Followers

Monday, August 22, 2011

கடாபி வெர்சன் 1.1

கடாபி பற்றி முன்பே இங்கே சொல்லி விட்டதால் இது கடாபி வெர்சன் 1.1

நடப்பவை நன்றாகவே நடக்கிறது.ஆனால் பிப்ரவரி 2011 லிருந்து மிகவும் தாமதமான விடுதலை லிபியாவின் ராணுவக் கிளர்ச்சியாளர்களின் லிபியா தலைநகரம் கைபற்றல் எப்பொழுதென்று எதிர்பார்த்தது நிகழ்ந்தே விட்டது.லிபியாவின் ராணுவப்புரட்சியை நான் வரவேற்பதை விட உணர்வு பூர்வமாக மகிழ்ச்சி அடைபவர்கள் ராணுவக் கிளர்ச்சியாளர்களும் அவர்களைச் சார்ந்த மக்களுமே.ஆட்சி மாற்றத்தில் நிகழும் மாற்றங்களால் நேட்டோ படைகளின் குறிக்கோள்!(Mission accomplished) முடிந்தது.பெட்ரோல் விலையைக் கொஞ்சம் குறைங்கப்பா:)

மேற்கத்திய நாடுகளின் பொருளாதார சந்தை உறுதிப் படுத்தப் பட்டு ரஷ்யா,சீனாவின் ராணுவ சந்தை பின்படுத்தப்படும்.இவற்றை விட உடும்பிப் பிடி கடாபியின் சர்வாதிகார கரம் வலுவிழந்ததும் இன்னொரு வாரிசு அரசியல் நிகழாமல் போவதும் வரவேற்க தக்கது.நேற்று இரவு சூடான செய்தி பார்க்கும் போது இயல்பாய் தோன்றிய ஒன்று லிபிய கிளர்ச்சி உருவான துவக்கம் முதலே தனி மனிதனாக கடாபியின் சர்வாதிகாரம் ஒழிய வேண்டுமென்று நினைக்கும் போது இந்திய அரசின் வாலையும்,தலையையும் காட்டும் (obstain) வெளியுறவுக்கொள்கை மனதில் வந்து போனது.உலகரங்கில் பிரச்சினை ஏற்படும் போது எது சரியென்ற தீர்க்கமான முடிவுகள் எடுப்பது அவசியம்.

வலைப்பின்னல்கள் இல்லாத பிரச்சினைகள் என்று எதுவுமே இல்லை.அன்னா ஹசாரே,இலங்கை,லிபியா என எந்த உள்,வெளிநாட்டுப் பிரச்சினை யென்றாலும் காங்கிரஸ் அரசின் குழம்பும் நிலை மட்டுமே தெரிகிறது.முன்பெல்லாம் வலுவான இந்தியாவிற்கு ஒரே ஆட்சி மீண்டும் நிலவுவது நல்லது என்றே மன விளம்பரம் செய்தார்கள்.இரண்டாம் முறை ஆட்சி நிர்வாக சீர்கேடுகளையும்,செய்த ஊழல்களை திடப்படுத்துவதற்கு மட்டுமே உதவுமா என்ற ஐயப்பாட்டை உருவாக்குகிறது.இரண்டாம் முறை ஆட்சி செய்யும் ஐக்கிய முன்ணணி கூட்டணியின் இப்போதைய நிர்வாகத் திறன் என்ன?மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்திருந்தால் நிகழ்வுகள் எப்படியிருந்திருக்கும்?

மீண்டும் லிபியா பக்கம் பார்வையை செலுத்தினால் முறையான பயிற்சிகள் இல்லாத கட்டமைப்பில்லாத,கட்டுக்கோப்பில்லாத லிபிய ராணுவ புரட்சியாளர்கள் வெற்றியின் பின் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு என்ற வலுவான ஆயுதம் இருக்கிறது.மேற்கத்திய நாடுகளின் எண்ணைப் பொருளாதார சந்தையை கட்டுப்படுத்தும் சுயநலங்கள் இருக்கின்றன.

விடுதலைப்புலிகளின் கட்டுக்கோப்பான தரை,கடல்,விமானப்படைகள் தனித்துவமாய்(Unique) சரியான காரணங்களுடன் இயங்கி சாதிக்க இயலாத ஒன்றை அமெரிக்க ஆதரவிலான நேட்டோ படைகளின் துணையோடு லிபிய ராணுவப் புரட்சி சாதித்துள்ளது.மேற்கத்திய நாடுகளின் தேவையென்றால் ஆயுதம் தூக்குவதில் தவறில்லை.மேற்கத்திய நாடுகளின் தேவை நிறைவேற்றப் படாவிட்டால் ஒசாமா பின்லேடன்,தலிபான்களுக்கு மட்டுமே சொந்தமான தீவிரவாதத்தை டெரரிஸ்ட் என்ற சொல் பிரயோகி!மேற்கத்திய நாடுகளின் சுயநலங்கள் லிபியா விசயத்தில் நிர்வாணமான உண்மையாய் தெரிகிறது.இருந்தாலும் தன் நாட்டு மக்களையே நாய்கள் என்றும்,கருணையே காட்ட மாட்டேன் என்று அறைகூவல் விட்ட கடாபியை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் உதவிய மேற்கத்திய நாடுகளின் சுயநலம் வரவேற்க படவேண்டியதே. 

லிபிய புரட்சியாளர்களின் போராட்டங்களுக்கான நியாயங்களை விட ஆயிரம் மடங்கு வலுவான காரணங்களும்,வரலாற்று நிகழ்வுகளும்,வலிகளும் இலங்கையில் வாழும் வட,கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு இருக்கிறது.இதனை அடிக்கடி பதிவு போட்டு தமிழர்களுக்கு நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.இல்லையென்றால் விடுதலைப் போராட்டத்துக்கு குரல் கொடுக்கும் வை.கோ மேல் நொள்ளை, சீமான் மீது அவதூறுகள், திருமா,ராமதாஸ் போன்றவர்களின் சுயநல அரசியல் பிறழ்வு,தி.மு.கவின் குடும்ப நலத்தில் பின் தள்ளப்பட்ட ஈழம்,தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாய் அ.தி.மு.கவினால் மட்டுமே இயலும் என்ற தற்போதைய சூழல் என்ற அனைத்தையும் மறந்தே போய் விடும்.

மேலும்  விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் துப்பாக்கியை கீழே போட்டு மரணித்து விட்ட  நிலையில் புதிதாய்ப் பிறந்த நாடு கடந்த தமிழீழ அரசு நம்பிக்கையான ஒன்றாகவே காணப்பட்டது.இப்பொழுதும் அதன் மூலமே தமிழர்களின் குரலையும் கூட ஒலிக்க வேண்டியுள்ளது.லிபியாவின் ராணுவப் புரட்சியாளர்களுக்கும் அப்பால் மேற்கத்திய நாடுகளோடு இணைந்து உடன்பாடு காணும் அமைப்பான Transitional National Council என்பது நாடு கடந்த தமிழீழம் போன்ற ஒன்றே.எனவே நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அனைத்துலக அங்கீகாரத்திற்கான உரிமைகள் உண்டு.அமைப்பை இன்னும் ஆக்கபூர்வமாக இயங்க செய்வதிலும்,தமிழகம்,தமிழ் தேசியக் கூட்டமைப்புக்களுடன் இணைந்து வலுவாக செயல்படுவதும் அவசியம்.இலங்கை,இந்திய அரசுகள் தவறுகள் செய்கின்றன என்ற போதிலும் அவைகளுக்கான அங்கீகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கட்டமைப்பு என்ற வலிமை.

அன்னா ஹசாரேவின் மக்கள் உணர்வுகளுக்கான நியாயமான இயக்கத்திற்கே மத்திய அரசு குழப்புவது,சிறையிலிடுவது,இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்வது என்று செயல்படும்போது ராஜீவ்காந்தியின் கொலை,சோனியாவின் இத்தாலிய சினம் என்ற வலுவான காரணங்கள் இருக்கும் போது சீனாக்காரனுக்கு செக் வைக்கிறேன் பேர்வழியென பொய் முகத்துடன் இலங்கைக்கு ஆதரவும்,போர்க்குற்றங்களுக்கு துணையாக கள்ள மௌனம் சாதிக்கவும் செய்வதுடன் தமிழர்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுகிறது.

உண்மையில் காங்கிரஸ் அரசின் நோக்கம் சீனாவின் வணிக நலன்களைக் கட்டுப்படுத்துவதாகவும்,தனது தென் எல்லைகளை பாதுகாப்பதாகவும் இருந்தால் துவக்கம் முதலே சீனாவுக்கு செக் வைத்திருக்க வேண்டும்.இதோ இந்தியாவின் தலையீட்டையும் மீறி இலங்கை சீனாவுடனான பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் முகமாக ராஜபக்சே கடந்த வாரங்களில் சீனா போய் விட்டு வந்துள்ளார்.

இந்த இடத்தில் பதிவை வாசிப்பவர்களுக்கு  வெளியுறவு,நாட்டு நலன் ஒப்பீடு ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன்.ஈரானிலிருந்து எண்ணைக் குழாய்களை பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்பு ஈரான்,பாகிஸ்தான்,இந்திய கூட்டமைப்பில் நிகழ்ந்தன.இந்த ஒப்பந்தம் போகாத ஊருக்கு வழிகாட்டின மாதிரியென்ற போதிலும் இந்தியா,பாகிஸ்தான் பெட்ரோலிய எண்ணை தேவைகளைப் பூர்த்தி செய்யும் நல்ல திட்டமே.அதற்கு மூன்று நாடுகளின் நீண்ட நல்லுறவு முக்கியம்.ஈரானுக்கும்,இந்தியாவுக்குமான உறவு கடந்த காலங்களில் வலுவான ஒன்றே என்ற போதிலும் இந்தியா-பாகிஸ்தான் மற்றும் ஈரான் - பாகிஸ்தான் என்ற முக்கோணம் சரியான அரசியல் உறவாக இல்லை.இதனை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது மட்டுமல்ல ஈரானிடம் எண்ணைப் பொருளாதாரத்தை வாங்காதே,அமெரிக்கா இந்தியாவுக்கு எதிர்கால எரிபொருள் மின்சார உதவிகளை செய்யும் என்று ஜார்ஜ் புஷ் அரசினால் அமெரிக்க சட்டங்கள் தளர்த்தப்பட்டதே இந்திய அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தங்கள்.இப்போது ஈரான் - இந்தியா - பாகிஸ்தான் ஒப்பந்த திட்டங்களின் நிலை என்ன?இதுவே அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை வெற்றியும், பொருளாதார ரீதியாக நாடுகளை கட்டுப்படுத்தும் நுணுக்கங்களும்.

சீனாவிலிருந்து இலங்கைக்கான தூரமும் புவியியல் ரீதியாக இலங்கையை இந்தியா கட்டுப்படுத்த இயலும் என்ற போதிலும் தனது நாட்டு நலன்களையும் பின் தள்ளி விட்டு இந்தியாவின் தென்னக மக்களுக்கு எதிர்காலத்தில் இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை,பிரபாகரனின் மக்களுக்கு ஒரு கண்னாவது போகவேண்டுமென்ற வஞ்சினமல்லவா இந்திய வெளியுறவுக் கொள்கையாய் இலங்கையில் செயல்படுகிறது.காங்கிரஸ் கட்சிக்கு உண்மையில் தேசநலன்களில் அக்கறை இருந்தால் இலங்கையை  பணிய வைக்க,சீனாவின்  இலங்கையில் மூக்கு நுழைப்பு ஆதரவை இழக்க வைக்கும் வல்லமையை இலங்கை இந்திய புவியியல்,தமிழர்களின் கோபம் என்ற காரணங்கள் போதும்.நேராகவே நோக்கினாலும் கூட இலங்கை,இந்திய உறவு,தமிழ்,சிங்கள கலாச்சாரத்தை காத்தல் போன்றவற்றிற்கு இரு அரசுகளும் துணை புரிய வேண்டும்.மாறாக நிகழ்வது என்ன? பாகிஸ்தான் - இந்திய மக்களின் வெறுப்பு அரசு கட்டமைப்புக்களில் எப்படி ஊட்டி வளர்க்கப்பட்டதோ அதே போன்றதொரு வெறுப்பை மட்டுமே இப்பொழுது இந்திய-இலங்கை அரசுகள் கடல் ஊட்டி வளர்க்கின்றன.
இந்த லட்சணத்தில் சட்டசபை தேர்தலில் வீணாய்ப் போன தங்கபாலு காங்கிரஸ் அரசுக்கு 30 லட்சம் ஈழத்தமிழர்களையும்,7 கோடி இந்திய தமிழர்களையும் காக்க வேண்டிய தலையாய கடமையும்,சீனாவைக் கட்டுப்படுத்த வேண்டிய தலையாய கடமையின் காரணமாகவே ராஜபக்சே அரசுக்கு ஆதரவு அளிக்கிறது என்று அறிக்கை விடுகிறார்.இந்தியாவில் தமிழக மக்கள் இலங்கைக்கான எதிர்ப்பு சக்தி என்பதை உணர்ந்துதானே ராஜபக்சே சீனாவின் உறவுகளை மேம்படுத்தினால் இந்தியா தன்னிடம் கைகட்டி நிற்குமென்ற கணக்குப் போட்டுத்தானே செயல்படுகிறார்?அரசியல் அரிச்சுவடி படிக்காத நமக்கே விளங்கும் உண்மைகள் தங்கபாலுவுக்கும்,அவரது அண்ணாத்தைகளுக்கும் விளங்காமலா போகும்?

இப்ப லிபியா பக்கம் பார்வையை திருப்புவோம்.நேற்று லிபியக் கிளர்ச்சியாளர்கள் அறிக்கையின் படி கடாபியின் ஒரு மகன் சய்ஃப் அல் இஸ்லாம் கடாபியும்,இன்னொரு மகனான சாதி கடாபியும் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கடாபி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன.ராஜபக்சே? 


4 comments:

R.Elan. said...

விரிவான நல்ல பதிவு.பிராந்திய அரசுகளின் ராஜ தந்திர நடவடிக்கைகளின் தாக்கம் ஈழப்பிரச்சனையில் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்பது குறித்த அலசல் பதிவில் புரிகிறது, அலசலை தொடருங்கள்,மற்றவைகளையும் தெரிந்து கொள்வோம்.நன்றி.

அம்பலத்தார் said...

அரசியல் யதார்த்தங்களை அலசும் நல்லதொரு பதிவு

ராஜ நடராஜன் said...

//R.Elan. said...

விரிவான நல்ல பதிவு.பிராந்திய அரசுகளின் ராஜ தந்திர நடவடிக்கைகளின் தாக்கம் ஈழப்பிரச்சனையில் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்பது குறித்த அலசல் பதிவில் புரிகிறது, அலசலை தொடருங்கள்,மற்றவைகளையும் தெரிந்து கொள்வோம்.நன்றி.//

உங்கள் பின்னூட்டத்திற்கு உடனே மறுமொழி சொல்லாததற்கு மன்னிக்கவும்.இனியும் ஈழம் குறித்த பதிவுகளை தொடர்வேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

//அம்பலத்தார் said...

அரசியல் யதார்த்தங்களை அலசும் நல்லதொரு பதிவு//

உங்கள் பெயர் கேட்டமாதிரி இருக்கிறதே என்ற நினைவில் உங்கள் புரபைல் தேடினேன்.இணைந்த மாதிரி தலைப்பைத்தான் இருவரும் வைக்கிறோம் என்பதிலிருந்து கருத்து ஒற்றுமை கொண்டவர்களாக இருப்போம் என்று நம்புகிறேன்.மீண்டும் உங்கள் தளத்திற்கு வருவேன்.நன்றி.