Followers

Saturday, December 22, 2012

அருணாச்சலம் முருகானந்தம்!

டிஸ்கி : இந்த பதிவு பதினெட்டுக்கும் மேல்  என்ற முத்திரைக்குரியதா அல்லது சமூக அக்கறை முத்திரைக்குரியதா என்பது அவரவருக்கான கருத்துரிமை சொந்தமானது.

சில நல்ல மனிதர்களும்,செய்திகளும் வெளியுலகுக்கு அதிகம் விளம்பரம் இல்லாமல் போய் விடுகிறார்கள்.அந்த வரிசையில் சமூக அக்கறையோடு எந்த ஆணுமே செய்ய இயலாத அரிய சாதனையாளர் பட்டியலில் அருணாச்சலம் முருகானந்தம் அவர்களை குறிப்பிட்டாக வேண்டும்.

இப்பொழுது சானிடரி நாப்கின் பற்றிய விளம்பரங்களும்,விழிப்புணர்ச்சியும் நகர்ப்புறங்களிலும்,படித்த பெண்களிடையே பரவியிருக்கிறது.முந்தைய காலத்தை நோக்கினால் பெண்களுக்கோ வீட்டுக்கு தூரமாக உட்கார்ந்திருப்பது மற்றும் பழைய துணிகள் போன்ற அனுபவங்களே.முருகானந்தம் கல்யாணமான புதிதில் அவரது மனைவிக்கு உதவி செய்ய வேண்டுமென்ற நோக்கிலும் சானிடரி நாப்கின் செலவு அடிப்படை பொருளாதாரத்தோடு இணைந்த ஒன்று என்ற சிந்தனையில் உருவாகிறது மதர் கேர் சானிடரி நாப்கின் ஆராய்ச்சி முயற்சி. சானிடரி நாப்கின்கள் பெரும் முதலீட்டில் பெரும் இயந்திரங்களைக் கொண்டு இயங்கும் ஒரு கார்பரேட் வியாபாரம்.இதனை சிறு தொழிலாக கிராமத்துப் பெண்களும் செய்ய இயலுமா என்ற ஆராய்ச்சி,முயற்சியில் சிறிய அளவிலான வீட்டிலேயே இருந்து கொண்டு இயக்கும் வடிவத்திலான இயந்திரத்தை உருவாக்குகிறார் முருகானந்தம்.

ஆராய்ச்சியின் முதற் கட்டமாக நாப்கின் உருவாக்கியாச்சு.இதனைப் பரிட்சித்துப் பார்க்க அவரது மனைவி,சகோதரிகள்,மருத்துவக்கல்லூரி மாணவிகள் என்று முயற்சி செய்தும் வெற்றி பெற முடியவில்லை. நித்யானந்தா, பிரம்மானந்தாக்களுக்கு படை சூழ பெண்கள் வரும் போது தனது முயற்சிக்கு ஒரு பெண்ணுமே வாலண்டியராக விரும்பவில்லையென நகைக்கிறார். இறுதியில் தானே ஒரு சிறிய கால் பந்தில் ஆட்டு ரத்தம் செலுத்தி அதனை அழுத்தினால் சானிடரி நாப்கின்னுக்கு ஆட்டு ரத்தம் வந்து விழுகிற மாதிரி செய்த பரிசோதனை அந்த மூன்று நாட்கள் எவ்வளவு சிரமத்துக்குள்ளானவை என்ற பெண்கள் மீதான மரியாதையை அனுபவமாகத் தந்தது என்கிறார் அருணாச்சலம் முருகானந்தம்.நிலவில் கால் வைத்த ஆர்ம்ஸ்டாரங்க் மாதிரி இடுப்பில் சானிடரி நாப்கினை கட்டிக்கொண்டு பரிசோதனை செய்த முதல் மனிதன் தானாகத்தானிருக்கும் என்கிறார் முருகானந்தம்.

கோடிகளில் புரளும் கோடிஸ்வரர்கள் இறுதியில் பொதுசேவை,நன்கொடை என்ற இறுதி நிலைக்கு வந்து விடுவதன் காரணம் வாழ்வின் முக்கால் பகுதி காலத்தில் பணத்தை தனது முன் பாக்கெட்டில் வைத்துக்கொள்வதால்தான்.எனவேதான் தான் பணத்தை பின்பக்கத்தில் வைத்துக்கொள்வதாகவும்,தனது ஆராய்ச்சியின் வெற்றியை பெரும் நிறுவனத்துக்கு தாரை வார்க்காமல் கிராமத்துப் பெண்கள் சுயதொழில் முயற்சியில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் மட்டுமே மதர் கேர் சானிடரி நாப்கின் சிறுதொழிலை ஊக்குவிப்பதாக கூறுகிறார் முருகானந்தம்.

சித்ரா ஜெயராம் என்பவர் அருணாச்சலம் முருகானந்தம் பெரும் முயற்சிக்கு ஆதரவாக குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளார். Rags to Pad என்ற இந்தப் படம் குறும்பட தயாரிப்பு போட்டியில் அரையிறுதி  வரை வந்துள்ளது.

பதிவுக்கான உதவி TED and vimeo.

11 comments:

சார்வாகன் said...

சகோ இராசநட,

அருமையான பதிவு,

ஒருவரின் சிரமம் நாம் உணராமல் புரியாது என்பது 100% உண்மை.சகோ முருகானந்தம் பாராட்டுக்கு உரியவர்.

பெண்களின் உடல்,மனம் ஆண்களுக்கு பெரும்பாலும் புரியாது என்பதை உடைக்க முயன்ற முயற்சி.

பாலியல் கல்வியில் இதுபோன்ற விடயங்களும் மருத்துவரீதியாக விள்க்கினால் மட்டுமே பெண்கள் மீதான பார்வை மாறும்.
பாராட்டுகள்!!

நன்றி!!

Anonymous said...

மிகவும் அருமையான பதிவு .. முருகானந்தத்தின் இவ் வெற்றிக் குறித்து சில கட்டுரைகள் வாசித்திருக்கின்றேன். தாமே பரிசோத்திக்க வேண்டிய நிலை ஏற்பட்ட செய்தி எமக்கு புதிது.. நல்ல விடயங்கள் எப்போதும் கண்டுக் கொள்ளப்படுவதில்லை. நேப்கின்களில் விலையை நோக்கினால், இந்திய பெண்களை வைத்து பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட பல பெரும் நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளையை உணரலாம். இந்தியாப் போன்ற நாடுகளில் நேப்கினின் அவசியமும், தேவையும் மிகுதியாக உள்ளன என்பேன் .. இவரின் முயற்சி வெற்றிப் பெற வேண்டும்..

பாலியல் உடலியல் சார்ந்த விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் போதும், அவற்றை ஆண்களும் அறியும் போது பெண்ணினை சக மனுசியாக பார்க்கும் மனோபாவம் நம்மில் வளரும் .. அவளை பாலியல் இச்சைத் தீர்க்கும் இயந்திரம் என்ற நோக்கில் இருந்து நகர்ந்து, இரத்தம், மலம், மாமிசம் உடைய சக மனித உருவாகக் கண்டாலே பாதி சிக்கல்கள் இந்தியாவில் தீரும் ... !

நல்லதொரு பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள். அக்குறும் விவரணப்படமும் அருமை சகோ.

T.N.MURALIDHARAN said...

முருகானந்தத்தின் அறிய முயற்சி பாராட்டுக்குரியது.

Iniyavaniniyavan Iniyavan said...

பெண்களின் தேவைகளை அவர்களே சரியாக உணரமுடியாத காலகட்டத்தில்,முருகானந்தத்தின் முயற்சிக்கு பெண்கள் ஆதரவு இல்லை என்பதை நினைக்கும் போது வேதனையளிக்கிறது.இருப்பினும் காலம் கடந்து முயற்சி நிச்சயம் பயனளிக்கும் வாழ்த்துக்கள்.

Iniyavaniniyavan Iniyavan said...

பெண்களின் தேவைகளை அவர்களே சரியாக உணரமுடியாத காலகட்டத்தில்,முருகானந்தத்தின் முயற்சிக்கு பெண்கள் ஆதரவு இல்லை என்பதை நினைக்கும் போது வேதனையளிக்கிறது.இருப்பினும் காலம் கடந்து முயற்சி நிச்சயம் பயனளிக்கும் வாழ்த்துக்கள்.

வவ்வால் said...

ராச நட,

கடலூரில் தானே புயலால் பாதிப்படைந்த பகுதி மகளீருக்கு தொழில் வாய்ப்பினை உருவாக்கி தர ஆனந்த விகடன் குழுமம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் போது சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சியை இவரைக்கொண்டு தான் செய்தார்கள், விகடனில் போன ஆண்டு விரிவாக செய்தியும் போட்டிருந்தார்கள்.

இது போன்ற உள்ளூர் நாப்கின்கள் சந்தையில் விற்பனையாவதில்லை.தயாரித்து அக்கம் பக்கத்தில் தான் கொடுக்க வேன்டிய சூழல் என்பதால் இம்முயற்சியில் ஈடுபடும் மகளீரும் சீக்கிரம் நிறுத்திவிடுகிறார்கள்.

இதற்கு முன்னர் இருந்தே மாநில சிறுதொழில் வளர்ச்சிகழகத்தின் மூலமும் இதனை செய்துக்கொண்டு தான் இருந்தார்கள்,ஆனால் பரவலாக செல்லவில்லை.

முருகானந்தம் அவர்களின் முறையாவது நன்கு பரவுகிறதா எனப்பார்ப்போம்.

சிறிய அளவில் உற்பத்தி செய்கையில் தரநிர்ணயம்,சந்தைப்படுத்துதல் இருப்பதில்லை, ஆனால் பெரிய நிறுவனங்கள் ,ஒரே சீரான தரத்தில் செய்து நல்ல விளம்பரம் செய்து மார்க்கெட்டை பிடித்துவிடுகின்றன.

பேட்டா செருப்பு தயாரிக்கும் முறையில் இத்தொழிலை கொண்டு சென்றால் ,நன்கு வெற்றிகரமாக நடக்கும்,ஆனால் அது போல செய்ய பெரிய முதலீடு செய்ய ஆள் வேண்டும்.

ராஜ நடராஜன் said...

சகோ.சார்வாகன்!வணக்கம்.மருத்துவ துறையில் பணிபுரியும் ஒரு அம்மா தமிழகத்தில் பெண்கள் சானிடரி நாப்கின்கள் உபயோகிக்க வேண்டுமென பல வருடங்களுக்கு முன்பே எனது நண்பரிடமும்,என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.இப்பொழுதாவது அதற்கான முயற்சிகள்,விழிப்புணர்ச்சி கிராமப்புறங்களில் உருவாகட்டும்.

ராஜ நடராஜன் said...

இக்பால் செல்வன்!உங்களுக்கு Netflix பார்க்கும் சந்தர்ப்பம் இருக்குமென நினைக்கிறேன்.TED ல் அருணாச்சலம் முருகானந்தத்தின் நகைச்சுவையான பேச்சு உள்ளது.பேச்சின் இறுதியில் அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவருமே எழுந்து நின்று கைதட்டியது அவரின் உழைப்புக்கான அங்கீகாரம்.

ராஜ நடராஜன் said...

முரளிதரன்!உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

இனியவன்!பலரின் பின்னூட்ட பகுதிகளில் மட்டும் அடிச்சு ஆடுவதை காண நேர்ந்தது.அப்படித்தான் இருக்கனும்:)

Taboo என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள்.சிலவற்றை முக்கியமாக உடலியல் சார்ந்து கலந்துரையாடல் செய்வதில் நம்மிடையே இன்னும் தயக்கம் இருக்கவே செய்கிறது.இதில் பெண்களை குறை சொல்லவும் முடியாது.காரணம் முருகானந்தம் அவர்கள் காணொளியில் கேட்பது போல் சானிடரி நாப்கின்னை தொட்ட ஆண்கள் யாராவது இருக்கிறீர்களா என்றளவுக்கு நாப்கின் முழுக்க முழுக்க பெண்கள் சம்பந்தப்பட்டதும்,ஆணுக்கு அன்னியப்பட்ட ஒன்று என்ற நிலையில் குடும்பத்துப் பெண்களே சோதனைக்கு இணக்கம் காட்டுவதில் தயக்கம் காட்டுவது இயல்பான தமிழக நிலையே.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!நான் முந்தைய பதிவின் உங்கள் பின்னூட்டத்துக்கு கடலை போட்டுட்டு வந்தேன்:)

உங்களின் விரிவான தகவலுக்கு நன்றி.

ஆனந்த விகடன் குழுமம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் போது சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் பயிற்சியை இவரைக்கொண்டு தான் செய்தார்கள் என்ற தகவல் பகிர்வுக்கும் நன்றி.இதே போல் புதிய தலைமுறை தொலைக்காட்சியும் ஆயுதம் செய்வோம் என்ற நிகழ்ச்சியில் நிறைய பேரை அறிமுகப்படுத்துகிறார்கள்.இவர்களெல்லாம் ஊக்குவிக்கப் படவேண்டியவர்கள்.

ஒரு பொருளின் பெயர் மக்கள் மனதில் நிலைத்து நிற்க விளம்பரம் மிக அவசியம்.நீங்க சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு பற்றிய பதிவில் சொன்ன நிர்மா டிடெர்ஜென்ட்தான் நினைவுக்கு வருகிறது.முன்பை விட இப்பொழுது விளம்பரத்திற்கான சந்தர்ப்பங்களும்,வாய்ப்புக்களும் அதிகம்.அருணாச்சலம் முருகானந்தம் பற்றிய விளம்பரமே அவரது தயாரிப்பு கண்டுபிடிப்புக்கான விளம்பரமாக அமையும்.

முருகானந்தத்தின் கொள்கையே பெரும் முதலீடு இல்லாமல் சிறு முதலீட்டோடு கிராமத்துப் பெண்களுக்கு வேலை வாய்ப்பை தரவேண்டுமென்பதுதான்.

யார் சொன்னா சிறிய அளவில் உற்பத்தி செய்கையில் தரநிர்ணயம்,சந்தைப்படுத்துதல் இருப்பதில்லையென? ஊத்துக்குளி நெய்,திருநெல்வேலி அல்வா,பண்ருட்டி முறுக்கு,கும்பகோணம் வெத்தலையென நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.கோவையில் பஞ்சு உற்பத்தி அதிகம் என்பதால் முருகானந்தத்தின் முயற்சியும் வெற்றி பெறும்.

கார்பரேட் நிறுவனங்களுக்கு நிகரான நாப்கின்னையே முருகானந்தம் உருவாக்கியதாக சொல்கிறார்.இதில் உற்பத்தியின் அளவு குறைவாக இருக்கலாமே ஒழிய அடிப்படை மூலப்பொருட்கள்,கலவை சிறுதொழிலுக்கும்,கார்பரேட் நிறுவனங்களுக்கும் வித்தியாசமிருக்காது என நினைக்கின்றேன்.சில வெளிநாட்டுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டில் சிறந்ததாக இருக்கின்றன.ஆனால் இந்தியப் பொருட்கள் அனைத்துமே தரத்தில் குறைந்தவை என்ற தாழ்வு மனப்பான்மையிலிருந்து இந்தியர்கள் வெளி வரவேண்டும்.சீனாக்காரன் கடைய அகலமாக விரிச்சுகிட்டாலும் நான் இந்திய ஆடைகளையே தேடித் தேடிப் பிடித்து அணிகிறேன்.சீனாக்காரன் இந்திய துணிகளுக்கு பக்கத்தில் கூட வரமுடியாது தரத்தில்.ஆனால் உங்க மாதிரி 20ரூவா கேசுக நிறைய இருப்பதால் சீனாக்காரன் வெற்றியடைந்து விடுகிறான்:)

பேட்டா முறை என்பதை விட அமுல் தயாரிப்பு மாதிரியான முயற்சியே முருகானந்தத்துக்கும்,நாப்கின் தொழில் முனைவோர் பெண்களுக்கும் வெற்றி தரும்.