பதிவுகளிலும் துண்டு போட்டுக்க முடியும் என நான் தெரிந்து கொண்டது கவிதாயினி ராப் பின்னூட்டங்கள் மூலமாக.பதிவுகளில் துண்டு போட்டுக்கவே அரக்க பரக்க ஓடிவருகிறோம்.வாகனம்(பஸ்)பேருந்து நிலையம் வருவதற்கு முன்னே கொட்டக்கொட்ட விழித்து துண்டுபோட்டுக் கொண்டிருந்த கவிதாயினி ராப் எங்கே போனார் என்று தெரியவில்லை.எங்கிருந்தாலும் தமிழ்மணம் மேடைக்கு வரவும்.
இப்படி பதிவில் முதல் இடம் பிடிக்க துண்டு போட ஓடுவது மாதிரி தமிழகத்தில் வாகனங்களில் துண்டு போட்டுக்கொள்ளும் பழக்கம் மற்ற மாவட்டங்களில் எங்கிருந்து துவங்கியது என தெரியவில்லை.ஆனால் எனக்குத் தெரிந்து கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி-வால்பாறை வாகனம். பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பொள்ளாச்சி-வால்பாறை வாகனத்துக்கு துண்டு போட யாராவது முயற்சி செய்திருக்கிறீர்களா?
பொள்ளாச்சி-கோவைக்கு சுமார் 10 நிமிடத்திற்கு ஒரு முறை வாகனம் கிட்டும்.அதுவே மேற்கே போகாமல் தெற்கு நோக்கி வால்பாறை பயணம் செய்ய வேண்டுமென்றால் சுமார் 30 நிமிடம் அல்லது 45 நிமிடத்திற்கும் மேல்தான் ஒரு வாகனம் வந்து நிற்கும்.ஆழியார் அணைக்கட்டு வரையுள்ள சமதரைப் பகுதி தாண்டினால் மலை மேல் நோக்கிய,மரங்கள் அடர்ந்த ஊசி முனை வளைவுகளும் வாகன ஓட்டுனர் மிக கவனமாக ஓட்டவேண்டிய குறுகிய வளைந்த சாலைகள் கொண்ட நீண்ட பயணமது.
(முதல் இந்திய விமானி JRD Tata மாதிரி முதன்முதலாக துணிந்து மலைப்பாதையில் வண்டி விட்டவர் ABT மகாலிங்கத்தின் அப்பா நாச்சிமுத்து என நினைக்கிறேன்.)
பெரும்பாலான பயணிகள் பொள்ளாச்சி,ஆழியார்,அட்டைகட்டித் தாண்டி வாட்டர்பால்ஸ் வரையோ அல்லது அதையும் தாண்டி ரொட்டிக்கடை தாண்டி வால்பாறை வரை பிரயாணம் செய்யும் கால இடைவெளி சுமார் 3 மணி நேரமிருக்கும்.இவ்வளவு நீண்ட வளைந்த பயணத்திற்கு இடம்பிடிக்க வேண்டியே கோவை மாவட்டத்தில் முதல் முறையாக துண்டு போடும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாமென நினைக்கிறேன்.
மற்ற திசைகளிலும் நான் பயணித்திருந்தாலும் துண்டு போட்டோ அல்லது வண்டிக்குள் முண்டியடித்தோ பயணித்ததில்லை.நான் துண்டு போடவா பதிவு போடுவேன் என்று நினைத்து எனது கருத்துக்கு வலு சேர்க்கவோ என்னவோ நடிகர் மணிவண்ணன் ஒரு திரைப்படத்தில் "ஏண்டா பொள்ளாச்சி பஸ்க்கு அடிச்சிக்கிற மாதிரி அடிச்சிக்கிறீங்க என்பார் ".
பொள்ளாச்சி-கோவைக்கு வண்டி போகப் போக பிரயாணிகளை ஆள் சேர்க்கும் வாகன ஓட்டுனர் எதிர்மாறாக பொள்ளாச்சி வால்பாறை ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்து நிலையத்தில் வாகனத்தை நிறுத்தியவுடன் கம்பி போட்ட ஒரு ரூமுக்குள்ளோ அல்லது இருவரில் ஓட்டுனர் டீ குடிக்கவோ போய்விடுவார்.நீண்ட பயணத்தில் இடம் கிடைக்காதோ என்ற ஆதங்கத்தில் துவங்கியதே துண்டு போடுவதோ அல்லது முண்டி அடிப்பதோ பழக்கம்.
செக்கிங்க் இன்ஸ்பெக்டர் எனும் சோதனைப் பதிவாளார் அல்லது கலெக்சன் எனும் காசை வாங்கும் காசாளர் யாரோ ஒருவர் பொள்ளாச்சி வாகன நிலையத்தில் எப்பொழுதுமே இருப்பார்.வாகனம் பேருந்து நிலையத்தை வந்தடையும் இடைவெளியில் யார் முன்பு வருகிறார்களோ அவர்களுக்கு அந்த அந்த இருக்கைக்கான இடத்தில் உட்காரும்படியாக பயணச்சீட்டை முன்பே பயணிகளுக்கு தரலாமே.இதனால் முண்டியடித்தல் தவிர்க்கப் படுமல்லவா?
சேரன் போக்குவரத்துக் கழகம் கால காலமாய் நடந்துவரும் முண்டியடிப்பதையும்,துண்டு போடுவதையும் முன்னுரிமைச்சீட்டு தந்து நெரிசலைத் தவிர்த்தால் எதிர்காலத்தில் வாகன நிலையத்துக்குள்ளும் கணினிகள் புகுந்து விளையாடும் காலகட்டத்தில் வாகனக் காப்பிற்காக காத்திருக்கும் நேரத்தில் மக்கள் பதிவுகளுக்கும் வந்து துண்டு போட்டுக் கொள்ள வசதியாக இருக்கும்.செய்வார்களா?
34 comments:
தஞ்சாவூர்லயும் உண்டு, கிராமத்துக்கு போகிற அனைத்து பஸ்ஸிலும் துண்டு போடும் பழக்கம்.
நானெல்லாம் வாசப்படியே கதின்னு இருக்கிற ஆளு.
//தஞ்சாவூர்லயும் உண்டு, கிராமத்துக்கு போகிற அனைத்து பஸ்ஸிலும் துண்டு போடும் பழக்கம்.
நானெல்லாம் வாசப்படியே கதின்னு இருக்கிற ஆளு.//
உங்க வீட்டுக்குத்தான் வந்துகிட்டிருந்தேன்.அதுக்குள்ளே பழமை ஓட்டுப்பற்றி என்னமோ சொல்லிகிட்டுருந்தாருன்னு அங்கே போயிட்டேன்.இதோ இப்ப வாரேன்:)
என் கல்யாணத்தில் சாப்பிட எல்லோரும் துண்டு போட்டு இடம் பிடித்து உட்கார்ந்தார்கள் அவ்வளவு கூட்டம்... நானும் என் கணவரும் சாப்பிட செல்லும் போது இதை நானே பார்த்து எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.. :)
பொள்ளாச்சி இல் தான் முதலில் இடம் பிடிக்க குழந்தையை சன்னல் வழியே இட்டதை பார்த்தேன்.
//என் கல்யாணத்தில் சாப்பிட எல்லோரும் துண்டு போட்டு இடம் பிடித்து உட்கார்ந்தார்கள் அவ்வளவு கூட்டம்... நானும் என் கணவரும் சாப்பிட செல்லும் போது இதை நானே பார்த்து எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.. :)//
வாங்க கவிதா!அணில்குட்டி வேலையெல்லாம் புதுப்பொண்ணு கோலத்துக்கும் முன்னமே ஆரம்பிச்சிட்டீங்கன்றது உங்க பதிவுப் பக்கம் வந்தாலே தெரிகிறது.அதுக்குன்னு புதுமணப் பெண் கோலத்திலுமா சிரிப்பு அலும்பு:)
//பொள்ளாச்சி இல் தான் முதலில் இடம் பிடிக்க குழந்தையை சன்னல் வழியே இட்டதை பார்த்தேன்.//
நல்வரவு ஆகுக ஆண்ட்ரு சுபாசு!குழந்தையப் போட்டும் இடம் பிடிக்கிறாங்களா!!!சேரன் போக்குவரத்து இயக்குநர் விலாசம் கிடைத்தால் மனு தயாரிக்கலாம்.
//நானெல்லாம் வாசப்படியே கதின்னு இருக்கிற ஆளு.//
குடு குடுப்பையாரே! கண் நோக்கவா?காற்று வாங்கவா?சாகசமா?
பேச்சிலரா கம்பெனி கெஸ்ட் அவுஸ்லே (இதுவரை தமிழே வரலியே!!) இருந்தபோது, சனிக்கிழமை இரவு 11 மணிக்கு மேல் தொலைக்காட்சி பார்க்க நல்ல வியூக்காக துண்டு போட்டிருக்கோம்!!!
//பேச்சிலரா கம்பெனி கெஸ்ட் அவுஸ்லே (இதுவரை தமிழே வரலியே!!) இருந்தபோது, சனிக்கிழமை இரவு 11 மணிக்கு மேல் தொலைக்காட்சி பார்க்க நல்ல வியூக்காக துண்டு போட்டிருக்கோம்!!!//
தொலைக்காட்சிக்கு துண்டு போட்டுட்டு அப்படியே கோடம்பாக்கம் பக்கம் தாண்டியிருந்தீங்கன்னா எங்களுக்கெல்லாம் சிரிக்கிறதுக்கு நல்ல நடிகர் அல்லது கதைவசனகர்த்தா கிடைத்திருப்பார்!இப்பவும் ஒண்ணும் மோசம் போயிடல நாங்க:)
சேரன் போக்குவரத்துக் கழகம் கால காலமாய் நடந்துவரும் முண்டியடிப்பதையும்,துண்டு போடுவதையும் முன்னுரிமைச்சீட்டு தந்து நெரிசலைத் தவிர்த்தால் எதிர்காலத்தில் வாகன நிலையத்துக்குள்ளும் கணினிகள் புகுந்து விளையாடும் காலகட்டத்தில் வாகனக் காப்பிற்காக காத்திருக்கும் நேரத்தில் மக்கள் பதிவுகளுக்கும் வந்து துண்டு போட்டுக் கொள்ள வசதியாக இருக்கும்.செய்வார்களா? ///
தலையில துண்டைப்போடாம இருந்தாசரி
//சேரன் போக்குவரத்துக் கழகம் கால காலமாய் நடந்துவரும் முண்டியடிப்பதையும்,துண்டு போடுவதையும் முன்னுரிமைச்சீட்டு தந்து நெரிசலைத் தவிர்த்தால் எதிர்காலத்தில் வாகன நிலையத்துக்குள்ளும் கணினிகள் புகுந்து விளையாடும் காலகட்டத்தில் வாகனக் காப்பிற்காக காத்திருக்கும் நேரத்தில் மக்கள் பதிவுகளுக்கும் வந்து துண்டு போட்டுக் கொள்ள வசதியாக இருக்கும்.செய்வார்களா//
அதை செய்வது பெரிதல்ல. ஆனால் இப்போது இருக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை ஐந்து மடங்காக உயர்த்தப்பட்டால் தான் அது சாத்தியம். ஸ்டான்டிங்கில் வரும் கூட்டம் சிட்டிங்கில் வருடதை விட இரண்டு மடங்கு. அப்படி இருக்கும் போது முன்னுரிமைச்சீட்டு இருந்தாலும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.
நானும் பஸ்லே துண்டு போட்டு இருக்கேன்
//
பதிவுகளிலும் துண்டு போட்டுக்க முடியும் என நான் தெரிந்து கொண்டது கவிதாயினி ராப் பின்னூட்டங்கள் மூலமாக.பதிவுகளில் துண்டு போட்டுக்கவே அரக்க பரக்க ஓடிவருகிறோம்.
//
பஸ்ஸில தூண்டு போட்றது தெரியும்...மதுரையிலருந்து சென்னை பஸ்ஸுக்கு தீபாவளிக்கு முந்தின நாளு அவ்ளோ கும்பல் நிக்கும்...நாம எங்க வேட்டி, துண்டு யூஸ் பண்றோம்...அதனால அவசரத்துக்கு சட்டைய கழட்டி போட்றது தான்...கூட வர்ற பொண்ணுக்கும் சீட்டு போடணும்னா பனியனையும் கழட்டி கடாசிட்டு பேர் பாடியோட பஸ்ஸூ பின்னாடியே ஓட்றது தான்...:0))
ஆனா அது என்ன பதிவுல துண்டு போட்றது???
நீங்கெல்லாம் எப்படி பஸ்ஸுல துண்டு போட்டீங்கன்னே தெரியலயே...அப்ப நீங்க வேஷ்டி,துண்டு, முழுக்கை சட்டைன்னு போட்றவங்களா?? :0))
//
அதையும் தாண்டி ரொட்டிக்கடை தாண்டி வால்பாறை வரை பிரயாணம் செய்யும் கால இடைவெளி சுமார் 3 மணி நேரமிருக்கும்.
//
ரொட்டிக்கடை ஒரு ஊரு பேரா இல்ல டீக்கடையை தான் அப்படி சொல்றீங்களா??
//
வாகனம் பேருந்து நிலையத்தை வந்தடையும் இடைவெளியில் யார் முன்பு வருகிறார்களோ அவர்களுக்கு அந்த அந்த இருக்கைக்கான இடத்தில் உட்காரும்படியாக பயணச்சீட்டை முன்பே பயணிகளுக்கு தரலாமே.இதனால் முண்டியடித்தல் தவிர்க்கப் படுமல்லவா?
//
நல்ல யோசனை தான்...ஆனா, பொதுவா பஸ்சு டிக்கட்ல சீட்டு நம்பரே இருக்காதே??
அதுவில்லாம காசாளர் கிட்ட அடுத்த பஸ்ஸு எப்பன்னு கேட்டாலே ஏதோ பிச்சைக்காரனை பார்க்கிற மாதிரி பார்ப்பாரு....அவரு எங்க டிக்கட் கொடுத்து....ம்கூம்...எனக்கு நம்பிக்கையில்ல..
//சேரன் போக்குவரத்துக் கழகம் //
அண்ணா, இன்னும் இது நம்ம ஊர்ல இருக்குங்ளாண்ணா? பேரு மாத்திப் போட்டாங்கன்னு வடக்கால ஊட்டு முத்துசாமி, தை நோம்பிக்கு வந்தவன் சொன்னானுங்களே?!
துண்டு போட்டவுடன் அதை உஷார் செய்யும் ஆட்கள் நிறைய இருக்கின்றனர்..
செருப்பை கூட இடம் பிடிக்க போடுவார்கள்..:-)))
ஜன்னல் வழியே புகும் எமகாதக ஆட்களும் உண்டு..
சில சமயம், நாம் பேருந்தினுள் இருப்போம் அடுத்த பேருந்து நிறுத்தம் வரும் போது யாராவது இறங்க முயற்சிக்கும் போது இடம் காலியாகும் அதில் பேருந்தினுள் இருக்கும் நாம் உட்காருவதற்குள், நிறுத்தத்தில் இருந்து ஏறும் நபர் வந்து உட்காந்து வெற்றி புன்னகையுடன் சிரிப்பார்.
(அனுபவம் பேசுகிறது..நானும் கோவை தான்...கோபிங்கோ)
//தலையில துண்டைப்போடாம இருந்தாசரி//
வாங்க தேவா!நிலைமை அப்படித்தான் இருக்குது இல்ல.
//அண்ணா, இன்னும் இது நம்ம ஊர்ல இருக்குங்ளாண்ணா? பேரு மாத்திப் போட்டாங்கன்னு வடக்கால ஊட்டு முத்துசாமி, தை நோம்பிக்கு வந்தவன் சொன்னானுங்களே?!//
பேரு தீரன் சின்னமலைன்னு ஆயிடுச்சான்னு விசாரிச்சு சொல்றேன்.
//நானும் பஸ்லே துண்டு போட்டு இருக்கேன்//
இதோ பாருங்க அத்தாட்சி:)
//பஸ்ஸில தூண்டு போட்றது தெரியும்...மதுரையிலருந்து சென்னை பஸ்ஸுக்கு தீபாவளிக்கு முந்தின நாளு அவ்ளோ கும்பல் நிக்கும்...நாம எங்க வேட்டி, துண்டு யூஸ் பண்றோம்...அதனால அவசரத்துக்கு சட்டைய கழட்டி போட்றது தான்...கூட வர்ற பொண்ணுக்கும் சீட்டு போடணும்னா பனியனையும் கழட்டி கடாசிட்டு பேர் பாடியோட பஸ்ஸூ பின்னாடியே ஓட்றது தான்...:0))//
அப்ப ஊர் ஊருக்கு வாண வேடிக்கைதான் போல:)
//அதை செய்வது பெரிதல்ல. ஆனால் இப்போது இருக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை ஐந்து மடங்காக உயர்த்தப்பட்டால் தான் அது சாத்தியம். ஸ்டான்டிங்கில் வரும் கூட்டம் சிட்டிங்கில் வருடதை விட இரண்டு மடங்கு. அப்படி இருக்கும் போது முன்னுரிமைச்சீட்டு இருந்தாலும் ஒன்றுதான் இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.//
வாங்க அமரபாரதி!ஆக்கபூர்வமான உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.நான் என்ன சொல்ல வர்றேன்னா தற்போதைய சூழலில் டிக்கெட் முன்னுரிமை வந்தால் முன்னுரிமை சீட்டுப் பெறாதவர்கள் நமக்கு கால்சீட்டுத்தான்னாவது முண்டுவது குறையுமே என்பதுதான்.சினிமாத் தியேட்டர்,ரயில்வே என முன்னுரிமை சாத்தியப் படும் போது வாகனங்களில் ஏன் சாத்தியமில்லையென்பதுதான்.
//ஆனா அது என்ன பதிவுல துண்டு போட்றது???//
அப்ப பதிவுல துண்டு போட நீங்க ஓடறதில்லைன்னு தெரியுது.பதிவுல துண்டு போடறதுன்னா பதிவின் தலைப்பைப் பார்த்ததும் பதிவுக்கு ஓடி வந்திடனும்.வந்தப்புறம் பின்னூட்டப் பகுதியில கண்ணை நோட்டம் விடனும்.பதிவு மக்கள் யாரும் முதல் பின்னூட்டம் போடலின்னு வெச்சுக்குங்க.அய்!மீ த பர்ஸ்ட்ன்னு பின்னூட்டம் போடணும்.நானெல்லாம் துண்டு போட்டுக்கவான்னுதான் கேட்பேன்:)சிலசமயம் இது தேறும்.பல சமயங்களில் 1 வினாடிக்கும் மேலே மிஸ்ஸாகி விடும்.
//நீங்கெல்லாம் எப்படி பஸ்ஸுல துண்டு போட்டீங்கன்னே தெரியலயே...அப்ப நீங்க வேஷ்டி,துண்டு, முழுக்கை சட்டைன்னு போட்றவங்களா?? :0))//
எனக்குப் பெரும்பாலும் துணை புரிவது பேருந்து நிலையத்தில் வாங்கின குமுதம்,விகடன் போன்றவை.சில சமயம் கலருக பக்கத்துல நின்னுச்சுன்னு வச்சிக்கங்க!யோக்கியன் மாதிரி பே ன்னு நின்னுகிட்டு இருப்பேன்:)
//ரொட்டிக்கடை ஒரு ஊரு பேரா இல்ல டீக்கடையை தான் அப்படி சொல்றீங்களா??//
இல்லீங்கண்ணா அது ஒரு ஊரோட பேரு!
//நல்ல யோசனை தான்...ஆனா, பொதுவா பஸ்சு டிக்கட்ல சீட்டு நம்பரே இருக்காதே??
அதுவில்லாம காசாளர் கிட்ட அடுத்த பஸ்ஸு எப்பன்னு கேட்டாலே ஏதோ பிச்சைக்காரனை பார்க்கிற மாதிரி பார்ப்பாரு....அவரு எங்க டிக்கட் கொடுத்து....ம்கூம்...எனக்கு நம்பிக்கையில்ல..//
திருக்குறள்,மற்றும் வாசகம்ன்னு எழுதும் பேருந்து துறைக்கு எண் போடுவது ஒன்றும் பிரச்சினையில்லைங்க.மோசமா நடந்த ரயில்வே துறையே கோமாளின்னு நினச்சிகிட்டிருந்த லாலுவின் திறமையால் சீர்படும்போது வாகனத்துறை ஏன் சாத்தியமில்லை? இத்தனைக்கும் அரசுத்துறை வாகனங்கள் வருடலாப நஷ்ட கணக்கில் நஷ்டம் காட்டுவதேயில்லை.மேலும் இதற்கென்று ஆட்கள் நியமித்தால் புதிய வேலை வாய்ப்புத் திட்டங்கள் வேறு நிறைவேறும். ஏதாவது ஒரு ஊரின் துவக்கமாக பரிட்சார்த்த முறையிலாவது இதனை செயல்படுத்த வேண்டுங்க!
//துண்டு போட்டவுடன் அதை உஷார் செய்யும் ஆட்கள் நிறைய இருக்கின்றனர்..
செருப்பை கூட இடம் பிடிக்க போடுவார்கள்..:-)))//
வாங்க கிரி!உஷார் ஆட்களை நான் பார்த்திருக்கேன்.செருப்பு கூட என்பது எனக்கு புது தகவல்.
//ஜன்னல் வழியே புகும் எமகாதக ஆட்களும் உண்டு..//
அதற்கான உடல்வாகெல்லாம் எனக்கு இருந்ததில்லைங்க.இதை நீங்கள் சொல்லும்போது சினிமாத் தியேட்டருக்கு வரிசையில் தோள் மீதும் தலை மீதும் ஏறி முன்னேறி டிக்கெட் சாகசம் செய்பவர்கள் நினைவு வருகிறது:)
//சில சமயம், நாம் பேருந்தினுள் இருப்போம் அடுத்த பேருந்து நிறுத்தம் வரும் போது யாராவது இறங்க முயற்சிக்கும் போது இடம் காலியாகும் அதில் பேருந்தினுள் இருக்கும் நாம் உட்காருவதற்குள், நிறுத்தத்தில் இருந்து ஏறும் நபர் வந்து உட்காந்து வெற்றி புன்னகையுடன் சிரிப்பார்.//
சின்னச் சின்ன சந்தோசங்கள்:)
//(அனுபவம் பேசுகிறது..நானும் கோவை தான்...கோபிங்கோ)//
கிரி!உங்க ஊரைப் பத்தி நீங்க சொல்லித்தான் நாங்க தெரிஞ்சுக்க வேண்டுமாக்கும்:)எத்தனை பதிவுகள் மேயறோம்?
பதிவுக்கு வந்தமைக்கு நன்றி!!
அடடே, நீங்கள் நேற்று போட்டுச் சென்ற துண்டுக்குப் பின்னால் இம்மாம் பெரிய கதை இருப்பது தெரியாது போச்சே:)!
//அடடே, நீங்கள் நேற்று போட்டுச் சென்ற துண்டுக்குப் பின்னால் இம்மாம் பெரிய கதை இருப்பது தெரியாது போச்சே:)!//
வாங்க!வாங்க!முன்பு ஒருமுறை தென்னைமரம்,சூரியன்னு படம் போட்டது நினைவுக்கு வந்தது.அதே மாதிரி இப்பொழுது எந்தப் படம் இருக்கும் என்ற எண்ணத்தில் வந்தேன்.அப்பன்,புள்ள பாசம் இயல்பாகவே இருக்குது.
Post a Comment