Followers

Saturday, December 11, 2010

மீண்டும் சென்னை பயணம்

சென்ற பதிவின் தொடர்ச்சியாக சில விசயங்களை பதிவில் அங்கலாய்ப்பதற்கும் தமிழக யதார்த்தத்துக்கும் நிறையவே வேறுபாடுகள் இருப்பது அனுபவ பூர்வமாக புரிகிறது.அதாவது தமிழ் அகதிகளை சந்திப்பது என்ற எண்ணம் ஈடேறாத விதமாக சில தகவல்கள் சேகரிக்க முடிந்தது தமிழகம் அடைக்கலம் தரும் காரணத்தால் இவர்கள் ஒரு இடத்தில் தங்கியிருப்பார்கள்.இந்திய அரசில் தமிழகத்தின் பங்காக இவர்களை பாதுகாக்கிறார்கள் என்பதற்கும் அப்பால் அரசு கட்டமைப்பின் நியதிகளாக இவர்களை யாரும் சுதந்திரமாக பார்க்க இயலாது என்பது அனுபவ பூர்வமாக தெரிந்தது.
 
புழல் எனுமிடத்தின் சுற்று வட்டாரங்களுக்கு வியாபாரம் நிமித்தமாக செல்லும் ஒருவரிடம் முன்தகவலாக எத்தனை பேர் தங்கியிருக்கிறார்கள் என்று தெரிந்து வரச் சொன்னால் சுமார் 1500 குடும்பங்கள் தங்கியிருக்கிறார்கள் என்றும் வட்ட தாசில்தார் போன்றவர்களின் கையொப்ப மிட்ட கடிதத்துடன் வருகை தருவதற்கான காரணம் பெயர் விபரம் மற்றும் சந்திப்பவர்களின் எண்ணிக்கை போன்ற விபரங்கள் தேவை என்ற தகவலை கொண்டு வந்தார்.
 
 இதற்கு மாற்றாக கட்சிகள் ஏதாவது ஒன்றின் துணையுடன் வேண்டுமானால் முகாமுக்குள் போகமுடியுமென்றார்.நான் இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்ற சுயபரிதாபம் மட்டும் இருக்கிறது இப்போது.தனி ஆவர்த்தனம் பதிவுலகில் மாத்திரமே இயலுகிறது.ஆக்கபூர்வமாய் யாராவது செயல்பட்டால் இணைந்து கரம் கொடுக்க விரும்புகிறேன்.
 
வலுவான இயக்கமாக சீமான் போன்றவர்கள் வந்தால் மட்டுமே மாற்றங்களோடு எதிர்கால நம்பிக்கையையும் இவர்களுக்கு ஊட்டமுடியும்.நீதிமன்ற தீர்ப்புக்கும் சீமானின் சிறையடைப்பிலிருந்து புன்னகையோடு வெளி வந்ததற்கும் வாழ்த்துக்கள். சீமானின் மீள்வருகை தமிழக அரசியல் களத்தில் இன்னும் புயல் கிளப்புமா அல்லது மீண்டும் சிறை வாழ்க்கை அடக்கி வாசிக்க சொல்லுமா என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.மாற்று அரசியலுக்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

சீன சார்பாளர்கள் மகிழ்வதற்கும் சில நல்ல செய்திகள் சென்னைக்குள் கொட்டிக்கிடக்கிறது.கொண்டு வந்த கைபேசியில் பேச இயலவில்லையென்று ரிச்சி ஸ்ட்ரீட் என்ற தமிழ் தெருவுக்கு போனேன். லண்டன் வாழ் தமிழர்கள் ஆபரண கடை என்றும் தங்க மாளிகையென்றும் தொலைக்காட்சியில் விளம்பரப்டுத்தினால் நகர் முழுதும் ஆங்கிலத்தில் பேசுவதை அப்படியே ஜுவல்லரி மார்ட்,மெடிக்கல்ஸ்,கிளாத் செண்டர் என தமிழ் படுத்தி கடைகளின் பெயர்களை வைத்திருக்கிறார்கள்.ரிச்சி ஸ்ட்ரீட்டீல் முழுக்கவும் சீனா,ஹாங்காங் மின்பொருட்களின் ஆக்கிரமிப்பு பழுதான பொருட்களை பழுதுபார்க்கும் நிபுணத்துவம் வாய்.ந்தவர்களாக 5 அமெரிக்க டாலருக்கும் 2 குவைத் தினாருக்கும் எனது கைபேசியை சரிசெய்ய பணிபுரியும் இளைஞர்கள்.வன்பொருட்களில் சீனாவும் மென்பொருளில் இந்தியாவும் என்பது எழுதப்படாத புதிய உபயோகிப்பாளர் பொருளாதாரமாகிவிட்டது. முந்தைய அதே பர்மா பஜார் அதே தோரணையில் கால்குலேட்டருக்கு பதிலாக புது வடிவமாக கடிகாரம்,கைபேசிகளை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அனைத்து திரைப்படங்களும் 25,20 பேரத்தில் கிடைக்கின்றன.

என்னமோ தலப்பா கட்டு தலப்பா கட்டுங்கிறாங்களேன்னு ஒரு தலப்பா கட்டு கடையில் நுழைந்தால் தலைப்  பாவை ஒன்றையும் காணோ\ம்.பீகாரியோ, குஜராத்திப்பையனோ கொஞ்சம் வடக்கு வாடையுடன் தமிழ் பேசி பிரியாணி போட்டான்.முதலும் கடைசியுமான தலைப்பா பிரியாணி என முடிவு செய்துவிட்டேன்.சென்னை கண்ணன்களே!அண்ணன்களே! ந:ளபாகம் என்பது கோயம்புத்தூர் பக்கம்தானுங்ண்ணா!வானம்பாடிகள் பாலாண்ணாவுடன் சாப்பிட்ட சரவணபவன் கூட சோபிக்கவில்லை.ரசிக்கும் ஒரே விசயம் அவரது பதிவு மாதிரியே நிறைய கேரக்டர் கைவசம் வைத்திருக்கிறார் கூடுதல் புன்னகையோடு.
 
சாப்பாடு முடிந்து தலைமையகம் பக்கம் முதல் முறையாக போனால் தமிழக செயலக கட்டிடம் அசரவைக்கிறது.கூடவே ஒரு மார்பிள் கல் கட்டிட வரிசையிலிருந்து தெத்துப்பல் மாதிரி வெளியே எட்டிப்பார்க்கிறது.கழக கண்மணிகள் யாராவது வழிதெரியாம இந்தப்பக்கம் வந்தீங்கன்னா பொதுப்ப்ணித்துறை அமைச்சரிடம் சொல்லி வையுங்க.கூடவே ஈழ்த்தமிழர்கள் விசயத்தில் அரசியல் குள்ளநரித்தனங்களை மட்டுமே இங்கே விமர்சிப்பதோடு கருணாநிதிக்குப்பின்னும் தமிழக செயலக கட்டிடம்,திருவள்ளுவர் சிலை,வள்ளுவர் கோட்டம் போன்றவை என்றென்றும் அவரது பெயர் சொல்லும் என்ற எனது பக்கம் சாராமையையும் சொல்லி வையுங்க.பதிவுலகின் நேர்மையான விமர்சனங்கள் ,எண்ணங்கள் கடல் கடந்து வானம்கடந்து தேசம்கடந்துசென்னை தொட்டு சிங்கப்பூர் மலேசியா வளைகுடா ஐரோப்பா அமெரிக்கா கனடா என்று உலக பவனி வரும்போது கருத்துப்பரிமாற்றங்கள் தமிழகத்துக்குள்ளேயே பவனி வராதது மட்டுமே தமிழக கட்சிகளின் பலம் எனலாம்.குடும்ப அரசியலில் பணம் காய்ச்சி மரங்களாய் ஆகிவிட்டதால் தி.மு.க விளம்பரங்களை விட திருமா அழைக்கிறார் விளம்பரங்களே சுவர்களில் அதிகம்.இதே மாதிரி தமிழ்மணம் அழைக்கிறது,தங்கிலிஷ் அழைக்கிறது என்று விளம்பரம் வந்தால் பதிவர்களின் கல்லா கட்டும்.

இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் பெண்கள் பெரும்பாலும் முகமூடித் திருடிகள் மாதிரி துப்பட்டா ஹெல்மெட்,குளிர்கண்ணாடி சகிதம் வண்டி ஓட்டுகிறார்கள்.ஆண்கள் இரும்புத்தலையன்கள் மட்டுமே.அமெரிக்க, ஜப்பான்,கொரியா,ஐரோப்பிய கார்களின் வளைகுடா பொருளாதாரத்தில் சென்னை சாலைகளும்,கார்களும் என்னை கவரவில்லை.

மவுண்ட் அண்ணா சாலையைக் கடந்து மெரினா போவதற்கும் முன் சிட்டி செண்டர் போன்ற இடங்களின் காசு புரளுமிடம் எப்படியிருக்குதுன்னா சுத்தியும் கொசு,கூவம்,ஒரே நாளுக்குள் அழுக்காகும் உடைகளில் படியும் தூசுகளில் நாங்கள் வாழ்ந்தாலும் படுக்கறது பஞ்சு மெத்தை கொப்பளிக்கிறது பன்னீர்......இல்ல...இல்ல....மினரல் வாட்டர்ங்கிற மாதிரி இருக்குது:) இப்போதைய பொருளாதார வளர்ச்சியில் நேர்மை, லஞ்சமின்மை  ,பங்கீடு,நிர்வாகம்,சுயநலமின்மை போன்றவைகளை சீராக்கும் போது வளமான இந்தியாவி தமிழகத்தின் பங்கு என்பது கனவல்ல,நிகழக்கூடிய சாத்தியம்தான்.தமிழகத்தின் மற்ற மாவட்டக்காரர்களுக்கு கிடைக்க இயலாத ஒரு அனுபவம் சென்னைவாசிகளுக்கு உண்டு.அது சென்னை துறைமுகம் நோக்கி செல்லும் ஏற்றுமதி லாரிகளின் பவனி. மேற்கத்திய நாடுகளிலும்,வளைகுடாவிலும் கார்கள் பயணத்தில் ட்ராபிக் ஜாம் என சொல்லப்படும் வாகன நெரிசல்களின் அனுபவம் பலருக்கு இருக்ககூடும்.அனைத்துப்பொருட்களுக்கும் வெளிநாடுகளையே நம்பியிருக்கும் நாடுகளில் ஒன்றான குவைத்தில் கூட  கன்ட்டெய்னர் லாரிகளைப் பார்த்ததில்லை.தமிழக ஏற்றுமதி லாரிகளின் வரிசை பிரமிக்க வைக்கிறது.உள் நாட்டு உற்பத்தி திறன் மற்றும் உபயோகம் நீங்கலாக ,வெளிநாட்டுக்கு ஏற்றுமதி,பல தொழில்நுட்பங்களில் சுயதேவை பூர்த்தியெனும் நிலை.மனிதவள மேம்பாடு இன்னும் பல பொருளாதார நலன்கள் இருந்தும் கூட அனைத்திலும் பஞ்சப்பாட்டு நிலை.இயற்கை மழை,பசுமை என்று அத்தனை நலன்களைய்ம் வாரியிறைக்கிறது.அப்படியிருந்தும் புழல் ஏரி நிரம்பி விட்டதென்று மதகை திறந்து விட்டு நீரை கடலுக்குப் போ என்று துரத்தி விட்டார்கள்.அப்புறம் வெயில் காலத்தில் தண்ணீர் தண்ணீர்  என கத்த வேண்டியது.இல்லைன்னா ஏண்டா தண்ணி கொடுக்கலன்னு கர்நாடகாக்காரன் கூட சண்டைக்குப் போக வேண்டியது.அதுவும் தனக்கு அரசியல் ஆதாயமிருந்தா மட்டுமே ஆட்டுக்குட்டித் தொண்டர்களை தூவி விடுவது.
 
மூர்மார்க்கெட்டில் ஒரே ஒரு பெண்மணியின் கெட்டவார்த்தை தவிர சென்னைமொழி கேட்கவில்லை.வாழக தமிழகம்.முந்தைய பிச்சைக்காரர்களையும்,தொழு நோயாளிகளையும் இதுவரை பார்க்கவில்லை. ஒருவேளை முந்தைய காலங்களில் நடைப்பயணம்,பஸ் பயணம் என்பதால் எளிதாக நேரடியாகவோ அல்லது கண்ணிலோ பட்டிருக்கலாம்.இப்போதைய பயணவேகத்தில் உட்காருமிடங்கள் இடம் மாறிவிட்டனவா இல்லை பிச்சைக்காரர்கள் இல்லா தமிழக தலைநகரம் என பெருமைப்பட்டுக்கொள்ளலாமா என சென்னைவாசிகள் தகவல் பின்னூட்டம் சொன்னால் நல்லது.அண்ணாசமாதி,எம்.ஜி.ஆர் சமாதிப் பக்கம் கூட போய்ப்பார்த்தேனே ஒருத்தரையும் காணவில்லை.ஒருவேளை மழைக்கு ஒதுங்கி விட்டார்களா என்றும் தெரியவில்லை.கண்ணகியைக் காணவில்லையென்று தமிழக முதல்வர் விளம்பரம் கொடுத்தாரான்னு தெரியவில்லை.காந்தி தாத்தாவுக்கும் பக்கத்தில் யாரோ மஞ்சக்கலருல நிற்கிறாஙகளேன்னு போய்ப்பார்த்தால் சிவாஜி சிலையாம்.என்னமோ நாங்கெல்லாம் சிவாஜியை சினிமாவிலேயே பார்க்காத மாதிரித்தான் இவர்தான் சிவாஜின்னா நம்பிடுவோமா என்ன? 


தனிமனித தேவைகளாக அத்தனையும் பாக்கெட்டுகளாகவும்,பவுடர்களாகவும் கிடைக்கின்றன.வீடு தேடிவரும் நெல்லிக்காய்,நெல்லிக்காய் என்ற ஒரு அம்மாவின் குரலுக்கு வேண்டாம் எனும் கோலம் போடும் பெண்களின் குரலே அதிகம்.வீட்டிலும் சரி பதிவுலகிலும் சரி கண்ணுக்கு இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் விடுங்கன்னு சொல்லிகிட்டே இருக்கேன். கேட்கறதுக்குத்தான் ஆட்களில்லை.முன்பு போட்ட சோடாபுட்டி கண்ணாடியில்லாமலே பார்வையும் எழுத்தும் தெளிவாக தெரிவதற்கு விளக்கெண்ணெய் ஆண்டவரின் கருணையும் ,பதிவர் தெகா கொடுத்த யோகா பயிற்சி மாதிரியான குட்டிக்கரணங்களும் கூட காரணமாக இருக்கலாம். குவைத்தில் சீயக்காய்த்தூள் தேடி அலைந்தும் கிடைக்காமல் சென்னையில் தேடியதில் சிகைக்காயோடு செம்பருத்திப்பூ ,ரோஜாப்பூ ,மகிழம்பூ ,வெட்டிவேர் ,பூங்ககாய் கொட்டை,கேழ்வரகு,பச்சை பயிறு,பச்சஅரிசி,வெந்தயம், வாசனைப்பட்டை ,கார்போக அரிசி ,ம கிச்சலி கிழங்கு,கோரை கிழங்கு என ஹெர்பல் மிக்ஸ் என்ற பெயரில் சாம்பு கிடைக்கிறது.இதை அரைத்து தர யந்திரத்தோடு கடையும் இருக்கிறது.ஆனால் உபயோகிப்பாளர்கள் மட்டுமே குறைவு என நினைக்கிறேன்.சிகைக்காய் உபயோகித்து விட்டு ஜாதக பலனை பின்னால் சொல்கிறேன். சிந்தனையாளர்கள்,நேர்வகிடு கனவான்களுக்கு இந்த சிகைக்காய் சித்தமருத்துவம் பொருந்துமா எனத் தெரியவில்லை.இருந்தாலும் போனதே போச்சு ஜான் என்ன முழம் என்ன என்று உபயோகித்துப்பார்க்கலாம்.

சுடுதண்ணியைக் காலுல ஊத்திகிட்டவன் மாதிரி சென்னை மேலோட்டம் பார்க்கிற எனக்கே தலைநகரின் தங்கப்புதையலா பலசெய்திகள் நசரோட வளவளத்தா பாணியில் அப்படியே வரிகள் கொட்டுது.அடைமழைக்கும் அஞ்சாத சென்னைப்பதிவர்கள் இன்னும் கூட அடிச்சு(அடிச்சுக்காம) ஆடலாம்.

அடுத்த வாரம் கோவை,திருப்பூர் பயணம்.ஜோதிஜி தவிர ஏனைய பதிவர்கள் யாராவது அந்தப்பக்கம் சிறுவாணி தண்ணீர் கொடுப்பதாயிருந்தால் சந்திக்கலாம்.

12 comments:

உமர் | Umar said...

//பதிவர்கள் யாராவது அந்தப்பக்கம் சிறுவாணி தண்ணீர் கொடுப்பதாயிருந்தால் சந்திக்கலாம்//

தண்ணீர் என்ன, பல்சுவை விருந்தே கொடுக்குரதுக்காக நம்ம வால்பையன் உணவகம் ஒன்று திறக்கின்றார். கோவை RS புரத்தில் நாளை திறப்பு விழா. நாளை இயலாவிட்டாலும், கோவையில் இருக்கும் சமயம் போய் வாருங்கள்.

---
என்னுடைய மின்னஞ்சல் முகவரியினை முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் கொடுத்திருந்தேனே. பார்த்தீர்களா? இயன்றால், இன்று அல்லது நாளை சந்திக்கலாமா?

Chitra said...

மளமளவென தமிழகம் பற்றிய குறிப்புகள் ...... காட்சிகள் கண் முன் தெரியும் வண்ணம், நல்லா எழுதி இருக்கீங்க. :-)

vasu balaji said...

கூடு திரும்பும் பறவைகளுக்கு எங்களால் தரமுடிந்தது இவ்வளவே. என்றோ ஒரு நாள் நீங்கள் எங்களை அகதிகளாகக் காணக் கூடுமோ. முகாமுக்குள் இருக்கும் அவர்களுக்கும் வெளியிலிருக்கும் நமக்கும் என்ன பெரிய வித்தியாசம்? அவர்களுக்கு அது கட்டுப்பாடு. எங்களுக்கு சுரணையின்றி நாங்களே போட்டுக் கொண்டுள்ள சங்கிலிகள். வெறுத்துத்தான் போகிறது. இனிமையான சந்திப்பு சிறிது நேரமேயாயினும், உங்களின் அக்கறையுடனான வருத்தங்கள் ரொம்பவே பாதித்தன.

ராஜ நடராஜன் said...

////பதிவர்கள் யாராவது அந்தப்பக்கம் சிறுவாணி தண்ணீர் கொடுப்பதாயிருந்தால் சந்திக்கலாம்//

தண்ணீர் என்ன, பல்சுவை விருந்தே கொடுக்குரதுக்காக நம்ம வால்பையன் உணவகம் ஒன்று திறக்கின்றார். கோவை RS புரத்தில் நாளை திறப்பு விழா. நாளை இயலாவிட்டாலும், கோவையில் இருக்கும் சமயம் போய் வாருங்கள்.

---
என்னுடைய மின்னஞ்சல் முகவரியினை முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் கொடுத்திருந்தேனே. பார்த்தீர்களா? இயன்றால், இன்று அல்லது நாளை சந்திக்கலாமா?//

கும்மி!சற்று நேரத்துக்கு முன்புதான் பாலாண்ணா உங்கள் மின்னஞ்சல் பற்றி சொன்னார்.நான் மின்னஞ்சல் திறக்கவேயில்லை.கோவை,நெய்வேலி
பயணத்துக்குப் பின் மீண்டும் சென்னை திரும்புவேன்.நிச்சயம் உங்களை சந்திக்கிறேன்.வால்பையன் தகவலுக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//மளமளவென தமிழகம் பற்றிய குறிப்புகள் ...... காட்சிகள் கண் முன் தெரியும் வண்ணம், நல்லா எழுதி இருக்கீங்க. :-)//

ஊர் சுத்திவிட்டு வெட்டிப்பதிவு போடுவது எப்படின்னு உங்களை மாதிரி முன்னோடிகள்கிட்ட கத்துக்கிட்டதுதான்:)

ராஜ நடராஜன் said...

//கூடு திரும்பும் பறவைகளுக்கு எங்களால் தரமுடிந்தது இவ்வளவே. என்றோ ஒரு நாள் நீங்கள் எங்களை அகதிகளாகக் காணக் கூடுமோ. முகாமுக்குள் இருக்கும் அவர்களுக்கும் வெளியிலிருக்கும் நமக்கும் என்ன பெரிய வித்தியாசம்? அவர்களுக்கு அது கட்டுப்பாடு. எங்களுக்கு சுரணையின்றி நாங்களே போட்டுக் கொண்டுள்ள சங்கிலிகள். வெறுத்துத்தான் போகிறது. இனிமையான சந்திப்பு சிறிது நேரமேயாயினும், உங்களின் அக்கறையுடனான வருத்தங்கள் ரொம்பவே பாதித்தன.//

பாலாண்ணா!நீங்கள் சலித்துக்கொள்ளும்படியான யதார்த்த சூழலே இங்கே இருக்கின்றது.பதிவுகளில் கொட்டித்தீர்த்துக்கொள்ள முடிகிறதே தவிர கருத்து சுதந்திரத்துடன் வலைப்பின்னல்களையெல்லாம் நம்மால் இப்போதைக்கு உடைக்கவே முடியாது போலவே தெரிகிறது:(

ஹேமா said...

நடா....ஊருக்குப்போயிருக்கீங்களா.
பத்திரமா வந்து சேருங்க !

a said...

அதிவேக பயண குறிப்பு...........

தேவன் மாயம் said...

சென்னை பற்றிய அலசல்கள் வெகு சரளமாக எழுதியிருக்கிறீர்கள்! ஆதங்கங்களுக்கும், கவலைகளுக்கும் இடையே வாழ்க்கை இனிமையாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. காரைக்குடி பக்கம் வர சந்தர்ப்பமிருப்பின் வரவும்.

vinthaimanithan said...

சென்னையையாக் குறை சொல்லிட்டு போறீங்க... இருங்க இருங்க...ஜோதிஜிகிட்ட சொல்லி நொய்யலாத்துத் தண்ணி கொடுக்கச் சொல்றேன்.

Thekkikattan|தெகா said...

செம ரவுண்ட் அப்... ஈழ தமிழர்களின் கூடாரங்களை நினைத்தால் ரத்தக் கண்ணீர்தான்.

பார்க்கலாம் சீமானுக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்கிதான்னு. இளைஞர்களி கையில்தான் இருக்கிறது அந்த விஷன்! ரசினி, விசய் கூட்டம் யோசிச்சு சீமானோட கை கோர்த்தா நல்லாருக்கு. To me it looks like, Seeman has a sensible head on his shoulder with right understanding about the current situation and its gravity...

//பதிவர் தெகா கொடுத்த யோகா பயிற்சி மாதிரியான குட்டிக்கரணங்களும் கூட காரணமாக இருக்கலாம். //

ஆ! தெக்கி உங்க கூட சுத்தி இருக்கேனே... :))

Anonymous said...

சென்னையில் ஏனடா? தமிழில் எழுத உத்தரவுப் போட்டார்களோ... தமிழும் இல்லை ஆங்கிலமும் இல்லை. ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதியுள்ளார்கள். இது தமிழுக்கும் அவமானம், ஆங்கிலத்துக்கும் அவமானம், பேசாமல் இந்தியில் எழுத சொல்லி இருக்கலாம். இனி தமிழ் வரி வடிவத்திலு மட்டுமில்லாமல், தமிழ் சொல்லிலும் பெயர் வைக்க புதிய சட்டம் ஒன்றை ஜெயலலிதா வந்து தான் இட வேண்டுமோ என்னவோ.. பதிவு அருமை.