Followers

Wednesday, May 18, 2011

ஜாலியன்வாலாபாக்கா!முள்ளிவாய்க்காலா!

தலை...ப்பு தேடியதில் பெரும் தடுமாற்றம்.இந்த பதிவை வெறுமனே எழுதாமல் மே மாத தமிழ் இனப்படுகொலையின் ஆற்றாமையை நினைவு படுத்த வேண்டியாவது எழுதும் தேவைப்படுகிறது.

வலிகள் சுமந்த கடந்த இரு வருடங்களாய் போராட்ட முகமாய் சில சமயம் ஒருங்கிணைந்தும் பல நேரங்களில் தோல்வியின் அயர்ச்சியில் துவண்டுமே போயிருந்தோம்.போரில் துன்புற்ற,முள்வேலிக்குள் அடைக்கப்பட்ட மக்களுக்கு எதுவும் செய்ய இயலாத படி இலங்கை அரசின் இரும்புக்கரம் இந்திய காங்கிரஸ் அரசுடன் வலுவாக இருந்தமையால் மக்கள் துயரங்களுக்கு நேரடியாக உதவ இயலவில்லை.இந்திய இறையாண்மையென்ற பெயரில் குஜராத் பூகம்பத்திற்கு   கொட்டிக்கொடுக்க முடிந்த நம்மால் இனம்,மொழி என்ற பந்தத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஒன்றுமே செய்ய இயலவில்லை.

உதவ முயன்ற புலம்பெயர் தமிழர்கள் அனுப்பிய கப்பல் பொருட்களும் கடலாடி கரைதேடி சோர்ந்து போனதே மிச்சம்.அங்கே துவங்குகிறது ராஜபக்சேவின் மனிதாபிமானத்தின் லட்சணம். ஐ.நா அறிக்கைக்கும்,தமிழக அரசியல் களநிலை மாற்றங்களுக்கும் முன்பு இலங்கை அரசு அபரீதமான தன்னம்பிக்கையிலும்,அதிகாரத்திலும்,சர்வாதிகாரத்திலும்,தமிழ்மொழி, பண்பாட்டு,கலாச்சார உணர்வை சிதைப்பதில் போரில் வென்றவர்கள் என்ற பெயரிலும்,அரசுமுறை ராஜதந்திர முன்னெடுப்புக்களே உலக அரங்கில் எடுபடுமென்பதாலும் அமெரிக்கா முதல் தமிழக சாட்சியாக தமிழக எம்.பிக்கள் பல்காட்டி பொன்னாடை வரை மிக சாதுர்யமாக தங்கள் காய் நகர்த்தலை நகர்த்திக்கொண்டிருந்தார்கள்.

அப்படியும் ராஜபக்சேவின் அரசு இயந்திரத்துக்கு எதிராக அமிதாப் பச்சன் IIFA திரைப்பட விழாவுக்கு போகாமல் செயததும், லண்டனிருந்து ராஜபகசேவை துரத்தியடித்ததிலும், டைம்ஸ் பத்திரிகையிலிருந்து ராஜபக்சே  பெயரை நீக்கியதும்,ஐ.நா போர்க்குற்ற அறிக்கையில்  ராஜபக்சே குழுவினர் சிக்கியிருப்பதும் ராஜபக்சே குழுவினருக்கெதிரான சதுரங்க விளையாட்டில் தமிழர்கள் காய் நகர்த்திய நிலையில் இருக்கிறோம்.இப்பொழுது போர்க்குற்றங்களிலிருந்து தப்பிக்க இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஷ் இந்தியாவின் துணை தேடி ஓடுவதும் ஜெயலலிதாவுடன் இணைந்து செயல்பட இலங்கை விருப்பம் தெரிவிப்பதுமென இலங்கையின் புது நகர்வுகள் நிகழ்கின்றன

கட்சி,ஜாதி,மதம்,அகம்,புலம் என்று பிரிந்து கிடக்கும் அவல நிலையால் மட்டுமே இப்போது ஏழெட்டு கோடிக்கும் மேலான தமிழர்களின் உணர்வை 2கோடி சொச்சம் சிங்களவர்கள் தின்று கொன்று வென்று விட்டதாய் அல்ஜசிரா முதல் அமெரிக்கா வரை சென்ற மாதம் வரை ராஜபக்சே கொலை சிரிப்பும் வீங்கிய கண் தர்க்கமும் செய்து கொண்டதை அடிவயிறு எரிய   நம்மால் பார்த்து சகித்துக்கொள்ள முடிந்தது.

போரின் துவக்க கால கட்டத்தில் முள்ளிவாய்க்காலின் முள்வேலிக் கம்பி மக்களை மட்டுமே காண முடிந்தது.ஆனால் போரின் அவலங்கள் அதனை விட உக்கிரமானதென அதன் பின் வந்த சாட்சி ஆவணங்கள் இன்று மனிதம்,இதயம்,இணையம் என அங்கங்கே ஒளிந்து கொண்டுள்ளது.

ஈழப்படுகொலையின் அச்சு ஆவணம்

இயக்குநர் ராம் காட்சி  தளத்தில் சக இலக்கியவாதிகளோடு எழுதுவதை பகிர்ந்து கொண்டதோடு முத்துக்குமார் தீக்குளிப்பிற்கு பின்பு நிகழ்ந்த கட்சி சார்ந்த அரசியலை சொல்லியிருந்தார்.அதற்கு பின் ஈழ மக்களுக்காக என்ன செய்யலாம் என்று பிரபா என்பவரை அறிமுகப்படுத்தி விட்டு பதிவுலகிலிருந்து காணாமல் போய்விட்டார்.

பிரபாவின் என்ன செய்யலாம் என்ற புத்தகம் ஈழ இனப்படுகொலைகளுக்கான ஒரு ஆவணப்புத்தகம் என்பதோடு ஐ.நா அறிக்கையின் சாட்சியாக மட்டுமல்லாமல் உலகின் மன சாட்சியாய் எப்பொழுதும் விளங்கும் என நம்புகிறேன்.
 பட உதவி: முள்ளிவாய்க்காலின் கோரங்கள்...பதிவர் கே.ஆர்.பி செந்திலிடம் கேட்காமலே நட்பாய் இணைத்தது.

நெஞ்சிலே கனல் பற்றுகிறது.ஆங்கிலேயர் ஆட்சியின் அதிகாரத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் நடந்தால் அது இந்தியாவின் தேச விடுதலையின் அடையாளமா?
 பட உதவி: ஜாலியன்வாலாபாக் படுகொலை...கூகிளும் நட்பே!

அதுவே மறு உருவில ஈழமண்ணில் அப்பாவி மக்களாய் பெண்கள்,குழந்தைகள்,முதியவர்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல் குண்டு வீச்சுக்களில் கொல்லப்பட்டால் தீவிரவாத முத்திரையோடு தண்டனையின் அடையாளமா? அடக்குமுறைக்கு எதிராகவும், அந்நியத்தனத்துக்கும் பகத்சிங்கும், சுபாஷ் சந்திர போஸும் போராடினால் விடுதலை வீரர்களா? பிரபாகரனும்,பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்லுக்கு வசியபபட்ட ஈழப்போராளிகள் தமது மண்ணின் சுதந்திரத்துக்காக போராடினால் தீவிரவாதமா? மனிதர்களல்ல...வரலாறு மட்டுமே மனிதர்களை சுதந்திர வீரர்களாக பதிவு செய்ய தகுதி பெற்றது.

 ஈழ மண்ணின் சரித்திரத்தின் சில வரிகள் மட்டுமே இங்கே பதிவு செய்யப்படுகிறது.இன்னும் பதிவு தொடரென வரும்...

13 comments:

saarvaakan said...

//மனிதர்களல்ல...வரலாறு மட்டுமே மனிதர்களை சுதந்திர வீரர்களாக பதிவு செய்ய தகுதி பெற்றது.//
மிக சரியான வார்த்தைகள்

Bibiliobibuli said...

ராஜ நட, பதிவுலகிலும் சரியான திசையில் பயணிக்கிறோம்! பதிவுலகின் வழியும் யதார்த்த வழிமுறைகளுக்கு பலம் சேர்க்கும் உங்களதும் பலரது முயற்சிக்கும் நன்றிகள்.

கனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன் said...

கொடிய நாளின் கோர நினைவுகளை சுமப்பது மட்டுமில்லாமல் நடந்த நிகழ்வுகளுக்கு தண்டனை வாங்கி தர ஓர் அணியில் திரள்வோம்.

ராஜ நடராஜன் said...

////மனிதர்களல்ல...வரலாறு மட்டுமே மனிதர்களை சுதந்திர வீரர்களாக பதிவு செய்ய தகுதி பெற்றது.//
மிக சரியான வார்த்தைகள்//

மீள் வருகைக்கு நன்றி சார்வாகன்!ஈழப்போரும்,சம உரிமை சுதந்திர உணர்வும் பல சுழற்சிகளில் சுற்றி வந்து இப்பொழுதே சரியான திசையில் பயணிக்கிறது.அதற்கான அர்ப்பணிப்புக்கு கால அவகாசம் இல்லாவிட்டாலும் தமிழர்களின் மொத்த ஆதரவு அவசியம்.

ராஜ நடராஜன் said...

//ராஜ நட, பதிவுலகிலும் சரியான திசையில் பயணிக்கிறோம்! பதிவுலகின் வழியும் யதார்த்த வழிமுறைகளுக்கு பலம் சேர்க்கும் உங்களதும் பலரது முயற்சிக்கும் நன்றிகள்.//

ரதி!தமிழகத்தைப் பொறுத்த வரையில் ஈழ உரிமைக்கான குரலும்,ஆதரவும் நிறையவே இருக்கின்றது.இனி வரும் காலமும் அதனை நிரூபிக்கும்.புலம் பெயர் தமிழர்களும் பதிவுலகோடு இணைந்து குரல் கொடுப்பது இன்னும் வலு சேர்க்கும்.பதிவுலகில் இருக்கும் ஆதரவாளர்களின் முயற்சியும்,எழுத்தும் தொடரும்.நன்றி.

ராஜ நடராஜன் said...

//கொடிய நாளின் கோர நினைவுகளை சுமப்பது மட்டுமில்லாமல் நடந்த நிகழ்வுகளுக்கு தண்டனை வாங்கி தர ஓர் அணியில் திரள்வோம்.//

கனவுகளையே மொழிபெயர்க்கும் வலுவா:)

மக்களுக்கான உதவிகள் சரியாக அவர்களைப் போய்ச் சேரும் சூழலுக்கு முதலில் முயல்வோமே!

நிகழ்வுகளுக்கு தண்டனையும்,மக்களோடு இயல்பாக பழகும் சூழலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.எது முந்துகிறதென பார்க்கலாம்.

ஹேமா said...

எங்கள் தியாகச் செம்மல்கள் மீது உறுதி தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !

ராஜ நடராஜன் said...

//எங்கள் தியாகச் செம்மல்கள் மீது உறுதி தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !//

இந்த குரலை ஈழமண்ணுக்குள்ளிருந்தும் உரக்கச் சொல்லும் நிலை வரும் போது இது சாத்தியமான ஒன்றே ஹேமா!

ராஜ நடராஜன் said...

ஹேமா!பேரணியில் கலந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன்.இந்த சுதந்திரம் தன் சொந்த மண்ணில் இல்லை என்பது எவ்வளவு பேரவலம்!

இதனாலேயே இலங்கை தனிமைப்படப் போகிறது பாருங்கள்!

Bibiliobibuli said...

ராஜ நட, நான் தமிழக தமிழர்கள், ஈழத்தமிழர்கள் என்று பிரித்து நன்றி சொல்லவில்லை. பதிவுலகில் வெறுமனே எழுதியும், புலம்பியும் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்க கூடாதல்லவா. அதனால் சொன்னேன்.

ராஜ நடராஜன் said...

//ராஜ நட, நான் தமிழக தமிழர்கள், ஈழத்தமிழர்கள் என்று பிரித்து நன்றி சொல்லவில்லை. பதிவுலகில் வெறுமனே எழுதியும், புலம்பியும் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்க கூடாதல்லவா. அதனால் சொன்னேன்.//

ரதி!இதில் தவறு இருப்பதாக நான் கருதவில்லை.ஒருவரை சந்திக்கும் போது எந்த ஊர் என்று கேட்பதும் சென்னை,மதுரை,கோவை என நாங்கள் அறிமுகப்படுத்திக்கொள்வதும் வழக்கத்தில் உள்ள ஒன்றுதான்.மொழிக்கும் அப்பால் பிரிவினையாக எதையும் நான் கருதவில்லை.

http://thavaru.blogspot.com/ said...

ராஜநட இன்னும் ஆழ செல்லுங்கள் எங்கேயோ ஒரு கோடு தென்படும் பதிவாக்க அன்புடன் வேண்டுகிறேன்.

ராஜ நடராஜன் said...

//ராஜநட இன்னும் ஆழ செல்லுங்கள் எங்கேயோ ஒரு கோடு தென்படும் பதிவாக்க அன்புடன் வேண்டுகிறேன்.//

தவறு!ஒரு சரித்திரத்தின் கரடு முரடான பாதையின் பக்கங்களை சில பதிவுகளில் அடக்கி விட முடியுமா?

ஆற்றாமை மட்டுமே இங்கே வெளிப்படுகிறது.பார்க்கலாம் மன அலைகள் எப்படி வெளிப்படுகிறதென்று.