Followers

Monday, December 7, 2015

கமலின் மறு அறிக்கையும் கொஞ்சம் சித்த வைத்தியமும்

இந்த பதிவுக்கு கமல் அவர்கள் சம்பந்தமில்லையென்ற போதிலும் இதுவரைக்கும் அவர் மீதான விமர்சனங்களுக்கு பதிவின் காரணமாக நானும் பின்னூட்ட நண்பர்களும் காரணம் என்பதால் முந்தைய பதிவை படிச்சிட்டு  பின் வைத்தியம் பாருங்கள்.

நந்தவனத்தான்!நம்ம பின்னூட்ட விமர்சனங்கள் இல்லாமலும்,படிக்காமலும் கமல் மறு அறிக்கை விட்டிருக்கிறார்.இப்ப என்ன பண்ணுவீங்க!

காளமேக புலவரின் பேரன் பழமை பேசி என்(னை)ன நினைச்சுகிட்டு புல்லுருவி என்றாரோ அதையும் சேர்த்து படிச்சிருங்க.எனக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லைன்னு டிஸ்கி வேற போட்டதால் எனக்கு கொஞ்சம் சந்தேகமாவும் இருக்குது:). 

நம்பள்கி விளையாத தரிசு நிலம்! அதை நான் சொல்லலை என்கிறார். பழமை மருத்துவம் சொல்கிறார். தப்பி தவறி பெண்கள் யாராவது இந்தப் பக்கம் வந்தீங்கன்னா குறிப்பெடுத்துக் கொண்டு அறிந்தவர்கள் யாருக்காவது தேவையிருந்தால் உடுமலை கடையை நாடவும்.

முன்பெல்லாம் உடற்பயிற்சி மட்டும் செய்து வந்தும் எப்பவாவது ஹலோ சொல்ல கொஞ்சம் இருமல் தலைவலி வந்து விடும்.தலைவலிக்கு கொஞ்சம் தூக்கமோ அல்லது ஒரு பெனடால் எனும் தலைவலி மாத்திரை போட்டால் சரியாகி விடும்.இருமலும் அப்படியே. இதுவரையிலும் பெரும் நோயில் படுத்து கிடக்காமல் இயந்திரம் ஓடுகிறது. ஆனால் யோகா உலக தினத்திற்கு சில மாதங்கள் முன்பிருந்தும் பின் தொடர்ந்தும் முடிந்த வரை தியானப் பயிற்சியும்,மூச்சுப்பயிற்சியும் தொடர்வதால் எப்பவாவது ஹலோ சொல்லும் இருமலும்,தலைவலியும் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக விடுப்பில் போய் விட்டது. 
எனது நண்பர் ஒருவர் தொழுகையையும்,யோகா பயிற்சியையும் சேர்த்தே செய்வதாக சொன்னார்.

எனது அனுபவத்திலிருந்து சொல்வது

1.தினமும் கட்டாய உடற்பயிற்சி
2.மூச்சு பயிற்சி
3.மனதை ஒரு நிலைப்படுத்தும் தியானம்

மூன்றாம் நிலை கொஞ்சம் சிக்கலானது என்னைப் பொறுத்தவரை.காரணம் சும்மா இருந்தா அதுபாட்டுக்கு எங்கேயாவது ஓடிகிட்டிருப்பதை கட்டிப்போடப் பார்த்தால்தான் எகிறி குதிக்கிறது.

வாழ்க்கையிலும்,இப்போதைய மழை இழப்பிலும் பெரும் மன அழுத்தங்கள் பலருக்கும் வரும்.ஆண்கள் டாஸ்மாக் தேடிப்போக கூடும்.ஆனாலும் சொன்ன மூன்றையும் கடைபிடிக்க முயலுங்கள். உடல் பருமன் குறைக்க சிறந்த வழி சைவ உணவும்,இந்திய காற்றும்.அசைவ உணவிலிருந்து உடல் விடுபட்டு விட்டால் சைவ உணவையே மனம் விரும்பும். எதுவும் பழக்கம் என்பதை அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறி மனைவியின் இரட்டை சமையல் சிரமத்துக்கு பயந்து மீண்டும் அசைவத்திற்கு மாறியதில் இப்பொழுது சைவம் ஒட்டிக்கொள்வதில்லை மீண்டும்.

மழை காரணமாக தொற்று நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது. தேங்காய் எண்ணையை உடல் முழுவதும் தேய்த்துக் கொள்ளலாம்.
அலோபதிக்கு மருந்தை விட தேன்,மிளகு கலவையை உட்கொள்வது இருமல் மூச்சு இரைச்சலை குறைக்கும். முடிந்தால் கட்டஞ்சாயாவில் மிளகு,இஞ்சு கசாயம் செய்து சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து குடிக்கலாம். பால் கிடைக்காத சூழலில் இந்த தேநீரே உடலுக்கும் நல்லது.தமிழகத்தில் இயற்கையாக வாழ பல வாய்ப்புக்கள் இருக்குது.கொஞ்சம் முயன்றால் பழகி விடும்.

முடியாமல் படுக்கையில் கிடப்பவர்களுக்கும் முக்கியமாக வயதானவர்களை முதுகு எப்பொழுதும் தரையில் படும்படி படுக்க வைக்காதீர்கள். அது கிடைப்புண்ணை உருவாக்கி விடும். சின்ன விசயமென்றாலும் சிலருக்கு தெரிவதில்லையென்ற அனுபவத்தில் சொல்கிறேன்.

Sunday, December 6, 2015

கமலின் வெட்கமும் அரசின் அறிக்கையும்!

தகவல்கள அனைவரையும் போய் சேர இயலாத தமிழகத்தின் மழை இடரிலும் கமலின் வெட்கபடுகிறேன் கருத்து பொது தள விவாதமாகி இருக்கிறது.முன்பெல்லாம் கமல் அரசியல் சாயம் ஒட்டாமல் அறிவு ஜீவி கருத்துக்களை பட வசனங்களில் மட்டும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.தானுண்டு தன் வேலையுண்டு இருந்தபோது இவர் ரொம்பத்தான் தலை கர்வமாக்கும்  என்று கிட்டியது பிம்பம்.

நிற்பதுவோ!நடப்பதுவோ! வெறும் காட்சி பொருள்தானோ? யாமறியோம் கமல் சார்!

முந்தைய சூழலை புரட்டிப் போட்டது விஸ்வரூபம் பட வெளியீடு சிக்கலும் அதன் மன அழுத்தத்தில் வெளிநாட்டுக்கு போய் விடுவேன் என்ற மனவெளிப்பாடும் விமர்சனத்துக்கும்,எதிர்வினைக்கும் வசதியாகிப் போனது அவரது விஸ்வரூப காலத்து மனநிலை. பிரச்சினைகளிலிருந்து வெளிவந்த பின் தனக்கு ஆதரவும் அன்பு வெளிப்பாடுகளும் இருப்பதை உணர்ந்த பின் தான் சார்ந்த சமூகம் குறித்து கருத்துக்களை இப்பொழுது கொஞ்சம் அதிகமாகவே வெளிப்படுத்துகிறார்.வாய் மூடி மவுனிப்பதை விட எதிர்வினைகள் நல்லதுதான்.மௌனம் சிக்கலில்லாதது. எதிர்வினைகள் வரலாற்றை சொல்லி வைக்கும்.

தூங்கா வனம் சந்தானம் மூலம் வசனம் வைத்தது போல்  ரெண்டு டூயட் பாடிக்க,சண்டை சீன் வச்சுக்க உனக்கு ஏன் கருத்து வசனம் போல மேடம் ஜெயலலிதாவும் அமைச்சர் மூலம் அரசு அறிக்கை விடுகிறாரோ! தமிழகத்தின் பெரும் மழையில் தனது இயலாமை குறித்து வெட்கப்படுகிறேன் என்ற கருத்துக்கு மழையின் துயரத்தில் இருக்கும் பல கோபக்குரல்கள் பொது கருத்தாக ஒலித்தது ஜனநாயக கோப வடிவம் பெறுகிறது.

 ஜெயலலிதா என்ற ஆளுமையை மதிக்கத் தெரியாத வாய் மூடி,சிரம் தாழ்,சீர் மண் தாழ்,பெண் கால் தாழ் என மூச்சு ஒன்றை தவிர அம்மா புராணம் பாடும் அமைச்சர்களில் மூத்த அமைச்சர் அம்மாவின் குரலாக  கருத்து கந்தசாமி என கமலுக்கு மறு அறிக்கை விடுகிறாரோ அப்பொழுதிலிருந்து கமலின் கேள்வியின் வடிவம் உரு மாறுகிறது. 

கமலின் கேள்வியில் என்ன தவறு? நான் ஒழுங்காக வருமான வரி கட்டுகிறேன் என்ற கருத்தில் சொல்லின் ஆழம் நிறைய நிறைந்து கிடக்கிறது. காதுள்ளவர்கள் கேட்க கடவர்.கண்ணுள்ளவர்கள் பார்க்க கடவர்.பொது நலனுக்கு உதவுவதோடு தனி மனித திருப்தியடைந்து விடுகிறது மனம்.சிறு துளி பெரு வெள்ளம் எங்கே கரை சேர்கிற்து என்பது யாருக்கும் தெரிவதில்லை. இதோ இப்பொழுது காணாமல் போன சென்னை வடிந்த மழை மாதிரி.

சுனாமியிலேயே நாம் பாடம் கற்றுக்கொள்ள வில்லையென்ற போதிலும் நம்மிடம் இன்னும் குறைகள் நிறைய இருக்கிறது என்ற போதிலும் மனிதாபிமானம் நிறைந்து இருக்கிறது அவசர நேரத்து பெரும்பாலான உதவிகளை சுனாமி காலத்தும் இப்பொழுதும் காண முடிந்தது.அதே போல் அவசர பொருளாதார உதவிகளும் சுனாமி காலத்தும் இப்பொழுதும் வந்தடைகின்றது. சுனாமி காலத்து பொருளாதார கணக்குகளை யாராவது ஒருவர் வெளியிட முடியுமா? அரசு இயந்திரத்திடம் வெளிப்படத் தன்மையில்லையென்பதால் உதவுவதோடு நாம் மனதால் திருப்தி பட்டுக்கொண்டு வாழ்வில் மேலும் நகர்ந்து கொண்டுள்ளோம். 

கமலின் வெட்கத்தை பிடிக்காதவர்கள் பலர் சமூக தளங்களில், தொலைக்காட்சிகளில் தங்கள் அதிருப்தியை வெளிப்படித்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக அரசு தரப்பிலிருந்து அறிக்கை வருவதில் மெல்லப் புகைவதை ஊதிப் பெரிதாக்கி விடுவதாகவே முடியும். இது தனிமனிதனின் கருத்து என்று எண்ணாமல் கமல் என்ற மனிதனின் கருத்துக்கு வலு சேர்ந்து விடுமென்றும் எதிரணிக்கு சாதகமாக முடியுமென்று அறிக்கை விடுவது தற்போதைய சூழலில் அ.தி.மு.கவுக்கு பாதகத்தையே உருவாக்கும்.

தேர்தல்களை,குறிப்பாக தமிழக தேர்தல் முடிவுகளை மக்களின் தேர்தல் காலத்து மனநிலையே முடிவு செய்கின்றன. படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்ற படிக்காத மேதை காமராஜர் கூட தோற்றுப் போயிருக்கிறார்.

அம்மா அரசாமிகளை விட கருத்து  கந்தசாமிகள் ஜனநாயகத்தின் பிரதிபலிப்புகள்.

Thursday, December 3, 2015

யோவ்!மழையில பைக்,காரை ஓட்டாதீர்கள்.

இருக்குற மழை மன அழுத்தம் பத்தாதுன்னு யாரோ ஒருவர் இந்தியாவிலிருந்து ரொம்ப அக்கறையா ஒரு காணொளியை தட்டி விட்டார்.
ஒரு பையன் கொஞ்சமா ஓடுகின்ற தண்ணீர்தானே என்று ஒரு கால்வாய் பாலத்தை கடக்க முயற்சி செய்ய பைக்கின் முன் சக்கரம் வழுக்கி அப்படியே பைக்கையும்,பையனையும் உள்ளே அமுக்கி விட்டது.பைக்கையும் காணோம் பையனையும் காணோம்.

முந்தைய பதிவில் சொன்ன மாதிரி வேடிக்கை பார்க்கும் நம்ம குண தோசத்தில் இந்தக்கரையில் படம் எடுப்பவர் பிலிம் காட்டிக்கொண்டும் மறுகரையில் கார் நின்று கொண்டிருக்க மெதுவாக பார்த்துக்கொண்டே நகர்ந்து கொண்டுள்ளார்கள்.

நான் பட்ட அவஸ்தை மற்றவர்கள் படக்கூடாது என்ற எண்ணத்தில் காணொளி ஒட்டாமல் தடை செய்யப்படுகிறது.

தமிழக வெள்ளம் மீள் கட்டமைப்பு

தற்போதைய தமிழக வெள்ளத்தில் உடனடி நிவாரண உள் கட்ட்மைப்பு அரசும்,தனியார் துறையும்,பொது ஆர்வலர்களும் பொது மக்களும் சார்ந்தது. என்னைப்போன்ற பரதேசிகளால் ஏதாவது உதவ இயலுமா என்று யோசித்ததில்...

முன்பு ஒரு முறை இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்களுக்கு எண்ணை வியாபாரம் பற்றி கடிதம் எழுதினால் கூட அதற்கு மறு பதில் சொல்லுமளவிற்கு நேரமில்லாமலோ அல்லது அலட்சியம் காரணமாகவோ புறக்கணித்து விடுவார்கள்.பின் டெண்டர்,அரசு துறை சுற்றுக்கள் என்ற கால விரயம் காரணமாக பெட்ரோலிய கச்சா பொருட்களில் கவனம் செலுத்தவில்லை.

தற்போதைய தமிழக மழை வெள்ளம் சூழலில் இந்த பதிவு தகவல் மூலமாக அரசு நிறுவனங்களோ அல்லது தனியார் தொழில் துறை சார்ந்தவர்களோ பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணமில்லாமல் மழை வெள்ளம் போன பின் மீள் கட்டமைப்பை மட்டும் கவனத்தில் கொண்டு செயல் பட நினைப்பவர்கள் அணுகவும். 

செயல்பாட்டுக்கான கச்சா பொருட்கள் மெட்ரிக் டன் எனப்படும் கணக்கில்

1. பழைய இரும்பு கம்பிகள் 500 டன் ஒரு மாத கால தவணை இறக்குமதி. ஓரளவுக்கு தரமான கம்பிகள் என்பதால் அப்படியே உபயோகிக்கலாம் அல்லது மறு உருவாக்கம் செய்யலாம்.
2. தார் ரோடு போடும் கலவையில் கலக்கும் வொய்ட் ஸ்பிரிட் சுமார் 16 மெட்ரிக் டன்னும் அதற்கு மேலும்.
3. கெரோசின் எனும் வாசனை மற்றும் வாசனையில்லாத மண்ணெண்ணை

வொய்ட் ஸ்பிரிட் என்பது தார் ரோடு தவிர பெயிண்ட்டில் கலக்கும் மற்றும் டர்பன் டைன் பெயிண்டைக் கழுவுவதற்கான மாற்று. மரச்சாமான்கள், பூச்சிக்கொல்லி,கொசு,ஈ மருந்து என பல கெமிக்கல் துறை சார்ந்தது. கூகிள் மற்றும் இந்திய தொழில் தகவல் படி மும்பாய் துறைமுகமும்,சென்னை துறைமுகம் மட்டுமே அதிக அளவில் வளைகுடா நாடுகளிலிருந்து வொய்ட் ஸ்பிரிட் இறக்குமதி செய்கிறார்கள். 

இந்த வொய்ட் ஸ்பிரிட் பெட்ரோலிய உப பொருள். இதனை டாஸ்மாக் கலவையுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். டாஸ்மாக் எதனால் அடிப்படையானது.பெட்ரோலிய வொய்ட் ஸ்பிரிட் ஹைட்ரோ கார்பன் அடிப்படையானது.

4. தமிழகத்தில் அரிசி போகம் செய்தாலும் தற்போதைய மழை சூழலில் பயிர்கள் மோசமாகி இருந்தால் டெல்லி,ஹரியானா பகுதிகளிலிருந்து பசுமதி,சம்பா வகை அரிசிகளை கொண்டு வந்து விடலாம்.

5.தேயிலை டீ,தேங்காய்,எண்ணை,பருப்பு போன்றவை தமிழகத்திலேயே உற்பத்தியாகின்றன. தமிழக அரசு தேவைகளை பூர்த்தி செய்யும் என நினைக்கிறேன். முடியாத பட்சத்தில் ஏற்றுமதி பொருட்களை தமிழகம் நோக்கி திருப்பி விடலாம்.

கொஞ்சம் நிலைமை சீராகிய பின் ஈரான்,துபாய் எண்ணை வளங்களை உபயோகிக்க முடியுமா என பார்க்கலாம்.

மாற்று ஆலோசனைகளை யாராவது தெரிவித்தாலும் செயல் படுத்த இயலுமா என முயற்சி செய்யலாம்.லாஜிஸ்டிக்ஸ் எனப்படும் வாகன பொருள் இடமாற்றங்கள்,பணம் பட்டுவாடா என்ற இரண்டு நிலைகளை கடக்கும் வலிமையில் பிரச்சினைகளை ஓரளவுக்கு சீர் கொண்டு வந்து விட முடியும்.

இதில் தமிழக நலன்,பொருள் தேடல் தவிர எனது சுய நலம் எதுவுமில்லை என்ற டிஸ்கிளைமர் போட்டு விடுகிறேன்.

Wednesday, December 2, 2015

வாழ்வை பிரதிபலிக்காத இலக்கியவாதிகள்.

இந்த பதிவின் தலைப்பை 2009ம் வாக்கில் எழுதியிருக்க வேண்டும்.எழுதும் நேரமும்,வாசிப்பின் காலமும் இன்னும் சொல்லபோனால் ஒரு நேரப் பசியையாவது காசாக எழுத்தால் பார்க்கும் தமிழ் இலக்கியவாதிகள் என்று அக்மார்க் ஒட்டிக்கொண்ட பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் முள்ளி வாய்க்கால் கால கட்டத்தில் மூடிக்கொண்டே இருந்தார்கள்.

சரி அதுதான் பக்கத்து வீட்டுக்காரன் வீட்டு விவகாரம்...வழியில் எவனோ படுத்துக் கிடந்தாலோ,இருவர் சண்டையிட்டுக்கொண்டாலோ வேடிக்கை பார்க்கும் சென்னை கலாச்சாரத்தில் ஊறிய பழக்க தோசம் என்றாலும் தன் வீட்டுக்கும்,தான் நடக்கும்,பிரயாணம் செய்யும் ரோட்டில் அடை மழை அடித்து துவைத்து விட்டாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு எழுத்தாளர் ருமாலி ரொட்டி எப்படி செய்வது என்று பாடம் எடுக்கிறார்.

ருமாலி ரொட்டி என்பது தட்டையான ருமாலியை இரு கைகளிலும் பரப்பி தலைக்கு மேல் விசிறி ருமாலி கவிழ்த்துப் போட்ட வடச்சட்டி மேல் வந்து உட்காரும்ங்கிற தொழில் நிபுணத்துவம் கூட தெரியாமல் ருமாலி பற்றி என்ன கட்டுரை வேண்டிக்கிடக்குது?

எதிர் கோஷ்டியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் புர எழுத்தாளரோ தமிழ் ஹிந்துவில் கண்ட பயணிகள் ஊர்தியின் படம் போட்டு புலம்பிக்கொண்டுள்ளார்.தன்னைச் சுற்றிய நிகழ்வுகள் கூட பாதிக்காமல் என்ன எழுத்தோ கட்டுரையோ! தூரத்தில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் எனக்கே  சென்னை வெள்ளம் மனம் பகீர் என்கிறது.

ஒரு புறம் சகிப்புத்தன்மை விவாதம் பாரளுமன்றத்தில் நிகழ்ந்தாலும் சிரமங்களுக்கு இடையிலும் வாழும் சென்னை வாழ் மக்கள் சகிப்புத்தன்மையின் வெளிப்பாட்டின் அடையாளம்.

பெயர் சொல்லிக்கொள்ளூம் படியான டாட்டா,அம்பானி,மிட்டல்களின் இந்திய பொருளாதார மேம்பாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டிக்காப்பவர்கள் கையேந்தி பவன் துவங்கி,உணவு விடுதிகள்,சிறு தொழில்கள்,மிதமான பணக்காரர்கள்,பணத்தோடு கொஞ்சம் மனித நேயத்தையும் அன்பளிப்பவர்கள் என்பவர்களின் சராசரியில் இந்திய பொருளாதாரம் இன்னும் சுழல்கிறது.

 பிளாஸ்டிக் போடுற, அதனால்தான் மழை வந்து உன்னை அடிச்சுப்போட்டுச்சுன்னு எதிர் லாஜிக் கருத்துக்கள் தென்படுகின்றன. பிளாஸ்டிக் போட்ட, அடைச்சு வீடு கட்டிகிட்ட இதெல்லாம் பிளாஸ்டிக் போட்டவன்,வீடு கட்டிகிட்டவன் குத்தமா? காசுன்னா எதுவுமே தப்பில்லைங்கிற இந்திரா காந்தி காலம் தொட்டு இப்ப ஜெயலலிதா ஆட்சி வரைன்னு தொடரும் சுய மரியாதையின்மை அது.ஆக்டோபஸ்களாக விஸ்வரூபமாய் எங்கும் பரவியிருக்கிறது. 

எனது அப்பாவித்தனத்தால் இந்தியன் படம் வரும் போது அரசாங்க பணியாளர்கள் ஒரு சிலராவது திருந்தி விடுவார்கள் என நினைத்தேன். நற்குணங்கள் ஜீனில் உருவாகுவதோடு வாழ்க்கையின் அனுபவங்களோடு, சூழல்களோடு சார்ந்தது என மெல்ல இப்பொழுது புரிகிறது.

ஒரு உணவு நிறுவனத்தில் முன்பு பணியாற்றும் போது 150கிலோ எறா மீன் தேவைப்படும்ங்கிற கணக்கில் நீ 350 கிலோவுக்கு கணக்கு போடுன்னு அரபிக்காரனும்,எகிப்தியனும் சொன்ன கூட்டுக்களவானித்தனத்துக்கு நான் உடன்படாததால் என் வேலை போனது.பொழக்கத் தெரியாதவன் என்ற கிண்டல் அவர்களிடமிருந்து அப்பொழுது வந்தாலும் இப்பொழுது நினைப்பதற்கு மனம் நிறைவாகவே இருக்கிறது.

பொருளாதாரம்,உற்பத்தி,தொழில் என உலக மொத்த சூட்டுக்கு முக்கிய காரணிகளாக இப்பொழுது அமெரிக்கா முதல் இடத்திலும் இரண்டாம் இடத்தில் சீனாவும்,மூன்றால் நிலையில் இந்தியாவும் என திங்கட்கிழமை பஞ்சாயத்து பேசின உலக தலைவர்கள் ஒபாமா உட்பட புலம்பியிருக்கிறார்கள். 

இந்திய வாழ்க்கை முறை சுகாதார முன்னுரிமைமையற்றது  என்ற போதிலும்,மலை,மேகங்கள்,மரங்கள்,செடி கொடிகள்,ஏரி,குளம்,ஆறு,கடல் என இயற்கையின் நன்கொடையோடு வாழும் நமக்கு வானிலை அறிக்கை ரமணன் சொல்லாமல் போனாலும் நமக்கு பூகோள புவிச்சூட்டில் அடை மழை வரும்.50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் கொண்டு வரும்.

அங்குமிங்கும் மனித நேயங்கள் சில அவ்வபோது வெளிப்படத்தான் செய்கின்றது. ஹேப்பி கிறுஸ்மஸ் சொல்லும் நடுராத்திரி 12 மணிக்கு நான் எனது சகோதரியின் மகனோடு ஆட்டோவில் சென்னையில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஒரு புறம் பெரிய லாரி பாரம் சுமந்து கொண்டு சென்னை துறைமுகம் நோக்கி ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. லாரிக்கும், ஆட்டோவுக்கு மிடையில் மோட்டர் பைக்கில் பயணித்த ஒருவர் திடீரென லாரிக்குள் சறுக்கி விட்டார். 

தங்கை பையனோடு பேசிக்கொண்டிருந்த நான் கவனிக்கவில்லை.ஆனால் தங்கை பையன் ஆட்டோக்காரரை திடிரென பிரேக் போட வைத்து மோட்டார் பைக் காரரை நோக்கி ஓடி சக்கரத்துக்கு வெளியே இழுத்து விட்டான்.பார்த்தால் மோட்டார் பைக்காரர் மப்பு. உதவும் இந்த பழக்க தோசத்தில் இன்னொரு முறை விபத்தில் சிக்கிக்கொண்ட ஒருவரை காப்பாற்றினான்.இப்பொழுதும் அவர்கள் நட்பு தொடர்கிறது.

பிரதி உபகாரம் நோக்காமல் சென்னை மழையில் யாராவது யாருக்காவது உதவும் முகம் தெரியாத பல நல்ல உள்ளங்கள் இருக்கலாம்.உங்கள் நல்ல மனித நேய உள்ளங்களுக்கும் உதவும் கரங்களுக்கும் ,சென்னை மழையின் அவதிக்கு அக்கறையோடு கருத்து வெளிப்படுத்தும் பதிவர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.