Followers

Sunday, July 20, 2008

இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் கைசாத்திடல் வேண்டும்

தற்போதைய சூழலில் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் அரசியல்வாதிகளின் குதிரை பேரத்திலும் காலை வாரிவிடும் சந்தர்ப்ப அரசியலாலும் மதில்மேல் பூனையாக ஆட்டம் காணும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.அரசியல் மாதிரியே பதிவுகளும் ஒப்பந்தத்தை ஆதரித்தும் எதிர்நிலை கொண்டும் காணப்படுகின்றன.வாழ்வின் அடிப்படை தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய காலகட்டத்தில் குளறுபடிகள்.எதிர்வினைகள் எழுவது பிரச்சினைகளை அலசிப் பார்ப்பதற்கான வாய்ப்புக்களைத் தருகின்றன.ஆனால் தான் பிடித்த முயலுக்கு மூணுகால்தான் பழமொழிக்கு உரம்போட நினைக்கும் போது மனம் வருத்தமாக இருக்கிறது.

இங்கே ஏ.சி குளிரில் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும்போது என் தேசம் ரெயில்களின் இறுக்கத்திலும்,வாகனங்களின் சுவாசத்திலும் மூச்சு விட திணறிக்கொண்டுள்ளது. உழைத்துக் களைத்து பயணம் செய்து வீட்டுக்கு வந்தமர்ந்தால் கர கர விசிறிக் காற்று கிட்டினால்கூட பரவாயில்லை என சந்தோசப் படலாமென்று பார்த்தால் அந்த நேரம் பார்த்து மின்சார வெட்டு.இதற்கான காரண காரியங்களை மனம் ஆராய்வதில்லை.சின்னத்திரை காவியங்கள் தடையானதில் மனம் எரிச்சலாகிறது.

உலகின் பெரிய தலை ஜனநாயக நாடு என நினைக்கும்போது மனசுக்கு சுகமாக இருக்கிறது.ஆனால் ஜனநாயகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கச்சொல்லி மக்கள் வாக்களித்து அனுப்பிவைத்த தேசபிதாக்கள் மக்கள் பிரச்சினைகளை மறந்து அவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் நேரம் கொள்கிறார்கள்.ஜனங்கள் ஊர்வலம் என்றும் உண்ணாவிரதம் என்றும் இன்னும் எத்தனை காலங்கள் இந்த தொடர் ஓட்டம்? சரி இதை விட்டு புதிய பாதைகள் கிடைக்குமா என ஆராய்ந்தால் எல்லா இஸங்களும் நொள்ளையும் சொள்ளையுமாகவே இருக்கிறது.வேறு வழியில்லை ஜனநாயகமே வாழ்க்கை.அதற்கான வேர்களையும் நாம் ஆழமாகவே விதைத்துள்ளோம்.பிரச்சினை ஜனநாயகமல்ல.அது செயல்படும் முறை.

ஒரு மனுசன் எத்தனை காசுகளைத் தின்ன முடியும்?ஏன் கோடி கோடியென்று கோடித்துணிக்குப் போகுமுன் எத்தனை சுயநலங்கள்?கையீட்டு வாங்கி மாட்டிக்கொண்ட பின் முகத்தை காமிராவுக்கு மூடும் அரசாங்க அலுவலர்.முக்காடு போட்டுக்கொண்டு காவலர் வாகனத்திலிருந்து இறங்கும் மனிதர்கள்.(இங்கே கையூட்டு தருவதாக வாய்மொழியாக சொன்னதற்காக சிறைக்குப்போன செய்திக்கும் நமக்கும் எவ்வளவு வேறுபாடுகள்?)

நாஸ்திகர்களுக்குத்தான் கடவுள் இல்லை.இந்த ஆஸ்திகவாதிகள் ஏன் தவறுகள் செய்கிறார்கள்.வாழ்வின் பிரச்சினைகளின் முன் நாஸ்திகமும் ஆஸ்திகமும் வெறும் ஹம்பக் வேலையா?தனி மனித ஒழுக்கங்கள் மட்டுமே மனிதனை தூய்மைப் படுத்துமா?அப்படியானால் தனிமனித குணநலன்கள் என்றால் என்ன?அது என்ன மரபணு சார்ந்ததா?அப்படியில்லையென்றால் சமூகம் சார்ந்ததா?சார்ந்ததென்றால் எத்தனை சமூக சிந்தனைகள்?வழிகாட்டல்கள்?இத்தனையும் மீறி தவறான மிருகம் மட்டும் வளர்கிறதே?
எனது கவலை என்னவென்றால் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் கொள்கையளவில் தோற்றுப் போனால்கூட பரவாயில்லை.கம்யூனிஸ்ட்டுகள் தமது ஆதரவை விலக்கிக்கொண்ட அடுத்த கணத்திலிருந்து தொடங்கிய அரசியல் ஆடுகளம் கவலையைத் தருகிறது.அதிகாரம் மையப்படுத்தப் படாமல் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பகிர்ந்தளித்து தரும் நடைமுறை நல்லதாகப் பட்டாலும் இதில் குதிரை பேர அரசியல் நுழைந்து கொள்கிறதே?

இன்றைக்கே வித்திட்டு இன்றைக்கே பூ பூக்கணுமாம்.உலக அழகி ஐஸ்வர்யா வாயசத்த தமிழ்ப் பாட்டு ஞாபகம் வருகிறது.அட! ஒப்பந்தம் செய்துகொண்டால் இன்னும் 15 வருசம் கழிச்சுத்தான் மின்சாரம் கிட்டும்.அந்த மின்சாரம் நமக்கெதற்கு என்று ஒரு கோஷ்டி.
ஐயா! நேற்றுதான் சிவாஜிகணேசன் (கலிகாலம் பாருங்க... கணேசனையும் கூட பக்கத்துணைக்கு இழுக்க வேண்டி இருக்கு) கமல்கிட்ட சொல்றாரு."அப்பு இன்னைக்கு நான் விதை விதைக்கிறேன்.அதை நாளைக்கு நீ சாப்பிடுவ...அதுக்கப்புறம் உனது மகன் சாப்புடுவா...)இதுதானுங்க ஒப்பந்தத்தின் ஒரு பக்க சாரம்.

இன்னொருத்தரு சொல்றாரு பாருங்க" நாங்க இருட்டுல இருந்தாலும் இருப்போமே ஒழிய இந்த ஒப்பந்த வெளிச்சம் வேண்டாம்" ங்கிறாரு. என்னத்த சொல்ல போங்க.ஐயா!மெழுகிவர்த்தி விளக்குலயும்,கெரேசின் புகையிலும் ஒரு ஜெனரேசன்(தமிழ்...தமிழ்)கஷ்டப்பட்டதுங்க.இப்போதக்கோ அப்போதைக்கோன்னு பயம் காட்டும் மஞ்சக்காமாலை பல்பு விளக்கிலும் எனது தேசத்தில் கொஞ்சம்பேர் சாதித்துக்கொண்டுள்ளார்கள்.அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

ஆனால் இப்போதைக்கு மஞ்சக்காமாலை குண்டுபல்பும் வெளியேறும் காலகட்டத்திற்கு வந்துவிட்டோம்.நானே பாருங்க வீட்டுக்குப் பக்கத்தில் பொட்டிக்கடையில 150வாட்ஸ் குண்டு பல்பு வாங்கி வாங்கியே சோர்ந்து போயிட்டேனுங்க.சும்மா இருக்குற நேரத்துக்கு பிட் படம் பிடிக்க டப்பா ஏதாவது கிடைக்குதான்னு ஒரு அமெரிக்கத் தயாரிப்பாக்கான(பெயர் எ.சி.இ.ஆர் ஏசர்) கடைக்குப் போனால் வெள்ளி மாதிரி பல்புக்கு முகமூடி போட பல்பு ஷேட் ஒண்ணு கிடைச்சது.அதுக்கு ஏத்தமாதிரி ரிப்ளக்டர் பல்பு ஏதாவது கிடைக்குமான்னு பார்த்தால் அதுவும் கிடைச்சது.வீட்டுக்கு வந்து அதுக பாட்டுக்கு பரணுல தூங்குது.ஒருநாள் வழக்கம்போல நம்ம குண்டு பல்பு டப்.சரி அவசரத்துக்கு இதை மடிக்கணினிக்கு உபயோகிக்கலாமுன்னு வச்சா பட்டனை அமுக்கினால் அந்த ரிப்ளக்டர் பல்பு எரியுது எரியுது இன்னிக்கு வரைக்கும் எரியுது.கூட கண்ணுக்கும் குளிர்ச்சி.(நீதிக்கதை என்னவென்றால் தொழில்நுட்பம் மாற மாற நாமும் மாறவேண்டும்.கணினி உபயோகிப்பதில் கூட பிரச்சினைதான் அதற்காக உபயோகிக்காமலா இருக்கிறோம்).

இனி இந்த அமெரிக்க ஒப்பந்தம் என்றால் வேண்டாம் என்று ஒரு குழு.ஐயா இந்த ஒப்பந்தம் ஒரு கொடுக்கல் வாங்கல் வியாபாரம்.வியாபாரத்துக்கு அடிப்படையே நம்பிக்கை.அதற்கும் அப்பால்தான் காகித வேலைகள்.காகித எழுத்துக்கள் மீது மாற்றம் தேவையென்றால் பிரச்சினையில்லை.வியாபார நம்பிக்கை மீது காழ்ப்புணர்ச்சி கொண்டால் வியாபாரம் எப்படி செய்வது?

எப்படியோ இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இந்தியாவுக்கும் எதிர்கால சந்ததிகளுக்கும் பயன் தருமானால் நல்லது. இல்லை குதிரை பேரத்தில் அரசாங்கம் கவிழ்ந்து நிலைகுலையுமானால் அதன் தோல்விகளை அரசாங்கம் மட்டுமல்ல இந்திய மக்கள் அனைவரும் எதிர்காலத்தில் சுமக்கவேண்டி வரும்.நாளை மறுநாள் இதற்கான கேள்வியின் முடிவு தெரியும்.

19 comments:

பிரேம்ஜி said...

நடக்கும் நிகழ்வுகளை பார்த்து அனைவரையும் போல் நீங்களும் ஆயாசம் அடைந்துள்ளீர்கள் என தெரிகிறது.
//பிரச்சினை ஜனநாயகமல்ல.அது செயல்படும் முறை//
மிகவும் சரி.
பார்ப்போம் என்ன நடக்கிறது 22 ஆம் தேதி அன்று.

ராஜ நடராஜன் said...

பிரேம்ஜி.எவ்வளவு திறமைகள் வளமைகள் நம்மிடம்.எல்லாம் உபயோகமில்லாமல் போய்விடுமோன்னு நினைக்கும் போது உண்மையிலேயே ஆயாசமாகத்தான் இருக்கிறது.

Anonymous said...

ஆஹா! என்ன நாசுக்கான ஆள் பிடிக்கும் வேலை-அமெரிக்காவிற்கு! பக்கத்திலுருக்கும் ஈழத்தில் என்ன வசதி இருக்கு?அவர்கல்லேல்லாம் போர் செய்யவில்லையா! பெட்ரோல் டீசல் மின்சாரம் இல்லாமல் சமாளிகவில்லையா?நாடாளுமன்ற கயவாணி பயலுகளுக்கு உரமேற்ற வேண்டாம். சுய மரியாதையுடன் வாழ பழகுவோம். சதாம் கதி இந்திய கண்டத்தை ஆளுவோருக்கு ஏற்பட வேண்டாமே!

ராஜ நடராஜன் said...

அனானியாரே!வணக்கம்.உங்க கருத்துதானே சொல்றீங்க?ஏன் முகமூடி?நீங்க நம்பினாலும் சரி இல்லாட்டியும் சரி.எனக்கு வரும் முதல் அனானிப் பின்னூட்டமும் நான் எழுதும் முதல் அனானிக்கான பதிலும்.பேரோட வாங்க புடிச்சா பழகுவோம்.நண்பர்களாவோம்.

venkateshwaran said...

you are saying practical..

k.venkateshwaran said...

you speaking the practical..

புதுகைச் சாரல் said...

நாடாளுமன்ற ............உரமேற்ற வேண்டாம். மரியாதையுடன் வாழ பழகுவோம். ச... கதி இந்திய கண்டத்தை ஆளுவோருக்கு ஏற்பட வேண்டாமே!
http://mohideen44.blogspot.com/

ராஜ நடராஜன் said...

புதுகைச் சாரல் வாங்க.வணக்கம்.எதற்கும் எதற்கும் ஒப்புமை சொல்கிறீர்கள்?லாஜிக்கோட பிரச்சினைகளை அணுகலாமே?

ராஜ நடராஜன் said...

//you are saying practical..//

Sir!Thanks for your positive comment.

கிரி said...

//சின்னத்திரை காவியங்கள் தடையானதில் மனம் எரிச்சலாகிறது//

:-)))))))))

//ஜனநாயகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கச்சொல்லி மக்கள் வாக்களித்து அனுப்பிவைத்த தேசபிதாக்கள் மக்கள் பிரச்சினைகளை மறந்து அவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் நேரம் கொள்கிறார்கள்//

சிறு திருத்தம்..பெரும்பாலான படித்தவர்கள் வாக்களிப்பதே இல்லை, அதுவும் இந்த நிலைமைக்கு காரணம்.

எனக்கு இந்த பிரச்சனை பற்றி முழு விவரம் தெரியாததால்(கேவலமாக இருக்கிறது இதை கூற) இது பற்றி கருத்து கூறவில்லை.

ச்சின்னப் பையன் said...

தல.. எனக்கு ஒரே ஒரு கேள்விதான்...

நான் என் வீட்டுக்கு பல்ப் வாங்கறதும், கணிணி வாங்கறதும் - என் தனிப்பட்ட பிரச்சினை. யாருக்கும் எந்த இழப்பும், அதில் பங்கும் இல்லை.

ஆனா நாட்டுக்கு ' நல்லது' செய்யறேன்னு சொல்றவங்க - அதை ஏன் பகிங்கிரமா மன்றத்திலே விவாதிக்க மறுக்கறாங்க?

Dharan said...

//ஐயா! நேற்றுதான் சிவாஜிகணேசன் (கலிகாலம் பாருங்க... கணேசனையும் கூட பக்கத்துணைக்கு இழுக்க வேண்டி இருக்கு) கமல்கிட்ட சொல்றாரு."அப்பு இன்னைக்கு நான் விதை விதைக்கிறேன்.அதை நாளைக்கு நீ சாப்பிடுவ...அதுக்கப்புறம் உனது மகன் சாப்புடுவா...)///

Nice example.

ராஜ நடராஜன் said...

//பெரும்பாலான படித்தவர்கள் வாக்களிப்பதே இல்லை, அதுவும் இந்த நிலைமைக்கு காரணம்.//

கிரி வணக்கம். படித்தவர்கள் வாக்களிக்க வேண்டும்,சமூக அக்கறை கொண்டவர்களாக மாற வேண்டும் என்ற நிலை வரவேண்டும்.சமூக அக்கறைக்கு ஒரு சின்ன நடைமுறை உதாரணம் பார்க்கலாமே.

நேற்று தமிழ் சின்னத்திரை ஊடகங்களெல்லாம் வழக்கம்போல் தமது அன்றாட நிகழ்ச்சிகளை சேனல் படுத்தும்போது பக்கத்து வீட்டு சேட்டன்கள் ஆசியாநெட்டில் நேற்றைய பாராளுமன்ற விவாதங்களை ஆணிவேர் அக்குவேராக கட்சிக்கு ஒருவர் சார்ந்து விவாதிக்கிறார்கள் இரவு 1.00 மணிவரை.

தெரியவில்லை என்று ஒப்புக்கொள்வது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது.எல்லோரும் எல்லாமே தெரிந்தா வைத்திருக்கிறோம்.எல்லாமே கற்றல்தானே.123 ஒப்பந்த நகலுக்கு இதைப் பாருங்க.

http://www.state.gov/r/pa/prs/ps/2007/aug/90050.htm

அப்புறம் கோவை பதிவர் சந்திப்பு எப்படி இருந்தது?

ராஜ நடராஜன் said...

//தல.. எனக்கு ஒரே ஒரு கேள்விதான்...//

தல எனக்கு(ம்) ஒரே கேள்விதான்.இந்த அவ்வ்வ்வ் க்கு காப்புரிமையாளர் நீங்களா அல்லது குசும்பரா?

நாட்டுக்கு நல்லது செய்யறவங்க போடும் ஒப்பந்தம் அமெரிக்காவினுடையது.கம்யூனிஸ்ட்டுகளுக்கோ அமெரிக்க முதலாளித்துவம் பிடிக்காது.எனவே கொள்கை அடிப்படையில் எப்படியும் ஒப்பந்தத்தை தடுத்தே நிறுத்தப் பார்க்கிறார்கள்.மன்மோகன் சிங்கின் குழுவோ அதற்கான சந்தர்ப்பத்தை தரக்கூடாது நழுவுகிறார்கள்.இதே ஒப்பந்தம் சீனாவுடன் என அவர்களிடம் சொல்லிப்பாருங்களேன்.

ராஜ நடராஜன் said...

தரண் வருகைக்கு நன்றி.கூடவே உதாரணத்துக்கு குட்டு வைத்ததற்காக.

கிரி said...

நீங்கள் கொடுத்த சுட்டி ஆங்கிலத்தில் இருப்பதால் புரிய சிரமமாக இருக்கிறது. தமிழில் இது பற்றி எதுவும் இருந்தால் கூறுங்கள்.

//அப்புறம் கோவை பதிவர் சந்திப்பு எப்படி இருந்தது?//

நான் குறைந்த நேரமே இருந்தேன்..அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் நீண்ட நேரம் இருக்க விரும்புகிறேன். அனைவரையும் பார்க்க வாய்ப்பு கிடைத்தும் பேச முடியாமல் போய் விட்டது. கஷ்டமாக இருந்தது.

அடுத்த முறை வர நீங்கள் முயற்சி செய்யுங்கள்.

ராஜ நடராஜன் said...

//அடுத்த முறை வர நீங்கள் முயற்சி செய்யுங்கள்//

கிரி.நம்மூர்தானே வந்துட்டாப்போச்சு.பிரச்சினை என்னன்னா இங்கே முதலாளிக்கு அடுத்த ரூமுல உட்கார்ந்துகிட்டு பெர்மிட் இல்ல பெர்மிசன்,வேலை பாதிக்காம மாற்று ஏற்பாடு அதவிட முக்கியமா படுபாவிக எந்த நிறுவனமா இருந்தாலும் பாஸ்போர்ட்ட புடுங்கி வச்சுக்கிறானுங்க.அப்புறம் எங்கே திடீர்ன்னு வர்றது?அதுதான்.

மருதநாயகம் said...

அரசு தப்பித்தது!

ராஜ நடராஜன் said...

//அரசு தப்பித்தது!//

வாங்க தல.ஜெயிச்சிட்டோமில்ல:)))))

கூடவே இந்தியன் தாத்தாவையும் அனுப்பி வைக்கணும்.லஞ்சம் வாங்குவதும் குற்றம்.தருவதும் குற்றம். கூடவே பொய் திரிப்புக்கள் இருக்கா என்று கண்டு பிடிக்கவும் தாத்தாவின் வருகை கட்டாயம் தேவை.

மருதநாயகம் பேருக்குத் தகுந்தாற்போல் வரலாற்று சான்றுகள் நிறைய கைவசம் வச்சிருக்கீங்க போல.வாழ்த்துக்கள்.