Followers

Monday, August 29, 2011

மரணம் வென்ற நாத்திகன் பகத்சிங்

இப்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் 1907 செப்டம்பர் 28ல் பிறந்து  1931ம் வருடம் மார்ச் 23ம் தேதி பிரிட்டிஷ் ராஜ் சட்டத்தில் தூக்கு கயிற்றால் பகத்சிங்குடன் ராஜ் குரு,சுக்தேவ் என்ற இருவருடன் மரணத்தை தழுவிக்கொண்ட இந்திய சுதந்திர வரலாற்று கால கட்டத்தில் சிறையில் பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகனானேன் என்ற பகத்சிங்கின் உருது எழுத்துக்களின் ஆங்கில மொழிபெயர்ப்பின் ஒரு பகுதியின் என்னால் இயன்ற தமிழாக்கம் இது.இன்றைய இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்படி பாகிஸ்தானியனான பகத்சிங் இந்தியனாகப் போற்றப்படுவது வரலாற்றின் முரண்.

// LTTE leader velupillai Prabakaran lived an elusive life with an admiration to Bhagat Singh and Subash Chandra Bose with a vision of freedom from Srilanka's Singala Chavanism.Yet he was brandized as an terrorist as Bhagat Singh was named by British.

Long live Bhagat singh's visionary thoughts.//

என்ற பின்னூட்டத்தின் பாதிப்பை இங்கே பதிவு செய்கிறேன். இனி பகத்சிங்  எழுதியதாக பகத்சிங்கின் வரிகளில்...

ஒரு புதிய கேள்வி உருவாகியுள்ளது.கர்வம் காரணமாக எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை மறுக்கிறேனா?

இது மாதிரியான கேள்வியை நான் எதிர்கொள்வேன் என்று நான் ஒரு போதும் கற்பனை செய்ததில்லை.ஆனால் எனது நண்பர்கள் சிலருடன் உரையாடும் போது நான் கடவுள் மறுப்பை செய்வது மிகவும் அதீத கர்வத்தின் காரணமாக எனது அவநம்பிக்கை என்பதாக மறைமுகமாக குறிப்பிட்டார்கள்.

இந்த பிரச்சினை ரொம்ப தீவிரமானது.

நான் தனி மனித குணங்களுக்கும் மேலானவன் என்று தற்பெருமை கொள்ளவில்லை. நான் ஒரு சாதாரண மனிதன் மட்டுமே. யாரும் மேலானவர்கள் என்று கருத இயலாது.என்னிடம் பலவீனங்கள் உள்ளன.கர்வம் எனது இயல்பான குணம்.எனது தோழர்களின் மத்தியில் நான் சுதந்திரமாய் நடப்பவன் என்று கூறப்படுகிறேன்.எனது நண்பர் பி.கே தத் அப்படி விளிக்கிறார்..சில நண்பர்கள் எனது கருத்துக்களை அவர்கள் மீது தீவிரமாக திணிப்பதாகவும் அதனை ஏற்றுக்கொள்ளும்படி செய்கிறேனென்று குற்றம் சுமத்துகிறார்கள்.இது ஓரளவுக்கு உண்மையே.இதனை மறுக்கவில்லை.இது தற்பெருமை பேசுவதாக கூட கருதப்படும்.சில பிரபலமான இனங்களுக்கு மாறாக நமது மரபு மீதான தற்பெருமை என்னிடம் உள்ளது.இந்த பெருமை நமது மரபுக்குரிய உரிமையே தவிர தற்பெருமையல்ல. 
 
தற்பெருமை,இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் அகங்காரம் என்பது ஒருவர் மீதான தேவையற்ற தற்பெருமை.தேவையற்ற பெருமை என்னை நாத்திகனாக கொண்டு சென்றதா அல்லது மிகவும் கூர்ந்த பொருள் ஆய்விலும்,மிகவும் சீரிய ஆலோசனைக்குப்பின் கடவுள் நம்பிக்கை இழந்தேனா என்பதனை இங்கே விவரிக்கப் போகிறேன்.அதற்கு முன் கர்வமும், தற்பெருமையும் இரு வேறுபட்டவை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவதாக தேவையற்ற பெருமையும்,வீண் புகழும் எப்படி கடவுள் நம்பிக்கையின்மைக்கு இடையில் நிற்கும் எனபதை புரிந்து கொள்ள தவறிவிட்டேன்.எந்த தகுதிகளும் இல்லாமல் அதற்கு தகுதியும் இல்லாமல் நானும் கூட ஒரு சிறந்த மனிதனின் சிறப்புக்களின் புகழ் ஓரளவுக்கு வந்தடைந்ததை நிராகரிக்கிறேன்.ஆனால்  தனிப்பட்ட கர்வம் காரணமாக எப்படி ஒரு மனிதனின் கடவுள் நம்பிக்கை நம்பிக்கையின்மையாக மாற இயலும்?

இதற்கு இரு வழிகள் மட்டுமே இருக்க முடியும்.ஒன்று மனிதன் கடவுளுக்கு எதிராக எண்ண துவங்கும் போது அல்லது தான் கடவுள் என்று நினைக்க துவங்கும் போது.

இரண்டு முறையிலும் அவன் உண்மையான நாத்திகனாக மாற முடியுமா? முதலாவதில் அவனுக்கு எதிராளி இருப்பதை மறுக்கவில்லை.இரண்டாவது விசயத்தில் கூட திரைக்கும் பின்னால் அனைத்து இயற்கை நிகழ்வுகளையும் வழிநடத்தும் சக்தி இருப்பதாக ஒப்புக்கொள்கிறான்.தான் அந்த சக்தியாகவோ அல்லது தனக்கும் அப்பால் இன்னொரு சக்தி இருப்பதாக உணர்வதோ இங்கே முக்கியமில்லை.அடிப்படையும் அதற்கான நம்பிக்கையும் இருக்கிறது.இவன் இந்த விதத்தில் நாத்திகனல்ல.எனவே நான் முதல் முறையிலோ அல்லது இரண்டாவது வரிசையிலோ இல்லை.

நான் கடவுள் உள்ளது என்ற உயர் நிலையையே மறுக்கிறேன்.நான் ஏன் மறுக்கிறேன் என்பதை பின்பு காணலாம்.இங்கே ஒன்றை விளக்க வேண்டும்.அதாவது நாத்திக கொள்கையை ஏற்றுக்கொள்ள தூண்டியது கர்வம் என்ற ஒன்றல்ல .நான் கடவுளுக்கு எதிராளியுமல்ல அல்லது கடவுளின் மறு வடிவமும் அல்ல.ஒன்று மட்டும் நிச்சயம்,எனது சிந்தனைக்கு தற்பெருமை காரணம் அல்ல.இந்த கூற்றை மறுக்கும் உண்மைகளை ஆராயலாம்.எனது நண்பர்களைப் பொறுத்த வரையில் டெல்லி அசெம்பளி குண்டு வெடிப்பும் மற்றும் லாகூர் சதி திட்ட நீதிமன்ற விசாரணைகளால் கிடைத்த தேவையற்ற புகழின் காரணமாக இந்த கர்வம் என்கிறார்கள்.அவர்கள் வாதம் சரியா என்று பார்க்கலாம்.

எனது நாத்திக சிந்தனைகள் இப்போதைய துவக்கமல்ல.நான் தெளிவற்ற சிறுவனாக இருக்கும் போதே கடவுளை நம்புவதை நிறுத்தி விட்டேன் என்பதை எனது மேற்சொன்ன நண்பர்கள் அறிந்திருக்கவில்லை.குறைந்த பட்சம் ஒரு கல்லூரி மாணவன் கர்வம் காரணமாக நாத்திகத்தில் தற்பெருமை கொள்வான் என்று கூற முடியாது. சில கல்லூரி ஆசிரியர்களுக்குப் பிடித்தமானதாகவும் பலரால் விரும்பபடாததாக இருந்த போதிலும்.நான் எப்பொழுதும் சிறந்த மாணவனாக இருந்ததில்லை.என்னால் அப்படி கர்வம் கொள்ளவும் இயலாது.

நான் இயற்கையிலேயே மிகவும் கூச்ச சுபாவமுடையவனாகவும் எதிர்காலம் குறித்த தோல்வி மனப்பான்மை கொண்டவனாகவே இருந்தேன்.அந்த நாட்களில் நான் முழு நாத்திகனாக இருக்கவில்லை.நான் எனது தாத்தாவின் பழமைக் கோட்பாடு சார்ந்த ஆரிய சமாஜ் தாக்கம் கொண்டவனாக வளர்க்கப்பட்டேன்.ஒரு ஆரிய சமாஜ்வாதி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் ஒரு நாத்திகனாக அல்ல.

எனது ஆரம்ப பள்ளி படிப்புக்குப் பின் லாகூரில் தயானந்த வேதாந்த பள்ளி(DAV-Dayanand Anglo Vedic School)யில் ஒரு வருடம் விடுதி மாணவனாக இருந்தேன்.அங்கே காலை மாலை இருவேளை பிரார்த்தனைக்குப்பின் காயத்ரி மந்திரத்தை மணிக்கணக்கில் பாராயணம் செய்தேன்.நான் ஒரு முழு பக்தனாக இருந்தேன்.பின்பு நான் எனது அப்பாவுடன் வாழ ஆரம்பித்தேன்.என் அப்பா முற்போக்காளராகவும் அதே சமயத்தில் மதத்தைப் பொறுத்தவரையில் பழமைவாதியாகவும் இருந்தார்.அவரது படிப்பினைகளால் மட்டுமே நான் சுதந்திரத்திற்காக என் வாழ்வை அர்பணிக்க தீர்மானித்தேன்.ஆனால் அப்பா நாத்திகவாதியல்ல.மாறாக மிகவும் கடவுள் நம்பிக்கையுடையவர்.நான் தினமும் பிரார்த்தனை செய்வதை ஊக்குவித்தார்.இப்படித்தான் நான் வளர்க்கப்பட்டேன்.

ஒத்துழையாமை இயக்க நாட்களில் நான் தேசியக் கல்லூரியில் சேர்ந்தேன். இங்கேதான் நான் முற்போக்காக சிந்திக்கவும் மதங்களின் பிரச்சினைகளையும் கடவுளையும் கூட விமர்சனம் செய்ய ஆரம்பித்தேன். ஆனாலும் நான் மத நம்பிக்கையாளனாகவே இருந்தேன்.எனது வெட்டப்படாத நீண்ட முடியை வளர்க்கும் போது என்னால் புராணத்தையோ,சீக்கிய கொள்கையிலேயோ அல்லது வேறு எந்த மதங்களையோ   நம்ப இயலவில்லை.ஆனால் என்னிடம் கடவுள் இருக்கிறார் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது.

பின் நான் புரட்சிகர கட்சியில் சேர்ந்தேன்.நான் சந்தித்த முதல் தலைவர் கடவுள் இல்லையென்பதை மறுக்கும் துணிவு இல்லாதவராக இருந்தார்.எனது தொடர்ந்த கேள்விகளால் தேவைப்பட்ட போது பிரார்த்தனை செய் என்றே சொன்னார்.நாத்திகத்தை தேர்ந்தெடுக்க குறைந்த தைரியமே இது மாதிரியானவர்களால் தேவைப்பட்டது.அடுத்து சந்தித்த தலைவர் மிகவும் இறை நம்பிக்கையாளர்.அவருடைய பெயரை இங்கே குறிப்பிடுகிறேன்.அவர் தோழர் சச்சிந்திர நாத் சன்யால்.இப்பொழுது கராச்சி சதி திட்டத்தில் ஆயுள் கைதியாக உள்ளார்.அவருடைய ஒரே புகழ் பெற்ற புத்தகமான் பந்தி ஜீவன் (Bandi Jivan) அல்லது மறுபிறவி வாழ்க்கையில் கடவுளின் கீர்த்தி பற்றி உணர்ச்சி ததும்ப பாடப்பட்டுள்ளது.அவரது அழகான இரண்டாம் பகுதியான கடைசி பக்கத்தில் வேதாந்தம் குறித்த கடவுள் மீதான புகழ்ச்சிகள் மீதான மிகவும் சந்தேகப்படும் எண்ணங்களை உருவாக்கியது

1925ம் வருடம் ஜனவரி 28ல் இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்ட புரட்சிகர துண்டறிக்கை அவரது அறிவுத்திறனின் உழைப்பாக என்று அவர் மீதான குற்றப்பத்திரிகை சொல்கிறது.தவிர்க்க முடியாத ரகசிய வேலையில் முக்கியத் தலைவர் அவருக்கு விருப்பமான கருத்துக்களை வெளியிடுவதோடு அவற்றில் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் அவரின் தொண்டர்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.இந்த துண்டறிக்கையில் ஒரு முழு பாரா கடவுளுக்கும் அவரை தொழவும் செய்ய வேண்டுமென்று குறிப்பிடப்படுகிறது. இவை உளவியல் உள்ளுணர்வு மட்டுமே.நான் எதைக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன் என்றால் புரட்சிகர கட்சியிலும் கூட கடவுள் நம்பிக்கையின்மைக்கான எண்ணம் இல்லையென்பதே.புகழ்பெற்ற ககோரி தியாகிகள்-நான்கு பேர்களும் தங்களது கடைசி தினத்தை பிரார்த்தனையிலேயே கழித்தார்கள்.ராம் பிரசாத் பிஸ்மில் ஒரு பழமை ஆர்ய சமாஜ்வாதி.பரந்த சோசியலிச,கம்யூனிச சிந்தனைகளுக்கு மாறாக ராஜன் லகிரி உபநிசத்துப் பாடல்களையும் பகவத் கீதையையும் உச்சரிக்க தவறவில்லை.அவர்களில் ஒருவர் மட்டுமே பிரார்த்தனை செய்யவில்லை .”மனிதர்களின் கோழைத்தனத்திலும்,குறைந்த அறிவாலும் வருவதே தத்துவம்” என்று சொன்னவர் கூட கடவுளை எப்பொழுதும் மறுக்க துணியவில்லை.

இந்தக் காலகட்டம் வரையிலும் நான் புரட்சிகர கொள்கைகளில் காதல் கொண்டவன் மட்டுமே.இது வரையிலும் நாங்கள் கொள்கைகளைப் பின் தொடர்பவர்களாகவே இருந்தோம்.இப்பொழுது முழு பொறுப்பையும் தோளில் சுமக்கும் நேரம் வந்து விட்டது.தவிர்க்க முடியாத எதிர்ப்பு இல்லாத காரணமாக கட்சி முழுவதுமாக செயல் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. ஆர்வமுள்ள தோழர்கள்-தலைவர்கள் அல்ல- எங்களை ஏளனம் செய்ய ஆரம்பித்தார்கள்.கொஞ்ச காலங்களில் நான் கூட எங்களது திட்டங்கள் பற்றிய பயனின்மை பற்றி நம்புவேனோ என்ற பயம் வந்து விட்டது.எனது புரட்சிகர வாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.எனது மனதின் மூலைக்குள் “படி” என்ற எதிர் முழக்கம் கேட்டது.எதிராளிகளின் ஆழ்ந்த விவாதங்களை எதிர்கொள்ள நிறைய படி.உனது நம்பிக்கைகளையும் வாதங்களையும் காக்க இன்னும் நிறைய படி.நான் நிறைய படித்தேன்.
 

எனது முந்தைய நம்பிக்கைகளும்,திட நம்பிக்கைகளும் குறிப்பிட்டளவு மாற ஆரம்பித்தன.எங்களது முந்தையவர்களின் வழிமுறைகளில் வன்முறை மீதான பற்று மட்டுமே இருந்ததை இப்பொழுது தீவிரமான சிந்தனைகள் ஆட்கொண்டன.இனி மத நம்பிக்கைகள் இல்லை.குருட்டு விசுவாசம் இல்லை.இனி உண்மை மட்டுமே எங்கள் கோட்பாடு.வன்முறை தவிர்க்க முடியாத தேவையென்றால் மட்டுமே.வன்முறையின்மை தவிர்க்க முடியாத மக்கள் இயக்க கொள்கையானது.எதற்கு போராட வேண்டுமென்ற  தெளிந்த நம்பிக்கைகள் உருவாகின.வன்முறைப் போராட்டங்கள் இல்லாமல் போனதால் எனக்கு நிறைய உலகப்புரட்சிகளை வாசிக்கும் சந்தர்ப்பங்கள் அமைந்தன.நான் பகுனினை(Mikhail Alexandrovich Bakunin) வாசித்தேன்.கொஞ்சம் மார்க்ஸ்,அதிகமாக லெனினையும்,ட்ராட்ஷ்கி  மற்றும் தங்கள் நாடுகளில் புரட்சியை வெற்றிகரமாக உருவாக்கின அனைவரையும் வாசித்தேன்.இவர்கள் அனைவரும் நாத்திகர்களே.

பகுனின் கடவுளும் நாடும்(God and State) துண்டு துண்டாக இருந்த போதும் படிக்க ஆர்வமாக இருந்தது.பின்பு நிர்லாம்பா சுவாமியால் எழுதப்பட்ட காமன்சென்ஸ் வாசிக்க நேர்ந்தது.இது ஒருவகையான மத அடிப்படை நாத்திகம்.இதன் பொருள் எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது.1926ம் வருட இறுதிக்குள் எந்த அடிப்படையும்,ஆதாரமும் இல்லாத உலகை உருவாக்கி ஆளும் கடவுள் கொள்கைக்கு மாறான சிந்தனையாளனானேன்.எனது மூடநம்பிக்கைகளை கைவிட்டு விட்டேன்.இது குறித்த விவாதங்களை என் நண்பர்கள் முன்பு வைத்தேன்.நான் நாத்திகன் என விளிக்கப்பட்டேன்.ஆனால் இதன் பொருள் என்னவென்று இனி பார்க்கலாம்.

1927 மே மாதம் நான் லாகூரில் கைது செய்யப்பட்டேன்.இந்த கைது ஆச்சரியமானது.இதனை உணரவில்லை.உண்மையில் போலிஸ் தேடுவது தெரியும்.நான் ஒரு பூந்தோட்டத்தைக் கடக்கும் போது போலிஸ்காரர்களால் சுற்றி வளைக்கப் பட்டேன்.எனக்கு நானே ஆச்சரியமடையும்படி அந்த நேரத்தில் அமைதியாக இருந்தேன்.நான் எந்த உணர்ச்சியும் அடையவில்லை, அதே நேரத்தில் மகிழ்ச்சியும் அடையவில்லை.நான் போலிஸ் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டேன்.அடுத்த நாள் நான் ரெயில்வே போலிஸ் லாக் அப் கொண்டு செல்லப்பட்டு ஒரு மாதம் வைக்கப்பட்டேன்.போலிஸ் அதிகாரிகளிடம் நிறைய பேச்சு வார்த்தைக்குப் பின் நான் ககோரி கட்சியுடனும்,புரட்சிகர இயக்கத்துடனும் தொடர்பு வைத்துள்ளதாக  குற்றப்பத்திரிகை என அறிந்தேன். குற்ற விசாரனையின் போது நான் லக்னோ சென்றதாகவும்,சில திட்டங்களை வகுத்ததாகவும்,அவர்கள் அனுமதி கிடைத்தவுடன் நாங்கள் சில குண்டுகளை தயாரித்ததாகவும்,1926ம் வருட தசரா பண்டிகையின் போது மக்கள் கூட்டத்தில் இதனை பரிசோதிக்கும் முறையில் வெடிக்க வைத்ததாகவும் சொன்னார்கள்.மேலும் நான் ஆச்சரியமடையும் படி புரட்சிகர கட்சியைப் பற்றி நான் தகவல்கள் சொன்னால் அப்ரூவராக கூட நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாமல் பரிசுகளுடன் விடுதலை செய்து விடுவதாகவும் தூண்டினார்கள்.நான் இந்த திட்டத்தை நினைத்து சிரித்தேன். இது ஒரு ஏமாற்று வேலை.

எங்களைப் போன்ற இயக்க கொள்கை கொண்டவர்கள் அப்பாவி மக்கள் மீது குண்டுகள் வீசுவதில்லை.ஒரு நாள் காலை அப்போதைய உளவுத்துறை சீனியர் சூப்ரடிண்டண்ட் மிஸ்டர் நியுமன் என்னிடம் வந்தார்.மிகவும் கருணையுடனான பேச்சுக்குப் பின் அவர்கள் கேட்டபடி எந்தவிதமான ஸ்டேட்மெண்டும் தரவில்லை என்றும் வருத்தமான செய்தியாக சதி செய்ததாக என்மீது குற்ற அறிக்கை தயார் செய்வதாகவும் ககோரி வழக்கில் பயங்கர கொலை வழக்காக தசரா குண்டு வெடிப்பில் சதி செய்ததாகவும் வழக்கு தொடரப் பட்டிருப்பதாக சொன்னார்..மேலும் அவர்களிடம் குற்றம் சுமத்தி தூக்கில் போட போதுமான ஆதாரம் இருப்பதாகவும் கூறினார்.

அந்த நாட்களில் நான் அப்பாவியாக இருந்த போதிலும்,போலிஸ் தங்கள் விருப்பம் போல் செய்ய இயலும் என்பதை நம்பினேன்.அதே தினத்தில் சில போலிஸ் அதிகாரிகள் கடவுளை இரண்டு வேளையும் பிரார்த்திக்குமாறு என்னை தூண்டினார்கள்.நான் இப்பொழுது ஒரு நாத்திகன்.இப்பொழுது எனக்கு நானே மகிழ்ச்சியும்,அமைதியுமாக இருந்த காலத்தில் மட்டுமே கடவுள் மறுப்பாளனாக இருந்தேனா அல்லது மிகவும் சிக்கலான இந்த சூழலில் எனது நம்பிக்கை கொள்கைகளுடன் இருக்கிறேனா என்பதை தீர்மானிக்க வேண்டிய சூழலில் தள்ளப்பட்டேன்.மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு நான் கடவுளை நம்பவும் பிரார்த்திக்கவும் இயலாது என்பதை தீர்மானித்தேன்.நான் பிரார்த்திக்கவில்லை.இது உண்மையான பரிட்சையாகவும் இதில் நான் வென்றவனாக வெளிப்பட்டேன்.ஒரு நிமிடம் கூட எனது கொள்கையை விட்டு எனது கழுத்தை தூக்கு கயிற்றிலிருந்து தப்பிக்க விரும்பவில்லை.எனவே நான் தீவிரமான இறைமறுப்பாளன்.அது முதல் நான் அப்படியே இருந்தேன்.இது ஒன்றும் எளிதான பரிட்சையாக இருக்கவில்லை.

நம்பிக்கை துயரங்களை மென்மைபடுத்துவதோடு ஆனந்தமாக்கவும் செய்யும்.கடவுளை நம்புவன் மிகவும் தைரியசாலியாகவும் தன்னை பாதுகாக்கும் சக்தி இருப்பதாக நம்புவான்.கடவுள் நம்பிக்கையற்றவன் தன்னையே நம்பவேண்டிய சூழலில் இருப்பான்.தனது சொந்தக்காலில் நிற்பதற்கு நிறைய சூறாவளிகளையும்,புயலையும் சந்திக்கவேண்டி வரும்.இது குழந்தைகளின் விளையாட்டல்ல.இது போன்ற கணங்களில் கர்வம் என்று ஒன்று இருந்தால் மறைந்தே போய் விடும்.மனிதனால் இயற்கையான  நம்பிக்கையை மறுக்க இயலாது.அப்படி மறுத்தால் கர்வத்துக்கும் அப்பால் பலமான வலிமை அவனுக்கு இருக்கிறதென்று முடிவு செய்யலாம். இப்பொழுது இது போன்ற சூழலே.தீர்ப்பு ஏற்கனவே அறியப்பட்ட ஒன்று.இன்னும் ஒரு வாரத்தில் இது அறிவிக்கப்படும்.எனது வாழ்க்கையை மகத்தான காரணத்துக்காக அர்பணிக்கிறேன் என்ற ஆறுதலை விட வேறு என்ன இருக்க முடியும்?
கடவுளை நம்பும் இந்து மறுபிறவியில் தான் அரசனாகப் பிறக்க வேண்டும் என எதிர்பார்க்கலாம்.ஒரு கிறுஸ்தவனோ அல்லது இஸ்லாமியனோ தனது பாவங்களுக்கும்,தியாகங்களுக்கும் மேல் உலகின் வாழ்க்கை கனவு காணலாம்.ஆனால் நான் எதனை எதிர்பார்ப்பது? எனது கழுத்தை கயிறு இறுக்கும் போதும் எனது கால்களுக்கு அடியில் உள்ள கட்டை நீக்கப்படும் நேரமே எனது நிரந்தர நிமிடம் என்பதும் கடைசியான கணம் என்பதும் எனக்குத் தெரியும்.அல்லது இன்னும் குறிப்பாக  உடல்ரீதி பொருளில் சொன்னால் எனது ஆத்மா அடங்கும் கணம்.அனைத்தும் முடிவுக்கு வந்து விடும்.மேலும் ஒன்றுமில்லை.

மிகவும் பெரிய முடிவில்லாத,குறைந்த வாழ்க்கைப் போராட்டம் கொண்ட பரிசை ஏற்றுக்கொள்ளும் மனவலிமை என்னிடமிருக்கிறதென்ற கோணத்தில் இதனை எடுத்துக்கொள்கிறேன்.அவ்வளவுதான்.எந்த சுயநல குறிக்கோள், அல்லது அதற்கு பிறகு கிடைக்கும் பரிசுக்கான ஆர்வமோ இப்பொழுதும் இனிமேலும் இல்லை.எந்த சுய விருப்பமுமில்லாமல்,மாற்று வழியில்லாமல் எனது வாழ்க்கையை சுதந்திரத்திற்கு அர்பணித்துக்கொண்டேன்.அதிக எண்ணிக்கையிலான ஆண்களும்,பெண்களும் இதுமாதிரியான உளவியல் இருக்கும் நாட்களில்,மக்கள் தங்களை மனிதகுலத்திற்கு அர்பணித்துக் கொள்ளும் போது சுதந்திரத்திற்கான சகாப்தம் உருவாகும்.
 

8 comments:

Riyas said...

நிறைய விடயங்கள் சொல்லியிருக்கிறீர்கள்..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Really superb post. . .

சார்வாகன் said...

அருமையான் பதிவு
ப்கத்சிங்&கோ தூக்கு:பேரறிவாளன்&கோ தூக்கு என்ற சிந்தனை வந்தவுடன் இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை அப்போதைய ,இப்பொதைய அரசியல் சூழல் என்றே சிந்தனை விரிகிறது.பகத் சிங்கின் மன் உறுதி யாருக்கும் வராது.
நன்றி

ராஜ நடராஜன் said...

//Riyas said...

நிறைய விடயங்கள் சொல்லியிருக்கிறீர்கள்..//

ரியாஸ்!ரொம்ப கோபமாக இருக்கிறேன்.அடுத்த பதிவுக்கு வாங்க.

ராஜ நடராஜன் said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

Really superb post. . .//

முந்தைய பின்னூட்டத்தில் ரியாஸ்க்கு சொன்னதுதான் உங்களுக்கும்:(

ராஜ நடராஜன் said...

//சார்வாகன் said...

அருமையான் பதிவு
ப்கத்சிங்&கோ தூக்கு:பேரறிவாளன்&கோ தூக்கு என்ற சிந்தனை வந்தவுடன் இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை அப்போதைய ,இப்பொதைய அரசியல் சூழல் என்றே சிந்தனை விரிகிறது.பகத் சிங்கின் மன் உறுதி யாருக்கும் வராது.
நன்றி//

நீங்க பதிவின் பின்புலத்தை சரியாக கண்டு பிடித்துவிட்டீர்கள்.நிறைய சொல்லனும்ன்னு நினைத்தேன்.அடுத்த பதிவு காரணமாக எதுவும் சொல்ல இயலவில்லை.

திலிப் நாராயணன் said...

//இன்றைய இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்படி பாகிஸ்தானியனான பகத்சிங் இந்தியனாகப் போற்றப்படுவது வரலாற்றின் முரண்//. லாகூரில் பிறந்த லால் கிஷன் அத்வானி அடுத்த பிரதமராக அறிவிக்கப்பட்டதும் டெல்லியில் பிறந்த பர்வீஸ் முஷாரப் ஒரு குறிப்பிட்ட காலம் பாகிஸ்தானை அரசாட்சி செய்ததும் கூட வரலாற்று முரண்தான். சுதந்திரம் 1947 பகத்சிங் மடிந்தது 1931 அப்போதைய ஒன்று பட்ட இந்தியாவில்.

ராஜ நடராஜன் said...

//திலிப் நாராயணன் said...

//இன்றைய இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்படி பாகிஸ்தானியனான பகத்சிங் இந்தியனாகப் போற்றப்படுவது வரலாற்றின் முரண்//. லாகூரில் பிறந்த லால் கிஷன் அத்வானி அடுத்த பிரதமராக அறிவிக்கப்பட்டதும் டெல்லியில் பிறந்த பர்வீஸ் முஷாரப் ஒரு குறிப்பிட்ட காலம் பாகிஸ்தானை அரசாட்சி செய்ததும் கூட வரலாற்று முரண்தான். சுதந்திரம் 1947 பகத்சிங் மடிந்தது 1931 அப்போதைய ஒன்று பட்ட இந்தியாவில்.//

Oh!it's a lovely reminder!

இதுல முக்கியமான ஒன்று என்னவென்றால் பாகிஸ்தானிய அதவானி இந்தியாவுக்கு தீவிர விசுவாசி.இந்திய முஷ்ரஃப் பாகிஸ்தானிய ராணுவ அடியாள்.பகத்சிங்கின் போராட்டமே இந்திய பாகிஸ்தான் பிரிவினையால் கேள்விக்குறியாகிறது.இதன் அடிநாதமாக ஒளிந்திருப்பது மதம்.பகத்சிங் மறுத்ததும் அதுவே.

உங்கள் நினைவூட்டப் பின்னூட்டத்திற்கு நன்றி.