Followers

Sunday, May 2, 2010

நாடு கடந்த தமிழீழ வேட்பாளர்கள்.

தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தொலைக்காட்சி ஊடகம் இருந்த போதும், தேர்தல் காலத்திலும் கூட வேட்பாளாராக அல்லாத இரண்டு அல்லது மூன்று பேரை அழைத்து சில கருத்துப் பகிர்வுகளுடனும், தேர்தல் கணிப்புக்களுடனும்,இறுதி வாக்கெடுப்பையும் கூட கட்சிகளுக்கு சாதகமாக அதிகரித்தோ அல்லது குறைத்தோ நேரலையில் சொல்லி விட்டு வழக்கம் போல் மெகா, திரைப்படம், செய்தி இன்னபிற விளம்பரத்துடன் தமது அரைத்த மாவை அரைக்க துவங்கி விடுவது வழக்கம்.

இதற்கெல்லாம் மாறாக நேற்றும்,முந்தைய தினமும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைப்பதற்கான வாக்கெடுப்பு நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஜி.டி.வியில் காண நேர்ந்தது.பல துறைகளிலிருந்தும் தமிழீழம் அமைப்பதற்காக நாடுகடந்த தமீழீழ அரசு வேட்பாளார்களாக பலரையும் ஜி.டி.வி அறிமுகம் செய்து வைத்தது.ஒரு புறம் நண்டுக்கதை மாதிரி காலைப் பிடித்து இழுக்கும் தமிழன்,இன்னொரு புறம் இலங்கை அரசின் குற்றவியல்களைக் கூட சரியான தீர்ப்பு என்று மனதுக்குள்ளும் எழுத்திலும் வெளிப்படுத்தும் இவர்கள் என்ன செய்கிறார்களென்று அறியாமல் இருக்கிறார்கள் என்ற இயேசுவின் வசனத்துக்கு சொந்தக்காரர்கள்,இன்னுமொரு புறம் உரிமைக்கும்,சுதந்திர உணர்விக்கும் குரல் கொடுப்பவர்கள் தீவிரவாத முத்திரைக்காரர்கள் என்று குரல் எழுப்பி விட்டு ஒரு விடியலுக்கான விடையையும் சொல்லத் தெரியாமல் குட்டையைக் குளப்பி குளிர்காயும் கூட்டம்.இவைகளுக்கும் மத்தியில் இப்பொழுது இருக்கும் தருணத்தை விட்டு விட்டால் இனியும் தமது உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சந்தர்ப்பமே இல்லாது போகும் என்று புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து ஒரு உயர்ந்த காரணத்துக்காக தங்கள் முகங்களை உலகுக்கு காட்டும் தமிழர்கள் என நூல் சிக்கல்களுனூடே ஒரு குழப்பமான சூழல்.

அப்படியிருந்தும் மேடை மயக்கப் பேச்சுகள்,நிலம் தழுவும் துண்டு,தேர்தல் வாகனத்து கைகூப்பல்,காசுக்கும், பிரியாணி பொட்டலத்துக்கும் விலை போகும் வாக்காளர்கள், எதிர்க்ட்சி வசவுகள் என்று தமிழகத் தேர்தலின் சிறு நாற்றம் கூட இல்லாமல் வேட்பாளர்களை அறிமுகப்ப்டுத்தும் நிகழ்ச்சியாளருக்கு இருபுறமும் பெண்,ஆண்கள் என நாடு கடந்த தமிழீழ அரசு வேட்பாளர்களையும்,அவர்களது மொழி ஆளுமையாக தமிழ்,ஆங்கிலமென தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள்.மேலை நாட்டு வாழ்க்கை ஒரு சிலருக்கு சிறிது மொழி தடுமாற்றத்தை தந்தாலும் உடைநாகரீகம், அவை நாகரீகம், அரசியல் அகன்ற பார்வை போன்ற சிறப்புக்களை கற்றுத்தந்துள்ளதை காண முடிந்தது.ஒரு சிறந்த அரசியல் கலந்துரையாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தது தொலைக்காட்சி நிகழ்ச்சி.

நிகழ்ச்சியாளர் வேட்பாளர்களிடம் கேட்ட வெளிப்படையான கேள்விகளில் சில:

ஈழத்தில் வாழும் மக்களுக்கு,குறிப்பாக அகதி முகாம்களில் வாழும் மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதியாக நீங்கள் எந்த விதத்தில் உதவ முடியும்?

உங்களையும் பயங்கரவாதிகள் என்ற பட்டியலில் இலங்கை அரசு சேர்க்க முயற்சித்தால் எப்படி அரசியல் ரீதியாக அணுகுவீர்கள்?

(தமிழக முதல்வரின் ஸ்டைலில்) நாடுகடந்த தமிழீழம் அமைப்பதன் மூலம் ராஜபக்சே கோபித்துக்கொண்டு அகதிமுகாம்களில் இருக்கும் மக்களுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்த மாட்டாரா?

உங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கிறீர்களா?

தமிழகத்தில் சாராயக்கடைகளின் உரிமையாளர், கட்சிக்காகஅடிதடி, கொலைக்கேசு என்பது மாதிரியான தகுதி அடிப்படையில்லாமல், வேட்பாளர்களின் தகுதிகளாய் மருத்துவராய், ஆசிரியராய், பாராளுமன்ற பிரதிநிதிகளுடன் தொடர்பு, ஐ.நா, செஞ்சிலுவை சங்கம் போன்றவற்றுடன் இணைந்து செயல்படும் அரசு சாரா நிறுவனத்துடன் பணிபுரிபவர், இசையாளர், முந்தையப் போராளியும் டென்மார்க் பல்கலைக்கழகத்தில் மேநிலை ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்,தமிழ் நூல்களை அச்சிட்டவர் இன்னும் பலர் என புலம் பெயர்ந்த நாடுகளில் தங்கள் தகுதியை முத்திரை பதித்த சமூக, தமிழ் உணர்வாளர்களென அறிமுகமே சோர்ந்து போன நம்பிக்கைகளை மெல்ல எட்டிப்பார்க்க செய்கிறது. இது கூடி தேர் இழுக்கும் முயற்சி. நகராத தேர்களென்று இது வரை ஏதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அப்படியிருந்தும் குழு மனப்பான்மை கோபங்களால்,கருத்து மாறுபாடுகளால்,தமிழர்களின் முன்னெடுப்புக்களை ராஜதந்திர ரீதியாக தோற்கடித்து விடவேண்டும் என்ற கங்கணம் என்ற விசப்பரிட்சைகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயங்கள் இருக்கிறது. இவைகளுக்கும் மேலாக நிலத்தில் வாழும் மக்களுக்கு தங்கள் வாழ்வாதாரத்தை நிர்ணயித்துக்கொள்ளும் பொருளாதார வளமை, மக்கள் மனதில் நம்பிக்கையேற்படுத்தும் வல்லமை,நிலத்தையும், புலத்தையும் இணைக்கும் வல்லமை, கூடவே வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்கப் போனால் திமிங்கலத்தின் வாய்க்குள் நுழைந்து விடும் தூண்டில் என தமிழக,இந்திய அரசியல் தடுமாற்றங்கள் என போராட்டம் எளிதாக இருக்கப் போவதில்லை.ஆனாலும் ஜனநாயக ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என்ற முத்திரையுடன் உலக அரங்கை சந்திக்க இதை விட வேறு வலிமையான ஆயுதமும் இல்லை.தேர்தல் முடிவுகள் நாளை எந்த விதமான எதிர்காலத்தை முன் வைக்கிறதென்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

2 comments:

வானம்பாடிகள் said...

மிகுந்த எதிர் பார்ப்பைத் தூண்டியிருக்கிறது. ஆனால் இந்த மிருகங்களிடம் கண்ணியம், ராஜரீகம் எடுபடாதே! கோட்டபாயவின் பேச்சும் அப்படித்தான் இருக்கிறது. கிலிகொண்டவன், எல்லாக் களவாணிகளின் ஆதரவுமிருக்கிறது என்று என்னல்லாம் செய்வானோ?

ராஜ நடராஜன் said...

//மிகுந்த எதிர் பார்ப்பைத் தூண்டியிருக்கிறது. ஆனால் இந்த மிருகங்களிடம் கண்ணியம், ராஜரீகம் எடுபடாதே! கோட்டபாயவின் பேச்சும் அப்படித்தான் இருக்கிறது. கிலிகொண்டவன், எல்லாக் களவாணிகளின் ஆதரவுமிருக்கிறது என்று என்னல்லாம் செய்வானோ?//

எங்க உங்க பதிவுகளைக் காணோம்?

வேட்பாளர்களில் பெரும்பாலோர் குறிப்பிட்டது அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக ஈழத்த்மிழர்களின் குரலாக இல்லாத ஒரே காரணத்தால் யாரையும் அணுகினாலும் அவர்கள் குறிப்பிடுவது தொடர்ந்து போராடுங்கள் என்பதும் தங்களுக்கென்று சட்டபூர்வமான அமைப்பிலிருந்து செயல்படுவதற்கு ஆதரவுண்டு என்பதும்.

இப்போதைக்கு உலக நாடுகளின் ஆதரவை மெல்ல திரட்டுவதும்,முகாம்களில் இருக்கும் மக்களை வெளியே கொண்டுவந்து அவர்களது பூமியில் வாழ வைப்பதுமே.அழுத்தங்கள் இல்லாத வரை ராஜபக்சே குடும்ப பேரரசுவை ஒன்றும் செய்ய இயலாது.இந்த இடத்தில் தமிழக அரசியலின் முக்கியமாக முதல்வரின் தற்போதைய அரசியல் குழப்பங்கள் மனதுக்குள் வந்து போவதை தவிர்க்க இயலவில்லை.

இந்த அழுத்தங்களால் பாதிக்கப்படுபவர்கள் ஈழத்தில் இருக்கும் தமிழர்களே என்ற கூற்றுக்கு வேட்பாளர் பெண்மணி ஒருவர் சொன்னது இழப்பதன் உச்சத்தை கடந்த ஒருவருட காலத்தில் அவர்கள் அனுபவித்து விட்டார்கள்.இழப்பதற்கு இன்னும் ஒன்றுமில்லை என்றார்.