Followers

Thursday, November 25, 2010

எனது அரசியல் நிலைப்பாடு

சென்ற பதிவுக்கு நிறைய ஹிட் கணக்கு.கருத்து பரிமாறல்கள் தவிர நான் இவற்றில் அதிக ஆர்வமில்லாதவனாக இருந்தாலும் தற்போதைய இந்திய,தமிழக அரசியல் நிலை அனைவரையும் கவர்வதும்,பாதிப்பதும் மட்டும் இதிலிருந்து புரிகிறது.

முந்தைய பதிவு தந்த உற்சாகத்தால் இங்கே நொள்ளை அங்கே இல்லைன்னு ஒவ்வொரு கட்சிகளைப்பற்றியும் குறைகளாகவே சொல்லிகிட்டிருக்கிறதுக்கு பதிலாக எனது அரசியல் நிலைப்பாடு என்ன என்பதனையும் எவ்வாறு தமிழகத்தில் மாற்றங்களை கொண்டு வரலாம் என்றும் இங்கே பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.சில அடிப்படை தகுதிகள் நம்மிடம் இயல்பாகவே ஒளிந்து கொண்டிருக்கிறது.சிலவற்றை மாற்றிப்போட மக்களின் மனோபாவத்தை மாற்ற வேண்டியிருக்கிறது.

சிறுவனாக இருக்கும் போது மாறன் என்ற காங்கிரஸ்காரர் சிறுவர்கள் அனைவரையும் கூட்டி சுதந்திரதினத்தில் ஜனகனமன தேசியகீதம் பாடி கொடியேற்றி ரோஜா மலர்கள் தலையில் விழ வந்தே மாதரம் சொல்லிய பின் கிடைக்கும் மிட்டாயோ,சுதந்திர தினத்தில் கிடைக்கும் புதுச்சட்டை,டிரவுசர் அணிந்த மகிழ்ச்சியோ,கொடியின் மூவர்ணமோ மனதளவில் நான் காங்கிரஸ்காரனாகவே மாறிப்போனேன்.காங்கிரஸ் பற்றிய மதிப்பீடும் இதுவரை அப்படியேதான் அடிமனதில் நிற்கின்றது.

தி.மு.கவுக்கு மாற்று இல்லையென்ற நிலையில் கோவை வீதிகளில் நிகழும் அரசியல் கூட்டங்களில் அனல் பறக்கும் உச்சரிப்பும் தமிழும் இயல்பாகவே தி.மு.கவின் பால் இழுத்தது.எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா என்ற வசீகரகங்கள் என்னை ஏனோ அரசியலில் இதுவரை வசீகரிக்கவில்லை.இப்பொழுது ஓரளவுக்கு எம்.ஜி.ஆரின் மறுபக்கம் புரிகிறது.மேலும் அரசியலின் பலபக்கங்களையும்,சுயநலங்களையும் எனக்கு தோலுரித்துக்காட்டியது இணைய தொடர்பும் ஈழப்போரின் அவலங்களும் என்பேன்.

ஒரு புறம் அ.தி.மு.க என்ற ஆணவத் தலைமை,இன்னொரு புறம் குடும்ப அரசியல் என்ற தி.மு.க இரண்டுக்குமிடையில் தமிழ் இனத்துக்கு துரோகம் விளைவித்த காங்கிரஸ் என்ற பக்கவாத்தியம் என்ற மூன்று பரிமாணங்களில் தமிழகம் சிக்கி தவிக்கிறது.இவர்களுடன் கூட்டு சேர என ஜாதிக்கட்சிகள் ,சினிமா கவர்ச்சியென சிறு கிரியா ஊக்கிகளும் கூட.இந்த நிலைக்குள்ளேயே தமிழர்களின் மனமும் சுழன்று வருகின்றன.பணம்,குற்றவியல் பங்கீடு, ஜாதி,ஊழல்,சினிமா போன்ற காரணிகளே ஒரு கட்சியின் முக்கிய தகுதியாக இருக்கிறது.அனைத்துக்கட்சிக்குள்ளும் தொண்டர்கள்,துணை தலைவர்கள் என நல்லவர்களும் இருக்ககூடும்.ஆனால் கட்சியென்ற கூட்டுக்குள் இவர்கள் அனைவருமே தனது சுயங்களை இழந்து விடுகிறார்களென்றே நினைக்கிறேன்.
 
எனக்கு கம்யூனிஸ்ட்களின் கொள்கைப்பிடிப்பு,போராட்ட குணம்,உழைக்கும் வர்க்கத்துக்கு குரல் கொடுக்கும் துணிவு பிடித்திருக்கிறது.ஆனால் சீன,ரஷ்ய சித்தாந்தங்கள் என்ற பக்கசார்புகள், யதார்த்தமான பொருளாதார நிலை,கேரள,கல்கத்தா மாநிலங்களின் வளர்ச்சியின்மை கம்யூனிசம் மீது அவநம்பிக்கையை உருவாக்குகிறது.இருந்தும் சென்ற தலைமுறையின் நல்லக்கண்ணு,கேரள கம்யூனிஸ்ட்களில் சிலர் புது சித்தாந்தங்கள் உருவாகுவதற்கு நல்ல காரணிகள்.

ஒவ்வொரு தனிமனிதனும் கட்சி சார்பு என்ற நிலையிலிருந்து விடுபடவேண்டும்.இவற்றுக்கெல்லாம் மாற்றாக டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி தமிழகத்தில் மாற்றாக வந்திருக்க வேண்டியவர்.நவீன தமிழக அரசியலில் அவரால் சாதிக்காமலே போய்விட்டது தமிழகத்துக்கு பேரிழப்பே.தமிழக அரசியலை நெம்புகோலிட்டு மாற்ற வேண்டுமென்றால் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியைப் போன்றவர்களை முக்கியமாக தமிழகத்துக்குள்ளேயும் தேவைப்பட்டால் உலகளாவிய அளவிலும் தேடிக்கண்டு பிடிப்பது அவசியம்.

நமது அரசுத்துறைப் பணியாளர்களில் திறன் படைத்தவர்களை கண்டு பிடித்து முன்னிறுத்த வேண்டும்.உதாரணத்துக்கு உமாசங்கர்.

கல்லூரி மாணவர்கள் காவல்துறை, சட்டம்,மருத்துவம், என்ஞியரிங், விவசாயம்,விஞ்ஞானம்,ஐ.ஐ.டி,எம்.ஐ.டி இன்னும் பல துறைகளிலுருந்தும் தகுதியானவர்களை அரசியலுக்கு கொண்டு வரவேண்டும்.

தவறுகளுக்கு தண்டனை நிச்சயம் என்ற பயம் வேண்டும்.ஒரு காவல்துறையை சார்ந்த பெண்மணி ஒரு கடையில் கையூட்டு வாங்கி வீடியோ எடுத்த ஊழல் தடை அதிகாரியின் காலைப்பிடித்து கெஞ்சுவதை யூடியுப்பில் பார்த்தேன்.துறை சார்ந்த மூத்த அதிகாரி வந்து வீடியோ எடுத்தவருடன் சண்டை போட்டார்.இந்த நிலைகள் மாறவேண்டும்.

வழக்காடு மன்றங்களின் தீர்ப்புக்கள் துரிதப்படுத்த வேண்டும்.

எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காத சமூக ஆர்வலர்களை உள்ளிட்டுக்கொள்ள வேண்டும்

திராவிடன்,பார்ப்பனன்,இஸ்லாமிய வேற்றுமையை அழிக்கவேண்டும்.இந்திய எல்லையைக்கடந்தால் இவை வெறும் வார்த்தைகள் என்ற புரிதல் இப்பொழுது எனக்கிருக்கிறது.

பெரியாரியல்,மதம் இரண்டும் ஒவ்வொரு மனிதனின் தனி சுதந்திரம்.இவையிரண்டும் அரசியலில் கலக்ககூடாது.

வாரிசு அரசியல் இருக்கக்கூடாது.இருக்கும் வாரி அரசியல்கள் ஓரங்கட்டப்பட வேண்டும்.இதன் காரணம், அழகிரி மகனின் திருமணத்தில் அழகிரியின் பாடல்,உடை போன்றவை மனுசன் Happy goes lucky ங்கிற மாதிரிதான் தெரிகிறார்.இவருக்கு ஏன் அஞ்சாநெஞ்சன் என்ற மாய பிம்பங்கள் எல்லாம் என்று எனக்கு வியப்பாகவே இருக்கிறது.முதலமைச்சரின் மகன் என்ற ஒரே தகுதியால் மட்டுமே மத்திய அரசின் கேபினட் பதவி போன்றவை கலைஞர் கருணாநிதியின் சுயநலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா,ஆந்திராக்காரர்களுடன் நட்புறவு பாராட்டவேண்டும்.Conflict of interest வரும்போது பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும்.மனம் அகலும் போது கேரள,கர்நாடக,ஆந்திர,தமிழக மக்களின் குணநலன்களில் என்னால் வித்தியாசம் காண இயலவில்லை.

கல்வி,மருத்துவம்,வீடு,நல்ல சாலைகள்,மின்சாரம் போன்றவை அடிப்படை தேவையும் உரிமையும் கூட

இணைய பயன்பாடு அனைவரையும் போய்ச்சேர வேண்டும்.

அடிப்படை பொருளாதார தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும்-அதற்கான காலகட்டங்களில் பொருளாதாரத்தில் நாம் சீனாவுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறோம்.இவை இன்னும் சாத்தியமே.

விவசாயிகள் முன்னிறுத்தப்படவேண்டும். விவசாயம் மேம்படுத்த வேண்டும்.அடிப்படையில் நாம் விவசாய நாடு என்ற உணர்வே தென்னக மாநிலங்களை எந்த உலக மாற்றங்களிலிருந்தும் நிரந்தரமாக வாழவைக்கும்.

கடல் என்பது தமிழகத்தின் மிகப்பெரிய பொருளாதார வளம்.இதனை மேம்படுத்த வேண்டும்.

ஈழத்தமிழர்களின் எதிர்காலமென்பது இந்திய,தமிழகத்தின் எதிர்காலமும் கூட என்ற அகன்ற பார்வை நமக்கு தேவை.ராஜபக்சேக்கள் இல்லாது போகும் போது ஈழத்தமிழர்களுக்கு சம உரிமை வாழ்வுக்கு வழிவகுக்க வேண்டும்.இதுவே இலங்கைக்கும்,இந்திய அரசியலுக்கும்  முக்கியமாக தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் நல்லது.

நடக்கிற காரியமான்னு சந்தேகங்களுக்கு அண்ணன் மார்டின் லூதர் கிங்கை துணைக்கு அழைக்கிறேன்.

அமெரிக்க சரித்திரத்தைப் புரட்டிப்போட்ட மார்டின் லூதர் கிங்க் மாதிரி நானும் கனவு காண்கிறேன்.

I say to you today, my friends, that in spite of the difficulties and frustrations of the moment, I still have a dream - Martin Luther King

 (எனது நண்பர்களே! இன்றைக்கு சொல்லிக்கொள்கிறேன்,கடினம்,ஏமாற்றமான தருணத்தில் என்னிடத்தில் இன்னும் ஒரு கனவு இருக்கிற்து.)

41 comments:

THOPPITHOPPI said...

இவைகள் எல்லாம் நடக்க வேண்டும் என்றால் மக்கள் திருந்த வேண்டும்.

ராஜ நடராஜன் said...

//இவைகள் எல்லாம் நடக்க வேண்டும் என்றால் மக்கள் திருந்த வேண்டும்.//

தொப்பி!மக்கள் ரொம்ப நல்லவங்க:)
சமுதாயத்தில் என்ன கிடைக்கிறதோ அதையே பிரதிபலிக்கிறார்கள்.அதற்காகத்தான் எண்ண மாற்ற சிகிச்சை செய்யவேண்டும்.

அமைதி அப்பா said...

நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்!

வானம்பாடிகள் said...

சொன்னா மாதிரி எண்ண மாற்று அவசியம். ஆனா மனோபாவம் திணிச்சாலே ஒழிய ப்ச்னு போற மாதிரி இருக்கு. கொஞ்சம் திணிச்சி, இது இப்படித்தான்னு பழக்கிட்டா அப்புறம் சரியாயிடும். சந்திரபாபு நாயுடு உதாரணம். ஊழல் அதிகம் இருக்கிற இடமாப் பார்த்து ஐடெண்டிஃபை பண்ணி, ரிஜிஸ்டர் ஆஃபீஸ், ஆர்.டி.ஓ. ஆஃபீஸ்னு கணினிமயமாக்கி, ஒவ்வொன்னுக்கும் இவ்வளவு நாள்னு அறிவிப்பு வச்சி, அதுக்கு முன்னாடி கிடைக்காது, சரியான காரணமில்லைன்னா ஒரு நாள் லேட் ஆனாலும் அரசாங்க ஊழியரின் சம்பளத்தில் பிடித்தம் 50ரூ பிடித்தம். அந்த தேர்தலில் போனதுதான். ஆனா அந்த சிஸ்டம் அப்படியே இருக்கு. ஃபைன் கிடையாது என்பதோடு மட்டும். மாற்றமில்லாமல் தலைமுறை தலைமுறையா வர்ரது லஞ்சம் குடுத்தா நடக்கும் என்பது மட்டுமே:(

வானம்பாடிகள் said...

நிஜம்மா தினம் தினம் பார்த்துப் பார்த்து வெறுத்துப் போகுதுண்ணா. ஒரு பக்கம் காசு குடுக்கிற பரதேசி பிச்சைக்காரனா நடத்தப் படுறான். அவன் காசுல சம்பளம் வாங்குற பொறுக்கி இந்த நாடே எனக்கு சுக்கிக்கத்தான்னு ஆடுறான். ரிட்டையர் ஆனப்புறமும் அடங்குறானில்ல. கட்டையில போற வரைக்கும் கவர்ன்மெண்ட் சுகம் அனுபவிக்கிறான். கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில ஆக்ஸிடண்ட்ல நியூரோ சர்ஜரி பண்ணி 85ஆயிரம் செலவாச்சின்னா 35 ஆயிரம் சேங்ஷனாகுது. அதிகாரின்னா பின்னாடி பிச்சிக்கிச்சின்னு 8 ஆயிரம் ரூபாய் வாங்குறான். வாணாம். புலம்பவிடாதீங்க.

பழமைபேசி said...

பேரிடர், பெருந்துன்பம், பேரழிவு, போர், இயற்கைச் சீற்றம்... இப்படியானதுகளில் வருத்தம் மிகுந்தாலும்... மறுமலர்ச்சிக்கு வாய்ப்பு இருக்கிறது என்பார் சிந்தனையாளர்கள்!

சதுக்க பூதம் said...

நல்ல பதிவு.
//ஒரு புறம் அ.தி.மு.க என்ற ஆணவத் தலைமை,இன்னொரு புறம் குடும்ப அரசியல் என்ற தி.மு.க இரண்டுக்குமிடையில் தமிழ் இனத்துக்கு துரோகம் விளைவித்த காங்கிரஸ் என்ற பக்கவாத்தியம் என்ற மூன்று பரிமாணங்களில் தமிழகம் சிக்கி தவிக்கிறது//

திராவிட இயக்கம் ஆரம்பிக்க பட்ட போது அதன் கிராம,நகர் புர தலைவர்கள் எல்லாம் அடி மட்டத்திலிருந்து வந்தனர். அதற்கு முன் காங்கிரஸ் கட்சியினரின் தலைவர்கள் பணக்காரர்களாகவே இருந்தனர்(காமராஜர் கக்கன் போன்ற விதி விளக்கு தவிர). திராவிட கட்சியினரின் தலைவர்கள் கிராம புறங்களிளிருந்து வந்ததால் அவர்களால் ஓரளவு கிராம வளர்சிக்கும் அடிப்படை கட்டமைப்பிற்கான வளர்ச்சிக்கும்(ஆரம்ப கல்வி,சுகாதாரம், கிராம மின்சாரம், கிராம போக்குவரத்து போன்றவை ஒரு சில) எதாவது செய்ய முடிந்தது. ஆனால் தற்போது திராவிட கட்சிகள் குடும்ப அரசியலிலும்,வியாபார நிறுவனங்களாக மாறி வருவதாலும் எந்த பயனும் கிடைப்பதில்லை. தற்போது அடி மட்டத்திலிருந்து வரும் தலைவர்களும் பணகாரர்களாகவும் வியாபாரிகள் போன்றும் தான் உள்ளனர்.

ஆனால் தமிழகம் இயற்கை வளத்தில் குறைவாக இருந்தாலும் மற்ற மாநிலத்தை விட அனைத்து மட்டத்திலும் ஓரளவு சமமாக முன்னேறி இருப்பதற்கு காரணம் திராவிட கட்சிகளே. தற்போது திராவிட கட்சிகள் பாதை மாறி இருப்பது தமிழகத்துக்கு மிக பெறிய பின்னடைவே.

அதுமட்டுமன்றி திராவிட கட்சிகளின் பிற்படுத்தபட்ட/ தாழ்த்தபட்ட மக்களின் வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் குறல் கொடுத்து, செயலாற்றியது தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக பெரிய பலம்.
உதாரணமாக தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் கர்னாடக மாநிலத்தில் அரசியலில் MLA,MP,Ministers இருப்பவர்களை பார்த்தால் பெரும்பாலும் முன்னேறிய வகுப்பினர் தான். தமிழகத்தில் மட்டும் தான் அந்த அந்த பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் பிற்படுத்த பட்ட/ மிகவும் பிற்படுத்த பட்ட மக்களுக்கு MLA,MP,Ministers போன்ற பதவி கிடைத்துள்ளது. இதை ச்சதியமாக நீங்கள் பார்க்க கூடாது. இது போல் பதவியில் இருப்போர் அடித்தள மக்களுடன் தொடர்பு இருப்பதால், அவர்களின் தேவையை ஒரு சிலவாவது நிறைவேற்ற கூடிய கட்டாயத்தில் இருப்பர். இதுவே பணக்கார உயர்சாதியினர் இருப்பதால் மக்களுக்கு பெரிய நல்லது கிடைக்க வழியில்லை. ஆந்திரா, மகாரஸ்டிரா, வடநாடுகளில் பட்டினி சாவுகள் நடந்த போது அதை பற்றி யாருமே பெரிதாக கண்டு கொள்ளாததற்கு அதுவே காரணம்.
உதாரணமாக மென்பொருள் துறையில் நான் இதை கண்கூடாக கண்டு இருக்கிறேன். வெளி நாடுகளில் இருக்கும் மென் பொருள் துறையில் இருக்கும் தமிழ்நாட்டை தவித்த மற்ற மாநிலத்தினரில் 90% உயர் சாதியினர் தான். ஆனால் தமிழ் நாட்டினர் மட்டும் 30% தான் உயர் சாதியினராக இருப்பார்கள்.
இதற்கு தமிழ் நாட்டில் இருக்கும் இட ஒதுக்கீடும் ஒரு காரணம். ஆனால் தற்போது இட ஒதுக்கிட்டால் பயனடைந்த முதல் தலைமுறையினர் மட்டுமே அந்த பயனை அறுவடை செய்ய ஆரம்பித்து உள்ளனர். அதாவது பிற்படுத்த பட்ட சமூகத்தில் ஒரு முற்போக்கு சமுதாயம் உருவாக்க பட்டுள்ளது.

சதுக்க பூதம் said...

//எனக்கு கம்யூனிஸ்ட்களின் கொள்கைப்பிடிப்பு,போராட்ட குணம்,உழைக்கும் வர்க்கத்துக்கு குரல் கொடுக்கும் துணிவு பிடித்திருக்கிறது//

உண்மையில் கம்யூனிஸ்டுகளின் தொண்டர்கள் தான் கொள்கை படி உள்ளனர். தலைமையின் பிடி ஒரு சில தவறான குரூப்பிடம் மாட்டி கொண்டுள்ளது.

//ஒவ்வொரு தனிமனிதனும் கட்சி சார்பு என்ற நிலையிலிருந்து விடுபடவேண்டும்.இவற்றுக்கெல்லாம் மாற்றாக டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி தமிழகத்தில் மாற்றாக வந்திருக்க வேண்டியவர்.நவீன தமிழக அரசியலில் அவரால் சாதிக்காமலே போய்விட்டது தமிழகத்துக்கு பேரிழப்பே.தமிழக அரசியலை நெம்புகோலிட்டு மாற்ற வேண்டுமென்றால் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியைப் போன்றவர்களை முக்கியமாக தமிழகத்துக்குள்ளேயும் தேவைப்பட்டால் உலகளாவிய அளவிலும் தேடிக்கண்டு பிடிப்பது அவசியம்.

//

உண்மைதான். தங்களின் இதே கருத்தை பற்றி நிறைய முறை யோசித்தது உண்டு. M.S.உதயமூர்த்தி முயற்சி தோல்வி அடைய காரணம் பற்றி நிச்சயம் ஆராய வேண்டும் பிற்காலத்தில் உண்மையிலேயே நல்ல மாற்றத்தை கொண்டு வர அரசியலுக்கு வர நினைப்பவர்களுக்கு அது உதவும்.

//விஞ்ஞானம்,ஐ.ஐ.டி,எம்.ஐ.டி இன்னும் பல துறைகளிலுருந்தும் தகுதியானவர்களை அரசியலுக்கு கொண்டு வரவேண்டும்.

//

இவர்கள் வருவதால் நல்ல மாற்றம் வரும் என்று தோன்றவில்லை. இவர்களில் பெரும்பாலோனோர் புதிய அதிகார வர்க்கத்தை தோற்றுவிக்கவும், கம்பெனிகளுக்கு புரோக்கர்களாக தான் சென்றடைவார்கள். உண்மையான தலைவர்கள் (காமராஜர் போன்று) அடி மட்டத்திலிருந்து வர வேண்டும், அப்போது தான் சமச்சீரான வளர்ச்சியை தோற்றுவிக்க முடியும்.

//திராவிடன்,பார்ப்பனன்வேற்றுமையை அழிக்கவேண்டும்//

இந்த வேற்றுமையை வெறும் வார்த்தைகளால் அழிக்க முடியாது. வருனாசிரமம் 1500 ஆண்டுகளாக தமிழகத்தில் ஏஎற்படுத்தி உள்ள மேடு பள்ளங்களை சரி செய்வதன் மூலம் தான் அழிக்க முடியும்.
தற்போதும் இந்தியாவில் அனைத்து துறைகளிளும் அதிகார வர்க்கமாக இருந்து முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒரு சில உயர் சாதியினர் தான் என்பதை மறந்து விட முடியாது. ஓரளவு மக்கள் தொகையில் உள்ள சாதியினரின் விகிதாசாரம் போல் அனைத்து துறையிலும் அதே விகிதாசாரத்தில் பதவிகள் கிடைத்தால் தான் உண்மையில் நீங்கள் கூறும் வேறுபாடு களைய படும்

Chitra said...

அமைதி அப்பா said...

நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்!


...:-)

பட்டாபட்டி.. said...

கல்லூரி மாணவர்கள் காவல்துறை, சட்டம்,மருத்துவம், என்ஞியரிங், விவசாயம்,விஞ்ஞானம்,ஐ.ஐ.டி,எம்.ஐ.டி இன்னும் பல துறைகளிலுருந்தும் தகுதியானவர்களை அரசியலுக்கு கொண்டு வரவேண்டும்.
//

நல்ல பதிவு அண்ணே..
கனவு ஒரு நாள் மெய்ப்படும்...

விக்கி உலகம் said...

நன்றி

கும்மி said...

சிறந்த எண்ணங்களும், பதிவும். வாழ்த்துகளும், நன்றியும்.

சதுக்கபூதம் வழக்கம்போல் பின்னூட்டத்தில் கலக்கிவிட்டார்.

நசரேயன் said...

//எனது நண்பர்களே! இன்றைக்கு சொல்லிக்கொள்கிறேன்,கடினம்,ஏமாற்றமான தருணத்தில் என்னிடத்தில் இன்னும் ஒரு கனவு இருக்கிற்து//

என் கனவில் தென்பட்டது ?

கோவை சிபி said...

sathuka pootham,
excellent comments.other state social thinkers accepted the fact TAMILNADU MODEL' social policy worked very well in last 20 years growth in socio-economic front in tamilnadu bigway.

sorry for tamil.

ராஜ நடராஜன் said...

//நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்!//

அமைதி அப்பா!நிச்சயமாக ஒட்டு மொத்த மக்களின் எண்ணங்களைப் பொறுத்தே வாழ்க்கை என்பதில் சந்தேகமில்லை.நல்ல தலைவர்கள்,சுயநலமின்மையின்மை இருந்திருந்தால் இப்போதைய அரசியல் கட்டமைப்பே நமக்கு போதுமானது.ஆனால் நடக்கிறதுதான் நமக்கு தெரியுமே.ஒரு காலத்தில் தி.மு.க கூட போஸ்டர் ஒட்டும் கட்சிதான்.ஆனால் கால மாற்ற்ங்கள் கட்சியை எங்கே கொண்டு வைத்திருக்கிற்தென்று பாருங்கள்.இணையத்தை சரியாக நாம் பயன்படுத்தி நல்லதை நினைத்தால் மொத்த தமிழகத்துக்கும் பரவும் என்பதில் சந்தேகமேயில்லை.

ராஜ நடராஜன் said...

//சொன்னா மாதிரி எண்ண மாற்று அவசியம். ஆனா மனோபாவம் திணிச்சாலே ஒழிய ப்ச்னு போற மாதிரி இருக்கு. கொஞ்சம் திணிச்சி, இது இப்படித்தான்னு பழக்கிட்டா அப்புறம் சரியாயிடும். சந்திரபாபு நாயுடு உதாரணம். ஊழல் அதிகம் இருக்கிற இடமாப் பார்த்து ஐடெண்டிஃபை பண்ணி, ரிஜிஸ்டர் ஆஃபீஸ், ஆர்.டி.ஓ. ஆஃபீஸ்னு கணினிமயமாக்கி, ஒவ்வொன்னுக்கும் இவ்வளவு நாள்னு அறிவிப்பு வச்சி, அதுக்கு முன்னாடி கிடைக்காது, சரியான காரணமில்லைன்னா ஒரு நாள் லேட் ஆனாலும் அரசாங்க ஊழியரின் சம்பளத்தில் பிடித்தம் 50ரூ பிடித்தம். அந்த தேர்தலில் போனதுதான். ஆனா அந்த சிஸ்டம் அப்படியே இருக்கு. ஃபைன் கிடையாது என்பதோடு மட்டும். மாற்றமில்லாமல் தலைமுறை தலைமுறையா வர்ரது லஞ்சம் குடுத்தா நடக்கும் என்பது மட்டுமே:(//

பாலாண்ணா!பின்னூட்டத்தை கீழிருந்து மேலே தொடருகிறேன்.நான் முன்பெல்லாம் ஊழல்ன்னா போலிஸ்,அரசாங்கப் பணியாளர்கள் வாங்குவதுதான்ன்னு நினைச்சுகிட்டிருந்தேன்.ஆனா அது அப்படியில்லைன்னு இப்பத்தான் புரியுது.ஊழலின் துவக்கம் என்பது உயர்மட்டத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள்,ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போன்று கூட்டுக் குழுவால் உருவாக்கப்படுகிறதென்பதையே காமன்வெல்த் விளையாட்டுகள்,ஆதர்ஷ்,ஸ்பெக்ட்ரம் போன்றவை காட்டுகின்றன.துவக்கம் என்று பார்த்தால் நேரு,சாஸ்திரி காலத்தில் இவை இல்லையென்றே தெரிகிறது.அமெரிக்க ரஷ்ய பனிப்போரில் ரஷ்யர்கள் கே.ஜி.பி,சி.ஐ.ஏவின் பரிசு என்கிற பெயரில் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் மேல்மட்டத்தில் துவங்கி பின் மொத்த இந்தியாவுக்கும் உயர் அரசாங்க அதிகாரிகள் மட்டத்தில் துவங்கி கீழே வந்திருக்கலாம் என நினைக்கிறேன்.அரசியல் அனுபவம் இருக்கிறவர்கள் யாராவது இங்கே வந்து கருத்து சொன்னால் புரிதலுக்கு உதவும்.

கூகிணண்ன் கோவிச்சுக்குவார்ங்கிறதால அடுத்த பின்னூட்டத்தில் தொடர்கிறேன்:)

ராஜ நடராஜன் said...

சொன்னபடியே கூகிளண்ணன் நுழையவிடல.குறுக்கு வழில பூந்து வருகிறேன்:)

சந்திரபாபுவின் உதாரணம் உமாசங்கர் போன்றவர்களை முன்னிலைப்படுத்தினாலே போதும்.உதாரணம் சொல்வதற்கும் கூட உமாசங்கர் மட்டும் தானா?இன்னும் எத்தனை நல்ல அரசு அதிகாரிகள்,தமிழகம் ந்ன்றாக இருக்கவேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் குன்றிலிட்ட குத்துவிளக்கு மாதிரி தெரியாமல் இருப்பாங்க.இவர்களையெல்லாம் தொலைக்காட்சிகள் தேடிகண்டுபிடித்து கருத்து பரிமாறல்கள் போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்குவது பொதுமக்களிடம் போய் சேரும்.

ராஜ நடராஜன் said...

//நிஜம்மா தினம் தினம் பார்த்துப் பார்த்து வெறுத்துப் போகுதுண்ணா. ஒரு பக்கம் காசு குடுக்கிற பரதேசி பிச்சைக்காரனா நடத்தப் படுறான். அவன் காசுல சம்பளம் வாங்குற பொறுக்கி இந்த நாடே எனக்கு சுக்கிக்கத்தான்னு ஆடுறான். ரிட்டையர் ஆனப்புறமும் அடங்குறானில்ல. கட்டையில போற வரைக்கும் கவர்ன்மெண்ட் சுகம் அனுபவிக்கிறான். கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில ஆக்ஸிடண்ட்ல நியூரோ சர்ஜரி பண்ணி 85ஆயிரம் செலவாச்சின்னா 35 ஆயிரம் சேங்ஷனாகுது. அதிகாரின்னா பின்னாடி பிச்சிக்கிச்சின்னு 8 ஆயிரம் ரூபாய் வாங்குறான். வாணாம். புலம்பவிடாதீங்க.//

இல்லீங்கண்ணா!நீங்க இந்த புலம்பல் கூட செய்யாம இருந்தா இதெல்லாம் இன்னொரு ரூபத்துல எப்படியாவது வெடிக்கும்.அப்புறம் எங்காவது ஒரு பெரிய அதிர்ச்சி வைத்தியம் வந்தே தீரும்.பணம் என்பது சம்பாதிக்கவும் சந்தோசமாக செலவழிக்கவும்ங்கிற பொதுப்புத்தி நமக்கு வரணும்ங்ண்ணா.பொதுவா பார்த்தா பணத்தை பதுக்கி அழகு பார்க்குற புத்தி நம்மகிட்ட இருக்குது.மேலேயிருந்தே துவங்குகிறேன்.கருணாநிதி குடும்பம் வெறும் முதலமைச்சரா இருந்தே இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவரா ஆகிவிட்டாரா?தமிழக மக்களுக்கே தெரியாத எத்தனை விசயங்கள் அதற்குள் உள்ளடங்கி இருக்கும்? இத்தனையும் சம்பாதித்தும் ஒரு வேட்டி,சர்ட்,நாற்காலி,பொது நிகழ்ச்சிகள் தவிர என்ன சுகத்தை அவர் கண்டார்?இதே மாதிரி அமெரிக்க ஜனாதிபதியைப் பாருங்கள்.எத்தனை தலைபோகிற விசயம்ன்னாலும் வாரம் முழுதும் உழைத்து வார இறுதியில் வேட்டை,மீன்பிடித்தல்,குதிரை சவாரி,கடற்கரை காற்று,ரக்பி,கூடைபந்து மாதிரி விளையாட்டு,பார்பக்யூ பார்ட்டின்னு வாரத்தில் கொஞ்சம் ஆசுவாசப்பட்டுகிட்டு மறுபடியும் திங்கட்கிழமை கான்பெரன்ஸ்,பொதுநிகழ்ச்சி,வெள்ளைமாளிகை சந்திப்புன்னு இருக்கிறாங்க?

ராஜ நடராஜன் said...

முந்தைய பின்னூட்டம் சொல்லி முடியல:)

சரின்னு இதற்கும் கீழ் கொஞ்சம் நகர்ந்து வந்தா ஸ்விஸ் வங்கில காசு போட்டிருக்கேன்னு பூதம் காத்த புதையலா காசு போட்டு வச்சிகிட்டு அதை அனுபவிக்காம அவஸ்தை தேவைதானா?

ஒரு வீடு கட்டுனா போதாதா?மூலை மூலைக்கு ரியல் எஸ்ட்டேட்டுல இன்வெஸ்ட் செஞ்சிருக்கேன்னு அரசு மேல் நிலை அதிகாரிகள் துவங்கி இது கீழ்மட்டமாக காவல்துறை வரைக்கும் வந்து விட்டது.

காவல்துறை,அரசு பணியாளர்கள் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வது முக்கியம்.ஏதோ தேர்தல் நேரத்து சலுகைகள்,போனஸ் என்ற கண் துடைப்புக்கள நிறுத்தப்பட்டு சாதாரணமாக கௌரவமாய் மாதம்,வருட குடும்ப செலவுகளை நிர்வகிக்கும் அடிப்படையில் ஊதியம் அமைக்கப்படவேண்டும்.

ஊதுகிற காற்றை சிறிதாக நாம் ஊதுவோம்.இனி வரும்காலம் இணையமே.மாற்றங்கள் இன்னும் வரும் என்று நம்புவோம்.

ராஜ நடராஜன் said...

பேரிடர், பெருந்துன்பம், பேரழிவு, போர், இயற்கைச் சீற்றம்... இப்படியானதுகளில் வருத்தம் மிகுந்தாலும்... மறுமலர்ச்சிக்கு வாய்ப்பு இருக்கிறது என்பார் சிந்தனையாளர்கள்!//

பழமைண்ணா!நீங்கள் சொல்வது நிலமும் நிலம் சார்ந்த பகுதிகளுக்கு மட்டுமே.இலங்கைக்கும் இயற்கை சீற்றம் வந்ததே.மறுமலச்சியா வந்தது?ஒரு இனப்படுகொலை மட்டுமே வந்தது:(

நீங்க நாகசாகி,ஹிரோசிமாவை மனசுல வச்சுக்கிட்டு கதைக்கிறீங்கன்னு நினைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//திராவிட இயக்கம் ஆரம்பிக்க பட்ட போது அதன் கிராம,நகர் புர தலைவர்கள் எல்லாம் அடி மட்டத்திலிருந்து வந்தனர்.//

சதுக்க பூதம்!இந்தப் பெயரை நல்ல விவாதங்களில் மட்டும் பலமுறை காண்கிறேன்.அதனால் குட்டி குட்டியா அடைப்பானுக்கு பரிமாறல்கள்:)

இப்பத்தான் சொல்லி முடிச்சேன்.தி.மு.க என்றாலே பீடி பிடிச்சுகிட்டு போஸ்டர் ஒட்டுற தொண்டனின் கட்சி.தொண்டன் மட்டும் சிகரெட்டுக்கு மாறிவிட்டான்.தலைவர்கள் அதிவேக தூரத்தில் தொண்டர்களை கடந்து ஓடி விட்டார்கள்.

ராஜ நடராஜன் said...

//அதற்கு முன் காங்கிரஸ் கட்சியினரின் தலைவர்கள் பணக்காரர்களாகவே இருந்தனர்(காமராஜர் கக்கன் போன்ற விதி விளக்கு தவிர).//

ஏன் இந்த இருபெயர்களை தவிர்த்து இன்னும் காங்கிரஸில் ஒருத்தரைக்கூட பெயர் சொல்லி அழைக்க முடியவில்லை.பண்ணையார் மூப்பனார் வெத்திலை போட்டே சொல்வதை சொல்ல இயலாமல் போய் விட்டார்.குமரி அனந்தனால் வசந்த அண்ட் கோவும் தொலைக்காட்சி கிட்டியதே மிச்சம்.
இளங்கோவன் தனது தாத்தாவின் பெயருக்கும் கௌரவத்திற்கும் இழுக்கை மட்டுமே கொண்டு வர முடிந்தது.தங்கபாலுவும் ஏனைய பெயர் தெரியாதவர்களும் டெல்லி தலைமை சொல்வதைக் கேட்போம்:)

ராஜ நடராஜன் said...

//திராவிட கட்சியினரின் தலைவர்கள் கிராம புறங்களிளிருந்து வந்ததால் அவர்களால் ஓரளவு கிராம வளர்சிக்கும் அடிப்படை கட்டமைப்பிற்கான வளர்ச்சிக்கும்(ஆரம்ப கல்வி,சுகாதாரம், கிராம மின்சாரம், கிராம போக்குவரத்து போன்றவை ஒரு சில) எதாவது செய்ய முடிந்தது.//

தனிமனித வெறுப்பில் மட்டுமே ஒரு தனிமனிதனையோ அல்லது கட்சியையோ விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.நீங்கள் சொன்னபடி திராவிட கட்சியினரின் தலைவர்கள் கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்கள் என்பதால் அடிப்படைக் கட்டமைப்புக்காக ஏதாவது செய்ய முடிந்தது என்பது உண்மையே.இதனைக் கொண்டே ஏனைய மாநிலங்களோட பார்க்கும்போது தமிழகம் பரவாயில்லையென்ற கருத்து உலவுகிறது.இதனோடு கூட ஆரம்பகால திராவிட தமிழார்வம் பாராட்டுக்குரியது என்பதில் சந்தேகமில்லை.இந்த பாதையை விட்டு விலகி தலைமையே ரெட் ஜயண்ட் மாதிரி திசை மாறியதன் பொருட்டே எதிர் விமர்சனங்களை வைக்க வேண்டியுள்ளது.

ராஜ நடராஜன் said...

//ஆனால் தற்போது திராவிட கட்சிகள் குடும்ப அரசியலிலும்,வியாபார நிறுவனங்களாக மாறி வருவதாலும் எந்த பயனும் கிடைப்பதில்லை. தற்போது அடி மட்டத்திலிருந்து வரும் தலைவர்களும் பணகாரர்களாகவும் வியாபாரிகள் போன்றும் தான் உள்ளனர்.//

இந்த வரிகளுக்கு வராமலே நான் ரெட் ஜயண்ட் பற்றிக் குறிப்பிட்டு விட்டேன்:)

ராஜ நடராஜன் said...

//ஆனால் தமிழகம் இயற்கை வளத்தில் குறைவாக இருந்தாலும் மற்ற மாநிலத்தை விட அனைத்து மட்டத்திலும் ஓரளவு சமமாக முன்னேறி இருப்பதற்கு காரணம் திராவிட கட்சிகளே. தற்போது திராவிட கட்சிகள் பாதை மாறி இருப்பது தமிழகத்துக்கு மிக பெறிய பின்னடைவே.//

இந்த வரிகளையும் படிக்காமலேயே எனது முந்தைய பின்னூட்டங்கள்:)

ராஜ நடராஜன் said...

//அதுமட்டுமன்றி திராவிட கட்சிகளின் பிற்படுத்தபட்ட/ தாழ்த்தபட்ட மக்களின் வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் குறல் கொடுத்து, செயலாற்றியது தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக பெரிய பலம்.
உதாரணமாக தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் கர்னாடக மாநிலத்தில் அரசியலில் MLA,MP,Ministers இருப்பவர்களை பார்த்தால் பெரும்பாலும் முன்னேறிய வகுப்பினர் தான். தமிழகத்தில் மட்டும் தான் அந்த அந்த பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் பிற்படுத்த பட்ட/ மிகவும் பிற்படுத்த பட்ட மக்களுக்கு MLA,MP,Ministers போன்ற பதவி கிடைத்துள்ளது. இதை ச்சதியமாக நீங்கள் பார்க்க கூடாது. இது போல் பதவியில் இருப்போர் அடித்தள மக்களுடன் தொடர்பு இருப்பதால், அவர்களின் தேவையை ஒரு சிலவாவது நிறைவேற்ற கூடிய கட்டாயத்தில் இருப்பர்.//

திராவிடக்கட்சிகளின் அடிநாதத்தை சரியாக பிடித்துள்ளீர்கள்.இந்த கட்டமைப்பில் இவர்கள் கட்சிகள் அமைத்ததால் தான் இன்னும் இவர்கள் ஆட்சி செய்யும் நிலையில் இருக்கிறார்கள் என்பது உணமையே.ஆனால் கட்சியென்ற பந்தத்துக்குள் வரும்போது தவறுகளை சொல்லும் தகுதியிழந்து விடுவதும்,விமர்சிக்க தவறிவிடுவதும் பல பின்னடைவுகளை உருவாக்குகிறது.எதிர்விமர்சனமா?எதிர்க்கட்சியில் தஞ்சம்.அங்கே ஆதாயமில்லையா?தாய்க்கழகத்துக்கே வந்து விட்டேன் என்ற அறிவிப்பு:)

ராஜ நடராஜன் said...

//உதாரணமாக மென்பொருள் துறையில் நான் இதை கண்கூடாக கண்டு இருக்கிறேன். வெளி நாடுகளில் இருக்கும் மென் பொருள் துறையில் இருக்கும் தமிழ்நாட்டை தவித்த மற்ற மாநிலத்தினரில் 90% உயர் சாதியினர் தான். ஆனால் தமிழ் நாட்டினர் மட்டும் 30% தான் உயர் சாதியினராக இருப்பார்கள்.
இதற்கு தமிழ் நாட்டில் இருக்கும் இட ஒதுக்கீடும் ஒரு காரணம். ஆனால் தற்போது இட ஒதுக்கிட்டால் பயனடைந்த முதல் தலைமுறையினர் மட்டுமே அந்த பயனை அறுவடை செய்ய ஆரம்பித்து உள்ளனர். அதாவது பிற்படுத்த பட்ட சமூகத்தில் ஒரு முற்போக்கு சமுதாயம் உருவாக்க பட்டுள்ளது.//

மென்பொருள் துறையைப் பொறுத்த வரையில் உங்கள் கருத்தின் அடிப்படையில் என்னால் கருத்து சொல்ல இயலவில்லை.இதற்கு அமெரிக்க மற்றும் மேற்கத்திய வாழ் கணினி தமிழர்கள் பதில் சொல்வது பலனுள்ளதாக இருக்கும்.எனது பார்வையில் ஜெயலலிதா கேட்ட பெட்டி கிடைக்காத காரணத்தால் கர்நாடகாவில் அப்போது முதலமைச்சராக இருந்த கிருஷ்ணாவும்,இணையமே எதிர்காலமென்று உணர்ந்திருந்த சந்திரபாபு நாயுடும் கணினி துறையை நன்கு பயன்படுத்திக்கொண்டார்கள் என்பேன்.தமிழகத்தில் கல்வி பரவலாக்கபப்ட்டதனால் சந்தர்ப்பங்கள் வாய்த்த தமிழ் மாணவ வேலை வேண்டுபவர்கள் பெங்களூர்,ஆந்திர படையெடுப்பில் அவுட்சோர்ஸிங் துவங்கி மேற்கத்திய நாடுகள் வரை வலம் வந்துகொண்டிருக்கிறார்கள் என்பேன்.

ராஜ நடராஜன் said...

//அதாவது பிற்படுத்த பட்ட சமூகத்தில் ஒரு முற்போக்கு சமுதாயம் உருவாக்க பட்டுள்ளது.//

இதற்கு ஆய்வின் அடிப்படையில் பதிவர் யாரோ முன்பு பதிவு போட்ட நினைவு வருகிறது.யாரென்ற பதிவர் தயவு செய்து மேடைக்கு வந்து முகத்தைக் காட்டி விட்டு மீள்பதிவு செய்வது சதுக்கபூதம் அவர்களின் கருத்துக்கு வலுவூட்டக் கூடியதாக இருக்கும்.

ராஜ நடராஜன் said...

//உண்மையில் கம்யூனிஸ்டுகளின் தொண்டர்கள் தான் கொள்கை படி உள்ளனர். தலைமையின் பிடி ஒரு சில தவறான குரூப்பிடம் மாட்டி கொண்டுள்ளது.//

கம்யூனிஸ்ட்கள் இடது வலது பாராமல் ஒன்றாக இணைவது கம்யூனிஸ்ட்டுகளுக்கு வலுவூட்டும்.அதோடு முந்தைய பதிவான் சித்தார்த்த சங்கர் ரேயின் நினைவுகளிலிருந்து ஜோதிபாசு கம்யூனிஸ்ட் கட்சியின் ஐகோன்.ஆனால் அவரே சீனப்படையெடுப்பைப் பற்றி வாய் திறக்கவில்லையென்பது மாதிரியான சீன நிலைப்பாடே ஏனைய கம்யூனிஸ்ட்டுகளும் செய்வது வருத்தமாக இருக்கிறது.இதன் காரணம் கொண்டே இவர்களின் கொள்கைகள் பக்கசார்புகளாகிப்போகின்றன.கூடவே உழைப்பாள வர்க்கத்துக்கு உழைப்பதும் வீணாகிப்போகின்றன.

ராஜ நடராஜன் said...

//உண்மைதான். தங்களின் இதே கருத்தை பற்றி நிறைய முறை யோசித்தது உண்டு. M.S.உதயமூர்த்தி முயற்சி தோல்வி அடைய காரணம் பற்றி நிச்சயம் ஆராய வேண்டும் பிற்காலத்தில் உண்மையிலேயே நல்ல மாற்றத்தை கொண்டு வர அரசியலுக்கு வர நினைப்பவர்களுக்கு அது உதவும்.//

எம்.எஸ்.உதயமூர்த்தி கட்சி நிலைக்கு கூட வராததும் இவர் பற்றிய ஓரளவுக்கு அறிமுகம் கூட இல்லாமல் போனது ஏன் என்று தெரியவில்லை.இதை விபரம் அறிந்தவர்கள் விவாதிப்பதும் பதிவுகள் இடுவதும் அவசியம்.

ராஜ நடராஜன் said...

//இவர்கள் வருவதால் நல்ல மாற்றம் வரும் என்று தோன்றவில்லை. இவர்களில் பெரும்பாலோனோர் புதிய அதிகார வர்க்கத்தை தோற்றுவிக்கவும், கம்பெனிகளுக்கு புரோக்கர்களாக தான் சென்றடைவார்கள். உண்மையான தலைவர்கள் (காமராஜர் போன்று) அடி மட்டத்திலிருந்து வர வேண்டும், அப்போது தான் சமச்சீரான வளர்ச்சியை தோற்றுவிக்க முடியும்.//

ஐ.ஐ.டி,எம்.ஐ.டி,விவசாயக்கல்லூரி மற்றும் அடிமட்ட தலைவர்கள் முக்கியமாக கிராமப்புறங்களில் மற்றும் குறுநகர்களிலிருந்தும்,சமூக ஆர்வலர்கள் என்ற ஒரு கலவையே பயன் தரும்.இதுவே புதிய கட்டமைப்பாகுமென் நம்புகிறேன்.

முக்கியமான ஒன்றை பதிவில் குறிப்பிட மறந்துவிட்டேன்.பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு சட்டசபை எப்படி இயங்குகிறதென்ற அறிவும்,விடுமுறைக்கால பயிற்சியாக அரசின் அனைத்து துறைகளிலும் சிறு ஊதிய பணியும் அரசியல் கட்டமைப்பு நோக்கி நகர உதவும்.

ராஜ நடராஜன் said...

//அமைதி அப்பா said...

நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்!


...:-)//

சித்ரா மேடம்!உங்க பதிவுகளைப் படித்தாலே பாதி நல்லது நடந்து விடும்.பதிவுலகம் ஒரு மதிப்புக்குரிய இடமென்ற காலகட்டத்துக்கு நகர்ந்து சென்றால் தொலைக்காட்சி பெட்டிகளை மக்கள் மூடி வைத்து விட்டு பதிவுலகம் வந்து அவர்களும் அவர்களது கருத்துக்களை பரிமாறுவார்கள்.ஆனால் நாம் விவாதிக்கும் பொருளோ டாய்!அது குண்டர் தெருங்கிறமாதிரி மக்கள் வர பயப்படுகிறமாதிரி இங்கும் அங்கும் சில விவாதங்கள்.எது முன்னிலைப்படுத்துகிறதோ அதுவே பொதுவில் பிம்பங்களாகும்.

ராஜ நடராஜன் said...

//கல்லூரி மாணவர்கள் காவல்துறை, சட்டம்,மருத்துவம், என்ஞியரிங், விவசாயம்,விஞ்ஞானம்,ஐ.ஐ.டி,எம்.ஐ.டி இன்னும் பல துறைகளிலுருந்தும் தகுதியானவர்களை அரசியலுக்கு கொண்டு வரவேண்டும்.
//

நல்ல பதிவு அண்ணே..
கனவு ஒரு நாள் மெய்ப்படும்...//

பட்டு!இப்பத்தான் சித்ராவுக்கு பின்னூட்டமிட்டு உங்கள் கருத்தை பார்க்கிறேன்.

நல்ல கருத்து ஆதரவுக்கு நன்றி.

பட்டு!உங்கள் பதிவுகளில் கிண்டல்,நையாண்டியின் இடையே துணிவாக உங்கள் கருத்துக்களை முன்வைக்கிறீர்கள்.கொஞ்சம் கொச்சை வாடையை தவிர்த்து விட்டு தொடர்ந்தீர்கள் என்றால் உங்கள் பாணியை அடிச்சிக்கிறதுக்கு இதுவரை இங்கே ஆளே கிடையாது.

ராஜ நடராஜன் said...

விக்கி உலகமாச்சே:) நன்றி என்ற ஒற்றைச் சொல்லா?

விக்கி!சிலேடை புரிகிறதா:)

ராஜ நடராஜன் said...

//சிறந்த எண்ணங்களும், பதிவும். வாழ்த்துகளும், நன்றியும்.

சதுக்கபூதம் வழக்கம்போல் பின்னூட்டத்தில் கலக்கிவிட்டார்.//

மீள் வருகைக்கு நன்றி கும்மி!
சதுக்க பூதம் பின்னூட்டங்கள் எப்பொழுதும் நல்ல கருத்துப்பரிமாறல்களுக்கு பின்னுட்டமிடுபவர் என்பது ஊரறிந்த உண்மை:)

ராஜ நடராஜன் said...

////எனது நண்பர்களே! இன்றைக்கு சொல்லிக்கொள்கிறேன்,கடினம்,ஏமாற்றமான தருணத்தில் என்னிடத்தில் இன்னும் ஒரு கனவு இருக்கிற்து//

என் கனவில் தென்பட்டது ?//

நசரு!எப்படித்தான் உங்களுக்கு டைமிங் ரிதம் வருகிறதோ:)

ராஜ நடராஜன் said...

//sathuka pootham,
excellent comments.other state social thinkers accepted the fact TAMILNADU MODEL' social policy worked very well in last 20 years growth in socio-economic front in tamilnadu bigway.

sorry for tamil.//

Sorry for English:)Comparitively statewise Tamilnadu's socio economic polices are appriciable.But the governance miss the core of language,cultural,honesty,uncurruptinduvidualness dimension and other common factors to boast ourselves of good governance.At present what state image we display to public in India?

Comparitive to other states our governance are forefather and mother of curruption and selfishness of induviduals who rule us.We may be not bad state but cannot boast ourselves we are excellent state either.

dondu(#11168674346665545885) said...

மார்ட்டின் லூதர் கிங்கின் அந்தப் பேச்சே இன்னொரு இடத்திலிருந்து சுட்டது என்பது பலரால் கூறப்படுகிறது.

ஓக்கே இந்தியாவுக்கே வருவோம்.

நீங்கள் இப்போதுதான் பின்னூட்டமிட்ட எனது பதிவில் ஊழலைப் பற்றிப் பேசும்போது மோதியையும் இவ்வாறு ரெஃபர் செய்தேன்:

//குஜராத்தில் மோதி அரசு நற்பணிகள் பல சக அரசியல்வாதிகளுக்கு சவாலாகவே உள்ளன. மோதியின் சக பிஜேபியினரும் இவர்களில் அடங்குவர். ஆகவே அவரை எப்படியாவது தங்கள் லெவலுக்கு இழுக்கவே முயலுகின்றனர். ஊழல் குற்றச்சாட்டு கூற முடியவில்லையா? இருக்கவே இருக்கின்றன 2002-ல் நடந்த கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு, அதன் விளைவான கலவரங்கள். அவற்றை பிரசாரம் செய்தும் அவை எடுபடாது போய் அவர் இரு சட்டசபை தேர்தல்கள், ஊராட்சி மன்றத் தேர்தல்கள் ஆகியவற்றில் தொடர்ந்து வெற்றி பெறுவதைப் பார்த்து ஆங்கில ஊடகங்களும் சரி, சீக்கியக் கொலை புகழ் காங்கிரஸ் கட்சியினரும் சரி வயிறெரிகின்றனர். நமது தமிழ் பதிவர்களும் விதிவிலக்கல்ல என்பதை இப்பதிவுக்கு வந்து சாமியாடப் போகும் பின்னூட்டங்கள் நிரூபிக்கும் என அஞ்சுகிறேன்.

இந்த நிலைமை எத்தனை காலம் நீடிக்கும் எனத் தெரியவில்லை. மோதியின் அரசால் தடுக்கப்படும் ஊழல்களால் பணம் சரியான முறையில் பல திட்டங்கள் மூலம் பொது மக்களையே சேருகிறது. அதுவே போதாதா சக அரசியல்வாதிகள் வயிற்றெரிச்சல்பட? அதுவும் மோதி மட்டுமே கண்ணில் தென்படுவதால், அவருக்குப் பிறகு குஜராத்தில் யார் என்ற மயக்கமும் ஏற்படுகிறது.

1977-ல் பதவிக்கு வந்த எம்ஜிஆரும் மோதி மாதிரியே ஊழலற்ற ஆட்சியையே தர முயன்றார். ஆனால் அவர் அரசை கருணாநிதியும் இந்திரா காந்தியுமாக சேர்ந்து அவர் ஆட்சியை கலைக்க மீண்டும் 1980 எலெக்‌ஷனில் அமோகமாக ஜெயித்த அவர் பிறகு ஊழலில் கருணாநிதியே அஞ்சும் அளவுக்கு ஈடுபட்டு, அவரை அரசியல் ரீதியாக பயங்கரமாகப் பழிவாங்கி செயல்பட்டார். எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை கருணாநிதியால் ஆட்சியில் அமரும் கனவு கூடக் காணமுடியவில்லை என்பதெல்லாம் ஓக்கே. ஆனால் ஊழலற்ற முதல்வரை ஊழல் சக்கரவர்த்தியாக மாற்றிய கருணாநிதி இன்னும் கொழிப்பதுதான் வருத்தம் அளிக்கிறது.

ஒரு வேளை ஜெயமோகன் சொல்லும் மக்களுக்கான பங்கீடு என்பது இலவச டிவி, கேஸ் கனெக்‌ஷன் என நினைத்து மக்கள் திருப்தியடைந்து விட்டனரோ என்ற அச்சமும் எழுகிறது.//

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராஜ நடராஜன் said...

//மார்ட்டின் லூதர் கிங்கின் அந்தப் பேச்சே இன்னொரு இடத்திலிருந்து சுட்டது என்பது பலரால் கூறப்படுகிறது.//

டோண்டு சார்!யார் எழுதினாங்க என்பதா முக்கியம்?யாருடைய வாய் வார்த்தைகளை உச்சரிக்கிறதென்பதல்லவா முக்கியம்?
அமெரிக்க ஜனாதிபதிகளுக்கும்தான் எழுதிக் கொடுக்கிறாங்க?பெயர் ஜனாதிபதிகளுக்கல்லவா?

உங்கள் முழு இடுகையும் உங்கள் தளத்தில் படித்தேன்.
ஜெயமோகன் சொல்வதை விட நீங்கள் சொல்வது புரிகிறது:)

dondu(#11168674346665545885) said...

1. மார்ட்டின் லூதர் கிங் ஜனாதிபதி அல்ல.

2. தான் சுட்ட அந்தப் பேச்சை தன்னுடையது போலவே காட்டி உதார் செய்தார். கோட் செய்தார் என்றார் மூலத்தைக் கூறுவதே நியாயமாகும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராஜ நடராஜன் said...

//1. மார்ட்டின் லூதர் கிங் ஜனாதிபதி அல்ல.

2. தான் சுட்ட அந்தப் பேச்சை தன்னுடையது போலவே காட்டி உதார் செய்தார். கோட் செய்தார் என்றார் மூலத்தைக் கூறுவதே நியாயமாகும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

டோண்டு சார்!நான் எங்கே மார்டின் லூதர் கிங்க் ஜனாதிபதியென்று சொன்னேன்.அவ்வ்வ்வ்:)

நான் சொல்ல வந்தது ஜனாதிபதிக்கே எழுதிக்கொடுத்துத்தான் படிக்கிறார்கள் என்றேன்.