Followers

Sunday, May 31, 2009

கமலா தாஸ்

கமலா தாஸ் என்ற கவிதாயினியும் எழுத்தாளரும் கமலா சுரய்யா ஆனது எப்படி என்பதற்கான கேள்வியும் வாழ்வியல் அழகின் உச்சத்தை தொட்ட பல பிரபலங்களும் இஸ்லாமிய மதத்தை தழுவுவதற்கான காரணம் என்ன என்பதும் ஆராய வேண்டியவை.ஆனால் பதிவு அதைப் பற்றியது அல்ல.தொலைகாட்சி பெட்டி ரிமோட்டை கிள்ளிய போது கமலாதாஸின் நேர்காணல் மலையாள மக்கள் தொலைக்காட்சியில் (People) நிகழ்ந்து கொண்டிருந்தது.ஓர் பெண் குழந்தையாக,பதின்ம வயதுப் பெண்ணாக ,திருமண வயதுடையவளாக ,வாழ்வியலைப் புரிந்தவளாக,முதுமையின் அழகில் அமர்ந்தவளாக ஒரு முழுப் பெண்ணின் வாழ்க்கையை இல்லறத்தோடும்,இலக்கியத்தோடும் வாழ்ந்து முடித்திருக்கிறார் கமலாதாஸ்.

நான் மலை,ஆறு,குளம்,மரம்,செடி,மலர்கள் என்று கவிதை பாடி சுற்றித்திரிந்த காலம் வசந்தகாலம் என்று நேர்காணலில் குறிப்பிட்டார்.இவரை இந்தியப் பத்திரிகை ஊடகங்களுக்கு புயல் மாதிரி அறிமுகப் படுத்தியது 70பதுகளில் எண்ட கதா என்ற சுய சரிதை.Men are pretend to be shocked when reading என்ற கமலாதாஸ் எனது சுய சரிதையில் எனது ஆத்மாவை தேடாமல் எனது உடலின் மொழிகளை மட்டுமே வாசிப்பாளர்கள் தேடினார்கள் என்று ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.அனைத்துப் பெண்களும் கதைகள்,கட்டுரைகள் மட்டுமே எழுதிய காலத்தில் கவிதையை காதலித்த ஒரே பெண் கமலாதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப கட்டுக்கும் அப்பாற்பட்டு தான் காதற் வயப்பட்ட ஆண்களை பெயர்கள் கூறாமல் விவரித்தார்.உதாரணத்திற்கு, தனக்கு சமஸ்கிருதம் தெரியாமல் சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தவர் மீது ஈர்ப்பு வந்தது என்றார்.(Kate winslet நடித்த 2008 ன் ஆஸ்கார் சிறந்த நடிகைக்கான பரிசாக The Reader என்ற திரைப்படம் மனதில் வந்து போனது).

தனக்கு எப்பொழுதும் உயரமான ஆண்களையே பிடிக்குமென்றும் ஒரு முறை கலந்து கொண்ட விருந்தில் குள்ளமாக ஒருவர் வந்து தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டு பேச்சின் இடையில் சொன்ன சரமாரியான கவிதைகளால் அவர் மீது அன்பு கொண்டதும் குறிப்பிட்டார்.அவரது கணவர் தாஸ் "Meet my wife Poet Kamala Das" என்று நண்பர்களுக்கு கௌரவ அறிமுகம் செய்து வைத்ததை பெருமிதத்தோடும் குறிப்பிட்டார்.

விருந்துகள் பற்றியும் மது அருந்துதல் பற்றியும் குறிப்பிடும் போது தான் ஏன் மது அருந்துகிறேன் என்றும் விருந்துகளில் மது அருந்துவது எப்படி என்பதற்காகவுமே அருந்துவதாகவும் ஜெயகாந்தன் எங்கோ குறிப்பிட்டது நினைவுக்கு வந்து போனது.மது அருந்துவதை மேற்கத்தியவர்களிடம் கற்றுக் கொண்டதாகவும் 1 பெக் அல்லது 2 பெக் மட்டுமே அளவு என்றும் இந்தியர்கள் பாட்டிலின் இறுதி சொட்டு வரை குடிப்பதை நிறுத்துவதுமில்லையென்றும் சொன்னார்.

தனக்கு அறிமுகமான பரந்த நட்பு வட்டாரத்தையும் எழுத்தாளர்கள்,நாடகவியளர்,மார்க்சீய சிந்தனைவாதிகள்,கவிஞர்கள் என்று அனைவரையும் நினைவு கூர்ந்தார்.வீட்டில் நாடகக்குழுக்களாய் 100 பேருக்கு மேல் கலந்து உரையாடித் திரிந்ததை நினைவு கூர்ந்தார்.தனது கணவரின் வங்கி பதவிக்கான காலம் முடிந்து வருமானத்திற்காக வேண்டி columnist ஆக எழுதி குழந்தைகளையும் குடும்பத்தையும் நடத்த வேண்டியது பற்றி சொன்னார்.

ஒரு பெண்ணாக எழுத்தாளராக ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்துள்ளதாகவும் தனது இறுதி நாட்களை தன்னை எப்படி அடக்கம் செய்யவேண்டும் என எழுதி வைத்திருப்பதாகவும் கிருஷ்ணனைப் பற்றிக் கவிதை எழுதிக் கொண்டே இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்ட கமலா தாஸ் என்ற கமலா சுரய்யா எழுத்தாளர் போலி சமூக கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து பெண்ணியம் பற்றிய ஆண் வர்க்கத்துப் பார்வையை புரட்டிப் போட்டு வாழ்வியலை நிறைவு செய்துள்ளார்.

நேர்காணலை நிறைவு செய்யும் போது நேர்காணல் என்பதை மறந்த அவரது நினைவுகளின் நாட்களில் மூழ்கியிருந்தது நீண்ட பேச்சின் தொனியில் தெரிந்தது.

இந்தப் பதிவு அவரது எழுத்துக்கும் சமூகத்தில் தனக்குப் பிடித்த கவிதை,எழுத்து,வாழ்க்கை என்று சமரசம் செய்து கொள்ளாத போலியற்ற வாழ்க்கைக்கும் சமர்ப்பணம்.

14 comments:

rapp said...

மிக நல்லக் கட்டுரை. அவங்க இஸ்லாத்தை தழுவினப்போதான் எனக்கு அவங்களைப் பத்தி தெரிஞ்சது. சில சமயம் சிலப் பேரோட மோசமான பிரச்சாரமும் நன்மை பயக்கும்ங்கர மாதிரி இவங்க பத்தி தெரிஞ்சது. இவங்களோட பேட்டிகள் ஒவ்வொருதரம் வரும்போதும் அதை திரித்து நக்கலடித்தே பிரபலமானவர்கள் பலர்.

rapp said...

//வாழ்வியல் அழகின் உச்சத்தை தொட்ட பல பிரபலங்களும் இஸ்லாமிய மதத்தை தழுவுவதற்கான காரணம் என்ன என்பதும் ஆராய வேண்டியவை//
எனக்கு இது புதிதான விஷயம். இதுக் குறித்து சுட்டிகள் ஏதேனும் தர முடியுமா

பழமைபேசி said...

அண்ணா, நல்ல தகவல்! நன்றி!!

//இந்தப் பதிவு //

இந்த இடுகை

ஆ.ஞானசேகரன் said...

இதமான கட்டுரை. நல்ல தகவல்கள் நன்றி நண்பரே

Anonymous said...

rapp said...

//வாழ்வியல் அழகின் உச்சத்தை தொட்ட பல பிரபலங்களும் இஸ்லாமிய மதத்தை தழுவுவதற்கான காரணம் என்ன என்பதும் ஆராய வேண்டியவை//
எனக்கு இது புதிதான விஷயம். இதுக் குறித்து சுட்டிகள் ஏதேனும் தர முடியுமா
//

பணம்.

ஷண்முகப்ரியன் said...

அருமையான,தெளிவான பதிவு.
ஒரு பெண்ணின் பார்வையாக வாழ்க்கையைப் புரிந்து கொள்வது அதனை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவும்.நன்றி,ராஜ நடராஜன்.

ராஜ நடராஜன் said...

//மிக நல்லக் கட்டுரை. அவங்க இஸ்லாத்தை தழுவினப்போதான் எனக்கு அவங்களைப் பத்தி தெரிஞ்சது. சில சமயம் சிலப் பேரோட மோசமான பிரச்சாரமும் நன்மை பயக்கும்ங்கர மாதிரி இவங்க பத்தி தெரிஞ்சது. இவங்களோட பேட்டிகள் ஒவ்வொருதரம் வரும்போதும் அதை திரித்து நக்கலடித்தே பிரபலமானவர்கள் பலர்.//

வாங்க நவீன கவிதாயினியே!எப்படி இருக்கீங்க?அவர் இன்னொரு நேர்காணலில் சொன்ன இன்னொன்று பதிவில் விட்டுப் போனது.தனது ஆன்மீகத் தேடலில் இந்து மதத்திலிருந்து உதவிக்கு யாரும் வரவில்லையென்றும் அதன் காரணம் கொண்டே இஸ்லாமியத்தைப் பற்றி சொல்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்த காரணத்தாலேயே இஸ்லாமியத்தை தழுவியதாகவும் சொன்னது.ஆனால் அவரது ஆன்மீகக் கண்ணோட்டமான கடவுள் ஒன்றே என்ற கோட்பாடு சிலரால் இந்து மதத்திலும் இஸ்லாமியத்திலும் ஏற்றுக் கொள்ளாதது வருந்தத் தக்கது.

ராஜ நடராஜன் said...

//எனக்கு இது புதிதான விஷயம். இதுக் குறித்து சுட்டிகள் ஏதேனும் தர முடியுமா//

கமலாதாஸ்,மைக்கேல் ஜாக்சன்,முன்பு போனிம்,முகம்மது அலி, இன்னும் நினைவுக்கு வராத சில பெயர்கள் இவர்கள் எல்லாம் ஏதோ ஒரு ஆத்ம தேடலுக்காக வேண்டியே இஸ்லாமிற்கு சென்றிருக்கிறார்கள்.இஸ்லாமிய சில ஷரியாக் கோட்பாடுகளைத் தவிர,நவீன முல்லாக்களான பின்லேடன்,சில சமூக அடிப்படைவாதிகளை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் இஸ்லாம் ஒரு சிறந்த மதம்.நடைபயணிகளுக்கு தண்ணீர் தொட்டிப் பழக்கம் முன்பு இந்தியாவில் இவர்களிடமிருந்தே வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.இங்கே குவைத்தில் நிறைய இடங்களில் இலவச குடிதண்ணீர் பெட்டிகள் வைத்திருக்கிறார்கள் மினரல் வாட்டர் நிறைய கிடைத்தாலும் கூட.

(முன்பு திருவிழாக் காலங்களில் தமிழகத்தில் மோர்ல இஞ்சி,கொத்தமல்லி இலையெல்லாம் போட்டு இலவசமா தாகம் தீர்த்தார்கள்.இப்போ டாஸ்மார்க் ஆகிப்போச்சு:(

ராஜ நடராஜன் said...

//அண்ணா, நல்ல தகவல்! நன்றி!!//

வாங்க மணியண்ணா!

ராஜ நடராஜன் said...

//இதமான கட்டுரை. நல்ல தகவல்கள் நன்றி நண்பரே//

வாங்க அம்மா பதிவரே!

ராஜ நடராஜன் said...

//பணம்.//

முகத்தைக் காட்டித்தான் பேசறது அனானியாரே:)

புரிதல் என்பதில் ஏற்படும் குறைகள் இவைகள்.எனக்குத் தெரிந்து வளைகுடா நாடுகளில் இஸ்லாமியர்கள் பணத்தையெல்லாம் காண்பித்து யாரையும் மதமாற்றம் செய்வதில்லை.இந்தக் காசுக்கு மாரடிக்கும் பழக்கத்தையெல்லாம் சில கேரளா,தமிழக சகோதரர்கள் வேண்டுமானால் உள்ளூரில் செய்யக்கூடும்.

ராஜ நடராஜன் said...

//ஒரு பெண்ணின் பார்வையாக வாழ்க்கையைப் புரிந்து கொள்வது அதனை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவும்.நன்றி,ராஜ நடராஜன்.//

இலக்கியம்,கவிதை பற்றி நினைத்தவுடன் ஏனோ உங்கள் நினைவு வந்து போனது ஷண்முகப்ரியன் சார்!நம்ம சாரு சாரெல்லாம் பாலியல் பற்றி எழுதி எப்ப பிரபலமானார் என எனக்குத் தெரியவில்லை.ஆணாக நிறைய பேர் தமிழகத்தில் அவருக்கும் முன்னோடிகள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.ஆனால் கேரளத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் எழுத்தாளர்,கவிதை சொல்வது அதுவும் இரு மொழி எழுத்தாளர் என்பதும் வியக்கத்தக்கது.

அவரது ஆங்கிலக் கவிதைகளே அவரை ஒரு இலக்கியவாதியாக முன்னிறுத்தியிருக்க வேண்டும்.ஆனால் அவரது துணிவான பெண்ணியல் பார்வையும் பாலக்காடு,திருச்சூர் போன்ற இடங்களின் வாழ்வு முறை ஆணியக் கட்டுப்பாடுகளையும் உடைத்தெறிந்ததும் தன் கதை சொன்ன துணிச்சலுமே அவரை இந்தியப் பத்திரிகைகளுக்கு பிரபலப்படுத்தியிருக்கிறது.

இவரை மாதிரி வடக்கில் குஸ்வந்த்சிங்க்.

பாலா... said...

நேர்காணல் பார்த்தா மாதிரி இருக்கு. பகிர்தலுக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//நேர்காணல் பார்த்தா மாதிரி இருக்கு. பகிர்தலுக்கு நன்றி.//

வாங்க பாலா!நன்றி.