Followers

Thursday, May 24, 2012

அம்னெஸ்டியின் 2012 / 50ம் உலக மனித உரிமை அறிக்கை

அடக்கியாளும் சக்தியும் நீதி மறுப்பும் மோதிக்கொள்வதால் உலக மனித உரிமைகள் வழக்கமான ஒன்றானதாக இல்லையென்ற தலைப்போடு அம்னெஸ்டி இன்டர்நேஷனல் 2012ம் ஆண்டுக்கான 50ம் உலக மனித உரிமை அறிக்கை துவங்குகிறது.

 கடந்த 12 மாதங்களாக எழுந்த உலகளாவிய போராட்டங்களும் அதற்கு சற்றும் குறையாத தோல்விகளடைந்த அரசு தலைமையும் ஐ.நா பாதுகாப்பு சபையை களைப்படைய செய்யவும் அதன் நோக்கத்தை தோல்வியடையவும் செய்கிறது.இதனை சீரமைக்க உலக ஆயுத வியாபார உடன்படிக்கையை வலுவானதாக்க வேண்டும்.

தோல்வியடைந்த உலகளாவிய தலைமைகளாய் ஜனாதிபதிகள். பிரதமர்கள், அரசியல்வாதிகள் மிருகத்தனமான வன்முறைகளை போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.அரசாங்கம் சட்டபூர்வமான தலைமையாகவும் அநீதிகளை மறுப்பதாகவும் சக்தியற்ற மனித போராட்டங்களை தாங்கிக்கொள்ளும் அதிகாரமுடையதாக இருக்க வேண்டும்.கார்பரேட்களுக்கு பதிலாக மக்களையும்,வியாபார நலன்களுக்கு பதிலாக உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது என்கிறார் அம்னெஸ்டியின் பொது செயலாளர் சலீல் ஷெட்டி.

மனித உரிமைப் போராட்டக்குழுக்களுக்கு வாயளவில் காட்டிய ஆர்வத்தை வட்டார அதிகார நாடுகள் செயலில் நடைமுறைப் படுத்த தவறி விட்டன. புதிய மாற்றங்களை விரும்பிய எகிப்திய போராட்டக்காரர்கள் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதில் தலையீடுகளும் அழுத்தங்களும் உருவாகின்றன.

மனித உரிமைகளை விட சந்தர்ப்பவாத பொருளாதர நலன்களோடு மட்டுமே உலக வல்லரசுகள் கூட்டணி அமைத்தன என்பது மத்திய கிழக்கு நாடுகளிலும்,தென் ஆப்பிரிக்க பிரச்சினைகளிலும் வெளிப்பட்டது. அரசியல், கார்பரேட் நலன்களுக்கு சாதகமான சூழலில் மனித உரிமைக் கொள்கைகளை ஆதரிக்கவும் தமது நலன்களுக்கு எதிரான சூழலில் மனித உரிமைகளை குப்பைத் தொட்டியில் போட்டுவிடும் சூழலே உருவாகியுள்ளது.

இலங்கையில் தலையீடு செய்ய தவறியதும் மனித உரிமைகளுக்கு எதிராக சிரியாவில் செயல்படாமையும் (வார்த்தை பிரயோகம் கவனிக்க A failure to intervene in Sri Lanka and inaction over crimes against humanity in Syria) ரஷ்யாவின் முக்கிய வியாபார வாடிக்கையாளர்களாக இலங்கை,சிரியா இருந்த காரணம் கொண்டு ஐ.நா பாதுகாப்பு சபையை உலக சமாதான பாதுகாவலன் என்ற அவநம்பிக்கையை உருவாக்கியுள்ளது.உலக வல்லரசுகளாக வளரும் இந்தியா,பிரேசில்,தென் ஆப்பிரிக்கா பெரும்பாலும் குரல் கொடுக்காமல் மௌனம் மட்டுமே காத்தன.

சிரியாவை உலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு தேவையான அனைத்து காரணிகளும் இருந்த போதிலும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் சில அங்கத்தினர்களால் பாதுகாக்கப்படுவதால் குற்றவாளிகள் தப்பிக்கவும் சிரியாவின் மக்களுக்கு துரோகம் மட்டுமே மிஞ்சுகிறது.

91 நாடுகளில் சுதந்திரமான கருத்துரிமை இல்லையென்றும் 101 நாடுகளில் கொடுரமாக மக்கள் தாக்கப்படுவதாகவும் அல்லது போராட்டங்களில் கலந்து கொண்டதால் மோசமாக நடத்தப்படுவதாகவும் அம்னெஸ்டியின் 2012ன் அறிக்கை கூறுகிறது.

 கொடுமையான அரச தலைவர்களை பதவியிலிருந்து நீக்குவது மட்டும்  நீண்ட கால மாற்றங்களுக்கு உதவாது.அரசாங்கங்கள் கருத்துரிமை வெளிப்படுத்தலை உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் அங்கீகரிக்கவும் தமது உலகளாவிய பொறுப்புக்களை உணரவும் நீதி,சுதந்திரம் மற்றும் சட்டத்துக்கு முன்னால அனைவரும் சமம் என்ற நிலையை அரசுகள் உருவாக்க பாடுபடவேண்டும்.

ஐ.நாவில் ஜூலையில் துவங்கும் ஆயுத வியாபார உடன்படிக்கை அரசியல்வாதிகளுக்கு சுயநலங்கள்,லாபங்களுக்கு முன்பு உரிமைகளை முக்கியம் என்பதை உணர்வது ஒரு திராவக பரிட்சையே.

அம்னெஸ்டியின் உலகளாவிய மாற்றங்கள் குறித்த சில:

பாதுகாப்பு கருவி கொண்டு மனித உரிமைகளை மூச்சடைக்கும் படி அடக்கியவை சீனா மற்றும் வட கொரியா

சகாரா ஆப்பிரிக்கா,மத்திய கிழக்கு நாடுகள்,வட ஆப்பிரிக்காவில் மக்களின் எழுச்சி குரல் எழுந்தது.போராட்டக்காரர்கள் மீது அதிக பலத்தை உபயோகித்த நாடுகள் அங்கோலா முதல் செனிகல் மற்றும் உகாண்டா

பிரேசில்,கொலம்பியா,மெக்சிகோ நாடுகளில் மனித உரிமை ஆர்வலர்கள் கொல்லப்பட்டார்கள்

சோவியத் யூனியன் வீழ்ந்த பின் முதன் முறையாக ரஷ்யாவில் சமூக போராட்டங்கள் வளர்ந்தன.ஆனால் எதிர்ப்புக் குரல்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டன.

டர்க்மேனிஸ்தான்,உஜிபெக்ஸ்தானில் எந்த முன்னேற்றமும் இல்லை.

தென் சூடானில் சுதந்திரத்திற்கான வாக்குரிமையில் வன்முறைகள் ஏற்பட்டன.ஐ.நா,தென் ஆப்பிரிக்க யூனியன் மற்றும் பாதுகாப்பு சபை சூடான் ராணுவம் வரைமுறையற்று மக்கள் மீது குண்டுகள் பொழிந்ததையும் மனித நலன் அமைப்புக்கள் மூடியதையும் தடுக்க தவறி விட்டது.

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்பிரிக்காவின் மக்கள் எழுச்சியை உலக நாடுகள் உற்றுநோக்கின. ஈரான் தனிமைப்படுத்தப் பட்டது. மரண தண்டனைகளை மிக உற்சாகமாக நிறைவேற்றியது. சவுதி அரேபியா மக்கள் போராட்டங்களை அடக்கியது.

இஸ்ரேல் பாலஸ்தீனிய காசாவில் தடுப்புக்களை உருவாக்குவது தொடர்வதும் சட்டத்துக்கு புறம்பாக வெஸ்ட் பேங் நிலத்தில் மக்களை குடியமர்த்தவும் செய்கிறது.இஸ்ரேலிய ராணுவமும் பாலஸ்தீனிய ஆயுத குழுக்களும் பழிக்குப் பழி தாக்குதல்களை தொடர்கின்றன.

மியான்மர் அரசு 300 அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் ஆங்க் சான் சூ கி தேர்தலில் போட்டியிடவும் அனுமதித்தது.ஆனால் சிறுபான்மையினர் பகுதியில் மனித உரிமை மீறல்களும்,மனித உரிமை ஆர்வலர்களை கைது செய்ததால் சீர்திருத்தங்களுக்கான முயற்சிகள் குறைக்கப்பட்டன.

ஆதிவாசி குடிமக்கள் மீதான மனித உரிமை மீறல்களாய் வளங்களை சுரண்டுவது அமெரிக்க நாடுகளில் ஆக்கிரமிக்கிறது.

ஆப்பிரிக்காவில் பாலியல் பலாத்காரங்களும் ஐரோப்பிய நாட்டு அரசியல்வாதிகள் சிலரால இன வெறுப்பு குற்றங்கள் தூண்டப்படுகின்றன. ஆப்பிரிக்க இஸ்லாமிய ஆயுத குழுக்களால் தீவிரவாதம் தூண்டப்படுகின்றன.

முன்னேற்றங்களாக மரண தண்டனைக்கு எதிரான உலகளாவிய விழிப்புணர்வும்,அமெரிக்க நாடுகளின் கடந்த கால குற்றங்களுக்கு மன்னிப்பும்,குறிப்பிடும் படியான நீதியாக ஐரோப்பாவில் ஜெனரல் ரட்கோ மியாடிக் மற்றும் குரேசியன் செர்ப் கோரன் ஹஸ்டிக் 1990ம் ஆண்டில் யூகோஸ்லியாவின் போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


மேலே சொன்ன அனைத்தும் அம்னெஸ்டியின் 2012ம் ஆண்டு அறிக்கையின் மொத்த தொகுப்பு.இவ்வளவு மொழி பெயர்ப்புக்கு ஊதியமாக என்னோட பக்க வாத்தியமாகவும் சிலவற்றை இணைத்துக் கொள்கிறேன்.

இத்தனையும் அம்னெஸ்டி சொல்லி விட்டு பெரியண்ணாத்தே அமெரிக்காவின் ஈராக் தலையீடு பற்றியும் இப்ப நிலைமை என்ன என்றும் குறிப்பிட மறந்து விட்டதே!Why?

ஒரு புறம் கட்டற்ற அதிகாரங்கள் கொண்ட ஆள்பவர்களாக உலக நாடுகளின் அரசு இயந்திரம் மறுபுறம் போராட்ட குணம் கொண்ட மக்கள் இயக்கங்கள்.இவைகளை மேலோட்டமாக ஊடகங்கள் வாயிலாக பார்த்தோமானால் போராட்டக்காரர்களே வன்முறைகளை தூண்டுவது போலவும் தீ வைத்து பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடுவது போலவும் தோன்றும்.ஆனல் இந்த வன்முறைகளுக்குப் பின்னால் முகமூடி போட்டுக்கொண்ட அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளும் மொத்த போராட்டங்களின் பிரச்சினையை ஊதி விடுவபவர்களாக ஆளும் இயந்திரமே செயல்படுகிறது.;மொத்த நாடுகளின் செயல்பாட்டில்  நம்மைச் சுற்றி எத்தனை நாடுகள் இருக்கின்றன நமக்கென்ன ஆகிவிடப்போகிறதென்று ராஜபக்சே குழுக்கள் மனதுக்குள் மகிழ்ந்து கொள்ளலாம்..உலகின் பெரிய ஜனநாயக நாட்டு கவசத்துக்குள் இந்தியா இன்னும் தொடர்ந்து மௌனியாக இருந்து விடலாம்.

அரச பாராளுமன்ற கட்டமைப்புக்கும் அப்பால் செயல்பட்டு இந்தியா சார்பில் 3 பேர் இலங்கை சார்பில் 3 பேர் என்று திட்டமிட்டு போரை நிகழ்த்தி மக்களை கொன்றோம் என்று துணிந்து சொல்லும் கோத்தபயவும்,ராஜபக்சே முன்னால் கூனிக் குறுகி உட்கார்ந்திருநந்த சிவசங்கர மேனன், எம்.கே.நாரயணன் போன்றவர்கள் சிக்கலான நடைமுறைகள் கொண்ட சுயநல வியாபார அரசியல் வலைக்குள் தப்பித்துக்கொள்ளும் சாத்தியங்கள் இன்று வரை பிரகாசமாகவே இருக்கிறது.காரணங்களாய் ரஷ்யா,சீனாவின் வீடோக்கள் கவசங்களாகவும் பேருக்கு பெரியப்பா ஊருக்கு உமை இந்தியாவும் உள்ளன.(நானே கண்டு பிடிச்ச புதுமொழி இது) ஆனாலும் உலகளாவிய உண்மைகள் வெளிப்படுவதற்கு மனித உரிமைக் குழுக்க|ளை ஆதரிப்போம்.


http://www.amnesty.org/en/news/report-2012-no-longer-business-usual-tyranny-and-injustice-2012-05-24

9 comments:

Rathi said...

ராஜநட, பகிர்தலுக்கு நன்றி.

IMF, World Bank இவற்றையும், UN, International Crisis Group இதுபோன்ற அமைப்புகளையும் வைத்து அமெரிக்கா செய்யும் பொருளாதார, அரசியல் முடக்கங்கள் வெளியில் எந்தவொரு NGOs (???) ஆலும் வெளிப்படுத்தப்படுவதில்லை.

இந்த அறிக்கையையும் பாருங்கள். இங்கே ஏன் அமெரிக்காவின் பங்கு அதிகம் பேசப்படவில்லை என்று எனக்கும் ஒரு சந்தேகம் உண்டானது. என் புரிதலில் குறைபாடோ என்றும் நினைத்துக்கொண்டேன்.

http://issuu.com/svenskafreds/docs/srilanka?mode=a_p

சார்வாகன் said...

வணக்கம் சகோ,

நல்ல பதிவு.நான் சில விடயங்களை பொதுப்படையாக விளக்குகிறேன்.பல‌ தமிழ் திரைபடங்களில் நல்லவன் கெட்டவன் என சில வரையறைகள் இருக்கும்.கெட்டவன்(வில்லன்) எவ்வள்வு மோசமாய் சித்தரிக்கப் படுகிறானோ அந்த அள்வுக்கு நாயகன்(நல்லவன்) வினைகள் நியாயப் படுத்தப்படும்.

ஆனால் எதார்த்த உலகில் சில இடங்களில் இயற்கை வளம் அதிகம் இருப்பதும் அதனை சுரண்ட விரும்பும் ஆதிக்க சக்திகளும் உண்டு.இயற்கை வளம் மட்டுமன்றி அடசியல் ஆதிக்கம் பெற்றால் மட்டுமே சுரண்டல் நீடிக்க இயலும்.ஒரு இடத்தின் நாயகன் இன்னொரு இடத்தில் வில்லன் ஆவான்.
இப்படி ஆதிக்க சக்திகளின் போட்டியில்தான் இந்த நவீன புரட்சிகள் தோற்று விக்கப்படுகின்றன.கதை திரைக்கதை எழுதி அருமையாக் இயக்கி எதிர்பார்க்கும் விதத்தில் முடிவு இருக வேண்டும் என காய் நகர்த்துகிறார்கள்.
அதுவரை புரட்சி,போராட்டம் என உயிர் இழப்பு,அழிப்பு என பல் நடந்தாலும் யாருக்கும் கவலை இல்லை.
இதில் இந்த போலி மனித உரிமை அமைப்புகள் வில்லன்(கெட்டவன்) செயல்களை விவாதித்தும்,கண்டித்து அவனுக்கு எதிரான செயல்களை நியாயப்படுத்தும் பணியை அருமையாக செய்வார்கள்.நாயகனின் செயலை கண்டித்தால் பதவி போய்விடும்.ஒருவேளை வில்லன்[எதிர் குழு நாயகன்] ஆதரவு மனித உரிமை அமைப்புகள் கண்டித்து பெரிய ஆள் ஆகலாம்.

இதில் இருந்து மக்கள் விடுபட வேண்டுமெனில் மிக கடினம்.இனம்,மொழி,மதம்(பிரிவுகள்) மற்றும் சாதி என பிரிந்து கிடப்பதால் மக்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ளவே சரியாக இருக்கும்.இதில் சுரண்டுபவனை எங்கே எதிர்ப்பது?எங்கும் எதிலும் போட்டி,இதில் வாழ வழியின்றி எதையும் செய்ய தூண்டப்படும் மக்கள் கூட்டம் இந்த ஏக போக சுரண்டலை கண்டு கொள்வது இல்லை.
சுரண்டல் பங்கு வணிகத்தில் எப்படி நடக்கிறது என்பதை சகோ வ‌வ்வாலின் பதிவில் அறியவும்.
மக்களில் உயர்வு தாழ்வு இல்லை,ஒரு மனிதனுக்கு இருக்கும் உரிமை அடுத்தவனுக்கும் கிடைக்க வேண்டும்..அனைவருக்கும் வாழ்வாதாரம்,கல்வி,சுகாதாரம் எளிதில் அனைவருக்கும் கிடைக்க வழி செய்வதைப் பற்றி பேசுபவன் இக்காலத்தில் பைத்தியக்காரன் போல் தெரிவான்.உண்மையான் ஜனநாயகம்,அதிகாரப் பகிர்வு,மனித உரிமை சட்டங்கள் என வரும் காலம் எப்போது?
இதில் மிகவும் வருத்தமான விடயம் இவை இன்னும் கிடைக்கவிலை என்பதே பலருக்குத் தெரியாது!!
இந்த பிண்ணனியில் உங்கள் பதிவை மீண்டும் படியுங்கள்
நன்றி

ராஜ நடராஜன் said...

ரதி!நான் சொல்வதை விட பிறர் சொல்வதை கேட்பதிலும் அதில் உண்மைகளை தேடுவதிலும்தான் ஆர்வம் எனக்கு.ஒரு பக்க கட்டுரைக்கு அதன் ஒரு புத்தகத்தையும் அதன் தொடர்புடைய இன்ன பிற கட்டுரைகளையும் கொடுத்ததில் எனக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சியென்ற போதிலும் இவற்றையெல்லாம் படித்து விட்டு நான் எப்படி எபொழுது மறுமொழி சொல்வது.ஆனாலும் நீங்கள் இணைத்த சுட்டியை முடிவுரை நீங்களாக வாசித்து விட்டே இந்த பின்னூட்டமிடுகிறேன்.

பெரும்பாலான ஆய்வுகளில் சில இங்குமங்குமாகவும் ஐ.நா மூவர் குழு அறிக்கையிலும் சிதறிக்கிடக்கின்றன.பக்க சார்பில்லாத உண்மைகளை Arms Trade with Sri lanka ஆய்வும் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.அனைத்து நாடுகளும் இலங்கைக்கு உதவின என்ற தகவல்களும் உலக நடிகர்களின் இரட்டை வேடங்களும் முன்பே இணையம் சிதறியவைகளாக இருந்தாலும் எந்த எந்த நாடுகள் என்னென்ன ஆயுதங்களை எந்த கால கட்டத்தில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் கொடுத்தார்கள் என்ற விபரத்தை ஆய்வு பட்டியலிட்டுக் காட்டுகிறது.

இலங்கையின் பூகோள சாதகம்,உலக நாடுகளின் சுயநலங்கள்,சீனாவின் இலங்கை மீதான் அக்கறை,ரஷ்யாவின் ஆதரவு,பாகிஸ்தானிடமிருந்தும் கூட ஆயுதங்கள் என்று இந்தியாவுக்கு செக் வைத்தும் கனரக ஆயுதங்களை தமிழ்நாட்டு அழுத்தம் என்ற காரணம் கொண்டு தருவதில்லையென்று முடிவெடுத்த போதிலும் சீன ராடார்களை இலங்கை பெறுவதால் இந்தியாவின் தென்பகுதிகளும் சீனாவின் துப்பறியும் வசதிக்குள் நுழைந்து விடும் நிர்பந்தம் கருதி இலங்கை அரசுக்கு இந்திய ராடார்கள் கொடுத்ததும்,இந்தியாவிலிருந்தே விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டும் இந்தியாவினாலே ஆயுதங்கள் வழிமறிக்கப்பட்டதும்,விடுதலைப்புலிகளின் கடற்படை பலத்தை பன்னாட்டு உதவிகள் கொண்டு எப்படி வெற்றி கொள்ள முடிந்ததென்றும் ஆய்வு நீண்டு கொண்டே செல்கின்றது.

இஸ்ரெல்,உக்ரைனின் விமான உதவிகள்,இப்பொழுது இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் அமைப்பது வரை வளர்ச்சியடைந்துள்ளதின் பின்ண்ணியை இப்பொழுது புரிந்து கொள்ள முடிகிறது.உக்ரைன் விமான பைலட்டுகளின் உதவியோடு மக்கள் மீதான குண்டு வீச்சுக்களை முல்லி வாய்க்காலுக்கும் முன்பான உக்கிரமான காலகட்டத்திலேயே பதிவுகள் மூலமாக காண நேர்ந்தது.ஆனால் அந்த கால கட்டத்தில் விடுதலைப்புலிகளின் பொய்ப் பிரச்சாரமென்று இலங்கை ஆளும் வர்க்கமும்,விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர்களும் மக்கள் அழிந்தாலும் பரவாயில்லையென்ற மனநிலையையே கொண்டிருந்தன என்பதை காலம் கடந்து இந்திய ஸ்டேஜ் ஆக்டர்களால் உணரமுடிகிறது.

கனடாவிலிருந்து எழுதும் டி.பி.எஸ் ஜெயராஜின் கட்டுரைகள்,நக்கீரன் அட்டைப்படம்,கஸ்பரின் தொடர்கட்டுரை,இறுதிக்கட்ட முல்லிவாய்க்கால் குழறுபடிகள் என தமிழ் பார்வையாளர்களை குழப்பும் சூழல் உருவாகின என்றாலும் இப்பொழுது ஜெயராஜின் கட்டுரைகளையும் பின்னூட்டங்களையும் ஆய்வு செய்யும் போது கள நிலவரங்களுக்கு கிட்டத்தட்ட மிக அருகில் ஜெயராஜ் பயணித்துள்ளார் என்பதை உணர முடிகிறது.ஜெயராஜின் கட்டுரைகளை தொடர்ந்து வாசித்தால் அவர் எந்த நிலைப்பாட்டில் பயணிக்கிறார் என்ற குழப்பமும் என்னில் உருவாகிறது.அதற்கான காரணமாக இப்பொழுது இலங்கை அரசு சார்பாளர்கள்,நடுநிலை,எதிர்நிலையென பல செய்திகளையும்,கட்டுரையையும் பார்வையிடுவதாலேயே.

உங்கள் பதில் கண்டு தோன்றுவதை மீண்டும் சொல்வேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

சகோ.சார்வாகன்!முந்தைய பின்னுட்டத்தின் அடிப்படையில் பதிவர் ரதி கொடுத்த சுட்டியின் பெரும்பகுதியை வாசிக்க வேண்டிய நிர்பந்தத்தால் உங்கள் பின்னூட்டத்திற்கான பதிலும் தாமதமாகவே.

சுட்டியை வாசித்து விட்டு இப்பொழுது மீண்டும் உங்கள் கருத்தை நோக்கினால் நோஸ்டர்டாம்ஸ் மாதிரி தோன்றுகிறது உங்கள் பின்னூட்டம்:)

உங்கள் ஒப்பீடான நல்லவன்,வில்லன் அடிப்படையில் பார்த்தால் எந்த நாட்டை நீங்க நல்லவரா?கெட்டவரா என்று கேட்க இயலவில்லை.அம்னெஸ்டியின் அறிக்கை அனைத்து நாடுகளையும் குற்றம் சுமத்துவது போலவே இலங்கைப் போரில் அனைத்து நாடுகளுமே பங்கு கொண்டுள்ளது பட்டியலிடப்படுகிறது.

அரசியல் ஆதிக்கம் பெற்றால் மட்டுமே சுரண்டல் நீடிக்குமென்பதால் மட்டுமே ஒருவர் மாற்றி இன்னொருவர் ஆட்சிபீடத்தில் உட்காரும் சூழல் உருவாகிறதோ?மாற்றத்திற்கு மம்தாவையும்தான் உட்கார வைத்துப்பார்ப்போமே என்ற மக்களின் பரிசோதனையும் கூட தோல்வியிலேயே முடிந்து விட்டது.

உலகளாவிய அளவில் அமெரிக்காவின் இயற்கை வள சுரண்டல் பிரபலமானதென்ற போதிலும்,உலகளாவிய உதாரணங்கள் நிறைய சொல்ல இயலுமென்ற போதிலும் தற்போதைய அமெரிக்காவின் பொருளாதார வலிமையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காக வகிக்கும் பனாமா கால்வாயின் வரலாற்றை எடுத்துக்கொள்வோம்.

http://geography.about.com/od/specificplacesofinterest/a/panamacanal.htm


விக்கிபீடியா இன்னும் அதிகமாக விளக்கும்

http://en.wikipedia.org/wiki/Panama_Canal

காணொளிப்பிரியரான உங்களுக்கு பனாமா உங்களுக்கு எவ்வளவு காடுகளை அழித்து மக்கள் வளம்,பொருளாதார முதலீட்டில் நதி இணைப்பு உருவானதென்று பனாமா கால்வாய் காணொளிகள் இன்னும் விளக்கும்.வல்லான் வகுத்ததே சட்டமென்ற நியதில் உலகம் இயங்குவதாலும் மனித உரிமை அமைப்புக்கள் இயங்குவதற்கான பொருளாதார உதவியும் கூட அமெரிக்காவே வழங்குவதால் அமெரிக்க ஆதிக்கம் தங்களுக்கு பாதகமாக் அமையும் காரணம் கொண்டே ரஷ்யா,சீனா போன்றவை தவறுகள் என்று உணர்ந்தும் இலங்கை,சிரியா மீதான ஆதரவு கரத்தை நீட்டுகின்றன.

ஜி.எல் பெருசு போனவாரம் வெறும் கையை நீட்டிக்கொண்டு போய் ஹிலாரியிடம் கைகுழுக்கி விட்டு அமெரிக்க அரசு செய்தியாளர் நுலண்ட் பெருசு LLRC குறித்து ஒரு பெரிய பொட்டலமே கட்டிக்கொண்டு வந்து விட்டாரென்று அறிக்கை விடுகிறார்.அதற்கடுத்த நாள் பெருசு அமெரிக்காவின் உட்ரோ வில்சன் கட்டிடத்திலேயே இலங்கை வீட்டில் பூத்த காளானையே நாங்கள் ரோஜாவென்போம்.வெளியே இருந்து பன்னீர் தெளித்து பிரியாணியே கொடுத்தாலும் சாப்பிட மாட்டோம் என்று தனது பேராசிரிய கல்வி மேன்மையை வெளிப்படுத்துகிறார்.அப்படியா என அமெரிக்கா அடுத்த நாள் ஐ.நா அறிக்கையே இன்னும் அமெரிக்காவின் நிலைப்பாடு என்கிறது.இந்த கண்ணாமூச்சியில் ஒருவருக்கு ஒருவர் என்ற நிலையில் யார் வில்லன் யார் ஹீரோ என்பது அவர்களுக்கே வெளிச்சம்.எப்படியே இது ஆவறதில்லன்னு பக்கபலத்துக்கு ரஷ்யாவுக்கு ஓடிய அடுத்த கணமே இலங்கையில் வெளிநாட்டு தலையீடுகளை அனுமதிக்க மாட்டோம் என தான் உள்நாட்டுக்காரன் மாதிரி பாவனையில் ரஷ்யா பெருசுடன் கட்டிப்பிடித்துக்கொண்டு அறிக்கை விடுகிறது.

இலங்கையிலிருந்து விலகி அம்னெஸ்டி சொல்வது போல் சிரியா பக்கம் திரும்பினாலும் அவரவர் சுயநலங்களின் அடிப்படையிலேயே காய்நகர்த்தல்கள்.துனிசியா,எகிப்துக்கான மக்கள் போராட்டங்களையும்,ஜனநாயகத்தையும் ஆதரித்த அமெரிக்கா சிரியாவுக்கு இணையான பஹ்ரைன் மக்கள் போராட்டத்தை ஆதரிப்பதில்லை.காரணம் ஈரான்.

நாம் அம்னெஸ்டி செய்தியை மட்டும் பார்த்து விட்டு உங்களுக்குப் பிடித்த விக்ரமாதித்தன் வேதாளம் கதையின் ங்கேன்னு மட்டுமே பார்த்துக்கொண்டுள்ளோம்:)

எனக்கு பசிக்குது.வாரேன்.

ராஜ நடராஜன் said...

ரதி!அமெரிக்க பெரியக்கா ஹிலாரி கிளிண்டனின் மனித உரிமை அறிக்கையும் இங்கே இணைக்கிறேன்.


http://www.state.gov/j/drl/rls/hrrpt/humanrightsreport/index.htm?dynamic_load_id=186475#wrapper

Rathi said...

ராஜ நட, உங்கள் பதிலை நிறைய நேரம் எடுத்து வாசித்து முடித்தேன் :)

அனேகமான அறிக்கைகள் புதிதாய் எதையும் சொல்வதில்லை விஜய டி.ராஜேந்தர் ரேஞ்சுக்கு மாவரைக்கிறார்கள் என்றே எனக்கு தோன்றும் :)

டி.பி.எஸ். ஜெயராஜ் முன்னாள் இந்து ராம் என்பவரின் நட்புவட்டம் என்று கனடா தமிழர்களால் அறியப்பட்டவர். இந்து பத்திரிகையிலும், கனடாவின் National Post வலதுசாரி பத்திரிகையிலும் ஈழத்தமிழர்கள் போராட்டம் பற்றி அவர் பாணியில், உங்கள் வார்த்தையில் குழப்பமாய் எழுதியவர், எழுதுபவர் என்று கனடாவாழ் ஈழத்தமிழர்களால் நன்கு அறியப்பட்டவர்.

சில Political Academic Papers ஈழம் குறித்து எழுதியவர்கள் கூட ஜெயராஜ் ஈழம் பற்றி எழுதுகிறார் என்று தான் குறிப்பிடுக்கிறார்கள். ஆனால், அவர் எழுத்தை ஆழமாய் quote செய்வதில்லை என்பது நான் கவனித்தது.

தவிர, ராம் என்பவருக்கு ஈழத்தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் Concentration Camp இல் நுழைய அனுமதி கிடைத்தது போல், ஜெயராஜ்க்கும் நீங்கள் சொன்ன, ///கள நிலவரங்களுக்கு கிட்டத்தட்ட மிக அருகில் ஜெயராஜ் பயணித்துள்ளார் என்பதை உணர முடிகிறது./// என்கிற தகவல்கள் கிடைத்திருக்குமோ :)

ம்ம்..... அமெரிக்கா-பெரியக்கா (நல்ல பெயர் கிலாரிக்கு :)))அறிக்கை வாசித்து முடிக்கவில்லை. படிக்கவேண்டும். ஆனா, அமெரிக்க ராஜாங்க அறிக்கை சீனாவின் மனித உரிமை மீறல்களை விமர்சிப்பது சரியல்ல என்று சீனா எகிறியது செய்தியில் தெரிந்தது :)

Rathi said...

ராஜ நட, உங்கள் பதிலை நிறைய நேரம் எடுத்து வாசித்து முடித்தேன் :)

அனேகமான அறிக்கைகள் புதிதாய் எதையும் சொல்வதில்லை விஜய டி.ராஜேந்தர் ரேஞ்சுக்கு மாவரைக்கிறார்கள் என்றே எனக்கு தோன்றும் :)

டி.பி.எஸ். ஜெயராஜ் முன்னாள் இந்து ராம் என்பவரின் நட்புவட்டம் என்று கனடா தமிழர்களால் அறியப்பட்டவர். இந்து பத்திரிகையிலும், கனடாவின் National Post வலதுசாரி பத்திரிகையிலும் ஈழத்தமிழர்கள் போராட்டம் பற்றி அவர் பாணியில், உங்கள் வார்த்தையில் குழப்பமாய் எழுதியவர், எழுதுபவர் என்று கனடாவாழ் ஈழத்தமிழர்களால் நன்கு அறியப்பட்டவர்.

சில Political Academic Papers ஈழம் குறித்து எழுதியவர்கள் கூட ஜெயராஜ் ஈழம் பற்றி எழுதுகிறார் என்று தான் குறிப்பிடுக்கிறார்கள். ஆனால், அவர் எழுத்தை ஆழமாய் quote செய்வதில்லை என்பது நான் கவனித்தது.

தவிர, ராம் என்பவருக்கு ஈழத்தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் Concentration Camp இல் நுழைய அனுமதி கிடைத்தது போல், ஜெயராஜ்க்கும் நீங்கள் சொன்ன, ///கள நிலவரங்களுக்கு கிட்டத்தட்ட மிக அருகில் ஜெயராஜ் பயணித்துள்ளார் என்பதை உணர முடிகிறது./// என்கிற தகவல்கள் கிடைத்திருக்குமோ :)

ம்ம்..... அமெரிக்கா-பெரியக்கா (நல்ல பெயர் கிலாரிக்கு :)))அறிக்கை வாசித்து முடிக்கவில்லை. படிக்கவேண்டும். ஆனா, அமெரிக்க ராஜாங்க அறிக்கை சீனாவின் மனித உரிமை மீறல்களை விமர்சிப்பது சரியல்ல என்று சீனா எகிறியது செய்தியில் தெரிந்தது :)

ராஜ நடராஜன் said...

ரதி!உங்கள் பின்னூட்டத்துக்காக வேண்டி மீண்டுமொரு முறை எனது பதிலை வாசிக்கும் போது கருத்தின் கவனத்தில் எழுத்தின் தவறுதலாக முள்ளிவாய்க்காலை மெல்லினம் போட்டு எழுதியிருக்கிறேன்.மன்னிக்கவும்.எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதற்கேற்பவே பல செய்திகளையும் பார்க்கிறேன்.

உங்கள் பின்னூட்டத்தை ஒட்டியே பதில் சொல்லவேண்டியிருப்பதால் டி.பி.எஸ் ஜெயராஜ் பற்றியே இன்னும் கொஞ்சம் பேசுவோம்.முள்ளிவாய்க்காலின் நிகழ்வுகளுக்கான கால கட்டத்தில் முன்பே சொன்னது மாதிரி நக்கீரன்,கஸ்பர்,ஜெயராஜ் மூன்று தளத்தில் ஜெயராஜ் நீண்டகாலமும்,அக்கறையும் எடுத்துக்கொண்டுள்ளார் என்பதை அவரது கருத்துக்களும்,300க்கும் மேலான பின்னூட்டங்களும் உறுதிப்படுத்துகின்றன.என்.ராமின் தொடர்புகள் இருக்கும் பட்சத்தில் ராமின் மூலமாக கூட செய்திகள் ஜெயராஜ் அவர்களுக்கு கசியவிடப்பட்டிருக்கும்.அவரே நீண்ட நேரமும்,பொருட்செலவும் செய்தே தகவல் சேகரிப்பதாக கூறுகிறார்.தமிழ் தேசியகூட்டமைப்புக்கும் ராஜபக்சேவுக்குமிடையேயான நேரடிப் பேச்சுவார்த்தையை ராஜபக்சே தானே சுயாதீனமாக முறித்துக்கொண்டு இப்பொழுது தமிழ்தேசிய கூட்டமைப்பும் இலங்கை பாராளுமன்றக் குழுவும் முதலில் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் பின் அதன் அடிப்படையில் ஜனாதிபதியுடன் பேசலாம் என்கிற புதிய முறை இப்பொழுது தூங்குவதும் இதற்காக இலங்கை ஊடகவியளாளர்கள் உதவவேண்டும் என்ற ராஜபக்சேக்கள் நிலைப்பாட்டில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏன் அங்கம் வகிக்க வேண்டுமென்றும் சாலமன் பாப்பையா பாணியில் பிடித்தால் கட்டிக்குவோம் பிடிக்காட்டி பிரண்ட்ஸாக இருப்போம்ங்கிற மாதிரி தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு வேறு வழியே இல்லை.பாராளுமன்றக் குழுவோடு பேசுவதுதான் நல்லது பிடிக்காவிட்டால் பேச்சுவார்த்தை துவங்கிவிட்டு விலகிக்கொள்ளலாம் என்று ஜெயராஜ் கேன்வாஸ் செய்கிறார்.இதற்கிடையில் ரணில் விக்கிரமசிங்கே தனியாக ஒரு ரூட் போடுகிறார்.

இலங்கை அரசுக்கு எதிராக கிளம்பும் அழுத்தங்களைக் குறைப்பதற்கும் LLRC யை நடைமுறைப்படுத்துகிறோம் என்று அமெரிக்காவுக்கு காண்பிக்கவும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை இலங்கை அரசுக்கு மிக அவசியமாகிறது.

இலங்கையில் இன்னும் வன்முறைகள் தொடர்கிறதென்றும் இதற்கு கூட்டு துணையாக ஆயுத குழுக்கள் இயங்குகின்றன என்பதே பெரியக்கா அறிக்கையின் சாரம்.

இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஊடாக இலங்கை தொடர்பாக ஆராய்வதற்காக மூன்று நாடுகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.இந்தியா,ஸ்பெயின்,ஆப்பிரிக்காவின் பென் ராஜ்ஜியம் ஆகியவைகள்.ஈழத்தமிழர்கள் விரும்பியோ விரும்பாமலோ இந்தியா சார்ந்த முடிவுகள் எட்டும் என்பதற்கு இந்த மூவர் குழு இன்னுமொரு உதாரணம்.

Rathi said...

ராஜ நட, சில கேள்விகளுக்கு நான் பதில் சொல்வதை விட இந்தக்கட்டுரைகள் தெளிவாய் பதில் சொல்லும்.

http://suthumaathukal.blogspot.ca/2011/08/blog-post_06.html

http://tamilthesiyam.blogspot.ca/2011/08/2.html

///இந்திய உளவுத் துறைக்கு ஆதரவாக ‘இந்து’ பார்ப்பன நாளேட்டில் எழுதி வந்த டி.பி.எஸ். ஜெயராஜ் போன்ற பத்திரிகையாளர்களே, இந்த உண்மைகளை ஒப்புக் கொண்டு எழுதியிருக்கிறார்கள். //

சில சமயங்களில் நடுநிலையாளன் என்று காட்ட இது போன்ற பரகசியங்களையும் எழுதுவார்கள்.

இது நீங்க சொன்னது.... ராஜ நட,

//என்.ராமின் தொடர்புகள் இருக்கும் பட்சத்தில் ராமின் மூலமாக கூட செய்திகள் ஜெயராஜ் அவர்களுக்கு கசியவிடப்பட்டிருக்கும்.அவரே நீண்ட நேரமும்,பொருட்செலவும் செய்தே தகவல் சேகரிப்பதாக கூறுகிறார்.//

ஓ... :)

நாங்கள் நினைப்பதை விட அவருடைய தொடர்பின் எல்லைகள் விஸ்தீரணமானவை என்பது பாமர ஈழத்தமிழனுக்கும் தெரியும். அவர் தான் பயங்கரவாதத்திற்கு எதிராய் எழுதுபவராச்சே!

மற்றப்படி, நக்கீரன், கஸ்பர் எல்லாம் ஜெயராஜ் முன்னால் ஒண்ணுமேயில்லை.

இலங்கையை கண்காணிக்க, LLRC அமுலாக்கம் குறித்து, ஐ. நா. மனித உரிமைகள் ஒரு குழுவை அமைக்கும் என்பது முன்பே எதிர்பார்க்கப்பட்டது.

//ஈழத்தமிழர்கள் விரும்பியோ விரும்பாமலோ இந்தியா சார்ந்த முடிவுகள் எட்டும் என்பதற்கு இந்த மூவர் குழு இன்னுமொரு உதாரணம்.//

அதே, அதே!

//எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பதற்கேற்பவே பல செய்திகளையும் பார்க்கிறேன்.//

அதை எங்களோடும் பகிருங்க. ஏன்னா, எனக்கு ஜெயராஜ், கஸ்பர், நக்கீரன் படிக்குமளவிற்கு பொறுமை, சகிப்புத்தன்மை இரண்டும் இல்லை.