Followers

Wednesday, May 13, 2009

இந்திய ஜனநாயகத் தேர்தல்

உலகிலேயே மனித சாதனையாக பல கண்டுபிடிப்புக்களும்,ஏனைய கோளங்களுக்குப் பயணிக்க மனிதன் முயன்றதாக இருந்தாலும் மிக மிகப் பெரிய சாதனையாக மனித சுதந்திரம் என்ற உன்னதமான கோட்பாட்டுக்கும் மனித நலன்களுக்கும் சென்றடையும் வழியாக அமைந்தது ஜனநாயகமும் ஜனநாயகத் தேர்தலுமே.மனிதன் சமமாக வாழ வேண்டும் என்ற மார்க்சீய சித்தாந்தங்கள் எவ்வளவு உயர்ந்தவையாக இருந்தபோதும் ஜனநாயக தத்துவங்களுக்கு முன் அவை தோல்வியையே தழுவியுள்ளது.பரிட்சார்த்தம் செய்த ரஷ்யாவும்,சீனாவும் மனித உரிமைகளை உலகிற்கு காண்பிக்காமல் இரும்புத்திரை போட்டு மூடி மறைக்கவே செய்தது.செய்கிறது.எனவே தற்போதைய சூழலில் மனிதன் தன்னைத் தானே நிர்வாகம் செய்து கொள்ளும் ஆட்சி முறைகளில் ஜனநாயகத்தை மிஞ்ச வேறு சித்தாந்தங்களே இல்லை இன்னுமொரு நல்ல புதிய சித்தாந்தம் பிறக்கும் வரை.

இனி பொதுவான இந்திய தேர்தல் பக்கம் தாவினால் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக தேர்தல் ஆணையம் இருப்பதும் அதன் மகத்தான சேவையை தனது அதிரடி நடவடிக்கைகளால் எந்த அரசியல் கட்சிக்கும் கட்டுப்படாமல் பொதுமக்கள் அறியத்தந்ததின் பெருமை முந்தைய தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனையே சாரும்.இந்திய ஜனநாயகத்தின் பக்கவிளைவுகளாக கள்ள ஓட்டு,தேர்தல் கலவரங்கள்,நக்ஸல் இயக்கம்,போராட்டங்கள்,தகராறுகள் இன்னும் பல இருந்தாலும் இவை அனைத்தையும் மீறி இந்தியா ஜனநாயகம்,தேர்தல் என்ற உலகின் மிகப் பெரிய நிகழ்வு மேலாண்மையை (Event management) நிகழ்த்திக் கொண்டிருப்பதில் இந்தியனாக அனைவரும் பெருமைப்படலாம்.தனது கோபங்கள்,இயலாமை போன்றவைகளுக்கும் கருத்து சுதந்திரம் என்ற வடிகாலைத் தந்திருக்கிறது ஜனநாயகம்.

பல்வேறு பரிமாணங்களின் கலவையில் சில தோல்விகள் மாதிரியும் விரக்தியும் கூட தோன்றலாம்.அரை நூற்றாண்டின் ஜனநாயக ஓட்டத்தில் மிகப்பெரிய ஜனத்தொகையின் கலப்பில் மொத்தக் கணிப்பில் நாம் வெற்றியே அடைந்திருக்கிறோம்.சில அரசியல் நிர்வாகத் திறமைகளில் தோல்விகளை அடைந்திருந்தாலும்,மனித மேம்பாட்டின் நலன்கள் அனைவருக்கும் போய்ச் சேரவில்லையென்றாலும்,பொருளாதார இருப்புக்கள் பதுக்கப்பட்டுப் போய் இருந்தாலும் ஜனநாயகம் என்ற கோட்பாடு நம்மை இன்னும் முன்னேறும் பாதையிலேயே தள்ளிக் கொண்டிருக்கிறது.

தேர்தலின் இறுதி நாளான இன்று வரையிலும் வாய் திறக்கும் அத்தனை கட்சிகளும் 40ம் எங்களுக்கே என்று சத்தமிடுகின்றன.சமீபத்து பதிவுகள் சில தி.மு.க கூட்டணி மற்றும் அ.தி.மு.க கூட்டணிக்கு முன்ன பின்ன பாதிக்கு பாதியா இடங்களைப் பிரித்துக் கொடுத்து விட்டார்கள்.இந்தக் கணிப்பு நடுநிலைமையா அல்லது களநிலவரங்களை ஆராய்ந்து எழுதுவதாலா அல்லது கொஞ்சம் கட்சி சார்பு கணக்குகள் போட்டுமா என்று தெரியவில்லை.

தொலைக்காட்சியில் பிரச்சாரக் கூட்டத்தைக் கண்டால் எல்லோரும் கூட்டம் சேர்ப்பதில் வல்லவர்கள் மாதிரியே சீன் காட்டுகிறார்கள்.மக்கள் வேடிக்கை பார்க்கும் கூட்டமோ என்றும் யோசிக்க வைக்கிறது.ஆனால் துண்டை தோளில் போட்டுகிட்டு உற்றுக் கவனிக்கும் மனிதன் அரசியலில் சோடை போனவனில்லை என்றும் கடந்து போன தேர்தல் முடிவுகளில் தெரிகிறது.கடந்த மாதங்கள் மொத்தக் கணிப்பாக பதிவுகளை நோக்கினால் கலைஞர் மேல் உள்ள கோபம் வெளிப்படை.திரைப்பட இயக்குநர்கள் இந்த முறை தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக தேர்தல் எதிர்ப்பு உணர்வுகளை நோக்கும் போது காங்கிரஸ் ஒரு இடத்திலும் தேறாது என்பது போலவே இருக்கிறது.ஆனாலும் 4 இடம் காங்கிரசுக்கு நிச்சயம் என்றும் பதிவு வருகிறது. கணிப்புக்களின் உண்மை நிலவரம்தான் என்ன?

தமிழகத்தில் ஈழம் பற்றிக் கொண்டிருக்கையில் தமிழக எல்லையைத் தாண்டி நோக்கினால் பாராளுமன்றம் தொங்குவது நிச்சயமாகிறது.உலக அரங்கில் மன்மோகன் சிங் பிரதமராக செயல்பட்டாலும் சோனியாவே நிழல் பிரதமர் என்பதும் இன்னும் சில மாநிலங்களின் நிலவரம் காங்கிரசுக்கு சாதகமில்லா நிலையிருப்பதாலும் அடுத்த ஆட்சிக்கு தேறுமா என்றும் சந்தேகத்தைக் கிளப்புகிறது.ஆனால் கூட்டல் கழித்தல் கூட்டணி முறையில் இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை. பி.ஜே.பி அல்லது மூன்றாவது அணி ஆட்சியைக் கைப்பற்றுமா?மூன்றாவது அணி உருவாகினால் ஆதரவு தரும் கட்சி மத்தியில் ஆட்சியைக் காலை வாரி நாற்காலி கனவு காண்பதற்கும் சாத்தியம் இருக்கிறது.

அலை ஓட்டு,விலை ஓட்டு,ஜாதி ஓட்டு,காசு ஓட்டு,கட்சிக்கு வாக்கப் பட்ட ஓட்டு,வர்க்க ஓட்டு,புடிச்சிகிட்டு போய் போட வச்ச ஓட்டு,கோப ஓட்டு,போடாத ஓட்டு,கிராம ஓட்டு,டவுன் ஓட்டு,சமய ஓட்டு,சமயம் சாரா ஓட்டு,பாராளும் கனவு ஓட்டு,பாராளுமன்றக் கனவு ஓட்டு,கூட்டணி ஓட்டு,கூட்டணியில்லா ஓட்டு,காரிய ஓட்டு,கள்ள ஓட்டு,நல்ல மனுசன் ஓட்டு,மேடைப்பேச்சு ஓட்டு,ஈழ ஓட்டு,படிச்ச ஓட்டு,படிக்காத ஓட்டு,பிரிக்கும் ஓட்டு,அம்மா ஓட்டு,அய்யா ஓட்டு,கலைஞர் ஓட்டு,கள்வன் ஓட்டு,சினம் ஓட்டு,சின்னம் தெரியா ஓட்டு,49 ஓ என்று எத்தனை வட்டங்களைத் தாண்டி வரவேண்டியிருக்கிறது வேட்பாளனும்,வாக்காளனும்.ஆழமாய் சிந்தித்தால் பிரமிப்பான விசயமே.

கடந்த கால இந்தியப் பொருளாதாரத்தை நிலை நிறுத்தியதில் கடலோடித் திரவியம் தேடும் இந்தியர்களின் பங்கும் உள்ளது.அதோடு கூட வாழ்க்கைப்பட்ட பூமிகளின் நல்ல பிரதிபலிப்புக்களும் கூட கடலோடிகளிடம் உள்ளது.கடல் கடந்த மனித வளங்களையும் ஓட்டு என்ற உரிமையை விரிவுபடுத்துவதிலும் இந்திய ஜனநாயகத் தேர்தல் இனி முயலவேண்டும்.போஸ்டல் ஓட்டு என்ற முறையிலிருந்து இப்பொழுது தொழில் நுட்ப ஓட்டுக்களாய் இந்திய அரசியலமைப்பு அனைத்து இந்தியர்களையும் இணைத்துக் கொள்வது அவசியம்.

இறுதியாக இணையங்களில் ஒலித்த தமீழீழ ஆதரவுக்கான குரல் இணையங்களைத் தொடாத மனங்களில் மொத்த தமிழ்மண்ணில் எப்படி ஒலிக்கும் என்ற ஆவலுடன் நிறைவு செய்கிறேன்.

4 comments:

ஷண்முகப்ரியன் said...

மனிதன் சமமாக வாழ வேண்டும் என்ற மார்க்சீய சித்தாந்தங்கள் எவ்வளவு உயர்ந்தவையாக இருந்தபோதும் ஜனநாயக தத்துவங்களுக்கு முன் அவை தோல்வியையே தழுவியுள்ளது.

எப்படி காங்கிரஸை வைத்துக் காந்தியை எடை போடக் கூடாதோ,அதே போலக் கம்யூனிஸ்ட்களை வைத்துக் காரல் மார்க்ஸையும் எடை போட முடியாது,நடராஜன்.
நமது ரிஷிகள் காட்டிய இந்துக்களா நாம்?

நசரேயன் said...

பொறுத்து இருந்து பார்ப்போம்

ராஜ நடராஜன் said...

//எப்படி காங்கிரஸை வைத்துக் காந்தியை எடை போடக் கூடாதோ,அதே போலக் கம்யூனிஸ்ட்களை வைத்துக் காரல் மார்க்ஸையும் எடை போட முடியாது,நடராஜன்.
நமது ரிஷிகள் காட்டிய இந்துக்களா நாம்?//

வாங்க சார்.கார்ல் மார்க்ஸை பயன்படுத்த முயன்று திசை மாறிப்போய் தோல்வி தருவதாகவே காட்சி தருகிறது ரஷ்யாவும்,சைனாவும்.தமது நாட்டு மனித உரிமைகளுக்கு முட்டுக்கட்டை போட்ட பழக்கத்தில் இப்பொழுது பாதுகாப்பு சபையில் ஈழ மக்களின் சாபங்களையும் சேர்த்து வாங்கிக் கொள்கின்றன மார்க்சியம் தவறிய இரு நாடுகளும்.

எனக்கு ஆழ்ந்த மார்க்சிய சிந்தனைகள் எல்லாம் தெரியாதுங்க சார்.ஆனா எந்த மனிதனும் பட்டினி கிடக்கக் கூடாது,மனிதனை மனிதன் அழிக்கும் அவல நிலைகளுக்கு மூல காரணங்கள் இருக்க கூடாது.போர் இருக்க கூடாது.மனித நேயம் வளரணும்.மனிதனும் மனிதனும் சமம்.இதுதான் உலகம் எனக்கு கற்பித்த சித்தாந்தங்கள்.

ராஜ நடராஜன் said...

//பொறுத்து இருந்து பார்ப்போம்//

எதுக்கு பொருத்து இருந்து பார்க்கிறது.அதுதான் பதிவுலக ஜோஸ்யகாரங்க ஆளுக்கு ஒண்ணு சொல்லிட்டுத் திரியறாங்களே.பிடிச்சதுல ஒண்ண இப்பவே எடுத்துகிட்டா போச்சு:)