நானறிந்த வரை சூழல்கள் ஒருவருக்கு சிம்மாசனத்தை தூக்கி கொண்டு சுற்றும். தனி மனித சிந்தனை, உள் அரசியல் போன்றவை எதிர்பார்ப்புக்களை நீர்க்க செய்து விடும். அந்த வரிசையில் மூப்பனார்,ரஜனி போன்றவர்களிடம் தலைக் கீரிடம் கோபித்துக்கொண்டு ஓடி விட்டது.
இப்போதைய தமிழக அரசியல் சூழலில் வை.கோவும்,விஜயகாந்தும் தங்கள் ஈகோக்களை விட்டு ஓரணியில் மூன்றாம் அணிக்கு சந்தர்ப்பம் அமையுமா என்பதை பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 2010ல் எதிர்பார்த்த சீமான் உரத்த குரல் தவிர எப்படி பெரியாரியல் அரசியல் களமாடுவது என்ற அடிப்படை மறந்து பச்சைத் துண்டு,முருகன் வேல் சின்னம் என 2016ல் தான் தான் முதலமைச்சர் கனவு தமிழக வெள்ளத்துக்கும் முன்பே எங்கோ போய் முட்டிக்கொண்டு விட்டது.
இரண்டு கழக ஆட்சிகளும் தமிழகத்திற்கு தங்கள் கடமையை செய்து விட்டார்கள். ஒன்று ஜனநாயகத்திற்கு எதிரான வாரிசு அரசியலை உருவாக்குகிறது. இன்னொன்று ஒற்றை ஆட்சி முறையென்பதால் தமிழ் நாட்டின் எதிர்காலத்துக்கு உத்தரவாதமில்லை. தமிழகத்தில் ஜனநாயக பரவல் தேவையென்றால் வலுவான தலைமையோடு மாற்று அரசியல் தேவைப்படுகிறது. மக்கள் விரும்பினால் 2016லேயே அந்த மாற்று அரசியலை கொண்டு வந்து விட முடியும். ஓடுவதே ஓடட்டுமென்றாலும் தமிழகத்தின் எதிர்காலம் வெறுமையாகவே இருக்கிறது.
வழியில் போகும் ஓணானை பழமொழி மாதிரி விகடன் வழியில் போவோரை வழி மறித்து அடுத்த முதல்வராக யாரை விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை முன் வைத்தது.
ஒரு பையன் 41C
ஒரு பெண்மணி மைக்கிலிருந்து 100 அடி தள்ளி போய் நின்று கொண்டார்
ஒருவர் நல்லாட்சி தரும் யாராக இருந்தாலும் என்ற மதில் மேல் பூனை
காக்கி உடையில் இருந்த ஒரு ஆணும் பெண்ணும் நாங்க கவர்ன்மெண்டு ஆட்கள் கருத்து சொல்லக் கூடாது
நாமம் போட்ட ஒருவர் மழைக்கு யாருமே வரவில்லையென்ற புலம்பல்.
ஒருவர் ஜெயலலிதா
இன்னொருவர் கலைஞர்
புதுசா யாராவது வரனுங்க
ஆளை விடுங்க சாமி என ஒதுங்கியவர்கள் அதிகம்
படித்தும் கட்சி சுவற்றில் ஒட்டிய பல்லிகள் நிறைய இருக்கிறார்கள். இவர்களை தவிர இலவசம் தவிர எங்களுக்கு அரசியல் தெரியாது என்பவர்களும்,என்னதான் சொல்லுங்க என் ஓட்டு இவருக்குத்தான் என்ற அசையா நெஞ்சர்கள் நிறைய இருக்கிறார்கள்.
அரசியல் ஈகோ,உள்குத்து வேலைகளை பின் தள்ளி Administration Oriented Ministers and Chief Minister என்ற நோக்கில் சகாயம் போன்றவர்களை முன் நிறுத்துவது மாற்று அரசியலுக்கான வழியை திறக்கும் என்ற போதிலும் இது போன்ற சிந்தனைகள் கொண்டவர்கள் படித்த வர்க்கத்து மைனாரிட்டியாக இருக்கலாம். மேலும் ஊழல்கள் அரசு துறை ஆவணங்களில் கருத்தரிக்கின்றன என்பதால் ஊழலை வெற்றி கொள்ளும் சந்தர்ப்பங்களும் அமையலாம் அல்லது அதிக கரு முட்டைகளையும் இடலாம்.
இதையெல்லாம் தாண்டி சகாயம் அரசியலுக்கு வருவாரா என்பதே மில்லியனோடு ஒற்றை ரூபாய் சேர்த்த கேள்வி.
வந்தால்? தமிழகத்தின் புது அரசியல் முயற்சி.
பதிவை முடிவு செய்யும் தருணத்தில் மக்கள் நலக்கூட்டணி விஜய்காந்துக்கு பொன்னாடை போர்த்துகிறார்கள். ஆட்டம் எப்படி போகுது பார்க்கலாம்.