தமிழகத்தில் தடுக்கி விழுந்தாலும்,எழுந்து நின்றாலும் வலையுலகில் சொல்வதற்கு நிறையவே இருக்குது.ஆனால் சொல்லும் சூழல்,மனநிலைகள் பலருக்கும் அமைவதில்லை பயணத்தில் இருந்த நான் உட்பட.இரு புத்தாண்டுகள் கழிந்து விட்ட நிலையில் சூடான பரிந்துரையில் இடம் பிடிக்கும் சீமானை கடிந்தும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு போன்றவர்கள் அரசியலில் வெளிச்சம் போடவேண்டுமென்றும் சொல்லி தமிழக அரசியல் கடையில் துவங்குகிறேன் இந்த வருட முதல் பதிவை.
பதிவின் பொருள் தமிழகம் மற்றும் இரு தனிப்பட்ட மனிதர்களின் ஆளுமைக்கும் அப்பால் புதிதாய் பிறந்த சீமானின் அரசியல்,இயக்க கொள்கை,முழக்கங்கள்,தடுமாற்றங்கள் பற்றிய விமர்சனத்தோடு ஒரு சிலருக்காவது நம்பிக்கையூட்டிய சீமான் தடம் புரள்கிறாரோ என்ற கவலையை உருவாக்குகிறது பலருக்கும் என்பதும் சீமான் விவாதத்திற்குள்ளாக்கப்படுகிறார் என்பதும் அவரது பலவீனமும் பலமும் என்பேன்.அதற்கும் முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணுவின் அரசியல் நிலைப்பாட்டை சொல்லி எந்த வித ஆளுமை தமிழனை ஆட்கொள்ளும் என கோடிட்டு காட்டி விட்டு தொடரலாம்.
நேற்று வின் தொலைக்காட்சியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது பற்றிய விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணுவின் பேச்சையும் முகபாவங்களையும் கவனிக்க நேர்ந்தது.மென்மையான குரலோடு தமிழக முதல்வர் தொட்டு எதிர் விமர்சனத்துள்ளாகும் ராஜபக்சே வரை கவனத்துடனும்,சாதுரியத்துடனும் கண்ணியமாக வார்த்தைகளையும், கருத்துக்களை சொன்னார்.ஒரு பண்பட்ட,பக்குவபட்ட மனிதராக காட்சியளித்தார்.நல்லகண்ணு அவர்களின் அரசியல் வீச்சு என்னவென்று பார்த்தால் நேர்மையானவர்,கம்யூனிஸ்ட்,அரசியல்வாதி என்ற பிம்பங்களோடு இவர் அரசியல் தலைமைக்கு சிறந்தவர் என கணிக்கலாமா? இவரை அறிந்தவர்கள் என்ற பட்டியலில் கம்யூனிஸ்ட்கள்,உழைப்பாளர் வர்க்கம்,பத்திரிகை மேய்பவர்கள்,நம்ம எலி வலைக்குள் ஊர்பவர்கள் என்ற வரையறைக்குள் அடங்கலாமென நினைக்கிறேன்.
இவரின் முழு வீச்சும் தமிழகத்தில் வீசப்படாததற்கு காரணமாக நேர்மை,நாணயம்,எளிமை என்பதற்கும் அப்பால் தமிழனுக்கு கொஞ்சம் முகப்பூச்சும்,அரிதாரமும் தேவைப்படுகிறது என்பதே உண்மை.திராவிட இயக்கங்கள் மொழியென்ற முகப்பூச்சும்,அரிதாரமும் இட்டுக்கொண்டு பவனி வந்ததாலும் இவர்களும், கம்யூனிஸ்ட்டுகளும் சமூகத்தின் அடிமட்ட மனிதர்களுக்கும் சேர்ந்து குரல் கொடுத்தும் மொழி அரிதாரத்தில் திராவிட இயக்கங்கள் தமிழனைக் கட்டிப்போட்டன எனலாம்.மொழி,கலை,இலக்கியம்,திரைக்கவர்ச்சி,அரசியல் கனவு,சூழ்ச்சிகள்,அரசியல் தந்திரங்கள்,நிர்வாகம்,ஆளுமை மேம்பாடு,தமிழனின் மனோபாவம் என்ற மொத்த கலவையில் கம்யூனிஸ்ட்டுகளும் பெரியவர் நல்லகண்ணுவும் காணாமல் போய் விடுகிறார்கள்.ஒரு சிறந்த அரசியல்வாதிக்கு இலக்கணம் திரு.நல்லகண்ணு என்றாலும் தமிழக அரசியல் நடைமுறை சாத்தியங்களில் காணாமல் போய்விடுகிறார் என்பது வருத்தத்திற்குரியது.இதற்கும் மேல் இவரைப் பற்றி மேலும் விவரிக்க இயலாது போகும் நிலையிலேயே தமிழக அரசியல் தடுமாறிப்போகிறது.எனவே தடாலடி அரசியல் மட்டுமே தமிழர்களை தன்பக்கம் இழுக்கிறது என்பது உண்மையும் சோகமும் கூட.
இனி சீமானைப் பார்ப்போம்.சீமான் அவர்களே!புன்முறுவலோடு கை குலுக்கி தொட்டுவிடும் தூரத்தில்தான் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் சென்னை பயணித்தில் சந்திக்க நினைத்தும் ஊர்கள் சுற்றும் கால அவகாசமின்மையால் உங்களை சந்திக்க இயலாமல் போய் விட்டது.இருந்தாலும் சந்திப்பின் நினைப்பை எழுத்தில் கொண்டு வருவது எளிதாகவும்,விரிவாகவும் இருக்குமென நினைக்கிறேன். வலையுலக இயக்கத் தோழர்கள் யாராவது செய்தி சொல்லாமல் போனாலும் கூட சீமான் என்ற சொல் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்துவதால் கருத்து பரிமாறல்களுக்கு வேண்டியாவது இங்கே .
இளமை,துடிப்பு,வேகம்,கோபம்,உணர்ச்சிவசப்படுதல் என்ற கோட்டுக்குள் மொழி உணர்வும்,ஈழம் குறித்த அக்கறையும்,இளைய சமூகத்தை கவரும் தன்மையும்,எதிரிக்கு எதிரி நண்பன் என்ற தற்போதைய அ.தி.மு.க சார்பும் தமிழக அரசியலுக்கு மாற்றாக வருவாரோ என்று கணிப்பவர்களுக்கும்,அவரின் பின் செல்ல நினைப்பவர்களில் சிலருக்கும் எதிர் விமர்சனத்தையும் வருத்தத்தையும் தருகிறது.2016 தான் தனது அரசியல் களம் என்று நினைத்தால் இயக்கத்தை கட்டி எழுப்பவும்,தாக்கு பிடிக்க இயலுமா என்று கணிக்கவும் 5 வருட கால அவகாசம் உள்ளது.
இந்த தேர்தலில் தி.மு.க வென்றாலும் கூட இன்னும் 5 வருடத்திற்கும் அப்பாலும் தி.மு.க தனது ஆக்டோபஸ் கரங்களை பரவ விடும் என்றும் எதிர்பார்க்க முடியாது.காரணம் ஒப்புக்கு சப்பாணியாக ஏனைய தி,மு.க தலைவர்கள் வீற்றிருப்பதால் கலைஞர் கருணாநிதியின் தனிமனித ஆளுமை மட்டுமே தி.மு.க என்ற விருட்சத்தை தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது எனலாம்.எனவே வலுவான களம் அமைக்கவும்,அரசியல் நெளிவு,சுழிவுகள் கற்கவும் சீமானுக்கு கால அவகாசம் இருக்கிறது தூரப்பார்வையும் பொறுமையும் இருந்தால்.இந்த தேர்தலுக்கான குறியாக தி.மு.க வீழ்த்தப்பட இயலா விட்டாலும் தனது பலம் என்னவென்பதை கணிக்கும் விதமாக ஒரு சில இடங்களிலாவது தன் இயக்க வாக்காளர்களை தனித்து நிறுத்த முயற்சி செய்யலாம்.இல்லையென்றால் உட்கார்ந்து கொண்டே உயரமாய் காட்சி அளிக்கும் கலைஞரை எதிர்த்தும் கூட நிற்க துணியலாம்.
இவைகளுக்கும் அப்பால் ஓட்டு வங்கி,காசு கொடுத்தால் ஓட்டு விற்கப்படும் விளம்பரப்பலகைகளையும் கவனிக்க வேண்டியிருக்கிறதே என்று நினைத்தால் மூன்றாவது கூட்டணிக்கான முயற்சிகளைத் தேடலாம்.ஆனால் ஈழம் என்ற ஒற்றைக்கோட்டில் பயணித்தாலும் ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் தனிமனித ஈகோ,தனது கட்சியென்ற எதிர்கால சுயநலம் காரணமாக ஒன்றாகும் சாத்தியமில்லையென்பது தெரிகிறது.ஈழம் என்பது தமிழகத்தில் அரசியல் வியாபாரமாகிப்போனது வருத்தத்திற்குரியது.
கட்சிகளுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் ஈழமென்பது வெளியுறவுக்கொள்கை என்பது மத்திய அரசுக்கு புரிகிறதோ இல்லையோ தமிழகம் சார்ந்த தமிழகத்தின் வெளியுறவுக் கொள்கை என்பது ஈழம் சார்ந்த கொள்கை உடைய தமிழக தலைவர்களுக்கு புரிய வேண்டும்.துவக்கப்புள்ளியாக கச்சத்தீவு பற்றிய விழிப்புணர்வாவது தலைவர்கள் என்பவர்களுக்கும் தமிழர்களுக்கும் இருக்க வேண்டும்.இல்லையென்றால் ஆங்கிலேயர்கள் வியாபாரம் செய்ய இந்தியா வந்தார்கள் என்பது சரித்திரம் என்பதோடு புரியாமல் போனாலும் கூட சீனாவின் மின்பொருட்கள் சென்னை நகரம் முழுவதும் கிடைக்கிறது என்பதை விட கோவை நகரிலேயே சீனாவின் துணிகள் விற்கப்படுகின்ற அவல நிலை உணராத மந்த புத்தியிலேயே நமது முன்னோர்களும் கூட இருந்திருப்பார்கள் என்று எளிதாக உணரலாம்.
இந்த நிலையில் அ.தி.மு.கவின் பின் செல்வது என்பது நாம் தமிழர் இயக்கமென்ற ஓடி ஜெயிக்கும் குதிரை சறுக்கிக் கொள்வது என்பேன்.ஜெயலலிதா என்ற சண்டிக்குதிரை மீது அரசியலை பணயம் வைப்பது எவ்வளவு அரசியல் தொலைப்பார்வை கொண்டதாக இருக்கும்?தி.மு.கவின் வீழ்ச்சி மட்டுமே இந்த தேர்தலின் தேவையென்றால் அஸ்திவாரமான கலைஞரை சாய்த்தாலே போதும்.கலைஞர் கருணாநிதியை வீழ்த்துவது சாத்தியமில்லையென்றாலும் கூட அரசியல் போர் தெரிந்த வீரனோடு மல்லுக்கட்டிய பெருமையாவது மிஞ்சும்.வென்றாலும் பெருமை.வீழ்ந்தாலும் பெருமை.இது என்னோட பார்வை.
அரசியலில் சில சமரசங்களை செய்து கொள்ள வேண்டித்தான் என்பதாலும்,சிறை சினம்,கொள்கை சார்ந்த கோபம் இருக்கிறதென்றால் அரசியல் வெற்றிகள் மட்டுமே ஏனைய குறைகளைப் பின் தள்ளும்.கூட்டணி கணக்கு மட்டுமே வெற்றியென்ற நிலையில் உங்கள் அரசியல் கணக்கு சரியாக இருந்தாலும் கூட்டணி வெற்றிக்குப் பின்னாலும் உங்கள் குரல்,கோரிக்கைகள் காது கொடுத்து கேட்கப்படுமா என்பதை இப்பொழுதே தீர்மானியுங்கள்.இல்லையென்றால் ம.தி.மு.க வின் நாஞ்சில் சம்பத் அவர்கள் கலைப்புலி தாணுவை இமயம் தொலைக்காட்சியில் நேற்று விமர்சித்த நிலைக்கு நீங்களும் ஒரு நாள் தள்ளப்படுவீர்கள்.
அடுத்து அ.தி.மு.க விற்கு ஸ்பெக்ட்ரம்,தமிழக மக்களில் ஒரு பகுதியினருக்கு குடும்ப அரசியல் கோபம்,திரைப்பட ஆக்டோபஸ்,ஏனைய கூட்டணி அமைக்கும் திறன்,தனது ஓட்டு வங்கி என்பவற்றாலும் வெற்றி வாய்ப்புக்கு சாத்தியமிருக்கிறது.நாற்காலி கனவு,தி.மு.க எதிர்ப்புக்கும் அப்பால் அ.தி.மு.கவின் குரல் பிரதிபலிப்பது என்ன? குறைந்த பட்சம் சென்ற தேர்தலில் ஒலித்த தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு மாற்றாக கணினி என்ற குரலைக் கூட இன்னும் காணோம்.
அதே நேரத்தில் கலைஞர் கருணாநிதியின் அரசியல் சூட்சுமம்,ஆட்சி அனுபவம்,இலவசம், காசு கொடுத்தால் சாதிக்கலாம் நம்பிக்கை,கண்ணுக்குத் தெரியாத அரசியல் வெற்றி தில்லுமுல்லுகள்,கட்சியின் நிரந்தர ஓட்டு வங்கி,இணைக்கும் கூட்டணி போன்றவைகளையும் தி.மு.கவின் அரசியல் பலத்தை எளிதாக எடை போட்டு விடமுடியாது.வலையுலக விவாதங்கள் பற்றிக் கவலைப்படாத பெரும்பான்மை கூட்டமே தமிழகம்.எனவே தி.மு.க vs அ.தி.மு.க என்ற அதே சுழற்சியில் மாற்றங்கள் தேவையென்ற ஒற்றைக்குறிக்கோள் தவிர 2011 தமிழக தேர்தல் களம் சீமானுக்கோ நாம் தமிழர் இயக்கத்துக்கோ தனித்துவமான எதிர்காலத்தை உருவாக்காது என்பது மட்டும் நிச்சயம்.
7 comments:
//சில இடங்களிலாவது தன் இயக்க வாக்காளர்களை தனித்து நிறுத்த முயற்சி செய்யலாம்.//
வேட்பாளர்களை.
------
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களிடமிருந்து ஒரு பதிவு. ஆற்ற முடியாமல் வார்த்தைகள் வழிந்தோடுகின்றன. எந்தப் புள்ளியில் பேசத் தொடங்குவது என்று தெரியாமல் நான்.
வேறு விதமான தேர்தல் களங்கள், வேறு விதமான மேடைகள், தேர்தல் அணுகுமுறைகள்.
இன்னும் குறைந்த பட்சம் ஐந்து வருட தக்க வைத்தலுக்காகவது உதவலாம். அதற்கு தேவையானது வியூகமான தேர்தல் நகர்வுகள்.
அள்ளி கொட்டிருக்கீங்க! இந்த பின்னணியில் சூப்பர் ஸ்டார் எங்கே இருப்பார் - சீமான் vs நல்லகண்ணு vs தமிழகம்.
என்னுடைய பார்வை சீமான் பக்கம் நகர்ந்ததிற்கு காரணமும் கூட எந்த பிரச்சினை பேசப்பட வேண்டுமென்ற அந்த துணிபு (உ.தா: அண்டைய மாநிலங்களுக்குள் நிகழும் தண்ணீர் பங்கீடு பிரச்சினை... ). அப்படியே சூப்பர் ஸ்டார் வந்திட்டாலும் இத்தனை தெளிவு இருக்குமா?
//வேட்பாளர்களை.
------
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களிடமிருந்து ஒரு பதிவு. ஆற்ற முடியாமல் வார்த்தைகள் வழிந்தோடுகின்றன. எந்தப் புள்ளியில் பேசத் தொடங்குவது என்று தெரியாமல் நான்.//
கும்மி!எப்படியிருக்கீங்க?
தற்போதைய சூழலில் சீமான் ஒரு மாற்று அரசியலுக்கான அஸ்திவாரம்.விளைவுகள் எந்த திசையை நோக்கிப் போனாலும்.
ஆனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அணுகுமுறை நீண்ட அரசியலுக்கு உதவாது என்பதோடு இது அ.தி.மு.கவுக்கே சாதகமென்பதோடு இந்த குதிரை எப்பொழுது எட்டி உதைக்கும் என்பதும் கணிக்க இயலாத ஒன்று என்பதும் சீமானுக்கு தெரியாமல் போகுமா?
//நன்றிகள்//
ராம்ஜி!புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//வேறு விதமான தேர்தல் களங்கள், வேறு விதமான மேடைகள், தேர்தல் அணுகுமுறைகள்.
இன்னும் குறைந்த பட்சம் ஐந்து வருட தக்க வைத்தலுக்காகவது உதவலாம். அதற்கு தேவையானது வியூகமான தேர்தல் நகர்வுகள்.
அள்ளி கொட்டிருக்கீங்க! இந்த பின்னணியில் சூப்பர் ஸ்டார் எங்கே இருப்பார் - சீமான் vs நல்லகண்ணு vs தமிழகம்.
என்னுடைய பார்வை சீமான் பக்கம் நகர்ந்ததிற்கு காரணமும் கூட எந்த பிரச்சினை பேசப்பட வேண்டுமென்ற அந்த துணிபு (உ.தா: அண்டைய மாநிலங்களுக்குள் நிகழும் தண்ணீர் பங்கீடு பிரச்சினை... ). அப்படியே சூப்பர் ஸ்டார் வந்திட்டாலும் இத்தனை தெளிவு இருக்குமா?//
தெகா!தற்போதைய மாற்று அரசியலுக்கு குரல் கொடுக்கும் தொனிக்காவது சீமானை பாராட்டலாம்.ஆனால் சார்பு நிலை வியூகம் அவரது எதிர்கால அரசியலை பாதிக்கும் என்பதே எனது கணிப்பு.
சூப்பர் ஸ்டாருக்கெல்லாம் நிர்பந்தங்கள் இருப்பதும்,இன்னும் எந்த திசையில் பயணிக்கலாம் என்ற குழப்பம் இருப்பதும் கண்கூடாகவே தெரிகிறது.தி.மு.க அவரது தயக்கத்திற்கு முக்கிய காரணம் என்பது எனது நீண்ட கால சந்தேகம்.
இன்னும் கொஞ்ச காலம் அவரது நிலைப்பாடு இதுவாகவே இருக்கும்.காலம் கடந்த முடிவுகளுக்கு துணிய மாட்டார் என நம்பலாம்.அவரது ரசிகர்களுக்கு திசை மட்டும் காட்டலாம்.
விரிவான அலசல்.
//விரிவான அலசல்.//
சித்ரா மேடம்!எப்படியிருக்கீங்க?ருசி ருசியா நல்லா சாப்பாடு கிடைக்குது தமிழகத்தில்.ஓரளவுக்கு எல்லோரும் செலவு செய்யும் வசதிகள் இருந்தும் இன்னும் அடிப்படை கட்டமைப்புக்கள்,வாழ்க்கைப்போராட்டங்கள்,ஊழல் சர்வ சாதாரணமாகி விட்டதெல்லாம் கண் கூடாக தெரிகிறது.
ஊரில் இருந்து விடவேண்டும் என்று மேலோட்டம் பார்க்கும் ஒவ்வொரு இந்திய பயணமும் திரும்பி ஓடவே வைக்கிறது.இருந்தும் பிறந்த மண் பாசம் மட்டும் போகவே மாட்டேங்குது:)
Post a Comment