இன்று மீனகம் வெளியிட்டிருந்த இந்த பதிவை காண நேர்ந்ததும் அதிர்ச்சியாக இருந்தது.அதுவும் கோவை ,திருப்பூர் என்றதும் முகத்தில் அறைந்த மாதிரி ஒரு உணர்வு. நகர்,மலை,ஆறுகள்,வனம்சார்ந்த இடங்களாய் சுற்றித்திரிந்த காரணமாக புறநகருக்கும் அப்பாலான பேச்சு வழக்கு, கிராமிய கட்டமைப்புக்கள் அனைத்தும் பெரும்பாலும் புத்தகங்கள் மற்றும் தமிழ் திரைப்படங்கள் கற்றுக்கொடுத்தவையே. இந்து ,இஸ்லாமியன் ,கிறுஸ்தவன் என்ற முத்திரைகள் ஒட்டிக்கொள்ளாத இளமைக்கால நட்புறவுகளுக்கும் மனிதர்களுக்கும் இந்த கணத்தில் மரியாதை செலுத்திக்கொள்கிறேன். கல்லூரிக்காலத்தில் பல்லடம் அருகே கிராமம் ஒன்றுக்கு நடந்து போகவேண்டிய வெயிலில் செங்கல் சூலையில் வேலை செய்து கொண்டவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டதற்கு சாமி இங்கேயெல்லாம் தண்ணி குடிப்பீங்களா என்று கேட்டதன் பொருள் விளங்காமல் குடிப்பேன் என்று சொல்லி தாகம் தீர்த்தது மட்டுமே குவளைக்கான எனது புரிதலாக இருந்தது.
இன்னும் அதிகம் சொல்லப்போனால் திராவிட,பார்ப்பனீய அதீத வெறுப்புக்களை கூட பதிவுலகம் வந்தே கண்டு கொண்டேன்.ஒரு தனி மனிதனைப் பார்க்கும் போதும் ,பேசும் போதும் ஹலோ சொல்லுவதோ,யதேச்சையாக பேச்சுக்கொடுப்பதோ என இருக்கும் மனிதன் எப்படி கூட்டாக வாழும்போது கட்டுக்களை விதித்துக்கொள்கிறான்.கல்லூரி விடுதிகளிலும் கூட அவனவன் சாதிபூதம் அவனவன் ட்ரங்குப்பெட்டி,சூட்கேஸ்களில் மட்டுமே உறங்கிக் கொண்டிருந்தனவே.எப்படி கிராமங்களில் அவை அகோர முகம் காட்டித்திரிகிறது.வெள்ளாந்தியான மனிதர்களுக்குள் எப்படி மன இறுக்கமான பூட்டுகள்?
இல்லாத ஒன்றை இருக்குது,இருக்குதுன்னு டமாரமடிச்சு திரிந்ததாலா அல்லது கம்யூனிஸ்ட்டுகள் சிந்தனையின்படி பிரபுத்துவ,பூர்ஷ்வா வேறுபாடுகள் மண்ணில் ஆழப்பதிந்து கிடக்கிறதா.நகர்ப்புற உணவகங்களில் கல்லாவுக்கு காசு வருகிறதா என்று மட்டும்தானே பார்க்கிறார்கள்?தலையில் உருமா கட்டியவன்,ஜீன்ஸ் போட்டவனென்றா பார்க்கிறார்கள்?கிராமப்புற டீஸ்டாலில் மட்டுமெப்படி இரட்டைக்குவளை வந்து தொலைக்கிறது.பெரியாரின் காலத்திலிருந்து நகர்ந்து வந்து 30,40 ஆண்டுகள் கழித்தும் இரட்டைக்குவளை இழிநிலையெனும் போது நமது சமூக வளர்ச்சியின் விகிதாச்சாரம் புரிகிறதா?ஒரு தலைமுறை கழிந்து அடுத்த தலைமுறைக்கான புதிய வித்துக்கள் அல்லவா வளர்ந்திருக்க வேண்டும்.திராவிட இயக்கங்களின் பெயர் சொல்லியே ஆட்சிக்கு வந்தவர்கள் காலத்திலேயே சமூக அசுத்தங்களை அகற்ற முடியவில்லையென்றால் இனி எந்தக்காலத்தில் இவைகள் அவை அந்தக்காலம் என்ற பழைய வரலாறாகப் போகின்றன?திராவிட,பார்ப்பனீய சண்டைகளை மூட்டை கட்டி கூவத்துல தள்ளிவிட்டு உண்மையாகவே சமூகத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் சாதியவாதிகளை அடையாளம் காண்பது மிக முக்கியம்.
இரட்டைக்குவளையுடன் தமிழன் உலகின் மூத்த குடி என சுய முதுகு சொறிந்து கொள்கிறோம்.ஒரு முறை சில அரேபியர்கள் ஏழெட்டுப்பேர் வட்டமாக உட்கார்ந்து கொண்டு பெரிய அண்டா மூடி மாதிரியான பாத்திரத்தில் கூஸி எனப்படும் முழு ஆட்டுப்பிரியாணியை சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.ஒருவர் குடித்த கிளாசில் இன்னொருவர் குடிப்பதற்கும் கூட முகம் சுளிக்கவில்லை.அரேபியர்கள் பெண்ணுரிமைகளில் பிற்போக்காக இருந்தாலும் (இப்போது தொலைக்காட்சி ,உலகளாவியல் ,பன்னாட்டு கலாச்சாரத்தால் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது) சாப்பாட்டில் காட்டும் ஒற்றுமை இரட்டைக்குவளை நிலைக்கு மாறுபட்டது.
உடன்கட்டையேறுவது தவறு என்று சட்டமாக்கப்பட்டு இப்போது உடன்கட்டையே காணாமல் போய்விட்டது.இரட்டைக்குவளையும் தவறு என்பது அரசியல் சட்டத்தினால் மட்டுமே இயலும்.கூடவே கிராமம்,தமிழகம் என்ற வட்டத்துக்கும் அப்பால் பிரபுத்துவ மனப்பான்மையாளர்கள் இயன்ற வரை இந்தியா சுற்றுலா செல்வது பாரதம் பற்றிய புரிதலோடு மனிதம் என்ற உன்னதமான வெளிச்சத்தையும் காட்டும்.