சிந்திப்பதே தவறு.ஏனென்றால் சிந்திக்கும் போது சுயநலங்களை கடந்து மனம் சுதந்திரமாக பறக்கிறது.சமூக அவலங்களை நினைத்து கவலைப்படுகிறது.அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் தொலைந்து போன தமிழை மீண்டும் கண்டுபிடித்ததும் கூட தவறோ?என்னவெல்லாம் புலம்ப வைக்கிறது.
மீன் பிடித்துக் கொண்டிருக்கலாம்,காமிராவை தூக்கிக் கொண்டு கடல் அலைவரிசைகளை நில் என்று சொல்லியிருக்கலாம்.பாடல்களின் இனிமையில் மெய்மறந்திருக்கலாம்.எதையும் யோசிக்க வேண்டாமென்று தொலைக்காட்சிகளை சுழற்றிக் கொண்டிருக்கலாம்.இது என்ன சோதனையும்,வேதனையும் தொண்டைக்குழியில் முட்டிக் கொண்டு நிற்கும் குமுறல்களை பொதுவிலே வை என்று மூளை கரங்களுக்கு கட்டளையிடுவது?யாரிடம் உன் சொல் விளையாட்டு!வேண்டாமே இந்த எழுத்துப் பரிட்சை.இருந்தும் மனதின்,சில நட்பின் சிபாரிசுகள் இங்கே முறியடிக்கப்படுகின்றன.
குடும்பம் சிதறி,வீடிழந்து,நாடிழந்து,சுய உரிமைகளையும் இழந்து,அரசியல் அவலங்களால் அலைக்கழிக்கப்படும் ஒரு வயதான மூதாட்டிக்கான குரல் இது.தமிழ் கற்ற குற்றத்தாலேயே மானுடம் குறித்த கவலைகள் எல்லாம் இங்கே வேற்று திசையிலும் கூட நோக்கப்படும்.
உலக நிகழ்வுகள் மட்டும் மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறது.ஆனால் வரலாறு மட்டும் மீண்டும் கண்ணாடிக்குள் தன் முகத்தை திரும்பி பார்த்துக் கொண்டே செல்கிறது.துடிப்பையும்,மனதின் கோபத்தையும் சில தினங்களுக்கு முன் சில இளைஞர்கள் பார்வதி அம்மாள் திரும்ப மலேசியா அனுப்ப பட்டது குறித்து எழுப்பிய குரல்கள் தொலைக்காட்சியில் காண நேர்ந்தது.அதே மாதிரியான துடிப்பும்,சமூக ஆர்வமும் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து கல்லக்குடி கொண்டான் தன் பெயர் சூட்டிக் கொண்ட ஒரு இளைஞனுக்கும் இருந்திருக்கும்.
M.A படித்திருந்தால் மட்டும் போதாது,நாவன்மையோடு சூழ்ச்சிகளும்,சகுனித்தனமும் மட்டுமே அரசியலை நிலைநாட்டும்,நட்புடன் இருந்தவனே நில பங்காளி என்ற வரலாற்றையும் எழுதி வைத்தாகி விட்டது.நெஞ்சுக்கு நீதி வாய்ப்புக்கள் கிடைத்தால் உண்மைகளின் சதவீதம்,ஒப்பனைகள்,சூழ்ச்சிகள்,உழைப்பின் பங்கு,அரசியல் பித்தலாட்டங்கள்,சுயநலங்கள்,சாதனைகள் என்று மெல்ல இனி வரும் காலம் மீள் பார்வை செய்யும்.சாதனைகளை ஒரு வேளை இதே சாம்ராஜ்யம் தொடரும் பட்சத்தில் பள்ளிப்பாட புத்தகங்கள் கூட சொல்லி வைக்கும்.அங்கே சொல்லாதவைகளையும் சிலர் பார்வையிடவும் இங்கே சில சொல்லாடல்கள்.
சிலம்பும்,சிலப்பதிகாரமும் கோவலனால் சிறப்புற்றதோ,அரசு துறந்து துறவறத்தில் இலக்கியம் படைத்த இளங்கோவால் சிறப்பானதோ தெரியாது.இலக்கியத்தின் திரிபுகள் என்னவென்றும் காலம் எழுதி வைக்கவில்லை.இருந்த பூம்புகார் பட்டினமும் கடல் கொண்டு போய் விட்டது.ஆனால் பத்திரிகை பார்த்தே உலமறிந்த முந்திய ஒரு தலைமுறைக்கும்,இணையம் கொண்டு வரும் உண்மைகளின் இன்றைய தலைமுறைக்கும் கோவலன்,மாதவியை விட கண்ணகியும்,கண்ணகியின் சிலம்பும் மெரினாவின் அலைகளுடன் சிலையாக நின்றதையே பாமரனுக்கும் கூட சொல்லி வைத்தது சாதனைதான்.
இலக்கியம்,கவிதை,வசனம்,எழுத்து,அரசியல்,பேச்சின் நாவன்மை என்ற பன்முகங்கள் இன்றைய வரலாற்றோடு கூடவே பயணிக்கிறது.பாண்டிய மன்னர்களின் வரலாற்றை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும்,சோழர்களின் வரலாற்றை தஞ்சை கோயிலும்,பல்லவர்களின் பண்புகளை கற்பாறை ஓவியங்களும் மாமல்ல புரமும் பறைசாற்றிக்கொண்டிருப்பது போல் இன்றைய தி.மு.கவின் வரலாற்றின் சாட்சியாக திருவள்ளுவன் சிலையும் எதிர்கால சந்ததிகளுக்கு பாடங்கள் சொல்லும்.
கூடவே இன்னும் எழுதப்படாத அத்தியாயங்களும் ஒரு ஆட்சியின் மறுமுகத்தையும் காட்டக் கூடும்.முத்துப்பரல்கள்,மாணிக்கப்பரல்களின் குழப்பத்தால் பாண்டிய மன்னன் தடுமாறி அறம் பிழைத்தானோ அதே வரலாற்றுச் சுற்றில் போராட்ட குணமிழந்து,குடும்பம்,சுயநல கணக்குகளுடன் ஈழத்தின் உரிமைகளை நீர்த்துப்போக செய்ததும் தமிழக அரசியலில் எழுதி வைக்கப்படும்.
அதை விட அரசியல் அறம் பிழைத்தவன் என்ற குற்றம் பார்வதி அம்மாள் விமானத்தளத்திலிருந்து திருப்பி அனுப்பிக்க வைக்கப்பட்டதையும் வரலாறு எழுதி வைக்கும்.
திராவிட சிந்தனைக்கே மஞ்சள் துண்டு பரிகாரம் இருக்கும் போது பார்வதி அம்மாள் இந்திய இறையாண்மையில் கட்டம் கட்டுவதை நீக்குவதற்கும்,மருத்துவம் பார்ப்பதற்கும் பரிகாரம் செய்ய இயலாதா?
பார்வதி அம்மாள் தமிழக விமான தளத்துக்கு வர மறுப்பு என்ற தினத்துக்கான மனப்பிரவாகம் இது.வலையில் ஊறும் நண்டு மாதிரியான சில்லுண்டி ஒன்று பார்வைகளையெல்லாம் தடம்புரள செய்து விட்டது.அதன் காரணம் கொண்டே தூதுக்கடிதத்துடன் தாமதமாக விமானம் சென்னை நோக்கிப் புறப்படுகிறது.
15 comments:
//திராவிட சிந்தனைக்கே மஞ்சள் துண்டு பரிகாரம் இருக்கும் போது பார்வதி அம்மாள் இந்திய இறையாண்மையில் கட்டம் கட்டுவதை நீக்குவதற்கும்,மருத்துவம் பார்ப்பதற்கும் பரிகாரம் செய்ய இயலாதா?//
குடும்ப பாசக்கிளிகள், அவர்களுக்கான வரும் கால அரசியல் முன்னெடுப்புகள்... இதையெல்லாம் வீட நேர்மையும் இன உணர்வும் பெரிதா ?
நம்மால் புலம்பத்தான் முடியும், அரசியலை ஒருநிறுவனமாக்க எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இருப்பார், இப்ப லாபம் அடைகிறார்....அவ்வளவு தான். இதுல தலைவன் தொண்டன் என்றெல்லாம் சொல்லும் கூட்டம் நினைப்பதே இல்லை
//குடும்ப பாசக்கிளிகள், அவர்களுக்கான வரும் கால அரசியல் முன்னெடுப்புகள்... இதையெல்லாம் வீட நேர்மையும் இன உணர்வும் பெரிதா ?
நம்மால் புலம்பத்தான் முடியும், அரசியலை ஒருநிறுவனமாக்க எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இருப்பார், இப்ப லாபம் அடைகிறார்....அவ்வளவு தான். இதுல தலைவன் தொண்டன் என்றெல்லாம் சொல்லும் கூட்டம் நினைப்பதே இல்லை//
கோவி.கண்ணன்!உங்கள் முதல் குரலுக்கு நன்றி.
கோவி.கண்னன்!நன்றி சொல்லும் அவசரத்தில் உங்களுக்கு மறுமொழி சொல்ல மறந்து விட்டேன்.
தினத்தந்தி படிச்ச காலத்திலும்,மேடைப்பேச்சில் சொக்கிய காலத்திலும் தொண்டனுக்கு இது தனி நிறுவனத்திற்கான உழைப்பு என்பது தெரியாமல் போய் விட்டது.இன்னும் கூட ஏதோ ஒரு ஏதோ ஒரு மயக்கம் மட்டுமே பலருக்கும்.தொண்டர்களையும் ஒரு விதத்தில் குறை சொல்லி பயனில்லை.எதிர்த்த கரையில் இதை விட ஒரு தன்னாட்சி நிறுவனம்.
ம்ம்ம்
//ம்ம்ம்//
நீங்க வெறும் ம் சொன்னாலே போதும்:)
'நான் இல்லை... நான் இல்லை'என்று பலரும் இந்த விடயத்தில் கையை உயர்த்துகிறார்கள். அறிக்கைகள் பறக்கின்றன. உண்ணாவிரதங்கள் ஆரம்பித்துவிட்டன. 'நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு' என்று பெருமூச்செறியவே முடிகிறது.
//'நான் இல்லை... நான் இல்லை'என்று பலரும் இந்த விடயத்தில் கையை உயர்த்துகிறார்கள். அறிக்கைகள் பறக்கின்றன. உண்ணாவிரதங்கள் ஆரம்பித்துவிட்டன. 'நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு' என்று பெருமூச்செறியவே முடிகிறது.//
வணக்கம் தமிழ்நதி!ஒரு தனிமனிதன் சார்ந்த போராட்டம் திசை மாறிப்போனதால் என்ன என்ன அவலங்கள்.கையைக் காட்டும் தனிமனிதர்களிலும் ஒருவரிடமாவது ஏதாவது நடந்து போக வேண்டிய பாதைக்கான அடையாளங்களை கேட்கவும் முடியவில்லை.புலம்பெயர்ந்த குரல்களோ எதிரும் புதிரும்.ஈழத்துக்குள்ளே ஈனஸ்வரம்.வார்த்தையில் சொல்ல இயலாது.இந்த சிலுவையை நாம் இன்னும் கொஞ்ச காலமாவது சுமந்துதான் நடக்க வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
//இந்த சிலுவையை நாம் இன்னும் கொஞ்ச காலமாவது சுமந்துதான் நடக்க வேண்டும்.//
ஈழத்தமிழனுக்கு பாரங்கள் சுமப்பதும் இழப்பதும் புதிதல்ல.எத்தனை காலம் என்பதில்தான் !
/என்னவெல்லாம் புலம்ப வைக்கிறது./
பெரும் அவஸ்தை. என்னத்தச் சொல்ல.
நெஞ்சுக்கு மட்டுமில்ல ...... எதற்குமே நீதியில்லை..
எதையும் செய்ய முடியாமல், வெறுமனே இதையெல்லாம் நினைத்து நினைத்துப் பொருமி மன/ரத்த அழுத்தம் போன்ற வியாதி தான் வரும் போல, தீர்வுகள் எதுவும் வருவது போலத் தெரியவில்லை. காலம் பதில் சொல்லட்டும்.. வேக வேகமாக.
//ஈழத்தமிழனுக்கு பாரங்கள் சுமப்பதும் இழப்பதும் புதிதல்ல.எத்தனை காலம் என்பதில்தான் !//
வணக்கம் ஹேமா!இப்போதைக்கு உள்ள தூரம் 2011-12 என்பது எனது கணிப்பு.ஆனால் மேய்ப்பனில்லா ஆடுகள்.அதன் காரணம் கொண்டே ஆடுகள் பலதிசைகள் மேய்கின்றன.வழிகாட்டும் மேய்ப்பனில்லாத வரை கோலியாத் மேல் கல் எறியும் சாம்சன்களாய் நாம்.நன்றி.
//பெரும் அவஸ்தை. என்னத்தச் சொல்ல.//
வானம்பாடிகள் அண்ணா!எழுத்தாக மட்டுமல்லாமல் உங்கள் உணர்வாக உணர்கிறேன்.நன்றி.
//நெஞ்சுக்கு மட்டுமில்ல ...... எதற்குமே நீதியில்லை..
எதையும் செய்ய முடியாமல், வெறுமனே இதையெல்லாம் நினைத்து நினைத்துப் பொருமி மன/ரத்த அழுத்தம் போன்ற வியாதி தான் வரும் போல, தீர்வுகள் எதுவும் வருவது போலத் தெரியவில்லை. காலம் பதில் சொல்லட்டும்.. வேக வேகமாக.//
தமிழ்ப் பெருங்கோவே!இது எங்க ஏரியா உள்ளே வராதீங்க:)ரத்த அழுத்தங்களை குறைப்பதற்குதான் உங்க கடை இருக்குதே.கொஞ்சம் கணினி சார்ந்த விசயங்களை தெரிந்து கொள்ளும் போது அழுத்தங்களுக்கான மருந்து மாதிரி.தொடருங்கள்.
சமீபத்திய எரிமலையும்,விமான தளங்கள் தூங்கி விட்டதையும் பற்றி அழகான களம் கிடைத்தது.இது வரை அதுபற்றி இடுகை ஒன்றையும் காணோம்.
தீர்வுகள் கண்முன்னே இலைமறை காயாக இருக்கின்றது.வில் எடுப்பவர்கள் அர்ஜுனனாக இல்லை.
//அரசியல் அறம் பிழைத்தவன் என்ற குற்றம்//
அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும் என்று அதே சிலப்பதிகாரத்தில் உள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு கூற்றாவதுகூட அறமே...
//அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும் என்று அதே சிலப்பதிகாரத்தில் உள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு கூற்றாவதுகூட அறமே...//
பாலாசி!சிலப்பதிகாரம் சொல்லி விட்டும் அரசியல் பிழை செய்வதனாலேதானே விமர்சனத்தை முன்வைக்க வேண்டியிருக்கிறது.உங்கள் கருத்துக்கு நன்றி.
(எப்ப ஊருக்கு போறீங்க?போயிட்டு வந்து காந்தி கடிதம் பற்றி மீண்டும் ஒரு இடுகையிட வேண்டுகிறேன்)
Post a Comment