Followers

Wednesday, May 23, 2012

சத்யமேவ ஜெயதே-சிசுக்கொலை பகுதி 1

அமீர்கானின் சத்யமேவ ஜெயதே பற்றி இப்பொழுது ஊடகங்கள் வாயிலாக பேசப்படுகிறது.துபாய் தோழர்களின் பூங்கா சந்திப்பின் காலத்தில் முன்பு வடைகொடுத்த வள்ளல் அது ஒரு கனாக் காலம் பின்பு என் நினைவிலிருந்து அகன்று மீண்டும் சத்யமேவ ஜெயதே பின்னூட்டம் மூலம் தன்னை நினைவுபடுத்தினார்.

இந்தியாவின் பொக்ரான் அணு பரிசோதனை,அமெரிக்க இந்திய அணு கிடங்குகள் ஒப்பந்தம் போன்றவைகளை விட இந்தியாவைப் பற்றியும் தமிழகத்தைப்பற்றியும்  தன்னம்பிக்கையை பிம்பங்களாய் தோற்றுவித்தவை  மூன்று.

1. தமிழ்,இந்தியில் இந்தியன் திரைப்படம்

2. சன் தொலைக்காட்சியில் விசுவின் அரட்டை அரங்கம்

3. டாக்டர் அப்துல் கலாமின் இந்தியா 2020

இந்தியன் திரைப்படத்தின் தாக்கம் இந்தியா முழுவதும் புது தாக்கத்தை உருவாக்குமென்று எதிர்பார்த்து ஏனைய திரைபடங்களின் வருகைகள் தொடர்ந்து கால ஓட்டத்தில் இதுவும் களிப்பு கலாச்சாரமே என்று புஸ்வானமாகிப் போனது

சன் தொலைக்காட்சியில் விசுவின் அரட்டை அரங்கம் தமிழகத்தில் இவ்வளவு பேச்சுத்திறமையாளர்களா என்று வியக்க வைத்து இன்னும் புதிய விழிப்புணர்வு தமிழகத்தில் பரவும் என்று நம்பி ஏமாந்து போன அரசியல் நிகழ்வுகள்

இந்தியனும்,அரட்டை அரங்கமும் சமூக கருத்து என்ற முகப்பூச்சுக்கு பின்னால் வியாபார நலன்கள் என்ற முகம் ஒளிந்து கொண்டிருந்ததை பின்னால் உணர முடிந்தது.ஆனால் என்றும் நிலையாக நிற்கும் ஒரு புத்தகம்,அதன் ஆய்வுகள்,நம்பிக்கைகள்,எதிர்கால இந்தியா எப்படி பொய்த்துப் போகமுடியும் என்ற கேள்வியை 2G வரையிலான அரசியல் சதுரங்கம கூடங்குளம்,முல்லைப்பெரியாறு இன்ன பிற இந்திய நிகழ்வுகளின் கூட்டு கலவைகள் சேர்ந்து புருவங்களை உயர வைக்கிறது.1998ல் இந்திய வல்லரசு சாத்தியமே என்ற நம்பிக்கை 2012ல் நொண்டத் துவங்குகிறது.இன்னும் 8 வருடங்களில் இவை சாத்தியம் தானா என்ற கேள்வியின் பதிலை 2020 ல் மதிப்பீடு செய்வோம்.

இனி தொலைப்பார்வை விடுத்து சத்யமேவ ஜெயதே தொலைக்காட்சி பக்கம் நகர்வோம்.தமிழக அரசு முத்திரையில் வாய்மையே வெல்லும் சொல் புரிந்தும் கூட சத்யெமேவ ஜெயதே என்ற சொல் நெஞ்சாங்கூட்டில் சிம்மாசனம் போட்டுக்கொண்டது.வடக்கில் சத்யமேவ ஜெயதே புதிய அலைகளை உருவாக்கி விட்டு ராமயாண தொடர் போல் மறைந்து விடுமென்றே நம்புகிறேன்.இயக்குநர் பாரதிராஜாவின் கருத்தம்மாவை விடவா சிசுக்கொலையை பட்டி தொட்டியெல்லாம் இன்னுமொரு ஊடகம் கொண்டு சென்று விட முடியும்?முன்பு ஜெயலலிதா பெண் சிசுக்கொலைகளை தவிர்க்க தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வந்தும் கூட நேற்று அமீர்கான் இந்திய வரைபடத்தில் பெண் உதிர சிவப்புக் கோட்டு புள்ளி விபரமாக தமிழகத்தையும் சுட்டிக்காடடுகிவது அதிர்வை உண்டாக்குகிறது.

மதம்,மொழி,தேசம் கடந்த என்னைப் போன்றவனுக்கு தெற்கென்ன வடக்கென்ன! சிசுக் கொலைகளுக்கான சாட்சியமாக பெண்கள் சொல்லும் கதைகள் அதிர்ச்சியை தந்தாலும் கூட அவர்கள் குறை கூறும் குடும்பத்தினர்களின் எதிர் நியாயங்களை கேட்க முடியாதது காட்சிப்பிழையே.

பெண் குழந்தை வேண்டமென்று பொருளாதார அடிமட்டத்தில் இருப்பவர்களை விட படித்தவர்களாக எஞ்சினியர்,டாக்டர்,கார்பரேட் பணியாளர்கள் என்று சமூகத்தின் நீண்ட வரிசையாக நீள்கிறது பட்டியல். விஞ்ஞான வளர்ச்சியென்று பெருமிதம் கொள்ள முடியாமல் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று கர்பத்தின் துவக்கதிலேயே அறிந்து கொள்ளும் சோனோகிராபி மருத்துவ தொழில் நுட்பம் இந்தியாவின் இரண்டு கோடி பெண்குழந்தைகளை சிசுவதை செய்திருக்கிறதென்கிறது புள்ளி விபரம். கருத்தடைகளால் புதிய இந்தியாவை படைப்போமென்று நம்பியும் கூட இன்னும் பிரச்சினைகளில் தள்ளாடிக்கொண்டிருக்கிறோம்.காசு கொடுத்தால் போதும் கருத்தடை செய்து விடுகிறோம் என்கிற மருத்துவர்கள் மீதான ஸ்கூப்பில் கால சூழல்களாய் கருத்தடை செய்ய வேண்டிய திருமணமாகாத பெண்களை விட குடும்ப சகிதமாக பெண் சிசுவை கலைத்து விடுங்கள் என்று மருத்துவர்களை நாடுபவர்களே அதிகமென்கிறது புள்ளி விபரம்.

இதில் சிசுக்கொலையை நிறுத்த வேண்டுமென்று ஸ்டிங் ஆபரேசன் செய்த ஊடகவியளாலர்களை மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றங்கள் சுற்றவிடுகிறார்கள் கருத்தடை செய்த மருத்துவர்கள் மற்றும் கருத்தடை சம்பந்தப்பட்டவர்களும்.அவர்களாகவே தானே கருத்தடை செய்துகொள்கிறார்கள் இதில் உங்களுக்கு என்ன பிரச்சினையென்று நீதிபதியே திருப்பி கேட்கிறார்.கர்நாடகாவின் பெல்லாரி போன்ற இடங்களிலிருந்து பெண்களை திருமணம் செய்து பின் சந்தைப்பொருளாக்கி விடுகிறார்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்தவர்கள்.அதே ராஜஸ்தானில் திருமணம் செய்வதற்கு பெண்கள் இல்லாமல் நிறைய வாலிபர்களும் முதிர் வாலிபர்களும் எங்கள் சங்கத்துக்கு சல்மான் கானை தலைவராக்கி விடுகிறோம் என்று அமீர்கானிடம் நகைக்கிறார்கள்.                                                

சோனோகிராபி தடைசெய்யப்படவேண்டுமென்று பிரதமர் மன்மோகன் சிங் சொன்னதாகவும் நீள்கிறது தொலைக்காட்சி.கருத்தடை மருத்துவர்களின் முகத்திரையைக் கிழித்த ஊடகவியளாலர்களின் எட்டு வருட நீதிமன்ற வழக்கை துரிதப்படுத்த மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதுகிறேன் உங்கள் ஆதரவும் தேவை என்கிறார் அமீர்கான்.மீதமுள்ள இந்திய வழக்குகளை துரிதப்படுத்துவது யார்?

இந்தியன்,அரட்டை அரங்கம்,அப்துல் கலாம்,சத்யமேவ ஜெயதே வரை நல்லெண்ணங்களுக்கும்,விழிப்புணர்வுகளுக்கும் இந்தியாவில் பஞ்சமேயில்லை.இவற்றையெல்லாம் திமிறிக்கொண்டு நகரும் அரசியல், நீதித்துறை,காவல்துறை,பொருளாதாரம்,மதம்,சமூக கட்டமைப்புக்களின் மனமாற்றங்கள் நேர்படும் காலத்தில் இந்தியா ஒளிரும்.

27 comments:

Unknown said...

// இந்தியன்,அரட்டை அரங்கம்,அப்துல் கலாம்,சத்யமேவ ஜெயதே வரை நல்லெண்ணங்களுக்கும்,விழிப்புணர்வுகளுக்கும் இந்தியாவில் பஞ்சமேயில்லை.இவற்றையெல்லாம் திமிறிக்கொண்டு நகரும் அரசியல், நீதித்துறை,காவல்துறை,பொருளாதாரம்,மதம்,சமூக கட்டமைப்புக்களின் மனமாற்றங்கள் நேர்படும் காலத்தில் இந்தியா ஒளிரும்.//

இக் கட்டுரையின் உயிர் நாடி இப்பத்தியே ஆகும் அருமை அன்பரே!அருமை!

புலவர் சா இராமாநுசம்

வவ்வால் said...

ராஜ்,

சத்யமேவ ஜயதேவும் ஒரு வணிக தொலைக்காட்சி நிகழ்ச்சியே ,எப்படி பேசினால் டி.ஆர்.பி எகிறும் என்பதை வைத்தே நிகழ்ச்சி அமையும்.ரொம்ப எதிர்ப்பாக்கிறிங்க போல.

பதிவில் கருத்தடை(Vasectomy-male,Tubectomy-female) என வரும் இடங்களில் எல்லாம் கருக்கலைப்பு (abortion)என வரவேண்டும்.

Bibiliobibuli said...

//சிசுக் கொலைகளுக்கான சாட்சியமாக பெண்கள் சொல்லும் கதைகள் அதிர்ச்சியை தந்தாலும் கூட அவர்கள் குறை கூறும் குடும்பத்தினர்களின் எதிர் நியாயங்களை கேட்க முடியாதது காட்சிப்பிழையே.//

வியாபாரம், பொருள்முதலீடு, இலாபம் இவை தானே கலையுலகம். இதில் பெரும்பாலும் எல்லாமே காட்சிப்பிழைகள் தான், விவரணப்படம் தவிர.

அமீர்கானுக்கு சத்யமேவ ஜயதேவும் இன்னோர் லகான் போல.

ராஜ நடராஜன் said...

வலைஞன்!நான் உங்களோடு அப்புறமா கதைக்கிறேன்.கீழே இன்னும் இரண்டு மூன்று பேர் காத்திருக்கிறார்கள்.நன்றி.

ராஜ நடராஜன் said...

புலவரய்யா!உங்க வயதின் அனுபவத்துக்கு முன்னாடி நானெல்லாம் இலுப்பை பூ சர்க்கரை மாதிரியே உணர்கிறேன்.நாம் ஒன்றை விட்டு இன்னுமொரு சமூக சிக்கலில் மாட்டிக்கொள்கிறோம் என்பது இன்னும் புரியாத புதிர்.

விலைவாசி,சமூக மாற்றங்கள் ஒவ்வோன்றும் நம்மை அறியாமலே நம்மிடம் வந்து ஒட்டிக்கொள்கின்றன.ஆபத்துக்குப் பின்பே உணரவும் குரல் கொடுக்கவும் துவங்குகிறோம்.

ராஜ நடராஜன் said...

வவ்வால்! பெரும்பாலும் நான் கருசிதைவு என்றே குறிப்பிட்டிருக்கிறேன்.முதல் கருத்தடை பொருள் சரியானதே.அந்த இடத்தில் ஜெயகாந்தன் மற்றும் நிரோத் என கொஞ்சம் நீட்டி முழக்கியிருந்தால் பொருள் சரியாக விளங்கியிருக்கும்.இந்தியாவின் எதிர்காலம் குடும்ப கட்டுப்பாட்டில்தான் இருக்கிறாதென்று மத்திய அரசு இயந்திரம் நினைக்க அதனை மாநில அரசுகள் ஓரளவுக்கு நிறைவேற்றிருக்கின்றன.ஜெயகாந்தன் கருத்தடைக்கு எதிரான கொள்கைவாதி என்று எங்கோ படித்த நினைவு.

இரண்டாம் கருத்தடை சொல்லில் நான் சறுக்கி விட்டேன் என்பது உண்மையே.

நான் உங்க கடைப்பக்கம் போயிட்டுத்தான் இங்கே பின்னூட்டப் பக்கமே வந்தேன்.புது வடையும் காணோம்,பின்னூட்டத்துக்கு பதிலையும் காணோம்.அப்புறம் நான் டீ குடிக்க வரமாட்டேன்னு என் மேலேயே பழியைப் போட்டு விடுங்க:)

இப்ப நீங்க திரட்டிகளில் இணைந்து கொள்வதில்லையென்பது முருங்கை மரத்துல முடியைக் கட்டி ஆணி அடிச்சமாதிரி மண்ன்டைக்குள்ள புகுந்துடுச்சு:)

ராஜ நடராஜன் said...

ரதி!நலமாக இருக்கிறீர்களா?உங்களை ஹேமா கேட்டுகிட்டிருந்தாங்களே!கடிதம் போட்டு நலம் விசாரிக்க சொன்னேனே.விசாரித்தார்களா?

எங்கே பதிவுலகில் திடீரென்று காணாமல் போயிட்டீங்க?என்னதான் அரைச்சாலும் நிகழ்வுகள் அதன் மிதப்பிலேயே நகர்கிறதென்றா?குழுக்கள்,குறைகள்,விமர்சனங்கள்,சில நம்பிக்கைகள் என்று பலவற்றையும் சந்தித்தாலும் மூச்சுக்காற்று வரை சுதந்திரம் பேசுவோம்.சுதந்திரம் கெட்ட வார்த்தை மாதிரி தற்போது தோன்றினாலும் கூட

வவ்வால் said...

ராஜ்,

எல்லா இடத்திலும் கருத்தடைனே வருவதால் எங்கே ,எந்த பொருள்னு குழப்பியது ,எனவே சொன்னேன்.

நாம ஒரு நாடோடிப்போல ஊருல இருக்கவங்க கடைக்குலாம் போய் வடையோ வம்போ வாங்கிட்டு கடைசியா தான் சொந்தக்கடைக்கே போவேன்...இதை எத்தனை தடவை சொல்றது.

நம்ம கடை சர்க்கார் அலுவலகம் போல எல்லாம் மெதுவாதான் நகரும், அதுக்குள்ள அவசரப்பட்டா எப்பூடி ?

நான் இங்கே உட்கார்ந்து டீ ஆத்திக்கிட்டு இருந்தா ,அங்கே யாருமே இல்லாத கடையில போய் டீக்கேட்டா எப்படி கிடைக்கும் :-))

Bibiliobibuli said...

நடா, எனக்கு சுதந்திரம் தவிர வேறெதையும் உருப்படியாய் பேசவும் தெரியாது :)

ஹேமா said...

பெண் என்னும் ஒரு படைப்பு அவ்வளவு பாவப்பட்டதா?!ஆண்களால் தனித்து வாழமுடியுமா....ஆண்கள் மட்டுமே உலகம் அல்லது மனித இனம் ஆகுமா...?!இப்படித் தொடர்கிறது கேள்விகள் !

நடா.....நானும் நடாவும் ரதியைத் தேடினோம்ன்னு மட்டும்தான் சொன்னேன்.கடிதம் போடச்சொல்லி போடாம விட்டது ரதிக்குச் தெரிஞ்சுபோச்சு !

Bibiliobibuli said...

ஒம், ஓம்.... தெரிஞ்சுபோச்சு ஹேமா :) ஏன் கடிதம் போடேல்ல ஹேமா :)))

ராஜ நடராஜன் said...

வவ்!எழுத்துப்பிழைகள்,பொருள் பிழை வருவதை மறு வாசிப்பில் உணர முடிகிறது.தவறுகளை துணிந்து வெளிப்படுத்துங்கள்.

எல்லா இடத்திலும் அடிச்சு ஆடுற நீங்க இங்கே வந்தால் மட்டும் எப்படி டக் அவுட் ஆயிடறீங்கன்னு தெரியலை:)மயிலிறகு மாதிரி இதமாக இருக்கவேண்டுமென்றுதான் எழுதுகிறோம்.சில சமயம் சொல்லடிகள் படவேண்டியுமிருக்கிறதென்பதை உணர்ந்து கொண்டு இன்னும் முடிந்தவரை தொடர்வோம்.சின்ன வயதிலும்,கல்லூரி பருவத்திலும் போட்டுக்கொண்ட சண்டைகளை இப்பொழுது நினைத்தால் சிரிப்பாகவும்,குறுக்குத்தனமாக இருப்பது போல் இன்னும் சில காலம் கடந்தபின் இப்போதைய நினைவுகளையும் அசை போடுவோம்.

அமீர்கான் பற்றியும்,சத்யமேவ ஜெயதே பற்றியும் முக்கிய்மாக பெண் சிசுக்குழந்தை அழிப்பும் பற்றியும் ஒன்றும் சொல்ல மாட்டேன்கிறீர்களே?

ராஜ நடராஜன் said...

//நடா, எனக்கு சுதந்திரம் தவிர வேறெதையும் உருப்படியாய் பேசவும் தெரியாது :)//

ரதி!அது:)

ராஜ நடராஜன் said...

ஹேமா!ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் பிறப்பு முதல் இறப்பு வரை பெண் தாயாக,சகோதிரியாக,நட்பாக,காதலியாக,மனைவியாக்,பாட்டியாக,கொள்ளுப்பாட்டியாக இணைபிரியாத பிறவி.இதற்கும் மேலாக கடவுளாக உருவகப்படுத்தியும் கூட பெண் சிசுக்கொலை எப்படி நிகழ்கிறது?அதுவும் படித்தவர்கள் மத்தியில் என்பது அதிர்ச்சிக்குரிய விசயம்.இது தொலைக்காட்சி மட்டுமே சொல்லும் விசயமா அல்லது என்னைச் சார்ந்தும் ஏதாவது நிகழ்கிறதா அல்லது நிகழ்ந்துள்ளதா என்று எனக்கு நானே திரும்பி பார்த்தால் உறவு முறையிலும்,நட்பு முறையிலும் திருமணமாகி சிசுக்கொலையென்று பெயருக்கு கூட ஒன்றைக்கூட நினைவு கூறமுடியவில்லை.

ஆனால் ஒன்றாக வாழும் கலாச்சாரத்தில் ஒரு பிலிப்பைன்ஸ் பெண் தனக்குத் தானே அபார்சன் செய்து கொண்டது நினைவுக்கு வருகிறது.இன்னுமொரு பெண் ஒரு அரேபியருடன் தொடர்பு கொண்டு விட்டு விட்ட சூழலிலும் கூட குழந்தை வேண்டுமென்று ஒரு பெண்குழந்தையை பெற்றுக்கொண்டது நினைவுக்கு வருகிறது.

ராஜ நடராஜன் said...

ரதி!என்னது கடிதம் போடலையா?அப்ப நாந்தான் ரகசியத்தை குளப்பி விட்டேனா ஹேமா:)

ஹேமா said...

ரதி....இன்னொருக்கா ஒளிச்சு விளையாடுங்கோ.கடிதம் போடுறன் கட்டாயம் !

அது ஒரு கனாக் காலம் said...

ஆஹா இன்னுமா இந்த ஊரு நம்பளை நம்புது !!!!!!????
நல்ல ஆய்வு ...

பின்னூட்டத்தில் இருந்து ஒரு சம்மந்தா சமந்தம் இல்லாம ....

"என்னைச் சார்ந்தும் ஏதாவது நிகழ்கிறதா அல்லது நிகழ்ந்துள்ளதா என்று எனக்கு நானே திரும்பி பார்த்தால் உறவு முறையிலும்,நட்பு முறையிலும் திருமணமாகி சிசுக்கொலையென்று பெயருக்கு கூட ஒன்றைக்கூட நினைவு கூறமுடியவில்லை"

இதையே சதி அல்லது உடன் கட்டை ஏறுதலுக்கும் சொல்லலாம் ...
எனக்கு தெரிந்த வரை, என்னுடையவோ அல்லது, நண்பனுக்கோ ...அல்லது தூரத்து உறவினருக்கோ நான் அறிந்த வரை யாரும் உடன் கட்டை ஏறியதாக கேள்வி பட்டதே இல்லை ..ஒரு வேளை இது ஜெய்ப்பூரில் / ராஜஸ்தானில் நடந்திருக்கலாம் ... ஆனால் எத்தனை பேர் இதை வைத்து ..பாப்பானை , இந்துவை, இந்தியாவை ..ஒரு வழி பண்ணி இருக்காங்க

ராஜ நடராஜன் said...

ஹேமா!ரதி பதிவு போடுவதே ஒளிச்சு விளையாடற மாதிரிதான் இருக்கும்.பந்திக்கு உட்கார்ரவங்களையும் துரத்தி விட்டுடுவீங்க போல இருக்குதே:)

ராஜ நடராஜன் said...

வாங்க கனா:)ஜெயகாந்தனின் முகவுரை மாதிரி மட்டுமே உங்களுக்கான அறிமுகம்.கதை என்னமோ சத்யமேவ பற்றித்தான்.அதுக்கு நெருப்பு வச்சதோட உங்களோட வேலை முடிஞ்சது.இனி நீங்க யாருக்காவது வடை கொடுக்க கிளம்பலாம்:)

உடன்கட்டை விசயம் ஐந்து ஆறு தலைமுறகளுக்கும் முன்பு வடக்கில் முக்கியமாக ராஜஸ்தான் ஜெய்ப்பூர் பகுதியில் இருந்திருக்க கூடும்.ஆனால் பார்ப்பனியத்தின் மிச்சங்கள் பெரியாரின் காலம் வரை தமிழகத்தில் இருந்ததை மறுப்பதற்கில்லை.த்ற்போதைய சமூக மாற்றங்களில் திராவிடன்,பார்ப்பனன் என்ற சொல் தொடர்களை கடந்து பயணிப்போம்.
இதற்காக சில அனுபவங்களை பகிர்ந்து கொள்வது சிறப்பாக இருக்கும்.

முந்தைய பதிவுகளில் கண்ணதாசனின் பாடலான அவனை அழைத்து வந்து ஆசையில் மிதக்க விட்டு என்ற பாடலை திருமணமான முதிர் நண்பர் சொன்னதாக குறிப்பிட்டிருக்கிறேன்.வர்ணாசிரமப் பிரிவின் கீழ்நிலையில் நின்று கொண்டு பிராமண பெண்னை காதல் திருமணம் செய்து கொண்டவர்.மயிலாப்பூர் குளத்தங்கரை,திருவான்மியூர் மகாசல்ட்சுமி கோயில் என தஞ்சாவூரை சார்ந்த ராதாகிருஷ்ணன் என்ற பிராமண் நண்பர் தனியாக அம்மா தன்னை வளர்த்தெடுத்ததையும்,ராஜ ராஜ சோழனின் கட்டிடக்கலை ஆர்வத்தையும் கோயில்களின் அற்புதங்களையும் சொல்வதை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருப்பேன்.ஆத்திகமும் நாத்திகமும் ஒன்றாக கரம் கோர்த்துக்கொண்ட தோழமையான காலங்கள் அவை.

நான் மெட்ராஸ் வந்து சேர்ந்த்தும் கூட ஒரு ஆத்திகனும் நாத்திகனும் நன்பர்களாக இருந்து என்னை கோவையிலிருந்து காரில் அழைத்துக்கொண்டு வந்த முரணே:)

Bibiliobibuli said...

ஹேமா கடிதம் போடேல்ல என்றாலும் நிறைய அன்பு ராஜ நட :))

வவ்வால் said...

ராஜ்,

//எல்லா இடத்திலும் அடிச்சு ஆடுற நீங்க இங்கே வந்தால் மட்டும் எப்படி டக் அவுட் ஆயிடறீங்கன்னு தெரியலை:)//

இன்னும் ஆடவே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள டக் அவுட்டாமே :-))

//அமீர்கான் பற்றியும்,சத்யமேவ ஜெயதே பற்றியும் முக்கிய்மாக பெண் சிசுக்குழந்தை அழிப்பும் பற்றியும் ஒன்றும் சொல்ல மாட்டேன்கிறீர்களே?//


பேசினா மட்டும்? பேசுவேன் அது வீண் வம்புல தான் போய் முடியும். எனவே தான் பேசவில்லை.

அது ஒரு கனாக் காலம் said...

"ஆனால் பார்ப்பனியத்தின் மிச்சங்கள் பெரியாரின் காலம் வரை தமிழகத்தில் இருந்ததை மறுப்பதற்கில்லை.த்ற்போதைய சமூக மாற்றங்களில் திராவிடன்,பார்ப்பனன் என்ற சொல் தொடர்களை கடந்து பயணிப்போம்"....

கண்டிப்பாக ...ஆனால் பெரியாரின் பங்களிப்பு இருந்ததால் மட்டுமே இந்த மிச்சங்கள் / சொச்சங்கள் எல்லாம் போய் ஒடுக்கப்பட்டவர்கள் தமிழ்நாட்டில் மறுவாழ்வு வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கை பல பேருக்கு உண்டு. அப்படியானால் ... அவரின் பங்களிப்பு இல்லாத மற்ற மாநிலங்களில் அவர்களின் நிலைமை இன்னும் மோசமாக இருக்க வேண்டும் அல்லது வேறு பல புண்ணிய ஆத்மாக்களின் சேவை இருக்க வேண்டும் ( காந்தியோ , நாராயண குருவோ ....) தமிழ் நாட்டிலே கூட இந்த கொடுமைகள் ஒழிய வேறு பலரும் பாடு பட்டிருக்க கூடும் .... ஆனால் பெரியார் சேவையின் கூட வெறுப்பையும் அல்லவா விதைத்தார்

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,
பேச்சளவில் மாத்திரம் சமூக விழிப்புணர்வு இருக்கிறது என்பதனை அருமையாக விளக்கி நிற்கிறது இப் பதிவு.

நாம் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்பதனை எம் சமூகம் உணர்ந்தால் இந்த மாதிரியான விடயங்களைத் தவிர்க்கலாம்.

ராஜ நடராஜன் said...

ரதி!ஹேமாவின் அன்புதான் அவரது கவிதைகளிலும்,கதைகளிலும்,பின்னூட்ட்டங்களிலும் வெளிப்படுகிறதே!

ராஜ நடராஜன் said...

வவ்!இன்னும் ஆடவே ஆரம்பிக்கலையா?ஐ.பி.எல் க்கு பதிலா உலக மேட்சே இனித்தான் வரவிருக்குதாக்கும்?

வம்பு வருமா?முந்தைய பதிவின் பின்னூட்டங்களை இன்னும் கூட நீட்டி முழக்கலாம்.வேண்டாம் விட்டுடுவோம்.

ராஜ நடராஜன் said...

கனா!வடக்கு மாநிலங்களை விட்டு விடுவோம்.தென் மாநிலங்களில் ரிபெலியன் மாநிலம் தமிழகம் மட்டுமே.மைக்ரோவாக நுழைந்தால் கர்நாடகமும்,ஆந்திராவும் ஐடி ஒன்றைத் தவிர சமூக கட்டமைப்பில் இன்னும் பின் தங்கியே உள்ளன.தமிழகத்தில் திராவிட இயக்கம் இல்லாமலிருந்தால் கேரளாவைப் போல் நக்சலிஸமும்,கம்யூனிசமும் வந்திருக்கும்.பெரியாரின் பேச்சுக்கள் பொக்ரானின் அணுகுண்டு பரிசோதனை மாதிரி.பெரியாரின் பேச்சில் சமூக அக்கறைக்கான கோபமே இருந்தது.அதுவே கருணாநிதி அவர்களுக்கோ அரசியலும்,சுயநலமும் கலந்த அறிக்கைகளாய் எதிர் தூண்டலாய் பாகிஸ்தான் பரிசோதனை மாதிரி.

காந்தியின் தமிழக வருகைகள் தவிர காங்கிரஸின் காலம் மிட்டா மிராசின் எலே கருப்பசாமி வாடா இங்கே சூழல் மட்டுமே.இதனை பெரியாரைத் தவிர மாற்றிப்போட்டவர்கள் கம்யூனிஸ தோழர்களாக இருக்கலாம்.கமர்சியலாக இருந்தாலும் தமிழ் திரைப்ப்டங்களுக்கும் இதில் பங்குண்டு.பரதமும்,சங்கீதமும் பிராமணச் சொத்து என்பதும் கூட இப்பொழுது மாறித்தானே இருக்கின்றது.இளையராஜாவும்,ரகுமானும் தமிழ் இசையின் அங்கமாகிவிட்டார்களே!

தமிழ் கூட கோபலபுரத்திலிருந்து ஓடிப்போய் தமிழ்மணீயன் வீட்டுக்குள் போய் உட்கார்ந்து கொண்டது:)இவையெல்லாம் சமூக மாற்றங்கள்தானே?

ராஜ நடராஜன் said...

வணக்கம் நிரூ!சண்டையெல்லாம் போட்டு முடிச்சிட்டீங்களா?என் கடைக்கு சண்டையே இப்பத்தான் மெல்ல எட்டிப்பார்க்குது:)இல்லைன்னா சண்டை போடறவங்களுக்கு மருந்து தடவிட்டு வந்திடறேன்.

வந்தமா டீ குடிச்சமா பேப்பர் பார்த்தோமான்னு இல்லாம இத்துணூண்டு துணுக்கையெல்லாம் கூட படிச்சிட்டு சண்டை போடறாங்கப்பா:)

பயணத்தின் தூரம் ஒத்தையடிப் பாதையா நீண்டுகிட்டே இருக்குது.இதுல குறுக்கு சந்துகள் வேற இடையில் வந்து சேர்ந்து வலது பக்கம் போவதா இடது பக்கம் போவதான்னு வேற குழப்பி விட்டுடுது.

நாமாவது முடிஞ்சளவு நடந்து போவோம்ன்னு முயற்சி செய்றோம்.சிலர் இருக்குறாங்களே!தம்பி நடக்காதப்பா கால் வலிக்கும்.உட்கார்ந்த இடத்திலேயே கடை விரிச்சிடலாம்ங்கிறங்க:)