Followers

Sunday, July 27, 2008

அகமதாபாத்தின் முந்தைய பக்கம்.



வழக்கம்போலவே நாமும் நமது கோபங்களை பதிவு செய்து விட்டு வாழ்க்கையினை எதிர்கொள்ளப் போய்விடுவோம்.அரசின் அங்கங்களும் டிடெக்டர் எனப்படும் கருவிகளையும் குண்டுவெடிப்புக்களை கண்டு பிடிக்கும் நாய்களின் உதவி கொண்டு ஏதாவது நூல்சிக்கல்களை அவிழ்க்க இயலுகிறதா என்றும் பார்த்துவிட்டு அதற்குள் புதியதாக வரும் சற்றுமுன் செய்திகளின் பின் ஓடி விடுவார்கள்.அதற்குள் மக்களும் முந்தைய சம்பவங்களை மறந்து விட்டிருப்பார்கள்.

முந்தய சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர் புதியதாக தீவிரவாதத்துக்கு உரம்போடவோ அல்லது இந்தமாதிரி தீவிரவாதம் நிகழ்வது தப்பே இல்லை என்ற எண்ணத்தில் தங்கள் கண்முன் ஏதாவது சமூக அநியாயங்கள் நிகழ்ந்தாலும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்கள். ஆனால் எதற்குமே சம்பந்தப்படாமல் பிரச்சினை நடக்கும் பகுதியில் வாழும் ஒரே குற்றத்துக்காக அவர்களின் எதிர்காலம்,அன்பு,உறவு எப்படி மாறிவிடுகிறது என்பதையும் மக்கள் அனைவரும் நுனிமூக்கு கோபத்தில் இருக்கும் இந்த நேரத்தில் மனிதநேயம் என்னவென்பதை சாட்சிப்படுத்துகிறது இந்தப் பதிவு.

அகமதாபாத்தின் தற்போதைய குண்டுவெடிப்பு இரண்டாவது அத்தியாயமாக அங்கு வாழும் மக்களுக்கு ஆகிவிட்ட இந்த சமயத்தில் ஆறு வருடங்களுக்கு முந்தைய இனக்கலவரங்களில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் முகமது சலீம் சேக் என்பவரும் அவருடைய மனைவி ஜெபுன்னிசா என்ற தாயும் தங்களது மகன் முசாபர் என்ற சிறுவனை கலவர வேகத்தில் கண்டுபிடிக்க முடியாமல் தனிமைப் படுத்தப்பட்டார்கள்.

இரண்டே வயதுடைய சிறுவன் தெருவில் சுற்றுவதைப் பார்த்த மீனா பட்னி என்ற தாய் முசாபரை விவேக் பட்னி என்ற பெயர் சூட்டலுடன் தனது மகனாக்கிக் கொண்டார்.தனது மகனைக் கண்டு பிடித்த முகமது சலீம்,ஜெபுன்னிசா தங்கள் மகனை தங்களிடம் ஒப்படைக்கவேண்டுமெனக் கூறவும் ஆறு வருடங்களில் தனது மகனாகிப்போன விவேக் பட்னி யை பிரிய மனமில்லாமல் மீனா பட்னி மறுத்துவிட்டார்.பிரச்சினை நீதிமன்றம் சென்றது.

தற்போது ஒன்பது வயதில் நிற்கும் முசாபர் விவேக் பட்னி தான் மீனா பட்னியுடன் வாழ விரும்புவதாகச் சொன்ன வார்த்தைகளின் அடிப்படையில் அகமதாபாத்தின் நீதிமன்றம் விவேக் பட்னி மீனா பட்னி க்குச்சொந்தம் என்று தீர்ப்பளித்தது.


பையன் அழகாக துருதுருன்னு இருக்கிறான்.யாருக்குத்தான் விட்டுப்பிரிய மனசுவரும்?

Saturday, July 26, 2008

உண்மையிலே மெய்சிலிர்ப்பு

நேற்றைய காலை சோகத்துக்கும் மாலை அனுபவத்துக்கும் பின்னாடி இரவு நம்பிக்கை தரும்போல் இருந்தது தொலைகாட்சி நிகழ்வு.

பொதுவாக ஒரு விழாவில் கலந்துகொள்ளும் வி.ஐ.பி க்கள் பாதுகாப்பு கருதியும், தங்களது தரத்தினை மனதில் கொண்டும் மேடைக்கு அருகிலுள்ள பக்கக் கதவுகளிலிருந்து வெளிப்படுவார்கள்.

ஆனால் கண்ணுக்கு மாற்றமாக அரங்கின் கடைசிக்கோட்டிலிருந்து வெளிப்பட்டு மெல்ல மெல்லப் பள்ளி மாணவர்களின் முகங்களையே நோக்கிக்கொண்டு இரண்டு வரிசைக்கு இடைவெளியாக ஒரு மாணவ,மாணவிக்கு கரம் கொடுத்து குசலம் விசாரித்துக்கொண்டே வந்தார்.

இறுதியாக அவரதுப் பேச்சின் சில வார்த்தைத் தொகுப்புகளுடன் தொலைக்காட்சியின் காமிரா வேறு கோணத்திற்கு மாறுகிறது.ஒரு மெல்லிய புன்முறுவலுடன் அவருக்கே உரித்தான முடி அலங்காரத்தின் முடிக்கற்று நெற்றியில் விழ அவர் இந்தியாவைக் காப்போம்,தன்னம்பிக்கை கொள்வோம் போன்ற சில வார்த்தை மந்திரங்களை உச்சரிக்க தொடர்ந்து பள்ளிக்கூட மாணவ மாணவியர்கள் எழுப்பிய கோஷம் இருக்கிறதே மெய்சிலிர்ப்பு என்ன என்பதை அந்தக்கணத்தில் உணர்ந்தேன்.

இன்னும் சில வருடங்களுக்கு ஜனாதிபதி சிம்மாசனத்தில் டாக்டர் அப்துல்கலாமை உட்கார வைத்துக் கவுரவப்படுத்தியிருக்கலாம்.கலைஞர் தொலைக்காட்சியில் படம் " அரண் " முடிந்து நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் மறக்கமுடியுமா? துவங்கி விட்டது.வருகிறேன்.

பெங்களூர் குண்டு வெடிப்பு

நேற்று காலை சுகமாக இல்லை.காரணம் பெங்களூர் குண்டுவெடிப்புச் சம்பவம்.பெங்களூரில் இந்த மாதிரி சம்பவம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் முன்பே நிகழ்ந்துள்ளது.கல்வி நிறுவனங்களையெல்லாம் முன்பே அவர்களது குண்டு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.நாம் கொஞ்ச நாட்கள் பரபரப்பாகி மீண்டும் வழக்கம்போல் அடங்கிவிட்டாயிற்று.சமூக துரோகிகள் ஸ்லீப்பிங் செல்லிலிருந்து திட்டமிட்டு வெளியே வந்து விட்டார்கள்.வெளிநாட்டுச் சதித்திட்டம் என்று உடனே செய்தி அறிக்கை விடுவதில் நாம் தாமதமே கொள்வதில்லை.தன்னையும் மண்ணையும் மதிக்காத துரோகிகளின உதவிக்கரம் இல்லாமல் எதுவுமே சாத்தியமில்லை.

அரசியல்வாதிகளுக்கு தானே செய்துவிட்டும் கூட எதிர்க்கட்சி மேலோ பக்கத்து நாடு மேலோ பழிபோடும் அணுகூலம்.


மத்திய கிழக்கு நாடுகளின் சமூகம் சார்ந்த குறைகளை மட்டுமே பெரிதுபடுத்தும் நாம் சட்டத்தின் வேகம் எந்த அளவுக்குப் பாயும் என்பதை அறிவதில்லை. அரசக்குடும்பத்தைச் சார்ந்த இளைய தலைமுறையைச் சார்ந்தவர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியும் அதனை காரோட்டியின் உதவியுடன் வினியோகிக்கவும் முற்பட்டு உள்துறையின் இரும்புக்கரங்களால் சிறைக்குள்ளே தள்ளப்பட்டார்.பின் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் தூக்குத்தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்.நிகழ்வின் துவக்கமும் தீர்ப்பின் காலமும் சுமார் ஒரு வருடம்.

இன்னொருக்குற்றத்தில் பொதுமக்களின் பார்வைக்கு படும்படியாக மூன்று பேர் தூக்குமேடைக்கு காலை நேரத்தில் கொண்டுவரப்பட்டார்கள்.தெரு முழுதும் கூட்டம்.தண்டனை நடக்குமிடத்துக்கு நடந்துபோய்விடும் தூரம். மனிதனை மனிதன் தூக்கிலிடுவதைப் பார்க்கும் கோரநிகழ்ச்சியைக் காணப்பிடிக்காத இந்திய மனோபாவத்தால் நான் பார்க்கவில்லை.

காமிரா அனுபவம்

நண்பர் ஒருவர் மூலமாக காமிராவும் காமிரா உபகரணங்களும் ஒருவரிடம் உள்ளது என்று கேள்விப்பட்டு அவரை சந்திப்பதற்காக ஒரு வாரம் போன்முயற்சி செய்து நேற்று மீண்டும் அவரது நேரடித் தொடர்பு கிட்டியது.

நானோ சுதந்திரமாக ஒருத்தரை சந்திக்க நினைத்தமாத்திரத்தில் கால அவகாசத்துக்குத் தகுந்த மாதிரி அனுசரித்து சந்திக்கும் பழக்கம் உடையவன்.அவரோ நேரம் தவறாமையினை வாழ்நாள் கடமையாகக் கொண்டவர் என்பது அவரது தொலைபேசி மூலமான நேரம் குறிப்பில் தெரிய வந்தது.

நேற்று வெள்ளிக்கிழமை சரியாக மாலை 6.00 மணிக்கு இருவரும் சந்திப்பதாகக் கூறி என்னை அவர் தங்குமிடத்திற்குப் பக்கத்தில் வந்து விடுமாறு சொன்னார்.நானும் நகரின் தெருக்களையெல்லாம் பெரும்பாலும் அறிந்து வைத்திருக்கும் திமிரில் 4 வீலர் கிராண்ட் செருக்கியை முடுக்கிக் கொண்டு அவர் சொன்ன இடத்துக்குப் போனேன்.வாகனப் பாதையின் ரவுண்ட் அபவுட் எனும் ஒரு சுற்று வட்டின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி விட்டு அவர் சொன்னபடியே யாரும் நிற்காத வட்டத்துக்குள் நமது ஊர் கான்ஸ்டபிள் போலிஸ் மாதிரி அவருக்காக காத்திருந்தேன்.

வந்தவர் சுமார் 60 வயதுக்கும் மேலானவர்.கண்ணாடி அணிந்திருந்தார். இருவரும் கைகுழுக்கிய சம்பிராதயத்துக்குபின் என்னை அழைத்துக்கொண்டு ஒரு புராதனமான பாழடையும் நிலையிலுள்ள பழையதோர் கட்டிடத்துக்கு அழைத்துச் சென்றார். கட்டிடத்தின் கீழ்ப் பகுதியில் நேரே வாசலுக்கு இடது புறமான ஒரு கதவைத் திறந்தார்.திறந்த கதவின் உள்ளே நுழைந்ததும் ஒரு வித்தியாசமான இடத்துக்கு வந்த உணர்வு ஏற்பட்டது.காரணம் பழைய கட்டிடமும் அதற்கேற்றார் போன்றே நெரிசலான முன் அறையின் பொருட்களின் ஆக்கிரமிப்பும்.முன்னறைக்குப் பதிலாக நேரே படிப்பு படுக்கையென இருநிலை கொண்ட அறைக்கு அழைத்துச் சென்றார்.

ஆல்ஃப்ரட் ஹிட்சாக் மற்றும் ஆங்கில திகில் படத்துக்கு இணையாகவும் நமது திரைப்படத்துறையைச் சார்ந்தவர்கள் எந்தவித செட் எனப்படும் அமைப்புகளுக்கு தேவையில்லாமல் காமிராக் கோணம் அமைக்கவும் உகந்த இடம்.கதவுக்குப் பக்கத்தில் ஒரு யமாஹாப் பியானோ,இன்னும் காமிராவையும் கண்ணையும் நகர்த்திக் கொண்டு வந்தால் சின்னச் சின்ன அறைகள் கொண்ட அடுக்கில் புத்தகங்களும் காகிதங்களும்.இன்னும் கண்ணை நகர்த்தினால் ஒரு இரும்பினாலான மேசை இரு அடுக்குகள் கொண்டது.மேல் அடுக்கில் ஒரு சில புத்தகங்களும்,கீழ்த் தட்டில் தூசு தட்டாமல் நிக்கான் FG எழுத்துக்களுடன் காமிராவும் அதன் பக்கத்தில் லென்ஸ் ஒன்றும் அதன் முகமூடியும் அதையும் ஒட்டி ஒரு பொலராய்ட் காமிராவும் அடுத்து மமியா C220 எனும் நெற்றிப்பொட்டுடன் இன்னொரு காமிராவும் இன்னும் பொருட்கள் உள்ளே ஒளிந்து எட்டிப்பார்த்துக்கொண்டுள்ளது.இதன் அருகில் எனக்கு அவர் இருக்கை தந்தார்.



வழக்கமாக இருவர் சந்திக்கும்போது உள்ள லதானந் சித்தர் கூறுவது மாதிரியான break the ice சங்கடங்களை நான் நேர் கொள்வதில்லை.ஒன்று எதிரில் இருப்பவரை அவர் பேச்சைத் துவக்கட்டுமென அவரது கண்களை உற்று நோக்குவது மனுசன் சங்கோஜப் பேர்வழி மாதிரி தெரிந்தால் ஸ்டார்ட் மீசுக் சொல்வதுதான் எனது வழக்கம்.ஆனால் எனக்கு அந்த சந்தர்ப்பத்தை அவர் தராமல் அவரே உரையாடலைத் துவங்கினார்.

பேச்சு துவக்கமாக ஒரு நாள் இடது கண் எதை நோக்கினாலும் சிவப்புக் கலரில் தெரிந்ததாகவும் அதனால் அவரது இடது கண் கார்டியாக் அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு இரண்டு வருடங்களுக்கும் மேலாகிப் போனதாகக் கூறினார்.இரவு நேரங்களில் வெளியே போக வேண்டுமென்றால் தெரு விளக்குகளுடன் டார்ச் விளக்கின் ஒளியும் கூடுதலாகத் தேவைப்படுகிறதென்றார்.

இங்கே மருத்துவர்கள் சரியில்லையென்றும் இந்திய மருத்துவரே அறுவை சிகிச்சை செய்தும் பலனில்லை என்றார்.தான் கிறுஸ்துவ வழிமுறை வாழ்ந்ததாலேயே அறுவை சிகிச்சை செய்த 10 நாட்களுக்குள் பார்வை கிட்டியதாகவும் சொன்னார்.தற்போது யாரும் இறப்புக்குப் பின் கடவுளுக்குப்பதில் சொல்லவேண்டிய பயமில்லாமல் வாழ்வதாகவும் சொன்னார்.

மண்ணின் மைந்தர்களைப் பற்றி விமர்சனம் செய்தார்.நான் இங்கும் வாழ்வியலை மதம் சார்ந்த ஒழுங்கியலோடு வாழ்பவர்கள் உள்ளார்கள் என்றேன்.தனக்கு அப்படிப் படவில்லை என்றும் மேலும் எனக்குப் பேசுவதற்கு எந்தப் பங்களிப்புமில்லாமல் கிறுஸ்தவ மதத்தின் பழைய ஏற்பாட்டிலிருந்து துவங்கி அப்போதைய காலத்தில் நிகழ்ந்த எகிப்திய மன்னர்களின் வானம் முட்டும் வரை கட்டத்துவங்கிய பேபில் கட்டிடத்தையும்,உருவ வழிபாடுகளையும் கண்ட கடவுள் அவர்கள் வழிதவறி நடக்கிறார்கள் என்றும் அதனால் தனது பெயரைப் போற்றுபவர்களாக புதிய மனிதர்களையும் நாட்டையும் உருவாக்குவேன் என்று அங்கு அடிமைகளாக வாழ்ந்து வந்த இஸ்ரேலியர்களை புதியதோர் இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்றார்.

அவரது பழைய ஏற்பாட்டின் பேச்சு கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கு நீண்டது.இவர் எப்பொழுது காமிரா விசயத்திற்கு வருவார் என மனதுக்குள் நினைத்துக்கொண்டு அவரது இன்னொரு அலமாரியின் புத்தகங்களைப் பார்வையிடுகிறேன்.ஒரு ஆங்கில டிக்சனரியும்,ஆங்கில தெலுங்கு மொழிபெயர்ப்பும் தவிர பெரும்பாலோனவைகள் பைபிள் புத்தகங்கள் என்று தோற்றம் தரும் கருப்புக் கலர் முகம் கொண்ட புத்தகங்கள்.எனது பார்வை பைபிளில் சென்றதும் பல மொழி பைபிள்களை ஒவ்வொன்றாய் சோதித்து விட்டு தான் கனடா,லண்டன்,இஸ்ரேல்,சிரியா,எகிப்து,லெபனான்,பாலஸ்தீனம் போன்ற நாடுகளைச் சுற்றி வந்துள்ளதாகவும் பின் என்னிடம் தமிழ் பைபிள் ஒன்றை நீட்டினார்.நான் வலது கையில் வாங்கி விட்டு இடது கையில் மேசை மேல் வைத்தேன்.அவர் இறைவன் என்னை ஆட்கொள்ளவில்லையென்றும் அதற்கான தருணம் வரும் சமயத்தில் மாத்திரமே நான் பைபிளைத் திறப்பேன் என்றும் சொன்னார்.

நான் மனதிற்குள் சிரித்துக்கொண்டு அவரிடம் சொன்னேன்.இந்துவாகப் பிறந்து,அரசினர் பள்ளியிலும் பின் கிறுஸ்தவப் பள்ளியிலும் படித்து இப்போதைக்கு ஒரு இஸ்லாமிய நாட்டில் வாழும் நான் மத எல்லைகளைக் கடக்கும் மனப்பக்குவம் வந்து விட்டதால் எந்த மதத்தையும் வெறுப்பதுமில்லை அணப்பதுமில்லையென்றேன்.நான் இங்கு வந்ததே உங்களிடம் காமிரா பற்றிப் பேசத்தான் என்றேன்.

அவர் மேசையினுள்ளே கையை விட்டு 35MM பிலிம்காமிரா ஒன்றையும் அதனுடன் ஒட்டிய பிளாஷ் இணைப்பையும் காட்டினார்.காமிரா பெயர் நிக்கான் F3, பிளாஷ் பேனாசோனிக்.தன் வாழ்வின் பெரும்பங்காக இந்த காமிராக்களும் இசையும்தான் பொருளாதார ஆதாரம் என்றார்.ஒரு மணி நேரத்துக்கு KD 5/= (சுமார் ரூ750)இசைக் கற்றுக்கொடுக்க பணம் வாங்குவதாகக் கூறினார்.என்கையில் நிக்கான் F3 யைக் கொடுத்துவிட்டு தன்னிடம் இன்னுமொரு நிக்காமேட்டிக் காமிரா இருப்பதாகவும் சொன்னார்.என்னடா மனுசன் நிக்கான் FG,பொலராய்ட்,மமியா,நிக்காமேட்டிக்ன்னு இத்தனைக் காமிராவை வைத்திருக்கிறாரே என்று பார்வையை சுவர்ப்பக்கம் திருப்புகிறேன்.

சுவற்றில் சின்ன வெள்ளைப் பலகையில் பைபிளின் வாசகம் ஏதோ ஆந்திர மொழியில் எழுதி வைத்துள்ளார்.அதற்கும் கீழே யமாஹா கீ போர்டு.அதற்கும் அடுத்து பேனாசோனிக் டெக்னிக்ஸ் என்ற பெரிய கீ போர்டு.எல்லாமே விற்பதாகக் கூறினார்.பரணில் கிடக்கும் வீடியோ லைட்டை எடுத்தார். அதே மாதிரி இன்னொன்று இருப்பதாகவும் அந்த ஜெர்மன் மாடல் தற்போது தயாராவதில்லையென்றும் சொன்னார்.சீனாவின் சந்தை ஆக்கிரமிக்குப் பின் மற்ற நாட்டின் பெயர்ப்பலகைகளைக் காண்பது ரொம்ப அபூர்வம்.எனவே அவர் சொல்வது சரியெனப்பட்டது.

பின் வரலாறாகிப்போன பழைய தட்டச்சு மெசினைக் காட்டினார்.இத்தனைக்கும் நடுவில் அறையை அதிகமாக ஆக்கிரமிப்பது காகிதக் கட்டுகளும் பிளாஸ்டிக் பைகளில் மூடி மூடி வைத்திருக்கும் எனக்குத் தெரியாதப் பொருட்கள். முன்பு கடந்து வந்த வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றார். வெளி ஹாலுக்குச் சென்று ஒரு நீண்ட ஏணியைக் கொண்டு வந்து பரண்மேல் ஏறினார்.அங்கேயிருந்து ஒரு பிளாஸ்டிக் பையை ஏணியிலிருந்தவாறே என்னிடம் கொடுத்துவிட்டுக் கீழே இறங்கினார்.

கீழே வந்து வெளிநாட்டில் புகைப்படமே கதியாகக் கிடக்கும் புகைப்படக்கலைஞர்கள் உபயோகப் படுத்தும் டோம் என்று சொல்லப்படும் போட்டோ ஸ்டியோவில் உபயோகப்படுத்தும் ரிஃப்ளக்டர் எனப்படும் விளக்குச் சாதனங்கள்.தயாரிப்பு பிரிட்டன்.அதன் விலை இந்திய மதிப்பில் சுமார் அறுபதாயிரம் முதல் எழுபதாயிரம் வரை தேறும்.சின்ன டிஷ் ஆண்ட்டனா மாதிரியான அதன் பின்பாகம் இரண்டு பெரிய பெட்டிகளில் பரண்மீது தூங்குவதைக் காண்பித்தார்.

அப்பொழுதுதான் கவனித்தேன்.அவர் நிறுத்திய ஏணிக்கு அப்பால் தொலக்காட்சிப் பெட்டி இருந்தது.அதன் பக்கத்தில் VHS காலத்து வீடியோக் காமிரா ஒன்று பேனாசோனிக் M3000 முத்திரையுடன்.நான் அவரிடம் இப்பொழுது எல்லாமே கணினி மயமாகவும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறி விட்டதாலும் இந்த மாதிரிப் பொருட்களை இபே பொன்ற தளங்களில் குறைந்த விலையில் வாங்கிவிடலாமென்றும் மனுசனை மூளைச்சலவை செய்ய ஆரம்பித்தேன்.அவரோ அசருகிறப் பாட்டைக் காணோம்.

எனது கண்ணும் மனக்கணக்கும் எப்படியாவது அவரிடம் ஒரு காமிராவையும் விடியோ மற்றும் காமிரா விளக்கையும் வாங்கி வந்து சி.வி.ஆரிடம் ஒரு நல்ல பெயர் வாங்கிவிடவேண்டுமென்பது:) ஆனால் பெருசு ஒன்றும் விலை அசைக்கிறப் பாட்டைக்காணோம்.தொட்டதுக்கெல்லாம் சும்மா குத்து மதிப்பா ஐம்பதியாயிரம் கணக்கு சொல்கிறார்.

அப்புறம் இவ்வளவு நேர உரையாடலில் அவரது பேச்சின் பங்கே பெரும்பான்மையாக இருந்தாலும் நான் களைப்படைந்ததாக நினைத்து சமையல்க் கட்டுக்கு அழைத்துச் சென்றார்.பெண் இல்லாத வீடும் சமையல்க் கட்டும் எப்படி இருக்கும் என்பதற்கான சாட்சியாக சமையல்க் கட்டு.எல்லாமே ஒரு நேர்த்தியுடன் தான் பொருட்கள் இருக்குது.ஆனாலும் அந்தப் பெண்ணியப்பாங்கும் அழகுணர்ச்சியும் இல்லாமல் போனது.

உள்ளே போனதும் அவரது குளிர்சாதனப் பிரிட்ஜை திறந்தார்.உள்ளே வரிசையாக மூன்று தளங்களில் சின்னச்சின்ன பிளாஸ்டிக் வெள்ளை டப்பாக்கள்.அவையெல்லாம் தனது 3 மாதமாதத்திற்கான (கவனிக்கவும் மூன்று மாதம்)

சமைத்துக் குளிர்பதனப்பட்ட காலிபிளவர்,காரட்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு,பீட்ரூட் போன்ற காய்றிகளின் கலவை மற்றும் எண்ணையிடப் படாத உப்புமாவும்.இந்தச் சின்னச்சின்ன டப்பா உணவுகளுடன் பக்கத்து வீட்டு அமீரகத்துக்காரர்களுக்கு நன்கு பழக்கப்பட்டுப் போன கோதுமை குப்புஸும்தான் அவரது உணவு.மனுசன் மூன்று மாதத்திற்கும் ஒரே முறையாக சமைத்து வைத்துக்கொள்கிறாராம். இருபது வருடங்களுக்கு முன் கனடாவில் இரண்டு வருடம் இருந்து கற்றுக்கொண்ட பழக்கதோசம் இதுவரை விடவில்லையாம்.அந்தப் பாழடைந்த கட்டிடத்திலேயே பதினெட்டு வருருச்த்துக்கும் மேலாக வாழ்கிறாராம்.அதே காரணத்தினாலும் அந்த பழைய கட்டிடம் காரணம் கொண்டும் துவக்கத்தில் கட்டிய வீட்டு வாடகை சுமார் 15000 இன்னும் தொடர்கிறதாம்.என்கிட்டேயெல்லாம் இரட்டிப்பாக 30000க்கும் மேல் பிடிங்கிக்கொள்கிறார்கள்:)

இவ்வளவு நேரம் தட்டச்சு செய்ததை கையில் விடியோக் காமிராக் கொண்டு போய் இருந்தால் நிகழ்வுகளை முக்கியமாக அந்த ஆல்ஃபிரட் ஹிட்சாக்கின் அறையின் சூழலை படம் பிடித்து வந்திருக்கலாம்.முதல் சந்திப்பு என்பதாலும்,அப்படிப் பட்ட சந்திப்பில் காமிராக் கண்ணனாயிருப்பது இயலாத காரணத்தாலும் முடியவில்லை.இல்லையென்றால் பிரேம்ஜி,சின்னக்குட்டி ஸ்டைல்ல படம் பாருங்க சொல்லி சின்னக்குறிப்புகள் கொடுத்து பதிவின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

மீண்டும் ஒரு முறை சந்திப்பதாக வந்துள்ளேன். ஏதாவது இசை ஆர்வம் உள்ளவர்களை (குழந்தைகள் உட்பட) அவருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலும் முக்கியமாக அவரிடமிருந்து காசு கொடுத்து காமிரா உபகரணங்களை சுட்டுக்கொண்டு வர முடியுமா என்ற நல்ல எண்ணத்திலும்:)

டிஸ்கி: 25 வருடமாக அவர் இந்தியா செல்லாததற்கு நான் பொறுப்பல்ல.

Friday, July 25, 2008

வாழ்வியலும் மொழியும்

நடந்து முடிந்த பாராளுமன்ற வாக்கெடுப்பில் எப்படியாவது ஜெயிக்க வேண்டுமென்று ஐக்கிய தேசிய முன்னேற்றுக் கட்சியும் எதிர்க்கட்சிகளும் செய்த கூத்துக்கள்,சேட்டைகள் போலவே எனது முந்தைய பதிவில் எப்படியாவது சதம் அடித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு கும்மிப்பதிவர்கள் கும்மு,கும்முன்னு கும்மி விட்டார்கள்.

தமிழ் சினிமாவுக்குன்னு ஒரு இலக்கணம் இருக்கின்றது.ஒரு படம் கதாபாத்திரத்தின் காரணமாக வெற்றி பெற்று விட்டால் அந்த கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அல்லது நடிகருக்கு அதே மாதிரியான ஒரு முத்திரையை தயாரித்து விடுவார்கள்.அந்த மாதிரி நடிகர் நடிகைகளை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.

அப்படி ஒரு முத்திரையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் சிவாஜி கணேசன்,கமல் மாதிரி வித்தியாசமான பாத்திரங்களை ஏற்க வேண்டும்.நான் அந்த மாதிரி நடிப்பில் மெழுகா உருகிப்போய் விட்டு அந்த பாலபாடங்களையெல்லாம் மறந்து விட்டால் என்னையும் கும்மிப்பதிவன் என்ற முத்திரை குத்தி விடுவார்கள் என்ற ஞானோதயத்தில் உருவான பதிவு இது.

தற்போது தமிழில் புகைப்படம் பதிவர் வட்டத்தில் சேர்ந்த பின் தெரிந்து கொண்ட விசய ஞானம் படங்களை எடுத்து சிறிது மெருகேற்றியதும் போட்டிக்கான கற்பனைகளுடன் பதிவிரக்கம் செய்து விடுகிறோம். ஆனால் எடுத்த படத்துக்கும் அப்பால் படங்களுக்கு மெருகூற்றுவது ,அந்தப் படங்களை எப்படிப் பேசவைப்பது ( பதிவுகளில் எதச்சொன்னாலும் மக்கள் நம்புறாங்கப்பாங்கிற வெட்டிப்பயலின் வாசகம் வருவதால் பேசுவது) என்பது அனிமேசன் எனக்கூறப்படும் படங்களின் நகர்வு, மேலும் குறுந்தகடுகளாவதற்கு முந்தைய எடிட்டிங் எனக்கூறப்படும் தணிக்கை இறுதியில் குறுந்தகடுகளாக மாற்றுவது எப்படி போன்ற தொழில் நுட்பங்கள் ஒழிந்து கிடக்கின்றன. பிரேம்ஜி போன்ற வித்வான்கள் இந்த நுட்பங்களை பகிர்ந்து கொண்டால் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும்.

அடுத்து கும்மிகள் - இருக்கும் மன அழுத்தங்களை குறைக்க உதவினாலும் பெரும்பாலான பதிவுகளும் பின்னூட்டங்களும் அந்த வட்டத்துக்குள்ளேயே சுற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை.பகிர்தல் என்ற கோட்பாட்டில் தமிழையும், அதற்கு உதவும் தமிழ்மணத்தையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும்.முக்கியமாக இதன் தாக்கம் இன்னும் விரிவடைய வேண்டும். ஆறுகோடித்தமிழர்களில் எத்தனை பேருக்கு பதிவுகளின் தாக்கம் சென்றடைகிறதென்று தெரியவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் ஐ.நாவின் அறிக்கை : தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற வரிகளை ஊக்கப்படுத்தும் படி இன்னும் 100 ஆண்டுகளில் அழிந்துபோகும் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கும் என்பது.எனக்கும் கூட பொதுப்புத்தி அறிவில் அது சரியாகத்தான் இருக்கும் எனப்பட்டது. அந்தக்கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக வாழ்வைத் தேடிப்போன இடத்தில் மொழி மறந்து போன சான்றாய் இன்றும் மொரிஷியஸ்,ஆப்பிரிக்கா,அய்ரோப்பா நாடுகளில் வாழும் சந்ததியினர் கூடவே சமீபத்து கென் பதிவில் ஒட்டவைத்த சாருவின் எழுத்துக்கள் போன்றவை இதனை உறுதி செய்தது.ஆனால் தமிழ்மணம் போன்ற அசாத்திய திரட்டிகளும் பதிவர்களின் ஆக்கபூர்வமான உழைப்பும் அந்தக் கூற்று தோற்றுப் போய்விடும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றன.


ஒளி ஊடகங்கள் மக்களின் ரசனைகளை மென்மைப்படுத்தியிருக்கலாம்.கமல்கூட சின்னத்திரைகள் திரைப்படத்தைச் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் என நினைத்தார்.ஆனால் திரைப்படம் சின்னத்திரையின் பலங்களை அழித்து தமிழ்வாழ்வின் பல அங்கங்களைச் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குள் வந்து சிம்மாசனம் போட்டுக்கொண்டது. இதனூடே சின்னத்திரைகள் நமது வாழ்வைப் பிரதிபலிக்கின்றனவா அல்லது அதனது லயத்திற்கு நம்மை இட்டுச்செல்கின்றனவா எனத்தெரியவில்லை.காரணம் சின்னத்திரையின் தாக்கம் இன்று நம்மிடம் அதிகமாகவே உள்ளது.தொகுப்பாளர்களும் தொகுப்பாளினிகளும் பேசும் முறைகள் நம்முடைய மொழி பேசும் முறையை ஏளனம் செய்கிறது.

இரண்டு சகாப்தங்களையும் கடந்தும் ஈழத்துப்பிரச்சினை முடிந்தபாடில்லை.அதற்கான நமது தார்மீக உணர்வுகளையும் எழுத்துக்களாய் நாம் வெளிப்படுத்த வேண்டும்.உணர்ச்சிகளுக்கும் மேலாய் மனிதம் வெளிப்படவேண்டும்.விடியலுக்குக் காத்திருப்போம்.

Thursday, July 24, 2008

தமிழ்மணத்துக்கு இரு வேண்டுகோட்கள்

தருமி அய்யா சொல்லியும் கேட்காம நான் ஞாபகப்படுத்தியும் கேட்காம ச்சின்னப் பையன் நான் கூட "ப்" போடறேனாக்கும் போட்டுக்கோ தப்பேயில்ல போடாம இருந்தாத்தான் தப்புன்னு சொல்லியும் கேட்காம தமிழ்ப்பிரியன் இன்னும் தமிழ் பிரியன் என்று பதிவிடுவதாலும் உப்பு சேர்க்காட்டியும் பரவாயில்ல உடம்புக்கு நல்லதுதான் ஆனா "ப்" சேர்க்காட்டி தமிழுக்கும் பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணத்துக்கும் அழகல்ல என்பதினாலும் அவர் "ப்" சேர்க்கும் வரை பதினெட்டுப்பட்டி பதிவு கிராமத்திலிருந்து அவரை தற்காலிகமாக தள்ளி வைக்கவோ அல்லது அவரது பதிவு ஏதாவது ஒரு மூலையில் தெரியும்படி செய்யுமாறும் பணிவன்புடன் பிராது அனுப்புகிறேன்.

இரண்டாவதாக நேற்று சி.வி.ஆருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லலாமென்று குவைத் நேரப்படி இரவு 12.30 மணிக்கு பெட்டியத் திறந்து வச்சிகிட்டு படம் போட்டுகிட்டு இருந்த போதுதான் தெரியுது அமெரிக்க பதிவு மக்களும் நியுசி துளசி மேடமும் அந்த நேரங்களில்தான் பட்டையக் கிளப்பி பதிவு ஆட்டங்களை அடிச்சு ஆடிகிட்டு இருக்காங்கன்னு.அந்த நேரத்தில் பதிவிடுவதென்பது இயலாத ஒன்று. நான் தூங்கும் நேரமோ இரவு 11.30 மணி.அந்த நேரத்தில் இந்திய மக்கள் எல்லாம் 2.00 மணிக்கு மோன நிலையில் கனவு கண்டு கொண்டுள்ளார்கள்.

காலையில் நான் பெட்டியக்கட்டி தயாராகி அலுவலுக்கு வந்து அலுவல்களையும் பார்த்துவிட்டு அங்கே இங்கென்னு சில பின்னூட்டங்களையும் போட்டு விட்டு பதிவிடலாமுன்னு பார்த்தா அந்த நேரம் பார்த்து இந்தியப் பதிவர்கள் சாப்பாட்டு மூட்டைகளைத் தேடி ஓடி விடுகிறார்கள். சரி திரும்ப வரட்டும் வந்து பதிவினைப் படிப்பார்களென்று பார்த்தால் வந்தவுடன் உண்ட மயக்கத்தில் தூங்கிவிடுகிறார்களோ அல்லது இருக்குற ஆணிகளைப் புடுங்கி விட்டு மிச்சம் மீதி இருந்தா நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாமிங்கிற நினைப்புலயும் அல்லது ரஸ் நேரத்து டிராபிக்குக்கு முன்னால வீட்டுக்குப் போயிடணுமிங்கிற அக்கரையில பறந்து போயிடறாங்களோன்னும் தெரியல.அதுதான் அப்படின்னா பக்கத்து வீட்டு அமீரகத்து மக்களுக்கு சொல்லவே வேண்டாம்.குவைத் நேரத்துக்கும் ஒரு மணி முன்னால அவங்க பொட்டிய மூட்டை கட்டுற நேரமும்.

பதிவு தமிழ்மணத்துக்கு வரும்போது எனது பொட்டிக்கடை காத்து வாங்குது.ஒரு நாள் இப்படித்தான் தருமி அய்யாவும் அவருக்குப் புடிச்ச சிவாஜிகணேசன் பதிவப் போட்டுவிட்டு கடையத் திறந்து வெச்சுகிட்டு காத்துகிட்டு இருக்காரு.ஒருத்தருமே வரல.நாந்தான் அவருக்கு ஆறுதலா இருக்கட்டுமேன்னு ரெண்டு பின்னூட்டமிட்டேன்.கவலைப்படாதீங்க ஹிட் ஏறுமுன்னு சொல்லிப்புட்டு வீட்டுக்குப் போயிட்டேனுங்க.வீட்டுக்குப் போனப்புறம் ஏதாவது மீனு மாட்டியிருக்குதான்னு பார்த்தா நமக்கு ஒண்ணுமேயில்ல,தருமி அய்யாவுக்கு மட்டும் நம்பர் எட்டாகியிருக்குது.

அதனால வருத்தப்பட்டு தமிழ்மணத்துக்கு ஒரு பிராது சீட்டு அனுப்புறேனுங்க.இந்த சீக்கிரமாவும் வேக வேகமாவும் ஓடுற நடுப்புறத்தில எனது பதிவப் போடாம இந்த சூடான இடுகைகள் இடது புறத்தில போடாட்டியும் பரவாயில்ல அந்த வலதுபுறத்துல கொஞ்சம் ஆமை வேகத்துல நகருகிறப் பக்கமா எனது பதிவுகளை இடனுமின்னு வேண்டிக்கிறேன்.

நேற்று நான் கேட்காமலேயே இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் ஓர் பார்வை ங்கிறத மீள்பதிவாக்கினதுக்கு நன்றிங்க.வணக்கம்.

Wednesday, July 23, 2008

பிறந்த நாள் வாழ்த்துக்கள் CVR


வாழ்த்த வார்த்தைகள் இல்லை தல.அதனால் போஸ்டர் ஒட்டிட்டேன்

சாரே! இவட வந்னு மலையாளம் படிக்கா

முன் டிஸ்கி: ஆடு மாடு கூட வட்டார வழக்குகளுக்கு டாடா சொல்லிவிட்டு இந்தி கத்துக்கொடுக்கும் போது சேர நாட்டைப் பக்கத்துல வச்சுகிட்டு நாம ஏன் மக்களுக்கு மலையாளம் சொல்லிக் கொடுக்கக் கூடாதுன்னு மக்கள் டி.விய மல்லாந்து படுத்துகிட்டு பார்க்கிற போது உண்டான ஞானோதயத்தால துவங்குகிறது மலையாளப் பாடம்.மேலும் கன்னியாகுமாரி,திருவனந்தபுரம் பக்கமெல்லாமிருந்து பதியரவங்க யாராவது பட்டா போட்டுகிட்டா என்ன பண்ணறதுன்னு வந்த பயத்தினாலும் பாடம் இப்பவே துவங்குகிறது.நல்ல புள்ளைகளா படிச்சிகிட்டீங்கன்னா சேட்டன்ங்ககிட்ட இருந்து தண்ணிப் பிரச்சினையெல்லாம் தீர்த்துக்கலாம்.கூடவே பெங்களூருலிருந்து யாராவது கன்னட வகுப்பு ஆரம்பிச்சா காவிரிப் பிரச்சினையும் பேசித் தீர்த்துக்கலாம்.ஆந்திராவுக்கு வேற தனியாச் சொல்லணுமா?கிருஷ்ணா,காவிரித் தாயே குருவாயூரப்பா சொல்லி பாடம் துவங்கப் போவுது.

அதற்கும் முன் இனிப்பா ஒரு நல்ல செய்தியும். டெல்லியில மூணாவது அணி 11 கட்சிகளின் கூட்டாக அரசியல் கிரிக்கட்டுக்கு தயார்.பூந்து விளையாடுங்க.எந்தா கேட்டோ?

சேட்டா = அண்ணா
சேச்சி = அக்கா
எந்தடா = டாய்
சாயா = டீ

தங்ஸ் இவட ஊணு தன்நு.கழிச்சிட்டு உறங்கி நாள மீதி ஓபிசில் சேச்சி ஒண்ணு பணி செய்யா சம்சயம் கேட்டு சொல்லித் தரா கேட்டோ?

பின் டிஸ்கி:விவேக்,வடிவேலையெல்லாம் துணைக்கு கூட்டிகிட்டு வாங்க பார்க்கலாம்.தங்ஸ் சாப்பாட்ட வெச்சிக்கிட்டு மூஞ்சியக் காமிக்க்குது.வாரேன்.

Tuesday, July 22, 2008

பாராளுமன்றத் துணுக்குகள்.

ஒரு சீரியஸ் சிரிப்பாகிப்போன சோகம்.

லாலு பிரசாத் பேசுகையில்" சரியாக மாலை 6.00 மணிக்கு ராட்சதர்களை தோற்கடித்து மாட்டுத்தொழுவத்தில் கட்டுவோம்" என்றார்.சபாநாயகர் சோமநாத் சட்டர்ஜி புன்முறுவல்.

அதுலயும் 6.00 மணிக்கு மேலதான் ஓட்டெடுப்பு நடத்தணும்.அப்பத்தான் மாடுகளை 6 மணிக்கு கொட்டிலில் அடைக்கும் தனது வார்த்தைகள் சரியாக இருக்குமென சோம்நாத் சட்டர்ஜியிடம் வேண்டுகோள்.

( லாலுவுக்கும் மாட்டுக்கும் அப்படியொரு பந்தம்)

சிறையிலிருந்து பிரத்யேகமாக வாக்களிக்க வந்த அதிக் அகமது என்ற பாராளுமன்ற உறுப்பினர் " நானும் விவாதத்தை ரொம்ப கவனமாக் கேட்டேன்.ஆனா இந்த விவாதம் எதற்காக என்று தலையும் தெரியல வாலும் தெரியல.ஆனாலும் நான் ஐக்கிய முன்னணிக்கு எதிராக பட்டனை அமுக்குவேன் " என்றார்.

(ஜெயிலுக்குள்ள இருட்டுக்குள்ளேயே மனுசனப் பூட்டிவச்சா வெளிவிவகாரங்கள் எப்படிங்க தெரியும்?)

அடுத்தவன் கால வார்றது எவ்வளவு முக்கியம் பாருங்க:

பாரதிய ஜனதாவின் ஹரிஸ்சந்திர சவான் சாலை விபத்திலிருந்து நாசிக்கிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். விமானம் மூலமாக டெல்லி வந்தார்.

நடிகர் தர்மேந்திரா முழங்கால் அறுவை சிகிச்சையிலிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஸ்சல்ஸ் நகரத்திலிருந்து விண்வெளியில் பறந்து கொண்டிருக்கிறார்.எப்படியும் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்துவிடுவார்.

கிஸான் லால் டைலர் என்பவர் பாராளுமன்றத்திற்குப் பக்கத்திலுள்ள லோகியா மருத்துவ மனையிலிருந்து வருகிறார்.அவரது மனைவியும் மருத்துவர்களும் மருத்துவ மனையை விட்டு நகரக்கூடாது என்று சொல்லியும் கேட்காமல் மருத்துவ வேனில் விரைவு.

(இந்த கடமையின் பொறுப்பு அனைத்து பாராளுமன்ற உறுப்பினரின் பணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டால்.....ம்ம்ம்....( பெருமூச்சு:))

முன்னால் பிரதமர் வாஜ்பாய் இயலாமல் வாக்களிக்க வரவில்லை.

(வேண்டுமென்றே வரவில்லையோ?)

ராகுல் காந்தியை பேசவிடாமல் பாரதிய ஜனதா தள உறுப்பினர்கள் கலாட்டா.சோம்நாத் சட்டர்ஜி " பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வளவு கீழ்நிலைக்குப் போக முடியுமோ அதுவரை போகிறார்கள்."

(இதெல்லாம் எங்களுக்கு ஜுஜிபி.நாற்காலிகளையெல்லாம் உடைத்து நாங்கள் கைக்கு கை கலாட்டா செய்திருக்கிறோமாக்கும்.)

ஐக்கிய முன்னணி எங்களை ரூபாய் நோட்டுக்கட்டுக்களுடன் பேரம்பேசிய பணம் என்று பாரதிய ஜனதா உறுப்பினர்கள் டி.விக்கு போஸ்.

(25 கோடி ஒரு கைக்குள் அடக்கமா)

பணபேரத்துக்காக மன்மோகன்சிங் ராஜினாமா செய்யவேண்டும்.பி.ஜே.பி வற்புறுத்தல்.

(எங்களுக்கும் ஏனைய்யா பணம் தரவில்லை என்ற மற்ற உறுப்பினர்களின் கோபம்தான்.)

நம்ம சிதம்பரம் பி.ஜே.பி மீதும் கம்யூனிஸ்ட்டுகள் மீதும் பாய்ச்சல் " "nothing more bizarre" than two disparate groups coming together to vote against the Government on the confidence motion."

( பஜாரிகள் என்பதன் வார்த்தையின் அர்த்தம் அவர்களுக்கு தெரியாது என்ற காரணத்தினாலே பிசார் என்றார்)


எப்படியோ ஐக்கிய முன்னணி மந்திர எண் 271 தாண்டி 272க்கு தாண்டிவிட்டதாக கடைசி நேரத் தகவல்.

(இந்தப் பதிவு உங்கள் பார்வைக்கு வரும் வினாடிகளில் உண்மை நிலவரம் பாராளுமன்றத்திலிருந்து உங்களுக்குத் தெரிந்திருக்கும்) வருகிறேன்.

Monday, July 21, 2008

மத்திய கிழக்கு நாடுகளுக்கான வேலை வாய்ப்புக்கள்

வேலை வாய்ப்புகள்

பெரும்பாலோர் வெற்றிக்கொடிகட்டு மாதிரிதான் வேலை வாய்ப்புக்களுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை உதவி மையங்களான ஏஜண்ட்களிடம் தஞ்சம் அடைகிறார்கள்.தகுதியின் அடிப்படையிலும் எந்தவித இடைத்தரகர்களுமில்லாமல் இகுவேட் என்றழைக்கப்படும் நிறுவனத்திற்கு கீழ்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவை.தகுதியும் முன் அனுபவமும் இருக்கும் பட்சத்தில் திறமைக்கான நல்ல சம்பளம் கிட்டும்.யாராவது துறை சார்ந்தவர்கள் நேரடியாக முயற்சிக்கலாம்.தமிழ்ப்படுத்தல் சிரமமாக உள்ளது.ஆங்கிலத்துக்கு தாண்டி விடுகிறேனே.

Career Opportunity with EQUATE Petrochemical Company

Instrument Technologist

Maintenance,troubleshooting,repair,calibration & commisining of process conrol instrumentation (Such as pressure level,temp & flow control instruments including machine protection systems & DCS systems) in oil & gas / petrochemical / refinery or fertilizer plants.

Mechanical Technologist

Knowledge of principles of Rotating Equipment, Seals, Bearings , vibrartions and Lubrication, troubleshooting and repair experience on equipments in petrochemical plant such as large compressors,pumps,turbines,gear boxes, fin fans and agitators. Understanding cross section drawings, knowledge of reactors,boilers,process furnace,heat exchangers.coolers.valves and other process equipments.Practical knowledge on laser alignment and other alignment methods,rebuild and troubleshooting techniques.

Analyzer Technologist

Preventive maintenance.Calibration and troubleshooting of gas chromatography,fixex gas detectors, uv visible spectrophoto meters,ph,conductivity, infra red analyzers, total carbon, total organic carbon analyzers and dissolved oxygen.

Electrical Technologist

Carry out preventive and breakdown maintenance of all plant electrical equipment an systems including troubleshooting of failed equipments such as motors,transformers,generators,UPS, battery chargers,relays,medium/low voltage switchgears, low/medium voltage starters etc.

Qualiification for the above vacancies:

Diplomo in related field with minimum 10 years experience.


The full job description including qualifications and work experience is available on website. Interested candidates can apply online at www.equate.com

under Careers - job opportunities from 21/07/2008 to 30/07/2008.

Sunday, July 20, 2008

இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் கைசாத்திடல் வேண்டும்

தற்போதைய சூழலில் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் அரசியல்வாதிகளின் குதிரை பேரத்திலும் காலை வாரிவிடும் சந்தர்ப்ப அரசியலாலும் மதில்மேல் பூனையாக ஆட்டம் காணும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.அரசியல் மாதிரியே பதிவுகளும் ஒப்பந்தத்தை ஆதரித்தும் எதிர்நிலை கொண்டும் காணப்படுகின்றன.வாழ்வின் அடிப்படை தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய காலகட்டத்தில் குளறுபடிகள்.எதிர்வினைகள் எழுவது பிரச்சினைகளை அலசிப் பார்ப்பதற்கான வாய்ப்புக்களைத் தருகின்றன.ஆனால் தான் பிடித்த முயலுக்கு மூணுகால்தான் பழமொழிக்கு உரம்போட நினைக்கும் போது மனம் வருத்தமாக இருக்கிறது.

இங்கே ஏ.சி குளிரில் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும்போது என் தேசம் ரெயில்களின் இறுக்கத்திலும்,வாகனங்களின் சுவாசத்திலும் மூச்சு விட திணறிக்கொண்டுள்ளது. உழைத்துக் களைத்து பயணம் செய்து வீட்டுக்கு வந்தமர்ந்தால் கர கர விசிறிக் காற்று கிட்டினால்கூட பரவாயில்லை என சந்தோசப் படலாமென்று பார்த்தால் அந்த நேரம் பார்த்து மின்சார வெட்டு.இதற்கான காரண காரியங்களை மனம் ஆராய்வதில்லை.சின்னத்திரை காவியங்கள் தடையானதில் மனம் எரிச்சலாகிறது.

உலகின் பெரிய தலை ஜனநாயக நாடு என நினைக்கும்போது மனசுக்கு சுகமாக இருக்கிறது.ஆனால் ஜனநாயகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கச்சொல்லி மக்கள் வாக்களித்து அனுப்பிவைத்த தேசபிதாக்கள் மக்கள் பிரச்சினைகளை மறந்து அவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் நேரம் கொள்கிறார்கள்.ஜனங்கள் ஊர்வலம் என்றும் உண்ணாவிரதம் என்றும் இன்னும் எத்தனை காலங்கள் இந்த தொடர் ஓட்டம்? சரி இதை விட்டு புதிய பாதைகள் கிடைக்குமா என ஆராய்ந்தால் எல்லா இஸங்களும் நொள்ளையும் சொள்ளையுமாகவே இருக்கிறது.வேறு வழியில்லை ஜனநாயகமே வாழ்க்கை.அதற்கான வேர்களையும் நாம் ஆழமாகவே விதைத்துள்ளோம்.பிரச்சினை ஜனநாயகமல்ல.அது செயல்படும் முறை.

ஒரு மனுசன் எத்தனை காசுகளைத் தின்ன முடியும்?ஏன் கோடி கோடியென்று கோடித்துணிக்குப் போகுமுன் எத்தனை சுயநலங்கள்?கையீட்டு வாங்கி மாட்டிக்கொண்ட பின் முகத்தை காமிராவுக்கு மூடும் அரசாங்க அலுவலர்.முக்காடு போட்டுக்கொண்டு காவலர் வாகனத்திலிருந்து இறங்கும் மனிதர்கள்.(இங்கே கையூட்டு தருவதாக வாய்மொழியாக சொன்னதற்காக சிறைக்குப்போன செய்திக்கும் நமக்கும் எவ்வளவு வேறுபாடுகள்?)

நாஸ்திகர்களுக்குத்தான் கடவுள் இல்லை.இந்த ஆஸ்திகவாதிகள் ஏன் தவறுகள் செய்கிறார்கள்.வாழ்வின் பிரச்சினைகளின் முன் நாஸ்திகமும் ஆஸ்திகமும் வெறும் ஹம்பக் வேலையா?தனி மனித ஒழுக்கங்கள் மட்டுமே மனிதனை தூய்மைப் படுத்துமா?அப்படியானால் தனிமனித குணநலன்கள் என்றால் என்ன?அது என்ன மரபணு சார்ந்ததா?அப்படியில்லையென்றால் சமூகம் சார்ந்ததா?சார்ந்ததென்றால் எத்தனை சமூக சிந்தனைகள்?வழிகாட்டல்கள்?இத்தனையும் மீறி தவறான மிருகம் மட்டும் வளர்கிறதே?
எனது கவலை என்னவென்றால் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் கொள்கையளவில் தோற்றுப் போனால்கூட பரவாயில்லை.கம்யூனிஸ்ட்டுகள் தமது ஆதரவை விலக்கிக்கொண்ட அடுத்த கணத்திலிருந்து தொடங்கிய அரசியல் ஆடுகளம் கவலையைத் தருகிறது.அதிகாரம் மையப்படுத்தப் படாமல் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பகிர்ந்தளித்து தரும் நடைமுறை நல்லதாகப் பட்டாலும் இதில் குதிரை பேர அரசியல் நுழைந்து கொள்கிறதே?

இன்றைக்கே வித்திட்டு இன்றைக்கே பூ பூக்கணுமாம்.உலக அழகி ஐஸ்வர்யா வாயசத்த தமிழ்ப் பாட்டு ஞாபகம் வருகிறது.அட! ஒப்பந்தம் செய்துகொண்டால் இன்னும் 15 வருசம் கழிச்சுத்தான் மின்சாரம் கிட்டும்.அந்த மின்சாரம் நமக்கெதற்கு என்று ஒரு கோஷ்டி.
ஐயா! நேற்றுதான் சிவாஜிகணேசன் (கலிகாலம் பாருங்க... கணேசனையும் கூட பக்கத்துணைக்கு இழுக்க வேண்டி இருக்கு) கமல்கிட்ட சொல்றாரு."அப்பு இன்னைக்கு நான் விதை விதைக்கிறேன்.அதை நாளைக்கு நீ சாப்பிடுவ...அதுக்கப்புறம் உனது மகன் சாப்புடுவா...)இதுதானுங்க ஒப்பந்தத்தின் ஒரு பக்க சாரம்.

இன்னொருத்தரு சொல்றாரு பாருங்க" நாங்க இருட்டுல இருந்தாலும் இருப்போமே ஒழிய இந்த ஒப்பந்த வெளிச்சம் வேண்டாம்" ங்கிறாரு. என்னத்த சொல்ல போங்க.ஐயா!மெழுகிவர்த்தி விளக்குலயும்,கெரேசின் புகையிலும் ஒரு ஜெனரேசன்(தமிழ்...தமிழ்)கஷ்டப்பட்டதுங்க.இப்போதக்கோ அப்போதைக்கோன்னு பயம் காட்டும் மஞ்சக்காமாலை பல்பு விளக்கிலும் எனது தேசத்தில் கொஞ்சம்பேர் சாதித்துக்கொண்டுள்ளார்கள்.அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

ஆனால் இப்போதைக்கு மஞ்சக்காமாலை குண்டுபல்பும் வெளியேறும் காலகட்டத்திற்கு வந்துவிட்டோம்.நானே பாருங்க வீட்டுக்குப் பக்கத்தில் பொட்டிக்கடையில 150வாட்ஸ் குண்டு பல்பு வாங்கி வாங்கியே சோர்ந்து போயிட்டேனுங்க.சும்மா இருக்குற நேரத்துக்கு பிட் படம் பிடிக்க டப்பா ஏதாவது கிடைக்குதான்னு ஒரு அமெரிக்கத் தயாரிப்பாக்கான(பெயர் எ.சி.இ.ஆர் ஏசர்) கடைக்குப் போனால் வெள்ளி மாதிரி பல்புக்கு முகமூடி போட பல்பு ஷேட் ஒண்ணு கிடைச்சது.அதுக்கு ஏத்தமாதிரி ரிப்ளக்டர் பல்பு ஏதாவது கிடைக்குமான்னு பார்த்தால் அதுவும் கிடைச்சது.வீட்டுக்கு வந்து அதுக பாட்டுக்கு பரணுல தூங்குது.ஒருநாள் வழக்கம்போல நம்ம குண்டு பல்பு டப்.சரி அவசரத்துக்கு இதை மடிக்கணினிக்கு உபயோகிக்கலாமுன்னு வச்சா பட்டனை அமுக்கினால் அந்த ரிப்ளக்டர் பல்பு எரியுது எரியுது இன்னிக்கு வரைக்கும் எரியுது.கூட கண்ணுக்கும் குளிர்ச்சி.(நீதிக்கதை என்னவென்றால் தொழில்நுட்பம் மாற மாற நாமும் மாறவேண்டும்.கணினி உபயோகிப்பதில் கூட பிரச்சினைதான் அதற்காக உபயோகிக்காமலா இருக்கிறோம்).

இனி இந்த அமெரிக்க ஒப்பந்தம் என்றால் வேண்டாம் என்று ஒரு குழு.ஐயா இந்த ஒப்பந்தம் ஒரு கொடுக்கல் வாங்கல் வியாபாரம்.வியாபாரத்துக்கு அடிப்படையே நம்பிக்கை.அதற்கும் அப்பால்தான் காகித வேலைகள்.காகித எழுத்துக்கள் மீது மாற்றம் தேவையென்றால் பிரச்சினையில்லை.வியாபார நம்பிக்கை மீது காழ்ப்புணர்ச்சி கொண்டால் வியாபாரம் எப்படி செய்வது?

எப்படியோ இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இந்தியாவுக்கும் எதிர்கால சந்ததிகளுக்கும் பயன் தருமானால் நல்லது. இல்லை குதிரை பேரத்தில் அரசாங்கம் கவிழ்ந்து நிலைகுலையுமானால் அதன் தோல்விகளை அரசாங்கம் மட்டுமல்ல இந்திய மக்கள் அனைவரும் எதிர்காலத்தில் சுமக்கவேண்டி வரும்.நாளை மறுநாள் இதற்கான கேள்வியின் முடிவு தெரியும்.

Saturday, July 12, 2008

ஜுலை மாத இரவு நேர புகைப்பட போட்டிக்கு

வணக்கம் அனைவருக்கும்.எனது இரவு நேர முதல் படம் போட்டிக்கு் மற்றவை பார்வைக்கும்.

கடற்கரையிலிருந்து நகரின் நியான் விளக்குகளின் ஜொலிப்பு படப் போட்டிக்கு




K.F.C காரங்களுக்கு போட்டியா இன்னொரு பண்ணு கடை.



பகல் நேரத்திலேயே வைர நிறம்.இதுல ராத்திரி நேரத்தில பார்த்தா சுத்தம்.

வேறொண்னுமில்ல. ரோட்டுல ஓடிகிட்டிருந்த கார்கள்.

அந்தக் கார்களை ஷட்டர் வேகத்துல கிளிக்கியது.இன்னொரு முறை முயற்சி செய்யணும்.



நகரின் இன்னொரு முகம்.நல்லா இருக்கான்னு சொல்லிட்டுப் போங்க!

Thursday, July 10, 2008

ஜுலை மாத பிட்டுக்கு ஒரு பிட்டு

ஒண்ணுமே எழுதறதில்லிங்கண்ணா.சும்மா தமாசுக்கு அங்கே இங்கேன்னு கொஞ்சம் பின்னூட்டம் மட்டும் போட்டு விட்டு கிடைக்கிற நேரத்துக்கு கொஞ்ச நஞ்ச பதிவுகளைப் படிக்கும்போதே கண்ணக் கட்டுது.

போதாததுக்கு ராத்திரியெல்லாம் கனவுலயெல்லாம் தமிழ்மணம் வந்து பயப்படுத்துது.நோய் எப்ப முத்துமின்னு தெரியல.அந்த குசும்பன் எங்கே போனாருன்னு தெரியல.இல்லாட்டி அவருகிட்ட மருந்தாவது வாங்கலாம்.

அட நமக்கே இப்படின்னா விடாம பேந்தா விளையாடுற பதிவர்களை நினைச்சா ஹி...ஹி... சிரிப்பா வருது:).பேரைச் சொன்னாலும் ஊரச் சொல்லாதேன்னு அப்பவெல்லாம் பழமொழி.நெல்லிக்காய் மூட்டைய அவித்து விட்ட கணக்கா உலகம் முழுதும் கொட்டிக் கிடக்கிற பதிவர்கள் +பதிவிகள்ல யாரு பேரச் சொல்றது.அதுல வேறு கொஞ்சம் பேறு முக்காடு போட்டுகிட்டு கதை சொல்றாங்க.எதுக்கு வம்பு?

நானுண்டு என்னோட பிட் படத்துக்கு கடைசி வரிசையில நிக்கிற பணியுண்டுன்னு கிடக்கிறேன்.நல்லவேளை இத எழுதற இந்த நேரத்துல ஜுலை மாச பிட் படத்துக்கு இன்னும் படம் பிடிக்காத ஞாபகம் வருது.நேத்து வானத்தை அண்ணாந்து பார்த்தா நிலா (நந்து f/o நிலா டாப்ஸிலிப் படம் வேற ஞாபகத்துக்கு வருது:) அரை வட்டத்துல நிக்குது. எப்படியோ ஒரு படத்தை இன்னைக்கு புடிச்சிற வேண்டியதுதான்.

தங்ஸ் வேற இன்னைக்கு பீச்சுக்கு புரோகிராம் பண்ணிருச்சு.அதனால எப்படியும் ஒரு இருட்டுக்கடை அல்வா! இல்ல இருட்டு நேர படம் ஒண்ணு மாட்டுமின்னு நினைக்கிறேன்.சி.வி.ஆர்! எனக்கும் ஒரு சீட்டு புடிச்சு வையுங்க.எப்படியும் சனிக்கிழமை சாயந்தரத்துக்குள்ள வந்து சேந்தர்றேன்.

மீனு கம்பியத் தூக்கிட்டுப் போனா ரெண்டு மீனு மாட்டுனாலும் மாட்டும்.அதையும் சுட்டுத் திண்ணுட்டு வரணுமின்னு முடிவு பண்ணியிருக்கேன்.பார்க்கலாம்.மீனு மாட்டுதான்னு.

டிஸ்கி: அண்ணா!வெட்டி அண்ணா பீச்சுக்குப் போறதையும்,மீனப் பிடிக்கிறதையும்,பிட் படம் காண்பிக்கிறதையெல்லாம் NRI அலும்பு கணக்கில சேர்த்த கூடாதுங்கண்ணா:)

Wednesday, July 9, 2008

இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம்-ஓர் பார்வை

இந்திய அமெரிக்கா அணு ஒப்பந்தத்தின் கருத்து வேறுபாடு காரணமாகவும் ஒப்பந்தம் இந்தியாவின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் என்ற கருத்து
கோட்பாட்டின் பேரிலும், பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க பயணத்தில் ஜார்ஜ் புஷ் கூட இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு தந்த பேட்டியின் அடிப்படை கருத்தைக் கொண்டும் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்துக்கு தரும் தனது ஆதரவை வாபஸ் வாங்கிக்கொள்ளப் போவதாக கூறும் இந்த தருணத்தில் இந்த பதிவின் அச்சு அவசியமாகிறது.பொதுவாகவே இந்தப் பிரச்சினையிலும் ஏனைய பிரச்சினைகளிலும் அதனைச் சார்ந்தோ அல்லது எதிர்வினையாகவே கருத்துக்கள் வருகின்றன.இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து அதன் நன்மை தீமைகளை ஆராயும் போக்கு குறைவாகவே காணப்படுகின்றது.அரசியலுக்கும் அப்பால் விஞ்ஞானிகளின் கருத்துக்கள் மேல் ஓங்கி இருந்தால் மட்டுமே இந்தப் பிரச்சினையின் மூலப் பொருளைக் கண்டறிய முடியும்.அப்படிநிறைகுறைகளைக் கண்டறியும் மனோபாவங்களை வளர்ப்பதே நமக்கும் எதிர்கால சந்ததிக்கும் பயனளிக்கும்.ஆனால் விஞ்ஞானிகளின் கருத்துக்கள் பரவலாக காணப்படவில்லை.

அரசியல் பின்னடைவுகளின் இடையிலும் இன்று 09,புதன் 2008 தினம் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் பற்றிய கருத்து மேம்பாட்டை கலந்தாலோசித்தார் மன்மோகன் சிங். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் ஜார்ஜ் புஷ்.பொரோமோய் மலையின் ஓட்டல் விண்ட்சர் என்ற இடத்தில் மன்மோகன் சிங்கும் ஜார்ஜ் புஷ்ஸும் இரண்டு நாடுகளிக்கிடையேயான நட்புறவு பற்றி பேசினார்கள்.இதில் ஜார்ஜ் புஷ் அணு ஒப்பந்தம் பற்றி தாங்கள் இருவரும் விவாதித்ததாகக் கூறினார்.

இந்திய அரசியல் அலைகளின் மாற்றங்கள் பற்றி மன்மோகன் சிங் அவர்கள் அதிகமாக வருத்தப்பட்ட மாதிரி தெரியவில்லை.தனது அரசாங்கமும்,மக்களும் குறிப்பாக நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் மக்கள் தனது பக்கம் இருப்பதாகவும் இரண்டு நாடுகளின் ஒற்றுமை மேலும் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அதன் முழு உருவத்தை அடைந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.மன்மோகன் குறிப்பாக அணு ஒப்பந்தம் பற்றிக்
குறிப்பிடவில்லையென்றாலும் இரண்டு நாடுகளும் அணு,பாதுகாப்பு,விண்வெளி மற்றும் கல்வி பரிமாற்றங்களின் முன்னேற்றங்கள் பற்றியும்
இருநாடுகளின் உறவு எப்போதும் இல்லாத அளவுக்கு திருப்திகரமாக இருப்பதாகவும் இதன் காரணகர்த்தாவான ஜார்ஜ் புஷ்ஸுக்கு தனது நன்றியினைத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி ஐ.எ.இ.எ ஆளுநர் குழுவுக்கு செல்லுமானால் அரசாங்கத்துக்கு தரும் தமது ஒத்துழைப்பை திரும்பப்பெற்றுக் கொள்வதாகவும்
பிரதம மந்திரியின் அமெரிக்க வருகையின் கருத்து வெளியீடு பற்றிக் கூறுகையில் "நேரம் வந்து விட்டது" எனக் கம்யூனிஸ்ட்டுகள்
குறிப்பிட்டார்கள்.மேலும் பிரணாப் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில் ஐ.எ.இ.எ உடன் அரசாங்கம் பேச்சு வார்த்தைக்கு செல்லும் முன் அதன் பாதுகாப்பு ஒப்பந்த எழுத்து வடிவினை தமக்கு இதுவரை அளிக்கவில்லையென்றும்
எழுத்து வடிவினை நோக்காமல் தாங்கள் எந்த முடிவுக்கும் வர இயலாது என்றும் கூறினர்.

மேலும் ஐ.எ.இ.எ வின் குழுவிற்கு அரசாங்கம் போகும்பட்சத்தில் தமது ஆதரவை விலக்கிக் கொள்வதாக வும் பிரதமரின் அறிவிப்பினை தொடர்ந்து " நேரம் வந்து விட்டது" எனக் குறிப்பிட்டனர்.

இனி கம்யூனிஸ்ட்டுகளின் தர்க்கம் என்னவென்று பார்த்தோமானால் ஐ.எ.இ.எ வின் பாதுகாப்பு ஒப்பந்தம் விவாதத்துக்குரியதாகவும் அதனை எந்தவித
ஒளிவு மறைவுமின்றி விவாதிக்க வேண்டும் என்பது.ஏன் அரசாங்கம் ஒப்பந்த எழுத்து வடிவினை மக்களிடமிருந்து மறைக்க வேண்டும் எனக் கேள்வி
எழுப்புகின்றனர்.

மேலும் 123 ஒப்பந்தம் அனுபவத்தின்படி அரசாங்கம் கூறும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்துக்கும் 123 ஒப்பந்த எழுத்து வடிவத்திற்கும்
வித்தியாசம் இருப்பதாக வாதிடுகின்றனர்.எனவே ஒப்பந்தத்தின் எழுத்து வடிவத்தை தங்களுக்கு விளக்கவேண்டும் என்று வாதிடுகின்றனர்.

அவர்கள் வாதத்தின் முக்கியப் பிரச்சினையாக முன்னிறுத்துவது இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா எதிர்காலத்தில் கிடப்பில் போட்டால் என்ன செய்வது
என்பதாகும்.அமெரிக்காவும் இந்தியாவும் செய்த 1963ல் செய்த 30 ஆண்டு உடன்படிக்கையை பூர்த்தி செய்யாமல் 1983ல் தாராபூர் அணுசக்தி
நிலையத்துக்குண்டான எரிபொருள் வழங்குதலை இந்தியாவுக்கு நிறுத்தியதை நினைவுபடுத்துகிறார்கள்.மகாராஷ்ட்ராவில் என்ரோன் திட்டமே கிடப்பில்
போடப்பட்டு என்ரோன் நிறுவனமே திவாலாகிப்போனது உலகப்பிரசித்தம்.

தற்போதைய உடன்படிக்கை எதிர்காலத்தில் ஏதோ ஒரு காரணத்தால் நின்று போகும் சூழ்நிலையிலும் ஐ.எ.இ.எ வின் பாதுகாப்பு பரிசோதனை அனைத்து
சிவிலியன் அணுநிலையங்களிலும் தொடரும் சரத்துக்கள் உள்ளதாக விவாதிக்கின்றனர்.

123 ஒப்பந்தம் இந்தியாவுக்கு எரிபொருள் ஏனைய நாடுகளிலிருந்து நிறுத்தப்படும் பட்சத்தில் இந்தியா எடுக்கும் முடிவுகள் இந்தியாவுக்கு பாதகமான
வார்த்தைப் பதங்களைக் கொண்டுள்ளது என வாதிடுகின்றனர்.எனவே ஐ.எ.இ.எ பாதுகாப்பு ஒப்பந்த வாசகங்களை தாங்கள் காணவும் அமெரிக்கா
இந்தியாவுக்கு எரிபொருளை நிறுத்தும் பட்சத்தில் மாற்று வழிகளுக்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா என விவாதிக்க வேண்டும் என்றும் வார்த்தைப்
பிரயோகங்களை இந்தியாவுக்கு சாதகமாக அமைக்கும் சாத்தியக்கூறு உண்டா என்றும் இதனை பொதுவில் விவாதிக்க வேண்டும் என
வற்புறுத்துகின்றனர்.

இரண்டாவதாக 123 ஒப்பந்தம் சரத்துக்களின் படி அமெரிக்கா ஐ,எ,இ.எ விடம் இந்தியாவுக்கு மட்டும் என்ற தனி எரிபொருள் ஒப்பந்தத்தை சிபாரிசு
செய்யுமென்றும் ஆனால் நடைமுறையில் ஐ.எ.இ.எ எரிபொருள் பங்கீடு பற்றிக் கவலைப் படுவதில்லையென்றும் மாறாக அணுசக்தி கருவிகளையும்
பொருட்களின் பாதுகாப்பு செயல்படுத்தப்படுகிறதா என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.

எனவே ஐ,எ.இ.எ பாதுகாப்பு ஒப்பந்தங்கள் எரிபொருள் வழங்குதலை எப்படி 123 ஒப்பந்த சரத்தின்படி உறுதிப்படுத்தும் என அறியவேண்டியுள்ளது என்கின்றனர்.

கீழ்கண்ட முக்கியப்பிரச்சினைகளை கம்யூனிஸ்ட்டுகள் முன்வைக்கின்றனர்.

1. ஐ.எ.இ.எ வின் ஒப்பந்த வாசகங்கள் அரசாங்கத்தால் வெளியிடப்படாதது கம்யூனிஸ்ட்டுகளை கவலைக்குள்ளாக்குகிறது.

2. இறக்குமதி செய்யப்பட்ட அணு உலைகளுக்கான எரிபொருள் உறுதி நிறுத்தப்படும் பட்சத்தில் இந்த அணு உலைகளை ஐ.இ.எ.இ வின் பாதுகாப்பு
ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விடுபட முடியுமா?

3.அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் எரிபொருள் உறுதிமொழியை நிறுத்திக்கொள்ளும் பட்சத்தில் இந்தியா தனது சுய முயற்சியால் உருவாக்கிய
சிவிலியன் அணு ஆலைகளை ஐ.எ.இ.எ வின் பாதுகாப்பு ஒப்பந்தத்திலிருந்து விடுபட முடியுமா?

4. ஒப்பந்தத்திற்கும் அப்பாற்பட்ட திட்டங்களுக்கு இந்தியா எரிபொருளினைக் கொண்டுவரும் பட்சத்தில் எரிபொருள் உறுதிமொழி மீறப்படுமானால்
இந்தியா இதனை திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா?

5.எரிபொருளை அமெரிக்காவும்,ஏனைய நாடுகளும் நிறுத்தும் பட்சத்தில் இந்தியா தனது நலன்கள் பாதிக்காவண்ணம் என்ன தீர்வுகளை முன்
வைக்கிறது?

6. ஒப்பந்தம் செயல்படும் நிலையில் என்ன விதமான உறுதிமொழிகளை இந்தியா அளிக்கவேண்டும்?

இந்தியா தற்சமயம் ஐ.எ.இ.எ வின் பாதுகாப்பு ஒப்பந்த வாசகங்கள் அடங்கிய ஒப்பந்தத்தை அந்தக் குழுவின் கையெழுத்து ஒப்புதல் நிலையில்

உள்ளது.அப்படி கையெழுத்திடப்படும் நிலையில் அடுத்து இந்தியாவின் பங்கு என எதுவுமே இல்லை.அடுத்து அமெரிக்க அரசாங்கமே அணு ஆயுத நாடுகளின் ஒப்புதல் பெறவும் 123 ஒப்பந்தத்தை அமெரிக்க செனட் காங்கிரஸ் ஒப்புதலுக்கு அனுப்பும்.எனவே இந்த ஐ.எ.இ.எ ஒப்பந்தம் இந்தியாவில் எந்தவித ஒளிவு மறைவுமின்றி விவாதிக்கப்படவேண்டுமென்கிறது.

இந்திய அரசாங்கம் இந்த ஒப்பந்த நகலை ஏன் மக்களிடமிருந்து மறைக்கின்றனர் என்கின்றனர் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள்.

இனி சில நடைமுறை வாசகங்கள்

* கம்யூனிஸ்ட் தனது கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாது

* மன்மோகன் சிங் " ஒரு தனித் தீவில் ஒரு தனி மனிதன்."

* நமது முகத்தை உலக அளவில் காட்டவும் குறைந்த பட்சம் தனது வார்த்தைகளைக் காப்பாற்றும் முகமாகவாவது இந்த ஒப்பந்தம் அவசியம்.

* பிரான்ஸ் நாட்டு தூதுவரின் பார்வை "இந்தியாவின் இறையாண்மைக்கு எந்தவித பாதகமுமில்லாத உலக உடன்படிக்கை இது"

* கம்யூனிஸ்ட்டுகள் " ஒரு மோசமான அணு ஒப்பந்தத்தை செயல்படுத்தும் புராணக் கதைகளுக்கு ஒப்பான செயல்.நாடு தழுவிய செய்தி திரித்தல்."

* ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்திய அரசாங்கத்தின் கடைசி முயற்சி.

* ஒரு பத்திரிகையாளரின் கருத்து " ஒப்பந்தம் ஏன் முக்கியமானது?"

* 1962ல் சீனா யுத்தத்தின் தோல்விக்குப் பிறகு நேருவின் வானொலிக் குரல்"நாம் நமக்கு நாமே இட்டுக்கொண்ட செயற்கையான உலகில் வாழ்கிறோம்"

* "மன்மோகன் சிங்கை வரலாறு எவ்வாறு பார்க்கும்?"

* " இப்பொழுது அல்லது எப்பொழுதும் இல்லை"

* மன்மோகன் சிங் " உள்நாட்டு அரசியல் நமது வெளிநாட்டுக் கொள்கையை பாதிக்கிறது"

பதிவு நீளமாகி விட்டதால் இத்துடன் முடிக்கிறேன்.அலசல்கள் எதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே.

Tuesday, July 8, 2008

சோளம்,கம்பு,கேழ்வரகு

கிரியண்ணன் ரொம்ப வருத்தப்பபட்டுகிட்டாரு முந்தைய பதிவு ரொம்ப சின்னதா இருக்குன்னு.அவருடைய ஆதங்கத்த தீர்க்கிறதுக்கு இந்த பதிவு.

குழந்தைகளுக்கு தரும் சத்துணவின் பலன் அவர்களின் பருவ வயதுக்குப் பின்னே தெரிகிறதாம்.இந்த தலிபான்களை புடிச்சி அடைச்சு வைச்சாரே ஜார்ஜ்
புஷ் கொத்மலான்னோ என்னவோ ஊர்ப் பேரு.அந்த ஊருல ஒரு முப்பது வருசத்துக்கு முன்னாடி சோளக்கஞ்சிய ரெண்டு மூணு கிராமத்து
குழந்தைகளுக்கும் சத்தில்லாத ஒரு இனிப்பு உணவை ஒரு கிராமத்துக் குழந்தைகளுக்கும் கொடுத்துகிட்டு வந்தாங்களாம். ஒரு முப்பது வருசத்துக்குப்
பின்னாடி பார்த்தா சோளக்கஞ்சியில் வளர்ந்த குழந்தைகள் ரொம்ப புத்திசாலிகளாகவும் வயித்துக்கு கொட்டிகிட்ட குழந்தைகள் சாதாரண மனநிலை
கொண்டவர்களாகவும் இருந்தார்களாம்.


முன்னாடியெல்லாம் நம்ம ஊர் பக்கமெல்லாம் சோளம்,ராகி(கேழ்வரகு),கம்புன்னு அரிசிக்குப் போட்டியா நிறைய தானியங்களின் வளர்ப்பும்,வளர்த்த
தானியத்தை வக்கணையா கொளம்பு வச்சி சாப்டற பழக்கமும் இருந்தது.சாப்பிட்டு மிச்சமிருக்குறதை தண்ணிர் ஊற்றி பானைக்குள்ள மூடி வச்சிட்டு அடுத்த நாளைக்கு சூட்டு காலத்துக்கு சும்மாவோ அல்லது கொஞ்சம் மோரையோ விட்டுக் கலந்து குடிக்கிற சுகம் தனிதான். கடிச்சுக்க ஒரு
வெங்காயம்,ஒரு மொளகா.

கம்பு மட்டும் தாராபுரத்துல ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கும் போது பசங்களுக்கு அப்பாமார்கள் முளைவிட்ட கம்பு,வெல்லம்ன்னு கொண்டு
வருவாங்க,கூட்டாளிக எனக்கும் கொஞ்சம் பங்கு தருவாங்க.

இப்ப கம்பக்காணோம்,ராகியக் காணோம்,சோளத்தை மட்டும் வெளிநாட்டுக்காரன் ஓட்ஸ்ன்னு பேர் சொல்லிகிட்டு திரியறான்.அதையும் யாரும் பெரிசா சாப்டறதாக் காணோம்.ஏதோ கார்ன்பிளேக்ஸுன்னு கொஞ்சம் ஓடுது.

கோயம்புத்தூர்ல மாவட்டக் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிர்த்தாப்ல அந்தக் காலத்து பொட்டி தட்டுற மக்கள் வேகாத வெயில்ல உட்கார்ந்து
பெயர்,தகப்பனார் பெயர்ன்னு விண்ணப்ப படிவம் தட்டச்சிகிட்டு இருந்தாங்க.கொஞ்சம் நேராப் போனா ஆனந்தபவன் சைவ உணவகம்.வாழை இலையில தோசையோ ரவா தோசையோ சாப்பிட்டு விட்டு ஒரு ராகிமால்ட்.அதுதான் ராகிமால்ட் கடைசியா குடிச்ச அனுபவம்.
(யாராவது ராகிமால்ட் குடிச்சவங்க இருக்குறீங்களா?


சோளம்,கம்பு,ராகியோட இடத்தையெல்லாத்தையும் அரிசி குத்தகைக்கு எடுத்துகிட்டமாதிரி அந்த ராகிமால்ட் இடத்தை இப்ப பூஸ்ட்டும்
போன்விட்டாவும் புடிச்சிகிச்சு.

கிரியண்ணா.இந்தப் பதிவக்கூட கொஞ்சம் விவரமா சொல்லலாம்தான்.அலுவலக வேலை வா வான்னு கூப்பிடுது.வர்றேன்.

இந்திய தூதரகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்.

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகத்தின் மீது தற்கொலை படை தாக்குதலில் 41 பேர் சாவு.பலர் படுகாயம்.

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு.

Thursday, July 3, 2008

கண்ணா!கண்ணா நெருப்பு நரிக் கண்ணா!

முதல் பிரசவத்தை விட இரண்டாவது பிரசவத்தில் ரொம்ப சந்தோசமா இருக்கே!ஹி...ஹி.வேற ஒண்ணுமில்லீங்க.நெருப்பு நரி 3.0 தரவிறக்கிய சூட்டோட பிரேம்ஜிக்கு கமலின் தசாவதாரப் பேட்டி பற்றிய பதிவுக்கு ஒரு பின்னூட்டம் போட்டாச்சு.

பெரிய தலைகள் நிறைய பேருக்கு பல விசயங்களுக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கு.பதிவுகளின் போது அப்ப அப்ப கண்டுக்கிறேன்.இப்ப ரவிக்கு மட்டும் ஒரு பெரிய நன்றி.காரணம் அவரது பின்னூட்டமே நெருப்பு நரி 3.0க்கு தூண்டுதல்.அப்புறம் நிறைய ரவியார்கள் வலம்வருகிறார்கள்.நீங்க எந்த ரவின்னு கொஞ்சம் காதுல வந்து கூவிட்டுப் போறது?

நெருப்பு நரி சும்மா ஜிவ்வுன்னு இருக்குது.தமிழ் எழுத்துக்களை இரண்டு கண்ணிலேயும் ஒற்றி எடுத்துக் கண்ணால் சலனப்பட்டுப் போகிறேன்.