Followers

Showing posts with label போர்:-:மனிதம். Show all posts
Showing posts with label போர்:-:மனிதம். Show all posts

Tuesday, May 26, 2009

இனி மனிதம் மட்டுமே பேசுவோம்

போர்களினால் இடம்பெயர்ந்த எந்த மக்களும் பல திசை நோக்கியே பயணித்திருக்கிறார்கள்.ஒரு திசை நோக்கி நகர்ந்த மனித நகர்வுகள் என்று யோசித்தால் எனக்குத் தெரிந்து பைபிளின் மோசஸ் பின்னால் கடலுக்கு அருகே சென்ற இஸ்ரேல் வம்சத்தாரும் பிரபாகரன் பெயரால் நதிக்கரை நகர்ந்த ஈழத்து தமிழ் மக்கள் மட்டுமே.இரண்டுக்குமே கடல்கள் சாட்சி சொன்ன,சொல்லும் நிகழ்வுகள்.முந்தைய சரித்திரத்தை மெய்ப்பிக்கவென்றே இன்றும் பிரமிடுகள் அசையாமல் நின்று கொண்டிருக்கின்றன.இப்போதைய சரித்திரத்தையும் சாட்சிக்கு அழைக்கவென்றோ என்னவோ திருவள்ளுவன் சிலையாக நின்று கொண்டிருக்கிறான்.

இன்றைய மனிதர்களும் அவர்களைச் சார்ந்த நிகழ்வுகளும் கால ஓட்டத்தில் மறைந்து விடும்.ஆனால் வரலாறு நிகழ்வுகளை தன்னிடத்தே தக்க வைத்துக்கொள்ளும்.மக்கள் வேறு,புலிகள் வேறு என்ற கூற்றுக்கள் எல்லாம் இறுதிப் போரின் அவலங்களில் பொய்யாகிப் போய் இருக்கின்றன.போரின் வெற்றிகள் இலங்கைக்கு பலத்தையும் அதன் தெற்கு திசையில் கொண்டாட்டங்களையும் தருகிறது.சிங்கள மக்களின் கொண்டாட்டங்களை விமர்சிப்பது தவறு.அது இனம் சார்ந்த, மண் சார்ந்த மனித இயல்பு.ஆனால் நாம் விமர்சிக்க வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன.

போருக்கும் அப்பால் தமிழர்களுக்கான தீர்வாக இலங்கை அரசு எந்த தீர்வை உலகின் முன் வைக்கிறது?அப்படி வைக்கும் தீர்வுகள் எல்லாருக்கும் உடன்பாடு உள்ளதாக இருக்குமா?இப்போது நிகழும் புலம்பெயர்ந்த மக்களின் போராட்டங்களின் எதிர்பார்ப்புக்கள் என்ன?இவர்களுக்கான எதிர்காலத்தை எப்படி முன்வைக்கப்போகிறது?புலிகள் பயங்கரவாதிகள் என்று சொல்லியே பயங்கரவாதியாகிப் போன இலங்கை அரசு தமிழர் மனதால் பட்ட காயங்களை எப்படி ஆற்றப் போகின்றது?இல்லை இவை காயங்கள் அல்ல வெறும் கீறல்களே என்று கருணா சாட்சியம் சொல்ல வருவாரா?

இலங்கை அரசுக்கு தன்னை நிரூபித்துக் கொள்ளவும் அப்பாவி மக்களின் துயரங்களைப் போக்கவும் உடனே செய்ய வேண்டியது பொதுமக்களை தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்துவதே.அது தவிர்த்து ஸ்கிரீனிங்க் என்பது இருக்கும் மனிதர்களை இல்லாமல் செய்வதற்குரிய உள்நோக்கமாகவே இருக்கும்.அமெரிக்கா செய்ததையே நானும் செய்கிறேன் என்று சொல்லும் இலங்கை அரசுக்கு அமெரிக்கா மாட்டுக்கொட்டில்களாய் எங்கும் மனிதர்களை முட்கம்பிக்குள்ளும் கூடாரங்களிலும் அடைத்து வைக்கவில்லை.

மடியில் கனமில்லை பயமில்லையென்றால் அனைத்துலக ஊடகங்களையும் சுதந்திரமாக அனுமதிக்கட்டும்.முன்புதான் ஊடகவியளாலர்களின் உயிருக்கு உத்தரவாதம் தர இயலாது.இப்போதைய தடைக்கான அவசியம் என்ன?உண்மைகள் இலங்கை அரசு சார்பாக இருந்தாலும் உலகின் முன் தெரியட்டும்.

இதுவரை பாலஸ்தீனியன் மாதிரி இருந்த ஈழத்தமிழன் அவனையறியாமலேயே யூதனாகிப் போனான்.ஈழத்தமிழா!மனிதம் பேசு.அறிவும்,திறமையும்,வீரமும்,பொருளும் உனக்குள்ளே நிறைந்து கிடக்கிறது.(இது புகழ்ச்சிக்கான வார்த்தை இல்லை இரு மொழியின் வரலாறுகள் இப்போதே கண்முன்)

ஒன்று சேர்.கட்டமைப்பு நடத்து.கதைகளை,கனவுகளை,புலம்பல்களை அகற்று.உலக நண்பர்களைச் சேர்.நிதர்சனம் காண்.வரும் சந்ததிக்கு நல்வாழ்வினை மாற்று.

(கடலுக்கும் அப்பால் இருக்கும் சகோதரத் தமிழனுக்கு உனக்காக வேண்டி குரல் மட்டுமே எழுப்ப முடியும்.கோஷங்களே வாழ்க்கையாகிப் போன எங்களுக்கு இது மட்டுமே சாத்தியம்.ஆனாலும் இந்த நீண்ட கோஷங்கள் மட்டுமே உனக்கு இழந்த வாழ்க்கையை மீட்டுத்தரும்.)