Followers

Sunday, July 31, 2011

இந்திய தொலைக்காட்சி வரலாற்றில்

ரிமோட்டைத் தட்டினோமா,தொலைக்காட்சியைப் பார்த்தோமான்னு இருக்கும் நம்மவர்களுக்கு மிகவும் பிரபலமான வாசகம்ன்னு தலைப்பை படிப்பவர்களுக்கு நினைப்பு எங்கே போகும்ன்னு நல்லாவே தெரியும்!கடந்த சில தினங்களாக டிஸ்கவரி சேனல் பெயரில் சன் தொலைக்காட்சி தெரிகிறது.(Frequency 11804 / 27500 tune up).Fox Newsல உதயா தொலைக்காட்சி தெரிகிறது.ஏதாவது முர்டாக்குடன் மெர்ஜரா அல்லது மெர்சலான்னு தெரியவில்லை.இப்படி விலாசம் விட்டு விலாசத்துக்கு தொலைக்காட்சிகள் போவது ஏன் என்ற தேடலில் இந்திய தொலைக்காட்சிகள் வரலாறு பற்றி  விக்கிபீடியா சொல்லியவைகளில் சில எனது இடைச்செருகலுடன்...

டெரரா டெரஸ்டிரியல் டெலிவிசன் டெல்லியில் பரிட்சிக்கும் முறையில் 1959ம் வருடம் உருவானது.ஆனால் இதனை முந்திக்கொண்டு 1965ல் உருவானது ஆல் இந்தியா ரேடியோ.அவரவர் மலரும் நினைவுகளில் கருப்பு வெள்ளை தொலைக்காட்சியும்,ரேடியோ காலங்களும் நினைவில் நிச்சயம் இருக்கும்.வடக்கு வாழ்கிறது என்ற காலமென்பதால் தொலைக்காட்சி டெல்லியை அடுத்து பம்பாய்க்கும் அமிர்தசரஸ்க்கும் 1972ல் அதிகரிக்கப்பட்டது.1975ம் வருடம் வரை ஏழு நகரங்கள் மட்டுமே தொலைக்காட்சியை நகர்ப்புற வாசிகளுக்கு காட்டிக்கொண்டிருந்தன. தொலைக்காட்சியையும் ரேடியோவையும் தனித்தனியாக மாற்றி விடலாமென்ற புத்திசாலித்தனம் 1976ல் வந்தது.1980ல் சின்னத்திரை புரோகிராம் என்ற நிகழ்ச்சிகள் உருவாகின.தேசிய அளவில் 1982ல் தொலைக்காட்சிகள் காண்பிக்கப்பட்ட நேரத்தில் கலர்ல பிலிம் காட்டினா எப்படியிருக்குமென்ற யோசனை தோன்றியது.தூர்தர்ஷன் என்ற அரசு நிறுவனம் மட்டுமே இயங்கிய காலங்கள் அவை.இப்போதைய மெகா சீரியலுக்கு அஸ்திவாரம் போட்டதே ராமயாணம்,மகாபாரத தொடர்களே.இந்திய வரலாற்றிலேயே என்ற பெயர் இந்த இரண்டு தொடர்களுக்கே பொருந்தும்.சன் தொலைக்காட்சிக்கு அல்ல.ஒரே சேனலின் பட்டனை தட்டி உட்கார்ந்த தொலைக்காட்சி தொல்லைக்காட்சியாக இருக்கிறதே என்று சலித்தவர்களுக்கு இன்னுமொரு சேனல் தருகிறேன் என பாதிநேரம் இந்திய தொடர்களும் மீதி நேரம் மாநிலம் சார்ந்தவைகளை அறிமுகப்படுத்தியது தூர்தர்ஷன்.இவையே DD2 மற்றும் DD மெட்ரோ.


இந்திய தாராளமயமாக்கலும் உலக சந்தையும்:

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமிடையே இருந்த பனிப்போர் முடிந்து விட்ட காரணத்தால் 1991ல் புதிய சமூக,பொருளாதார மாற்றங்கள் உருவாகின.இன்றைய இந்தியாவின் பொருளாதார மாற்றங்களுக்கு முக்கிய காரணம் மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவே எனலாம்.கூடவே உலக வங்கி பொருளாரதர நிபுணரான மன்மோகன் சிங்கை நிதிமந்திரியாக்கிய பெருமையும் நரசிம்ம ராவுக்கே.நல்ல நிதிமந்திரியாக மோசமான பிரதம மந்திரியாக மன்மோகன் சிங்கின் தற்போதைய தொலைக்காட்சி நிறுவனங்கள் 2010 கணக்குப்படி 515.இவற்றில் கையில காசு வாயில தோசையெனும் பணம் கொடுத்து பார்க்கும் சேனல்கள் 150.விஜயகாந்தெல்லாம் பதிவுகள் படிச்சா இந்தக் கணக்குகளே நான் சொல்லிக்கொடுத்துத்தான் மன்மோகன் சிங்குக்கே தெரியுமென மனதுக்குள் மகிழ்ச்சி கொள்வார்.

கேபிள் சங்கர்...இல்ல இல்ல கேபிள் டெலிவிசன்கள்:

223 மில்லியன் வீடுகளில் 134 மில்லியன் வீடுகளின் பொழுதுபோக்கே தொலைக்காட்சி பார்ப்பதுதானாம்.இதுல 103 மில்லியன் வீடுகளுக்கு கேபிள் மற்றும் சாட்டிலைட் தொலைக்காட்சி வழங்கப்படுகிறது.இதில் 20 மில்லியன் வீடுகள் DTH சந்தாதாரர்கள். இதன் வளர்ச்சி இன்னும் தொடர்கிறது.உலக சந்தை மயமாக்கலில் உள்ளே நுழைந்தவை ரூபர்ட் முர்டாக்கின் ஸ்டார் தொலைக்காட்சி,எம்.டி.வி, போன்றவை.இதனைத் தொடர்ந்து ஸ்டார் மூவிஸ்,பி.பி.சி,பிரைம் ஸ்போர்ட்ஸ் போன்ற வெளி நிறுவனங்கள் இந்திய மார்க்கெட்டில் இடம் பிடித்தன.இதனைக்கண்டு நானும் ஆட்டத்துக்கு வாரேன் சொல்லி நுழைந்தவை சி.என்.என்,டிஸ்கவரி,நேசனல் ஜியோகிராபிக்,ஸ்டார் ஸ்போர்ட்ச்,இ.எஸ்.பி.என் V மற்றும் ஸ்டார் கோல்டு.

தனியார் மயமாக்கலில் கேபிள் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியதில் ஜீ டி.விக்கு நிறைய பங்குண்டு.1992ல் தென்னகத்தை தொலைக்காட்சி மயமாக்கியது சன் தொலைக்காட்சியே.20க்கும் மேலான தென்னக தொலைக்காட்சி நிறுவனங்களில் சன் தொலைக்காட்சி மட்டுமே DTH ஐ அறிமுகப்படுத்தியது.இவைகளுக்குப் பின்னால அரசியல் சித்துவிளையாட்டுக்கள் ஊரறிந்த உண்மையென்பதால் அவற்றுக்குள் போகாமல் தென்னிந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று சன் தொலைக்காட்சி மார் தட்டிக்கொள்ளும் தகுதி கொண்டதே.இதனைத் தொடர்ந்து தமிழில் ராஜ் தொலைக்காட்சி,மலையாளத்தில் ஆசியாநெட் போன்றவை 1994 முதல் தங்கள் ஆட்டத்தை துவங்கி இன்னும் சலிக்காமல் ஆடிக்கொண்டிருக்கின்றன.இந்திய தொலைக்காட்சியின் வளர்ச்சி மாதிரியே ஐரோப்பா,கனடாவில் புலம் பெயர்ந்த தமிழர்களும் நிறைய தரம் மிக்க தொலைக்காட்சிகளை கொண்டுவந்தார்கள்.இவைகள் பெரும்பாலும் விடுதலைப்புலிகளின் ஆதரவு கொண்ட நிலையாலும்,குறுகிய அளவிலான தமிழ் பார்வையாளர்கள்,பொருளாதார சிக்கல்கள் போன்றவற்றால் வந்தும் மறைந்தும் போயுள்ளன.தீபம்,ஜிடிவி போன்றவையும் கலைஞர் தொலைக்காட்சியிடம் கடன் வாங்கும் ஐங்கரன் போன்றவைகள் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

2001ல் HBO மற்றும் ஹிஸ்டரி சேனல் போன்றவையும் 2003ல் நிக்கெலோடியன்,கார்ட்டூன் நெட்வொர்க்,VH1,டிஸ்னி,டூன் டிஸ்னி போன்றவை இந்திய சந்தையில் நுழைந்தன.

இவைகளுக்கும் அப்பால் 2003 லிருந்து என்.டி.டி.வி,சி.என்.என் ஐபிஎன் மற்றும் ஆஸ் தக் போன்ற இன்னும் பல தொலைக்காட்சிகள்  புயல் கிளப்பிக்கொண்டிருக்கின்றன.இப்ப கடைசியா வந்து புதுசு கண்ணா புதுசு பிலிம் காட்டுபவை யூடிவி,யூடிவி பிந்தாஸ்,ஜூம்,கலர்ஸ்,9x மற்றும் 9x எம்.இந்த பெயர்களை நானே இப்பத்தான் கேள்விப்படுகிறேன்.

என்னா மேட்டரு...இல்ல மீட்டரு?

டி.வி பார்த்தோமா பதிவு போட்டோமோன்னு இல்லாமல் சில தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் நுட்பங்களே பீட்டர் கலந்த மீட்டர்.

DART (Doordarshan Audience Research Team) எனப்படும் மெட்ரிக் அளவே இதுவரை தூர்தர்ஷனில் அளவிடப்படுகிறது.கிராமத்துப்புறத்தில் எத்தனை பேர் தொலைக்காட்சி பார்த்தார்கள் என்ற அளவீடுகளை சரிபார்க்கும் ரேட்டிங் சிஸ்டம் என சொல்லப்படும் அளவீடு கொண்டது தூர்தர்ஷன் மட்டுமே.
TAM & INTAM

ORG-MARG என்ற நிறுவனம் INTAM (Indian National Television Audience Measurement) என்ற அளவீட்டை 1994ல் அறிமுகப்படுத்தியது.இது சுயநலநோக்கோடு தனது ஏகாதிபத்தியத்தைக் குறைப்பதற்காக கொண்டு வந்தது என்பதோடு அளவீடு,செயல்பாட்டுத்திறன்,நகரங்கள்,மாநிலங்களை முழுமையாக கொண்டு செல்லவில்லையென தூர்தர்ஷன் குற்றம் சுமத்தியது.அந்த கால கட்டங்களில் கோடுகள் போட்டு பிலிம் காட்டியது இதனால்தானா?

1997ல் AC Nielsen என்ற நிறுவனத்தின் கூட்டுத்தயாரிப்பில் பார்வையாளர்களின் கணக்கை சேமிக்கும் TAM அளவீடைக் கொண்டு வந்தது.டாம் மற்றும் இண்டாம் இரண்டுமே ஒரே புரோகிராமுக்கு வேறு வேறு அலைவரிசை அளவீட்டைக் காண்பித்ததால் இரண்டு அளவீடுகளையும் ஒன்றிணைத்து 2001ல் TAM அளவீடு செயல்பட்டது.

தாராளமயமாக்கலில் 2004ல் நம்ம அமெரிக்க NRI அண்ணன்மார்களின் உதவியால் Audience Measurement Analytics Limited (aMap) என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது.துவக்கத்தில் முதலீடுகளின் பலன் மற்றும் தொழில்நுடபம் இந்தியாவுக்கு எதிராகுமோ என்ற அச்ச உணர்வுக்கும் அப்பால் TAMன் ஏகாதிபத்தியம் உடைக்கப்பட்டது.டாம் வாரத்துக்கு ஒரு முறை தகவல் சேமிப்பு என்ற நிலையை விட இமேப் தினமும் தகவல் சேமிப்பு என்று சிறப்பாக செயல்பட்டது.

Broadcast Audience Research Council என்ற நிறுவனம் அந்தக்கணத்தில் யார் எந்த தொலைகாட்சியைப் பார்க்கிறார்கள் என்ற நுண்ணிய தகவலை 2008லிருந்து சேகரிக்கும் சேவையை துவங்கியது.இந்த அளவீடுகளையெல்லாம் தாண்டி இப்பொழுது 4G மற்றும் HD என்ற அளவுக்கு தொலைக்காட்சி நுணுக்கங்கள் வளர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Conditional Access System என்ற கார்டைப் போட்டு set-top box (STB) ரீசிவரில் தொலைக்காட்சியைக்காண்பது ஐரோப்பிய போன்ற நாடுகளில் வலுவாக இருந்து பின் அதன் ஏகாதிபத்தியம் கூட வரலாறாகப் போகும் படியான ரிசீவர்கள் வந்து விட்டன.

டாட்டாவும் மாறன்களும் DTHக்குப் போய் அடிச்சிக்கலாமா?

ஒரு பெரிய அண்டா மூடி மாதிரி ஒரு தகர டப்பா,LNB,50 மீட்டர் போல கேபிள் வயர் இருந்தா போதும்.DTH தயார்.வளைகுடாக்களில் வீடுகளின் மேல்மாடி முழுதும் அண்டாமூடிப் பெட்டிகளே அதிகம்.இந்த தொழில் நுட்பம் பத்து வருடங்களுக்கும் மேலாகவே சர்வ சாதாரணமாகவே இருக்கும் ஒன்று.(நண் பர்களா சேர்ந்து டி.விய மொட்டைமாடிக்கு கொண்டு போய் அண்டாமூடியை இங்குமங்குமா நகர்த்தியே சிக்னல் புடிச்சிருக்கோம்.)இந்திய தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை,மக்கள் தொகை,இதன் மூலம் வரும் வருமானம் போன்றவற்றில் கணக்குப்போட்டுத்தான் மாறன் டாட்டாவோடு சண்டைக்குப் போனாரா அல்லது 2Gதான் முக்கிய காரணமா?இந்தியாவில் கேபிள் ஆபரேட்டர்களே நல்ல சேவையைத் தருகிறார்கள்.இதற்கும் மேல் ஆள் ஆளுக்கு அண்டா மூடி வைக்கும் அளவுக்கு மொட்டை மாடியில் இடவசதி போதாது என நினைக்கிறேன்.இது பல்லு இருந்தும் பக்கோடா சாப்பிட முடியாத நிலை.
 
இந்தியாவில் இன்னும் முறைபடுத்தப் படாமல் வருமான வரி ஏய்ப்புக்கு உகந்த தொழில் தொலைக்காட்சி நிறுவனம் அமைப்பதென்று ஆங்கிலப் பத்திரிகை செய்தியொன்று வெளியிட்டது(பெயர் நினைவில்லை)2G பரபரப்பில் செய்தி சூடுபிடிக்கவில்லை.இந்த பதிவு போடும் போது அமாவாசைல பதவி விலகுனா நல்ல சகுனம்ன்னு இடையூரப்பா இன்று ராஜினாமா கொடுத்து விட்டார்.இந்த மாதிரி அரசியல்வாதிகள் இருக்கும் வரை தொலைக்காட்சி டவர்ல மழைதான் அலைதான்.

Tuesday, July 26, 2011

அரியாசன அதிகாரத்தில் விதைக்காமல்...

அரசியல் அதிகாரமில்லாத தி.மு.கவை விமர்சிப்பதில் இப்பொழுதெல்லாம் சலிப்பே தோன்றுகிறது.எதிர்க்கட்சியாக இருக்கும் தே.மு.தி.க ஆளும் கட்சியுடன் இணக்கமாக அடக்கி வாசிப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தாமல் நல் ஆட்சி புரிவதற்கு வழிவகுக்கும் நிலையில் குட்டையைக் கிளப்பும் பழைய பழக்கத்தில் தி.மு.கவே சலசலப்புக்களை அறிக்கைகளின் வாயிலாகவும் பொதுக்குழுக் கூட்டமெனவும் வெளிப்படுத்துகிறது.அறிக்கைகளும், பொதுக்குழு கூட்டமும் ஒரு ஜனநாயக கட்சியின் தேவையென்ற போதிலும் தேவைகளின் தேவைகள் குறித்த விமர்சனங்களை வைத்தாக வேண்டியுள்ளது.

இந்த பதிவின் தேவையும் கூட  அரச அதிகாரத்தில் சுய சொறிதலாக பாராட்டு விழாக்களைக் கண்டு கழித்து வெறுமனே இருந்து விட்டு அதிகார அடக்குமுறைகளை ஏவி விட்டு இப்பொழுது பல் பிடுங்கப்பட்டு பதுங்கி கிடக்கும் நிலையில் தமிழீழம் குறித்த மக்கள் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற கோவை பொதுக்குழு தீர்மானம் குறித்தே.

பக்கச் சார்புகளற்ற சமூக,அரசியல் நன்மை தீமைகளை விமர்சிக்கும் குணம் மட்டுமே தமிழர்களை நல்வழிப்படுத்தும்.தி.மு.க என்ற இயக்கம் அதன் வேர்களை நன்றாகவே ஊன்றியுள்ளதென்பதை கோவை பொதுக்குழு கூட்டம் தெரிவிக்கிறது.அதே சமயத்தில் புன்முறுவல் முகங்களை மு.க முதல் யாரிடத்திலும் காணவில்லை.அரசியல் அதிகாரம் சார்ந்தே உலக அரசியல் அனைத்தும் இயங்குகின்றன.மக்களின் தேவைகளையும், எவை வேண்டாம் என்பதையும் ஜனநாயகத்தில்  மக்கள் குரலும் அரசியல் அதிகாரமும் தீர்மானிக்கின்றன.
 
எனவே அதிகார காலத்தின் இறுதியில் தனது குடும்பத்தையும்,சுய கௌரவத்தையும் கூட காப்பாற்ற முடியாத நிலையில்,அதிகார துஷ்பிரயோகங்கள் பல்லைக்காட்டிச் சிரித்துக் கொண்டிருக்கும் தற்போதைய தோல்வி நிலையில் கோவை தீர்மானங்கள் என்ன நலனை தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் கொண்டு வந்து சேர்க்கும்?20 அம்சத் திட்டங்களுக்குள் ஈழ பொது வாக்கெடுப்பு என்பதெல்லாம் இன்னும் யாரை ஏமாற்றும் வேலை?

தமிழர்களாய் ஈழக்கொலை செய்தோம்!கொலைக்கு உடந்தையாக இருந்தோம்!தொடர்ந்தெழுந்த தெருக்குரல்களின் போதேல்லாம் மௌனியாக இருந்து விட்டு உடல் ஊனம் மட்டுமல்ல,ஆத்மாவே முடமாகிப் போன பின் ஈழத்தமிழர்களுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என கூட்டத்தோடு கோவையில் கோயிந்தா போடுகிறீர்களே!இப்போதாவது புத்திவந்ததே என்று சிலர் சமரசம் செய்து கொண்டாலும் இதோ ஜெயலலிதா சொல்லும் இலங்கைக்குப் பொருளாதாரத் தடை  கம்பீர அதிகாரக் குரலுக்கும் மூன்றாம் கட்சியாய் முடமாகிப்போன பல் பிடுங்கப்பட்ட தீர்மானத்தின் வலுவுக்குமுள்ள வேறுபாடுகள் புரியாத காலத்திலா நாம் வாழ்கிறோம்?ஜெயலலிதாவால் உரக்கச் சொல்லும் பொருளாதார தடையை ஏன் கருணாநிதியால் வாய் திறக்க முடியவில்லை?உலகமே இன்று போர்க்குற்றவாளியென கைநீட்டும் ராஜபக்சேவை கோபப்படுத்தக்கூடாதென்ற கோழைத்தனமல்லவா கருணாநிதியிடமிருந்து வெளிப்பட்டது?அவசர காலத்தை தாண்டியும் தி.மு.க பயணித்ததற்கான காரணங்களும் 2Gக்குள் முங்கி முழித்துக்கொண்டிருக்கும் காரணங்களும் ஒன்றா? 

மக்கள் மறதியானவர்கள் என்பதை விட அவரவர் வாழ்வு சார்ந்த ஓட்டத்தில் தில்லாலங்கடி அரசியலை உற்றுநோக்கும் நேரமில்லாதவர்களாகிப் போனார்கள் என்பதே உண்மையாக இருந்தும் கூட தேர்தல் முடிவுகள் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே பிரதிபலித்தது.இனியும் தேவை இது போன்ற தீர்மானங்கள் அல்ல.இன்னும் கனலும் கோபங்கள் தணிக்கும் ஈழமக்கள் முன் தி.மு.கவின் மன்னிப்பு. முந்தைய நாற்காலி மிராசுத்தனம் மன்னிப்பு கேட்கும் மனோபாவத்துக்கு  இடம் கொடுக்காது என்றால் இனி தி.மு.க நாதியற்றே போகட்டும்.இது என் சாபம்!தமிழீழம் சார்ந்த மக்கள் வாக்கெடுப்பு செயல் திறனை ஈழ மக்களிடமும், ராஜபக்சே அரசிடமும்,இப்போது தமிழக ஆட்சியில் அமர்ந்திருக்கும் அ.தி.மு.கவிடமும்,ஐ.நா ச்பையிடமும் இப்பொழுது விட்டு விடுவோம்.ஈழ பொது வாக்கெடுப்புக்கான தார்மீக குரலை இந்த கணத்தில் தி.மு.க இழந்து விட்டது.

தி.மு.க புதிய நிலைகளில் இயங்கியதால் மட்டுமல்ல...தமிழ் உணர்வு சார்ந்த ஒருவன் தலைவனாய் இருக்கிறான் என்ற பழைய மூட நம்பிக்கையின் காரணமாகவும் அவசர காலத்தையும் தாண்டிய இயக்கமாக தி.மு.கவை பறைசாற்றிக்கொள்ள முடிந்திருக்கிறது.முந்தைய காலத்து தகவல் கொடுப்பது மட்டுமே என்ற நிலைமாறி இப்போதைக்கு தகவல் கொடுக்கலும் வாங்கலுமாய் மாறிப்போய் விட்டதால் 2Gயைக் கடந்த காலங்களும் அவசர நிலைக்கால கட்டங்களைத் தாண்டி வருமா என்பது கருணாநிதிக்குப் பின் மதிப்பீடு செய்ய வேண்டியவை.நமது தொலைக்காட்சிகளை விட கேரளத்து ஆசியநெட் செய்திக்காரன் தி.மு.கவை அங்குலம் அங்குலமாக கல்லூரி தவளை பரிசோதனை செய்கிறான்.

இதுவரையிலான அரசியல் ஆக்கிரமிப்பில் கருணாநிதியின் ஆளுமையும்,நா சுழற்றும் வல்லமையும் இருந்த மாநிலத்து மன்னன் மனப்பான்மை காலம் போய் மாநிலத்து ஆதரவுக்கு மத்தியில் காங்கிரஸ்க்கு கப்பம் கட்டும் பந்தம் விடவே விடாது என்ற அடிமை கொள்கைக்குப் பின்னால்,குறுநில மன்னர்களாய்,குண்டர்களின் தலைவனாய்,திகார் அரசிகளாய் குடும்ப அரசியலுக்குள் தமிழகம் இனியும் பவனி வருவதை விட,இதுதான் சமயமென வெற்றிடத்தில் மீன்பிடிக்க நினைக்கும் காங்கிரஸையும் கடந்து புதிய அரசியல் களங்களை இனியாவது தமிழகம் தோற்றுவிக்குமா?இல்லை அப்போலோவில் ஆகாயம் கடந்து பயணிக்கும் வேகத்தில் இனியும் கழுதையிலும்,குதிரையிலுமே  தமிழகம் தொடர்ந்து பயணிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
  டிஸ்கி:இந்த பதிவை இண்ட்லியில் இணைக்கும் சகாவுக்கு தன்யனானேன் சொல்வேன்:)

Monday, July 25, 2011

முகமது அலி vs ஜார்ஜ் ஃபோர்மென்

சில தினங்களுக்கு முன்பு கொபா அர்ஜெண்டினா கால்பந்து போட்டியைத் தேடிக்கொண்டு போய் ESPN தொலைக்காட்சியில் ஜார்ஜ் ஃபோர்மென் என்பவருடன் முகமது அலி சண்டையிட்ட(Rumble in the Juncle) என்ற கிளாசிக்கல் வரிசை குத்துச்சண்டைப் போட்டியை காண நேர்ந்தது.கிரிக்கெட்டுக்கு சச்சின்,கால் பந்தாட்டத்துக்கு மரடோனா மாதிரி குத்துசண்டைக்கு முகமது அலி எனலாம்.சிம்சன்,கோலியாத் பழைய பைபிள் கதை மாதிரி முகமது அலியை விட அதிக உயரமும்,உடல் வலுவும் ஹெவி வெயிட் சேம்பியனுமான ஜார்ஜ் ஃபோர்மெனிடம் சண்டையிட்டவர்கள்.... டாஸ்மாக்ல இரண்டாவது பெக் அல்லது அதிகமாப் போனா மூன்றாவது பெக்ல மட்டையப்போடற மாதிரி நாக் அவுட் ஆனவர்களே.முகமது அலிக்கோ வாய் ரொம்பவே நீளம்.உதாரணத்துக்கு சில...

எல்லோரையும் வியட்நாமுக்கு சண்டைக்குப் போங்கடான்னு அமெரிக்க அதிபர் கட்டளையிட்டால் சண்டைக்கும் போகாமல் வாயையும் மூடாமல் "எனக்கு வியட்நாமிடம் சண்டையொன்றுமில்லை.ஒரு வியட்நாமியும் என்னை நீக்ரோ என்று கூறியதேயில்லை"
  • உலகம் முழுதுமிருக்கும் கருப்பு மக்களை அடிமைப்படுத்தும் வெள்ளைக்கார அநீதி புத்திக்கு இதோடு ஒரு முடிவு ஏற்படவேண்டும்.10,000 மைல்களைக் கடந்து மனிதர்களைக் கொல்லவும்,எரிக்கவும் நான் போகமாட்டேன்
  • நீக்ரோக்கள் என்றழைக்கப்படுவர்களுக்கு மனித உரிமையில்லாமல் நாய்கள் மாதிரி நடத்தப்படும் அமெரிக்காவிலிருந்து 10000 மைல் கடந்து போய் மாநிற மக்கள் மீது குண்டுகளையும்,புல்லட்களையும் போடுவதற்காக நான் ஏன் யூனிபார்ம் அணிய வேண்டும்?
சும்மா இருக்குமா அமெரிக்க அரசு? நீ வியட்நாமில் மட்டுமல்ல அமெரிக்காவிலேயே கூட குத்துச்சண்டை போடாதே என்று லைசென்சை ரத்து செய்து விட்டதால் ஜார்ஜ் ஃபோர்மெனுடனான போட்டி காங்கோ நாட்டில் நிகழ்ந்தது.

பிலிப்பைன்ஸ் நாட்டு மணிலாவில் ஜோ ஃப்ராசியர் என்பவருடன் சண்டையிடுவதற்கு முன்பு முகமது அலி சொன்னது ""It will be a killa... and a chilla... and a thrilla... when I get the gorilla in Manila." (செங்கோவி!இதை நான் பீட்டர் விடாம தமிழில் எனக்கு சொல்லத்தெரியலை:))

இப்படி ராப் பாட்டு பாடுவதுமில்லாமல் ஜார்ஜ் ஃபோர்மெனுடன் குத்துச்சண்டை ரிங் வளையத்துக்கு செல்வதற்கு முன்பு வழக்கமாக குத்துச்சண்டை வீரர்கள் இடது,வலது புறமாக நடனமாடுவது மாதிரியே சண்டை போடும் ஸ்டைலில் தன்னைக்காத்துக்கொள்ளப்போவதாக சொல்லி விட்டு முதல் சுற்றில் ஒன்பது குத்துக்களை போர்மனுக்கு விட்டும் நாக் அவுட் செய்ய முடியாமல் இந்த டெக்னிக் வேலைக்கு ஆகாது என்று எண்ணி இரண்டாம் சுற்றில் தன் வாயே தனக்குதவியென்று ஜார்ஜ் ஃபோர்மெனைக் கோபப்படுத்தும் விதமாக வாய்ச்சொல் வீரராக ஜார்ஜ் விடும் குத்துக்கள் தனது முகத்தில் மட்டும் படாமல் அடிமேல் அடி வாங்கிக்கொண்டு தனது உடல் பலத்தை வளையத்தின் கயிறோடு சாய்ந்து கொண்டு அடிவாங்கிக் கொண்டும் திட்டிக்கொண்டும் ஏழு சுற்று வரை நின்றதைப் பார்த்த எனக்கு அலி தேறாத கேஸ் என்றே தோன்றியது.

இரண்டு அல்லது மூன்று சுற்றில் நாக் அவுட் செய்யும் ஜார்ஜ் ஃபோர்மெனால் 7 சுற்றுக்குள் தொடர் குத்து விட்டும் முகமது அலியை வீழ்த்த முடியவில்லை.இப்பொழுது எட்டாவது சுற்று.ஜார்ஜ் ஃபோர்மென் களைத்துப் போன நிலை.எட்டாவது சுற்று துவங்கிய சில நிமிடங்களிலே முகமது அலி விட்ட குத்து ஜார்ஜ் ஃபோர்மெனை நிலைகுலையச் செய்து கீழே விழ வைக்கிறது.எதிரியைக் களைக்க வைத்து கயிற்றில் தனது பலத்தை தற்காத்துக்கொண்ட அலியின் குத்துச்சண்டை நுட்பம்  "The Rope-A-Dope" என குத்துச்சண்டையில் அழைக்கப்படுகிறது.
 விடுதலைப்புலிகள் கிளிநொச்சியை விட்டு இலங்கை ராணுவ வீரர்களை உள்வாங்கும் திட்டம் கூட இப்படியான ஒரு போர்த்தந்திரமாக இருந்திருக்கலாம்.2008ம் வருட இறுதி கால 2009ம் வருட துவக்க காலத்தின் மழைச்சூழலும் கூட இலங்கையின் ஸ்டாலின்கிராடை உருவாக்கியிருக்க வேண்டியவை.போர் தந்திரங்களையும் முந்தைய வெற்றிகளையும் கடந்து இப்பொழுது பெருமூச்சு மட்டுமே மிச்சம்.போரின் தார்மீக நெறிகளை ராஜபக்சே குழு சீர்குலைத்த மாதிரி குத்துச்சண்டையின் முகத்தை மைக் டைசன் எதிரியின் காதைக்கடித்து உருமாற்றிவிட்டார்.

குத்துச்சண்டையின் உச்சத்தில் "I am the greatest" என்று சொல்லிக்கொண்டிருந்த முகமது அலி பிற்காலத்தில் சமாதான தூதுவனாக சதாம் உசேனிடம் போய் அமெரிக்க போர் வீரர்களை மீட்டுக்கொண்டு வந்ததும் தன்னை சமூக சேவகனாக மாற்றிக்கொண்டதும் வியப்பானாவை.பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு முகமது அலியும் கூட இப்பொழுது பழைய நினைவுகளில் வசந்த காலங்களை எண்ணிக்கொண்டிருக்க கூடும்.

Thursday, July 21, 2011

சமச்சீர் கல்வி தீர்ப்புக்கு வாழ்த்துக்கள்

ஜெயலலிதாவின் அடக்கி வாசிக்கும் தன்மையைக் கவனித்து 100 நாள் அடிப்படையில் கருத்து ஏதும் கூறாமல் நிறை குறைகளை எடை போடலாமென்று பார்த்தால்  ஹில்லாரி கிளிண்டன் சந்திப்பு ஆளுமையையும் புறம் தள்ளி சமச்சீர் கல்வியில் சொதப்பியது நன்றாகவே தெரிகிறது.ஹில்லாரி கிளிண்டனையும் அமெரிக்க சார்பு நிலையையும் தமிழகம் வரவேற்க வேண்டுமென்றாலும் தமிழகத்தின் உள்ளீடு அரசியலையும்,வாழ்வியலையும் பற்றியெல்லாம் அறியாத ஹில்லாரி கிளிண்டன் ஒரு நாள் விருந்தினர்.தமிழக மக்கள் வாழ்விலும் தாழ்விலும் உடன் பயணிப்பவர்கள் அல்லவா?

இதனை புரிந்து கொண்டும் எத்தனை முறை நாற்காலியில் அமர்ந்தோம் என்பதல்ல பெரியது.எப்படி ஆட்சி செய்து மறைந்த பின்னும் பெயரை நிலைத்து நிற்கும் என்பதற்கான வரலாற்றை விட்டுச் செல்வதே இனி வரும் தலைமுறையும் பெயர் உச்சரிக்கும்.கருணாநிதிக்கு அந்த தகுதியிருந்தும் அதற்கான யோக்கியவானாக இல்லாமல் போனார்.ஆனாலும் அவரது புகழ்பாடும் பாடப் பக்கங்கள் இல்லாத சமச்சீர் கல்வி வரவேற்க வேண்டிய ஒன்றே.

முதல்வர் ஜெயலலிதா!இதோ இது உங்கள் தருணம்.நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு கொடுத்து பாடத்திட்டத்தின் தேவையற்ற பகுதிகளை நீக்கி சமச்சீர் கல்வியை பள்ளியில் அமல்படுத்துங்கள்.ஹில்லாரி கிளிண்டனின் அமெரிக்க வரவேற்பும்,ஈழத்தமிழர்களின் நல்வாழ்வுக்கு சட்டமன்ற தீர்மானங்களையும் கடந்து செயலாற்றும் திறனும் தமிழக மக்களின் சார்பாக உங்களை இந்திய அரசியலில் முன்னிறுத்தும் என்பதோடு உங்களை எதிர்கால தமிழ் தலைமுறைக்கும் அடையாளம் காட்டும்.


 ஜனநாயகத்தை இன்னும் வாழவைத்துக்கொண்டிருக்கும் அரசியல் சாசன அமைப்பாக நீதிமன்றம் இருப்பது இந்திய ஜனநாயகத்தின் வேர்களை இன்னும் ஆழமாக வேரூன்ற வைக்கும் என்ற நம்பிக்கையை இன்னும் நீரூற்றி வளர்க்கிறது.

நீதிமன்ற தீர்ப்புக்கு வாழ்த்துக்கள்!