Followers

Tuesday, January 20, 2009

மசாலா தோசையும் குஜராத்தி குஜிலிகளும்

கல்லூரிக் காலங்களில் பெங்காளி முகர்ஜி,சேட்டன் பிரவின், மதராசி நானும் ஒன்றாக ஓடித் திரிந்து கொண்டிருந்தோம்.அப்படி மும்பாயில் ஒரு நாள்...

சென்னையின் திருவல்லிக்கேணி பிரம்மச்சாரிகளுக்கு எப்படி ஒரு வரப்பிரசாதமோ அப்படி ஒரு பிரம்மச்சாரிகளின் வில்லா ஒன்று விலே பார்லேவில் இருந்தது.அப்போதைய மெட்ராஸையும் பம்பாயையும் இணைக்கும் பாலமாக இருந்தது அந்த பிரம்மச்சாரிகளின் கட்டிடம்.

காலை வேளையில் 11 மணி வாக்கில் பக்கத்திலிருக்கும் உடுப்பி ஓட்டலில் ஏதாவது கொட்டிக்கலாமுன்னு மூவரும் சென்றோம்.மும்பையின் பெரும்பாலான உடுப்பி உணவு விடுதிகளின் மேசைதளம் பளிங்கு மார்பிள் கல்லால் செய்யப்பட்டிருக்கும்.பளிங்கு மார்பிள் விலை குறைவின் காரணமாகவோ அல்லது உண்டு முடித்தவுடன் சுத்தம் செய்வதற்கு வசதியாகவோ அந்தக் கல் பதிக்கப் பட்டிருக்க வேண்டும்.உணவுத் தட்டுகளும்,டம்ளரும் சில்வர் பண்டங்களாகவே இருந்தன.தண்ணீரில் போட்டு முக்கி எடுக்கவும்,உடையாத காரணத்தாலும்,வாடிக்கையாளர்களைக் கவருவதற்கும் ஏற்ற பாத்திரங்கள்.நானும்,முகர்ஜியும் ஒரு பக்கமும் எதிர்த்தார் போல் பிரவினும் உட்கார்ந்து கொண்டான்.உபசரிப்பவரிடம் 3 மசாலா தோசை ஆர்டர் செய்து விட்டு ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந்தோம்.

அப்பொழுது எங்கள் பார்வையில் படும் படியாக 4 குஜராத்தி குஜிலிகள் வந்து பக்கத்து நாற்காலிகளில் வந்து உட்கார்ந்து கொண்டன.பெண்களை லுக் விடுவதில் முகர்ஜி முதலினம்,நான் இடையினம்,பிரவின் மெல்லினம்.பார்வைகள் சரசமாடிக் கொண்டிருந்தன.

அதற்குள் எங்களது மசாலா தோசை,சட்னி,சாம்பார், சில்வர் முள்கரண்டி,ஸ்பூன் சகிதம் வந்து டேபிளில் உட்கார்ந்து கொண்டது.மூவருமே ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்ளாமல் கரண்டியையும்,ஸ்பூனையும் தோசைக்கு அப்பால் நகர்த்தி விட்டு கையால் மசால் தோசையை சாம்பார் சட்னியுடன் பதம் பார்க்க ஆரம்பித்தோம்.பக்கத்து சீட்டு குஜிலிகளின் களுக்கென்ற சிரிப்பு சத்தம்.முகர்ஜி என்னிடம்" nat! they are laughing at us because we are using fingers" என்று கிசு கிசுத்தான்.பிரவின் ஒன்றும் பேசாமல் எங்கள் இருவரையும் பார்த்து மெல்லிதாய் சிரித்து விட்டு தோசையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டான்.

இந்த நேரத்தில் குஜிலிகளுக்கும் தட்டுக்கள் வந்தது.பார்த்தால் 4 மசாலா தோசைகள்.நானும்,முகர்ஜியும் கைக்கும் வாய்க்கும் வேலை கொடுத்து விட்டு கண்களால் எதிர் மேசையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தோம்.அப்பொழுது ஒரு குஜிலி துவக்கமாக ஸ்டைலாக முள்கரண்டியையும்,ஸ்பூனையும் வைத்துக் கொண்டு மெல்ல மசாலா தோசையை குத்த ஆரம்பித்தது.தோசை சில்வர் தட்டுடன் பளிங்குக் கல்லில் ஒரு சுற்று வட்டம் வந்தது.அதற்குள் இன்னொரு குஜிலியும் தோசை சுற்றலில் இறங்க எனக்கு மனசுக்குள் சிரிப்பும் முகர்ஜி நேரிடையாகவே "Hey look look, watch the fun" என்றான்.மச்சா this is our turn to laugh என்றேன் நான்.குஜிலிகளும் பிடிவாதமாக தோசையை சுத்துவதிலும் சிரமப் பட்டு முள்கரண்டி யுத்தம் நடத்திக் கொண்டிருந்தார்கள்.தாளி ( சரியா?) சாப்பாட்டுத் தட்டென்றால் கமுக்கமாக உட்கார்ந்து கொள்ளும் தட்டு தோசைக்கு மட்டும் செக்குமாடு மாதிரி சுத்தறமாதிரி பாத்திரங்கள் அடிப்பகுதி வட்டம் சற்று மேல் நோக்கிய் வண்ணம் குவிந்து போய் விடுவது பளிங்கு கல்லின் அணைப்புக்கு ஏற்புடையதாயில்லை.நாங்கள் காபி சொல்லி அருந்திவிட்டு பில்லைக் கொடுத்து விட்டு வந்தோம்.(அப்பவெல்லாம் இந்தி தெரியாத காரணத்தால் எனக்கு வாயாடி வேலை எதுவும் இல்லாமல் போய் விட்டது)

மசாலா தோசைக்கு தன் கையே தனக்குதவி திட்டமும் இட்லி வடை க்கு சாம்பார் துணையுடன் கரண்டி உபயோகிப்பதில் தவறில்லை என்பது எங்கள் நண்பர் குழுவின் கூட்டறிக்கை.

நீங்க எப்படி?

பின் குறிப்பு: கல்லூரி என்றதும் நான் பதிவுப் பக்கம் வந்ததே வெட்டிப்பயலின் கல்லூரிக் கலாட்டா கோழி பிடிக்கிறப் பதிவைப் பார்த்துத்தான்:)வெட்டிப்பயலுக்கு மீண்டும் ஒரு நன்றி.

கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்

பழமை சரமாரிப் பொழியும்படி பாடல்கள் எடுத்து விடுகிறார்.தமிழும்,இலக்கியமும்,பாடல்களும் புகுந்து விளையாடும் படியான பதிவுகள்.இலக்கியவாதி ன்னு பெயர் வைக்க வேண்டியவர் பழமைவாதின்னு வைத்துக்கொண்டார். அவரோடப் பாடல்களைப் படிக்கும் போது நாமளும் நம்ம அனுபவத்துக்கு ஒரு சினிமா பாடலை எடுத்து விடலாமேன்னுதான் இஃகி!இஃகி! இந்தப் பதிவு.


கோவை வாழ்நாட்களில் ஒரு நாள்....

நானோ இளமை எட்டிப்பார்க்காத வயதுக்காரன்.கலப்புத் திருமணம் செய்து கொண்ட நண்பர் ஒருவர் இரண்டு மகன்களுக்கு தகப்பனார்.வயது வித்தியாச நட்பாக இருந்தாலும் ஓசிப் புத்தகம் கொடுக்கல் வாங்கல்,சினிமாவுக்கு ஒண்ணாப் போவது,டீ குடிப்பது,பொது விசயங்களை என்னிடம் பேசுவது ,சில சமயம் அவரது சொந்த விசயங்களைக் கூடப் பகிர்ந்து கொள்ளும் நண்பர் சின்னசாமி.ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும் போது

பாடல்கள் என்றால் கண்ணதாசன் பாடல்கள் மாதிரி இருக்கவேண்டும் என்றார்.

கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்
அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும்.

இந்த சரணத்தில் துவங்கும் பாடலின் வரிகளான

அவனை அழைத்து வந்து
ஆடடா ஆடு என்று
ஆடவிட்டு பார்த்திருப்பேன்
படுவான்!பாடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவி மகன் பெண்குலத்தை
படைப்பதையே நிறுத்தி வைப்பான்.

என்ன ஒரு அனுபவசாலிடா கண்ணதாசன் என்றார்.எனக்கு இந்தப் பாடல் எந்தப் படமென்று கூட இன்று வரை தெரியவில்லை.ஆனால் அந்தப் பாடல் வரிகளை அவர் ரசித்து சொன்னவிதம் இன்று வரை மனதில் நங்கூரமிட்டு உட்கார்ந்து கொண்டது.

முன்பெல்லாம் பாடல் என்றால் அதன் அழகிலே மனம் மயக்கம் போட்டுவிடும்.இப்ப தொட்ட தொண்ணூறுக்கும் காரண காரியங்கள் ஆராய்வதால் பாடலின் வரிகளில் முரண்படுவதோடு பெண்ணியம் கவுரவப்படுத்தவேண்டும் என்ற நிலைக்கு மனம் வந்து விட்டதாலும் பெண்குலத்தை நிறுத்தவேண்டும் என்று கள்ளிப்பால் கலாச்சாரம் புகுந்துவிட்டதாலும் பாடல் வரிகள் உலக இயங்குதலுக்கு மாறானது.எனவே கவிதைக்குப் பொய் அழகு மட்டுமே.

நண்பர் பாடலை அனுபவித்து சொன்னதற்கும் சில காரணங்கள் உண்டு.அதனை சொல்வதற்கு அவர் முன் அனுமதியும் தேவையென்ற காரணத்தால் கண்ணதாசன் பாடலின் ரசனை மட்டும் உங்கள் பார்வைக்கு.

இலங்கை-பாகிஸ்தான் உறவு

முந்தைய அமெரிக்க வெளியுறவுத்துறை சதுரங்கர் கிஸ்ஸிங்கர் காலத்திலிருந்தே பாகிஸ்தான் பூகோளரீதியாக இந்தியா,ரஷ்ய,சீன,ஆப்கானிஸ்தான்,ஈரான் நாடுகளின் அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கும் உலகளாவிய அரசியலில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.

முந்தைய காலங்களில் இந்தியாவுக்கு தலைவலியாக காஷ்மீர் பிரச்சினையில் நுழைந்து அதில் வெற்றிபெற முடியாமலும்,தற்போதைய காலகட்டத்தில் நீர்வழி மார்க்கமாக பம்பாய் குண்டுவெடிப்புகளில் பெற்ற தாக்கத்தினைக் கருத்தில் கொண்டும் நிலம் வழிக்கு மாற்றாக இப்பொழுது நீர்வழியும் போர்க் கருவியாக உதவும் என்ற நிரூபணத்திலும் பாகிஸ்தான் தனது எதிர்காலக் கனவைக் காண ஆரம்பித்திருக்கிறது.

அதன் பொருளாதார,ராணுவ வளர்ச்சிகளுக்கு இலங்கை தீனி போடக் காத்திருக்கிறது.ஒவ்வொரு நாடும் தமது அயலுறவுக் கொள்கையில் தமக்கு சாதகமான நிலைகளை எடுப்பது நியாயம் என்ற கண்ணோட்டத்தில் தற்போதைய தனது எல்லைக்கு சமீபமாக தமிழ்நாட்டில் ஏற்படும் அரசியல் மாறுதல்களை கவனத்தில் கொண்டும், எதிர்காலத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய இலங்கையின் உறவு நிலைப்பாடுகள் எப்படியிருக்கப் போகிறதோ என்ற மனக்கணக்கிலும், வருங்காலத்தில் தனது தற்காப்பு கருதியும், இந்தியாவிற்கு எதிரான காய்நகர்த்தலாகவோ மாற்று உதவி என்ற கோட்பாட்டில் இலங்கை அரசு பாகிஸ்தானுடனான தமது ராணுவ உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ள விரும்புகிறது.

பாகிஸ்தானும் தனது பொருளாதார வளர்ச்சி கருதியும் இந்தியாவிற்கெதிரான நிலைகொள்வதற்கும் தெற்கு திசையிலிருந்து தனது அரசியல்,போர் சதுரங்கத்தில் காய் நகர்த்தவும் அரிய வாய்ப்பாக அமையப் போகிறது இலங்கை பாகிஸ்தான் ராணுவ உறவு.இந்தியா இலங்கை அரசுக்கு உதவாவிட்டால் பாகிஸ்தான் உதவும் என்ற கூற்றுப் பொய்யாகிப் போகிறது.

மூன்று பக்கமும் நீரினால் சுற்றப்பட்டு இந்தியா மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது என்ற எண்ணம் மாறும் விதமாக பம்பாய் குண்டுவெடிப்பு,பாகிஸ்தான்-இலங்கை உறவு,இன்னும் எதிர்காலத்தில் இந்தியாவிற்கெதிரான நிலைகள் என வேறு மாற்றங்களும் வரலாம்.

இனி இலங்கையின் டெய்லி மிரர் தளம் தந்த தகவல் கீழே.

Pakistan-Sri Lanka to promote defence coop

ISLAMABAD, Jan 19 (APP): Pakistan and Sri Lanka on Monday underscored the need for maintaining and promoting closer cooperation particularly in the area of defence. This was discussed at a meeting between Secretary Defence, Lt. General ® Syed Athar Ali, and the visiting Sri Lankan Defence Secretary Gotabhaya Rajapakse, who called on him in Ministry of Defence Rawalpindi.

The meeting emphasized the need for developing military to military cooperation at all levels. Secretary Defence told his Sri Lankan counterpart that there existed a wide scope of cooperation between two sides which needed to be further enhanced for the mutual benefits of the two countries.

He said Pakistan would continue to provide support to Sri Lanka in all fields. The meeting agreed to enhance cooperation in the area of military training, exercises and intelligence sharing so as to contain and counter the growing threat of terrorism.

Sri Lankan Defence Secretary stressed the need for closer interaction between the Armed Forces of the two countries.

He thanked the government of Pakistan for its continued support to Sri Lankan Armed Forces.

The visiting dignitary also called on Secretary Defence Production, Lt. General ® Shahid Tirmizey and discussed with him matters of mutual interest.

The Secretary briefed him about the potential of defence industry of Pakistan.


Refered From daily mirror.lk

Sunday, January 18, 2009

திருமாவளவன்

அரசியல்,சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அலசும்போது எதிர்மறையான கருத்துக்களும் வந்து மோதி பார்வையாளனை குழப்பி விடும் சாத்தியங்கள் நிறையவே உண்டு.தான் சார்ந்த பிரச்சினை என்பதாலும் தான் நம்பும் கருத்துக்களுக்கு மாறுபட்ட காரணம் கொண்டும் எதிர்கருத்துக்கள் அமைந்து விடும் சாத்தியங்கள் நிறையவே உண்டு. ஆனால் எழுதுபவனின் கருத்துக்கும் தான் நம்பும் கருத்துக்கும் இடையில் ஏதோ ஒரு நூல் இழையில் உண்மை உயரத்தில் நின்று கொண்டிருக்கும்.எனவே இருவிதமான கருத்துக்களின் இடையிலும் மெய்ப்பொருள் காண்பதறிவு.

ஈழம் சார்ந்த உணர்வுகளையும்,கோபங்களையும்,எதிர்ப்புக்களையும்,நயவஞ்சகங்களையும் பிரதிபலிக்கும் தொலைகாட்சி ஊடகங்கள் சில நிமிட நேரத்தில் தமது பங்கை செய்துவிட்டு அடுத்த செய்திக்கு தாவி விடுகின்றன.அதில் ஒரு மாற்றமாக தமிழன் தொலைக்காட்சியில் திருமாவளவன் உண்ணாவிரதம் துவங்குவதற்கு முன் பேசிய உரையின் முழு சாரத்தையும் நோக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

திருமாவளவனின் உரையை நேரில் கேட்பதிலும் எனது எழுத்துக்களிலும் பொருள் மாறுபடும் வாய்ப்புக்கள் அதிகம்.காரணம் திருமாவளவனின் ஏற்ற இறக்கமில்லாத சமநிலைக் குரலினூடே ஒரு பேச்சாளனக்குரிய முத்திரைகளுடன் எனது புரிதலும் கூடவே எழுதும் முறையும் சேர்ந்து திருமாவளவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தங்களில் மாற்றங்களைக் கொண்டுவரும் வாய்ப்புக்களும் இதில் அடக்கம்.

வாழ்க்கையில் ஜாதியக் கோட்டைக் கடந்தும் தேசங்களாலேயே அடையாளம் காணப்படும் எனக்கு திருமாவளவன் பற்றி எழுதுவதும் கூட பார்வைகளை திசை திருப்பிவிடும் சந்தர்ப்பத்தை உருவாக்கி விடக்கூடும். இதுவரை ஜாதியக் கோட்டுக்குள்ளேயே பார்க்கப்பட்ட திருமாவளவனின் ஈழ தமிழ் உரை கேட்கும் யாரையும் சிந்திக்கத் தூண்டும்.ஒருவிதத்தில் பார்த்தால் திருமாவளவனின் உண்ணாவிரதம் அவரை ஜாதியக் கண்ணோட்டத்தில் காண்பவர்களுக்கு அந்த நோக்கை தகர்த்தெரியும் ஒரு சந்தர்ப்பம் எனலாம்.

அனைத்துக் கட்சி கூட்டங்களின் ஒப்புதலும்,பின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும்,மனித சங்கிலி ஊர்வலமும்,மத்திய அரசிடம் நேராக அனைத்துக் கட்சிகளும் நேராகச் சென்று வேண்டியும் தமிழக முதல்வரும் மத்திய அரசுக்கு பல கடிதங்கள் எழுதியும்,பல அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு அழுத்தங்கள் கொடுத்தும் எந்த விதமான பலனுமில்லாத போன நிலையில் உண்ணாவிரதம் மூலம் மத்திய அரசின் கவனத்தை திருப்பவும் போரை நிறுத்தும் படியும் அகிம்சை வழியில் தொடர்வது திருமாவளவனின் உண்ணாவிரதம்.

தனது உண்ணாவிரதப் போராட்டத்திற்கான சூழ்நிலைகளை விளக்கி சொன்னால் கலைஞர் புரிந்து கொள்வார் என்றும் மற்ற படி அரசுக்கோ கலைஞருக்கோ எந்த நெருக்கடியும் கொடுக்கும் எண்ணத்தில் தான் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபடவில்லையென்றும் கூறினார்.ஈழத்து மக்கள் தங்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் தமக்கு ஈகோ என்ன வேண்டிக் கிடக்கிறதென்று மருத்துவர் ராமதாஸ்,வீரமணி,பழ.நெடுமாறன்,தா.பாண்டியன் என ஈழ மக்களின் வாழ்வில் அக்கறை கொண்ட அனைவரையும் சந்தித்ததாகவும் ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்ததாகவும் வைகோவை தாயகம் சென்று சந்திக்க முயன்றதாகவும் ஆனால் சந்திக்க முடியவில்லையென்றும் திருமாவளவன் தாயகம் வந்தானே என்ன விசயம் என்று ஒரு வார்த்தை வைகோ கேட்டிருக்கலாமென்றார்.(அனைவருக்கும் ஈழம் உணர்வுபூர்வமான விசயமாக இருந்தாலும் அரசியல் சதுரங்கமும் விளையாடுவது தெரிகிறது)

துக்ளக் பத்திரிகையில் கலைஞரின் கண்டம் திருமாவளவன் என்றும் தானும் சோவும் இதுவரை நேரில் கூட சந்தித்ததில்லையென்றும் சோவுக்கும் தமக்கும் எந்தவிதமான பிரச்சினைகளோ கூட கிடையாதென்றார்.தான் சொல்லாத வார்த்தைகளும் கூட சிலரால் காது மூக்கு வைத்து திசை திருப்பிப் படவிடுகிறதென்றும், திருமாவளவன் 10000 பேரை படகில் ஈழத்துக்கு தயார் செய்கிறார் என்றும் கூட வதந்திகளைப் பரப்பி விடுகிறார்கள் என்றார்.இப்படிப் பட்ட வதந்திகளைக் கேட்ட பின்பே ஓ! இப்படியும் கூட முன்பு செய்திருக்கலாமோ என்று இப்பொழுது தனக்குத் தோன்றுவதாக கூறினார்.

உண்ணாவிரதம் துவங்க நினைத்த தினங்களுக்கு முன்பே தனது கட்சியைச் சார்ந்தவர் தான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க விரும்புவதாகவும் அப்படி ஒரு தொண்டரை பலிகடாவாக்க விரும்பவில்லையென்றும் சொன்னார்.வீட்டில் காலையில் கஞ்சியும்,பின் இரவில் மட்டுமே அம்மா தரும் உணவும் வாழ்க்கையில் பழகிய விசயமே என்றார்.

மேலோட்டமாகப் பார்க்கும் யாருக்கும் திருமாவளவனின் உண்ணாவிரதம் ஒரு அரசியல் சித்துவிளையாட்டு மாதிரியே தோன்றும்.ஆனால் உரையைக் கேட்ட எவருக்கும் அவர் முழு ஆத்மார்த்தமாக ஈழப்பிரச்சினைக்கு ஒரு அழுத்தத்தை தேடும் பொருட்டே இதில் ஈடுபட்டுள்ளார் என்பது விளங்கும்.

உண்ணாவிரதம் இருக்கும் போது முதல் நாள் ஏற்படும் உடல் மாற்றங்கள்,பின் அடுத்த நாள் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதனை விளக்கினார்.உடலில் உயிர் தங்கி இருக்க உணவில்லா விட்டாலும் தண்ணீர் தேவையென்றும் தண்ணீர் குடித்தே ஒரு புத்த பிக்கு ஒரு வருடம் வரை உண்ணாவிரதமிருந்தாரென்றும் தண்ணீர் இல்லாவிட்டால் கிட்னி பாழடைந்து விடுமென்றும் அப்படி உடல் உபாதைகள் ஏதாவது ஏற்பட்டால் ஒரு கொள்கைக்காக அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றார்.எத்தனையோ சிரமங்களை எதிர்நோக்கும் ஈழமக்களுக்கு வெறும் கண் துடைப்புக்காக மேடைகளில் பேசி விட்டு தான் போய் விட விரும்பவில்லையென்றார்.தனது தொண்டர்களை அமைதி காக்கும் படியும் இல்லையென்றால் உண்ணாவிரதத்திற்கான குறிக்கோளை திசை மாற்றி விடுவார்கள் என்றும் கூறினார்.

முதல் நாள் உண்ணாவிரதம் சாத்தியமே எவருக்கும்.
இரண்டாம் நாள் உண்ணாவிரதம் உடலில் மாறுதலை உருவாக்கும்
மூன்றாம் நாள் ரத்த அழுத்தங்களும் உடல் இயங்கும் முறையையும் மாற்றும்
நான்காம் நாள் இன்று.உண்ணாவிரதத்தின் உண்மையான சுவடுகள் தெரிகிறது.

திருமாவளவன்!தண்ணீர் போதும்!பழரசம் பருகுங்கள்.எழுந்து வாருங்கள்.மாற்று வழி காணுங்கள்.உங்கள் உணர்வுகள் புரிகிறது தமிழனுக்கு.

Wednesday, January 14, 2009

ஈழம் மீண்டும் ஓர் பார்வை

2008 டிசம்பர் 31 வரையான உலக நிகழ்வுகளை வெறும் பார்வையாளனாய் பார்த்து விட்டு அவ்வப்போது பதிவர்களின் பதிவுப்பக்கங்களையும் கண்ணோக்கி விட்டு தூங்கி எழுந்தால் ஜனவரி 2ம் நாள் கிளிநொச்சி மனதையும் உணர்வுகளையும் ஆக்கிரமித்துக்கொண்டது.

நீரு பூத்த நெருப்பாய் மனதுக்குள் உறங்கிக் கிடந்த உணர்வுகள் தமிழகத்தில் தலையெடுக்க ஆரம்பித்த கணங்களில் இவ்வளவு நாள் துயரங்களை அனுபவித்த ஈழத்து தமிழர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கையை தமிழக அனைத்துக் கட்சிகளும் சட்டசபையில் அங்கீகாரம் கொண்ட காரணத்தால் மேலும் வலுவான நிலை வரை நம்பிக்கைகள் நிலைகொண்டே இருந்தது.ஆனால் அரசியல் கட்சிகளின் குளருபடிகளில் துவங்கிய சலசலப்பு ஈழத்துப்பிரச்சினையை திசை மாறும்படியாக மாற்றியது.இருந்தும் அவ்வப்போது தொடர்ந்த தார்மீக ஆதரவுகள் ஈழத்துக்கு ஊக்கத்தைக் கொடுக்கும் என்ற எண்ணத்தில் விழுந்த அடி கிளிநொச்சி பின்நகர்வு.

ஒருபுறம் போர்த்தந்திரங்கள் என்ற சமாதானம் கொண்டாலும் முன்னோக்கித் தாக்கும் திறன் யுத்தத்தில் இருக்கும் உத்வேகம்,அனுகூலங்கள் பின்னகர்வில் குறைவே எனலாம்.ஈராக்கின் யுத்த களத்தில் கூட வேகமாக முன்னேறும் படையின் வேகமும் அதற்கேற்றாற் போல ஈராக்கின் ராணுவமும் எந்த எதிர்ப்பும் காண்பிக்காத நிலையில் தலைநகர் பாக்தாத் நோக்கிய அமெரிக்கப் படை நகர்வில் நிலைதடுமாறிய ஈராக் இன்னும் எழுந்துநிற்க முடியாமல் பல நிகழ்வுகள் நடந்து விட்டது.

போர்களை வெறுக்கும் சாதாரணமாய் உலக நிகழ்வுகளை காணும் எவருக்கும் அமெரிக்காவின் ஈராக் யுத்தம் தவறென்று பட்டது.ஈராக் யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கோடானு கோடி மனித நேயம் கொண்ட எதிர்ப்பையும் எதிர்த்து ஈராக் யுத்தம் நடந்து முடிந்து அதன் விளைவுகள் கண்ணெதிரில்.ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் தனது பதவியின் இறுதிப் பேருரையில் போர் தவறென்று பிரகடனம் செய்கிறார்.

விடுதலைப் புலிகள் தங்கள் நிலைப் பாட்டை உலகத்தமிழர்களுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.மொழி உணர்வாளர்களும்,மனித நேயம் கொண்டவர்களும் ஈழத்து மக்களுக்கு விடிவைத் தேடுகிறார்கள்.விடுதலைப் புலிகளின்பால் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களும்,பாதிக்கப் பட்டவர்களும் ஈழத்து சுதந்திரத்திற்கு எதிராக உள்ளனர்.தமிழகம் ஈழத்துப் பிரச்சினையை மொழி உணர்வோடும்,மனிதாபிமான சாயலிலும் கூடவே ராஜிவின் கோணத்திலும் பார்க்கிறது.

இலங்கையில் சிங்களவர்களும் தங்கள் நாடு மற்றும் மொழி உணர்விலும் பார்ப்பதில் தவறில்லை.ஆனால் சில ஈழத்து தமிழர்கள் புலிகளுக்கெதிரான நிலைபாடுகள் தாங்கள் எதனை எதிர்காலத்தில் இழக்கப்போகிறோம் என்ற உணர்வே மறந்து ஒரு உரிமைப் போராட்டத்தையும் கூடவே தன்சக மனிதர் இழப்புக்களையும் கண்டுகொள்ளாமல் இலங்கை அரசின் அபிலாசைகளுக்கு துணை போகின்றன.

இலங்கையின் இறையாண்மையில் நம்பிக்கை கொண்டு விடுதலைப் புலிகளை எதிர்த்தாலும் இலங்கை அரசு ஈழத்துக்கு எந்தவிதமான எதிர்காலத்தை தரப்போகிறது என்பதில் இலங்கை அரசாங்கமே கூட உறுதியற்றும், நம்பிக்கையற்றும் காணப்படுகிறது. காழ்ப்புணர்ச்சியின் காரணமாக முதலில் விடுதலைப் புலிகள் ஒழியட்டும் என்பதில் கண்ணாயிருக்கும் சில இலங்கைத் தமிழர்களைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது.

25 ஆண்டு காலத்திற்கும் மேலான பிரபாகரனின் பெயரின் ஆதிக்கம் இலங்கையின் வரலாறுகளாக எழுதப்பட்டுவிட்ட பின் விடுதலைப் புலிகளின் ஆதரவும்,எதிர்ப்பும் விடுதலைப் புலிகளின் எழுச்சியும்,வீழ்ச்சியையும் ஒட்டியே ஈழத்தமிழனுக்கு வாழ்க்கையாக அமையும்.இந்தப் பார்வை ஈழத்தில் வாழும் தமிழ் எதிர் அணிக்கு தவறாகப் பட்டாலும் தமிழகத்தின் பெரும்பான்மையானோர் பார்வை இதுவே.

இயக்க உணர்வுகளையும் தாண்டி வெளிப்படும் கோபமும்,தொலை நோக்குப் பார்வை இல்லாமையும் பெரும் பின்விளைவுகளை ஈழத்தமிழர்களுக்கு ஏற்படுத்தும்.விடுதலைப் புலிகளுக்கு மாற்றாக தமிழர்களை முன்னோக்கி கொண்டு செல்லும் எந்த வலுவான அமைப்பும் கண்ணுக்கு தெரியவில்லை.விடுதலை இயக்கத்துக்கான எதிர்க் குரலாக தோன்றும் எந்த அமைப்பும் எதிர்கால நம்பிக்கையை தரவில்லை.இலங்கை அரசாங்கமும் இதுவரையிலும் அடைந்த போர் முன் நகர்வுகளுக்கும் அப்பால் ஒருங்கிணைந்த அடையாளமாக எந்தவிதமான தீர்வினையும் முன்வைக்கவில்லை.தீர்வை முன்வைக்காத அரசியல் நகர்வுகள் விடுதலைப்புலிகளின் வருங்கால நிலைப் பின்னடைவடைந்தால் இலங்கை அரசு வைக்கும் தீர்வுகளுக்கு செவி சாய்க்கவேண்டிய கட்டாயத்துக்கு ஈழம் நகரவேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.

50 ஆண்டுகளாய் அதிலும் இயக்கங்கள் தலையெடுத்த கால கட்டத்திற்குப் பிறகு உருவான சமூக,மனித அர்ப்பணிப்புகளுக்கு அர்த்தங்கள் இல்லாத சூழலை தோற்றுவிக்கும் எதிர் முகாமிடும் தமிழனைப் பார்த்து மனது வேதனையடைகிறது!தமிழீழம் தூரக்கனவுக்கு இலங்கைப் படையுடன் தமிழனும் துணைபோய்விட்டான். இலங்கை அரசு வலைத்தளங்கள் கூட தங்களது போர் வெற்றிகளை மட்டுமே முன்னிலைப்படுத்தும் போது சில தமிழ் தளங்கள் புலிகள் இயக்கத்துக்கு எதிரான செயல்களாய் மட்டுமே செய்திகள் வெளியிடுகின்றன.விடுதலைப் புலிகளுடனான கருணாவின் உட்பூசல் எந்தவிதத்தில் நியாயப்படுத்தலாய் இருந்தாலும் ஈழ வரலாறு எட்டப்பன் சொந்தக்காரன் என்றே எழுதி வைக்கப் போகின்றது தமிழர் மத்தியில் முக்கியமாக தமிழகத்தில்.


இனி ஈழத்துக்காக வேண்டி குரல் எழுப்ப தமிழகத்தை விட்டால் நாதியில்லை என்ற நிலையில் சமகாலத்தில் நிகழும் இரு நிகழ்வுகள் என்ற கண்ணோட்டத்தில் நோக்கினால் இஸ்ரேல் ,பாலஸ்தீனியப் பிரச்சினை உலகம் முழுவதும் ஒலிக்கிறது.ஈழத்து மக்கள் படும் அவதிகள் தமிழ்நாட்டுக்குள்ளும் தமிழ்வாழ் உலகு மட்டும் ஒலிக்கிறது.மனிதநேயம் என்பது கூட தனக்கு சாதகமான தராசில் வைத்தே உலகம் எடைபோடுகிறது.

பைபிளின் கதைகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இஸ்ரேலியர் என்ற ஒரு இனம் இடம் பெயரலுக்கு பாலஸ்தீனியர்கள் காரணமாக இருக்கக்கூடும்.ஆனால் வாழ்க்கை மாற்றங்கள் கொண்டது என்ற காரணம் கொண்டு நோக்கினால் நவீன வாழ்வியலுக்கு இஸ்ரேலியர்கள் வருவதே பாலஸ்தீனம்,இஸ்ரேல் நாடுகளுக்கான நன்மையாக இருக்கும்.அதுவன்றி பழமைவாதங்களில் மனித வெறுப்புக்கள் உச்சமடையும் நிலையில் எதிர்காலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கேள்விக்குரியதாகவே இருக்கும்.

தனது படைபலத்தால் மக்கள் வாழும் பகுதிகள் உட்பட தாக்கும் இஸ்ரேலிய யுத்தம் கண்டிக்கத் தக்கது.இதே நோக்கில் ஈழத்து மக்கள் படும் அவதியும் கவலைக்குரியது.ஆனால் உலகம் பாலஸ்தீனியத்தை மட்டுமே பார்க்கிறது.இஸ்ரேல் அரசு மக்கள் மீது குண்டு போட்டால் பாலஸ்தீனியர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.இலங்கை அரசு மக்கள் மீது குண்டு போட்டால் தீவிரவாதிகள் ஒழிக்கப்படுகிறார்கள்.என்ன வாதமோ தெரியவில்லை போங்க.(பாலஸ்தீனியப் பிரச்சினையில் பொருளாதாரம் விளையாடுகிறது அல்லது பயன்படுகிறது என்பது மட்டும் உண்மை)

இனி உள்ளுக்குள் கட்சிப் பூசல்கள் இருந்தாலும் ஒற்றுமை, பொருளாதார உதவி,எதிர்ப்பு குணம் மட்டுமே ஈழப்போரை வென்றிருக்க முடியும்.ஒற்றுமையில்லாத காரணத்தால் ஓர் உரிமைப்போர் நீர்த்துப்போகும் நிலைக்கு ஈழம் தள்ளப்பட்டிருக்கிறது. போர்கள் என்றும் வெற்றியாவதில்லை.ஆனால் அதன் விளைவுகளை ஒட்டியே வாழ்க்கை நிலை அமையும்.மண்ணின் மைந்தன் உரிமையில் உரிமைக்கானப் போரட்டம் தொடரவும் போராட்டத்தின் முகம் மாறினாலும் தனது உரிமைக்குரல் நிலைக்கச் செய்வது நிகழ்கால,எதிர்காலத் தமிழனின் கடமை. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். ஈழம் துயரத்தின் பிடியில் இருந்தாலும் பொங்கல் வாழ்த்துக்களை ஈழத்தமிழர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.காரணம் பொங்கல் தமிழனின் அடையாளம்.