Followers

Monday, March 15, 2010

நீயா?நானா அழகான பெண்கள்

அழகான பெண்களைப் பற்றி சொல்வதற்கு முன் ஒரே சமயத்தில் மக்களிடம் பிரபலமான இரு தொலைக்காட்சி நிகழ்வுகள் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப் பட்டால் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?உதாரணத்திற்கு நேரலையாக கிரிக்கெட் அல்லது பெண்களின் மனதை உருக்கும் மெகா சீரியல் என்கின்ற போது இயல்பாகவே ஆண்களுக்கு கிரிக்கெட்டும் பெண்களுக்கு மெகா சீரியலும் என்று எளிதாக சொல்லி விடலாம்.

ஆனால் கலைஞர் மானாட மயிலாடவும் விஜய் நீயா?நானாவில் அழகான பெண்கள் தென்னிந்தியப் பெண்களா அல்லது வடஇந்தியப்பெண்களா என்று பெண்களே களத்தில் விவாதிக்கும் போது உங்கள் விருப்பம் இரண்டில் எந்த நிகழ்ச்சிக்கு தாவும் என்பதும் கூட தனிப்பட்ட ரசனையைப் பொறுத்தது.பெரிய பட்ஜெட் படம் என பிரமாண்டமான தோட்டா தரணி செய்து படம் சரியாக ரசிகர் மத்தியில் போணியாகமல் போவதுமுண்டு.கதையின் வீச்சினால் கிராமப்புற யதார்த்தம் மனதை கொள்ளை கொள்வதுமுண்டு.அந்த மாதிரி பல லட்சக்கணக்கில் செலவு செய்து அலங்கார செட்டில் பெண்கள் கொஞ்சம் குண்டு,கொஞ்சம் அழகு,மேக்கப்போடு ஜிகினா உடைகள்,கொஞ்சம் ஜிம்னாசிய ஆண்கள்,திரைப்படங்களுடன் போட்டி போடும் நடன அசைவுகள்,நகைச்சுவை,கும்மாங்குத்து என கலவை செய்தாலும் மனது மானாட மயிலாடவில் லயிக்கவில்லை.

கலைஞர்,சன் தொலைக்காட்சி ஊடகங்கள் மீது தனிப்பட்ட வெறுப்போ,காழ்ப்புணர்ச்சியோ இல்லாது போனாலும் மக்களால் தங்களை உயர்த்திக் கொண்ட இவர்கள் தமிழுக்கும்,தமிழகத்திற்கும் தொலைக்காட்சி ஊடகத்தைப் பொறுத்தவரை பயனுள்ள வகையில் நிறைய செய்திருக்கலாம் என்ற மனக்குறை நிறையவே.தங்கள் சொந்த அர்ப்பணிப்பு,பங்களிப்பு,தமிழ் நாட்டின் சிறப்பான நிகழ்ச்சிகளையும் இணைத்துக் கொள்வது என அனைத்து விதக் கலவையாகவும் அதனூடே மொழியின் வீச்சாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரலை அமைப்பது எப்படி என்பதை புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அரசியல் காரணங்களுக்காக பல தருணங்களில் பல்வேறு புலம்பெயர் தொலைக்காட்சிகள் நின்று போயிருந்தாலும் செயல்பட்ட வரை நிகழ்ச்சிகள்,தொழில் நுட்பம்,மொழி வளர்ச்சி என தங்கள் பங்கை நிறைவாக செய்ததை பாராட்ட வேண்டும்.தங்கள் உழைப்பின் சில விழுக்காட்டை சந்தாவாக செலுத்தி வளர்த்த காட்சி ஊடகங்கள் போல் அல்லாது தமிழக தொலைக்காட்சிகள் பொருள் வளம்,மனித வளம்,தொழில் நுட்பம் அனைத்தும் இருந்தும் பின்தங்கிப்போவதன் பொருட்டே மனம் அங்கலாய்க்கிறது.பல இளைஞர்,இளைஞிகளின் உழைப்பும்,நடன இயக்குநர் கலாவின் அபரீதமான நிகழ்ச்சிக்கான கற்பனைகளும் நிறைந்திருந்தாலும் ஒரு வித குறு குறுப்பையும்,குடும்பத்தோடு உட்கார்ந்து பார்ப்பதென்றால் உடலை நெளியவும்,குறு குறுக்க வைக்கும் அங்க,நடன அசைவின் வெளிப்பாடுகள் நிறையவே கொட்டிக் கிடக்கின்றன மானாட மயிலாட.இதில் வேறு நேற்று டூயட் ரவுண்ட் எனும் போது சொல்லவா வேண்டும்?

அதே நேரத்தில் விஜய் தொலைக்காட்சியின் நீயா நானாவில் அழகான பெண்கள் தென்னிந்தியப் பெண்களா,வட இந்தியப் பெண்களா என்று மாநிறத்தில் யதார்த்தமான மூக்கும் முழியுமாக தென்னகப் பெண்களையும் வடநாட்டை காலை வாரிவிட வேண்டுமென்ற நோக்கத்திலோ அல்லது தமிழ் பேசும் சவுகார்பேட்டைப் பெண்களையோ வடநாட்டுக்கு சிபாரிசு செய்து உட்கார வைத்திருந்தார்கள்.இருந்தாலும் தங்கள் பாரம்பரியத்தை தென்னகத்தை விட வடநாட்டுப்பெண்கள் காக்கிறார்கள் என்று ஒரு பெண் இசைக்கேற்ப குடத்தை இடுப்பில் வைத்து ஆடியதும்,தாண்டியா நடனமும் வடக்குக்கு கரவொலி எழுப்பியது.தென்னகப் பெண்கள் கும்மியடி பெண்ணே கும்மியடி குடி கொலவயும் போடு கும்மியடி என ஹாரிஸ் ஜெயராஜின் பாடலுக்கு கும்மியடித்தார்கள்.

வடநாட்டு,தென்னக முக்கியமாக தமிழ்நாட்டு ஆண்கள் பற்றிய பெண்களின் பார்வையில்...

தெற்கு:ஆம்பிளைன்னா மீசை முறுக்கோட மிடுக்கா இருக்கணும்.ஜல்லிக்கட்டு காளையக் கூடப் புடிக்கிற தெம்பு இருக்கணும்.கருப்பா இருந்தாலும் களையா இருக்காங்க நம்ம பசங்க.வடநாட்டுப் பசங்களப் பாரு மீசையில்லாம அமுல் பேபி மூஞ்சிகள வச்சிகிட்டு பொம்பள மாதிரி மெதுவா பேசிகிட்டு.

வடக்கு:ஆமா!எப்ப பார்த்தாலும் கத்தி பேசிகிட்டே இருந்தா யாருக்கு புடிக்கும்?ஒரு லுங்கிய கட்டிகிட்டு ஊர் முழுதும் திரியறது:)வடக்கிலயும்தான் வீரமான ராஜ்புத் ஆண்கள் இருக்கிறார்கள்.

தெற்கு:ஆம்பிளைன்னா கத்தி பேச வேண்டிய நேரத்துல கத்தி பேசனும்.மெதுவா பேச வேண்டிய இடத்துல மெதுவா பேசனும்.இந்த இரண்டும் தமிழ்நாட்டு ஆண்கள்ட்ட இருக்குது.

வடநாட்டுப் பெண்கள் மாடர்னாகவும் ஆங்கிலத்தில் பேசுபவர்களாக இருந்தாலும் தங்கள் மொழியிலும் திறம்பட பேசும் ஆற்றலுடையவர்களாக இருக்கிறார்கள்.பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் தவறில்லை.மாறாக மாநிறம்தான் அழகு என்பதை உணராமல் தென்னிந்தியப் பெண்கள் தங்களை சிவப்பாக்க முயற்சி செய்து கொள்கிறார்கள் என்று நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத் முடித்து வைத்தார்.கோபிநாத்தின் சரளமான தமிழுக்கும் மொக்கை தலைப்புக்குள்ளும் நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்களை இணைத்து வெற்றிகரமாய் கொண்டு செல்வதற்கு பாராட்டுக்கள்.

இந்தியா என்ற ஒரே எல்லைக்குள் நோக்கும் போது வடக்கு,தெற்கு கலாச்சார மாறுபாடுகளின் வெளிப்பாடுகள் இருக்கக் கூடும்.சென்னை,மும்பாய்,டெல்லி,கல்கத்தா என எல்லைகள் கடந்தபின் இந்திய,மேற்கத்திய,அரேபிய,லெபனான்,சிரியா,பிலிப்பைன்ஸ்,இலங்கை,எகிப்து பெண்கள் என்ற பார்வையில் 33 விகிதாச்சார உரிமைகளைக் கோரும் பெண் உரிமைகளில்
இந்தியப்பெண்கள் முன்னேறி நிற்கிறார்கள் ஏனைய பெண்களை விட.

2 comments:

வானம்பாடிகள் said...

விஜய் டிவி நிகழ்ச்சில உருப்படியா நல்லா பேச விஷயமிருந்தாலும் பெரும்பாலும் இப்படித்தான் போகுது போல.

ராஜ நடராஜன் said...

//விஜய் டிவி நிகழ்ச்சில உருப்படியா நல்லா பேச விஷயமிருந்தாலும் பெரும்பாலும் இப்படித்தான் போகுது போல.//

எல்லோரையும் யதார்த்தமாக விவாதத்தில் கலக்க வைப்பதால் வரவேற்கலாம் என நினைக்கிறேன்.உருப்படியா,அறிவார்த்தமாக உங்க ரேஞ்சுக்கு ஆளுகளைத் தேடனுமுன்னா நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கும் கொஞ்சம் சிரமம் இருக்கத்தானே செய்யும்:)

உதாரணத்திற்கு அயன்ராண்ட் ரோர்க்!