Followers

Saturday, September 22, 2012

பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதாரக் கொள்கைகள்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் சமீபத்திய பொருளாதாரக் கொள்கைகளான டீசல் விலை உயர்வு,சிறு வியாபாரங்களில் அன்னிய முதலீடு போன்றவற்றிற்கு நிறைய எதிர்ப்புக்கள் தென்படுகின்றன.மன்மோகன் ஒரு சிறந்த பொருளாதாரவாதி ஆனால் மோசமான அரசியல்(தெரியாத)வாதின்னு சொன்னதுக்கு கீச் கீச்ன்னு  வவ்வால் கத்தியது நினைவுக்கு வருகிறது.:)
இப்பவும் நான் அந்த வாதத்தில் உறுதியாக இருக்கிறேன்.

1990களின் பொருளாதார மாற்றங்கள் இன்று வரையிலும் இரண்டு விதமாக நன்மையும் தீமையும் கலந்து இருந்தாலும் கூட சீனாவுடன் பொருளாதாரத்தில் போட்டி போடும் நாடாக உயர்த்தியது..அதில் சரிவுகள் நிறைய என்பது வேறு.இந்தியா மெதுவாக அவசரப்படாமல் ஆமை மாதிரி பொருளாதார வேகத்தில் நகர சீனா எட்டுக்கால் பூச்சியாய் ஓடி ஆமையை எட்டுக்கால் பூச்சியே வென்றது.இருந்த போதிலும் உலகம் தழுவிய பொருளாதார மந்தநிலையில் இந்தியா ஓரளவுக்கு தாக்குப்பிடித்து வந்துள்ளதும் உண்மை.

பிரச்சினைகளுக்கெல்லாம் வாய்மூடி பரிதாபமாக பார்க்கும் பிரதமர் பொருளாதாரம் என்றவுடன் இது நம்ம பேட்டைன்னு பணமென்ன மரத்திலா காய்க்கிறது என நேற்று வாய் திறந்து விட்டார்.பிரதமர் வாய் திறந்த ஒரே காரணத்துக்கான ஆதரவே இந்தப் பதிவு.டீசல் விலையை ஏற்றாவிட்டால் வரவு எட்டணா செலவு பத்தணா என்ற சூழலுக்கு வந்து விடும் என்பதாலும் இரண்டணா அதிக செலவை ஈடுகட்டவே சிறுதொழில் அந்நிய முதலீட்டைக் கொண்டு வருவதாகவும் மன்மோகன் சிங்கின் வாதம்.

பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் நிரந்தரமானதல்ல.உலகின் எந்த ஒரு அசைவும்,சலசலப்பும் பெட்ரோலிய பொருட்களின் விலையை பாதிக்கும்.இதற்கு சமீபத்து உதாரணம் சொன்னால் ஒரு டாலருக்கு உதவாத சாம் பாசில் என்ற நகுல பாசில் எடுத்த முஸ்லீம்களின் அறியாமை ட்ரெய்லர் கூட பார்க்காத நியாயமான போராட்டம் ட்ரெய்லர் சொல்வது சரிதான் என்பது மாதிரி வன்முறையாக மாறிய நிகழ்வும் கூட பெட்ரோலிய விலையை பாதிக்கும்

.மக்களின் போராட்டங்கள் மட்டுமல்ல,அமெரிக்கா லிபியாவுக்கு 2 ராணுவக்கப்பலை அனுப்புகிறேன்ன்னு அறிக்கை விட்டாலும் விலை எகிறும்.பிரெஞ்சுக்காரன் கார்ட்டூன் போட்டாலும் சரி! கிரிஸ் பொருளாதாரம் சரிந்தாலும் சரி விலை நிர்ணயம் ஆடுபுலி ஆட்டம்தான்.டீசல் உபயோகிப்பாளர்கள் காசு இருக்குற ஆசாமிகள்தான் எனவும் பெட்ரோல் மக்கள் அதிகம் உபயோகிப்பதை மனதில் கொண்டு விலையேற்ற வில்லையென்றும் மன்மோகன் சொல்கிறார்.

மேலோட்டமாக பார்த்தால் இது சரிதான் என்று தோன்றினாலும் பொருட்களை கொண்டு செல்லும் லாரி உரிமையாளர்கள் டீசல் விலை ஏறினால் ஒரு லோடு பொருளுக்கான விலை,இதர செலவுகளையும் ஏற்றி விடுவார்கள்.இந்த விலையேற்றம் மறுபடியும் உபயோகிப்பாளர்களான மக்கள் மீதே மறைமுகமாக சுமத்தப்படும்.தங்கம் எவ்வளவு விலை உயர்ந்தாலும் மக்கள் வாங்குவதைப் போல் நுகர்வுப் பொருட்கள் எவ்வளவு விலை அதிகமானாலும் மக்கள் வாங்கியே தீர்வார்கள்.இன்று  ஏழைகள் ஆயிரங்களிலும்,நடுத்தர வர்க்கம் லட்சங்களிலும்,பணக்காரர்கள் கோடிகளிலுமே பேசுகிறார்கள்.

அத்தியாவசிய தேவைகள்,தேவைகள்.ஆடம்பர தேவைகள் என்ற மூன்று நுகர்விலும் மக்களின் வாங்கும் சக்தி இன்று அதிகரித்துள்ளது.இதனை மனதில் கொண்டே பொருளாதார மாற்றங்கள் சலசலப்பை உருவாக்கினாலும் காலப்போக்கில் மக்கள் பழகிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் பொருளாதார மாற்ற கொள்கையை அரசு கையில் எடுத்துள்ளது.

அந்நிய முதலீட்டு சூப்பர் மார்க்கெட்டையெல்லாம் ஏற்கனவே நீரோட்டமிடப்பட்டு விட்டன.மொரார்ஜி தேசாயின் கோகாகோலாவுக்கான எதிர்ப்பையும் மீறி மறுபடியும் கோகாகோலாவும்,பெப்சியும் திரும்ப வந்து விட்டன.சாரு போகின்ற ஓசி ஐந்து நட்சத்திர பாரில் கோக் கலந்து விஸ்கி அடிப்பதெல்லாம் பேஷா பேசனாகிய மாதிரி சரக்குக்கும் கோக்,பெப்சி கலந்து குடிக்கும் அண்ணாத்தைகளுக்கு விஸ்கிக்கு பக்கவாத்தியமே சோடாவும்,ஐஸ் விரும்பினால் லெமன் சிலைஸ் ஆன் த நெக் என்பதை யாரும் சொல்லித்தருவதில்லை.

எல்லாமே மெல்ல மெல்ல பழகிப்போகும் என்பதோடு சிறுதொழிலில் அந்நிய முதலீடு இன்னும் பல நுகர்வுப்பொருட்களை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தும் என்பதோடு அந்நிய முதலீட்டுக் கொள்கையை சோதித்து பார்த்தே விளைவுகளை இனியும் பேசமுடியும்.

பிரதமர் மன்மோகன் சிங் மக்கா அல்லது கொக்கா என்பதை அடுத்து வரும் பி.ஜே.பியின் ஆட்சி காலத்தில் அசைபோடுவோம்.

ஒரே மன்மோகன் புகழ் பாடுற மாதிரி இருக்குதேன்னு சிலர் புலம்புவார்கள் என்பதால் இம்புட்டு பொருளாதார கொள்கை பற்றியெல்லாம் அக்கறைப்படும் பிரதமர் ஸ்விஸ் பேங்கில் இருக்கும் பணத்தையெல்லாம் வாய் திறப்பதேயில்லையே என்பதையும் சொல்லி வைப்போம்.கல்லுளி மங்கன் பிரணாப் எப்படியோ ஜனாதிபதி பதவியில் உட்கார்ந்து கொண்டு தப்பித்து விட்டார்.சிதம்பரத்தின் பெயரும் ரப்பர் ஸ்டாம்ப் ஒட்டி ஸ்விஸ் வங்கிக்காரன் முடக்கி வைத்துள்ளதாக நேற்று சாய்ராம் பதிவொன்றில் பார்த்தேன். இந்தியாவின் ஸ்விஸ் சேமிப்பு மட்டும் 56% என முதலிடத்தில்.ரஷ்யாக்காரன் 18% என இரண்டாம் இடத்தில்.மற்ற நாடுகள் அனைத்தும் குட்டி பயில்வான்கள்தான்.இதையெல்லாம் திரும்ப கொண்டு வரவும் மன்மோகனை வலியுறுத்துவோம்.

சாத்வீகமான போராட்டங்கள் எந்த பலனையும் அளிப்பதில்லை.போராட்டங்கள் மக்களின் உணர்வுகளைக் கொட்டும் ஒரு வடிகாலாக மட்டுமே தென்படுகிறது.ரோடு சரியில்லை,குழாயில் தண்ணீர் வரவில்லை,மணலை அள்ளிக்கொண்டு போகிறான் ,மின்சாரமில்லை என்ற் நியாயமான போராட்டங்களாகட்டும்,காவிரி நீர்,ராஜபக்சே நேற்று சாஞ்சியில் ஓதிய அகிம்சை வேதாள குரலுக்கு எதிராக வை.கோவும் ஏனைய தோழர்களும் மாநிலம் கடந்து சென்ற போராட்டமாகட்டும் அரசு இயந்திரம் மயிரே போச்சுன்னுதான் இயங்கிக்கொண்டிருக்கிறது.

தொட்ட தொண்ணூறுக்குமான போராட்டத்தை நிறுத்துவது முக்கியமென படுகிறது.போராட்டமற்ற  வாழ்க்கையாவது சுபிட்சத்தைக் கொண்டு வருகிறதா என பரிட்சிப்போம்.அதுவும் மக்கள் வாழ்க்கையில் வசந்தத்தை தரவில்லையென்றால் இந்திய தலைவிதியை நிர்ணயிக்கும் ஒரே ஒற்றைப் போராட்டத்தில் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றுவது அவசியம்.

Thursday, September 20, 2012

(பதுமை) புதுமை ஹிஜாப் (பர்தா) பெண்!

சி.என்.என் தற்போதைய சூழலுக்கேற்றவாறு கொஞ்சம் மசாலா சேர்த்துடுச்சான்னு தெரியல.ஆனால் ஈரானின் கிராமம் ஒன்றில் கலாச்சாரப் போலிஸ் பணி செய்யும் மத போதகர் ஒருவர் மயக்கமாகி மருத்துவ மனைக்குப் போனது மட்டும் உண்மை.நடந்தது என்ன?இதைப்படிப்பவர்களுக்கு ஒன்று சிரிப்பு வரவேண்டும்.இல்லாட்டி எரிச்சல் வரவேண்டும்

கிளரிக் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஈரானிய போதகர் ஹஜடோலிஸ்லாம் அலி பிகெஸ்டி (Hojatoleslam Ali Beheshti) வழிபாட்டுக்கு செல்லும் வழியில் கண்ட இரு பெண்களை முழுக்க முகத்தை மூட சொல்லி நமது ஊரில் விண்ணப்ப படிவத்தில் போடும் சொல்லான மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொண்டும் கூட இரண்டு பெண்களில் ஒருவர் வேணுமின்னா நீங்க உங்க கண்ணை மூடிக்கொள்ளுங்கள் என்று சொல்ல இதனால் தான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்த ஹெஸ்ட்டி மறுபடியும் முகத்தை மூடச்சொல்லி அருகில் செல்ல கோபமடைந்த பெண்கள் போதகரின் ஆடையைப் பற்றி இழுக்க நிலை தடுமாறி கீழே விழுந்த போதகருக்கு அப்புறம் என்ன ஆனோம் என்று தெரியவில்லையாம்.பாதி மயக்கத்தில் பெண்கள் உதை கொடுத்து அவரை திட்டுவது மட்டுமே கேட்டதாம்.

மூன்று நாட்கள் கழித்து மருத்துவமனையிலிருந்து திரும்பிய ஹெஸ்ட்டி இதுவரை காவல்நிலையத்தில் குற்றம் சுமத்தவில்லையாம்.ஆனால் இஸ்லாமிய ஹிஜாப் மரபைக் காக்க வேண்டி கிராமத்து நாட்டாமை இது பற்றி விசாரணை செய்தாலும் தனக்கு ஆட்சேபனையில்லை என்கிறார் ஹெஸ்ட்டி.
பெரும்பாலும் நகர்ப்புறங்களில்தான் இந்த மூடு வேலைகள் நிகழுமென்றும் கிராமப்புறங்களில் இது போன்று யாரும் அறிவுறுத்துவதில்லையென்றும் அரசு சார்பு மெகர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

Monday, September 10, 2012

பகிர்தலும் நன்றே - TED ideas worth spreading

பனிப்போருக்கு அப்பாற்பட்ட மாற்றமாக சோவியத் உடைந்ததும்,ஜெர்மன் சுவர் வீழ்ந்ததையும் விடவும்  உலகின் 21ம் நூற்றாண்டின்  புரட்சியாக தகவல் தொழில் நுட்பமும் இணையம் சார்ந்த மாற்றங்களுமே முக்கியமானவை.(தலைப்பு இன்னும்  ஒரே கன்பூசன்னா இருக்கே:))

இது வரையிலும் மேசைக்கணினி,மடிக்கணினி என்ற நிலையிலிருந்து கணினி திரையுடன் கூடிய மூடித்திறக்காதவாறு கணினி திரை,தட்டச்சு கீபோர்டு ,எலிக்குட்டி என மூன்றும் தனித்தனியாக வயரும் வேண்டாம் கயிறும் வேண்டாம் என புதுக்கணினிகள் எட்டிப்பார்க்கின்றன.

இதை விட  காணொளிகள்,வீடியோ,தொலைக்காட்சி போன்றவைகளைக் காண கணினியே தேவையில்லையென்ற இணைய தொடர்புகள் கூடிய Sling box,Tivo,Roku என பல சாதனங்கள் சந்தைக்கு வந்து விட்டாலும் இவை அமெரிக்காவின் நுகர்வை ஒட்டியே கிடைக்கிறது. மற்றவர்களுக்கும் மாற்று வழிகள் சிலவும் இருக்கின்றன.இதனையெல்லாம் தொட்டால் பதிவு இன்னும் நீளமாகப் போய்விடும் என்பதோட நாடுகளின் சட்ட சிக்கல்கள் என்பதால் தற்போதைக்கான தேவையாக கணினி சார்ந்தே இயங்குவதும் தேடல் தேடி அலைவதும் ரசனை சார்ந்து மட்டுமல்ல புதிய சிந்தனைகளை நோக்கி செல்ல TED பற்றி பேசுவோம்.



அமெரிக்காவின் போர் முக கெட்ட குணங்களுக்கு மாற்றாகவும் உலகின் அடுத்த தலைமுறைக்கு எதையாவது விட்டுச்செல்ல வேண்டும் என்ற நோக்கிலும் மேற்கத்திய சிந்தனைகளோடு பலர் இருப்பதை காணமுடிகிறது.நாம் பெரும்பாலும் அரசியல், பொருளாதாரம்,சமூகம்,மதம்அறிவியல் சார்ந்தே சிந்திக்கிறோம். இங்குமங்கும் சில சலசலப்புக்கள் உருவானாலும் கூட திரட்டிகளும்,பிளாக்கர்களும் கருத்து பரிமாறல் என்ற எல்லையை நோக்கியே பயணம் செல்கிறார்கள்.
 
நாம் வலையர்களாக தினமும் தட்டச்சி பேசிக்கொள்வதைப் போல் ideas worth spreading என்ற வாசகங்களோடு TED என்ற குழுவும் நேரில் பேசிக்கொள்கிறார்கள். TED குழுவினர் மதம்,தேசம்,பணம் என்ற எல்லைகளைக் கடந்து உலகின் புதிய சிந்தனைகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.கேபிடலிச,கம்யூனிச,சோசியலிச கொள்கைகளின் நிறை குறைகள் அலசுகிறார்கள்.உலக மயமாக்கல்,ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் சீனா எப்படி இந்தியாவை முந்திக்கொண்டது எனவும் மனித உரிமைகள்,ஜனநாயகம் சார்ந்து சீனா இன்னும் பின் தங்கியிருப்பது போன்றவையெல்லாம் பேசப்படுகின்றன. 

எகிப்தின் அரேபிய வசந்தத்தில் அல்ஜசிரா தொலைக்காட்சியின் நேரலை பங்கு பற்றி அலசப்படுகிறது. TED குறித்த தேடலில் இந்த குழு பற்றி ஏற்கனவே சிலர் அறிந்திருக்கிறார்கள்.அவர்களுக்கான சுட்டி,காணொளி,தமிழில் இதனைக் கொண்டு வந்து விடவேண்டுமென்ற ஆர்வலர்கள் சிலர் இருப்பதையெல்லாம் பிள்ளையாண்டான் என்பவர் பதிவு செய்திருக்கிறார்.நம்ம கே.ஆர்.பி செந்திலும் TED பற்றி அவரது தளத்தில் பேசியிருக்கிறார்.ஆனால் இவை பரவலாக போய்ச் சேரவில்லையென்பதை உணரமுடிகிறது.

    (புதிய மத அடையாளக் குறியீடுகள்)
மத அடையாளங்களை தமது பாரம்பரிய நம்பிக்கைகள் என்ற அளவிலும் பல தனி மனிதர்களை நல்வழிப்படுத்த உதவும் ஊன்று கோல் மட்டுமே என்பதை உணர்ந்து கொண்டு கோள்களின் உருவாக்கம்,முதல் செல், நியாண்டர்தால்,ஹோமோசெபியன் என்பதன் தொடராகவே இன்றைய மனிதன் என்பதை காணொளிப் பிரியர் சகோ.சார்வாகன் தமிழில் அழகாக வைத்தாலும் கூட நம்பிக்கை பழக்கத்தில் அதனை ஏற்றுக்கொள்ள பலருக்கும் விருப்பமின்மை மனரீதியானது.அறிவியல் உண்மைகளை வெறுமனே வெளிப்படுத்தி விட முடியாது.அதற்கான ஆதாரங்கள்,ஜர்னல் தியரி, உறுதிபடுத்தல் என பலவும் அடங்கியுள்ளன.அதன்படி ஹோமோ ஹேபிலிஸ் என்ற குரங்கின் வழியே இன்றைய மனிதன் என்பதையெல்லாம் TED குழுவில் பேசப்படுகிறது.TED குழு சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்றால் ஒவ்வொரு துறை வல்லுனர்ளும் ஆய்வு செய்பவர்களுமே உலகளாவிய அளவில் சாதனை படைத்தவர்கள் மட்டுமே கருத்து பகிர்வு செய்கிறார்கள்.

(தலைப்பு பிள்ளையார் பிடிக்க குரங்கான கதைன்னு இகி...இகி க்க வேண்டாம்.நம்ம தாத்தாவுக்கும் தாத்தா ஹோமோ ஹெபிலிஸ் இவர்தானாம்!நம்பினால் நம்புங்க)
பரிணாமம் சார்ந்து மட்டுமல்ல சமூகம், பொருளாதாரம், அரசியல், கல்வி, விவசாயம் என பலவும் பேசப்படுகின்றன.நம்ம ஊர் சசி தரூர் கூட கேபிடலிசத்தின் இரு பக்கங்கள் என இந்தியாவின் பரிமாணங்களை சொல்லி இத்தாலியில் பிறந்த சோனியாவின் தலைமையில் தாரளமயமாக்கலின் பிரதமர் மன்மோகன் சிங்கை இஸ்லாமிய அப்துல் கலாம் பதவியேற்பு செய்து வைத்தது உலகில் எங்கும் நிகழாத அதிசயம் என தனது இந்திய விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார். இன்னொருவர் கொரியாவா,சீனாவா என தெரியவில்லை இந்தியாவுக்கும்,சீனாவுக்கும் உள்ள பொருளாதார,,ஜனநாயக வித்தியாசங்களை பட்டியலிட்டு விட்டார்.பார்க்கும் போது நம்மீது நமக்கே பரிதாபம் ஏற்படுவதோடு ஜனநாயகத்துக்கு ஏற்படும் கெட்ட பெயருக்கான நிர்வாக சீர்கேடுகள் குறித்த கோபமும் எழுகின்றது.ஆமை நடை வெற்ரியெல்லாம் பள்ளிப்பாடத்துக்கே உதவும்.பொருளாதாரத்தில் முயல் அல்ல ஓடும் பந்தய குதிரையே வெல்லும்.

இதில் Anthropology எனும் பழைய மண்டையோடுகளின் காலம்,வயது,ஆணா பெண்ணா எனவும்,டைனோசர்கள் வாழ்ந்த காலம் பற்றியும்,கோளங்களின் ஆண்டுகள்,முதல் உயிருக்கான குரோம்சாம்கள்,நியாண்டர்தால் காலத்திற்கு பின்பான ஹோமோசெபியன் என பலவும் பேசப்படுகின்றன.

குற்றங்களும்,தண்டனைகளும் என்ற தலைப்பில் சிறு குற்றங்களுக்கான காரணங்களிலிருந்து என்ரோன்,ஷேர் மார்க்கெட் வரையிலான கார்பரேட் குற்றங்களும் விவாதிக்கப்படுகின்றன.இதில் குறிப்பிடும்படியாக காவல்துறைக்கு தனிமனிதர்களை துன்புறுத்தும் அதிகாரம் கொடுக்கக்கூடாது எனவும்,இதனை சீனா சட்டபூர்வமாக்கியிருப்பதாகவும் கூறுவது இந்தியா சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

மும்பாய் தீவிரவாத தாக்குதலில் காவல்துறை குண்டு வைத்தது யாராக இருக்கும் என்ற கோணத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்க 1298 என்ற தனியார் குழு ஆம்புலன்ஸ் உடனடி சிகிச்சைக்கு உதவியதில் சுமார் 150 உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்பதை அறிய முடிகிறது.

நாம் சுவரொட்டிகள் ஒட்டுவதைப் போல் சுவர்களில் வண்னங்களால் கிறுக்கி வைத்ததைப் பார்த்த ஒரு பெண் சுவர் முழுவதும் 

before I die I want to--------------

என்று நிரப்பி வைக்க பலரும் ஆக்கபூர்வமாக எழுதி வைத்ததை காணமுடிந்தது என்கிறார்.டெல்லி, குஜராத், உதயபூர், மும்பாய், கோவா, கேரளா, பஞ்சாப், வாரனாசி என பல இடங்களில் இந்தியாவில் செயல்படும் இந்த குழுமம் தமிழகத்தில் இல்லாததன் காரணம் என்ன?

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக  விமானம் ஏர்போர்ஸ் 1ல் பயணம் செய்து விட்டு இப்பொழுது விமான நிலையத்தில் கையை நீட்டிக்கொண்டு விமான பயண பாதுகாப்புக்காக மற்ற பயணிகளோடு நிற்கும் என்னோட நிலையைப் பார்த்தீர்களா என்று சொல்லி சிரிப்பூட்டும் முந்தைய அமெரிக்க துணை ஜனாதிபதி அல்கோர், இங்கிலாந்தின் முந்தைய பிரதமர் கார்டன் பிரவுன், இப்போதைய டேவிட் கெமரான் என்பவர்களோடு மொஹஞ்சோ தாரோ அடையாளங்கள் சித்திர வடிவான மொழி வடிவமே எனும் இந்திய ராவ் வரை   TED குழுமத்தின் அங்கத்தினர்கள்.TED Talks போன்ற கலந்துரையாடல்கள் புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதியின் கனவை நோக்கிய மேற்கத்திய சிந்தனை.படம் பார்த்தால் போதும்.நன்றி.


சுட்டிகளுக்கும் நன்றி நன்றி:

நம்ம கே.ஆர்.பி செந்தில்

http://krpsenthil.blogspot.com/2010/07/ted.html

http://pillaiyaandaan.blogspot.com/2011/02/ted.html
பிள்ளையாண்டான் சொன்ன சுட்டிகள்

இன்னும் கூகிளில் தேடியவை

மரிசா பிக் ஜோர்டன் அவர்கள் சுலு கம்பி கலையின் அற்புதத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.


http://www.ted.com/talks/lang/ta/marisa_fick_jordan_shares_the_wonder_of_zulu_wire_art.html

அதிதி சங்கரதாஸ்: கற்றல் குறைபாடுகள் பற்றிய இரண்டாம் அபிப்ராயம்
http://www.ted.com/talks/lang/ta/aditi_shankardass_a_second_opinion_on_learning_disorders.html

அதிசயிக்கும் ஊக்கவியல் விஞ்ஞானம் பற்றி டண் பிங்க்

http://www.ted.com/talks/lang/ta/dan_pink_on_motivation.html

மனம் திறக்கிறார் பில் கேட்ஸ்

http://www.ted.com/talks/lang/ta/bill_gates_unplugged.html


மிஷ்கின் இங்வாலே: இரத்தக் கசிவில்லா இரத்தப் பரிசோதனை
http://www.ted.com/talks/lang/ta/myshkin_ingawale_a_blood_test_without_bleeding.html

ப்யாடீ மேஸ் விளக்கும் "ஆறாவது புலன்" என்கிற புரட்சிகரமான அணிந்து கொள்ளும் தொழில்நுட்பம்

http://www.ted.com/talks/lang/ta/pattie_maes_demos_the_sixth_sense.html

வாதா கான்பரின் அரபு உலகின் வரலாற்று சிறப்பு தருணம்
http://www.ted.com/talks/lang/ta/wadah_khanfar_a_historic_moment_in_the_arab_world.html

லலிதேஷ் கட்ரகட்டா: பேரழிவை எதிர்த்து போராடவும், பொருளாதரத்தை வளர்க்கவும் வரைபடம் செய்தல்
http://www.ted.com/talks/lang/ta/lalitesh_katragadda_making_maps_to_fight_disaster_build_economies.html

























Sunday, September 9, 2012

விட்டேனா பார்!பனிப்போருக்கும் அப்பால்

முன்னோட்டம் விட்டதுக்கே (ட்ரெய்லர்) நண்பர்கள் படம் ஒரே மொக்கைன்னு பின்னூட்ட விமர்சனம் போட்டுட்டாங்க.பிலிமே இனி மேல்தான் வருது.என்ன பேசிகிட்டிருந்தோம்?சி.ஐ.ஏவும்,கே.பாலசந்தரைப் பற்றியுமா?இப்படி பேசினாத்தான் சம்பந்தமில்லாமல் தலைப்புங்கண்ணா.நாம் பேசுவது பனிப்போருக்கும் அப்பாலான மாற்றங்கள் பற்றி!ஒரு வேளை முன்பு மாதிரி இரட்டை அமெரிக்க,சோவியத் யூனியன் சூழ்நிலை இருந்திருந்தால் யூரி ககேரின்,ஆர்ம்ஸ்ட்ராங்க் பேசிக்கொண்ட சங்கேத கோடுகள் இணையம் தழுவி வந்திருக்குமா என்பதும் கூட சந்தேகமே.நான் எங்கோ டீ ஆத்திகிட்டிருக்க நீங்க தினமணியும்,தினத்தந்தியும் வாசிச்சுகிட்டு உலகளாவிய அரசியலை அளசிகிட்டும் கூட இருந்திருக்க கூடும்:)

 அமெரிக்க முதலாளித்துவம் இன்னும் நிலைப்பதால் சிஐஏ வும் இன்னும் நிலைக்கிறது.ஆனால் சோவியத் ரஷ்யா பிரிஞ்சு போன பின் கேஜிபி யும் அதில் பணிபுரிந்தவர்களும் என்ன ஆனார்கள்?சமீபத்து உதாரணமாக சதாம் ஹுசைனின் ராணுவத்தில் பணி புரிந்தவர்கள் அமெரிக்க படையெடுப்புக்குப் பின் இவர்களை ராணுவத்தில் இணைத்தால் சதாமின் மற்றொரு முகமாக இவர்கள் செயல்படுவார்கள் என்று ராணுவத்தில் இணைக்காததால் தங்கள் ராணுவ திறன்களை அமெரிக்காவின் எதிர்ப்புக்கும் குண்டுவெடிப்புக்கும், ஈராக்கை விட்டு வேறு நாடுகளில் குடிபுகுந்தது என பலவிதமாக சிதறிப்போனது மாதிரி கேஜிபியில் பணிபுரிந்தவர்களும் பலவாறு சிதறிப்போனார்கள்.

இவற்றில் ராணுவ,அணு ஆயுத,வானியல் நுட்ப (Space Technology )ரகசியங்கள் கடத்தல் என்பவற்றோடு சிலர்,இணைய தளத்திற்குள்ளும் நுழைந்தார்கள். இணைய உபயோகிப்பாளர்களின் பெரும்பாலோனோர் இணையத்தை நேரடியான பயன்பாட்டுக்கு உபயோகிப்பவர்களாக இருந்தாலும் இதனை மாற்று பயன்பாட்டாக உபயோகிப்பவர்களை மூன்று விதமாக பிரிக்கலாம்.

1.பொருளாதார நலத்தோடு செயல்படும் ஆன்லைன் ஹேக்கர்ஸ்,
2.பின்னூட்டம் போன்று சில்மிச வேலைகள் மற்றும் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளாத ஆபத்தில்லாத அனானி குழுவினர்,
3.தனது நாட்டு மக்களையும்,நாட்டுக்கு எதிரான செயல்பாடுகளை கண்காணிக்கும் அரசு சார்ந்த நிறுவனங்கள்.

அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு உதாரணமாக எகிப்தில் நிகழ்ந்த அரேபிய வசந்தத்தை குறிப்பிடலாம்.எகிப்திய புரட்சிக்கு முக்கிய காரணமாக தகவல் பரிமாற்றத்திற்கு பங்கு வகுத்தது யூடியுப்,முகநூல்,ட்விட்டர்,பிளாக்கர் குழுவினரும் மற்றும் ஜிமெயில் போன்ற கடித தொடர்புகளே. இவற்றையெல்லாம் கண்காணிக்க ஹோஸ்னி முபாரக்கின் அரசு அமெரிக்காவிலிருந்து ஒரு மென் பொருளை அதிக விலை கொடுத்து வாங்கியதுடன் மக்கள் புரட்சி கட்டுக்குள் அடங்காமல் போனதும் இணையதள தொடர்பை துண்டிக்க இஸ்ரேலின் உதவியை (Narus of Sunnyvale, California-Isreal based American co)நாடியது.இந்த நிறுவனம் சவுதி அரேபியா,பாகிஸ்தான் போன்ற அரசுகளுக்கும் உதவுவதாக இணைய தகவல்கள் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன.பாகிஸ்தான் பற்றி குறிப்பிடும் போது 5.1/4 பிளாப்பி டிஸ்க் வலம் வந்துகிட்டிருந்த காலத்தில்   1990களின் கால வாக்கில் ட்ராஜன் மாதிரி பிளாப்பிக்குள் வைரஸ் புகுத்தி விளையாடிய பசீர்,அம்ஜத் என்ற இரண்டு வைரஸ்ரர்களை! இப்போதைய கணினி நுட்ப வளர்ச்சிக்குப் பின் விலாசம்,போன் எண்களை கண்டுபிடித்து 2008 வாக்கில் பாகிஸ்தான் சென்று கதவை தட்ட கதவை திறந்தது அதே பிளாப்பி டிஸ்க் அம்ஜத் என்ற கதையெல்லாம் அடுத்த பதிவு வரை சஸ்பென்ஸ்:)

தங்களை வெளிப்படுத்திக்கொண்டு ஆக்கபூர்வமாகவும்,சிறந்த தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்ளும் போட்டிகள் கூட நிகழ்த்தும் ஹேக்கர்ஸ் நிறைய பேர் இருந்தாலும் பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டும்,தாங்கள் எங்கிருந்து செயல்படுகிறார்கள் என்று தெரியாமல் செயல்படும் குழுக்களில் முக்கிய பங்கு வகிப்பவை ரஷ்யாவை சார்ந்தவை.இப்பொழுது பனிப்போருக்குப் பின்னால் என்ற முந்தைய தலைப்பை ஒட்டி கிட்டத்தட்ட நகர்ந்து விட்டாலும் படத்தோட க்ளைமாக்ஸே இனி அடுத்த பதிவில்தான் வருகிறது.

Thursday, September 6, 2012

பனிப்போருக்கும் அப்பால்

அமெரிக்க, சோவியத் ரஷ்ய பனிப்போர் காலத்தில் இரு நாடுகளின் கொள்கைகளை மட்டுமல்ல உலக நாடுகளின் கொள்கைகளையும் தீர்மானித்ததில் முக்கிய பங்கு வகித்தவை அமெரிக்காவின் சி.ஐ.ஏ மற்றும் சோவியத் ரஷ்யாவின் கேஜிபி உளவு நிறுவனங்கள்.கேஜிபியின் குறிக்கோள் கம்யூனிசம் சார்ந்து நாடுகளை உருவாக்குவதும் அமெரிக்காவிற்கான எதிர்ப்பும்.அமெரிக்க சி.ஐ.ஏ  நோக்கம் ஜப்பானின் பேர்ல் ஹார்பர் தாக்குதல் போன்று உருவாகாமல் தடுப்பதும் (அப்ப 9/11?) பல துறைகளாக இயங்கும் PD,FBI,Pentagon,Congress,Foreign Policy போன்றவற்றின் செயல்பாடுகளை துறை சார்ந்தும் இவை அனைத்தையும் சார்ந்து நேரடியாக ஜனாதிபதிக்கு தெரிவிப்பதுமாகும்.

கியூபா ,சிலி போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் தலையீடு,பனாமா ராணுவ தாக்குதல்,ஈராக்கில் சதாம் ஹுசைன் பதவியேற்பு,ஈரானின் இஸ்லாமிய ஆட்சி,ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு, முஜாஹிதீன்களுக்கான அமெரிக்க ஆதரவு, காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்க தலையீடு என பலவற்றை சொல்லலாம்.

இதன் பின்ணனியில் இரு நாடுகளின் பொருளாதார நலன்களோடு தம்மைச் சார்ந்து மட்டுமே ஏனைய நாடுகள் இயங்க வேண்டுமென்ற அழுத்தங்களாக நாட்டை ஆள்பவர்களுக்கு அன்பளிப்பு என்று ஸ்விஸ் வங்கி கணக்கு திறக்குமளவுக்கு பணம் தருவதோ தமது நலன்களுக்கு உதவவில்லையென்றால் பயமுறுத்தல்,விபத்து போன்று மரணத்தை ஏற்படுத்துவதோ அல்லது மக்களே கலவரம் உருவாக்கட்டும் என கலவரங்களுக்கான சூழல்களை உருவாக்குவதோ நிகழும்.

இணங்கிப் போவதின் மூலம் தனது நலன்,தன்னை சார்ந்து ஆட்சி புரிபவர்கள் நலன்,இவர்களோடு மேல் நிலையில் உள்ள பீரோகிராட்டிக்காரர்களோடு வசதி வாய்ப்புக்கள் நின்று விடும்.இணங்கிப் போகாமல் நாட்டுப்பற்று என்ற கொள்கைகளோடு ஆட்சி செய்ய முடிந்தாலும் பொருளாதார தடைகளை ஏற்படுத்துவது போன்றவைகள் நிகழும்.எப்படியிருந்த போதிலும் ஆட்சி நிர்வாகத்தில் பாதிக்கப்படுபவர்கள் நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களே.மேலும் ஊழலுக்கான சூழலை உருவாக்குவதும் கூட உளவுத்துறைகளின் முக்கிய பணியாகும்.

இவ்வாறான பனிப்போர் காலத்தில் இந்தியாவில் நுழைந்த ஊழல் இந்திரா காந்தியின் கால கட்டமும் அதன் தொடர்ச்சியாகவே அரசு அலுவலகங்களில் உதவியாளர் ( பியூன் ) காசு கேட்பதோ வாகன,சாலை விதி ஒழுங்குபடுத்திலில் துவங்கி அரசு அலுவலர்கள்,மண்,மணல்,நிலம்,,கார்பரேட் 2G,பிரதமர் மன்மோகன் மீதான நிலக்கரி சுரங்க ஊழல் என எங்கும் எதிலும் வியாபித்திருக்கிறது.இந்தியா போன்ற பெரிய பெடரல் அமைப்பில் ஊழல் பரவுவது எளிதாகவும் அமைகிறது என்பதோடு நாட்டின் விரைவான வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கிறது.

இப்போதைய நிலையில் பனிப்போர் காலத்து ரஷ்யாவையோ, அமெரிக்காவையோ குறை சொல்லி விட முடியாது என்ற போதிலும் அப்போதைய விதை விருட்சமாக வளர்ந்துள்ளதை மக்களின் மனம் பிரதிபலிக்கிறது.முன்பிருந்த பனிப்போர் சூழல் இல்லாததை உலக வங்கி கடன்,என்ரோன் போன்ற மின்சார திட்டங்கள்,பொருளாதார,விவசாய திட்டங்கள் என புதிய நவீன முறைகள் கையாளப்படுகின்றன.

ஒரு நாளைக்கு ஒரு டாலர் என எந்தப் பணியுமில்லாத ஆயிரக்கணக்கான சீனர்களுக்கு நைக் போன்ற காலணிகள் நிறுவனங்கள் மேலோட்டமாக மக்களுக்கு கிடைத்த வரம் மாதிரியாக தோன்றினாலும் மூன்று மாத காலவரைக்குள் நிறுவனத்தின் லாபம் எவ்வளவு என்பதில்தான் நிறுவனம் குறியாக இருக்கும்.உலகப் பொருளாதார பின்னடைவு போன்ற சிக்கல்களில் நிறுவனத்தின் பணியாளர் வேலை குறைப்பு,நிறுவனம் இயங்காமலே போவது அல்லது இன்னொரு தேசத்திற்கு மாற்றி விடுவதென பொருளாதார தடுமாற்றங்கள் தொடர்கதையாகவே இருக்கின்றன.

உலக மக்கள் தொகையில் 5 சதவீதமுள்ள அமெரிக்கா கிட்டத்தட்ட 25 சதவீத உலக வளங்களை அனுபவிக்கிறது.உயர்ந்த கட்டிடங்கள்,முதலாளித்துவ திட்டங்கள்,கண்டுபிடிப்புக்கள்,பாதுகாப்பு என வளமாக அமெரிக்கா இருப்பதைப் பார்த்து ஏனைய நாடுகளும் அதுமாதிரியான வாழ்க்கை முறையை விரும்புகினறன. உலகப்போருக்குப் பின் ஜப்பான் தன்னை உருவாக்கிக்கொண்டது.ஐரோப்பிய நாடுகள் உலகப்போரில் இழந்தவை அதிகம் என்ற போதிலும் ஓரளவுக்கு வலுவாகவே உள்ளன.பெட்ரோலிய பொருளாதாரத்தால் அரேபிய நாடுகள் வளமாக இருக்கின்றன.இதே நிலை இந்தியா,சீனா போன்ற வளரும் நாடுகளுக்கு சாத்தியப்படுமா?

Tuesday, September 4, 2012

லங்காபதியே! என்னை அசத்தாத முகமூடியே!

ஒரு முறையாவது அனானி முகமூடி அணிந்து பார்க்க வேண்டுமென்ற ஆசையை முந்தா நாள் ஒரு பாய் "ஒசூர் பாய் முகமூடியே நீதானய்யான்னு" புது கொலம்பஸ் கண்டுபிடிப்பாய் யுரேக்கா என கத்தி விட்டார்:)

ஆசை,தோசை,பின்னூட்ட வடை! இப்படியெல்லாம் சொன்னால் இது பதிவுலக முகமூடியென்றோ,அனானி பின்னூட்டம் பற்றியென்றோ யாராவது நினைத்தால் அடுத்த வருட ஏப்ரம் 1 ம் தேதி இப்பவே தமிழ் புத்தாண்டு எப்பங்கிற மாதிரி இப்பவே கொண்டாடி வேண்டியதுதான்..இன்றைக்கு அதிகமா வியாபரம் ஆவது இந்த  முகமூடிதான்.நம்ம பதிவுலக நண்பர்கள் போட்டுக்கிற முகமூடியெல்லாம் ஏதோ திருவிழாவுக்கு போற குழந்தைக்கு கண்ணாடி வாங்கிப் போட்ட மாதிரியும் ஜவ்வு மிட்டாய் கடிகாரம் கட்டின மாதிரியான முகமூடிகள் இவை.

 எந்திரனுக்கு மாற்று சிம்கார்டு போட்டு விட்ட மாதிரி வெளியே பார்த்தால் அரசியல்,வெளியுறவுக்கொள்கை.உள்ளே பார்த்தால் ரகசிய ஒப்பந்தம், சுவற்றுக்குள் பேச்சு வார்த்தை.ஊடகத்துக்கு ஒன்ரை சொல்.இன்னொன்றை செயல்படுத்துன்னு அரசியல் முகமூடி உத்தம புத்திரனில் சிவாஜி சிவாஜிக்கு மாட்டிவிட்ட முகமூடி மாதிரி அரசியல் ஆசனத்து இரட்டை வேடங்கள்.

வெளுத்ததெல்லாம் பால் அல்ல,வெள்ளை உடுத்தியவரெல்லாம் காந்தியின் பேரனுமல்ல.தமிழகத்திற்கு மஞ்சள்தான் மங்களம்.அது அமங்களமாகிப் போய் ஆண்டுகள் பலவாகி விட்டன..பழகிய தோசத்துக்காக இன்னும் மஞ்சள் பையிலும்,திருமண அழைப்பிதழலின் மூலையிலும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன.

கறுப்பு நிறம் அழுகிறதா என்று இருட்டுக்குள் இருட்டாக....பார்க்கவே முடியவில்லை சிரிப்பு சத்தம் கேட்காவிட்டாலும் அவ்வப்போது விசும்பல் மட்டுமே கேட்கின்றது.

சிவப்பு?அது ஏதோ தொழிலாளர் குரலாக இங்குமங்கும் ஒலிக்கிறது.ராஜா மாதிரி இருக்க வேண்டியது.ரஷ்யாவுல கேட்டாங்க,சீனாவுல கேட்டாங்க,கியூபாவுல கேட்டாங்கன்னு சுக்கிர திசை அடிக்காத செவ்வாய் தோசமாம்.குடுகுடுப்பை ஜோஸ்யக்காரன்  ராவுல வந்து உடுக்கை அடிச்சுட்டுட்டார்.

சிவப்பும் கறுப்பும் கலந்த மாதிரி ராஜ பார்வையிருந்தாலும் காலை நேரத்தில் சிவப்பாவேன்,சூரியன் மறைந்தால் கறுப்புதான் எனக்கு புடிச்ச கலர் மாதிரி இரட்டை மன கலர்

காவி!பிரம்மச்சரியத்தின் அடையாளம் என்பதை புரட்டிப் போட்டு ரத்தம் பூசிக்கொண்டும் நீண்ட நாட்களாகின்றன.

இந்திய அரசியல் வர்ணங்களே வேண்டாமென விட்டாலாச்சார்யா குகை மந்திரவாதி மண்டையோடுகளை கழுத்தில் மாட்டிக்கொள்வது மாதிரி சிவப்போடு ரத்தம் தோய்த்த நீண்ட துண்டு போட்டுக்கொண்டு லங்காவதி.முன்பு பதவி பயத்தால் சத்தம் போடாதே பக்சே என்ற அம்ஜத்கான் வந்து புடிச்சிட்டுப் போயிடுவான் என்ற பூச்சாண்டி காட்ட தலீவர் இல்லாததால் இங்கே குரல் கொடுத்தால் அங்கே அப்பாவிகளை அடிப்பான் என்று குழந்தையை தூங்க வைக்கும் முயற்சியில் ஒரு சில கதர் கலரும்.கத்துவதே இந்திய ஜனநாயகம்ன்னு நாம சொன்னா கத்திக் கத்தி என்ன பலன்? டெல்லி வரும்போது  தமிழ் தலைகள் நேரா லங்காவதிகிட்டேயே சாஷ்டாங்கமாக காலில் விழுந்து பார்க்கலாமே என  நேத்தைக்கு ஒரு அதி புத்திசாலி மூத்த பத்திரிகையாளன். போர்க்குற்றமாவது வார்க்குற்றமாவது? 

தனித்தனியா நண்டு வளையமா இருந்தாலும் இப்போதைக்கு இருக்கிற வலுவானதோ அல்லது வலுவற்றதோ ஒரே ஆப்பு தமிழ்நாட்டுலருந்து வரும் குரல்தான்.அதனையும் புடிஙகி போட்டுட்டா கேட்கறதுக்கு ஆளே இல்லை.லங்காபதி ஆடு சிங்கே ஆடுன்னா எசப்பாட்டும் சேர்ந்தே பாடுறேன்னு 13க்கு அடுத்த 14 அல்ல 13+ புகழ் பாடும் தெக்கச்சிக்கு வில்லி சுஷ்மா என்ற கட்டச்சி.இருக்குறதெல்லாம் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம்தான்.சில்வர் முகம் பூசிக்கொண்ட ஈயக்கம்பிகள்தான்.எதற்கும் சூரிய ஒளிப்பிரகாசமில்லை.

சூரியனே மானோடும் மயிலோடும் சக்கர நாற்காலியில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கிட்ட போது ஓட்டுப்பிச்சைக்காக பறந்து வரும் வால் நட்சத்திர ஒளியை நம்பிப் பயனில்லையென்பதை காவி(ய) காதலனுக்கு பட்டு குஞ்சம் சுத்திகிட்ட சுஷ்மிதமாக சொல்லி விட்டார்.நமக்கு பிறந்து வீடும் சரியில்லை.ஆமைகள் புகுந்த வீடும் சரியில்லை.

.பழைய காலத்து அனுமான்  வாலோடு லங்காவுக்கு பறந்த மாதிரி நவீனமா அனுமாளுக்கு பட்டுச்சேலை கட்டி விட்டு விமானத்தில் பறக்க விட சந்தித்தேன் உன்னை நான் சந்தித்தேன்!என்னை நீ  எப்போ சந்திப்பாய் என்று சுஷ்மிதமா டூயட் பாட கிடைத்த லொகேசன் தான் சாஞ்சி.நான் சீனாவோடு சோரம் போனாலும் ராத்திரியானா என்னைக் கட்டி அணைக்கத்தான் வேண்டுமென்ற வேண்டாத பொண்டாட்டியாய் இந்தியா.

இரண்டு பொண்டாட்டிக்காரன் மாதிரி சீனாவோடும்,இந்தியாவோடும் லங்காவுக்கு ஒரே அஜால் குஜால் குத்துப்பாட்டுத்தான்..சின்ன வீடும் பெரிய வீடும் குடுமி சண்டை போடுமா இல்ல சக்களத்திகளாகவே இருந்து சமாதானமாகிப் போகுமான்னு போக போகத்தான் தெரியும்.எப்பவும் பெரிய வீடுதான் மூக்கை சிந்திகிட்டு முகாரம் பாடும்ங்கிற குடும்ப விதிக்கேற்ப இந்தியாவும் மூக்கை சிந்துவதற்கு இப்பவே சளி பிடித்து விட்டது.இந்தியா பெரியண்ணன் என்பதை பெரியக்கான்னு மாத்தி வருடம் மூணாச்சு. சின்ன வீடு சீனா மேலதான் லங்காவதியோட கண்ணே மணியே தாலாட்டு.எப்படியோ ரெண்டு பொண்டாட்டிக்காரன் அதிர்ஷடக்காரன்தான்.பெரியக்கா பாடுதான் பார்க்க சகிக்கல.

லங்காபதியின் இந்திய வருகை சுஷ்மா தூபம் போட்டு சாஞ்சிக்கு வந்த சாபம்.

Sunday, September 2, 2012

ஹொவார்ட் ஜீன் ( Howard Zinn)

அமெரிக்க வரலாற்றில் முதலாளித்துவம் சார்ந்த ஊடகங்களே முன்னிலை வகிப்பதால் கம்யூனிஸம் சாராத சோசியலிச சிந்தனைகள் அமெரிக்காவில் வலம் வந்தாலும் அவை உலகளாவிய அளவில் தெரிவதில்லை.சோசியலிசம் என்ற சொல்லை ரஷ்ய கம்யூனிசம் ஹைஜாக் செய்து கொண்டு போய் விட்டதால் அதன் முழுப்பொருள் கம்யூனிசம் சார்ந்து அமெரிக்காவில் முதன்மைப் படுத்தப் படவில்லை.உணவு,வீடு,சுகாதாரம்,குறைந்த நேர வேலை,அதிக நேர ஓய்வு அனைத்து மக்களுக்கும் உலகளாவிய அளவில் கிடைப்பதே சோசியலிசத்தின் அடிப்படை என்கிறார் ஹொவார்ட் ஜீன் (Howard Zinn).
 படம் போட்டு ரொம்ப நாளாச்சு!ஹோவார்ட் ஜீன் படம் சேர்ப்பது இந்த பதிவுக்கு அழகு சேர்க்கும்.பட உதவி: அவரது தளமே!Howard Zinn.org மேலும் பல தகவல்களை தரக்கூடும்.

முந்தைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சனின் காலத்து வியட்நாம் போருக்கு எதிர்ப்புக் குரல்கள் பலரிடமிருந்து வந்தாலும் வியட்நாம் போருக்கான முதல் குரல் ஒலித்தது ஹொவார்ட் ஜீனிடமே!மார்ட்டின் லூதர் கிங் பிரபலமான அளவுக்கு ஹொவார்ட் ஜீன் உலகளவில் அறியாமல் போனது வரலாற்றுப் பிழையே!1922ல் பிறந்த ஹோவார்ட் ஜீனின் பெற்றோர்கள் புருக்ளின் பகுதியில் வாழ்ந்த உழைப்பாளர் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதால் புத்தகங்களையே கண்ணில் பார்க்காமல் வளர்ந்தவர்.சில பக்கங்கள் சிதைந்து கீழே வீசப்பட்ட புத்தகமொன்றை கொண்டு வந்து படிக்கும் ஹோவார்ட் ஜீனின் ஆர்வம் கண்ட பெற்றோர்கள் 10 சென்ட் உடன் கூப்பன் ஒன்றை நியுயார்க் போஸ்ட்டுக்கு அனுப்ப தொடர்ந்து வந்த சார்ல்ஸ் டிக்கன்சனின் எழுத்துக்கள் ஹோவார்டின் வாசிப்புக்கு தளம் அமைக்கிறது.

தனது பதின்ம வயதில் கப்பல் கட்டுமானத்துறையில் பணி புரிந்த அனுபவத்தின் அடிப்படையிலும்  விமானப்படையில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கிறது.ஹிட்லரின் பாசிஸத்திற்கு எதிராக பெர்லின், செக்கோஸ்லா விக்கியா,ஹங்கேரி போன்ற இடங்களில் விமானம் மூலம் குண்டு வீசும் 490 விமான குண்டு வீச்சு குழுவினரோடு பணிபுரிகிறார்.1945ம் வருடம் பிரான்ஸின் ரோயன் பகுதியில் நப்தீனிக் ஆஸிட்,பால்மிடிக் ஆஸிட்.பெட்ரோலியம் கலந்த நபால்ம் என்ற குண்டுகளை ஜெர்மன் வீரர்களை நோக்கி வீச கட்டளையிடப்படுகிறார்..ஒன்பது வருடங்கள் கழித்து தனது டாக்டரேட் ஆய்வுக்காக பிரான்ஸில் வசிப்பவர்களிடம் நேர்காணல,முனிசிபல் ஆவணங்கள்,நூலகத்தின் பழைய செய்தி துணுக்குகள் போன்றவற்றை சேகரிக்கிறார்.தனது குண்டு வீச்சால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரெஞ்சு குடிமக்களும்,போர் முடிவதற்காக காத்திருந்த ஜெர்மன் வீரர்கள் சிலரும் இறந்து போனதை அறிவது ஹோவார்ட் ஜீனின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைகிறது.

இதனை அரசியல் வரலாறு (The politics of History) என்ற புத்தகத்தில் பதிவு செய்கிறார்.பிரான்ஸ் அமெரிக்காவுடன் நட்பு நாடாக இருந்தாலும் போர் முடிவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு ராணுவ அதிகாரிகள் தங்கள் பதவி உயர்வுக்காக எப்படி குண்டு வீச்சுக்காக கட்டளையிடுகிறார்கள் என்பதை சொல்கிறார்.

வியட்நாம் போருக்கு எதிராக குரல் கொடுத்தது மட்டுமலாமல் போரில் பிடிபட்ட முதல் மூன்று விமானிகளை அமெரிக்கா கொண்டு வந்த சேர்த்த பெருமை ஹோவார்டுக்கே உரியது.

பின்பு அமெரிக்க்காவின் தென்பகுதியில் கறுப்பு நிறம் கொண்டவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தனது வரலாற்று ஆசிரியர் பணியை தொடர்கிறார்.இங்கேயிருந்து ஹோவர்டின் சோசியலிச கலகம் துவங்குகிறது. தொழிலாளர் யூனியன் போராட்டங்களில் பங்கு கொண்டு FBIன் பார்வைக்கு வருகிறார்.நீதிமன்றத்தில் கறுப்பு இனத்தவர்கள் தனியாகவும் வெள்ளை நிறத்தவர்கள் தனியாகவும் உட்கார வேண்டுமென்ற நீதிபதியின் கட்டளையைப் புறக்கணித்து அரசியல் சாசன விதிகளை நீதிபதிக்கு அறிவுறுத்தி அனைவரையும் கலந்து உட்கார வைக்கிறார்.கல்லூரியின் முதல்வருக்கு பதவி,பொருளாதார் பலமிருந்த போதும் தன்னோடு 400 மாணவர்களின் பலத்தோடு போராடியதை சொல்லி சிரிக்கிறார்.

இரண்டாம் உலகப்போர்,வியட்நாம்,பனாமா,கிரனடா என அமெரிக்காவின் போருக்கு முடிவேயில்லை என்ற விமர்சனத்தோடு ஈராக் போரையும் எதிர்க்கிறார்.

மனித உரிமை,உழைப்பாளர் நலன்,போர்களுக்கு எதிர்ப்பு,நிற வேற்றுமைக்கு எதிர்ப்பு,போஸ்டன்,யேல் பல்கலைக்கழகங்கள் உட்பட கல்லூரி மாணவர் களிடையே சொற்பொழிவு,விழிப்புணர்ச்சி,ஆய்வு,அமெரிக்க வரலாற்றுக் கட்டுரைகள்,புத்தகங்கள், நேர்காணல் என்று ஹோவார்ட் ஜீனின் மனித நலன்களுக்கான பணி அளவிட முடியாதது.அமெரிக்காவின் முதலாளித்துவ தவறுகளை விமர்சிக்கும் நோம் சாம்ஸ்கிக்கும் முன்னோடி ஹோவர்ட் ஜீன்.

பதிவுக்கான கரு:

Ellis, Deb and Mueller, Denis. Howard Zinn: You Can't Be Neutral on a Moving Train. (film 2004)

மேலும் தகவல் இணைய தேடலில் January 27, 2010ல் நீச்சல் குளத்தில் குளித்துக்கொன்டிருக்கும் போது இதய அழுத்தத்தால் இறந்து விட்டார் என்கிறது விக்கிபீடியா.