒசாமாவின் பங்கும்,அமெரிக்காவின் சி.ஐ.ஏ பண,ஆயுத பங்களிப்பும், சவுதி அரேபியாவின் மதம் சார்ந்த பணப் பங்கீடுமென முந்தைய ரகசியங்கள் 9/11க்குப் பின் பொதுவுக்கு வந்து விட்டன.
இந்தியா மீதான பாகிஸ்தானின் வன்மம் பாகிஸ்தானிலிருந்து பெங்களாதேஷைப் பிரித்ததில் துவங்கி நேரு காலத்து காஷ்மீர் பிரச்சினையை வலுப்படுத்துவதிலும்,காஷ்மீர் இந்துக்களை அப்புறப்படுத்தும் இஸ்லாமிய தீவிரவாதத்திலும்,காஷ்மீருக்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டினரை சிறை செய்து கொலை செய்த நிகழ்வுகளாய் காஷ்மீரில் இஸ்லாமிய தீவிரவாதம் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ மூலமாக ஊக்குவிக்கப்படுகிறது.மதம் தவிர்த்து பதிவுகள் போட மாட்டேன் என்கிற பதிவர்கள் போல:) மதம் தவிர்த்து பள்ளியில் வேறு பாடங்கள் இல்லையென தலிபான் பள்ளிகள் பாகிஸ்தானுக்குள் ஊக்குவிக்கப்படுகின்றன.இந்தியாவுக்கு எதிரான பயிற்சி களங்கள் பாகிஸ்தானுக்குள் அரசு ஆதரவுடன் உருவாக்கப்படுகின்றன.

பாகிஸ்தானுக்குள் உருவாகும் இந்தியாவுக்கான எதிரான தீவிரவாதத்தை முடுக்கி விட்டதில் தாவுத் இப்ராகிமின் பங்கும்,சிமி மாணவ இயக்கத்திற்கும் முக்கிய பங்குண்டு.சிமி மாணவ இயக்கத்தின் மறுபக்கத்தையும் இந்திய முஸ்லீம்களின் அடிப்படை பிரச்சினைகள் என்னவென்றும் ஆராயப்படவேண்டிய ஒன்று என்ற போதிலும் இதற்கு அடிப்படையாக மதம் என்ற சொல் குறுக்கே வந்து முட்டுக்கட்டைபோட்டு பிரச்சினையை திசை திருப்பி விடுகிறது.
இதற்கு எதிர்வினையாக இந்துத்வா செயல்பாடுகளும் கிரியா ஊக்கியாக செயல்பட இஸ்லாமிய தீவிரவாதத்தின் தன்மை மதத்தின் பொதுத்தன்மை அடிப்படையில் சாதாரண நம்பிக்கையாளனையும் பற்றிக்கொள்கிறது.தான் எல்லாவற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக உணரும் மனிதனுக்கு மதம் சார்ந்து எந்த கருத்து வந்தாலும் ஒரே பாய்ச்சல்தான் என்பதனை விட மத உணர்வுகளை தூண்டி விடும் தீய பந்து குழு,தஸ்லிமா நஸ்.ரீனுக்கு எதிர்ப்பு தெரிவித்த மஜ்லிஸ் போன்ற குழுவினர்,இந்துத்வா தீவிரவாதம் போன்றவை மனித நலன்களுக்கும்,மதங்களின் ஒற்றுமைக்கும் மிகவும் ஆபத்தானவை.

இதில் இன்னுமொரு கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் ஈரானிலிருந்து ஷியா கோமினியிடமிருந்து வந்த பத்வா காரணமாக சவுதி அரேபியாவும்,ஏனைய இஸ்லாமிய நாடுகளும் சல்மான் ருஷ்டி விசயத்தில் அடக்கி வாசிக்கும் பூகோள அரசியலும் குறிப்பிடத்தக்கது.

கோமினியின் சல்மான் ருஷ்டி மீதான பத்வாவும, அதனைத் தொடர்ந்த கொலை மிரட்டல்களும் முகமது கட்டாமியின் கருத்துக்குப் பின்பான காலவெள்ளத்தில் மறக்கப்பட வேண்டிவையாகவும்,சல்மான் ருஷ்டியின் கருத்து பரிமாற்றங்கள் செய்து அதன் அடிப்படையில் மீண்டும் எதிர்ப்புக் குரல் எழுப்பியிருந்தால் கூட நியாயமாக இருந்திருக்கும்.

ஒவ்வொரு மனித வாழ்வின் காலகட்டத்திலும் மனிதர்களின் வாழ்வை பிற்கால சந்ததிக்கு கொண்டு செல்வது கவிதை, இலக்கியம், ஓவியம், அறிவியல் கண்டுபிடிப்புக்கள் போன்றவை. இவற்றை அழிக்கும் எந்த ஒரு இசமும் வரலாற்றில் பின் தங்கிப்போவதோடு எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும்.

மதம் சார்ந்த கருத்துக்கள் ஆரோக்கியமான மாற்றுக்கருத்துக்களை உருவாக்குவதை விட பிரிவினை உணர்வுகளையும்,கோபங்களையுமே முன்வைக்குமென்று தெரிந்திருந்தும்  நான் சார்ந்த உணர்வுகளை எம்.எஃப்.ஹுசைனுக்கு சொன்ன கருத்தையும்,சல்மான் ருஷ்டியின் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு மிரட்டல் குறித்த கால இடைவெளியை ஒப்பீடாக பதிவு செய்யும் நோக்கிலேயே இந்த பதிவு பகிரப்படுகிறது.
சல்மான் ருஷ்டி குறித்து பெரிது படுத்தியிருக்க வேண்டியதில்லையென்பதை பதிவர் தருமிக்கு சல்மான் ருஷ்டி குறித்த பின்னூட்டம் சொல்லும் போது "இலக்கியத்துக்கு நோபல் பரிசு வாங்கிய V.S.Naipaul பற்றியோ India: A Wounded Civilization என்ற புத்தகம் பற்றியோ எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்கள்:)" என்று குறிப்பிட்டிருந்தேன்.இலக்கிய வாசக வட்டத்தில் மட்டுமே  சலசலப்பை உண்டான புத்தகம்.படிப்பவர்களுக்கு இரு எழுத்தாளர்களுக்கும உண்டான சலசலப்பின் வித்தியாசம் புரியும்.



Sunday, January 22, 2012

கலிலியோ (Galileo) - திரைப்படம்

இப்பொழுதைய காலகட்டத்தில் பொருளாதாரம்,அரசியல் தவிர்த்து அறிவியல்,மதம்,மதச்சார்பின்மை என்ற மூன்று நிலைகளில் உலகம் சுழன்று கொண்டிருந்தாலும் அரிஸ்டாடில் காலம் துவங்கி (கி.மு 300) கோபர்நிகன் சிஸ்டம் என்ற சூரியனை ஏனைய கோள்கள் சுற்றுகின்றன என்ற புதிய தியரியை உருவாக்கிய போலந்து நாட்டைச் சேர்ந்த நிகோலஸ் கோபர்நிகஸ் காலமான 14ம் நூற்றாண்டுக்கு முன்பும் அவரைத் தொடர்ந்து கலிலியோ கலிலே வாழ்ந்த 16ம் நூற்றாண்டு வரைக்கும் வாடிகன் நகரத்து போப் சொல்லே இறுதியான தீர்ப்பும் மதம் என்ற ஒற்றை கோட்பாடு மட்டுமே உலவி வந்தது.

இங்கே முக்கியமான ஒன்று அரிஸ்டாடில் காலம் தொட்டு சுமார் 20 நூற்றாண்டுகள்  நம்பப்பட்டு வாடிகன் மத ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டு போப் அனுமதியோடு அங்கீகரிக்கப்பட்ட பூமியே அசையா மையம்,சூரியனும்,சந்திரனும்,நட்சத்திரங்களும் பூமியைச் சுற்றி வருகின்றன என்ற முகவுரையோடு கலிலியோ திரைப்படத்தின் கதைக்குள் செல்வோம்.

இங்கே கதை சொல்லும் போது நிகழ்வுகள் துண்டு துண்டாக இருப்பதை ஒட்ட வைக்க மூன்று பையன்கள் ஒவ்வொரு காட்சிக்கும் இடையில் வந்து கலிலியோ கலிலே என்ற வார்த்தை மட்டும் புரிந்து ஏனைய வார்த்தைகள் புரியாத ஒரு பாட்டை தொடர்ச்சிக்காக பாடி விட்டுப் போகிறார்கள்:)
சிறுவன் ஒருவன் பந்து ஒன்று நடுவிலும் சுற்றிலும் வளையங்களுடன் கூடிய விக்டோரியா ராணி காலத்து  கிரிடம் மாதிரி ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு ஓடி வருவதில் கதை ஆரம்பிக்கிறது.கலிலியோ நடுவில் இருக்கும் பந்து வடிவம்தான் பூமியென்றும்,சுற்றியுள்ள வளையங்கள் ஏனைய கோளங்களான சந்திரன்,சூரியன்,நட்சத்திரங்கள் என மக்கள் நம்பிக் கொண்டிருப்பதாக சிறுவனிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதனையடுத்து மாணவர் ஒருவரும் வந்து தான் வானியல் படிப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டு பேச கலிலியோ தனது வீடு சந்தைக்கடை மாதிரியாகி விட்டதென்கிறார்.

இதனைத் தொடர்ந்து கலிலியோவின் 17 வருட உழைப்பில் நெதர்லாந்திலிருந்து கொண்டு வந்து தயாரித்த டெலஸ்கோப்பை வாடிகன் கருவூல பொறுப்பாளர்,கார்டினல்,வானியல் துறை, சார்ந்த பலரின் முன்னிலையில் பரிசோதனை செய்ய வாடிகன் கருவூல பொறுப்பாளர் டெலஸ்கோப்பை விற்று காசு பார்த்துவிடலாம் என்ற நப்பாசையில் கலிலியோவுக்கு 200 ஸ்கூட்டி சம்பளம் அதிகரிக்கிறார்.இந்த டெலஸ்கோப்பை விற்பதன் மூலம் இத்தாலி மாலுமிகள் எதிர் வரும் கப்பல்களை இரண்டு மணி நேரத்துக்கு முன்பே தெரிந்து கொள்ள முடியும் என்பதோடு கருவூல பொறுப்பாளர் டெலஸ்கோப் தொழில்நுட்பத்தை விற்று காசு பார்த்து விடலாம் என்கிறார்.

கலிலியோவோ வானியலில் ரோம் மூன்று தலைமுறை பின் தங்கியிருப்பதாக்வும் டெலஸ்கோப்பை வானிலை ஆராய்ச்சிக்குப் பயன் படுத்த விரும்புகிறார்.தன் நண்பரிடம் ஜூபிடர் என்ற புதிய கோளத்தை கண்ட முதல் மனிதன் தான் எனவும் சூரியனை பூமி உட்பட்ட கோளங்கள் சுற்றுவதாகவும்,சந்திரன் மிருதுவான கோளம் என்ற பழைய முடிவுகளுக்கு எதிராக பூமியைப் போலவே சந்திரனும் மலைகள்,பள்ளத்தாக்குகள் உடையனவென்றும்,பால்வெளி மண்டலத்தில் (Milkyway)பல நகர்வுகள் உருவாகுவதாகவும் படிகம்(Crystal) மாதிரியான சிறியதும் பெரியதுமான நட்சத்திரங்களின் நகர்வுகளின் பிரதிபலிப்பே ஒளியை உருவாக்குவதாகவும் தன் நண்பரிடம் சொல்கிறார்.

கலிலியோவின் நண்பரோ கலிலியோவின் கண்டுபிடிப்புக்கள் பயம் தருவதாக கூறுகிறார்.மேலும் பூமிக்கும் அப்பால் சொர்க்கம் என்ற ஒன்று இருப்பதாகவும், சொர்க்கத்தில் கடவுள் இருப்பதாகவும்,அவரது கட்டளையின் படியே போப் இயங்குவதாகவும் சொல்லும் பொது கோட்பாடு என்ன ஆவது?கடவுள் எங்கே என்ற கேள்வியை கலிலியோவின் நண்பர் முன்வைக்கிறார்.கலிலியோ தான் கணிதம்,பெளதிகம் போதிக்கும் ஆசிரியரென்றும் தான் ஒரு வானிலை ஆராய்ச்சியாளரென்றும் மதம் குறித்த ஆராய்ச்சியாளர் (Theologist) அல்ல என்கிறார்.(சென்னை அடையார் ஆலமரத்து Theological society இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று)

மேலும் "God is within ourselves or no god" என்கிறார்.பின் தனக்கு நிறைய மதவாத நண்பர்கள் இருக்கும் எண்ணத்தில்  தனது புதிய கண்டுபிடிப்புக்களை சுமார் பத்து வயதே நிரம்பிய அரச இளவரசன் முன்பு விளக்க,இளவரசனுக்கோ தனது நட்சத்திரங்கள் காணாமல் போய் விடுமோ என்ற வருத்தம் உருவாகிறது.இளவரசனும்,இளவரசனை சுற்றியுள்ளவர்கள் அறிவைக்கண்ட கோபத்தில் கலிலியோவுடன் படத்தின் துவக்கத்தில் உரையாடும் சிறுவன் வெளியேறி விடுகிறான்.

மத போதகர்கள் கலிலியோவின்  புதிய கண்டுபிடிப்பைக்களைக் கண்டு எள்ளி நகையாடுகிறார்கள். கலிலியோ பதவி உயர்வுக்காக டெலஸ்கோப் ஆராய்ச்சியை வானிலை அறிவியல் துறைக்கு அனுப்ப கலிலியோவின் கண்டுபிடிப்புக்கள் உண்மையே என்கிறது ஆராய்ச்சி குழு..இதைக்கண்டு கலிலியோ மீது மத போதகர்கள் கோபம் கொள்கிறார்கள்.இதற்கும் ஒரு படி மேலே போப் " போன முறை இப்படி ஒரு ஆளு கண்டு பிடிச்சதுக்கு நெருப்பில் போட்டுக் கொளுத்தினோமே அந்தாளு பேரென்ன என்று கேட்டு ரத்தக்கொதிப்பு வேறு வந்து விடுகிறது.

மத போதகர்கள் கலிலியோ கண்டுபிடிப்பை ரவுண்டு கட்டி கும்மியடிச்சு சிரிக்கும் காட்சியிலும், போப் உயர்ந்த குரலில் கலிலியோவிடம் கத்திவிட்டு உயர் ரத்த அழுத்ததில் உட்கார்ந்து விட்ட காட்சியிலும் எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை:) போப் வயசான காலத்துல கஷ்டப்படறது சிரிப்பா இருக்குதான்னு கேட்கிறவங்களுக்கு 16ம் நூற்றாண்டின்  தவறுக்கு 1979ம் வருடம் போப் ஜான் பால் II மூலமாக ஐன்ஸ்டீனின் நூற்றாண்டு விழாவில் வாடிகன் மன்னிப்பு கேட்டு விட்டது.

நாம் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடும்  April fool விழாவாக கலிலியோவுக்கு எதிராக மேடை நாடகமாக பாடடு வடிவத்தில் அரங்கேறுகிறது. இதற்கிடையில் மத போதகர்கள் குழுமியிருக்கும் கூட்டத்தில் சிறிய கோலிக்குண்டை உட்கார்ந்த வண்ணம் தூக்கிப் போட மத போதகர்களில் ஒருவர் என்னமோ கீழே விழுந்து விட்டதாகக் கூறுகிறார்.அது ஏன் மேலே செல்லவில்லையென்று மறுகேள்வி கேட்டு மத போதகர்களின் கோபத்துக்கு உள்ளாகிறார்.(இதனை பின்பு ஐசக் நியுட்டன் புவியீர்ப்பு விசை தியரி உருவாக்கியதை இயக்குநர் சிம்பாளிக்காக காட்டியிருக்கலாம்).மாணவர்களுடன்  ஒரு குவளையில் பனிக்கட்டியை கரங்களால் முக்கி பின் கையை எடுத்தவுடன் மிதப்பதற்கு காரணம் என்ன என்று கேட்கிறார்.மாணவர்களில் ஒருவர் நீரை விட  எடை அழுத்தமான பொருள்  மூழ்குமென்றும் எடை குறைவான பொருள் மிதக்குமென்றும் சொல்ல ஒரு நீண்ட உலோக ஊசி நீரை விட அதிக எடை கொண்டது ஆனால் எப்படி மிதக்குமென்று ஒரு பேப்பரைக் கொண்டு நீரில் மிதக்க வைக்கிறார்.

இதற்கிடையில் மாணவன் ஒருவர் தனது வானியல் படிப்பை விட்டு விடுவதாக கூறி தனது பெற்றோர்கள் கிராமத்து விவசாயிகள் என்றும் கோள்கள் பற்றிய எவ்வித அறிவும் இல்லாமல் அவர்களது வாழ்க்கை கட்டுப்பாட்டுடன்,ஒரே சீராகவே செல்கிறது.இவர்களுக்கு வானியல் போன்ற அறிவு எதற்கு தேவை என்கிறார்.ஒரு சமூக அமைப்பில் தனது வாழ்க்கை சார்ந்த சிந்தனை மட்டுமே இயல்பு என்றும் அறிவுபூர்வமாக சிந்திக்கும் வானிலையாளான் அப்படியிருக்க இயலாதென்றும் கூறுகிறார்..கலிலியோவின் புதிய கண்டுபிடிப்புக்களின் காரணமாக  கலிலியோவுக்கு நீதி மன்ற தண்டனை கிடைக்கிறது..மகளின்  திருமணம் தடைபட்டு சந்நியாசினியாகி விடுகிறார்.கலிலியோ வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு கண் பார்வை மங்கும் நிலையில் கதை முடிகிறது.

தேடிப்பார்த்ததில் இந்த முறை விக்கிபீடியா கதை உதவிக்கு வரவில்லை.ஆனால் தேடலில் கதை பள்ளிக்கூட கதை என்பதாலோ என்னவோ ஒருவர் கூட ஒழுங்கான ரிவுயு போடவில்லை. ஐஎம்டிபி தேடியதில் சிகாகோ சன் டைம்ஸ்க்கு ரிவியு போட்ட ரோஜர் ஈபெர்ட் என்பவரும் கலிலியோ வேடத்தில் நடித்த டோபல் என்பவர் இஸ்ரேலிய நடிகர்..நாடகத்துறையிலிருந்து வந்ததால் நடிப்பு எடுபடவில்லை,இடையில் வந்து போகும் பிரிட்டிஷ் நடிகர்களே உசத்திங்கிற மாதிரி சொல்கிறார்.விக்கிபீடியாவும் அதனைக் காப்பி செய்து தனது பக்கத்தை நிரப்பிக்கொண்டது.

ஒருத்தர் படம் 1974ல வந்ததுன்னு தலைப்பு போடுகிறார்.ஆனால் படம் வந்தது 1975 என்ற விக்கிபீடியாவின் சொல் உண்மையாக இருக்க கூடும்.கேன்ஸ்பெஸ்டிவலுக்குப் போய் ப்லிம் காட்டுனதோட சரி.மேற்கொண்டு இறுதி சுற்றுக்கு செல்லவில்லை என மேலும் தகவல்.இந்திய பெரும் நகரங்களில் இந்தப் படம் வெளிவந்ததா?டாவின்சி கோடுக்கெல்லாம் அவ்ளோ விளம்பரம் கொடுத்ததே இந்தியா!

கதையில் வசனங்களே முக்கியத்துவம் பெறுகின்றன.அறிவியல்,மத சார்பாளர்கள் பார்க்க வேண்டிய படம்.

பௌதிக அறிவியல் துறை சார்ந்த கற்றும் மறந்த பாடங்கள் என்ற போதிலும் வவ்வால்!இந்தப் படம் உங்க ஏரியா:)

கலிலியோ கலிலே என்ற பௌதீகம்,கணிதவியல்,வானியல் அறிஞனை மதிக்கத் தவறியது ரோம் மட்டுமல்ல!தமிழகமும்,இந்தியாவும் கூட பெரியாரின் நண்பர்களில் ஒருவரான ஜி.டி.நாயுடு என்ற கோவை விஞ்ஞானியை கௌரவிக்க தவறிவிட்டது.

கலிலியோ திரைப்படத்தைப் பற்றி வேறு யாராவது சொல்லியிருக்கிறார்களா என்ற தேடலில் பதிவர் சார்வாகன் ஏற்கனவே ஆவணப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். பதிவர் சார்வாகனின் முந்தைய தளத்தில் குறிப்பிட்ட Extraordinary Claims Require Extraordinary Evidence என்ற வாசகம் கலிலியோவின் ஆராய்ச்சிகளுக்கு மிகப் பொருந்தும்.

பட உதவிகள்:கூகிள் மற்றும் டைம்ஸ் ஆஃப் இண்டியா.

Wednesday, January 18, 2012

மதமென்ற முக்காடு!

சின்னப்பையனாக இருக்கும்போது ஒருத்தன் சினிமா பார்த்துவிட்டோ அல்லது அம்புலிமாமா கதை படித்து விட்டோ சொல்லும் கதைக்கு ரவுண்டு கட்டி உட்கார்ந்துகிட்டு ஐந்தாறு பேர் வாய்பிளந்து கதைகேட்குற நினைவுல பதிவிலும் சினிமாக்கதை சொல்லி பார்க்கலாமேயென்று பார்த்தால் அண்ணாத்த விடமாட்டாங்க போல இருக்குதே!இரண்டு படத்துக்குத்தான் கதை சொன்னேன்.அதுக்குள்ள இன்டர்வெல் விடப்பான்னா என்ன நியாயம்?
 
நாம் கட்டிப்பிடி வைத்தியம் செய்வோம் என்று நினைத்தால் சிலர் முட்டிப் பார்த்திடுவோம் வாருங்கள் என்றே பதிவிடுகிறார்கள்.இதைக்கண்ட சிலருக்கு திட்டவும் கூடாது, கொட்டவும் செய்யனும் என்கிற சூத்திரம் தெரிவதுமில்லை. இதனால் எதிர் வாதம் கூட பலவீனப்பட்டுப் போகிறது.
 
குடித்து விட்டு வரும் ஆணை "அப்படி அதுல என்னதான் இருக்குதோ" என்று  பெண்கள் திட்டுவது போல் மதம் என்ற சொல்லில் அப்படி என்னதான் இருக்குதோன்னு தெரியவில்லை.பொது விமர்சனம் செய்வதில் தவறில்லை.ஆனால் மதம் என்ற முகமூடி போட்டுக்கொண்டு மட்டுமே விமர்சிப்பேன் என்பது சரியாகப் படவில்லை.ஒரு சமூகத்தின் அவலத்தையோ அல்லது கோபத்தையோ வெளிப்படுத்தும் போது சில ஒப்பீடுகளையும் செய்து பார்க்க மறந்துவிடுகிறீர்கள்.வடிவேலு ஜோக்கு மாதிரி உனக்கு வந்தா ரத்தம்!எனக்கு வந்தா தக்காளி ரசம்ங்கிற மாதிரி இருக்கிறது உங்கள் பொது உலக மத வாதங்கள்.

விடுதலைப் புலிகளின் தவறுகளை விமர்சிக்கும் அதே வேளையில் அவர்களின் போராட்டம் எதற்காக என்ற ஆழ்ந்த சிந்தனையில்லாமல் கஜனிக்கு வந்த குறைந்த நேர மறதி சிண்ட்ரோம் எதற்காக?புலி படுத்தால் எலியும் ஏறி விளையாடும் என்பது ஏட்டு எலிகளின் எழுத்துக்களிலேயே பிரதிபலிக்கிறது. இன்று புலிகளின் எதிர்ப்பு சக்தியில்லை.இலங்கை அரசு மக்களுக்கு தீர்வுகளைக் கொண்டு வந்து விட்டதா?அதற்கான குரல் கொடுக்கும் மானிடம் உங்களிடமில்லையென்பது அறிந்ததே.ஆனால் குறைந்தபட்சம் மௌனம் கொள்ளலாமே!மாறாக காய்ந்த புண்ணைக் கீறிப்பார்க்கும் சுகம் கொண்டு உனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேன்டுமென்ற குரூர மனப்பான்மை எழுத்துக்களில் தலைவிரித்தாடுகின்றன.

விடுதலைப்புலிகள் இலங்கையில் வாழும் சிலரை அந்நியப்படுத்தியதில் மொத்த மதக்கோபம் கொள்ளும் பதிவுலக பத்தி!ஜீவிகள் காஷ்மீரிகளையும்  மதம் என்ற பெயரால் இடமாற்றம் செய்ததை விமர்சிப்பதில்லை. விடுதலைப்புலிகளின் சுதந்திரப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினால் நீங்கள் பாலஸ்தீனியர்களின் விடுதலைப் போராட்டத்தை மதமென்ற பெயரில் ஆதரிக்கும் தகுதிகள் இழந்து விடுகிறீர்கள். இஸ்ரேலியர்கள் மேல் உள்ள கோபத்தில் ஈரான் ஜனாதிபதி ஹொலகாஸ்ட் என்ற ஒன்று நிகழவேயில்லையென்ற வாதத்திற்கு ஆதரவு தருபவர்கள் இலங்கையில் இனப்படுகொலை நிகழவேயில்லையென்ற ராஜபக்சே சகோதரர்களின் வாதத்திற்கு துணை போகிறீர்கள் என்று அர்த்தம்.

ராஜபக்சேக்களை விமர்சிக்கும் அதே வேளையில் தலிபான்கள் பாமியன் புத்தர் சிலைகளை இடித்ததை சுட்டிக்காட்டும் கலாச்சார விமர்சன புத்தியே சமூகம் சார்ந்த பார்வையாக இருக்க முடியும்.மாறாக அத்வானி குழுக்கள் பாபர் மசூதியை இடித்ததில் மட்டுமே உங்கள் கோபக் கண்கள் நிலைகுத்தி நிற்கும். இதையெல்லாம் விட சமூக கலந்துரையாடலில் மதம் பிடித்து தொங்கிக்கொண்டு பதிவுலகில் வெறுப்புக்களை கொண்டு வந்து உங்களை நீங்களே அந்நியப்படுத்திக் கொள்கிறீர்கள் பதிவுலகில் ஒருவர் முகம் ஒருவர் அறியாதவர்கள் அதிகம்.நாளை பொழுதொரு தினம் ஒருவேளை சந்திக்கும் சூழலில் உங்களுக்கு புன்முறுவல் காட்டும் நட்பை உங்கள எழுத்துக்கள் பதிவு செய்யவேண்டும்.அப்படி நிகழாவிடில் உங்கள் பதிவுகள் இணையத்தின் பொதுவுடமை சொத்தல்ல. 

அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தகர்ந்ததில் மகிழ்ந்த தலிபானிசத்தனத்தை கைவிடுங்கள். இரட்டைக்கோபுரம் இடிந்தது கூட இஸ்ரேலின் சதியென்ற  கான்ஸ்பைரசி தியரிக்கு ஆமாம் போடுவதெல்லாம் மதம் என்ற ஒற்றை நோக்கால் மட்டுமே.பழனிபாபாவைக் கூட ஒசாமாவுக்கு பக்க துணைக்கு அழைக்கிறீர்கள்.ஆனால் இருவருக்குமுள்ள வாழ்க்கையின் இரு பக்கங்களை பதிவு செய்ய தவறி விடுகிறீர்கள்.தேவையெல்லாம் மதம் என்ற தட்டைப்பார்வை மட்டுமே.திருமறை,திருக்குறள் நெட்டுரு செய்யும் தனி மனிதன் மீதோ கணீர் குரலில் பாடும் நாகூர் ஹனிபா,திருவாசகம் இசைக்கும் இளையராஜா, தேவாலயப் பாடல்  மீதோ யாராவது விமர்சனம் செய்கிறார்களா? இல்லை...ஏனென்றால் அவை ஆன்மீகம் நோக்கிய அசரிரீக் குரல்கள். 

உங்கள் மீதுமட்டும் கோபத்தின் வெறுப்பு மேகம் மெல்லப்படர்வதை உணர்ந்தும் உணராமல் இருக்கிறீர்கள்.காரணம் மதம் என்ற பெத்தடினுக்கு நீங்கள் அடிமை.பெத்தடின் என்ன செய்யுமென்பதை கண்ணதாசன் இருந்திருந்தால் கடிதம் போட்டாவது உங்களுக்கு ஒரு கவிதை பாடச்சொல்லி அழைத்திருக்கலாம்.மதமென்ற தாகம் உங்களுக்கு அதிகமாக இருக்கலாம். அதற்காக பதிவுகளை வேடிக்கை பார்த்துகிட்டிருப்பவர்களையும் அழைப்பிதழை பொதுவில் ஏன் வைக்கிறீர்கள்?மேற்கத்திய நாட்டவனைப் பிடிக்காது, இஸ்ரேலியனைப் பிடிக்காது,இலங்கைத் தமிழனையும் பிடிக்காது.நீங்கள் பிடிக்க நினைக்கும் மீன்கள் எல்லாம் மதம் என்ற வலைக்குள் மட்டும்தான்.வலையில் மாட்டுவதோ கிணற்றுத் தவளைகள் மட்டுமே.

உங்கள் கோபங்களை மொத்தமாக இன்னொருவருக்கும் பாரமாக சுமத்துகிறீர்கள்.இனியும் உங்கள் எதிரிகள் இலங்கைத் தமிழர்கள் அல்ல! நிழல் யுத்தம் செய்யாதீர்கள்.வருங்காலம் வரலாற்றை எப்படி எழுதுமென்று இப்பொழுதே தீர்மானிக்க முடியாது.அதற்குள் ஏன் அவசரப்படுகிறீர்கள்?

இவ்வுலகு ரசனை பகிருங்கள்.அவ்வுலக தித்திப்பு உங்களுக்கே உரித்தாகுக.

டிஸ்கி!நான் தனிமனித தாக்குதலுக்கு சொந்தக்காரன் அல்ல.இந்தப் பதிவு முன்பு கோப பின்னூட்ட விவாதங்கள் செய்து களைத்துப்போன இரு தரப்பு நண்பர்கள் சார்ந்தோ எதிரானதோ அல்ல.பதிவின் பின்ணணி போரின் அவலத்தில் இருக்கும் மனிதர்களைக் கொச்சைப்படுத்துவதை இனியும் தவிர்க்கவே.பொது மானுடம் கற்போம்.

Tuesday, January 17, 2012

ஆதாமிண்டே மகன் அபு + பழேரி மாணிக்யம்

ஜார் மன்னர்களின் வாழ்க்கை, நிக்கோலஸ்,ரஷ்புடின்,லெனின்,ரஷ்ய புரட்சிஅமெரிக்க உள்நாட்டுப் போர்,ஹிரோசிமா என நிறைய தலைக்குள் சுற்றுவதால் பதிவுக்கு கால அவகாசம் தேவைப்படுவதால் இந்த பதிவில் இந்திய திரைப்பட வரிசையில் கேரள அரசின் பரிசு பெற்ற இரண்டு மலையாளப் படங்களை கதைத்து விட்டு விக்கிபீடியா மாதிரி யாரும் ஆட்டத்துக்கு குறுக்கே யாரும் வராமலிருந்தால் மீண்டும் ஆங்கில திரைப்படங்களை நோக்கி பார்வையை செலுத்தலாம்.

திரைப்படத்துக்கும்,விக்கிபீடியாவுக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்க கூடாது.சிலர் விகடன்,குமுதம் தரும் மார்க் பார்த்து தமிழ்ப்படங்கள் பார்க்குற மாதிரி இப்பொழுது ஆங்கிலத்தில் தேர்வு செய்த படங்களை பார்த்து விட்டு சில சமயம் புரியாத ஆங்கில டயலாக்,கதை பற்றியெல்லாம் ஓர் பார்வை பார்த்து அசைப் போடுவது வழக்கமாகி விட்டது.பதிவுகளில் பகிர்வதற்கும் கூட சந்தேகங்களுக்கான உதவி விக்கிபீடியாவே. எனவே விக்கிபீடியா பற்றி சிறிய முன்னுரை சொல்லி விட்டு திரைப்படப் பார்வைக்குப் போகலாம்.

அரேபிய இலையுதிர் காலத்துக்கு இணைய தளமும் ஒரு காரணம் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.இல்லாவிட்டால் டுனிசிய,எகிப்திய புரட்சிகள் சாத்தியமாகியிருக்காது அல்லது புரட்சிகள் இன்னும் கால அவகாசம் கேட்டிருக்கும்.

கட்டுபாடற்ற இணைய தளம் வேண்டுமென சமூக கருத்துக்கள் பதிப்பிக்கும் தளங்கள்,பத்திரிகைகள்,சுதந்திர பேச்சு பிளாக்குகள், விக்கிலீக்ஸ், ஹேக்கர்கள், டோரன்ட்,முகநூல்,தட்டர் எனும் ட்விட்டர் முக்கியமாக கூகிள் போன்றவை ஒரு பக்கமும்,

தங்கள் உரிமைகள் மீறப்படுவதாக திரைப்பட,இசைத்துறை,மென்பொருள் நிறுவனங்கள்,வயது வந்தோருக்கு மட்டுமுள்ள ரகசியங்கள் குழந்தைகளுக்கும் போய் சேருகிறதென்று கவலையான பெற்றோர்கள்,

இவற்றை விட கொடுமையாக தங்களது ஊழல் வண்டவாளங்கள் பொதுப் பார்வைக்கு வந்து விடுகிறதே என்று ஊழல் அரசியல்வாதிகள்,ஸ்விஸ் வங்கியில் பணம் பதுக்குபவர்கள என்று மறுபக்கமும் என இணைய தளத்தின் சேவைகள் குறித்தான இரு விதமான கருத்து சார்பாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இரு தரப்புமே விரும்பும் விக்கிபீடியா போன்ற சாது தளம் கூட அமெரிக்காவின் பைரசி சட்ட வரைவுக்கு எதிராக குரல் கொடுத்து நாளை ஒரு நாளை(18 புதன் 2012) அடையாள எதிர்ப்பாக தனது தளத்தை இருட்டடிப்பு செய்கிறது.கருத்துரிமைக்கு ஆதரவாளர்கள் அனைவரும் விக்கிபீடியாவுடன் இணைந்து கொள்வோம். 

முந்தைய மட்டாஞ்சேரியும்,ஐன்ஸ்டீனும் பதிவில் கேரளத்தவர்கள் ஆவணப்படுத்தலில் சோடை போனவர்கள் அல்ல என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு உதாரணமாக பழேரி மாணிக்யம் என்ற பெண்ணின் கொலை பற்றிய நிகழ்வு நாவலாக,நடிகர் மம்முட்டி நடித்த அதே படத்தின் பெயரையும் குறிப்பிடலாம். கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வேரூன்றுவதற்கும் அதற்கு முன்பு நக்சல்பாரி இயக்கத்தின் பாதிப்பு இருந்ததற்கு காரணம் என்பதற்கு விடையாக கூட பழேரி மாணிக்யம் கதை அமையலாம்.காரணம் நிலச்சுவான்தார்கள் பெண்களை தமது காமப்பசிக்கு இறையாக்கி விட்டு அல்லக்கைகள் மூலமாக அப்பாவிப் பெண்ணை கொலை செய்வதை சொல்லும் கதை.இடைச்செறுகலாக மம்முட்டி மூன்று கதாபாத்திரம் வேண்டுமென்று அடம் பிடித்தாரோ என்னவோ ஒரு தளத்திலிருந்து இன்னொரு களத்துக்கு மாறி பின் கதை சொல்லி துப்பறிவது மாதிரி முடிந்து விடுகிறது.
 
ஒப்பீடாகப் பார்த்தால் தமிழகத்து கிராமப்புறங்களில் கூட நிலச்சுவான்தார்களின் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்தே விடப்பட்டும் கிராமத்து போலிஸ்,பஞ்சாயத்து என்ற பாதுகாவலில் தப்பித்துக்கொள்கிறார்கள்.இந்த வன்முறைகளை பொதுவெளிக்கு கொண்டு வராமல் விவேக்கின் நகைச்சுவை மூலமாக கொச்சையாகிப் போவது தமிழ் சினிமாவின் இன்னொரு அவலம்.
 
தமிழில் புத்தக இலக்கியமாக நிறைய வந்துள்ளன.மெரினா பீச்சு நீளத்துக்கு நம்மிடம் எழுத்தாளர் பட்டியல் இருப்பதால் பெயர் சொல்வானேன்?
புனைவுகள்,சிறுகதைகள்,நவீனம்,நாவல்,துப்பறி,நகைச்சுவை,நாடகம்,வரலாறு என நிறையவே புத்தகப் பதிவுகள்.குற்றம்,நடந்தது என்ன என தற்போதைய நவீன தொடர் தொலைக்காட்சி செய்திகளுக்கோ பஞ்சமில்லை..

மம்முட்டியான் இறந்த காலத்தின் ஒரு மனிதனை ஆவணமாக அல்லாது பதிவு செய்துள்ளது.மம்முட்டியானை விட வீரப்பன் கதை தமிழகத்திலும், கர்நாடகத்திலும் அரசு குற்றப்பத்திரிகை ஆவணம் எனலாம். ஆனால் தமிழகத்தில் உண்மைக்கதையின் துவக்கவுரை யாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது?ஒருவேளை நல்லதங்காள் வாய்ப்பாட்டு வழி வந்த கதையாக இருக்கலாமோ?.ஆனால் அரசு ஆவணப்படுத்தலாக எதுவென்று யோசித்தால் பொதுப்புத்தியில்,அறிந்த தகவல்களில் நானறிந்து தெரியவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் பதிவு செய்யலாம்.

கேரளத்து எழுத்து வாசமோ அல்லது தான் சார்ந்த காலச் சூழலில் எழுத்தில் சொல்லியது பின் ஆவணமாகிப் போனது போல் கேரள காவல்துறையில் முதன் முதலாக பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு ஒரு நாவலாகவும் பின் அதே திரைப்படப் பெயரில் பழேரி மாணிக்யம்-ஒரு பதிரகொலபாதகத்தின் கதா.திரைப்படத்தின் கதை  மம்முட்டியின் மூன்று வேட ஆசையில் தொடர்ச்சியாக இல்லாமல் போனாலும்.கதையின் மையப்புள்ளியான சோக்கு நிலவான் ஹாஜியின் நடிப்பும் அந்தக் கால கட்டத்து கதையின் காரணமாக கேரள மாநில விருதைப் பெற்ற படம்.ஸ்வேதா மேனனின் பிளாஷ்பேக் கிளுகிளுப்பு காட்சிகள் தவிர முதிய வயதாகிப் போன கால கட்டத்து நடிப்புக்காக ஸ்வேதாவுக்கும் கேரள மாநில விருதை வாங்கிக் கொடுத்த படம்.

இப்ப கேரளாவிலிருந்து இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு சிபாரிசு செய்யப்பட்ட ஆதாமிண்டே மகன் அபு கதைக்களத்திற்கு செல்லலாம்.கேரள மலபார் பகுதியில் வாழும் அபு,ஆயிஷம்மா என்ற இரு வயதானவர்கள் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்.நகைச்சுவை பாத்திரங்களில் மட்டுமே அதிகம் தலை காட்டியிருந்த சலீம் குமாருக்கு நடிப்பதற்கு நல்ல தீனி.கூடுதலாக ஜரினா வஹாப்பின் இயல்பான நடிப்பு.யதார்த்தமான,நல்ல இஸ்லாமியன் எப்படியிருப்பான் என்பதையும் இஸ்லாமிய,இந்து,கிறுஸ்து மத நம்பிக்கை  மனிதர்களை அவர்களது பெயர்ச் சொல்லோடும் அபுகாவின் ஹஜ் கனவு, வியாபார,நட்பு என்ற கோட்டுக்குள் கொண்டு வந்து கட்டிப்போடுகிறது.

கதையோடு இணைந்த மது அம்பட்டின் காமிரா.(Arriflex D-21 Camera 35mm film ).சவுதி அரேபியாவில் ஹஜ் பயணத்திற்கான அனுபவம் இயல்பான எளிமை கொண்ட இஸ்லாமிய சம்பிரதாயங்களோடு 1970-80களில் வாழ்ந்த எந்த சராசரி மனிதனுக்கும் ஏற்படக்கூடிய பொருளாதாரம் சார்ந்த இந்திய அனுபவம் எனலாம்..அபுவின் ஹஜ் கனவிற்கு பணம் தந்து உதவ விரும்பும்,கோபி மாஸ்டர் என்ற பள்ளி ஆசிரியர்,ஹஜ் பயணத்திற்காக ,ஜான்சன் என்ற மரமில்லின் உரிமையாளரிடம் வளர்த்த பலாமரத்தை விற்று முன்பணம் பெறுவதும் பின் பலாமரம் சொத்தை மரமென்றும் இருந்தாலும் சொல்லிய பணத்தை தான் தரவிரும்புவதாக ஜான்சன் என்ற மர அறுவை மில் உரிமையாளர் என்ற மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் இணைவதை கோடிட்டு காட்டுவது மட்டுமே படத்தின் அடிப்படை. கருப்பொருள்.எளிமையான யதார்த்தமான கதாபாத்திரங்களோடு போட்டி போடுவது மது அம்பட்டின் காமிராக் கண்களே.தலைக்கு மேல் உயரத்தில் பலாப் பழம்.......ழ....ழ....ழ!!,

அம்மிக்கல்லு மேலே கூட இரண்டு பலாப்பழத்தை தேமேன்னு உட்கார வைத்த நேர்த்தி,கோழிகள் இயல்பாய் சுத்துவது (பாரதிராஜா புடிக்காத கோழியான்னு நினைவுக்கு வந்தாலும் தமிழ்நாட்டுக் கோழி ஓடுற கோழி!கமலுக்கு ஓட்டம் காண்பிக்கிற கோழி!கேரளக் கோழி அம்போன்னு எற பொறுக்குது!அபு அவர் பாட்டுக்கு ஹஜ் கதை பேசிகிட்டிருக்கார்)  

திரைக்கதை விபரிப்பு அவ்வளவு யதார்த்தம்.கலையும்,இலக்கியமும் அழகியல் சார்ந்தவை.அழகியலை எங்கிருந்தாலும் ரசிப்போம்.நல்ல கலையும், இலக்கியமும் மனித வாழ்வை மேம்படுத்த உதவுபவை.அபுவோட கதை அந்த வகை.அப்ப டேம் 999 கலை வரிசையில் சேருமா?..