Followers

Monday, February 23, 2009

சுப்பரமணியசாமி,போலிஸ், கைதி

எல்லோருக்கும் ஸ்லம்டாக் மில்லினர் ஜுரம் புடிச்சிகிச்சு.ஜுரத்தோட தாக்கம் என்னையும் தாக்குனதால் முதலில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்துக்கள்.

இனி ஸ்லம்டாக்கையும் ஆஸ்கார் கோணங்களை விட்டு விட்டு ஸ்லம்டாக் மாதிரியான யதார்த்தமான சமூக அவலங்களை, நேற்றைய செய்திகளான நம்மூரு வழக்கறிஞர்கள்,காவல்துறையினர் கலவரங்களை அலசுகிறேன். சுப்பரமணிசாமி நன்றாகதானே இருந்தார்?ஹார்வர்டு பல்கலைக் கழக புரபஸர்,இந்தியா சீனாவுடன் நட்பு கொள்ள முயற்சி,ஜனதா கட்சியின் தூண் என அவரது பழைய கால பிம்பம் நன்றாகவே இருந்தது.எங்கே இடை சறுக்கல்?தொட்டதுக்கெல்லாம் கேஸ் போடும் பொழுது போக்கில் வந்த மாற்றங்களா குண மாற்றங்கள்? இங்கே துவங்கிய நுனி எங்கெல்லாம் விபரீதங்களை உருவாக்குகிறது.

குழு மனப்பான்மைகள் நமக்கொன்றும் புதுசு இல்லை.முன்பெல்லாம் மாணவர்களுக்கும்,காவல்துறையினர்க்கும் மட்டும் பெரும்பாலும் நிகழ்ந்த முறுகல் நிலைகள் இப்பொழுது திசை மாறி நீதிதுறை,உள்துறை என்ற இரு அரசு தூண்களை அசைத்துப் பார்த்திருக்கிறது.

வெளிநாடுகளில் பல கலாச்சாரங்களைக் கொண்ட மனிதர்களிடையே உலவும் போது தமிழன் மிகவும் அப்பாவியாக காணப்படுகின்றான். வீட்டுக்குள்ளே,தமிழ்நாட்டுக்குள்ளே தனிமனிதனாக உலாவும் போது கூட தனது தனிமனித இயல்புகளை இழந்து விடுவதில்லை.ஆனால் கூட்டமாகத் தெரியும் போது வெடிக்கும் தார்மீக கோபங்களும்,கூடவே வன்முறை உணர்வுகளும் பீரிட்டுக்கொண்டு கலவரமாக வெடிக்கிறது.

இதில் அரசியல் சதி திட்டமிடல்களும்,குறுக்குவழிகளும்,சுயலாபங்களும் கூட முன்கூட்டியே திட்டமிடப்படுகின்றன.கூட்டமாக மனிதன் திரியும்போது பீரிடும் உணர்வுகளை திசை திருப்புவதற்கு அரசியல்வாதிகளும்,காவல்துறையும் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார்கள்.ஒரு முனையில் நிகழும் ஒரு நிகழ்வு அல்லது எழும் செயல் ஒன்றுடன் ஒன்றாக தொடர்புடன் ஒரு முழு நிகழ்வாக உருவாகிவிடுகிறது.ஒரு பிரச்சினையின் கோணங்களை தீர்மானிப்பதில் பதவியில் இருக்கும் அரசும் கூடவே உள்துறையும் முக்கிய பங்கு வகிக்கிறது.

கலைஞர் மருத்துவமனையில் இருக்கும் இந்த நேரத்தில் நீதிமன்ற உள்நுழைவும்,லத்திசார்ஜ் முடிவும் அவரால் தீர்மானிக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகத்துக்குரியது.அப்படியானால் அவருக்கு அடுத்த நிலை அமைச்சரோ அல்லது காவல்துறை அதிகாரிகளோ கலவர சூழலை உருவாக்கியதற்கு காரணகர்த்தாக்கள் ஆவதற்கான சாத்தியங்கள் தென்படுகிறது.அதே நேரத்தில் காவல்நிலையம் தீ வைத்து கொளுத்தப் பட்ட கோபத்தினாலும் காவல்துறை நிதானமிழந்து போயிருக்கலாம்.

படித்தவர்கள்,பதவியிலிருப்பவர்கள்,அரசாங்க அதிகாரிகள் ஒரு சமூக சீர்கேடுக்கு காரணகர்த்தாக்களாவது சமுதாய மன அழுத்தங்கள் தவறான திசை நோக்கி பயணிக்கிறது என்பது கண்கூடு.மேலும் வழக்கறிஞர்கள் ஈழப் போராட்டத்தில் காட்டும் வேகத்தை திசை திருப்பும் நோக்கமாகக் கூட போலிஸ் அடாவடிகள் தென்படுகின்றன.மனிதன் மேல் உள்ள கோபத்தை வாகனங்கள் மேல் காட்டுவது இயல்பாகவே கூட்டம் கூடிய மக்களில் ஒரு சாரார் செய்யும் செயல்.ஆனால் அதே தவறினை காவல்துறை செய்யும் பொழுது எங்கே போய் சொல்லுவது?

இது ஒரு புறமிருக்க தமிழகம் சார்ந்த பதிவர்கள் முக்கியமாக கோவை,திருப்பூர்,பொள்ளாச்சி வட்டார பதிவர்கள் யாராவது பட்டப்பகலில் ஒருவன் இன்னொருவனை வெட்டுவது பற்றிய கோபங்களை வெளிப்படுத்துவார்கள் என நினைத்திருந்தேன்.யாருடைய பார்வைக்கும் போகவில்லையா அல்லது தெரிந்தும் தனிமனிதன் சம்பந்தப்பட்டது என்று புறம் தள்ளி விட்டார்களா என தெரியவில்லை. இப்படி தனி மனித அலசல்களை தவற விட்டு விடும் காரணம் கொண்டும் குழு வன்மங்கள் வெடிக்கின்றன.

பொள்ளாச்சி பஸ்நிலையம் அருகே பகல் நேரத்தில் ஒருத்தன் இன்னொருவனை வெட்டுகிறான்.பலரும் பார்த்திருக்கும் போதும் கூட அரிவாளால் வெட்டும் கோரக் காட்சி காணும்போது மனம் திக் என்றாகிறது.விசயம் என்னவென்றால் வெட்டுபவன் சிறைக்கு சென்று திரும்பிய கைதி.வெட்டுப்பட்டவன் முன்னவன் சிறை செல்லக்காரணமாக இருந்த நீதிமன்றத்தில் சாட்சி சொன்னவன்.சிறைக்குப் போனவன் தனது தவறை உணர்ந்து திரும்பாமல் பழைய வன்மத்தை சுமந்துகொண்டு திரும்ப வந்து பழிதீர்க்கிறான்.அதுவும் பலரது கூச்சல்,அவன் மேல் பிளாஸ்டிக் பெட்டிகள் என வீசி எறிந்தும் கூட அவற்றைப் பொருட்படுத்தாது கீழே விழுந்தவன் கால்களைப் பற்றி வெட்டுகிறான்.உடலின் பல இடங்களில் வெட்டி விட்டு சர்வசாதாரணமாக நடந்து ஆட்டோவில் ஏற முயற்சிக்கிறான்.அதற்குள் பொதுமக்கள் உதவியுடன் காவல்துறை அவனை வளைத்துப் பிடிக்கிறது.

தகவல் தொழில்நுட்பமும்,இன்னும் பல சமுதாய மாறுதல்கள் உருவாகுவதற்கு முன்பான கால கட்டங்களில் பொள்ளாச்சி வார சந்தைகளுக்கும்,சுற்று வட்டார கிராம மக்கள் வந்து போவதற்குமான இடம்.இரவு நேரங்களில் பஸ் இல்லாத நேரங்களில் கூட (அதாவது 3 மணி போல்) கோவையிலிருந்து பத்திரிகைகளைக் கொண்டு செல்லும் டாக்சிகளில் தொத்திக் கொண்டு பொள்ளாச்சிக்கு பயணம் செய்யலாம்.பகல் நேரங்களில் பல திசைகளுக்கும் குறிப்பாக கோயம்புத்தூருக்கு 10 நிமிட இடைவெளியில் பஸ்களும் கிடைக்கும்.தனியார்துறை வாகனங்களில் டேப்ரெக்கார்டர் திரைப் படப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே பஸ் வேகத்தில் எதிரே முகத்தில் வீசும் காற்றையும் அனுபவித்துக் கொண்டு பயணம் செய்வது சுகமாக இருக்கும்.

பழனி,தாராபுரம்,உடுமலைப்பேட்டை,திருப்பூர்,கோவை என பெட்டி கட்டிகிட்டு படிக்கச் செல்லும் மாணவ,மாணவியர்களின் கூட்டம் புதுப்பொலிவுடன் ரம்மியமாக இருக்கும்.பஸ்நிலையத்துக்கும் நல்லப்பா தியேட்டருக்கும் இடைப்பட்ட வீடுகள்,பங்களாக்கள் பொள்ளாச்சியின் பொருளாதார வளர்ச்சியினை படம் பிடித்துக் காட்டும்.நல்லப்பா தியேட்டரையும் கடந்து விட்டால் சாலையின் இரண்டு பக்கமும் தென்படும் தென்னை மரங்களையும்,தோட்டங்களையும் பார்த்துக்கொண்டே பயணம் செய்தால் பொள்ளாச்சியிலிருந்து 20 கி.மீட்டரை கடந்திருக்கும்.மீதி 20 கிமீட்டர் தூரத்தில் ரயில்வே கேட்டும்,சிறுதொழில் வளர்ச்சி நிறுவனங்களும் என உக்கடம் வந்து சேர்ந்து விடும்.

பொள்ளாச்சியிலிருந்து தாராபுரம் ரோட்டைப் பிடித்தால் வழிநெடுக தென்னந்தோட்டங்களும் வீடுகளும் என நீளூம்.தாராபுரம் நெருங்கினால் என்னைத் தள்ளு,பஸ்ஸைத் தள்ளு என காற்றின் வேகமும் அதற்கு தலையாட்டும் பஞ்சுப் பூக்களும் என தாராபுரம் வந்து விடும்.உடுமலை பஸ் சர்வீஸில் மட்டுமே கண்டக்டர் எச்சில் ஒட்டாமல் டிக்கட் கொடுப்பது எப்படி என்ற பாலபாடம் சொல்லிக்கொடுக்கப்பட்டது.மெசினும் பஸ்டிக்கட் கொடுக்கும் என்று தெரிந்து கொண்டது அந்த பஸ்லதான்.(உடுமலைப் பேட்டை பற்றியெல்லாம் இன்னும் சொல்லுவதற்கு அந்தியூருக்காரு மணியண்ணன் இருக்காரு.அவரைக் கேளுங்கள்)சரி வால்பாறை பஸ்ஸை பிடித்தால் ஆழியாரு,அட்டகட்டி,வாட்டர்பால்ஸ்,ஐயர்பாடி,ரொட்டிக்கடை,புதுதோட்டம்,வால்பாறை என மலையும்,மலை சார்ந்த தேயிலை பூமி வந்து விடும்.

இந்த பக்கம் கேரளா எல்லையாக பயணம் செய்தால் மலம்புழா வந்து விடும்.ஆக அனைத்து திசைகளுக்கும் போக்குவரத்துக்கும்,சந்தை வியாபாரங்களுக்கும் தலைசிறந்த நகராக மனித வாழ்க்கையில் வன்முறைகளை அதிகம் சந்திக்காத ஊராக பொள்ளாச்சி இருந்தது.அடுத்தவனை வெட்டணுமின்னு நினைப்பவன் கூட ஆள் அரவமற்ற கால இடம் பார்த்து தவறுகள் செய்து கொண்டிருந்தான்.அவை எதுவும் எவரது கண்ணிலும் படவில்லை.மாறாக தினத்தந்தியும்,மாலைமுரசும் தமக்கே உரிய பாணியில் தகவல்கள் தந்தன.அதனையும் மேலோட்டமாகவே நோக்கி விட்டு முதல் பக்க செய்தி,அரசியல் ஆர்வங்களில் நாட்கள் நகர்ந்தன.

கால வேகங்களில் முன்னேற்றங்கள் ஒருபுறம் வளர்ந்து கொண்டிருக்க அதற்கு இணையான மன அழுத்தங்களும்,கோபங்களும் வளர்ந்து கொண்டும் இருக்கிறது.எப்படியெல்லாம் இருக்கவேண்டிய நாம் எப்படி ஆகிக் கொண்டிருக்கிறோம்.ஆனாலும் சுயசிந்தனைகள்,கல்வியில் காட்டும் ஆர்வம்,சமுதாயப் பார்வை,நட்பு,தியாகம்,அரசியல் கண்ணோட்டம்,தமிழ் கலாச்சாரம்,பண்பாடு,உலகப்பார்வை என நம்மிடம் அள்ள அள்ள குறையாத சமுதாய பொக்கிசம் நிறைய இருக்கிறது. இவை தலைப்பை புறம் தள்ளி நம் வாழ்வை வளமாக்கும் என்ற நம்பிக்கையோடு....

6 comments:

பழமைபேசி said...

அண்ணே, நல்ல பதிவு. ஆனா, இவ்வளவு தூரம் நேரமெடுத்து எழுதியிருக்கீங்க.... அதையெல்லாம் புரிஞ்சிகிடுற அளவுக்கு இன்றைய மனநிலை பெரும்பாலோர்க்கு இல்லைங்றது என்னோட அபிப்ராயம்.... உடனடி சுவராசியம், உடனடி உவகை இதுதான் பிரதானம். அதைவிட்டாக் காழ்ப்புணர்ச்சி... "இதெல்லாம் ஒரு பொழப்பா?"ன்னு சுலுவுல சொன்னாலும் சொல்லிடுவாங்க.... மிகவும் வருத்தமா இருக்கு...

நசரேயன் said...

உங்க புண்ணியத்தால் நல்லா ஊரை சுத்தி பார்த்தேன், நல்லா எல்லா ஊரையும் சுத்தி காட்டுனீங்க

ராஜ நடராஜன் said...

//அண்ணே, நல்ல பதிவு. ஆனா, இவ்வளவு தூரம் நேரமெடுத்து எழுதியிருக்கீங்க.... அதையெல்லாம் புரிஞ்சிகிடுற அளவுக்கு இன்றைய மனநிலை பெரும்பாலோர்க்கு இல்லைங்றது என்னோட அபிப்ராயம்.... உடனடி சுவராசியம், உடனடி உவகை இதுதான் பிரதானம். அதைவிட்டாக் காழ்ப்புணர்ச்சி... "இதெல்லாம் ஒரு பொழப்பா?"ன்னு சுலுவுல சொன்னாலும் சொல்லிடுவாங்க.... மிகவும் வருத்தமா இருக்கு...//

பழமை!முதல் போணிக்கு நன்றி.என்னைப் பொறுத்தவரை பதிவுகள் கூட்டம் சேர்ப்பதற்கு என்பதை விட சில செய்திகளை பதிவு செய்வதில் மனம் திருப்தி கொள்கிறது.

பதிவு புதுசு ஒண்ணு எடுத்து விடுங்க சீக்கிரம்.

ராஜ நடராஜன் said...

//உங்க புண்ணியத்தால் நல்லா ஊரை சுத்தி பார்த்தேன், நல்லா எல்லா ஊரையும் சுத்தி காட்டுனீங்க//

ஊர் சுத்தறது எல்லாம் சரிதான் கனவு நாயகரே!ஆனா இந்த அட்டகட்டி வளைவு முனை பாதை (Hairpin pending)பக்கமெல்லாம் அதிகம் சுத்தாதீங்க.காரணம்,வனவிலங்குகள்,குரங்கு போன்றவைகளை வழியில பார்க்கிறதும் வளைவுகளில் கீழே,ஊர் மற்றும் ஆழியார் அணை ரம்மியமும் பார்க்க சுகமாக இருந்தாலும் உங்க அமெரிக்காவில் பீர் குடிக்காதீர்கள் வாந்தி மாதிரி இந்த வளைவுகளிலும் வாந்தி வந்தி வரும்.முக்கியமாக பெண்களுக்கும் பீர் வாசத்துக்கு மயக்கம் போடுபவர்களுக்கும்:)

கவிதா | Kavitha said...

நல்ல பதிவு, பெரிய பதிவு.. :) புரியக்கூடிய விதமாக இருக்கு.. நன்றி

ராஜ நடராஜன் said...

//நல்ல பதிவு, பெரிய பதிவு.. :) புரியக்கூடிய விதமாக இருக்கு.. நன்றி//

வருகைக்கு நன்றிங்க கவிதா!