Followers

Tuesday, March 19, 2013

முள்ளிவாய்க்காலுக்கும் அப்பாலான நிதர்சனங்கள்.

போர்க்கால நினைவுகளை மீள் நினைவுபடுத்தினால் ஏழுத்தை மீறிய சிந்தனைகள் சிதறுகின்றன.போர் காலத்தின் இணையக்குரல்கள் செவிடன் காது சங்கு போல் ஆகிவிட்டன.இலங்கை ராணுவம் நந்திக்கடலின் இரு திசைகளிலும் வந்து இணைந்து தமது வெற்றியைப் பிரகடனப்படுத்திக் கொண்டன.பிரபாகரனின் மரணம் குறித்த குழப்பங்கள் பலவிதமான ஊகங்களை கொண்டுவந்தன.நக்கீரன் பத்திரிகை பிரபாகரன் பத்திரிகை படித்துக்கொண்டிருப்பது மாதிரியான வெட்டு ஒட்டுதல்களை செய்து குழப்பியது.இறந்த முகத்தில் முடி முளைக்குமா என்ற விஞ்ஞான ஆராய்ச்சிகள் முன்வைக்கப்பட்டன.நிறைய பதிவர்கள் பல விதமான விவாதங்களை வெளிக்கொண்டு வந்தனர்.தமிழ் மணத்தின் ஈழம் பகுதி பதிவுகளோடு காணொளிகள் பலவற்றையும் கொண்டு வந்தது. காணொளிகளின் தாக்கம் துவக்கத்தில் அதிர்ச்சிகளை உருவாக்கி விட்டு தொடரும் பதிவுகள் மரத்துப்போன நிலைக்கு கொண்டு வந்து யார் சொல்வது உண்மை எது பொய் என்ற குழப்பங்களை உருவாக்கியது.விடுதலைப்புலிகள் மீதான விமர்சனங்கள் காரணமாகவும் நிகழ்ந்தவை என்ன என்பதை வெளியே கொண்டு வராதபடி பன்னாட்டு பத்திரிகையாளர்கள் யாரும் இலங்கைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

ராஜபக்சே சகோதரர்கள் நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு தொலைக்காட்சிகளில் தோன்றிக்கொண்டிருந்தார்கள்.2009ம் ஆண்டின் மே மாத காலத்திற்கும் முன்பே 2008ம் வருடம் நவம்பர் துவக்கம் முதல் போர் குறித்த கவலைகள் வெளிப்பட்டாலும் கூட மத்திய அரசு,தமிழக மாநில அரசுகளின் சித்து விளையாட்டுக்களில் திசை திருப்பப்பட்டு கோவை இராணுவ வாகன் தாக்குதல்,கோபம்,மாணவர்களின் போராட்டம்,வழக்கறிஞர்கள் போராட்டம், முத்துக்குமாரின் மரண சாசனம் என பலவும் ஆளும் தி.மு.கவால் திசை திருப்பப்பட்டு விட்டன.ராஜபக்சேவை கோபப்படுத்தக்கூடாது போன்ற அறிக்கைகளும்,சமாதான முயற்சி என்ற பெயரில் ராஜபக்சேவை சந்தித்து விட்டு வந்த தமிழக எம்.பிகள் என்பவற்றோடு முக்கியமாக 2009ம் ஆண்டில் கூடிய மனித உரிமைக்குழுவில் ராஜபக்சே அரசுக்கு சாதகமாக தீர்மானம் நிறைவேறியதும் கூட பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. இந்து ராம், சுப்ரமணியசுவாமி போன்றோரின் இலங்கை சார்பு எரிச்சலையும், கவலையையும் கொடுத்தது.இலங்கை அஜெண்டாவை ராஜபக்சே,ஜி.எல் பெரிஸ் போன்றவர்களிடம் கேட்பதை விட இவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

பின்பு 2G வந்து ஆக்கிரமித்துக் கொண்டது.இங்கும் அங்குமாக இணையத்தில் சோக ராகம் பாடினாலும் கூட அமிதாப்பச்சன் தலைமையில் இலங்கையில் நிகழவிருந்த IIFA (International Indian Film Academy) நிகழ்ச்சியை நிகழவிடாமல் செய்தது,லண்டனுக்குப் போன ராஜபக்சே சிவப்பு துண்டைக் காணோம்,கட்டிய வேட்டியைக் காணோம் என இலங்கை தூதரகத்தில் புகுந்து கொண்டு இலங்கை திரும்பியது,டைம்ஸ் பத்திரிகையின் சிறந்த மனிதர்களில் ராஜபக்சேவின் பெயர் முன்னிலையில் இருந்த ஓட்டுப்போடும் தில்லுமுல்லுகளை டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவிக்கப்பட்டு ராஜபக்சே ஓட்டை செல்லாக்காசு ஆக்கியது,புலம் பெயர்ந்த தமிழர்கள் உண்ணாவிரதம் போன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் கிடைக்காத திசைமாற்றம் சேனல் 4ன் கெலம் மெக்ராவின் போர்க்குற்ற காணொளிகளின் ஒருங்கிணைப்பிலும் அமெரிக்காவின் மனித உரிமைக்குழுவில் 2012ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திலும் இலங்கை அரசின் கோர முகம் உலகிற்கு மெல்ல தெரிய ஆரம்பிக்கின்றது.

2013ம் ஆண்டின் பிப்ரவரி,மார்ச் மாதங்களையும் இந்திய,தமிழக சூழல்களை லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் திசை மாற்றிய வரலாற்றை பதிவு செய்திருக்கிறது.அதனைத் தொடர்ந்த மற்ற கல்லூரிகளின் மாணவ,மாணவி சகோதர,சகோதரிகளின் உணர்வும்,போராட்ட எழுச்சியும் கருணாநிதி vs ஜெயலலிதா செயல்படும் முறைகளை ஒப்பிட வைக்கிறது. இருவரின் ஆட்சிகளின் சூழல் முறைகள்,அரசியல் லாபங்கள் வேறுபட்டாலும் கூட மொத்தப் போராட்ட கையாளும் முறைகளில் ஜெயலலிதா ஸ்கோர் செய்கிறார்.அதற்கு தி.மு.க செயல்பட்ட விதம் கூட ஜெயலலிதாவுக்கு துணை செய்கிறது எனலாம்.

கலைஞர் கருணாநிதி எவ்வளவு அடிச்சாலும் தாங்குவதோடு தன்னையும்,கட்சியையும் தக்கவைத்துக்கொள்ள நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிக்கை மேல் அறிக்கை விட்டுக்கொண்டிருப்பதும்,கலைஞரின் நிலைப்பாட்டுக்கு எதிராக அறிக்கை விடுவதென்றால் ராஜபக்சே தொழுத திருப்பதியின் லட்டு மாதிரி என்ற மகிழ்ச்சியில் ஜெயலலிதாவின் அறிக்கைகள் வெளிப்பட்டாலும் காலம் கடந்து இருவரும் ஈழப்போரின் பரிணாமங்களை மாற்று திசைகளிலிருந்து புரிந்து கொண்டிருக்கிறார்கள்.கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று ஒன்றாக குரல் கொடுத்தால் இன்னும் வலுப்படும் தமிழர்களின் உணர்வுகள் இருவரின் ஈகோ,தமிழக அரசியல் கலாச்சார சூழல்களால் தனித்தனியாகவேனும் சேர்ந்து ஒலிப்பதை பாராளுமன்ற விவாதங்கள் இப்பொழுது ஆவணப்படுத்தியுள்ளன.இந்தியாவின் இலங்கை வெளியுறவுக்கொள்கை கலைஞர் கட்டுமரமாக தத்தளித்துக்கொண்டிருப்பதை 2013ம் ஆண்டின் ஐ.நா மனித உரிமைக்குழுவின் அமெரிக்க வரைவு தீர்மானத்தில் மோடிமஸ்தான் மாதிரி இந்தியா இந்த கணம் வரை மௌனம் காக்கிறது.

மேடைகள்,இந்தி எதிர்ப்பு போராட்டம்,ஆட்சி அனுபவம்,எதிர்க்கட்சி, எதிர்க்கட்சியுமில்லாத சென்ற தமிழக தேர்தலின் தோல்வி,தோல்வி தந்த ஆற அமர உட்கார்ந்து யோசிக்கும் நிலை,டெசோவை தூசி தட்டி டெல்லி வரை கொண்டு சென்ற சாதுர்யம்,ராஜபக்சே,மத்திய அரசு சொன்னதை நம்பி ஏமாந்து விட்டேன் என்ற வெளிப்படைத்தன்மை இவற்றையெல்லாம் மாணவர் போராட்டம் காங்கிரஸ் என்ற நொண்டி வாத்தை விட்டு விடும் பயத்தை விட்டுக் கொடுத்திருக்கிறது கலைஞருக்கு.இந்திய அரசியல் மாற்றங்களை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.முலாயம் சிங்,மாயாவதிகளின் நம்பகத்தன்மை சந்தேகத்துக்குரியது என்பதால் முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.மன்மோகன் சிங் ஆளை விட்டால் போதும் என இன்னும் மௌன விரதத்தை தொடர்கிறார்.பி.ஜே.பி வந்தாலும் இலங்கை விசயத்தில் பெரும் மாற்றஙகளைக் கொண்டு வந்து விடாது என்பதை சுஷ்மா ஸ்வராஜின் இலங்கைப் பயணமும் அதனைத் தொடர்ந்த ராஜபக்சே இந்திய வருகையும் உறுதிப்படுத்துகின்றன.

சகோ.சார்வாகன் அமெரிக்க தீர்மான வரைவு குறித்து பதிவு போட சொன்னார்.முதல் வரைவின் சொற்பதங்கள் பரவாயில்லை என்கிற நம்பிக்கையிலிருந்து 2,3,4ம் வரைவு மாற்றங்கள்அமெரிக்க தீர்மானம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு மாதிரியாக நீர்த்துப் போய் விட்டாலும் கூட அடுத்த குறுகிய கால கூட்ட அறிக்கை, வருட அறிக்கை எப்படி நகரும் என்பதை எடை போட உதவும்.இன்னும் இந்திய மௌனம் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பது நாளை அல்லது மறுநாள் தெரிய வரும்.தற்போதைய நிலையில் இந்தியா இல்லாமல் கிட்டத்தட்ட 30 நாடுகள் அமெரிக்க தீர்மான ஆதரவு தரப்புக்களாய் இருக்கின்றன என்பதால் இந்திய ஆதரவு இல்லாமலும் தீர்மானம் வெற்றி பெறும் வாய்ப்புக்கள் இருக்கின்றன என்ற போதிலும் இந்தியாவின் நிலைப்பாட்டை அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

கலைஞரின் கூட்டணி விலகல் தி.மு.கவிற்கு புதிய வெளிச்சத்தைக் காட்டும்.காலம் கடந்தாவது தனது அரசியல் முத்திரையை பதித்த  கலைஞருக்கு வாழ்த்துக்கள்.2009ல் செய்ய தவறிய தவற்றை இனிப் பேசி பயனில்லை.அது கோப வெளிப்பாடுகளுக்கும்,விவாதத்திற்கு மட்டுமே பயன்படும்.இன்னும் ஈழ நகர்வை முன் கொண்டு செல்ல உதவாது.

தலைப்பில் நிதர்சனங்கள் என குறிப்பிட்டதற்கு காரணம் நிகழ்வுகளை ஒட்டியே நாம் இன்னும் வரலாற்றை முன்கொண்டு செல்ல வேண்டிய சூழலில் இருக்கிறோம்.இப்படி நடந்தால்,அப்படி நடந்தால் அல்லது அப்படியான பின் எப்படி என்ற ஹைபோதிசிஸ் கருத்துக்கள் உதவாது.மனித உயிர்களின் இழப்புக்கள்,தி.மு.க ஆட்சியின் தவறுகள் தமிழர்களின் கறுப்புப் பக்கங்கள் எனபது நாம் விரும்பாமலே நிகழ்ந்து விட்டன.துயரங்களைக் கடந்து ஈழ மக்களுக்கு ஏதாவது வழிகாட்டுவது மட்டுமே இனி யதார்த்தமாக இருக்க முடியும்.

தமிழக தொலைக்காட்சிகளில் பக்க சார்பில்லாமல் நிகழ்வுகளையும், விவாதங்களையும் புதிய தலைமுறை தொலைக்காட்சி பலருக்கும் கொண்டு சேர்த்திருக்கிறது.வட மாநில ஆங்கில ஊடகங்கள்தான் கருத்து கந்தசாமிகளாய் இருந்த நிலையை புதிய தலைமுறை மாற்றியிருக்கிறது.பல விவாத முகங்களை தமிழில் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

தமிழக மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் தமிழகம் குறித்த எதிர்கால நம்பிக்கையை தருகிறது..

14 comments:

நம்பள்கி said...

[[[2013ம் ஆண்டின் பிப்ரவரி,மார்ச் மாதங்களையும் இந்திய,தமிழக சூழல்களை லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் திசை மாற்றிய வரலாற்றை பதிவு செய்திருக்கிறது.அதனைத் தொடர்ந்த மற்ற கல்லூரிகளின் மாணவ,மாணவி சகோதர,சகோதரிகளின் உணர்வும்,போராட்ட எழுச்சியும் கருணாநிதி vs ஜெயலலிதா செயல்படும் முறைகளை ஒப்பிட வைக்கிறது. இருவரின் ஆட்சிகளின் சூழல் முறைகள்,அரசியல் லாபங்கள் வேறுபட்டாலும் கூட ------ மொத்தப் போராட்ட கையாளும் முறைகளில் ஜெயலலிதா ஸ்கோர் செய்கிறார்---------.அதற்கு தி.மு.க செயல்பட்ட விதம் கூட ஜெயலலிதாவுக்கு துணை செய்கிறது எனலாம்.]]]

வணக்கம் நடராசன்!
தற்பொழுது அதிமுக மத்திய அரசில் பங்கு வகித்துக்கொண்டு (திமுக மாதிரி)தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக ஆண்டு கொண்டிருந்தால்...இந்த மாணவர் போராடங்களை எப்படி கையாண்டிருப்பார்?

நம்பள்கி said...

[[தமிழக மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் தமிழகம் குறித்த எதிர்கால நம்பிக்கையை தருகிறது]]

உணமையகவா? தமிழ் இயக்குனர்கள் உண்ணவிரதப் போராட்ங்களில் நாட்டமை துணையுடன் அறிவு ஜீவிகளான மணிரத்னம், அவர் மனைவி, சங்கர் மற்றும் அதிக பணம் பண்ணும் இயக்குனர்கள்...அரசாங்க ஆதரவுடன் தான் போராட்டம் நடத்துகிறார்கள்.

என் அடி மனது ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது நல்லது நடக்கவேண்டும் என்று நினைத்து உருகும் போது....
---நினைக்கும் உருகும் போது, காட்சிகள் மாறி அதிமுக மத்திய அரசில் பங்கெடுத்தால்...இவர்கள் எல்லோரும் [மாணவர்களையும் சேர்த்து தான்] துண்டைக் காணோம் துணியக் காணோம் என்று ஓடுவதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

Anonymous said...

போராட்டங்களை கண்டு நான் வியக்கின்றேன், ஆனால் தமிழகம் முழுவதும் திடுப்பென எழுந்த போராட்டத்துக்கு பின்னால் அரசியல் சக்திகள் இல்லை என நம்ப நான் தயாராக இல்லை, அத்தோடு அதிமுக அரசு இப்போராட்டத்தை எதோ ஒரு வகையில் ஆதரித்துள்ளது, அந்த எட்டு மாணவரை விரட்டி தமிழகம் முழுவதும் அனைவரைம் எம்பச் செய்தது.

இருந்த போதும் இவை யாவும் காலந்தாழ்ந்த ஒன்றே என்பதில் மாற்றுக் கருத்தில்லை, ஐநா வரைவில் திருப்தி இல்லை, நான் வாசித்த வரை இலங்கையின் குற்றங்களை பூசி மொழுகுவதாய் உள்ளது.

இலங்கை என்னும் இளங்குமரியை மயக்க இந்தியா, சீனா நன்றாக சோப் போடுகின்றார்கள், இந்தியாவின் தேவை அமெரிக்காவுக்கும், அமெரிக்காவின் தேவை இந்தியாவுக்கும் இருப்பதால்,

ஒரு படத்தில் கவுண்ட மணி திருடன் வேடமிட்டு ரம்பாவை விரட்ட காப்பாற்றுவது போல இந்தியா போய் இலங்கைக்கு ஜல்ஜா பண்ணுவதும், இதனால் இலங்கையை தன் பால் ஈர்பதுமே இப்போதைய அரசியல் நகர்வுகளாக இருக்கின்றது.

ஈழத்தமிழர்கள் புலத்திலோ, தாயகத்திலோ பெரும் சக்திகள் இல்லை என்பதால், அவர்களால் எவ்வித பொருளாதார ஆதாயங்கள் இருக்கப் போவதில்லை என்பதால் எவரும் கண்டுக் கொள்ளப் போவதும் இல்லை. புலத்த்தில் இருக்கும் ஈழத்தமிழர்களின் பணம் தமிழகத்தின் வைகோ, ஜெயா, நெடுமாறன், சீமான் போன்றோரைத் தாண்டி பாயப் போவதில்லை.

புலத்தில் சிலருக்கும் - ஜெயா ஆதரவோடு ஹவாலா பரிவர்த்தணைகள் இருப்பதால் அதிமுக கொஞ்சம் உதவலாம். கருணாவோ தமிழர் ஆதரவு நாடகம் போட்டு வாக்குப் பெறவே நினைக்கின்றார். அவருக்கு புலத்திலோ, ஈழத்திலோ பெரும் ஆதரவுகள் இல்லை.

மாணவர் போராட்டம் நல்ல முன்னுதராணம், நாளை தமிழக பிரச்சனைகளுக்கு மாணவர் அணி திரள ஒரு தொடக்கப் புள்ளி, தமிழக வசந்தப் போராட்டங்களை அரசு அனுமதித்தால் ஏற்படுத்த ஒரு வெள்ளோட்டம் என்பேன்.

மற்றப்படி சினிமா, பத்திரிக்கை இத்தியாதி இன்ன பிற எல்லாம் அரசியல் வாதிகளின் வால்கள் என்பதால் கணக்கில் எடுக்கும் படி இல்லை.

இலங்கைக்கு தமிழகம் ஒரு சிறு அழுத்தம் கொடுத்துள்ளது என்பது உண்மை, ஆனால் இலங்கையின் நீண்டகால சிங்கள மயமாக்கல் திட்டத்தையோ, வடக்கின் தமிழ் மாநில சுயாட்சியையோ இது பெற்றுத் தருமா என்பதை மேற்குலக நாடுகளின் கண்ணசைவிலேயே தங்கியுள்ளது.

புலி வரும், புலி வரும் என்றக் கதையை வடக்கிலங்கைத் தமிழர்களே நம்பத் தயாராக இல்லை. வடக்கில் சிங்கள மயமாக்கல் ஜோராகத் தொடங்கி பதவில் குளம், முறிகண்டி பகுதிகளில் சிங்கள குடியுருப்புக்கள் தோன்றி வருகின்றன.

30 ஆண்டுகளுக்கு முன் இருந்த பலமும், உறுதியும் ஈழத்தமிழரிடம் இன்றில்லை. அத்தோடு செல்வாவின் காலத்தில் இருந்த ஒற்றுமையும் குலைந்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் வடக்கு - கிழக்கு - மலையக -முஸ்லிம்கள் என நான்கு கூறுகளாக பிரிந்து விட்டனர்.

மேற்கு இலங்கைத் தமிழர்கள் ஏற்கனவே சிங்கள மயமாக்கலில் ஒன்றிணைந்துவிட்டனர்.

இவற்றை எல்லாம் எடுத்துக் கூறினால் என்னைத் துரோகி என்கின்றார்கள் என்ன செய்ய !

பார்ப்போம், நம்பிக்கைகள் மட்டும் மிச்சம் உள்ளது தமிழீழத்தில் உள்ளவர்களுக்கு ...

ராஜ நடராஜன் said...

நம்பள்கி!ஜெயலலிதாவின் நிலைப்பாடே கலைஞர் என்ன செய்கிறாரோ அதற்கு எதிர் நிலை என்பதுதான்.நீச்சல் குளத்தின் மேல் தளத்திலிருந்து இதோ குதிக்கப் போகிறேன் என சொல்வதற்கு முன்பே ஜெயலலிதா நீச்சல் குளத்தில் குதித்து விடுவார் நாந்தான் முதலாக்கும் என.

தற்போதைய மாணவர் போராட்டங்கள் கருணாநிதியின் ஆட்சியின் செயல்பாட்டுக்கு மக்கள் ஒப்பிட வேண்டும் என்ற உள்நோக்கம் கூட எனபதில் சந்தேகமில்லை.

ராஜ நடராஜன் said...

நம்பள்கி!மறு விவாத பின்னூட்டத்திற்கும் நன்றி.தற்போதைய நிலையில் இலங்கைப் பிரச்சினை தவிர காங்கிரஸ் ஆட்சி முறை செயல்பாட்டில் பெரும்பான்மையோருக்கு திருப்தியில்லை என்றே கணிக்க தோன்றுகிறது.தி.மு.க ராஜினாமா என்று ஆட்டத்தைக் கலைக்காத வரை தமிழகத்தைப் பொறுத்த வரை தி.மு.க,காங்கிரஸ் கூட்டணி பி.ஜே.பியுடன் அ.தி.மு.க ஆட்சியில் இணையும் சாத்தியங்கள் தென்பட்டன.ஒருவேளை பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தாலும் வெளியுறவுக்கொள்கையில் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது என்ற போதிலும் காங்கிரஸின் நிலைப்பாட்டிலிருந்து சிறு மாற்றங்களையாவது எதிர்பார்க்கலாம்.
எதிர்காலத்தில் தி.மு.க செயல்படுவதைப் பொறுத்து ஜெயலலிதாவின் காய் நகர்த்தல்கள் உருவாகலாம்.

முந்தைய நிலையில் யாராவது சிலர் மட்டுமே போராட்டம்,உண்ணாவிரதம் என்ற நிலையை மாணவர்களின் போரட்டம் மொத்த உணர்வாக மாற்றியிருப்பது பெரும் மாற்றம் என்பதோடு போராட்டத்தின் தாக்கம் ஐ.நா மனித உரிமைக்குழு வரை உற்று நோக்க வைத்திருக்கிறது.

எப்படியிருந்த போதிலும் தமிழகம் சார்ந்தும்,புலம் பெயர்ந்த தமிழர்கள் சார்ந்தும் ராஜபக்சே ஆட்சிக்கான அழுத்தங்களை தருவதும் இலங்கைக்குள் எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேரும் நிலையில் ஆட்சி மாற்றங்கள் உருவாவது மட்டுமே முதல் கட்ட விளைவுகளை உருவாக்கும்.

ராஜ நடராஜன் said...

இக்பால் செல்வன்!கடந்த வாரம் நீங்கள் பதிவு செய்த ஹலால் தொடுப்புக்களில் நுழைந்து விட்டு சில காணொளிகள் மனதை சித்தரவதை செய்தும் விட்டது.நீங்கள் பதிவு போடுவதற்கு முன்பே வெஜிடேரியனாகி விட்டது நல்லது மாதிரிதான் தெரிகிறது.பின்னூட்டமிட கால அவகாசம் இல்லாமல் பின்னுட்டம் எதுவும் சொல்ல முடியவில்லை.மன்னிக்கவும்.

அரசியல் உள் விவகாரங்களை வவ்வால் ஏற்கனவே துப்பு துலக்கி விட்டார்.போராட்டத்தின் பின்ணணியில் யார் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல.ஏன் அமெரிக்க சி.ஐ.ஏ கூட இருந்தாலும் போராட்டத்தின் தாக்கம்,விளைவுகள் என்ன என்பதே முக்கியம்.அந்த விதத்தில் மாணவர்களின் போராட்டம் புதிய சூழலை தமிழகத்திலும்,இந்திய பாராளுமன்றத்திலும்,அமெரிக்க தீர்மான வரைவு முடிவு வாக்கெடுப்பு வரை தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது.

அமெரிக்க தீர்மான முதல் வரைவு ஓரளவுக்கு பரவாயில்லை என்ற போதிலும் தொடர்ந்த சொற்பத மாற்றங்கள்,நீக்கங்கள் தீர்மானத்தை நீர்த்துப் போக வைத்துள்ளது என்பது உண்மையே.இன்னும் பந்து இலங்கையின் கையிலேயே இருந்தாலும் கூட ஆட்சி முறை மனமாற்றங்கள் ஏற்படாத வரை ஒரு வருடமல்ல இரண்டு வருடம் கொடுத்தாலும் இலங்கை நல்லிணக்க செயல்பாடுகளை நிறைவேற்றாது என்பதற்கு கடந்த நான்காண்டுகளே சாட்சி.எனவே பொறுமையோடு தொடர் அழுத்தங்களை தருவதும் அவசியம்.

இலங்கையின் பொருளாதார நன்மைகள் என்பதை விட புவியியல் அரசியல் மட்டுமே இந்தியா,சீனா,அமெரிக்க நகர்வுகளுக்கு காரணம்.சீனாவின் ஆக்கிரமிப்பு,பாகிஸ்தான் பிரச்சினைகளால்தான் நேருவின் காலம் தொட்டு பாதுகாப்பு கேந்திரங்கள் தென்மாநிலங்களில் உருவாகின.இந்திராகாந்தி காலத்தில் அமெரிக்கா திரிகோணமலையில் கண்வைத்ததை விடுதலைப்புலிகளின் பாதுகாவல் வளையத்தால் அமெரிக்காவால் எட்ட முடியவில்லை.இப்பொழுது ஈழப்போருக்குப் பின் சீனா,பாகிஸ்தான் தலையீடுகள் இலங்கையில் அதிகம் என்பது கண்கூடு.ஆனால் அதற்கான தற்காப்புக் கொள்கையை நிறுவும் வழியில்லாமல் விடுதலைப்புலிகள் தோற்றுப்போய் விட்டதால் இலங்கை நட்பு நாடு என்ற வளையத்துக்குள் இந்தியா வருகிறது.புவியியல் சார்ந்து இந்தியாவுக்கான சாதக நிலை இலங்கையில் இன்னும் இருந்தாலும் கூட சீனாவின் துணையோடு பாகிஸ்தான் புதுசாகசங்கள் ஏதாவது உருவாக்கும் சூழல்கள் அதிகம்.தனது நலன்கள் கருதியாவது தமிழர்களை தனது பக்கம் மறுபடியும் கொண்டு வர இந்தியா முயற்சிக்க வேண்டும்.ஈழத்தமிழர்களின் நலன்களில்தான் இந்தியாவின் பாதுகாப்பும் அடங்கியிருக்கிறது.தற்போதைய நிலையில் அதற்கான சாத்தியங்கள் குறைவாக தென்படுவதால் அமெரிக்காவின் தலையீடு மட்டுமே இலங்கையில் மனித உரிமைகளை நிலை நாட்டவும்,தமிழர்களுக்கான நல்வாழ்வுக்கு வழி வகுக்கவும் செய்யும்.எனவே புலம்பெயர் தமிழர்கள் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு மேலும் செயல்பட வேண்டும்.

உங்கள் முந்தைய பதிவு ஒன்றில் இலங்கை வரைபடத்தோடு தமிழர்கள் வாழும் பகுதிகள்,சிங்களவர்கள் வாழும் பகுதியெல்லாம் குறிப்பிட்டு சில பிரச்சினைகளின் மையங்களை தொட்டது நினைவுக்கு வருகிறது.தற்போதைய வடகிழக்கு,மலைவாழ் தமிழர்களிடம் தனி ஈழம் குறித்த நம்பிக்கைகள் குறைவு என்றாலும் கூட உலக நீரோட்டத்தில் கலந்து விட்ட இலங்கை பிரச்சினை மேற்கத்திய நாடுகளின் ஆதரவு நிச்சயம் என்கின்ற நிலையில் மாற்றங்களை விரும்புவார்கள்.தற்போதைய நிலையில் பாலாவின் பரதேசி பட நிலையில்தான் மக்களின் மனநிலையும் இருக்கிறது.

உங்கள் பதிவுகளும்,ஆதாரங்களை தேடும் முயற்சிகளும் வரவேற்கபட வேண்டியவை.மதங்களுக்கு மாற்றான கருத்தை முன் வைப்பதாலும்,பிரச்சினைகளை அலசுவதாலும் சிலரிடமிருந்து எதிர்ப்புக்கள் என நினைக்கிறேன்.இதெற்கெல்லாம் பயந்துகிட்டு மறுபடியும் காணமல் போயிடாதீங்க:)

வவ்வால் said...

ராச நட,

மறுபடியும் கடையில லைட் எறியுது, ஷட்டரை தொறந்தாச்சு போல :-))

கலிஞரின் விலகல் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றே, கொஞ்சம் சீக்கிரமாக வந்துவிட்டாப்போல இருந்தாலும், மத்தியில் தேர்தலும் சீக்கிரமாக வரும்னு ஒரு பேச்சு ஓடுவதால், இப்போவே எகிறிட்டார், காங்கிரஸ் தொடர்ந்து இரு முறை ஆட்சியில் இருந்துவிட்டது பொதுவான அதிருப்தி அதிகமாகிவிட்டது, தமிழகத்தில் ஈழம் சார்ந்து பலமடங்கு அதிருப்தி, இதற்கும் மேலும் ஒட்டிக்கொண்டிருப்பது அரசியல் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று தான் கலிஞர் ஓடி வந்துள்ளார், அதாவது மூழ்கும் கப்பலில் இருந்து எஸ்கேப் ஆகிட்டார்,எனவே இதனை ஈழப்பிரச்சினைக்காக வந்தேன் என கப்சா விடுவதை இனியும் தமிழக மக்கள் நம்ப்பத்தயாரில்லை.

பிஜேபி மத்தியில் வந்தாலும் நிலை பெரிதாக முன்னேறப்போவதில்லை தான் ஆனால் தொடர்ந்து காங்கிரஸ் வந்தால் நிலை இன்னும் மோசமாகும், ஈழம் என்று இல்லை இந்திய நிலையே மோசமாகும், எனக்கு தெரிந்து "மக்கள் விரோத மத்திய அரசாக " இது போல வேறு எந்த அரசும் மத்தியில் இருந்ததே இல்லை.

ஒரே ஒரு அறிவிப்பு கூட சமீபமாக மக்கள் நலன் சார்ந்து என சொல்லும் படியாக காங்கிரஸ் செய்ததே இல்லை. செய்வதையும் செய்துவிட்டு அதில் என்ன தப்பு என்ற ரீதியில் விளக்கம் கொடுக்கும் கொடுர சிந்தனையை என்னவென்பது.

# அமெரிக்கா தடுக்கும், சீனா பிடிக்கும் என்பதெல்லாம் காகித மிரட்டல்கள் திறந்த உலகப்பொருளாதார சூழலில் அவர்களுக்கு இந்தியாவையோ, இந்திய சந்தையையோ பகைத்துக்கொள்ள மனமிருக்காது என்ற கோணத்தில் சிந்தித்து சர்வதேச அரசியலில் இந்தியாவும் மீன்ப்பிடிக்கலாம் ஆனால் நம்ம வெளியுறவு அமைச்சகமும் சரி அதிகாரிகளும் சரி "சில பிஸ்கெட்டுகளுக்காக" வாலையாட்டும் நாதாரிகளாக இருக்கிறார்கள்.

வெளியுறவு அமைச்சகத்தில் வேலை செய்ய போவதே தங்கள் வாரிசுகளுக்கு அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற நாடுகளில் படிக்க இடம் வாங்கவே.

பிள்ளைகளுக்கு சீட் வாங்கியாச்சா, சொந்தம் பந்தம் என எல்லாருக்கும் சீட் ,வேலைனு அதுக்கு பேரம் பேசவே மெனக்கெடுகிறார்கள்.

அமெரிக்காவுக்கான வெளியுறவு அமைச்சகத்தில் வேலை செய்பவர் சரக்கு கடத்துவதே வேலையா இருக்காராம் ,என்ன கொடுமை சார் இது :-))

இது பற்றி முன்னர் ஒரு செய்தி வந்தது ம்,சுட்டிக்கிடைத்தால் போடுகிறேன்.

இந்த லட்சணத்தில் இருந்தால் எப்படி நம்ம சர்வதேச அரசியல் கொள்கை விளங்கும்?

இந்திரா காந்தி மீது பல விமர்சனங்கள் இருக்கலாம்,ஆனால் அந்நிய அழுத்தங்களுக்கு அவ்வளவாக அஞ்சுவது இல்லை.

80 களில் இலங்கையில் உணவுக்கு தட்டுப்பாடு வந்தப்போது, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப்பொருட்கள் வானில் இருந்து தமிழர் பகுதிகளில் போட்டவர்.

இன்று மன்னு மோகனை அப்படி எல்லாம் செய்ய சொல்லுங்க பார்ப்போம்.பீதியில் பேதியாகிடுவார்,அமெரிக்க குடியுரிமை பெறாத அமெரிக்க குடிமகன் அவர் :-))
(பொண்ணுக்கு அமெரிக்க குடியுரிமை)

ராஜ நடராஜன் said...

வவ்வால்!உங்க கூடவே மாரடிச்சுட்டிருந்தா கடையை எப்படி திறக்கறது:)உங்க தொடர் பதிவு ஆதாரங்களையும் தாண்டி விஸ்வரூபம் 2 தேசிய அவார்டுகளை வாங்கிடுச்சுல்ல:)

பல்ப் மற்றும் எரிவதற்கான முக்கிய காரணம் மாணவர் போராட்ட காலகட்டத்தை மீண்டுமொரு முறை சில காலம் கழித்து திரும்பி பார்க்கவேண்டுமென்ற ஆவணப் பதிவுக்காக் மட்டுமே.இத்தோடு அமெரிக்க தீர்மான முதல் வரைவையும் அடுத்து இணைக்கலாமென்றிருந்தேன்.நான்காம் வரைவு மாற்றம் அநியாயத்துக்கும் அநியாயம்.பேசாமல் ராஜபக்சேவையே தீர்மானம் கொண்டு வ்ரச்செய்திருக்கலாம்ங்கிற அளவுக்கு அழுகுணி ஆட்டம்.தனித்தனியே இலங்கையும்,அமெரிக்காவும் கூடிப்பேசுகிறோம் பேர்வழின்னு சொன்ன தினத்துக்குப் பின்பு வந்த மாற்றங்கள் இது.இதன் பின்ணணியில் எந்த சூத்திரதாரி இருக்கிறான் என்பதைக் கண்டுபிடித்தாக வேண்டும்.

கருணாநிதி தனது சுயநலம் கலந்து தீர்மானம் எடுப்பவர் என்பது தெரிந்த கதைதான் என்றாலும் கூட ஆட்சியில் இல்லாததற்கு காரணங்கள்,அவர் மீதான எதிர்விமர்சனங்கள்,மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்ட தி.மு.கவை மீண்டும் நிலைநிறுத்தும் முயற்சிகள் என்பவற்றோடு தான் ஏமாந்து போனேன் என்று அறிக்கை விடுவதிலும்,டெசோவை புதுப்பித்ததிலும் சுயநலங்களுக்கும் அப்பாலான உணர்வு இருக்கிறதென்றே சொல்ல வேண்டும்.கூட்டணியிலிருந்து விலகல் காங்கிரஸிலிருந்து கழண்டு கொள்ள வேண்டும் என்பதோடு மத்திய அரசுக்கான அழுத்தத்தையும் தர முயன்ற முயற்சி என்ற ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்றுதான் சொல்வேன்.இனப்படுகொலை என்ற சொல்லை எப்படியாவது திணித்தாக வேண்டுமென்ற முயற்சி என்றும் கூட சொல்லலாம்.

வெறுமனே விமர்சனப் பார்வை வைப்பதோடு ஆக்கபூர்வமாகவும் ஏதாவது தென்படுகிறதா என்றும் நினைக்கலாமே!யதார்த்தங்களை நோக்கி நகரவேண்டியது அவசியமான ஒன்று.

நீங்கள் பி.ஜே.பி பற்றிக் குறிப்பிட்டது போலவே மாற்றங்கள் வருவதற்கு சாத்தியங்கள் குறைவு என்றாலும் கூட மன்மோகன்,சோனியா என்ற இரட்டைநிலை முடிவுகளின் தயக்கங்களை விட பி.ஜே.பி சில சமயம் தடாலடி முடிவுகள் எடுக்க கூடும்.அதற்கான அழுத்தங்களை தமிழகம் தருவதற்கும் தயாராகவும் இருக்க வேண்டும்.மக்கள் சார்ந்த் நலன்கள் இல்லை என்பதற்கு ராஜிவ் காந்தி என்ற உட்காரணம் காங்கிரஸ்க்கு கட்டாயம் இருக்க வேண்டும்.இல்லையென்றால் இவ்வளவுக்கும் அசையாத நிலைப்பாடு இலங்கை நட்பு நாடு என்பது காரணமாக இருக்க முடியாது.சீனாவின் பொருளாதார உதவிகளோடு சீனா,பாகிஸ்தான் இராணுவ கலந்துரையாடல்களே அதிகம் என்பதை இந்திய இலங்கை வெளியுறவுக்கொளகை வகுப்பாளர்களுக்கு நாம் சொல்லியாக வேண்டியதில்லை.காங்கிரசின் நிலைப்பாடும்,ராஜபக்சேவின் அசராத தன்மையும் தமிழகம்,இலங்கை உறவை வளர்ப்பதற்கு பதிலாக நீண்ட பிளவையே உருவாக்குகிறது.

அமெரிக்க இந்திய அணுஆயுதக் கொள்கையில் காட்டிய தீவிரத்தையெல்லாம் இலங்கை மீது காட்டாமல் சமாளிப்பது ஏதாவது பேராபத்தை சீனா மூலமாக் அல்ல சீனாவின் துணையோடு பாகிஸ்தான் செய்யும் வாய்ப்புக்கள் இப்பொழுது மிக அதிகம்.

மேனனின் அப்பன் வெளியுறவுத்துறை,இப்ப மேனன் வெளியுறவுத்துறை,இனி மேனன் பையன் வெளியுறவுத்துறை என்றே வெளியுறவுத் துறையும் வாரிசுக் கொள்கையை வற்புறுத்துகிறது.இது தவிர நிறைய தமிழ் முகங்களையும் காண முடிகிறது.ஆனால் அவர்களின் நிலைப்பாடும் கூட தமிழர்களுக்கு எதிராகவே இருப்பது வருத்தமளிக்கிறது.

சரக்கு கடத்துபவன் யாரென்று நேரடியாகவே போட்டு உடைத்திருக்கலாமே.பாரிஸ் கார்னர் முட்டுச் சந்து மார்க்க பரப்புக்களையெல்லாம் அப்படித்தானே பேசினோம்:)

இந்திராகாந்தியின் மீதான விமர்சனங்களையும் கடந்து சாதித்தவை வங்கி தேசியமயமாக்கல்,பங்களாதேஷ் உருவாக்கம்,விடுதலைப்புலிகளுக்கு ஆதரவோடு அமெரிக்காவை திரிகோணமலையில் அண்ட விடாதது.பொற்கோயிலில் நுழைந்தது என பல நிகழ்வுகள் இந்தியாவின் நலனைப் பாதுகாத்திருக்கிறது.

அமெரிக்க இந்திய அணு ஒப்பந்தத்தில் நீங்கள் சொன்ன அமெரிக்க புரிந்துணர்வு (குடியுரிமை) உள்ளடங்கியதே.அனுபவிக்கட்டும்.நல்லாயிருக்கட்டும்.அடுத்தவ தாலியை ஏன் அறுக்கிறார்கள்?

வேகநரி said...

//இந்திரா காந்தி மீது பல விமர்சனங்கள் இருக்கலாம்ஆனால் அந்நிய அழுத்தங்களுக்கு அவ்வளவாக அஞ்சுவது இல்லை.80 களில் இலங்கையில் உணவுக்கு தட்டுப்பாடு வந்தப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப்பொருட்கள் வானில் இருந்து தமிழர் பகுதிகளில் போட்டவர்.//
வவ்வாலுக்கு இந்திரா காந்தி 80 களில் இலங்கையில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப்பொருட்கள் வானில் இருந்து தமிழர் பகுதிகளில் போட்டார் என்று அனானியா தகவல் தந்தது?
அப்போ அந்தம்மா உயிரோடு இல்லை. இலங்கையில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப்பொருட்கள் வானில் இருந்து போட்டது அந்தம்மாவின் மகன் ஆசியாவின் தாதா நானே தான் என்று காட்டுவதற்காக தங்கள சாட்டி செய்து காட்டிய சகாச விளையாட்டே என்று தான் இலங்கை தமிழர்கள் சொல்கிறார்கள்.
வெளியுறவு அமைச்சகத்தில் தமிழக அரசியல்வாதிகளை விட திறமையான பலர் இருக்கிறார்கள்.
பொண்ணுக்கு அமெரிக்க குடியுரிமை என்று பிரதமரை குறிப்பிட்டது வவ்வாலின் ஆணாதிக்க போக்கு.

வவ்வால் said...

ராச நட,

கடைய தொரந்தமா கல்லாக்கட்டினமானு இல்லாம இன்னும் விஸ்வரூபம் நினைப்பிலே இருந்தா எப்பூடி?

ஒலகப்படம் ,ஆஸ்காரு வெயிட்டிங்க் இதுல ரெண்டே ரென்டு தேசிய விருதுக்கே பீத்திக்கலாமா?

//.நான்காம் வரைவு மாற்றம் அநியாயத்துக்கும் அநியாயம்.பேசாமல் ராஜபக்சேவையே தீர்மானம் கொண்டு வ்ரச்செய்திருக்கலாம்ங்கிற அளவுக்கு அழுகுணி ஆட்டம்.தனித்தனியே இலங்கையும்,அமெரிக்காவும் கூடிப்பேசுகிறோம் பேர்வழின்னு சொன்ன தினத்துக்குப் பின்பு வந்த மாற்றங்கள் இது.இதன் பின்ணணியில் எந்த சூத்திரதாரி இருக்கிறான் என்பதைக் கண்டுபிடித்தாக வேண்டும்.//

அமெரிக்கா இந்தளவுக்கு நீர்த்து போக செய்ய இலங்கை ஏதோ பெரும் விலைக்கொடுத்திருக்க வேன்டும்.

ஏன் எனில் கடந்த சில மாதங்களாகவே அமெரிக்கா ,இலங்கைக்கு பல வகையிலும் அழுத்தம் கொடுத்து வந்தது, US GSP trade policy(generalized special preference) வரியில்லாமல் ஏற்றுமதி செய்ய இலங்கைக்கு கொடுத்த அளவை மறுபரிசீலனை செய்வோம், மேலும் இலன்ங்கையில் தொழிலாளர்கள் நலன் சரியாக பராமரிக்கப்படவில்லை, இதனை அமெரிக்க US GSP trade policy அடிப்படையில் விசாரிக்க போறோம் என்றெல்லாம் "ஃபில்ம்" காட்டி வந்தது.

அமெரிக்காவிற்கு 2 பில்லியன் டாலர் அளவுக்கு இலங்கை ஏற்றுமதி செய்கிறது, அதில் 135 மில்லியன் டாலருக்கு வரிச்சலுகையின் கீழ் ஏற்றுமதி. அந்த சலுகை எல்லாம் கட் செய்வோம் என்ற ரீதியில் பேசிக்கொண்டிருந்த அமெரிக்கா திடிஇர் என இலங்கைக்கு சாதகமாக காய் நகர்த்துவதைப்பார்த்தால் எதிர்ப்பார்த்த ஏதோ ஒன்று கிடைத்திருக்குமோ என நினைக்கிறேன்.

//மத்திய அரசுக்கான அழுத்தத்தையும் தர முயன்ற முயற்சி என்ற ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்றுதான் சொல்வேன்.இனப்படுகொலை என்ற சொல்லை எப்படியாவது திணித்தாக வேண்டுமென்ற முயற்சி என்றும் கூட சொல்லலாம்.//

இன்னும் இந்த கதையை எல்லாம் நம்பிக்கிட்டு :-))

அமெரிக்க வரைவில் திருத்தம் செய்யும் கடைசி நாள் முடிந்த பின்னர் தான் ,கலைஞர் இனப்படுகொலைனு சேர்க்கலைனே வாயை தொறந்தார். பத்திரிக்கையாளர்கள் இதைக்குறிப்பிட்டு கேட்டதுக்கு கடுப்பாகிட்டார் :-))

//மக்கள் சார்ந்த் நலன்கள் இல்லை என்பதற்கு ராஜிவ் காந்தி என்ற உட்காரணம் காங்கிரஸ்க்கு கட்டாயம் இருக்க வேண்டும்.இல்லையென்றால் இவ்வளவுக்கும் அசையாத நிலைப்பாடு இலங்கை நட்பு நாடு என்பது காரணமாக இருக்க முடியாது.//

அது ஒரு காரணம் தான்,ஆனால் இந்திராவைக்கொன்றது சீக்கிய இனம் என இனத்தின் மீது வஞ்சம் கொள்ளவில்லையே?

புலிகள் எல்லாம் போய் சேர்ந்த பின்னும் ஏன் வஞ்சம் கொண்ட நெஞ்சத்துடன் குழிப்பறிக்க வேண்டும். இதன் பின்னால் பல சுயநல அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் தூபம் இருக்கலாம்.

பிரபாகரன் இறப்பு குறித்து இலங்கை அரசு சான்று கூட அளிக்காமல் இருக்க காரணம் ,காங்கிரஸ் தலைமையின் கோபம் தணியக்கூடாது என்பதாகவும் இருக்கலாம்.

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிறது இலங்கை,அதற்கு இந்திய பக்கமும் ஆதரவு இருக்கு என்பது தான் கொடுமை.

# இந்திய டிப்ளமோட்கள் இப்படி சர்ச்சையில் சிக்குவது குறித்து அடிக்கடி செய்திகள் வரும் பாருங்க. குறிப்பாக கவனித்து வைக்க தவறிட்டேன்.

டிப்ளமோட் பார்சல் என அனுப்பினால் சுங்கவரி,மற்றும் சோதனை கிடையாது.

# வேகநரி பொங்கிட்டு இருக்கார் ,அவரு தலையில கொஞ்சம் தண்ணி ஊத்திட்டு வரேன்.

---------------

வேகநரி,

எப்போடா மாட்டுவேன்னு இருக்கீர் போல :-))

இந்திரா காலத்திலும் இப்படி ஒன்று செய்யப்பட்டது என்றும்,அதை முன் மாதிரியாக வைத்து தான் ராஜிவ் காலத்தில் செய்யப்பட்டது என முன்னாள் ராணுவ அதிகாரியின் பேட்டியைப்படித்துள்ளேன், எப்போ என்னானு தேடிப்பார்த்து சொல்கிறேன்.

எல்லாம் நினைவில் இருந்து சொல்வது தான் , நான் என்ன இப்படிலாம் ஒரு நரியார் கேள்விக்கேட்பார்னு ,எல்லாத்தையும் குறித்து வைத்துக்கொண்டா அலைய முடியும் ...அவ்வ்!

//பொண்ணுக்கு அமெரிக்க குடியுரிமை என்று பிரதமரை குறிப்பிட்டது வவ்வாலின் ஆணாதிக்க போக்கு.//

இதுல என்ன ஆணாதிக்கம் கண்டீர்? மன்னு கூட இந்தியாவில் நல்ல ஆஃபர் வரவில்லை என்றால் அமெரிக்க குடியுரிமை வாங்கிட்டு செட்டில் ஆகி இருப்பார்,அவர் பல காலம் அமெரிக்காவில் பணியாற்றியவரே. முன்னர் ஒரு பதிவில் அவரது அயல்நாட்டு சேவை குறித்து சொல்லி இருக்கிறேன்.
--------------

ராஜ நடராஜன் said...

வவ்வால்!கீழேயிருந்து மேலே வேகநரியிலிருந்து பின்னூட்டம் தொடர்கிறேன்.

மன்மோகன் சிங் அமெரிக்காவில் உலக வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்தவரை நரசிம்மராவ்தான் தேடிக்கண்டு புடிச்சு கொண்டு வந்தார்.1990 வருடங்களின் இந்திய பொருளாதார மாற்றங்களுக்கு மன்மோகன் சிங்,ப.சிதம்பரத்தின் உழைப்பு இருக்குது.மன்மோகன் சிங் நல்ல பொருளாதாரவாதி மோசமான பிரதமர் என மறுபடியும் ஒருமுறை கூவிக்கிறேன்:)

வேகநரி உங்ககிட்ட தப்பு கண்டு பிடிச்சிட்டாரே:)விமான உணவுப்பொட்டலம் ராஜிவ் காந்தியின் காலகட்டத்தில்தான்.

வேகநரி!வவ்வாலின் பதிவில் இந்தியன் என்பவர் கொடுத்த ரீடிஃப் ஆவண தொகுப்புகள் சில இருக்கின்றன.பாருங்கள்.

http://vovalpaarvai.blogspot.com/2013/03/11.html

நம்பள்கி said...

இந்திரா,பார்த்தசாரதி, எம்ஜீயார் கூட்டணியில் இலங்கையில் உணவுப் பொட்டலங்கள் போட்டது உண்மை. விக்கியில் இல்லமால் இருக்கலாம். இல்லை ராஜீவ் என்று தவறுதலாக கொடுத்து இருக்கலாம். இல்லை இவரும் பொட்டலம் போட்டிருப்பார்.
நம் அரசியல்வாதிகள் எல்லாம் பொட்டலங்கள் போட்டதையே ஒரு சாதனையாக பேசுவார்கள். நம்ம எம்ஜீயார் கல்யாணம் காது குத்துக்கு நூறு ரூபாய் கொடுப்பதையே பெரிய வள்ளல் என்று சொல்கிறார்களே?

இலங்கைத் தமிழர்களின் மோசமான காலம் 1983 ஜூலை 1984 செப்டம்பர் வரை. எம்ஜீயார் எவ்வளவோ செய்து இருக்கலாம். பார்தசார்த்திகளும் மேனன்களும்...(ஹி! ஹி!! மேனன். உள்குத்து மற்றும் நுண்ணரிசியல் உண்டு!)...இருக்கும் வரை இலங்கை தமிழர்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்காது.

வேகநரி said...

ராஜ நடராஜன், நீங்க தந்த இணைப்பிற்க்கு போனேன்.ஒரு பெரிய இலங்கை சரித்திரம் புத்தகம் போல் உள்ளதே :) நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்.ஷிரானி பண்டாரநாயகே என்று நீங்க சொன்பவே நினைச்சேன் இலங்கை ஆரம்ப கால பிரதமர் சிறிமா பண்டாரநாயகே என்பது தான் எனக்கு தெரியும்.ஆனா புது பெயர் சொல்லுமளவிற்கு இலங்கை பற்றி நன்கு விஷ‌யங்கள் அறிந்தவர் நீங்க என்பது. ஆனால் இலங்கை தமிழர்கள் இலங்கையில் வாழும் இந்திய தமிழர்களுடன் பேசிய சர்ந்தர்ப்பம் உங்களுக்கு மிக குறைவு என்று நினைக்கிறேன்.ஒரு இலங்கை தமிழர் ஒருவர் குடும்பத்தோடு இலங்கை செல்ல முதல் தமிழகத்திற்கும் சுற்றுலா சென்றிருந்தார் அவர் திரும்பி வந்தபோ அவருடன் கதைத்த போது சொன்னார் தான் தமிழகத்தில் நின்ற நாட்களில் யாருடனும் அரசியல் கதைக்கவில்லை என்றும் கேட்ட கேள்விக்கு எல்லாம் ஆம் தான் பதில். சிங்களவங்க உங்களை ரொம்ப கொடுமை படுத்தினாங்களா?ஆம் தான் பதில் இல்லை என்று சொல்ல போய் அவர்களுக்கு பிடிக்காம தன்னை தாக்கிவிட்டா போன இடத்தில் எதற்க்கு பிரச்சனை என்று ஆம் தான் பதில் என்றார்.

நம்பள்கி,உணவுப் பொட்டலங்கள் போட்டு தன்னை வீரனாக விளையாட்டு காட்டியது ராஜீவ் காத்தி தான். ஆனா உணவுப் பொட்டலங்களால் இலங்கை தமிழர்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.
//எம்ஜீயார் கல்யாணம் காது குத்துக்கு நூறு ரூபாய் கொடுப்பதையே பெரிய வள்ளல் என்று சொல்கிறார்களே//
அப்படி தான் நான் மற்றவர்களிடம் இருந்து அறிகிறேன் ஆனா தமிழ்மணத்தில் மட்டும் அவர் வள்ளல் உத்தமர் என்று கட்டுரைகள் வருகின்றன. எம்ஜீயார் என்பவர் ஈழ மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஈழ ஆயுத குழுக்களுக்கு முதலாளிகளிடம் இருந்து பெற்ற இலஞ்ச பணத்தை அள்ளி கொடுத்தார் ஆதனாலே ஈழத்திலே மேலும் போர் நடந்தது நொண்டிகளும் விதவைகளும் மேலும் உருவானார்கள்.

ஜோதிஜி திருப்பூர் said...

இந்திரா காந்தி மீது பல விமர்சனங்கள் இருக்கலாம்,ஆனால் அந்நிய அழுத்தங்களுக்கு அவ்வளவாக அஞ்சுவது இல்லை.


இன்று மன்னு மோகனை அப்படி எல்லாம் செய்ய சொல்லுங்க பார்ப்போம்.பீதியில் பேதியாகிடுவார்,அமெரிக்க குடியுரிமை பெறாத அமெரிக்க குடிமகன் அவர் :-))
(பொண்ணுக்கு அமெரிக்க குடியுரிமை)

அப்பாடா இந்திரா காந்தியின் ஆத்மா இப்ப சாந்தியாகியிருக்கும்.