Followers

Friday, August 15, 2008

ஆகஸ்ட் மாத படப்போட்டிக்கு

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.இறுதி நேரத்தில் எனது படங்களும் ஆகஸ்ட் மாதப் போட்டிக்கு.இன்றைக்கு சுதந்திர தினக் கொடியேற்றத்துக்கு காலையில் குவைத் தூதரகம் போய்விட்டு தூதரகக் கொடியேற்றுவிழாவை படம் எடுத்துப்போடலாம் என நினைத்தேன்.முன்பெல்லாம் எந்த வித ராணுவ போலிஸ் பாதுகாப்பும் இன்றி கொடியேற்று விழா இனிதே நடக்கும்.மாறும் காலங்கள் வரிசையாக கார்களில் தேடல்கள்.மேலும் காமிரா அனுமதியில்லை.எனவே கொடியேற்று விழாவுக்குப் பதிலாக சாலைகளில் அலைந்து கிடைத்தப் படத்தில் பின் தயாரிப்புடன் உங்கள் பார்வைக்கு.முதல் படம் போட்டிக்கு.


தொழுகைக் கூடமும் கூடவே துணையிருக்கும் ஜீப் செரோக்கியும்

சின்ன தனியார் மருத்துவ மனை வீட்டின் பக்கத்தில்
மனித உழைப்பைக் குறைத்து இயந்திரங்கள் உழைத்துக் களைத்து ஓய்வு.
சூரியப் பார்வை
கடற்கரைக் காற்றும் சூரிய அஸ்தமனமும்.


அனைவருக்கும் மீண்டும் சுதந்திர தின வாழ்த்துக்களுடன்

ராஜ நடராஜன்.

Wednesday, August 13, 2008

உற்பத்தியாளர்களுக்கு நல்ல செய்தி


உலகத்தின் பணக்கார நாடுகளில் ஒன்றான குவைத்தில் போர்,விலையேற்றம் போன்ற காரணங்களால் பெட்ரோலின் விலை உலகளவில் ஏற்றத்திலிருந்தாலும் பணவீக்கம் 11% ஏப்ரல்,மே மாதம் முதல் அதிகரித்துள்ளது.இந்த நிலையில் அத்தியாவசியமான பொருட்களின் விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் வியாபாரிகளுக்கு இதுவரை அளித்து வந்த இறக்குமதியை கூட்டுறவு சங்கங்களே நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து கொண்டு வரத்திட்டமிட்டுள்ளது.கூட்டுறவு சங்கங்கள் என்பது நமது ஊரின் சூப்பர் மார்க்கெட்டுக்களே.இங்கும் அப்படித்தான் அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் உற்பத்தி செய்பவர்களுக்கு இந்த செய்தி உதவிகரமாக இருக்கும் என நம்புகிறேன்.

முக்கியமான உபயோகிப்பாளர்கள் பொருட்கள் என்னென்ன?

அரிசி
சர்க்கரை
குளிர்பதனப் படுத்தப்பட்ட கோழிகள்
காய்கறிகள்
சோப்
டிடெர்ஜெண்ட் எனப்படும் குளியல் வகையறாக்கள்.

இந்த கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டுகள் பாதி அரசாங்க சலுகை பெற்ற கடைகள் என்பதாலும்,பணம் கொடுக்கல் வாங்கல் முழுமையாக வங்கியுடன் இணைக்கப்பட்டதாலும் உற்பத்தியாளர்கள் letter of credit வங்கிப் பத்திரங்களுடன் தாராளமாக வியாபாரம் செய்யலாம். மக்கள் தொலைக்காட்சியில் ஏற்றுமதி செய்வது எப்படி என்ற கேள்விகள் நிறையவே எழுப்பப் படுகிறது. பதிவைக் காண்பவர்கள் நேரடியாகவோ அல்லது மற்ற உற்பத்தியாளர்களுக்கும் கூட தகவல் உதவலாம். உலக சந்தை வியாபாரத்தில் நமது பொருட்களுக்கும் ஏற்றுமதிக்கான சந்தர்ப்பங்கள் அமைகின்றன.சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்வது நல்லது. இந்திய அரசாங்க அலுவல்காரர்களின் Bureaucratic கடுபிடிகள் குறைந்தால் அவர்களுக்கும்,மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது.

ஏற்றுமதிக்கு தேவையான முக்கிய சாராம்சங்கள்

1. Communication
2. Samples
3. Agreement plus terms & conditions
4. Payment methods .e.g - Letter of Credit.
5. Cost Plus over heads Calculation Plus busines margin

தற்போதைய ஒரு குவைத் தினார் = சுமார் ரூ 150 முதல் 156 வரை. உதாரணத்துக்கு திருப்பூரில் ஒரு டீசர்ட்டின் உற்பத்தி செலவும் லாபமும் சேர்ந்து சுமார் ரூ 25 முதல் 50 வரை ஆகிறதென்றால் இங்கே இறுதி உபயோகிப்பாளரிடம் விற்கும் போது அதன் விலை 125 முதல் 200 வரை ஆகிவிடுகிறது.இந்தக்கணக்கு வியாபாரி,தரகர், சிறுவியாபாரி நிலைகளைக் கடந்து வருவது.
இந்த நிலையைக் கடந்து வந்தால் அடுத்து ஏற்றுமதிக்காக தேவையான ஆவணங்கள்

1. Invoice
2. Packing List
3. Bill of Lading
4. Certificate of Origin

Certiificate of Origin should be certified and stamped by the Indian chamber of commerce or duly attested by the Kuwait Embassy in India.

நான் இதுவரை கவனித்த ஒரு விசயம் ஏனைய நாடுகளின் பொருட்களின் தரம் எந்த நிலையிலிருந்தாலும் பொருளின் packing என்ற கலையில் பொருளை அழகுபடுத்தி விற்பனை திறனை உயர்த்துகிறார்கள்.இதில் நாமும் கவனம் செலுத்துவது அவசியம்.மற்றவை மேற்கொண்டு சந்தேகங்கள் எழும் பட்சத்தில்.வணக்கம்.

Tuesday, August 12, 2008

நளினி ஜமிலாவும் சாருவும்

ஜெயகாந்தன் எழுத்தான sex is sacred but sex appeal is commercial vulgarity ன்னு வாசித்து விட்டு பின்பு சோவியத் யூனியன் என்ற கம்யூனிஸ சித்தாந்தங்கள் தோற்றுப்போன பின் ஜெயகாந்தனும் எழுத்துக்களை குறைத்து விட இப்பொழுது தொழில்நுட்ப மாற்றக் கலாச்சாரத்துக்கு மாறியபின் சாருவின் கோணல்பக்கங்களை தமிழ்மணத்துக்கு வந்ததன் மூலம் பதிவர்களின் எழுத்துக்களில் பார்வையிட்டு விட்டு தீபம் தொலைக்காட்சியில் சாருவின் முக அசைவுகளை முதன்முறையாக கவனிக்கும் வாய்ப்பு கிட்டியது.

நேற்று ராஜ் தொலைக்காட்சியில் ஒலிம்பிக்ஸ் 2008 அபினவ் பிந்த்ராவின் 28 ஆண்டு கழித்து கிடைத்த தங்கத்தைப் பார்வையிட்டு விட்டு மக்கள் தொலைக்காட்சியில் அரசாங்க உதவித்தொகையை பெறுவதற்காக வேண்டி அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் அரசாங்க அலுவலர்களின் கையூட்டு வாங்கும் பழக்கத்தால் படும் சிரமங்களின் வர்ணனைகளைப் பார்வையிட்டு விட்டு தீபம் தொலைக்காட்சிக்குத் தாவினால் ஒரு உரையாடல் நடந்து கொண்டிருக்கிறது.நிகழ்ச்சியை நடத்துபவர் சேலையுடன் பெண்ணாகத் தோற்றமளித்தாலும் பேச்சுக்குரல் ஆணுக்குரியதாக இருக்கிறதே என்று கவனித்தால் அவர் திருநங்கைபோல் இருக்கிறது.அவருக்கு எதிரில் மற்றொரு பெண் பாலியல் பற்றி விவரித்துக் கொண்டுள்ளார்.அன்றாடத் திரைப்படங்களுக்கு மத்தியில் களம் புதியதாக தோற்றமளிக்கவே அலைவரிசையை மாற்றாமல் கவனித்தேன்.நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் பெயர் நளினி ஜமிலா-பாலியல் தொழிலாளி-எழுத்தாளர் என்ற எழுத்துக்களுடன் உரையாடல் தொடர்கிறது.இடையில் வந்ததால் பேட்டி காணும் திருநங்கை யாரென்று பெயர் தெரியவில்லை.ஆனால் நிகழ்ச்சியின் இடைவேளைக்குப் பிறகு இப்படிக்கு தமிழுடனும் ரோஸ் ஆங்கிலத்துடனும் நிகழ்ச்சி தொடர்ந்தது. இந்த மாதிரி கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையெல்லாம் இந்தி நடிகர் அனுபம் கேரின் மனைவி கிரண் கேர் தொலைகாட்சிப் புற்றீசல்களின் துவக்கத்திலேயே நிகழ்த்தி அடித்து துவைத்து காயப்போட்டு விட்டார்.இம்மாதிரி நிகழ்ச்சிகள் இன்னும் வடக்கு திசையில் நிகழ்கிறதா எனத் தெரியவில்லை.

முன்பு கமலாதாஸ் எழுதிய சுயசரிதம் எண்ட கதா என நினைக்கிறேன்.கேரளாவிலும் ஏனைய எழுத்துழகிலும் ஒரு சலசலப்பை உருவாக்கியது.பின் அருந்ததி ராய் 1992 ல் தனது The God of Small Things புக்கர் பிரைஸ் முதல் நாவல் மூலம் அறிமுகமாகி, கம்யூனிசப் பார்வை,பொக்ரான் அணுகுண்டு சோதனை,நீதியக அவமதிப்பு ,அமெரிக்க எதிர்வாதம் என்று சொல்லி பிரபலமாகி விட்டார். இப்போது நளினி ஜமிலாவின் வலம் போல் தெரிகிறது. அவர் தற்போது கேரளாவில் வசித்து வருகிறார். இவர் தனது வாழ்க்கை அனுபவங்களை எழுதிய Oru Laingikattolilaliyute atmakatha - என்ற மலையாளப் புத்தகம் "Oru Paaliyal Thozhilaaliyin Suyacharithai" (An Autobiography of a Sex Worker) in Tamil translation, புத்தக சரிதையுடன் பேட்டியில் பங்கு கொள்கிறார். எப்படி பாலியல் தொழிலுக்கு வந்தார் என்று விபரங்கள் தெரியவில்லை. ஆனால் தன்னை அனுபவித்த காவல்துறை அதிகாரி அதன்பின் காவல்நிலையத்தில் ஒப்படைத்ததாக கூறினார்.காவல்நிலையத்தில் காவலர்கள் கணுக்காலில் அடித்தால் காப்பாற்று என்று அலறவேண்டுமாம்.அப்படி அலறினால் மூன்று அடியுடன் விட்டு விடுவார்களாம்.ஆனால் இவரோ வலியையும் தாங்கிக்கொண்டு பிடிவாதமாக இருந்தாராம்.அதனால் மீண்டும் மூன்று அடி கால்மேல் விழுந்ததாம்.அதற்கும் அவர் பொறுமையாக இருக்கவே மீண்டும் முதுகில் இரண்டு சாத்தல்.

பேட்டி கண்டவர் வாடிக்கையாளர்கள் உங்களிடம் எப்படி அணுகுகிறார்கள் என்றதற்கு "ஆண்கள் உண்மையிலேயே பாவம்!பெரும்பாலான ஆண்கள் பயந்தவர்கள்.வலியப் போய் சைகை செய்தாலோ,அணுகினால் மட்டுமே மடிகிறார்களாம்.கையில காசு வாயில தோசைப் புதுப்பாட்டின் படி காசை
வசூலித்து விடுவேன் என்றார்.இலக்கியத்திலிருந்து பாடல் ஒன்று மேற்கோள் சொன்னார்.மேலும் அந்தக் காலத்தில் பெண்கள் சாவகாசம் என்பது அரச
பரம்பரைக்கும்,மந்திரிகளுக்கும்!!!சேனாதிபதிகளுக்குமே வாய்த்ததாகவும்,சாதாரணக் குடிமக்களுக்கு அந்த அனுபவங்கள்
போய்ச்சேரவில்லையென்றார்.கோயில் சிற்பங்கள் பற்றியெல்லாம் சொன்னார்.தன்னைப் பார்த்து இந்த தொழிலுக்கு யாரும் வந்ததாக இதுவரை யாரும் தன்னிடம் சொல்லவில்லையென்றும் இனிமேலும் யாரும் தனது அனுபவங்களைப் பார்த்து வந்து விட மாட்டார்கள் என்று நம்புவதாகவும் கூறினார். மங்களகரமாக வாழ்க்கை அமையும் போது பாலியலும் வாழ்க்கையின் பல மகிழ்ச்சிகளில் ஒரு அங்கம்தான்.ஆனால் பாலியல் தொழிலில் அது அவசரத்தில் செய்யும் சிசேரியன் சிகிச்சை மாதிரி என்றார்.இன்னும் நிறைய சொன்னார்.


இவரது பேச்சின் இடையில் பேட்டி காண்பவரால் காமிராவுக்கு வரவழைக்கப்பட்டவர் எழுத்தாளர் சாரு நிவேதிதா. பதிவுகளில்தான் தமிழ்ச்சினிமாவுக்கு வில்லன் பாத்திரத்திற்கு தகுந்தவர் என்ற முத்திரை குத்தப்பட்டிருந்தாலும் காமிராவுக்கு முன் மனிதர் கண்ணுக்கு கண்ணாடி போட்டுக்கொண்டு மெல்லிய குரலில் பயந்த சுபாவம் கொண்டவர் மாதிரி எனக்குத் தோற்றமளித்தார்.எழுத்தில்தான் அவரது ஆக்கமும் ஆதிக்கமும் என
நினைக்கிறேன்.தொலைக்காட்சிக்கு முன் சாதுவாக முரண்நடையாகத்தான் பேசுகிறார்.தனக்கு பெண்களைப் பற்றி அதிகம் தெரியாது.ஆனால் ஆண்களின்
குணம் நன்கு தெரியுமென்றார்.இந்திய ஆண்களிடம் பெண்களிடத்தில் Hunting mentality ( இது எனது வார்த்தை) உள்ளதாம்.அதாவது 10 மணிக்கு மேல்
எந்தப் பெண்ணும் இரவில் தனியாக நடமாட முடியாது என்றும் ஆண்களிடத்தில் ஒரு வேட்டைப் புலியின் பசி இருப்பதாகவும் சொன்னார்.தாய்லாந்தைப் பாருங்கள்.பாலியல் தொழில் சட்டமாக்கப் பட்டு விட்டதால் அங்கே ஒரு கற்பழிப்பு கூட இல்லையெனவும் பெண்கள் சுதந்திரமாகத் திரியலாம் என்றார். மேலும் தொண்ணூறாயிரம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளார்கள் என்றும் பாலியலை சட்டபூர்வமாக்கி விட்டால் பாலியல் குற்றங்கள் குறையும்,காவலர்கள்,இடைத்தரகர்கள் குற்றவியல் குறையும்.எச்.ஐ.வி போன்ற நோய்கள் குறையும் வாய்ப்புக்கள் உண்டு என்றார்.இந்த வாதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.தவறுகள் குறைவாக நடக்கும் நிலையில் இதனை முழு சமுதாய மாற்றமாக்கி விடலாமென்பது முழு நேர எழுத்தாள சிந்தனைக்கு உகந்ததல்ல.

மேலும் தற்போது மேலை நாட்டுக்கலாச்சாரத்துக்கு ஆட்பட்டு இளம்பெண்கள் சுமார் 30 வயது வரை பாக்கெட் மணி எனும் கலாச்சாரத்துக்கு மோகம் கொள்கிறார்கள் என்றார்.தனது உடை,முக அலங்காரம்.தலை அலங்காரம் போன்ற செலவுகளுக்காக வேண்டியே இந்த பாக்கெட் மணிக்கு செல்கிறார்கள் என்றார்.

இதனிடையில் வித்யா என்ற பாலியல் தொழிலாளி பேட்டிக்கு வரவழைக்கப்பட்டார். இந்த வாழ்க்கையை தானே தேர்ந்தெடுத்துக் கொண்டதாகவும் இந்த வாழ்க்கை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் சொன்னார்.இப்பொழுது நளினி ஜமிலாவைப் பார்த்து தைரியம் கொண்டு காமிரா முன் வந்ததாக சொன்னார்.அவர் அதிகம் பேசவில்லை.பேட்டியாளர்,நளினி ஜமிலா.சாரு நிவேதிதாவின் பேச்சுக்களை கவனிக்கும் பார்வையாளராய் மட்டும் தோன்றினார்.நிகழ்ச்சியின் இறுதியாக காட்சியாளர் நளினியைக் கட்டிப்பிடித்து அரக்குநிறப் பட்டுச்சேலையை நளினியின் தோளில் சாத்தினார்.முதுகில் வாங்கிய சாத்தலுக்கு அனுபவமும்,துணிவும்,எழுத்தும் தந்த அங்கீகாரம் போலும் இந்த பட்டுச்சேலை சாத்தல்.நிகழ்ச்சியாளர் அழகான தமிழும்,ஆங்கிலமும் பேசுகிறார்.இந்தமாதிரி இந்த இருநிலை வாழ்மக்களின் வாழ்க்கை நிலை மாறவேண்டும்.

இவ்வளவு நேரம் தொலைக்காட்சி கதை சொல்லி விட்டு எனது பார்வையையும் சொல்லி விட்டுப் போகலாம் என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் மதுவிலக்கு காலத்தில் யாராவது குடிக்க வேண்டுமென்றால் பெங்களூர்ப் பக்கமோ,பாண்டிச்சேரி பக்கமோ போகவேண்டும்.அப்படி வண்டி கட்டிக்கொண்டு போவது எத்தனை பேருக்கு சாத்தியம்?லாரி டிரைவர்களுக்கும்.கல்லூரி உல்லாசப் பயணம் போகும் தருணங்கள் மாத்திரமே அந்த மாதிரி கோலாகலங்களுக்கு உதவியது.அன்றாட வாழ்வில் குடிக்காத மனிதர்கள் அதிகமாகவும்,கெட்ட பழக்கங்கள் தொத்திக்கொள்ளும் குறைந்த பட்ச மனிதர்கள் மாத்திரமே நிறைந்த வாழ்க்கையாக இருந்தது.சென்னை போன்ற பெரும் நகரில் மட்டும் கஞ்சா போன்ற பெட்டிக்கடைகளும் அதனை உபயோகிக்கும் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.வாழ்க்கையின் அன்றாடப் பிரச்சினைகளின் மூச்சுத்திணறலே பெரிதாக இருந்த சூழ்நிலையில் நமது வருமானமெல்லாம் அண்டை மாநிலத்துக்குப் போய்ச் சேர்கிறது என்ற வரி வசூலிப்பு சாம்ராஜ்யத்தில் உருவான கொள்கையில் வந்ததல்லவா தற்போதைய டாஸ்மாக் மற்றும் மதுபானக் கடைகள்.

தமிழ்நாட்டு சீதோஷ்ண நிலைக்கு சரிப்பட்டு வராத காரணமிருந்தாலும் கூட குடிப்பதும் கூட நாகரீகம்.ஆனால் நமது மக்களுக்கு குடிப்பதெப்படி என்ற பாலபாடம் கூட எடுக்காமல் திரைப்படத்தில் கதாநாயகன் முழுபாட்டில் ஸ்காட்ச் ஸ்டிக்கருடன் தேநீர் பானத்தை மொடக்குவதைப் பார்த்துவிட்டு நமது அப்பாவி குடி ரசிக சிகாமணிகள் அதே பாணியில் மொடக்குகிறார்கள். மீண்டும் ஒரு முறை ஜெயகாந்தனை தேடிப்பார்க்கவேண்டும்,பார்ட்டி எனப்படும் விருந்துகளில் குடிப்பது எப்படி என்ற சொல்விளையாடலை.

காலை எட்டுமணியளவில் கூட குடித்துவிட்டு தேனாம்பேட்டை வண்டி நிறுத்தத்தில் இறங்கவேண்டிய பயணி நிறுத்துனர் சொல்லியும் கேட்காமல் வண்டிக்குள்ளேயே முணங்கும் காட்சியெல்லாம் சென்னையில் சர்வசாதாரணம்.இப்பொழுது தமிழ்நாடே குடிக்கலாச்சாரமாக்கிவிட்டு போதையில் தன்னிலை இழக்கும் மனிதன் பாலியல் தவறுகளுக்கும் தூண்டப்பட்டு விடுகிறான்.அந்தமாதிரி சூழலில் வேண்டுமானால் சாரு சொல்லும் வேட்டைப்புலி பசி வருவதற்கான சந்தர்ப்பம் ஆணுக்கு தோன்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.பதினைந்து வயது வரை கலாச்சார புடம்போடப்பட்டு இன்னும் பத்து வயதுகள் கல்லூரிக் கனவுகள்,காதல் நினைவுகளுடன் வாழ்க்கைப் பாடத்துக்குள் எட்டிப்பார்க்கும் அடுத்த ஐந்து ஆண்டு வரை வாழ்க்கை சீராக செல்கிறதென்று வையுங்கள். அடுத்து வரும் காலங்களைத் தீர்மானிக்கும் மன ஆற்றல் உங்களிடமே.உடல் உபாதைகளுக்காக யாரும் வீடு கட்டிக்கொள்வதில்லை.அந்த உபாதையும் ஒரு அங்கம்தான்.எனவே ஒதுக்குப்புறமாக அதற்கும் ஒரு அறை என்பதே சரியாக இருக்கும்.இதைப் பற்றியெல்லாம் யோசிக்காமலிருக்குமளவுக்கு மனிதனுக்கு அன்றாடப் பிரச்சினைகள் ஆயிரம் இருக்கிறது.வறுமைக் கோட்டின் எல்லையைக் கடக்கும் நிலை வந்துவிட்டால் பாலியல் தொழிலாக மாறாமல் இருக்கும் வாய்ப்புக்கள் அதிகம். இறுதியாக பாலியல் சட்ட முத்திரையிட்டுக் கொண்டு சமுதாயத்திலிருந்து பெண்களே நீங்கள் மீண்டுமொரு முறை தேவதாசி தனிமைப்பட்டுப் போகாதீர்கள்.

Thursday, August 7, 2008

மேசை நாகரீகம்

இந்தப் பதிவு புதுகைத் தென்றலின் மேசை நாகரீகம் பதிவைப் படித்ததன் விளைவு.பெரும்பாலான விசயங்கள் அங்கேயே காணக்கிடைக்கின்றன.விட்டுப்போனதையும் எனக்குத்தெரிந்ததையும் சொல்லிப்போகிறேன்.

உணவு விடுதிகளில் குடும்பம் நண்பர்கள் சகிதம் போகும்போது ஆண்கள் நாற்காலியை பின்புறம் இழுத்து குழந்தைகள், பெண்கள் உட்காருவதற்காக உதவி புரியலாம். மேசையில் உட்கார்ந்தவுடன் வெயிட்டர் எனும் உணவுப் பரிமாறுபவர் ஒரு புன்சிரிப்புடன் வணக்கம் சொல்கிறாரா என்று கவனியுங்கள்.அவர் வேலைப் பளுவில் சொல்ல மறந்து போனாலும் நீங்கள் அவருக்கு ஒரு புன்முறுவலுடன் ஹலோ சொல்லலாம்:)

பரிமாறுபவர் முதலில் தண்ணீர் கொண்டு வந்து கிளாஸ் எனும் குப்பியில் ஊற்றவேண்டும். அவர் ஊற்றும் நீரின் அளவு குப்பியின் முக்கால் பாகத்தை தொடவேண்டும்.அவரின் "தல" அவருக்கு சரியாகப் பயிற்சி தந்திருந்தால் நீரை உங்களுக்கு வலதுபுறமாகவே குப்பியில் ஊற்றவேண்டும். கிடைக்கிற சந்துலயெல்லாம் எட்டி எட்டி தண்ணீரை ஊற்றினார்ன்னு வச்சுக்குங்க!தம்பி பரிமாறல் கலையில் அரைகுறைன்னு அர்த்தம்.உணவு பரிமாறும் போதும் உங்களுக்கு இடது புறமாகவே பரிமாறவேண்டும்.

அப்புறம் மெனு படிக்கிறதும் பட்ஜெட்டும்தான் உங்களுக்குத் தெரியுமே! ஆனால் பரிமாறுபவருக்கு சொல்லும்போது ஐந்து வகையான உணவுகளைக் கொண்டு வரச்சொல்வது முறை.முதலில் அபிடைசர் எனும் சூப் அடுத்து ஆண்ட்ரே எனும் சின்ன நொறுக்குத்தீனி அதற்கடுத்து மெயின் டிஷ் எனும் முக்கிய உணவு,பின் டெசர்ட் எனப்படும் இனிப்பு பின் காபி அல்லது சாயா.(இந்த காபிக்கும் மதுவுக்கும் ஒரு தொடர்பு உண்டு.மதுவிலக்கின் காரணமாக அதுபற்றியெல்லாம் கூவ மாட்டேன்.வேண்டுமென்பவர்கள் பக்கத்துல இருக்கும் "பார்" க்கு ஒரு மெல்லிய நடைப்போய்விட்டு வந்து விடுவது நல்லது).

புதுகைத் தென்றலின் பதிவின் நான் மாறுபடும் இரண்டு டிப்ஸ்.

1 .கையில் எடுத்த நாப்கின்னை மடியில் விரித்துக்கொள்ளலாம் அல்லது கழுத்தின் முன்புறமும் மாட்டிக்கொள்ளலாம்.

2. ஃபோர்க் & ஸ்பூனை உங்களது பிளேட்டின் இடது புறமும் வலது புறமும் ஒன்றையொன்று கண்ணும் கண்ணும் நோக்கினால் நான் இன்னும் சாப்பாட்டை முடிக்கவில்லை.பரிமாறுபவரே தொடாதே தட்டையென்று அர்த்தம்.அதையே உங்களுக்கு நேராக ஒன்றையொன்று தொட்டிக்கொள்ளும்படி வைத்தால் நீங்கள் உணவை முடித்துவிட்டதாக அர்த்தம்.சொல்லிக் கொண்டே போகலாம் உணவு என்ற கடோத்கஜ கலையை.உண்ணும் உணவு மனிதனின் கலாச்சாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.அது இடத்துக்கு இடம் தேசத்துக்கு தேசம் மாறுகிறது.

எனக்கு இதுவரை புரியாத உணவகங்களின் மேசை நாகரீகம் என்னவென்றால் எல்லோருமே உணவைப் பரிமாறுபவர்க்கே டிப்ஸ் வழங்குவது.சமயலறையில் உஷ்ணத்தில் உணவு தயாரிக்கும் சமையல்காரர்களை யாருமே கண்டு கொள்வதில்லை.உணவு உண்பதின் மகிழ்ச்சியில் பெரும்பான்மையான பங்கு அவர்களுடையது.இந்த மேசை நாகரீகத்தை இனி கொஞ்சம் தலைகீழாக்கிக் காட்டவேண்டும்.

இந்த தொந்தரவே வேண்டாம் சாமி சொல்றவங்களுக்கு உடுப்பி மாதிரி உணவகம் இருக்குது.சில்வர் தட்டில் குட்டி குட்டியான பக்கவாத்திய காய்கறிகளுடன் சப்பாத்தி,பூரியுடன் சாதமும் கலந்தடித்து பருப்பு,ரசம்,தயிர்,இனிப்பு எனவும் ஏப்பம் விடலாம்.

குசும்பன் மாதிரி சில புது மாப்பிள்ளைகள் இருக்கிறார்கள்.அபி அப்பா மாதிரி ஆட்கள் வீட்டுக்கு விருந்துக்குப் போய்விட்டு புத்தகங்களையும் ஆட்டையப் போட்டு வந்து விடுவார்கள்.வீட்டுச்சாப்பாடு,ஓட்டலுக்கு சாப்பிடப்போறோமாக்கும்ன்னு அவங்க தோட்டத்துல எப்பவுமே முப்போகம்தான்.

வருத்தப்படாத வாலிபர் சங்கமுன்னு ஒரு கூட்டம் இருக்குது.அவங்களுக்கும் சின்ன டிப்ஸ்.கண் கண்ட இடத்தில் ருசிமட்டுமல்லாது சுகாதாரமும் தரும் சைவ அசைவ உணவகங்களில் பூந்து விளையாடுங்க.அமீரகமாக இருந்தால் சேட்டன்களின் மெம்பர் மட்டுமே துணை.மேற்குப் பக்கம் சுத்தறவுங்களுக்கு KFC யும் சிப்சும்,பிஸாவும் பெப்சியுமே வரம். கிழக்குப்பக்கம் சுத்துபவர்களுக்கு கிடைப்பதெல்லாம் சாப்பிடுங்க.ஆனால் தவளை மாதிரி உணவுகளுக்குத் தாண்டி விடாதீங்க.திருவல்லிக்கேணிப் பக்கமிருந்து வாழ்க்கையை அனுபவிக்கிறவர்களுக்கு மூலை மூலைக்கு மெஸ்களிருக்கும்.வாழை இலையில் சாதத்தை பாத்தி கட்டி அடிங்க ஒரு நாள் வாழ்வின் திசை மாறும் என்ற நம்பிக்கையுடன். மதுரைப்பக்கம் முக்கியமாக கோயம்புத்தூர் பக்கம் இருக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்க உறுப்பினர்களுக்கு சொல்லிக்கொள்வது உணவு விசயத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.பதிவு இன்னும் நீளும் போல் தெரிகிறது.அதனால் இப்போதைக்கு இதுவரைக்கும்.......

Wednesday, August 6, 2008

கண்ணில் படும் தங்கிலீஷ்

பின்னூட்டம் படிக்கும் விளைவினால் உண்டான பதிவு.

பதிவுகளிடுவதை விட அதிகமாக சக பதிவர்களின் மனவியலுக்குத் தக்கவாறான பதிவுகளையும் பின்னூட்டங்களையும் பார்வையிடுவதில்தான் ஆவல் அதிகரிக்கிறது.ஒரு பதிவரின் கருத்துக்கள் பல கோணங்களில் வந்து விழும் பின்னூட்டங்களே பதிவின் சுவையையும், பார்வைகளின் பரிணாமங்களையும் அதிகரிக்கின்றன.

பெரும்பாலான பதிவுகளைப் பார்வையிட்டு பின் தொடரும் பின்னூட்டங்களைக் காணும்போது பெரும்பான்மையான பின்னூட்டங்கள் உண்மையிலேயே அசத்துகின்றன.ஆனால் எனக்குப் புரியாத மொழியொன்று பின்னூட்டங்களில் திடீரென குட்டிக்கரணம் போட்டு பார்வையின் முன்வந்து நிற்கின்றது. எழுத்தில்லா மொழிகள் எத்தனையென்று எனக்குத் தெரியாது.துளுவுக்கு எழுத்தில்லை என அறிகிறேன்.(தவறாக இருந்தால் அறியத்தரும்பட்சத்தில் திருத்திக்கொள்ள விரும்புகிறேன்) அதேபோல் கோவா மாநிலத்தில் பேசப்படும் கொங்கணிக்கும் எழுத்துரு கிடையாது.இன்னும் கொஞ்சம் தேசம் கடந்தால் பிலிப்பைன்ஸ் நாட்டில் பேசப்படும் தகாலக் (Tagalog) மொழிக்கும் எழுத்துரு கிடையாது.

இங்கு குறிப்பிட்ட மொழிகள் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு உச்சரிப்பின் நிலைகொண்டு மொழியாகத் தோற்றம் கொள்கிறது. உதாரணத்துக்கு, ஆடுமாடு வின் இந்தி கற்றுக்கொள்ளுங்கள் பதிவின் நடையில் சில சொற்றொடர்கள் பார்வைக்கு.

நலமா? = பொராமரே? என்ற கோவாவின் கொங்கணி வார்த்தை ஆங்கில எழுத்துருவுக்கு மாறும்போது = Poramare?

நலமா?=கொமஸ்தக்கா? என்ற பிலிப்பைன்ஸ் தேசத்து தகாலக் வார்த்தை ஆங்கில எழுத்துருவுக்கு மாறும்போது = Komastaka?

இனி தங்கிலீஷ்க்கு வருவோம். பதிவிற்கு பதிவன்பர் பின்னூட்டமிடுகிறாராம்!

ungal pathivu ass athukirathu.enaku ore athisayam eppadi ungalal ippadi kirukka mudikirathenru?

மேலே குறிப்பிட்ட தங்கிலீஷை இகலப்பையில் உழுதோ 99 ல் நிபுணத்துவம் இருந்தால்

//உங்கள் பதிவு அசத்துகிறது.எனக்கு ஒரே அதிசயம் எப்படி உங்களால் இப்படி கிறுக்க முடிகிறதென்று?//

என்று பின்னூட்டமிட்டால் தமிழுக்கும் அழகு!பதிவர் வட்டத்துக்கும் ,என்னைப் போன்ற தங்கிலீஷை உற்று நோக்கியோ தடவி தடவியோ படிப்பவர்களின் மணித்துளிகள் வீணாக்கப்படாமலும் முக்கியமாக மண்டைக்குடைச்சல் இல்லாமலும் இருக்கும். தங்கிலீஷ் வரும்போது பெரும்பாலும் படிக்காமல் தாண்டிவிடுகிறேன். அதனால் தங்கிலிஷ் எழுதிய உங்களுக்கும் உங்கள் எழுத்து என்னைப்போன்றவர்களுக்குப் போய்ச்சேராத இழப்பு.

பதிவிலும் ஆழ்ந்துவிட்டு ஏனைய பின்னூட்டங்களையும் ரசித்துவிட்டு ஒரே ஒரு தங்கிலிஷ் பின்னூட்டத்தைப் படிக்காமல் இழக்கும்போது அழகான ஓவியத்தை ரசித்துவிட்டு அதில் ஏதோ ஒன்று குறையான உணர்வு.

சில சமயம் வேலைப்பளுவின் ஊடே இகலப்பையில் உழ முடியாத தருணங்கள் நேரிடும் போது இப்படியாவது

You are looking at one side of the coin! Let me explain my point of view....

என்று ஆங்கிலத்திலாவது பின்னூட்டம் போடலாமே!

கும்மியர்களுடன் கொட்டம் அடிப்போம்,நகைச்சுவை காண்போம்:)உரைநடை பழகுவோம்,கவிதை வடிப்போம்,இலக்கியம் கொண்டு வருவோம்,எழுத்து வாசனை அறிவோம்,பார்வைகளின் பரிணாமங்களைத் தொடுவோம்,சி,வி.ஆர். சித்திரம் பழகுவோம்,பிரேம்ஜி தொழில்நுட்பம் உணர்வோம்.சிந்தனை கொள்வோம்,பதிவுகள் வளர்ப்போம்,புரியாத பின்நவீனத்துவ வார்த்தை ஜாலங்களையாவது பதிவில் கொண்டு வருவோம்.இன்னும் விட்டவைகளையும் தொட்டுக்கொள்வோம்!எழுத்து நயத்திலாவது மூளை அணுக்கள் எதனையாவது கிரகித்துக் கொள்ளட்டும்!

டிஸ்கி: அடுத்தவர் தங்கிலீஷ் எழுத்துரிமையில் தலையிடுவது நல்லதில்லைதான்.ஆனால் இந்த எழுத்துக்கள் என் கண்ணையல்லவா நோகடிக்கிறது:)

Friday, August 1, 2008

பாவமய்யா குசேலன்

பின்னூட்டங்கள் போட்டுப் போட்டு வந்த வண்ணத்துப்பூச்சி விளைவினால் இந்தப் பதிவு.(அதுதாங்க chaos theory ன்னு இப்பவெல்லாம் அடிக்கடி பதிவுகள்ல படுதே)

எல்லோரும் சேர்ந்து இப்படி மொத்து மொத்துன்னு மொத்துனா அந்த மனுசன் என்னதான் பண்ணுவார் பாவம்? விட்டுடுங்கய்யா கைவலிக்குது.போகிற பக்கமெல்லாம் வாங்கய்யா மொத்தறதுக்குன்னுதான் சத்தம் கேட்குது.விட்டுடுங்கய்யா அப்பாவிய.(என்னச்சொன்னேன்)

திருவான்மியூரு கடலுப்பக்கம் நாலஞ்சு பேரோட முன்னால காமிராவ வச்சிகிட்டு ஒருத்தரு பின்னாலேயே நகர இவரு காமிராவுக்கு முன்னால மெல்ல அந்த மணல்ல ஓடுறாரு. மனுசன் தலையில முடியெல்லாம் விக் வெக்காம அசலாவே இருந்தாரு.அப்படி கம்முன்னு கடற்கரைப் பக்கம் தனியா ஓடிகிட்டுக்கிடந்த மனுசன யாரு எப்ப தலையில தூக்கிவெச்சிகிட்டாங்களோ தெரியல.மனுசன் தமிழ்நாட்டுலேயே பெரிய ஆளா ஆகிட்டாரு.

கையத்தூக்கினா ஸ்டைலு,வாயத் திறந்தா மைக் பதிவுன்னு மனுசன் இப்ப ஜமாய்க்கிறாரு.இப்ப அவரு தலையில தொப்பி போட்டுகிட்டுப் பேசினா சத்தம்.நான் சாதாரண மனுசன்னு சொல்லி அவரோட தாய்மொழியில பேசினா குத்தம்.மனுசன் அரசியலுக்கு வரலியேன்னு சிலருக்கு கோபம்.எப்படியாவது அவர அரசியலுக்குள்ள கொண்டுவந்துடனுமுன்னும் சிலருக்கு தாபம்.துவக்கமா கருப்புத்துண்டு போட்டுகிட்டு வை.கோவும்,மொட்டத்தலையோட சோவும் முயற்சி பண்ணி தோத்துப்பிட்டாங்க.அந்த மனுசனுக்கும் வரலாமா வேண்டாமான்னு டைலமொ டைலமொன்னு பாட்டுச்சத்தம் வேற காதுக்குள்ள கேட்டுகிட்டே இருந்தது.இப்ப மொத்தற மொத்துல கொஞ்சம் நஞ்சமிருந்த ஆசையும் விட்டுப்போயிருக்குமுன்னு உறுதியா நம்பலாம்.

பதிவர்கள் மொத்தறுதுக்கு முன்னாடியே மைக்கப் பிடிச்சிகிட்டு இதுதான் சந்தர்ப்பமுன்னு படப்பொட்டி தியேட்டருக்குள்ளே போறதுக்கு முன்னாடியே சகலபாடிகள் பாடித்தீர்த்துட்டாங்க.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணகாரியங்கள்.நமக்கு அரசியல தனியா பார்க்கப் பிடிக்கிறதுல்ல.கூடவே சினிமாவும் சேர்ந்தாத்தான் சுவையாயிருக்குது. அரபிநாட்டுக்காரன் லிப்டன் டீய மட்டும் தனியாக் குடிச்சிடறான்.நம்ம நாக்குக்கு டீயோட வடையும் இருந்தாத்தான் டீ ருசிக்குது.எல்லாமே எதுகையும் மோனையுமா இருந்தாத்தான் வாழ்க்கை இனிக்குது.

நம்மவர்களுக்கு வேணுமின்னா தலையில தூக்கி வெச்சிக்கிடறது.வேண்டாமுன்னா எட்டி ஒரே உதை.அப்படியே பழக்கமாயிடுச்சு.
நமக்கு கோபத்திலும் அன்புக் காட்டறது எப்படின்னு ஒரு சின்ன உதாரணம்.(ச்சின்னப் பையானா இருக்கும்போது மருதமுத்துன்னு நண்பன் அவன் தங்கைய இப்படித்தான் அன்பு காட்டுவான்."ஜெயா!எட்டி உதைச்சேன்னா அப்படியே அட்டாலிக்குப் போயிடுவே!ஜாக்கிரதை)அப்படித்தான் குசேலன் சகபதிவுகளையும் படிக்கும்போதும் மனசுக்குப் பட்டது.

தொப்பி போட்டிகிட்டு பேசிகிட்டுப் பேசிய தமிழையும் அரசியல் சூழலைத்தனியாகவும் மேக்கப்போடாமல் வியாபார சூழலுக்கான காமிரா முன்னால் தனியாகப் பேசிய கன்னடத்தையும் தனியாகப் பிரிக்கும் பாங்கும் இருந்தால் பதிவுகளிலும் மைக்குகளிலும் அந்த அப்புராணி மனுசனை இந்த வாங்கு வாங்கி வறுவல் செய்யத் தேவையிருக்காது.மலையாள மொழிக்காரனைத்தவிர தென்னகத்தில அரசியலும் சினிமாவும் அண்ணன் தம்பிகளா ஆகிப்போன அவலங்களில் சிக்கிக்கொண்டு வேண்டாமய்யா இந்த வம்புன்னு இமயமலை வரைக்கும் ஓடியும் கூட அந்தப் புள்ளப்பூச்சிய நாம் விட்ட பாடாக் காணோம்.

ஒரு தலைவன் தவறு செய்யும்போது ஒரு தொண்டன் கோபம் கொள்வதில் அர்த்தமிருக்கிறது.தலைவனில்லாத தலைவனாகும் விருப்பமில்லாத மனிதனை தலைவனாக தானே கற்பனை செய்யும் கோளாறுகளினாலும்,சொல்வதெற்கெல்லாம் புதுப்புது அர்த்தங்கள் கண்டுபிடிக்கும் வியாக்கியானங்களால் வரும் விபரீதங்கள் இந்தக் கோபங்கள்.எப்படியோ அடுத்த திகில் சம்பவங்களோ,தினசரி மாற்றங்களோ நிகழும் வரை எங்களிடம் சரக்கிருக்கிறது புலம்பித்தீர்க்க.

இனி மொத்தறதுக்கும் வறுவலுக்கும் வழிவிட்டு விலகி நிற்கிறேன்.அனானிகள் மட்டும் அந்த மூலையிலே நின்னு வேடிக்கை பாருங்க:)