முந்தைய பதிவில் பொள்ளாச்சி பற்றி நினைத்ததும் கோவையிலிருந்து வால்பாறை வரையும் (சரியாகச் சொன்னால் ஐயர்பாடி தேயிலைத் தோட்டம்) பின் அங்கிருந்து கோவை வரையிலும் சைக்கிள் மிதித்து சென்று வந்த அனுபவம் நினைவுக்கு வருகிறது.
சைக்கிள் என்றதும் சின்ன வயதில் சைக்கிள் கற்றுக் கொள்வதற்கு கூட்டாளிகளே துணை என்ற நிலை.வாடகை சைக்கிள் கடையில் காசு கட்டி சைக்கிள் எடுத்தால் சின்னப்பன்,சக்திவேல் கூட சித்தப்பா பையன் தங்கராஜ் என்ற சைக்கிள் அனுபவம் உள்ள அனுபவம் கொள்ள முயற்சிக்கும் நண்பர்கள் ஒரு மணி நேரத்தில் முக்கால் மணி நேரம் அவனுகளே வழித்து விட்டு பேருக்கு 10 நிமிசம் உட்கார வச்சி அதிலும் 10 அடி தூரம் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு பின் தனியே தள்ளி விட்டு விடுவான்கள்.எவனாவது ஒருத்தன் சைக்கிளை விட்டதுதான் தாமதம்,உடல் வளையும் வளைவிலும்,சைக்கிள் பெடல் காலுக்கு சரியா எட்டாத தூரத்திலும் பெடலின் அலுமினிய பாகம் நங்கென்று காலில் குத்தி சிராய்ப்பு ஏற்றும் அல்லது ரத்தம் கக்க வைக்கும்.
இப்படியே இரண்டு மூன்று முறை சின்னப்பனுக்கும்,சக்திவேலுக்கும் காசை அழுது சைக்கிள் சரியாக கற்றுக்கொள்ளாத சோகத்தில் இது சரிப்பட்டு வராது என்று அவன்கள் வேற விளையாட்டுக்குப் போன நேரமா பார்த்து சைக்கிள் கடைக்கார அண்ணாச்சியிடம் சைக்கிளை எடுத்து தள்ளிக் கொண்டே போய் கல் நண்பன் எவனாவது அகப்பட்டால் சைக்கிளைப் பக்கத்தில் வைத்து மெல்ல ஏறி,தடுமாறி,விழுந்து பின் சைக்கிளின் ஹேண்ட்பார் லகான் கைக்கு லாவகமானது.பத்தடி,இருபது அடிக்கு முன்னாடியே பாதையில் நடக்கிறவங்களுக்கு டிங்,டிங் சைக்கிள் பெல் சத்தம் கொடுப்பதில் துவக்கத்தில் மக்களே வழிய விடுங்கய்யா என்ற பயமும் பின் நானும் சைக்கிள் ஓட்டுவேனாக்கும் என்ற மனதுக்குள் மகிழ்ச்சியும்.
இப்பொழுது பைக்,கார் வசதிகள் வந்து விட்டதால் பெரும்பாலோருக்கு இந்த மாதிரி சாகசங்கள் செய்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கும்.ஒருநாள் காலை 5 மணிக்கு சைக்கிள் மிதித்து ஆழியார் கடந்து அட்டகட்டி வளைவுகளைக் கடந்து மலையேறி மீண்டும் திரும்ப கோவை தனி ஆளாக திரும்ப இயலுமா என்ற ஆர்வம் தோன்றியது.
,அட்லஸ்,பி.எஸ்.ஏ,ஹீரோ போன்ற சைக்கிள் குதிரைகள் உலவி வந்தாலும் ராலே என்ற சைக்கிளுக்கு மட்டும் மற்ற சைக்கிள்களுக்கு இல்லாத ஒரு பியரிங் சுழலும் சப்தமும் அதனால் சைக்கிளை அழுத்தி ஓட்டுவதில் ஒரு லகுவும் கிட்டும்.அதிகாலை சைக்கிளை திருச்சி ரோடு ராமநாதபுரம் பக்கமிருந்து எடுத்து அரசு மருத்துவமனை,ரயில்வே பாலம்,உக்கடம் என கடந்து வெளியேறி பொள்ளாச்சி சென்றடைந்து அங்கே வழியிலேயே வயிற்றுக்கு சாப்பிட்டு விட்டு ஆழியார் கடந்து அட்டகட்டி மேட்டில் சைக்கிளை மிதித்தும் தள்ளிக்கொண்டும் போய் வால்பாறை அடைந்தால் இரவு ஆகிவிட்டது.பின் அடுத்தநாள் மீண்டும் கிளம்பி காடம்பாரை, வாட்டர்பால்ஸ் கடந்து அட்டகட்டி வளைவு முனை பாதை (ஹெர்பின் பெண்ட்) கடப்பதொன்றும் சிரமமாக இருக்கவில்லை.சைக்கிளின் வேகத்தை மட்டும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாயிற்று.
இப்படி அதிக தூர சைக்கிள் ஓட்டிய அனுபவம் குவைத் வந்தும் விடவில்லை. மும்பாய் மருத்துவ பரிசோதனை செலவு தவிர எந்த ஒரு வேலை வாய்ப்பு ஏஜண்டுக்கும் ஒரு பைசாவும் கொடுக்காமல் பணியிடம் செலவில் விமான டிக்கட்,சாப்பாடு,தங்குமிடம்,சம்பளம் என்று ஒரு பேச்சிலர் கேம்ப்பில் வந்து சேர்ந்த அனுபவம் அது.சுலேபியா என்ற தங்குமிடத்துக்கும் சுவைக் என்ற பணிபுரியுமிடத்துக்கும் சுமார் 15-20 கி.மீ தூரம்.அலுவல் பஸ் பயணம் போரடித்துப் போனதாலும்,உடல் பயிற்சிக்கு ஏதாவது செய்யலாமே என்ற எண்ணத்திலும் Made in London என்ற சைக்கிள் கண்ணில் பட்டதும் வாங்கி விட்டேன்.அதிகாலை 6 மணிக்கு குளிருலும் உடல் வேர்க்க சுமார் ஒரு மணி நேரம் சைக்கிள் சவாரி மீண்டும் தங்குமிடம் சேர ஒரு மணி நேரம் என சுமார் 40 கி.மீ தூரம் ஒரு வருடம் சைக்கிள் ஓட்டினேன்.வாழ்க்கையின் சுழற்சியில் இப்போ சைக்கிளின் இடத்தை கிராண்ட் செரோக்கி பிடித்துக் கொண்டாள்.
16 comments:
மிதிவண்டிப் பயணக் கட்டுரை சுவராசியமா இருக்கு! நாங்கெல்லாம் மிதிவண்டியில கொட்டாய்க்குப் படம் பாக்கப் போவோம். அப்ப பாருங்க, வேகவெச்ச நிலக்கடலைய எடுத்துட்டுத் தின்னுட்டே போவோம். தின்ன கடைசில, கடைசியா இருக்குற ரெண்டு மூனும் கோர்வையா எடுத்து தொலிச்சி, வாயில போட்டா அது சொத்தையானதா இருக்கும்... இருக்கும் எப்பவும் மாறாத ஒன்னு, அதுமாதிரிதானுங்க நான் சொல்லப் போற இதுவும்....
மிதி வண்டியில எல்லாரும் படம் பாக்க கொட்டாய்க்குப் போகும் போதோ, வரும்போதோ, பெரும்பாலும் வந்திட்டு இருக்கும் போது, 'டமால்'ன்னு ஒரு வெடிச்சத்தம் கேக்கும். உடனே ஒருத்தன் மத்தவிங்களைப் பாத்து, யாருடா பொங்கவெச்சதுன்னு ஒரு சிரிப்போட மத்தவனோட சக்கரத்துச் சருகம் வெடிச்சிடுச்சுன்னு மகிழ்வாப் பாக்க, அடுத்தவன், "டேய், இளிக்காத! குமிஞ்சு பாரு, உன்னோட சக்கரச் சருகந்தான் வெடிச்சிக் கெடக்கு!"ன்னு சொல்வான். இஃகி!இஃகி!! பாக்க, நல்ல வேடிக்கையா இருக்கும். இதுவும் முன்னாடி சொன்ன மாதிரி, வழமையா நடக்குற ஒன்னுங்க!!!
பழைய சைக்கிள் கால நினைவுகளை அசை போட உதவியதற்கு நன்றி நடராஜன் சார்.
சைக்கிள் அனுபவம் இருக்கட்டும்... வாழ்த்துகளைப் புடிங்க.... தமிழ்மணம் விருதெல்லாம் வாங்கியிருக்கீங்க. மேல மேல டாப் கியர்ல போயிட்டே இருங்க. வாழ்த்துகள் !!!!
சைக்கிள் அனுபவம் ரசிக்கும் படியாக இருந்தது வாழ்த்துக்கள்
நானும் கோவை தான் ...தொடர்ந்து பதியுங்கள்
//நாங்கெல்லாம் மிதிவண்டியில கொட்டாய்க்குப் படம் பாக்கப் போவோம். அப்ப பாருங்க, வேகவெச்ச நிலக்கடலைய எடுத்துட்டுத் தின்னுட்டே போவோம். தின்ன கடைசில, கடைசியா இருக்குற ரெண்டு மூனும் கோர்வையா எடுத்து தொலிச்சி, வாயில போட்டா அது சொத்தையானதா இருக்கும்...//
வறுத்த கடலையை விட அவிச்சதுக்கு ருசி அதிகம்.அதெப்படி ஒண்ணு வாய் அசை போட இன்னொன்னு கண்ணு பார்க்குமாக்கும்.அப்புறம் எங்க சொத்தை?ஓ!நீங்க சொல்றது அவசர தொலிச்சி ரெண்டு மூணு ஒரே வாட்டியாக்கும்!
//மிதி வண்டியில எல்லாரும் படம் பாக்க கொட்டாய்க்குப் போகும் போதோ, வரும்போதோ, பெரும்பாலும் வந்திட்டு இருக்கும் போது, 'டமால்'ன்னு ஒரு வெடிச்சத்தம் கேக்கும்.//
இப்படித்தான் கொட்டாயிலிருந்து படம் பார்த்துட்டு வாறப்போ அப்பா என்னை முன்னுக்கு கம்பியில உட்கார வச்சிட்டி நிலா வெளிச்சத்துல சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்தார்.திடீர்ன்னு தடம் புரண்டு நான்,சைக்கிள்,அப்பா மூணு பேருமே குப்புற.நல்லவேளை சைக்கிள் பஞ்சராகல.
//பழைய சைக்கிள் கால நினைவுகளை அசை போட உதவியதற்கு நன்றி நடராஜன் சார்.//
வருகைக்கு நன்றி பிரேம்ஜி.லிபரேசன் டேன்னு 4 நாள் லீவு விட்டுட்டாங்களா.பொட்டியெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டேன்.
//சைக்கிள் அனுபவம் இருக்கட்டும்... வாழ்த்துகளைப் புடிங்க.... தமிழ்மணம் விருதெல்லாம் வாங்கியிருக்கீங்க. மேல மேல டாப் கியர்ல போயிட்டே இருங்க. வாழ்த்துகள் !!!!//
வாங்க மகேஷ்!தமிழ் மண விருது 10க் குள்ளன்னு சொல்லுங்க.முதல் ரெண்டுக்குத்தான் பரிசாம்.ஏதோ நம்மளையும் மதிச்சதுக்கு தமிழ்மணத்துக்கும் பதிவர் வட்டதுக்கும் நன்றி.
//சைக்கிள் அனுபவம் ரசிக்கும் படியாக இருந்தது வாழ்த்துக்கள்
நானும் கோவை தான் ...தொடர்ந்து பதியுங்கள்//
வலைக்குள் மழையா! பதிவின் படங்கள் பார்க்கும் பொழுது சில்லென சிறு தூறலா இதமாத்தான் இருக்குது.மறுபடியும் வருகிறேன்.
ஒரு ஊர்ல ஒரு வணிகன் கடை வெச்சு இருந்தானாம். அவங்கிட்ட ஒருத்தன் வேலைக்கு சேரவே, முதல் நாள் கற்பூரம் எப்படி நிறை அறியறதுன்னு (எடைப் போடுறது) இப்படிச் சொல்லிக் கொடுத்தானாம். தராசுன்னு எதுவுமே இல்லையாமுங்க.... வணிகன் சொல்லிக் குடுத்த விதம்:
அஞ்சேழ் கழஞ்சினெடை யாழாக்குக் கற்பூரம்
கொஞ்சுகிளி மொழியே கூறுங்கால் விஞ்சாது
நன்றான தண்ணீர்க்கு நாழிபலம் பன்னிரண்டாம்
என்றாயு மேழிரண்டா மென்.
இந்த சூத்திரத்தை வெச்சே, அவன் வாழ்நாள் பூராவும் கற்பூர யாவாரம் செய்துட்டு இருந்தானாம். இஃகிஃகி! இதுக்குப் பொருள்? அமெரிக்க தொழிலதிபரை மணந்த நடிகையின் கதை?? நாளைக்கி வர்ற பள்ளையம் பாருங்க....
//தமிழ்மணம் விருதெல்லாம் வாங்கியிருக்கீங்க.//
வாழ்த்துக்கள் ! :)
இப்பத்தான் உங்க ப்ளாக்' க்கு வருகிறேன்.. எடுத்தவுடன் காரணம் இல்லாமல் கவர்ந்தது... உங்கள் ப்ளாக் டைட்டில் "பார்வையில்.." :) வேற ஒன்றும் இல்லை என்னுடைய ப்ளாக் டைட்டில் பார்வைகள் :)
இன்னமும் எங்கேயோ ஒரு "பார்வை" பார்த்ததாக நினைவு.. :) அவரின் பெயரை மறந்துவிட்டேன்..
பதிவுக்கு வருகிறேன்.. எனக்கு உங்கள் சைக்கிள் பதிவை பார்த்து பழைய நினைவுகள். வாடகை சைக்கிள் எடுத்து அண்ணன் எனக்கு சைக்கிள் கற்றுக்கொடுத்ததிலிருந்து ஆரம்பித்து.. நிறைய நினைவுகள் வந்து சென்றன.. ..
நல்ல பதிவு :)
சைக்கிள் அனுபவம்..அருமை.தமிழ் மண விருதுக்கு வாழ்த்துக்கள்
//இப்பத்தான் உங்க ப்ளாக்' க்கு வருகிறேன்.. எடுத்தவுடன் காரணம் இல்லாமல் கவர்ந்தது... உங்கள் ப்ளாக் டைட்டில் "பார்வையில்.." :) வேற ஒன்றும் இல்லை என்னுடைய ப்ளாக் டைட்டில் பார்வைகள் :)//
வாங்க!வாங்க!கவிதா!மக்கள் தொலைக்காட்சி உங்க பதிவின் பெயரில் கருத்தாய்வு செய்கிறது.எனவே காப்பிரைட் உங்களுக்குரியது என தெரிவிக்கவும்.இல்லாட்டி பசுமதி,மஞ்சளுக்கு மாதிரி வேற யாராவது உரிமை கொண்டாடப் போறாங்க.
//சைக்கிள் அனுபவம்..அருமை.தமிழ் மண விருதுக்கு வாழ்த்துக்கள்//
பிடித்த தமிழ் வார்த்தைகளில் ஒன்று இயற்கை.பதிவரே இயற்கை என்பது மகிழ்ச்சி.
//வாங்க!வாங்க!கவிதா!மக்கள் தொலைக்காட்சி உங்க பதிவின் பெயரில் கருத்தாய்வு செய்கிறது.எனவே காப்பிரைட் உங்களுக்குரியது என தெரிவிக்கவும்.இல்லாட்டி பசுமதி,மஞ்சளுக்கு மாதிரி வேற யாராவது உரிமை கொண்டாடப் போறாங்க.//
நிஜமாகவா? :) எனக்கு நீங்கள் சொல்லி தான் தெரியும் :)
சைக்கிள் பயணம் வெகு சுவாரசியம்!!
Post a Comment