என்னமோ செய்யுங்க நீங்களாச்சு மக்களாச்சுன்னு நாம் ஒதுங்க நினைத்தாலும் தமிழக முதல்வர் கருணாநிதி எங்கப்பன் குதிருக்குள்ளங்கிற மாதிரியே அறிக்கை விட்டு மனுசனை டென்சன் ஏத்துறார்:.ரஜனி,கமல் கேட்கவேண்டிய கேள்வியை நமக்கெதுக்கு வம்புன்னு அவங்க ஒதுங்கிறதால காசு கொடுக்காத அப்பாவி வக்கீலா நான் கேட்கிறேன்:)
தமிழக திரைப்படத்துறையில் தனது குடும்பத்தைச் சார்ந்தவர்களின் ஆதிக்கம் தாங்க முடியலைன்னு திரைப்படத்துறையினர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கும் போது என்னோட குடும்பம் மட்டுமா திரைப்படத்துறையில் இருக்கிறது,ரஜனி,கமல் போன்றவர்களின் குடும்பங்கள் அதே தொழிலில் இல்லையா என எதிர்க் கேள்வி போடுகிறார் என NDTV சொல்கிறது.NDTV ஈழப் படுகொலையைப் பற்றி கவலைப்படுகிறதோ இல்லையோ சர்தார் மாணவன் ஆஸ்திரேலியாவில் அடி வாங்கிட்டான், வெளியுறவுத்துறை கண்டனம் என்பதையோ கருணாநிதி குடும்பத்தைப் பற்றி பொது அறிவு வளர்ப்பதையோ தவற விடுவதேயில்லை. சரி!நம்ம முதல்வர் அறிக்கைக்கு வருவோம்.
எனது நண்பர்களான எம்.ஜி.ஆர்,சிவாஜி உள்பட இதுவரை 75 படங்களுக்கு மேல் நான் கதை வசனம் எழுதியிருக்கிறேன்.நடிகர்களுடனும்,திரைப்பட தொழில் நுட்பக் கலைஞர்களுடனும் நட்புறவோடு பழகி வருகிறேன் என்பது அனைவரும் அறிந்ததே.
கருணாநிதியை விமர்சிக்கும் ஒரு பத்திரிகைக்கு பதில் அளிக்கும் போதே எனது குடும்பத்தினர் வளர்ச்சியைப் பொறுக்க இயலாததால் இந்த மாதிரி விமர்சனத்தை வைக்கிறார்கள் என்கிறார்.
கருணாநிதியின் பேரன்கள் உதயநிதி ஸ்டாலின்,தயாநிதி அழகிரி மற்றும் பேரன்கள் மாறன் சகோதரர்கள் பல படங்களைத் தயாரித்துள்ளது அனைவரும் அறிந்துள்ளதே.எனது பேரன்கள் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியிருப்பது எப்படி சாத்தியமென்று கேள்வி கேட்கிறார்கள்.ஏ.வி.மெய்யப்பன் மகன்களும்,பேரன்களும் படத் தயாரிப்பில் இருப்பதை இவர்கள் அறியவில்லையென்பதோடு இவர்களைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் மகன்கள் பிரபுவும் ராம்குமாரும் நடிப்புத்துறையிலும் தயாரிப்பிலும் ஈடுபட்டார்கள்.
அதோடு மட்டுமல்லாமல் ரஜனிகாந்தின் மகள் சௌந்தர்யாவும் ஒரு தயாரிப்பாளரே என்பதோடு கமல் ஹாசனின் மகள் ஸ்ருதியும் ஒரு நடிகை என்கிறார்.
அதோடு மட்டுமல்லாமல் பல கோடி கணக்கில் சலுகைகள் தி.மு.க அரசு அளித்திருக்கும் போது எனது மகன்களும் பேரன்களும் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடுவதால் என்ன இதயம் நோகுகிறது?
எனது குடும்பத்தை சார்ந்தவர்கள் அரசியலிலோ திரைப்படத்துறையிலோ நுழையும் போது இதை ஏன் குடும்ப அரசியல் என்று கூறப்படுகிறது?
பேசி முடிச்சிட்டீங்களா முதல்வரே! ஒவ்வொன்றாக அலசுவோம்.
ரஜனி,கமல ஹாசனின் துவக்க காலம் முதல் உழைப்புக்கான காலம் எத்தனை வருடங்கள் துவங்கி எத்தனை வருடங்கள் கழித்து அவர்களின் பெயர்கள் தமிழ் திரைப்படத்துறையில் வலம் வந்தன?
இது வரை படங்களுக்கு கதை வசனம் மட்டுமே எழுதி சினிமாத் துறையில் படம் தயாரிக்கும் நிலைக்கு உயர்ந்தவர்கள் யாராவது பஞ்சு அருணாசலம் மாதிரி ஒரு சிலர் தவிர யாரால் உயரும் சாத்தியமிருக்கிறது திரைப்படத்துறையில்?
மெய்யப்பன் மகன்களும்,பேரன்களும் திரைப்படத் துறை தவிர்த்து எத்தனை துறைகளில் தங்கள் கால் பதித்துள்ளார்கள்?
ரஜனியின் ஒரு படத்துக்கான வருமானம் எவ்வளவு என்பது திரைப்படத்துறை மற்றும் நீங்கள் அறிந்த ஒன்று எனும் போது ஏன் அவர் மகளால் திரைப்படம் தயாரிக்க இயலாது?
இங்கேதான் நீங்கள் மாட்டிக்கொள்கிறீர்கள் முதல்வரே!
உங்கள் பேரப் பிள்ளைகள் திரைப்படம் தயாரிக்குமளவுக்கு எந்த துறையில் அவரவர் பெற்றோர்களின் வருமானம் என்று தமிழக மக்கள் யாருக்காவது தெரியுமா?
கமல ஹாசன் மகள் திரைப்படத்தில் நடிக்கிறார் என்றால் அவரது திறமையினால் மட்டுமே முன்னேற இயலும்.இல்லையென்றால் எம்.ஜி.ஆர் க்கு டூப்ளிகேட் முத்து கதைதான்.
உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அரசியலில்,திரைப்படத்துறையில், தொலைக் காட்சித் துறையில்,பத்திரிகைத் துறையில், மந்திரி பதவிகளில் என ஆக்டோபஸாக தனது கரங்களை விரிப்பதற்கு, உயர்வதற்கு உங்கள் முதல்வர் பதவி என்ற அதிகாரம் காரணமாக இருக்கின்றது என்பதனாலேயே விமர்சனங்கள் எழுகின்றன என்பதோடு அதுவே உண்மை என்பதை தமிழக வரலாறு பதிவு செய்திருக்கிறது என்பதை பெரியார், அண்ணா போன்றவர்களுடன் பழகிய உங்கள் மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள்.
வடநாட்டுப் பத்திரிகைகள் உங்களை விழிக்கும் போது aging patriarch என்றே குறிப்பிடுகிறது.ஆங்கிலப் படங்களை அவ்வப்போது பார்த்து தொலைத்தாலும் உங்களை நினைவு படுத்துவது காட் பாதர் டான் விட்டோ கார்லியோன்(Don Vito Corleone).அந்தப் படத்தின் கதையை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால்
The aging patriarch of an organized crime dynasty transfers control of his clandestine empire to his son.
இயக்குநர் மணி ரத்னம் நாயகன் படத்தின் தமிழகமறிந்த வசனம்....
நீஙக நல்லவரா?கெட்டவரா?