இந்திய அரசியலமைப்பு சட்டம், பாராளுமன்றம், குற்றவியல், நீதித்துறை, மக்களாட்சி போன்ற ஜனநாயகத்தின் தூண்கள் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் மூவரின் மரணதண்டனை இடைக்கால தடை முக்கியமான ஒரு கால கட்டத்திற்கு வந்துள்ளது.இதற்கு முன்பும் நீதிமன்ற மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட சான்றுகள் இருந்தாலும் முந்தைய பிரதமர் ராஜிவ் காந்தி மரணம் நிகழ்ந்த விதம்,சோனியா குடும்பத்தாரின் அரசியல் பங்கீடு மற்றும் காங்கிரஸ் விசுவாசிகளின் அழுத்தம்,நீதிமன்ற தீர்ப்பின் காலகட்டம், தமிழர்களின் உணர்வு போன்றவை மரணதண்டனை குறித்தான புதிய கேள்விகளைஉருவாக்கி உள்ளது.
ஒருபக்கம் மரணதண்டனையை நிறுத்துவது குற்றங்களை ஊக்குவிக்கும் என்றும்,இன்னொரு பக்கம் ஒரு உயிரைக் கொல்லும் அதிகாரம் இன்னொரு மனிதனுக்கு இல்லையென்ற மனித உரிமைக்குரல்கள் என்ற இருபக்கங்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளன. நேற்றும் கூட ஒரு நீதிபதி மரணதண்டனை விதித்தால் மட்டுமே இன்னொருவன் குற்றங்களுக்கு பயந்து குற்றம் செய்ய மாட்டான் என்று NTDV யில் கருத்து தெரிவித்தார்.தேசிய அளவில் தமிழக மக்களின் குரலும், மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க வேண்டுமென்ற அ.தி.மு.க அரசின் சட்டசபை தீர்மானமும் இன்னும் தலைக்கு மேல் கயிறு தொங்கிக் கொண்டிருக்கும் மரணதண்டனை இடைக்கால தடையும் என்ன பாதிப்புக்களை உருவாக்கும் என்ற கருத்துரையாடல் என்.டி.டிவியில் நிகழ்ந்தது.
மரணதண்டனைக்கு ஆதரவாக சுப்ரமணியன் சுவாமி,காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி, ராஜிவ் காந்தி கொலைவழக்கை துப்பு துலக்கிய கார்த்திகேயனும்,மரணதண்டனைக்கு எதிரான குரலாக வழக்கறிஞர் வைகை,மீனா கந்தசாமியும் குரல்கொடுத்தார்கள்.நீதிமன்ற தீர்ப்பின் சார்பாக ஜெசிகா லால் கொலைவழக்கில் தீர்ப்பு வழங்கிய முன்னாள் நீதிபதி ஆர்.எஸ்.சோதி(R.S.sodhi)யும் பங்கு பெற்றார்கள்.பர்கா தத்தின் நிகழ்ச்சியின் முன்னுரையாக கிரிமினல் லாயர் ராம் ஜெத்மலானி மரணத்தின் வலி 30 வினாடிகள் என்றும் 11 வருடங்கள் தாமதிக்கப்பட்ட கருணைமனு ஆயிரம் மரணதண்டனைகளுக்கு சமம் என்ற தொலைபேசி வாக்கியங்களோடும், சோவின் நிலைப்பாடான மூவருக்கான நீதிமன்ற இடைக்காலத்தடை போல் மற்றவர்களும் கேட்பார்கள் என்ற பெருந்தன்மையான கவலையுடனான கருத்துரையாடல் துவங்குகிறது.
கலந்துரையாடலில் சுப்ரமணியன் சுவாமி தனது வாதத்திற்கு துணையாக இந்திய ராணுவம் இலங்கை சென்றது பற்றியும் விடுதலைப்புலிகள் மீதான வெறுப்பைக் காட்டினாலும் மரணதண்டனைக்கு எதிரான தமிழர்களின் குரலின் பின்ணணியில் சோனியா காங்கிரஸின் இலங்கைப் போர்க்குற்றங்களுக்கான ஆதரவு இருப்பதை பதிவு செய்யாமல் மூவரின் மரணதண்டனை இடைக்கால தடையை அப்சல் குருவின் மரணதண்டனையோடு ஒப்பிட்டு மட்டுமே விவாதம் முடிவடைகிறது.
ஆங்கில வாதங்களை நேரில் காண நேரமுள்ளவர்கள் இங்கே போய் கேட்கலாம்.
http://www.ndtv.com/video/player/news/rajiv-killers-should-they-hang/209435
(ஒருவேளை இன்னும் சில தினங்களில் தொடுப்பு நீக்குவார்கள் என்று இணைக்கவில்லை)
நேரம் இல்லாதவர்களுக்கும் பதிவுக்கு இணைய பூ சர்க்கரையாக...
பர்கா தத் முன் வைத்த முதல் கேள்வியாக ரேணுகா சவுத்ரியிடம் இடைக்கால தடை குறித்து நீங்கள் வருத்தப்படுகிறீர்களா என்பதற்கு காங்கிரஸ் நிலைப்பாட்டில் பதவி சுகம் அனுபவிப்பவர் என்ன சொல்வார் என்று சொல்லத்தேவையில்லை.இருந்தாலும் தமிழக சட்டசபை தீர்மானம் தமிழக அரசைப்பொறுத்தவரையில் சரியாக இருக்கலாம்.இந்திய பிரஜையாக இது குறித்து கவலைப்படுகிறேன் என்றார்.
ரேணுகா சவுத்ரியின் கருத்துக்கு சுப்ரமணி சுவாமி ஏன் சிரித்தீர்கள் என்று பர்காதத் கேட்டதற்கு முன்பொரு முறை 2G விவாதத்தில் ஜெயந்தி நடராஜனுக்கு சட்டம் தெரியாது என்று மூஞ்சியை கிழித்த மாதிரியே ரேணுகா சவுத்ரிக்கும் ஒன்றும் தெரியாது என்ற சுப்ரமணியன் சுவாமி தமிழக சட்டமன்ற தீர்மானம் மக்கள் அழுத்தங்களுக்கு பயந்த கோழைத்தனமானது என்றும் இதனால் எந்த தாக்கமும் இல்லையென்றார்.(It has a no impact at all)தமிழக சட்டசபை தீர்மானம் கோழைத்தனமானதா என்ற கேள்வியை ரேணுகா சவுத்ரியிடம் பர்காதத் திருப்ப இதுபற்றி தான் ஒன்றும் சொல்வதற்கில்லை என ரேணுகா தப்பித்துக்கொண்டார்.சுப்ரமணியன் சுவாமி ஒரு சிரிப்பை காமிராவுக்கு தந்தார்.
அடுத்து வழக்கறிஞர் வைகை அவர்கள் மூவரும் தடா மீதான குற்றத்தில் தண்டனை விதிக்கப்பட வில்லையன்றும்,கொலைக்குற்றம் தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டார்கள் என்றும் தமிழக சட்டசபை தீர்மானம் கோழைத்தனமானது அல்ல என்றும் தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பது சட்டசபையின் பணியென்றும் வாதித்தார் வழக்கறிஞர் வைகை.பர்கா தத்தின் அடுத்த கேள்வியான மரணதண்டனைக்கு எதிரான குரலாக ஒலிக்கிறீர்களா அல்லது வெளிப்படைத்தன்மையில்லாத தீர்ப்பின் அடிப்படையில் வாதிக்கிறீர்களா என்றதற்கு 1998ம் வருடத்தில் கொலை குற்றத்திற்கு 1999ல் கருணைமனு கவர்னரால் நிராகரிக்கப்பட்டு 2000ம் வருடம் முதல் நிறுத்திவைக்கப்பட்ட காலம் கடத்திய அடிப்படையிலே தனது கருத்து என்றார்.
திரும்பவும் பர்காதத் சுப்ரமணியன் சுவாமியிடம் கேள்வி எழுப்ப முந்தைய அரசுகள் காலம் கடத்தின என்றும் இதே கருணைமனுவை அப்சல்குருவும் கேட்க கூடும் என்றார்.
அடுத்து முன்னாள் ஜஸ்டிஸ் ஆர்.எஸ்.சோதியிடம் பர்காதத் திரும்ப நீதிமன்ற தீர்ப்பை மாற்ற இயலாதென்றும் இங்கே பிரச்சினையென்னவென்றால் கால தாமதமாக்கப்பட்ட தீர்ப்பு என்று குறிப்பிட்டார்.இரண்டு வருட கால தாமதமான மரணதண்டனையே ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதென்றும் மூவரின் மரணதண்டனையின் காலம் 11 வருடங்கள் நீட்டிக்கப் பட்டுள்ளதென்றும் சொன்னார்.பர்கா தத்தின் மறுகேள்வியான இந்த மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்ற முடியுமா?முடியாதா என்ற கேள்விக்கு ஆம் என்று ஆர்.எஸ்.சோதி பதில் அளித்தார்.
இப்பொழுது முன்னாள் சி.பி.ஐ அதிகாரியும்,ராஜிவ் காந்தி கொலைவழக்கின் காலங்களை நினைவுபடுத்துபவருமான கார்த்திகேயனிடம் பூனைக்குட்டி இப்பொழுது வெளிவருமென்று கவலைப்படுகிறீர்களா என்றதற்கு (Are you worried about the pandora box will be opened now?) நான் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லையென்றும்,மூவரின் மரணதண்டனை நீக்கப்பட்டால் தனக்கு மகிழ்ச்சியே என்றும்,தான் தனது கடமையைச் செய்தேன் என்றும் சொன்னார்.மேலும் மூவரின் கருணைமனுவை ஏற்பதற்கு சமூகம், குற்றங்களுக்குப் பின்பான நடத்தை,இதனை விட தாம் செய்தது தவறு என்ற ஒப்புதல் மட்டுமே கருணை மனுவுக்கு தகுதியானது என்றார்.
இந்த நேரத்தில் கார்த்திகேயனின் போலிஸ் மூளை எப்படி வேலை செய்து வழக்கின் ஓட்டைகள் போலவே சிக்கலில் கொண்டு சேர்க்கும் எனபதற்கு நீண்ட வாசிப்பு ரசனையுள்ளவர்களுக்கு பழைய நாவலான சிட்னி ஷெல்டனின் அதர் டைட் ஆஃப் மிட்நைட் (Other side of midnight by Sidney Shelton) புத்தகத்தின் இறுதிப்பகுதி க்ளைமேக்ஸ் கதையின் ட்விஸ்ட்டை சிபாரிசு செய்கிறேன்.
இதுவரையிலும் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் கார்த்திகேயன், சுப்ரமணியன் சுவாமி,ரகோத்தமன் என்ற மூவரின் கருத்துக்களும்,ஜெயின் கமிசன் தீர்ப்பு,திருச்சி வேலுச்சாமி,சி.பி.ஐ முன்னாள் ஆய்வாளர் மோகன்ராஜ் போன்றவர்களின் அடக்கி வாசிக்கப்பட்ட மாற்றுக் கருத்துக்களும் இன்னும் வெளிப்படையான உண்மைகள் வெளி வராமலேயே நீதிமன்றத் தீர்ப்பின் மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து பர்காத்தின் கேள்வியான பேரரறிவாளனின் தாய் தனது மகன் கொலையின் சதித்திட்டம் பற்றி அறிந்திருக்கவில்லையென்றதற்கு சுப்ரமணியன் சுவாமியின் அகந்தையான பேச்சு (Arrogance of...we go as per supreme court judgement and not mother's judgement or girl friend's judgement)உச்சநீதி மன்ற தீர்ப்புதான் தனக்கு முக்கியமென்றும்,தாய்,பெண்நட்பு,ஆண்நட்பு தீர்ப்பையெல்லாம் கணக்கில் கொள்ளவியலாது என்றும் மூவரும் கருணைக்கு தகுதியில்லாதவர்கள் என்றும் கூறினார்.
பர்காத்தின் கேள்வி மீனா கந்தசாமி என்பவரிடம் திரும்புகிறது.இலங்கை தமிழர்கள் பற்றிய அனுதாபங்கள் தமிழர்களுக்கு இருந்தாலும்,ஒரு தேசிய தலைவரின் கொலைக்கும் அப்பால் இடைக்காலத் தடைக்கான தமிழக மக்களின் மகிழ்ச்சி இந்திய தேசிய உணர்வுக்கு எதிரான ஒன்றாக இருக்குறதே என்பதற்கு மீனா கந்தசாமியின் பதில்.
ராஜிவ் காந்தியின் குற்றவிசாரணை அரசியல் வாதிகளின் முகத்திரையையும் கிழிக்க வேண்டும். பேரறிவாளன் பேட்டரி கொடுத்ததாக வழங்கப்படும் நீதி நியாயமாக இருக்காது.பம்பாய் குண்டு வெடிப்புகளின் போது முஸ்லீம்களின் ஓட்டுரிமையை நீக்க வேண்டும் என்பது போன்ற நிலைப்பாடு நீதியைப் பெற்றுத்தராது.ஒருவேளை ராஜிவின் கொலை தற்கொலை தாக்குதலாக இல்லாமல் வேறு அரசியல் காரணங்களுக்காக இருந்தால் இதுவரை தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனை குறித்த நீதி என்ன?நளினியின் தாய் மருந்து வாங்கிய பார்மசி பில்லின் அடிப்படையில் கூட கைது செய்யப்படும் போது என்ன நீதியை எதிர்பார்க்க முடியும்?இன்றைக்கு நான் பேரறிவாளன் சார்பாக பேசுவதால் நான் கூட சதித்திட்டத்துக்கு உடந்தையென்பதா நீதி?அரசியல் பெரும்புள்ளிகளின் கோணமெல்லாம் விசாரணையில் மறைக்கப்பட்டுவிட்டது என்றார்.
பர்காதத் சுப்ரமணியன் சுவாமியிடம் மீனா கந்தசாமி சுட்டிக்காட்டும் கொள்கை முரண்கள்( Idealogy differences) பற்றி வேறு ஒரு நிகழ்ச்சியில் பேசலாம் என்றார்.
மீண்டும் ஆர்.எஸ்.சோதி நீதிமன்ற தீர்ப்பு மாற்றமில்லாதது என்று சட்டம் குறித்து சொன்னதற்கு சுப்ரமணியன் சுவாமியின் முகத்தில் சிரிப்புடனான மரணத்தை ரசிக்கும் மகிழ்ச்சி தென்பட்டது
இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் எம்.எல்.ஏ அப்சல் குருவின் மரணதண்டனை பற்றிக் குறிப்பிடும் போது தமிழக சட்டசபையின் தீர்மானத்தில் காஷ்மீர் மக்களும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளதென்றார்.
அப்சல் குருவின் மரணதண்டனை பற்றி காஷ்மீர் மக்களும்,சட்டசபையுமே தீர்மானிக்க வேண்டிய ஒன்று என்ற போதிலும் ராஜிவ் காந்தியின் ம்ரணம்,நீதிமன்ற தீர்ப்பு,தமிழக சட்டசபையின் தீர்மானம் போன்றவை இலங்கையை சுற்றிய ஒன்று என்பதும் இலங்கை குறித்த போர்க்குற்றங்கள் பின் தள்ளப்படுவதற்குமான துவக்கமாகக் கூட இந்திய அளவில் காஷ்மீருடனும், பாகிஸ்தானுடனும் அப்சல் குருவின் தீர்ப்பை இணைக்கும் ஆபத்துமுள்ளது என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
சுப்ரமணியன் சுவாமியின் வாதப்படி இந்தியாவிடம் இருக்கும் குற்றங்களுக்கான எதிர்ப்பு கருவியாக விளங்குவது மரணதண்டனை மட்டுமே என்றார்.முந்தைய கால கட்டத்தில் மரணதண்டனை குற்றங்களுக்கான எதிர்ப்பு சக்தியாக விளங்கியிருக்க கூடும்.ஆனால் இப்பொழுது உயிரையும் மதிக்காத தற்கொலைத் தாக்குதல் நிகழும் கால கட்டத்தில் மரணதண்டனை எப்படி எதிர்ப்பு கருவியாக பயன்படும் என்று மீனா கந்தசாமி எதிர்க்கேள்வியை முன் வைத்தார்.
இன்னும் எத்தனை விவாதங்களை முன் வைத்தாலும் ராஜிவ் காந்தியின் படுகொலை தவறான ஒன்று என்பதிலும்,ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை முற்றுலுமாகப் புரட்டிப்போட்டு விட்ட நிகழ்வு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கொள்ல இயலாது.அதே வேளையில் முந்தைய பிரதமர் என்ற ஒரே காரணத்துக்காக தமிழர்கள் கொடுத்த உயிர்ப்பலிகளின் விலையும் அதிகம்.இந்தக்கோட்டிலிருந்து விலகியும்,ராஜிவ் காந்தி இலங்கை ராணுவ அணிவகுப்பில் அவமதிப்பை சந்தித்தும், இலங்கைக்கான உதவியும்,அது இந்தியாவையே மீண்டும் வந்து தாக்கும் பூமராங் என்பதையெல்லாம் எந்த தொலைக்காட்சிகளும் முன்வைத்து விவாதிப்பதில்லை.
ராஜிவ் காந்தியின் கொலைக்குற்ற விசாரணக்குப் பின்பான மக்களின் குரல் நசுக்கப்படுவதற்கு தடா போன்ற சட்டங்கள் எல்லாம் பயன்படுத்தி வாய்மூடிகளாய் போன தமிழர்களின் குரல் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைகளுக்குப் பின் மீண்டும் எழுந்துள்ளது.முந்தைய தி.மு.கவின் அரசியல் நிலைப்பாட்டால் ஆட்சி இழப்பு போன்ற நிகழ்வுகள் நடந்த உள்குத்து வேலையையும்,மக்களின் குரல்வளை நெரிக்கும் திட்டங்களும் கூட காங்கிரஸாலும்,சுப்ரமணியன் சுவாமி போன்றவர்களின் மரணதண்டனைக்கு ஆதரவாளர்களாலும் தமிழர்களின் முதுகில் குத்தும் வேலையாக பின்புலத்தில் நிகழ்த்தப்படக் கூடுமெனபதை இவர்களின் எண்ண வெளிப்பாடாக வெளிவருகின்றன.இதனை விட முக்கியமாக பேரறிவாளன்,சாந்தன், முருகனின் மரணத்தின் தூக்கு கயிறு இன்னும் முற்றிலுமாக நீக்கப்பட வில்லையென்பதையும் தமிழர்கள் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.
பட உதவி: கூகிள்
.