Followers

Monday, April 23, 2012

மகிந்த,கோத்தபய ராஜபக்சேக்கள்!

கொஞ்சமாகத்தான் சொல்லியிருக்கிறேன்.அதனால பிலிம் காட்டுறதை மட்டும் பார்த்துவிட்டு கமெண்டாம கூடப் போகலாம் சரியா?

சில விசயங்களை கடந்து போக நினைத்தாலும் கூட மௌனமாக இருக்க முடியவில்லை.நான் சொல்வதோ அல்லது நீங்கள் சொல்வதோ அல்லது ஒரு பத்திரிகை சொல்லும் முறையிலும் கூட எழுதும் முறை,சொல்லும் நடையினால் கூட பொருள் மாறக்கூடும்.ஆனால் நவீன தொழில்நுட்ப வசதிகளில் காணொளிகள் உள்ளதை உள்ளவாறு சொல்லி விடுகின்றன.ஆனால் அதனையும் மார்பிங்க்,போட்டோஷாப் என்ற திரிபுகள் என திசை மாறி விடுகின்றன.

இன்னும் சில செய்திகள்,காணொளிகள் பொது ஊடகங்களிலிருந்து  வெளி வருவதேயில்லை.இன்றைக்கு இந்தியாவின் மத்திய காங்கிரசின் இலங்கை நிலைப்பாடும்,ராஜபக்சேக்கள் சார்ந்த இந்திய வெளிநாட்டுக்கொள்கைகளின் இரட்டை நிலைப்பாட்டை விமர்சிப்பதை விட மகிந்தாவின் 88ம் ஆண்டு கால இந்திய நிலைப்பாடு என்ன என்பதை இந்த காணொளி வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.

http://www.colombotelegraph.com/index.php/rajapakse-in-double-talk-88-and-now/

சென்ற பதிவின் பின்னூட்டத்திலேயே கொலம்போ டெலிகிரா2ப் இணையதளம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.இலங்கையிலிருந்து சுயவிருப்பிலோ அல்லது உயிர் பயத்தில் மேறகத்திய நாடுகளுக்கு சென்ற இலங்கைப் பத்திரிகையாளர்கள் கருத்துரிமை எப்படியிருக்க வேண்டுமென்பதை சிறப்பாக வெளிப்படுத்துகிறார்கள்.இலங்கை குறித்த விக்கிலீக்ஸ் உட்பட பொதுப்பார்வைக்கு வைக்கிறார்கள்.கட்டாயம் பார்வையிட வேண்டிய தளம் என்பேன். 

தமிழகத்தில் கட்சிகள் சார்ந்த தலைவர்கள் பற்றி இலங்கை அரசியல் பார்வையாளர்களும்,அரசியல்வாதிகளும் ஒரு தவறான கருத்தை வெளிப்படுத்துகிறார்கள்.தமிழக கட்சிகள் தங்கள் வாக்கு தேவைக்காக வேண்டி இலங்கைப் பிரச்சினைக்கு குரல் கொடுக்கிறார்கள் என்கிறார்கள்.ராஜிவ் காந்தியால் மௌனம் காத்த தமிழக குரல்கள் ஈழ மக்களுக்கான குரலாக மெல்ல ஒலிக்கத்துவங்கியது 2008ம் ஆண்டின் கால கட்டம் துவங்கியே.அதற்கு முந்தைய கால கட்டத்தில் ஈழப்பிரச்சினை தவிர்த்த அரசியல் களமாகவே தமிழகம் இருந்து வந்தது என்பதை நினைவு படுத்துவது அவசியம்.நாளை ஈழமக்களுக்கான நியாயமான? தீர்வு உருவாகும் பட்சத்தில் தமிழகம் இந்திய இறையாண்மையோடு ஜனநாயக வழியில் மக்கள் சார்ந்த பிரச்சினைகளின் குரல்களோடு தொடர்ந்து பயணிக்கும் என்பது நிச்சயம்.

 எனவே இப்போதைய இலங்கை அரசின் போர்க்குற்றங்களை பின் தள்ளுவதற்கான முயற்சியே தமிழக கட்சிகளின் இலங்கை அரசியல் வட்டார விமர்சனம். இதற்கெல்லாம் உச்சகட்டமாக நவீன காந்தி மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் புதுமை புத்தன் கோத்தபய ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுப்பவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்கிறார்.அண்ணன் காந்தியாகவும் தம்பி புத்தனாகவும் இருக்கும் பட்சத்தில் கருணாநிதியையும்,தமிழர்களையும் ஏனைய மனித உரிமைக்கு குரல் கொடுப்பவர்களையும் தீவிரவாதிகள் என்றால் அதில் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டிய அவசியமேயில்லை.இதில் கொடுமை என்னவென்றால் மக்கள் குரலாகவோ அல்லது சமமாக வாழலாம் என்ற நிலைப்பாடும்,ஜனநாயகப் போர்வையில் குடும்ப ராணுவ ஆட்சியை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள், கருத்தாளர்களான சிங்களவர்களையும் கூட உயிர்பயம் கொளள வைக்கவோ, வெள்ளை வான் கடத்தல் செய்வதை அரசு திட்டமிடுதலின் ஒன்றாக கொள்ளும்  போர்க்குற்ற பரிசுத்தர்கள் இவர்கள். இவர்களின் அரசியல் அரியணையும்,பொது அறிக்கைகளும்  எவ்வளவு காலம் என்பதை காலம் பதில் சொல்லும்..

2 comments:

Unknown said...

என்க்கென்னமோ கருணாநிதி போன்ற ஒரு காமெடியனை தீவிரவாதியாக பார்ப்பது கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது..

ராஜ நடராஜன் said...

செந்திலண்ணே!நலமா?

பின்னோக்கிப் பார்த்தால் கருணாநிதி சார்ந்த தி.மு.க அரசியல் தமிழகத்துக்கு சிறந்த திட்டங்கள் வகுத்ததோடு வீராணம் போன்ற ஊழல்கள் கொண்டதாகவும்,மேடைப்பேச்சுகளின் காலமாகவும்,மாநாடு போன்ற பிரமிப்பிக்களோடு கருணாநிதி,எம்.ஜி.ஆர் என்ற இரு தனிமனிதர்கள் சார்ந்த அரசியலாகவுமே இருந்தது.எம்.ஜி.ஆர் விடுதலைப்புலிகளுக்குப் பணம் கொடுத்ததோ அல்லது கருணாநிதியின் டெசோ ஆதரவு போன்றவை அடக்கி வாசிக்கப்பட்ட காலமாகவே இருந்தது.பிரபாகரன் ராஜிவ் காந்தியை சந்தித்தது,பண்ருட்டி ராமச்சந்திரனின் பங்கு போன்றவையும் கூட அரசியல் ரகசியங்களாகவே இருந்திருக்க கூடும்.மெட்ராஸ் துப்பாக்கி சண்டை,ராஜிவ் காந்தியை சிங்கள ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கியின் பின்புறத்தில் தாக்கியது,இந்திய இலங்கை 13ம் உடன்படிக்கை போன்றவைகள் வெளிப்படையான செய்திகள்.

கருணாநிதியின் ஈழ ஆதரவை வெளிப்படையாக படம் பிடித்த நிகழ்வு இந்திய ராணுவத் தலைமையை மெட்ராஸில் வரவேற்க செல்லாதது.வை.கோ கட்சிக்கு தெரியாமல் படகில் இலங்கை சென்றது,ஈழப்பிரச்சினையால் தி.மு.க ஆட்சி இழக்கும் சூழல் உருவானது போன்ற நிகழ்வுகள் தி.மு.க வின் ஈழ ஆதரவை மறுப்பதற்கில்லை.

கருணாநிதி குறித்தான விமர்சனங்களை 2008-2009ம் ஆண்டு காலம் தொட்டும்,ஆட்சியில் இருக்கும் போது ஒரு அரசியல் நிலைப்பாடு,ஆட்சியில் இல்லாமல் இருக்கும் போது உள்ள இப்போதைய நிலைப்பாடு என்ற மட்டிலுமே உங்கள் கருத்தான காமெடியன் என்பது சரிப்படும்.

கருணாநிதியின் தனி ஈழம் குறிக்கோள் காலம் கடந்த குரலாக இருந்தாலும்,அதன் பின் புலத்தில் அவருக்கான அரசியல் காய் நகர்த்தல்கள் இருந்தாலும் கூட அவரின் தனி ஈழம் நிலைப்பாட்டை வரவேற்போம்.