Followers

Tuesday, July 17, 2012

Black Friday - திரைப்பட விமர்சனம்

வேலைப்பளு ஒரு புறம்,எதை சொல்வது என்ற உந்துதல் இல்லாத மறுபுறம் என்பதற்கிடையில் தற்போது  கொஞ்சம் மனதை இலகுவாக்குவது ஏனைய கருத்துரையாடல்களே..யாருடனாவது சண்டை போடலாமே என்று தேடினாலும் எல்லோருமே நல்லபிள்ளையாகி விட்டார்கள் போல் தெரிகிறது.பதிவுலகம் அமைதியான கடலில் சாமரம் வீசிக்கொண்டு செல்கிறது.இப்படியே பயணம் செய்யட்டும். பதிவுலக தேடல்களுக்கு மாற்றாக இப்போது ஆங்கில திரைப்படங்களுடன் இந்தி திரைப்படங்களும் விட்டும் தொட்டும் என்னுள் முடிவடைகிறது.


முன்பு ஒரே கதைக்கருவை வைத்தே சென்று கொண்டிருந்த இந்தி திரை உலகம் கறுப்பு பணம்,பாதாள உலகம் என்ற சூழலிலும் இந்தி திரைப்படங்களே இந்திய சினிமாவை தீர்மானிக்கும் நிலையில் இப்போது பன்னாட்டு மூலதனங்களும் புரள்வதோடு இந்தி திரைப்படங்கள் பல கதைக்களங்களையும் தொடுவது வரவேற்க தக்க மாற்றம்..பல இயக்கங்கள் யார் இயக்குநர் என்று மீண்டும் பெயர் தேட வைக்கிறது.அந்த வரிசையில் மிகவும் தாமதமாக ஆக்கிரமித்துக்கொண்ட பெயர் அனுராக் கெஷ்யப்.திரைப்படம் கறுப்பு வெள்ளிக்கிழமை எனும் Block Friday.

இதே பெயரில் ஹுசேன் ஜெய்தி என்பவர் எழுதிய புத்தகமே திரைப்பட வடிவமாக.திரைப்படம் முடிந்து எழுத்து வரிசைகள் ஓடிக்கொண்டிக்க கண்கள் நிலைகுத்திய நிலை.எந்த பக்க சார்புமில்லாமல் ஒரு திரை ஊடகம் எப்படி பம்பாய் குண்டு வெடிப்பு சம்பவத்தையும்,அதன் பின்புல மனிதர்களையும், மதம்,அரசியல்,காவல்துறை செயல்படும் முறை என பட்டவர்த்தனமாக திரைப்படம் பார்க்கிறோம் என்ற உணர்வில்லாமல் கொண்டு செல்கிறது.

ஒரு புறம் இந்திய காவல்துறை செயல்படும் விதம் குறித்த மனித உரிமை பார்வையும, அதற்கு எதிராக காவல்துறை  தனது பக்க நியாயத்தை சொல்லும் போது எந்த தவறுகளும் செய்யாத பம்பாயின் அன்றாட வாழ்வை தேடும் மக்கள் மரணித்துப் போவதும்,பலத்த காயங்களுடன் ஏனைய வாழ்நாளை கழிப்பவர்களுக்கு மனித உரிமை இல்லையா என்ற கேள்வி மனித உரிமை,காவல்துறை செயல்படும் விதம் குறித்த இருவித மன அதிர்வை உருவாக்குகிறது.

சாதாரண இளைஞர்கள் மதம் என்ற பெயரில் எப்படி மூளை சலவை செய்யப்படுகிறார்கள் என்பதையும் பம்பாய் குண்டு வெடிப்பு நிகழ்ந்த 1993ம் வருடத்திற்கு பின் சுமார் 122 பேர் மீதான குற்றப்பத்திரிகை மீது 100 பேர்கள் குற்றவாளிகள் என 13 வருட ஆண்டுகளுக்குப் பின்பான நீதிமன்ற தீர்ப்பில் குற்றவாளிகள் தண்டனை அடைந்தாலும் முதல் குற்றவாளிகளான தாவுத் இப்ராஹிம்,டைகர் மேமன் போன்றவர்கள் இன்று வரை தப்பித்து வருவதும்,இந்திய அரசியல்,சட்ட வலிமைகளையும் கேள்விக்குறியாக்குகிறது.

குண்டு வெடிப்புக்கு முன்பே டைகர் மேமனின் மொத்த குடும்பமும் துபாய் சென்று விடுவதும்,தாவுத் இப்ராஹிம் இன்று வரை பாகிஸ்தானில் ஒளிந்து கொண்டிருப்பதும் இவர்களின் சுயநலங்களை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.மத வாதத்தை பஜ்ரங்க் தள்,ஆர்.எஸ்.எஸ் என்ற இந்து தீவிரவாத இயங்கங்கள் பி.ஜே.பி என்ற அரசியல் முகமூடி போட்டுக்கொண்டு பாபர் மசூதியை இடித்ததன் மூலம் மதவெறியை இந்திய,,பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ தமது அரசியல் சுயநலன்களுக்கு எப்படி பயன்படுத்திக்கொள்கின்றன என்பதையும் தொட்டு தாவுத் இப்ராஹிம்,டைகர் மேமன் என்ற தனி மனிதர்களிடமிருந்து பிரச்சினை விலகி எப்படி இந்திய,பாகிஸ்தானிய அரசியலை தீர்மானிக்கிறது என்பதையும் மெலிதாக தொட்டு செல்கிறது.

நீதி மன்ற தடைகளையும் மீறி படம் வெளி வந்தும் கூட இயக்குநர் மணிரத்னத்தின் பாம்பே,நசுருதீன் ஷாவின் நடிப்புக்கான தி வென்ஸ்டே படங்களுக்கான விளம்பரம் அனுராக் கெஷ்யாப்க்கு குறிப்பிட்ட ரசனையாளர்களின் மத்தியில் மட்டுமே கிடைத்துள்ளது எனலாம். பாம்பே,வென்ஸ்டே போன்ற படங்கள் தனிமனிதர்களின் கதைக்களத்தினூடே  ஒரு நிகழ்வைப் பற்றி சொல்லி நிகழ்வுகளோடு சமரசப்பட்டவை.

ஆனால் கறுப்பு வெள்ளிக்கிழமை ஒரு நிகழ்வின் காரணகர்த்தாக்களையும்,அவர்களை சார்ந்த சாதாரண மனிதர்களையும் தொட்டு மதம் எப்படி மனிதர்களை விலக்கி வழிநடத்திச்செல்கிறது என்பதையும்,தாவுத் இப்ராஹிம்,டைகர் மேமன்,பால் தாக்கரே, அத்வானி, ஆர்.எஸ்.எஸ்,பஜ்ரங்தள்,ஐ.எஸ்.ஐ என்ற பெயர்களை எந்த சமரசமுமின்றி நிகழ்வுகளுனூடே சொல்லி செல்கிறது.

கதைக்களம்,ஒளிப்பதிவு,இசை இவற்றிற்கும் மேலாக பாலிவுட் நடிகர் என்ற  தனி மனித பிம்பங்களற்ற நடிக்கிறோம் என்ற உணர்வுகளற்ற கதையின் பாத்திரத்தோடு ஒன்றிப் போனவர்களை இயக்கியிருப்பது நடிகர்களுக்கும், இயக்குநருக்கும் வெற்றியே.அனுராக் கெஷ்யப் இந்திய திரைப்படத்தின் தவிர்க்க முடியாத பெயர் பட்டியலுக்குள்.இந்திய திரைப்படங்கள் கறுப்பு வெள்ளிக்கிழமை போன்ற பட வரிசையில் பயணிப்பதே இந்திய சினிமாவை உலக திரைப்படங்களின் வரிசையில் நிற்க வைக்கும்.

11 comments:

தருமி said...

ஏன் கமல் இந்தப் படத்தை விடுத்து இன்னொரு படத்தை -உன்னைப் போல் ஒருவன் - எடுத்தார் என்பது எனக்கு ஒரு பெரிய கேள்விக் குறி. இப்படம் அந்த அளவு பிடித்தது.

ராஜ நடராஜன் said...

தருமி அய்யா!உன்னைப் போல் ஒருவன் மற்றும் அதன் அசல் தி வென்ஸ்டே நிகழ்வுகளின் புனைவு வகையை சார்ந்தது.உண்மைக்கதையையே சொல்லி விட்டு இதில் வரும் சம்பவங்கள்,நபர்கள் யாவும் கற்பனையே என்று சட்ட சிக்கலுக்காக டைட்டில் கார்டின் துவக்கத்தில் போட்டு விட்டால் முடிந்து விட்டது.ஆனால் கறுப்பு வெள்ளிக்கிழமை ஒரு புத்தகமாக மட்டுமல்லாமல் 1993ம் வருட குண்டுவெடிப்பு சம்பவத்தின் ஆவணமாகி விட்டது.பம்பாய் திரைக்கதையின் கதாநாயகன்,நாயகி மதங்கள் சார்ந்தே புகைச்சல் கிளப்பி மணிரத்னத்தின் வீட்டில் கல்லெறிந்த கலாச்சாரத்தில் கறுப்பு வெள்ளிக்கிழமையை அப்படியே மொழிமாற்றம் செய்வது பூனைக்கு மணி கட்டுவது யார் என்பது மாதிரி.நீங்கள் சொல்வது போல் கமல் கறுப்பு வெள்ளிகிழமையை முயற்சி செய்திருக்கலாம்.ஆனால் பல கதாபாத்திரங்களின் ஒட்டு மொத்த படத்தின் கதையில் அவரது பங்களிப்பு என்னவென்பதும் கேள்விக்குறி என்பதோடு கமலின் முகம் தொட்டு கதையின் சாரம் தமிழில் மாறிவிடும் அபாயமும் இருக்கிறது.அனுராக் கெஷ்யப்பின் கதை சொல்லும் பாணியோடு இந்தியில் நட்சத்திர பிம்பம் கொண்ட எந்த நடிகரையும் நடிக்க வைக்காததே கறுப்பு வெள்ளிக்கிழமையின் வெற்றி எனலாம்.

மதிப்புமிக்க உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

தருமி said...

என்னைப் போல் ஒருவனை விட இப்படம் பல நல்ல செய்திகளைச் சொல்லும். இஸ்லாமியர் என்றாலே வெறுப்பு, ஐயம் என்பதையெல்லாம் தாண்டி கதை செல்லும். எ.போ.ஒ. வைத்து கமலை நம் சகோக்கள் நிறம்பவே விரட்டி விட்டார்கள். ஆனாலும் நீங்கள் சொன்னது போல் கமலுக்கு இப்படத்தில் வேலை அதிகம் கிடையாது; ’மாடி’ போதும் அதற்கு.

எல்லாம் சரி ... ஆனாலும் என் பின்னூட்டத்திற்கு நீங்கள் கொடுத்துள்ள ‘பண்புத்தொகை’ (மதிப்பு மிக்க) எதற்கு என்றுதான் புரியவில்லை!!!

ராஜ நடராஜன் said...

தருமி அய்யா!கறுப்பு வெள்ளிக்கிழமையின் வெற்றியே எந்த பக்க சார்புமில்லாது கதை சொல்லியிருப்பதே.குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் மீதான கோபத்துக்கு பதில் இவர்கள் எப்படி மதமென்ற பெயரில் மூளை சலவை செய்யப்பட்டார்கள் என்ற பரிதாபமே உண்டாவதும் ஆர்.எஸ்.எஸ்,பஜ்ரங்தள் அமைப்புக்களின் கரசேவா பாபர் மசூதி இடிப்பையெல்லாம் துணிந்து சொல்லியிருப்பது.கறுப்பு வெள்ளிக்கிழமை படமல்ல நிகழ்காலத்தின் எதிர்கால செல்லுலாய்ட் ஆவணமெனலாம்.

நீங்க சொன்னது மாதிரி உ.போ.ஒருவனில் கமலை விட மாடிதான் ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சிருக்கிங்கறது சிரிப்புடன் கூடிய புதிய சிந்தனை:)

Thanks for your valuable comment ன்னுதான் சொல்ல நினைச்சேன்.தமிழில் சொன்னதால் அதுவும் உங்களுக்கு சொன்னதால் மொழியின் மதிப்பு உயர்ந்து விட்டது:)

தருமி said...

//எல்லோருமே நல்லபிள்ளையாகி விட்டார்கள் போல் தெரிகிறது.பதிவுலகம் அமைதியான கடலில் சாமரம் வீசிக்கொண்டு செல்கிறது.//

அது வேற ஒண்ணுமில்லைங்க ... ஏதாவது neutralஆக ஒரு தலைப்பை வைத்துக் கொண்டு, அதற்கேற்றாற்போல் நாலைந்து வரிகள் எழுத வேண்டும். அதன் பின், பழைய வழக்கம்போல் உங்கள் வேதப் புத்தகங்களை மேற்கோளிட்ட்டு, அது எம்புட்டு அறிவியலோடு ஒத்துப் போகுதுன்னு சொல்லிட்டி போயிரணும். வழக்கமான ’total குத்துக்கள்’ உங்க மக்களிடமிருந்து விழுந்திரும். மத்தவங்க இதைக் கண்டுக்காம போயிடணும் ...

இதுதான் அந்தப் புது டெக்னிக்.

எப்பூடி!!??

வவ்வால் said...

ராஜ்,

Black படம் நான் கூடப்பார்த்து இருக்கேன் ,கலரில் இருந்துச்சு, வழக்கமான மலையாளப்படம் போல இல்லாமல் ஆக்‌ஷன் ஆக இருக்கும்.மம்முட்டி போலிஸ் ஆக இருந்து கொண்டேகூலிப்படையா ஒரு டான்கிட்டேவும் வேலை செய்வார், அப்புறம், திருந்தி நல்லவனா வாழப்பார்ப்பார்,டான் விட மாட்டான், எனவே டான் கூட சண்டைப்போட்டு கொல்வார், ஒரு தடவைப்பார்க்கலாம், ஆனால் இதை ஏன் குயின்டின் டோரன்டினோ ரீமேக் செய்யப்பார்க்கிறார்னு தெரியலை, தமிழில் லோகநாயகரை வச்சு ரீமேக் செய்வார்னு நினைக்கிறேன், அனுராக் காஷ்யப் டான் ஆக நடிப்பார்னு நினைக்கிறேன்.

உங்க பாணியில் ஒரு பின்னூட்டம் :-))

ராஜ நடராஜன் said...

தருமி அய்யா!சொல்லி இந்த பதிவை முடிக்கலை.அதுக்குள்ள இக்பால் செல்வனின்
ஈசா இபின் மரியத்தின் கார்ட்டூன்களை இஸ்லாமியர்கள் ஏன் எதிர்க்கவில்லை ? என்ற பதிவுக்கு பின்னூட்டங்கள் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது:)

ராஜ நடராஜன் said...

வவ்வால்!உங்களுக்கு வால் இருக்குது என்பதற்காக இப்படியா என் காலை வாரி விடறது:)

இப்படியே மொட்டையா பின்னூட்டத்தை முடிச்சிடுவேன்னு நினைச்சீங்களா என்ன?இப்படி எடுத்துக்கொடுத்தா நீங்க போட்ட பின்னூட்டம் போலவே எதையாவது சொல்வதுதானே நம்ம பாணி.

அதனால் குயின்டின் டோரன்டினோ மெய்யாலுமே கமலின் ஆளவந்தான் பார்த்து மெர்சலாகி கமல் கார்ட்டூனா போய் மனிஷாவை கொல்வதை தனது kill bill படக்காட்சியில் புகுத்தி விட்டாராம்.

தகவல் உபயம் மாயன்:அகமும் புறமும்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு விமர்சனம்.

பகிர்வுக்கு நன்றி...தொடருங்கள்...

வாழ்த்துக்கள்...

ராஜ நடராஜன் said...

தனபாலன் அவர்களுக்கு வணக்கம்.நிறைய கதை சொல்லலாம்தான்.நேரப் பற்றாக்குறை.இருந்த போதிலும் மிகவும் பாதிக்கும் கதைகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்வோம்.நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஹிந்திப் படமா?இங்கிலீஷ் படமோன்னு நினைச்சேன்.